காலம் தாண்டி நினைவில் வாழ்பவர்-தோழர் கருணா நினைவுக் குறிப்புகள் -அ.கரீம்

நாம் வாழும் காலத்தில் 2020ம் ஆண்டை யாரும் நினைவு அடுக்கிலிருந்து மறக்கமுடியாதளவு ஒரு தழும்பை போல பதிந்துவிட்டது. உலகம் முழுக்க ஏற்பட்ட கொத்து கொத்தான இறப்புகள் பெரும் அச்சத்தை எல்லோருக்கும் விதைத்துவிட்டது.

இயற்கை தன்னை பாதுகாத்துகொள்ள அவ்வப்போது செய்துகொள்ளும் ஒரு புத்துணர்ச்சி செயலாக “கொரோனா” என்ற காலத்தை பயன்படுத்திக்கொண்டது. இந்த கொடும் காலத்தில் நிகழ்ந்த பல மரணங்களில் தோழர் கருணாவின் மரணம் எல்லோருக்கும் நம்ப முடியாதளவு பெரும் அதிர்ச்சியை அவரோடு பழகிய, அல்லது அவரை நேரில் பார்க்காமல் முகநூல் வழியாக மட்டுமே பார்த்து அறிமுகமான பலருக்கும் சொல்ல முடியா துயரத்தை கொடுத்துள்ளது. அவருக்கு ஏற்பட்ட மூச்சு திணறல் பலருக்கும் மூச்சை அடைத்துவிட்டது. அந்த செய்திலிருந்து மீளவே பலநேரம் ஆனது.

கருணாவின் சமரசமற்ற தொடர் சமூக செயல்பாடே அவரின்மீது பேரன்பை எல்லோருக்கும் கொடுத்திருக்கும். அவரின் கடைசி இரண்டு முகநூல் பதிவுகூட “நீங்கள் ஹெலிகாப்டரிலிருந்து தூவும் மலரைக்கூட இடுப்பொடிய எங்கள் துப்புரவு தொழிலாளிகள் தான் பெருக்க வேண்டும்” என்று எளிய மக்களின் துயரத்தை தன் துயராமாக தூக்கி சுமந்தவர். அவரது உடல் அருகே மலைபோல குவித்திருந்த மாலைகள் ஒரு லாரி முழுக்க நிரம்பியது. அதனை உடல் ஒப்படைக்கும் மருத்துவமனை வரை  தூவும் பழக்கத்தை இறப்பின்போதும் உடைத்தவர் கருணா. அவரது இறப்பின் சில மணிநேரம் முன்பு போட்ட பதிவு விபத்துபோல என் உடல் சுமக்கும்போது தயவுசெய்து சாலை முழுக்க தூவி என் தூய்மை பணியாளர்களை சிரமப்படுத்தாதீர்கள் என்று சொல்லாமல் சொல்லி உள்ளார்.

வேளாண்மை சட்டத்துக்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் தலைமையில் போராடிக்கொண்டு இருக்கும்போது சம்மதமே இல்லாமல் பிரதமர் மோடி ஹரித்துவார் சென்ற புகைப்படத்தை பதிவிட்டு “எங்க ஊர் செவாலிய சிவாஜி கணேசனையே மிஞ்சும் மகா நடிகன்பா நீ” என்று உடனே போலி பக்திக்கு எதிராகவும் இந்துத்துவ பயங்கரவாதத்துக்கு எதிராகவும் தொடர்ச்சியாக களமாடி வந்தவர்.

“தாழிட்டபட்ட கதவுகள்” சிறுகதை தொகுப்பு வந்த போது பலரும் தொடர்ச்சியாக எழுதியும் சொல்லிக்கொண்டும் இருந்தபோது அவர் அதில் உள்ள ஒவ்வொரு கதையையும் குறும்படம் செய்ய வேண்டுமென்றும் அதுதான் இன்னும் கூர்மையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று சொன்னதோடு இல்லாமல் ஒரு நாள் தோழர்களோடு நின்றுகொண்டு இருந்தபோது “யாரவது குறும்படம் எடுக்க ஸ்பான்சர் பண்றீங்களாபா உருப்படியான வேலையா கரீமோட ஒவ்வொரு கதையும் தனித்தனியா குறும்படம்  செய்யலாம்” என்றார். அவர் அதனை இயக்க தயாராக இருந்தார். இந்துத்துவ கருத்துக்கு எதிராக எந்த வழியில் எல்லாம் மக்களை சென்றடைய வேண்டுமோ அதன் எல்லா அம்சங்களையும் செய்து பார்க்க வேண்டும் என்று தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டு இருந்தார்.

அவரின் இறப்புக்கு முந்தினநாள் இரவு முகநூலில் அவரிடம் நான் கருப்பு அன்பரசன் எல்லோரும் பேசி சிரித்துக்கொண்டு இருந்தோம். மறுநாள் காலை அவர் இறந்துவிட்டார் என்று தோழர் ஆதவன் தீட்சண்யா குறும் செய்தி அனுப்பியபோது நம்ம முடியாமல் உடைந்து போனேன். பலரைப்போல் நானும் திரும்ப திரும்ப அந்த தகவலை உறுதிப்படுத்த பலரை தொடர்பு கொண்டேன். சில மணி நேரத்துக்கு முன்பு வரை சிரித்து பேசிய மனிதர் இல்லை என்றபோது நம்ம முடியாத துயரமாக தொற்றிக்கொண்டது. “வாபா எழுத்தாளா” என்று அவர் விளிக்கும் போது இளம் எழுத்தாளரை கொண்டாட வேண்டும் என்ற அவரின் அக்கறை எப்போதும் உணர முடியும். அவரை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும் அந்த இடத்தை அவ்வளவு மகிழ்ச்சியாக வைத்திருக்கும் இயல்புடையவர். அதே நேரத்தில் கருத்தியல் தளத்தில் கறாராக விமர்சனம் செய்வதை பலரும் அறிவார்கள். இடதுசாரிகள் தவறான நிலைப்பாட்டை  எடுத்தால் எந்த தயக்கமும் இல்லாமல் அதனை பொது வெளியில் பொதுவுடைமை தத்துவத்தின் நிலையிலிருந்து  முன்வைக்கும் விரிந்த வாசிப்பு உடையவர் கருணா.

இணையத்தில் இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக சிம்ம சொப்பனமாக இருந்தவரை இழந்தது ஜனநாயக சக்திகளுக்கும் முற்போக்கு சக்திகளுக்கு பெரும் பின்னடைவு…. இறப்பு என்பது இயற்கையின் நீதி என்றாலும் சில மரணங்கள் நம்மைவிட்டு மறைந்துபோக வெகு காலமாகும். கருணாவின் இழப்பு காலம் தாண்டி நினைவில் வாழ்பவர்.  செவ்வணக்கம் தோழர் கருப்பு கருணா.

அ.கரீம்-இந்தியா 

00000000000000000000000000000000000             

அ.கரீம் பற்றிய சிறுகுறிப்பு :

அ.கரீம் எழுத்தாளர், வழக்கறிஞர் என்ற தளங்களில் பயணிக்கின்றவர் . இவர்  மாணவர் சங்கத்தில் தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கியவர். கோவையில் வழக்கறிஞறிஞராகப் பணியாற்றுகிறார் அத்துடன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராக உள்ளார்.

நடு குழுமம்

நடு லோகோ

 

(Visited 62 times, 1 visits today)
 

2 thoughts on “காலம் தாண்டி நினைவில் வாழ்பவர்-தோழர் கருணா நினைவுக் குறிப்புகள் -அ.கரீம்”

Comments are closed.