”மனதின் மகத்துவத்தை அறிந்தவன்”-தோழர் கருப்பு கருணா நினைவுக்குறிப்புகள்-கட்டுரை-அய். தமிழ்மணி

”ஏம்பா தமிழ்மணி இங்க வா.” யாருடா அது குரல் புதுசா இருக்கே., அதுவும் ரொம்ப நாட்கள் பழகிய உரிமையோடு அழைக்கும் குரலாகவும் இருக்கே என குரல் வந்த திசையில் திரும்பிப் பார்த்தேன்.

சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் திரைப்பட ரசனை முகாமை தமுஎகச நடத்திய காலம் அது. ஸ்டுடியோவின் வளாகத்தில் பூங்கவைப்போல் வடிவமைக்கப்பட்டிருந்த அந்த இடத்தில் கிளை பரப்பி ஒன்றோடொன்று காற்றின் துணையில்லாமலும் கூடிக் குலாவும்படியாய் பின்னிப் பிணைந்திருந்த அந்த இரண்டு மரங்களுக்கிடையில்  அமைக்கப்பட்டிருந்த் சிமெண்ட் பெஞ்சில் சந்தனமும் வெளிர்பச்சையும் கலந்த வண்ணத்தில் சட்டையும் கருப்பு வண்ண பேண்ட்டும் அணிந்துகொண்டு ஒரு காலை தொங்கவிட்டு மறுகாலை மடக்கியவாறு சிகரட்டை ஊதிக் கொண்டிருந்த அந்த கருத்த உருவம் மீசையைத் தடவிக் கொண்டிருந்தது. இவர் தான் நம்மை அழைத்திருப்பாரோ என்றவாறு அருகில் சென்றேன். பார்த்துக் கொண்டே இருந்தார்..

“தோழர் நீங்கதேன் கூப்பிட்டீங்களா.”

“ஒம்பேரு தான தமிழ்மணி.”

“ஆமா தோழர். நீங்க..”

“அதிருக்கட்டும்பா இப்படி ஒக்காரு.” என்றார். அமர்ந்தேன்.

“ஆமா ஒனக்கு என்ன வயசாச்சு.”

“முப்பது தோழர்.”

“பெறகென்ன ஒனக்கு வந்துச்சு. இம்மாந்தூரத்திலேர்ந்து இங்க வர்றதுக்கு இவ்வளவு நேரமா..” என்றவர் எனது கணித ஆசிரியர் மைக்கேல்சாமியை ஞாபகப்படுத்தினார். எனது பள்ளிக்கூட காலங்களில் என்னை வணக்கியதில் அவருக்குத் தனிப் பங்குண்டு. அதுவே எனக்கு கருப்பு கருணா மீது ஈடுபாட்டை ஏற்படுத்தியது.

“ஏம்பா நீ ஏதோ படம் எடுத்திருக்கியாமே. என்னா அது..?”

“ஒரு டீ ஒரு வடை தோழர்.”

“ஓ. ஆமா அதில நீ என்னா சொல்ற..”

“திடீர் விலைவாசி உயர்வு ஒரு தனி மனிதனோட நேர்மைய எப்படி பாதிக்குதுன்னு எடுத்திருக்கேன் தோழர்.”

“அப்படியா. ம்..” என யோசித்தவர்.

“இது விழைவு., அதுக்கான மூலம் என்ன., ஏன் அந்த விழைவ ஏற்படுத்தனும்., அது யாருக்கு லாபம்ன்னு ஏதும் சொல்லிருக்கியா அதுல.”

“நான் இந்த ஆங்கிள்ல யோசிக்கல தோழர்.”

“பெறகென்னா நீ படம் பண்ற., இதெல்லாம் யோசிக்கணும்பா., அதான கலைஞனோட வேல.” என்றார்.

இந்த நேரத்தில் நான் தமுஎகசவின் தேனி மாவட்டத் துணைச் செயலாளராக இருந்தேன். அதுவரை கருப்பு கருணாவை நான் தெரிந்திருக்கவில்லை. ஆனால் மாநில நிர்வாகிகளில் ஒருவரான அவரோ என்னைப் பற்றி தெரிந்து வைத்திருந்தது எனக்குப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதுதான் கருணா. மாநிலத்தின் பல பகுதிகளில் இயங்கிக் கொண்டிருக்ககூடிய இளைஞர்களை அவர் தெரிந்தும் பழகியும் வைத்திருந்தார். இது எல்லோருக்கும் வந்து விடக்கூடிய குணமல்ல.,  காரணமாகப் பார்ப்பது அவர் கலையை நம்பினார். கலை எந்த இடத்திலேயும் ஒரு புது மாற்றத்தினை உருவாக்கிவிடும் என நம்பினார். தான் ஏற்படுத்த நினைக்கிற மாற்றத்திகான கலையை வடிவமைக்கவும்  தூக்கிச் சுமக்கும் அமைப்பாகவும் தமுஎகசவினைக் கருதினார். தமுஎகசவிற்குள் ஏற்படும் இளமைத் தாக்கம் கலைக்கான புது பரிணாமத்தை உயிர்ப்பிக்கும் எனக் கருதியதின் விளைவாகவே அமைப்புக்குள்ளும் அமைப்புக்கு வெளியேயும் சுடர்விட்டுத் திரிகிற இளைஞர்களுக்கு தாங்கும் தூணாக இருந்தார்.

நான் அந்தத் தூணில் ஏறியிருக்கிறேன்., தூங்கியிருக்கிறேன்., நோண்டியிருக்கிறேன்., வரைந்திருக்கிறேன்., அத்தனையையும் தாங்கிக்கொண்டு நிற்பார். தனி மனிதர்கள் மீது அவர் எப்பொழுதும் சலனப்பட்டதேயில்லை. ஆனால் அவன் ஒரு படைப்பாளன் கலைஞன் என்று ஒரு வடிவத்தை கொண்டுவந்துவிட்டால் அந்தப் படைப்பின் மீது தத்துவ விசாரணையை அவர் நடத்தாமல் இருந்ததில்லை எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும்.

பின்னொரு நாளில் அவர் இயக்கிய ஏழுமலை ஜமா குறும்படத்தைப் பார்க்க்கும் வாய்ப்பு கிட்டியது. பிரமித்துப் போனேன். என்ன அழகான ஃபிரேம்கள்., அத்துனை ஃபிரேம்களிலும் கலையின் கலைஞனின் வேதனையை யாரும் அப்படிப் பிரதிபலித்து விட முடியாது. அதன் பிறகு.,

“ஏம்பா தமிழு., ஒன்னால ஒரு காரியம் ஆக வேண்டிதிருக்கே.”

“சொல்லுங்க அனபுத் தோழரே.”

“ஒனக்கு ஐ.மா. பா வத் தெரியுமா..”

“ஆமா தோழர் ஐ. என்.ஏ ல இருந்தாரே..”

“அதெல்லாம் பெறகு. மொதல்ல அவரு கம்யூனிஸ்ட்.. தெரியுமா..”

“சொல்லுங்க தோழர்.”

“ம். ஏறுனா ரயிலு எறங்குனா ஜெயிலுன்னு அவரப்பத்தி ஒரு ஆவணப்படம் பண்ணிட்டு இருக்கேன்.. பாதி முடிஞ்சுருச்சு., ஒரு அம்பதாயிரம் இருந்தா மீதிய முடிச்சிருவேன்., என்ன சொல்ற..”

“எங்கிட்ட அவ்வளவு பணம் இல்ல தோழர்.”

“ஒங்கிட்ட யாருய்யா கேட்டா., ஒனக்குத் தெரிஞ்சவம் நாலு பேரு இருப்பான்ல அவங்கிட்ட கேளு., அமைப்புல உழைக்கிறவன் உழைப்பத் தாம்பா கொடுக்கணும்., தானே காசயும் போட்டா அவனும் போய்டுவான் அமைப்பும் போயிடும்., இந்த மாதிரி வேலைக்கு நாலுபேர்ட்ட காசு வாங்குனாத்தான அவனுக்கு அமைப்பையும் தெரியும் ஐ.மா.பா. வையும் தெரியும்..” என்றார். அதில் எத்தனை உண்மை இருக்கிறது. இவ்வளவு எளிதாகவும் சொல்லிவிட்டரே என நினைத்துக்கொண்டே கேட்டேன்.,

“அதென்ன தோழரே ஏறுனா ரயிலு இறங்குனா ஜெயிலு. தலைப்பே பட்டையக் கெளப்புதே..”

“அவரு ஜெயில்ல இருந்து வருவாரு., அப்படியே ஒரு மக்கள் போராட்டம்., திரும்ப பிரிட்டிஷ்காரன் தூக்கி ஜெயில்ல போட்டுருவான்., திரும்ப ரிலீஸாகி ரயில்ல வந்து இறங்குவாரு., திரும்ப போராட்டம் திரும்ப ஜெயிலு., பிரிட்டிஷ்காரன் காலத்துல அவரு வெளில இருந்தத விட ஜெயில்ல இருந்தது தாம்பா அதிகம். இப்படி ஒரு தலைவன நீ எந்தக் கட்சியிலயாவது கேள்விப்பட்டிருக்கியா..?”

”இல்ல தோழர்.”

”ம். கம்யூனிஸ்ட் மட்டுந்தான் அப்படி இருப்பான்., ஒருத்தனோட வாழ்க்கைய தலைப்பிலேயே சொல்லிடணும்பா., அது பாமரனோட வார்த்தையாவும் இருக்கணும்..”

“செம்ம தோழர்.”

“அதெல்லாம் இருக்கட்டும். வசூலுக்கு எப்ப போலாம்..” என்றார்.

பிறகொருநாளில் அவர் தேனி வந்து சேர்ந்தார். எனது காரில் தேனி மாவட்டத்திலும் மதுரை மாவட்டத்திலும் உள்ள சில நண்பர்களிடம் முப்பதாயிரம் வரை நன்கொடை பெற்றோம். ஐமாபா வைத் தெரியாதவர்களிடம் அவரைப் பற்றிச் சொல்லி அவர்களுக்கு முழு திருப்பதி வந்த பிறகே அவர்கள் அளித்த நன்கொடையைப் பெற்றுக் கொண்டார்.

“சரிப்பா என்ன மாட்டுத்தாவணில எறக்கி வுட்டுறு., நாளைக்கி பாண்டில முக்கியமான கூட்டம் கீதுப்பா.,” என்றார்.

“தோழரே இன்னக்கியொரு நாள் தங்குனீங்கனா மீதியையும் வசூல் பண்ணிடலாம்.,”

“எங்கப்பா போயிரப் போறாங்க ஒம் பிரண்டுங்க., இன்னொரு தபா பாக்கலாம்பா., அமைப்பு வேலயும் ரொம்ப முக்கியம்பா., ஒரு அளவான கடையாப் பாத்து எனக்கு நாஷ்டா வாங்கி கொடுத்து அனுப்புப்பா.”

“சொன்னா எங்க கேக்கப் போறீங்க., போன எடத்துல அவ்வளவு நேரம் பேசாம சட்டுபுட்டுன்னு வந்திருந்தோம்ன்னா., இன்னும் நாலு பேரப் பாத்திருக்கலாம்.,”

“அதில்லப்பா., நாம பண்ற வேலக்கி ஒருத்தன் நிதி தர்றான்னா., அவனுக்கு நாம என்ன செய்யிறோம்ன்னு தெரியணும்பா., இல்லன்னா நம்மள பொறுக்கித் தின்னிங்கன்னு நெனச்சிருவாம்பா., ஒன்னய அவங்களுக்குத் தெரியும்., என்ன தெரியாதுலப்பா., விடுப்பா இருக்குற காசுல வேலய முடிக்கிறேன்., மீதியப் பண்றதுக்கு ஒன்ன மாதிரி ஒலகம் பூராம் ஆளிருக்காம்பா., வண்டிய வுடு.”

இந்த வார்த்தைகள் எனக்குப் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மனிதர்களை அவ்வளவு தூரம் நம்புவதற்கு ஒரு அசாத்திய மனப்பாங்கு வேண்டும். அன்று நன்கொடை அளித்த நண்பர்கள் அவருக்கு விசிறிகளாகவே மாறிப் போனார்கள். சரியான ஆளுங்க எப்படி இருக்காரு தோழரு என எப்பொழுதும் கேட்பவர்களாக மாறிப் போனார்கள். மனிதர்களில் உள்மனதைத் தொட்டு வசீகரம் செய்யும் ஆற்றல் நிறைந்தவராய் இருந்தார் நம் தோழர் கருப்பு கருணா.

மற்றொரு முறை நானும் நண்பன் உமர்பாருக்கும் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழவர் குறித்து ஒரு ஆவணப்படம் செய்ய விரும்பினோம். அப்படத்தினை கருப்பு கருணா இயக்குவதென்றும் நானும் உமரும் உதவி இயக்குனர்களாகவும் தயாரிப்பாளர்களாகவும் இருப்பதென்றும் முடிவு செய்து தோழரை அணுகினோம்.

“அவர எடுத்து என்னா பண்ணப் போறீங்கோ.” என்றவாறு ஒத்துக் கொண்டவரோடு கரூருக்கு அருகிலுள்ள நம்மாழ்வாரின் கானகம் என்கிற இயற்கை வழி வேளாண் மையத்திற்கு கிளம்பினோம். உடன் ஒளிப்பதிவாளர் திருவண்ணாமலை சுரேஷ் வந்திருந்தார்.

அந்த அதிகாலையில் இன்முகதோடு எங்களை வரவேற்ற நம்மாழ்வார் நாங்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு.,

“அய்யா நீங்க ஒங்க வசதிகேத்தபடி இங்க தங்கிக்கிடலாம். நீங்க எப்பச் சொல்றீகளோ அப்ப நான் ஓடியாந்திட்றேன்., இப்ப நான் யோகா பண்ணிட்டு வந்திட்றேன்.” என்றபடி கிளம்பிவிட்டார்.

தூரத்தில் யோகா செய்து கொண்டிருந்த நம்மாழ்வரைப் பார்க்க கிளம்பிவிட்டோம்.

“ஏந்தோழர்., நாம ரெஃப்ரஷ் ஆவோம். அவரு வரட்டும்.,” என்றேன்.

“தமிழ்மணி நீ துணை இயக்குனரா., தயாரிப்பாளரா.,”

“ரெண்டுந்தேன் தோழர்.”

“இவனோட தலையடியாப் போசுப்பா., சுரேசு நீ கேமராவத் தூக்கின்னு வா.,” என்றபடி கிளம்பிவிட்டார்.

“நானும் வர்றேன் தோழர்.”

“இல்லப்பா நீ ரெஃப்ரஷ் ஆயிட்டு வா., மொதலாளி., நாங்க பாமரம்பா., கெளம்புறோம்., என்னா வயசாச்சு அவருக்கு மனுசம் யோகா பண்றேண்ட்டு கெளம்புறாம்., அவரப் பத்தின ஆவணப் படந்தான., இத எடுக்காம வேற எத எடுக்கப் போறோம்”

இப்படியாக நம்மாழவாரின் யோகா செய்கைகளைப் படம்பிடித்து விட்டு காலை உணவினை அருந்தினோம். இதற்கிடையில் நம்மாழ்வார் நேர்காணலுக்கு தயாராகி வந்திருந்தார்.

இயற்கை முறையில் பேணிவந்த அந்த மையத்தில் தங்கும் குடில்கள் மண் சுவர்களாலும் கற்சுவர்களாலும் வடிவமைக்கப் பட்டிருந்தது. அதில் ஒரு குடிலுக்கு முன்னால் சாட் வைப்பது எனத் தீர்மானித்தோம்.

“ஏம்பா தமிழ்மணி நீ டைரக்டர் தான., வாப்பா ஒரு பிரேம் வைப்பா.” என்றார்.

நானும் கொஞ்சம் இறுமாப்போடு ஒளிப்பதிவாளர் சுரேசுடன் சேர்ந்து ஃப்ரேம் வைத்துவிட்டு அவரிடம் காண்பித்தேன்.

“ரெண்டு பேருமே உருப்படாத பசங்கப்பா.,” என்றவர். பக்கத்தில் பழுது பார்க்க வைத்திருந்த மாட்டுவண்டிச் சக்கரங்களில் ஒன்றைத் தூக்கிக் கொண்டு வரச் சொன்னார். இருவரும் தூக்கி வந்தோம்.

அங்கிருந்த மண்குடிலின் திண்ணையில் அதை நெட்டுவாக்கில் சாய்த்து வைக்கச் சொன்னார். அப்படியே ஒரு கயிற்றுக் கட்டிலைக் கொண்டு வந்து குடிலின் வாசலில் போடச் சொன்னார். அதில் நம்மாழ்வாரை அமர வைத்தார்.

“தமிழ்மணி ஒரு ஃபிரேம் வச்சின்னா., எதுக்காக வைக்கணும்ன்னு யோசிக்கணும். அந்தாபாரு அந்த மனுசம் மேச்சட்ட போடாம ஒரு துண்டப் போத்திக்கின்னு ஒக்காந்திருக்கான், அவன் யாரு விவசாயி., இயற்கை விவசாயத்தக் காப்பாதணும்ன்னு நெனக்கிறாம். அந்த மண்குடில் என்னா சொல்லுது., எல்லாமே இந்த மண்ணுல இருந்து வந்ததுதேன்னு குறியீடுப்பா., அந்தச் சக்கரம்., அத மட்டும் மனுசங் கண்டுபிடிக்காட்டி இன்னக்கி தொழில் முன்னேற்றமும் கண்டுபிடிப்புக்களும் கெடையாதுப்பா., சக்கரந்தாம் நமக்கு முன்னோடி., நமக்கு இயற்கைதான் முன்னோடிங்கிறதுக்கு அதாங் குறியீடு., இன்னாப் போ நீ..” என்றவாறு

“அய்யா., ஆரம்பிக்கலாங்களா.” என்ற கருப்பு கருணாவின் குரலுக்கு.,

“நீங்க கேளுகய்யா.” என்றார் நம்மாழ்வார்.

“அமெரிக்கா மாதிரி நாடுகளெல்லாம் விவசாயத்த விஞ்ஞான மேம்பாட்டோட பண்றப்ப நீங்க மட்டும் ஏன் இயற்கை விவசாயத்த முன்மொழியுறீங்க.” என முதல் கேள்வியிலேயே விசயத்திற்குள் வந்துவிட்டார்.

அது வேளாண் சமூகத்தின் முதல் குடியில் ஆரம்பித்து ஜப்பானிய இயற்கை வேளாண் அறிஞர் மசானபு புகாகோவில் வந்து உடல்நலம் மனநலம் சமூகநலம்  நுகர்வு கலாச்சாரத்தின் வணிகமயம் உலகமயமாக்கலின் சூழ்ச்சி என எல்லையில்லா வானமாய் விரிந்து தொடர்ந்தது. இடையிடையே என்னையும் உமரையும் அவர் கேள்விகள் கேட்கச் சொன்ன பெருந்தன்மையோடு கடைசியாய் ஒரு கேள்வி கேட்டார்.

“சரிங்க அய்யா இன்னக்கி இருக்கிற அரசியல் அமைப்புகள்ல எந்த அமைப்பு உங்க திட்டங்கள எடுத்துட்டுப் போனா மாற்றம் வரும்ன்னு நெனைக்கிறீங்க. ?” என்றார்.

“கம்யூனிஸ்ட்கள் தாங்கய்யா.” என்று சற்றும் தயங்காமல் பதிலளித்தார் நம்மாழ்வார்.

“அதுல பல கட்சி இருக்குதுங்கய்யா. அதுல குறிப்பா எதுன்னு சொல்லுங்க..” என்றார் கருப்பு கருணா.

“மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.” என்றார் நம்மாழ்வார். ஏன் எதற்கு என்று., பின்னர் கேள்வியும் பதிலும் நீண்டது வெகு சுவாரஸ்யமும் முக்கியமானதும் கூட.

எல்லாம் முடித்துவிட்டுச் சொன்னார்.

“பாத்தியாப்பா., மார்க்ஸிஸ்ட்டுன்னு சொல்லவச்சேன். மனுசனோட உள்ளத்த நோண்டணும்பா., அத வெளில கொண்டுவந்தா எல்லா சரியாப்பூடும்.,” என்றவர் ஒரு சிகரட்டைப் பற்றவைத்துக் கொண்டார்.

ஆனால் என்ன மேழி என அவர் பெயர் வைத்த நம்மாழ்வாரைப் பற்றிய ஆவணப்படத்தின் புட்டேஜ்கள் அமெரிக்காவில் உள்ள யாரிடமோ சிக்கிக் கொண்டது. அதை மீட்பது இனி ஒளிப்பதிவாளர் சுரேஷின் கைகளில் தான் இருக்கிறது. ஒருவேளை அந்த புட்டேஜ்கள் இருக்கிறதோ இல்லையோ.?!

“ஏறுனா ரயிலு இறங்குனா ஜெயிலு என்கிற ஐமாபா வைப் பற்றிய ஆவணப்படமும், மேழி என்கிற நம்மாழ்வார் குறித்த ஆவணப்படமும் குறித்த நேரத்தில் வெளியாகியிருந்தால் மாற்றுப் பண்பாட்டுத் தேவைக்கான மிகச் சரியான கருவிகளாக அமைந்திருக்கும். கருப்பு கருணாவின் பிரதிபலிப்பு கற்றையின் நீளமும் இன்னும் நீண்டிருக்கும்.

கருப்பு கருணாவை வசீகரம் செய்து கொண்ட முன்னிறுத்திய எங்கள் மாவட்டத்தின் மறைந்த எழுச்சிக் கவிஞர் வெண்மணி க்லை இரவு மேடைகளில்.. புரட்சித் தலைவர் வந்தார்., புரட்சித் தலைவி வந்தார்., புரட்சிக் கலைஞர் வந்தார்., புரட்சிப் புயல் வந்தார்., ஆனால் புரட்சி மட்டும் இன்னும் வரவில்லை என முழுங்குவார். ஆனால் அவர் முன்னமே ஒரு புரட்சிக்கான கலைஞனைக் கண்டுபிடித்திருந்தார். அவர் தான் கருப்பு கருணா. தன் வாழ்நாளின் அத்துனை நிமிடங்களிலும் புரட்சியை எதிர்பார்த்துக் கொண்டே தன் சிந்தனைகளை கலைகளின் வாயிலாக எழுத்துக்களின் வாயிலாக தோழர்களின் நண்பர்களின் புதிய இளைஞர்களின் வாயிலாக செயல்படுத்திக் கொண்டே இருந்தவர் கருப்பு கருணா.

தமுஎகச நடத்திய தொடர்ச்சியான உலகத் திரைப்பட விழாக்கள் பாண்டிச்சேரி குறும்பட ஆவணப்பட விழாக்கள் மாநாடுகள் பயிலரங்குகள் மாநிலக்குழு நிகழ்வுகள் தோழர்களின் இல்ல நிகழ்வுகள் என எனக்கு அவருடனான பங்கேற்புகளில் எங்கள் இருவருக்குமான உரையாடலும் அனுபவமும் அவரிடம் நான் கற்றுக் கொண்டதும் என அவ்வளவு இருக்கிறது.

”சொல்லுங்க அன்புத் தோழரே.” என கருணாவை நான் விழிப்பதும்., ”ஏம்பா தமிழ்மணி.” என என்னை அவர் அழைப்பதுமே எனக்கும் அவருக்குமான   அடையாளம். இந்த அன்புத் தோழரே என்பதற்குள்ளும் ஏம்பா என்பதற்குள்ளும் அடங்கிக் கிடக்கிறது அத்துனையும்.

ஈரோட்டுக் கிழவனைப் போல மூத்திரச்சட்டியைத் தூக்கிக் கொண்டாவது நூறு வயது வரை பாட்டளிகளுக்காகவும் சனாதனத்திற்கு எதிராகவும் தனக்கான கலையுணர்வோடு பேசிக் கொண்டே இருப்பார் என நினைத்திருந்தேன்.

என்ன செய்ய..?! என நினைக்கையில் செய்வதற்கு அவர் போட்டு வைத்திருக்கும் அத்துனை பாதைகளும் விரிந்து கிடக்கிறது.

தோழமையுடன்,

அய்.தமிழ்மணி

தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர்

தேனி மாவட்டச் செயலாளர்.

+91 7373073573

007tamizh@gmail.com

000000000000000000000000000000000000000

அய். தமிழ்மணி பற்றிய சிறு குறிப்பு :

அய். தமிழ்மணி, கவிஞர், குறும்பட இயக்குனர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினரும் தேனி மாவட்டச் செயலாளர் என்று பல்வேறு பட்ட தளங்களில் இயங்குகின்றார்.

நடு குழுமம்

நடு லோகோ

(Visited 148 times, 1 visits today)
 
அய்.தமிழ்மணி

சீரகச்சம்பா மட்டன் பிரியாணியும் செவனப் கலரும் – சிறுகதை-அய்.தமிழ்மணி ( அறிமுகம் )

”விடிஞ்சும் விடியாம எங்க கெளம்பிட்டீங்க.” ”ஒங்கப்பெய்ம் அனுப்புன ஹெலிகாப்டர்ல அப்படியே ஒரு ரவுண்டு ஊரச் சுத்திட்டு வரலாம்ன்னு இருக்கேன்., பாக்க வேண்டிய வேலயப் பாப்பாளா. கேள்வி கேட்க வந்துட்டா..” என்றபடி […]

 

4 thoughts on “”மனதின் மகத்துவத்தை அறிந்தவன்”-தோழர் கருப்பு கருணா நினைவுக்குறிப்புகள்-கட்டுரை-அய். தமிழ்மணி”

Comments are closed.