கருணா என்னும் கலைஞன்-தோழர் கருணா நினைவுக்குறிப்புகள்-கட்டுரை- எஸ்.ராமச்சந்திரன்

1984ல் போபால் விஷவாயுக் கசிவு விபத்து. பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவை எவ்வாறு குப்பைக் கிடங்காக மாற்றியது என்பதற்கு ஒரு உதாரணம். இதையொட்டி அகில இந்திய அளவில் மக்கள் அறிவியல் இயக்கங்கள் அறிவியல், அரசியல் விழிப்புணர்வுக்காக கலைப் பயணங்களை நடத்தியது. இதில் முன்னணிப் பாத்திரம் வகித்தது கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத் என்கிற கேரள மாநில அமைப்பு. இப்பயணம் இந்தியாவில் நான்கு முனைகளில் தொடங்கி  தொடங்கி போபாலை நோக்கிச் சென்றது. இப்பயணம்   தமிழகம், புதுச்சேரியைக்  கடந்து சென்றது. கலைப்பயணம் பின்னாளில் உருவான அறிவொளி இயக்கம், சுகாதார இயக்கம், பெண்கள் சமம் இயக்கம் போன்ற இயக்கங்களைக் கட்டுவதற்கு ஒரு முன்னோட்ட நிகழ்வாக இருந்தது.

1988ல் கேரளாவில் எர்ணாகுளம் முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி அறிவியல் இயக்கம் புதுச்சேரியில் எழுத்தறிவு இயக்கத்தை நடத்துவதற்கு திட்டமிட்டது. தமிழகத்திலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒரு சில மாவட்டங்களில் முன்மாதிரியாகச் செய்யலாமென முயற்சித்தது. இதனுடைய செயல்பாடுகளில் டாக்டர் சுந்தரராமன், பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா, ஆசிரியர் ஜெ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இருந்தனர். எழுத்தறிவு இயக்கத்திற்கான கலைப் பயண பயிற்சிப்பட்டறை 1988 டிசம்பரில், புதுச்சேரி மாநிலத்தில் மதகடிப்பட்டு அரசுப் பள்ளியில் தொடங்கியது. இக்கலைப் பயணஅனுபவங்கள் அனைவருக்குமே புதியனவற்றைக் கற்றுக்கொடுத்தது. கேரளாவில் தயாரான நாடகங்கள் தமிழகம், புதுச்சேரிக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டன.

இப்பயிற்சி முகாமில் தான் முதன்முதலில் கருணாவைச் சந்தித்தேன். பிரளயன், வேல. ராமமூர்த்தி, ச. தமிழ்ச்செல்வன், ஷாஜகான், மணிமாறன் எழுத்தாளர்கள், நாடக கலைஞர்கள், கல்லூரிப்  பேராசிரியர்கள் என  கருத்தாளர்களின் பட்டாளமே அங்கு வந்திருந்தது. கருணா நாடகக் கலைஞராக வந்திருந்தார். அப்போது தொடங்கிய அறிமுகம் அவரது வாழ்நாள் முழுவதும் நீடித்தது.

கருணா தனது கல்லூரி நாட்கள் தொடங்கி, வெவ்வேறு தளங்களில் களப் பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அர்ப்பணிப்பு என்ற வார்த்தையின் பொருள் இவரை அறியாமலேயே இவர் ஈடுபடுத்திக் கொண்ட அத்தனைச் செயல்பாடுகளிலும் ஒட்டிக்கொண்டது. இதற்கு எந்தவிதமான திட்டமிடலும், முன்னேற்பாடும்  இவரிடம் இருந்ததாக நான் அறியவில்லை. “விட்டேத்தியாக இருக்கிறான்” என்று ஒரு சொலவடை உண்டு. அது கருணாவிற்கு பொருந்தலாம், அதை பொறுப்பற்ற தன்மை என்று  சுருக்கிவிட முடியாது. இச்சமூகம் செல்லவேண்டிய இடதுசாரித் திசைவழி பற்றிய புரிதல் கருணாவிற்கு இருந்தது. தன்னுடைய அனைத்துச் செயல்பாடுகளிலும் அதை முன்னிறுத்தியவர் கருணா.

எனது நேரடி அனுபவங்களாக கலைப் பயணங்கள்,  அனைவருக்கும் கல்வி என்ற முழக்கத்துடன் தொடங்கிய அறிவொளி இயக்கம், அதன் தொடர்ச்சியாக அனைவருக்கும்  சுகாதாரம் என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழ்நாடு, புதுவை அறிவியல் இயக்கம் தனது பணிகளை தொடங்கியது. முதல் கட்டமாக அதற்கான பத்துநாள் நாடக உருவாக்க பயிற்சிப்பட்டறை புதுச்சேரியில் நடந்தது. தலைமை ஒருங்கிணைப்பாளராக பிரளயன் இருந்தார். அறிவொளி இயக்கத்தில் பங்கேற்ற  அனுபவசாலிகள் கலந்துக் கொண்டனர். குறிப்பாக முகில், கருணா போன்றவர்களுடன் புதிய தோழர்களும் பங்கேற்ற பயிற்சி பட்டறை நடந்தது. இதுபோன்ற பட்டறைகளில் முதல் இரண்டு மூன்று நாட்கள் எதுவுமே  உருவாகாத போன்ற தோற்றம் இருக்கும். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அரட்டை அடித்துக் கொண்டு இருப்பது போல் தோன்றும். டாக்டர் சுந்தரராமன் நாள்தோறும் வந்து சுகாதாரம் குறித்து பல செய்திகளை நாடக உருவாக்கத்திற்கு உதவியாகக் கூறுவார்.

நாடக உருவாக்கத்தில் மையக்கருவாக எது இருக்கலாம் என்ற விவாதங்கள் இடம் பெறும். பெண்களுக்கு ஏன் கழிப்பறை மிகவும் அவசியம், மாதவிடாய் பிரச்சனைகள், கொசுத் தொல்லை, வீட்டை சுற்றி தண்ணீர் தேங்குவது, சாக்கடைப் பிரச்சனை, பாதுகாக்கப்பட்ட குடிநீர், சத்துணவு, குழந்தைகள் பராமரிப்பு, கிராம சுகாதாரத்தேவைகளில் சமூகத்தின் பங்கு இவையெல்லாம் மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக நாடகங்கள் இருக்க வேண்டும். அதற்கான நாடக உருவாக்கமே பயிற்சியினுடைய அடிப்படையாகும்.

நாடகங்களில் நேரடியாக வெறும் பிரச்சினைகளை மட்டும் பேச முடியாது. அதைத்தாண்டி அழகியல், நக்கல், எள்ளல் போன்றவைகளோடு பாடல்களும் இடம் பெறவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக அறிவியல் பார்வை மிகவும் அவசியம். எக்காரணம் கொண்டும் மூடநம்பிக்கைக்கு ஆதரவாக இருந்துவிடக்கூடாது. நாடகம்  சீரியஸாகவும், கூடுதலான நகைச்சுவை உணர்வுடனும் அமைவதில் கருணாவின் பங்கு இருக்கும்.

கருணாவின் பிரசன்ஸ் ஆப் மைன்ட்  நன்றாக இருக்கும்.

நாடகத்தின் ஒரு முன்னோட்டக் காட்சி.

பிரளயன் டாக்டர்…

கிராம ஆஸ்பத்திரி சூழல்…

டாக்டர் ரூமுக்குள் நுழைவார்.

எஸ்… பேஷண்ட் …

ஒரு கையில் கட்டுடன் பேஷண்டாக  கருணா …

டாக்டர் … என்னய்யா …

டாக்டர், என் கையில் அடிபட்டிடுச்சி  சார்,

எங்கய்யா காமி,

கட்டுபோடாத கைய காண்பிப்பார் பேஷன்ட்.

ஏன் அந்த கையில கட்டு போட்டு இருக்க?

அந்த கையிலும்  அடிபடாமல் இருக்க தான் சார்,

பார்வையாளர்கள் மத்தியில் ஒரே ஆரவாரம்.

மக்களின் கவனக்குவிப்பு, இந்நிகழ்வை நோக்கித் திரும்பும்.

இன்னும் ஒரு நாடகத் தயாரிப்பு…

பூலோகத்தில் சுகாதார சீர்கேட்டிற்கு  காரணமாக இருந்தவர்களை  எமதர்மன் தண்டிப்பதாகக் கற்பனை காட்சி. பின்னர் நாடகம் முழுமையடையவில்லை. ஆனால் எமனாகக் கருணா. முதல் காட்சியிலேயே முதுகைச் சொறிந்து கொண்டிருப்பார். இதர கருத்தாளர்கள் கருணா நீ ராஜா மாதிரி உட்காரு. கருணா, ஏன் எமனுக்கு முதுகு  கிடையாதா, அவருக்கு அரிக்காதா, நாம் இதுவரை அறிந்த, பார்த்திருந்த பிம்பங்களை உடைப்பது  கருணாவிற்கு  சர்வசாதாரணம். அவருடைய அனைத்துக் செயல்களிலும் தனது பகடி மூலம் செய்து கொண்டே இருப்பார்.

அறிவியல் இயக்கம், அறிவொளி இயக்கம் தாண்டி த.மு.எ.க.ச  பணிகளில் ஈடுபடத் தொடங்கினான் கருணா.திருவண்ணாமலை ‘கலை இரவு’ தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. கலை இலக்கிய பண்பாட்டு இயக்கத்திற்கு மாபெரும் கொடையாகும். அதனுடைய மூன்று கதாநாயகர்கள் பவா. செல்லத்துரை, கருணா,   பல்லவன். அதில் கவிஞர் வெண்மணிக்கும் முக்கியபங்குண்டு.

அதன் வீச்சு திருப்பரங்குன்றத்தை அடைந்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் த.மு.எ.க.சவின் மையச் செயல்பாடாக கலை இரவு மாறியது. பின்னர் அது இடதுசாரி வெகுஜன அமைப்புகளின் நிகழ்வாக மாறியது. கலை இரவு  தமிழகம் முழுவதும்  பற்றி கொண்டவுடன் திருவண்ணாமலை வேறு வடிவங்களை நோக்கித் திரும்பியது. ‘முற்றம்’ என்ற நிகழ்வு மாதந்தோறும் நடக்கத் தொடங்கியது.

புதிய சிந்தனைகள், புதிய வடிவங்கள் இதன் மூலம்  அமைப்பு புதிய பரிமாணங்களை அடைவதுடன், புதிய வெளிச்சத்தையும்  காட்டியது. புதிய வெளிச்சம் பாய்ச்சியவனாக கருணா இருந்தான். நடக்கும் மாற்றங்களை அப்டேட் செய்வதுடன் தன்னை  அனைத்துக்கும்  தகவமைத்துக் கொள்பவனாக, நுட்ப  அரசியல் கலைஞனாக கருணா இருந்தான்.

த.மு.எ.க.ச. கடந்த 20 ஆண்டுகளாக தமிழக பண்பாட்டுத்தளத்தில் அதிக எண்ணிக்கையில் மக்களை திரட்டும் அமைப்பாக மாறி இருந்தது.மக்களுக்கு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக அரசியல் பார்வையுடன் செய்திகளைச் சொல்லும் அறிவிப்பாளராக கருணா வலம் வந்தான்.  த.மு.எ.க.ச. மாவட்ட அமைப்பின் பொறுப்பாளராக இருந்து, அமைப்பின் மாநிலக்குழு உறுப்பினராகத் தொடங்கி மாநில துணைப் பொதுச்செயலாளராக வரை உயர்ந்தான். அவ்வமைப்பில்  ஒவ்வொரு கட்டத்திலும் அதனுடைய முகமாகவும் செயல்பட்டான். மாநிலக் குழுக் கூட்டங்களில் ‘கடைசி பெஞ்சுக்காரனாய்’ இருப்பான். ஆனால் விவாதங்களில் தனது கருத்துக்கள், ஆலோசனைகள் மூலம் முடிவுக்கு அருகாமையில் விவாதத்தைக் கொண்டு செல்வான். மாநாடுகள், மாநில அளவிலான சிறப்பு நிகழ்வுகளுக்கான முழக்கங்களை முடிவு செய்யும்போது கருணாவின் கருத்துக்கள் செறிவாக, சூழலின் தேவைக்கேற்ப இருக்கும். உதாரணமாக காவியற்ற தமிழகம், சாதியற்ற தமிழர்.  கீழடி நம் தாய்மடி, போன்றவைகளைச் சொல்லமுடியும்.

த.மு.எ.க.ச.  மாநிலக் குழு இரண்டு  நாள் கூட்டங்களில் ஒவ்வொரு காலகட்டத்திலும் இரவு நேரங்களில் உணவுக்குப் பின்னர் நள்ளிரவைத் தாண்டி “அரட்டைக் கச்சேரி” அமர்க்களப்படும். மாநிலக்குழுவின்  முறையான கூட்டத்தில் நடைபெறும் விவாதங்களைவிட  இந்த அரட்டை அர்த்தமுள்ளதாகவும், புதிய இளைஞர் பட்டாளத்தை ஈர்க்கும் விதமாகவும் இருக்கும். ஒவ்வொரு காலத்திலும் இந்த அரட்டை அரங்கத்தை வழிநடத்துபவர்கள் மாறிக் கொண்டே இருந்தார்கள். கந்தர்வன், மேலாண்மை பொன்னுச்சாமி, தமிழ்ச்செல்வன், பாரதி கிருஷ்ணகுமார், ஷாஜஹான், உதயசங்கர், முத்துநிலவன், பிரளயன், திண்டுக்கல் லியோனி என்று அனைவரையும் பார்க்கலாம். இதுபோன்ற கூட்டங்கள் நல்ல பயனை உருவாக்கியது.  இதில் பார்வையாளனாய் கருணைவையும் பார்க்க முடியும்.

கருணா தீவிர இலக்கிய வாசகன். அதுவே அவனிடம் புதிய பார்வையை, புதிய கருத்துக்களை உடனடியாக முகநூலில்  பதிவு செய்ய வைத்தது. விருதுநகரில் நடைபெற்ற த.மு.எ.க.ச. 12ஆவது மாநில மாநாட்டிலிருந்து பெரும்பாலும் இருவரும் ஒரே அறையில் தான் தங்குவோம்.  மாநிலக்குழு, செயற்குழு, மாநில மைய நிகழ்வுகள் எது நடந்தாலும் பஸ்ஸ்டாண்டில், ரயில்வே ஸ்டேஷனில் யார்  முன்னர் வந்தாலும், எங்கே இருக்க?  நான் ரூமுக்கு வந்துட்டேன், நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே ரூம் தான் என்ற குரல் விடியற்காலையில் கருணாவினுடையதாக இருக்கும். நடைபெறும் கூட்டத்தைப் பற்றி, வாசித்த புத்தகத்தைப் பற்றி, அரசியல் நிகழ்வுகள் பற்றி பேச்சு தொடர்ந்து கொண்டே இருக்கும். நிகழ்ச்சி முடிந்து  ஒரே பஸ்ஸில்தான் ஏறுவோம். சின்ன சின்ன சண்டைகள் போடுவதும் தவறாது நடக்கும்.

திருவண்ணாமலைக்கு வெளியே பொதுவாழ்க்கையை  விரிவுபடுத்தியது புதுச்சேரியில் தான். புதுச்சேரி அவனுக்கு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி இருந்தது. திருவண்ணாமலையில் ஒரு நாளிதழில் துணை ஆசிரியராக பணியாற்றினான். அது நாள்தோறும் திருவண்ணாமலையில் வெளிவந்து கொண்டிருந்தது. “புதுச்சேரி சிறப்பு இதழை” கொண்டுவரலாம் என்று அந்த பத்திரிகை நிர்வாகம் முடிவு செய்தது. துணை ஆசிரியர் என்ற முறையில் கருணா புதுச்சேரிக்கு அவ்வப்போது வந்து கொண்டே இருந்தான். புதுவை அரசு மூலமாக விளம்பரம் கிடைப்பதற்கு நல்ல சூழல் அப்போது இருந்தது.

திரை இயக்கம் உருவாக்கப்பட்டது அதனுடைய முதல் பொறுப்பாளராக இருந்தான் கருணா. கருணாவின் நெருங்கிய நண்பரான  பவா. செல்லதுரையின், “ஏழுமலை ஜமா” என்ற சிறுகதை கருணா இயக்கத்தில் திரைப்படம் ஆனது. திருவண்ணாமலைக்கு வெளியில் முதலில் ரிலீஸ் புதுச்சேரியிலுள்ள  அலையன்ஸ் பிரான்சிஸ் திரையரங்கில் நடந்தது. அப்போதைய மாண்புமிகு முதல்வர் என். ரங்கசாமி அவர்கள் ரிலீஸ் செய்தார். அது ஒரு நல்ல அனுபவம். மாலை 6 மணிக்கு திரைப்படம் திரையிடல் நடந்தது. திருவண்ணாமலையில் இருந்து கணிசமான நண்பர்கள் வந்திருந்தார்கள். கருணாவின் குடும்பத்தினரும் வந்திருந்தனர். திரையிடல் கலந்துரையாடல் 9 மணிக்கு நிறைவடைந்தது. ஆனால் முதல்வர் வரவில்லை. நிகழ்வு முடிந்து அரங்கத்தை விட்டு வெளியே வந்தோம். இரவு 9.30 மணிக்கு மேல் புதுச்சேரி முதல்வர் அவர்கள்  காவல்துறை மற்றும் பத்திரிகையாளர்களுடன்  அரங்கத்திற்குள் நுழைந்துவிட்டார். மீண்டும் திரையிடல் நடந்து. 11 மணிக்கு வாழ்த்துரை, ஒருமணிநேரம் பேசினார். கருணாவின் மனதிற்கு நிறைவான நிகழ்ச்சியாக அது இருந்தது.

திருவண்ணாமலையில் தமிழ்நாடு திரை இயக்கம் சார்பில் சர்வதேச ஆவணப்பட, குறும்பட விழா நடைபெறுவதாக இருந்தது. ஏதோ காரணங்களால் நடத்த முடியவில்லை. என்னிடம் புதுச்சேரியில் நீ நடத்து என்று   கேட்டான் கருணா. எனக்கு திரைப்படங்களில்  எல்லாம் ஈடுபாடு கிடையாது. கருணா திரும்பத்திரும்ப புதுச்சேரியில் அதற்கான வாய்ப்பு இருக்கு. அரசாங்க ஆதரவு இருக்கும். ஏதேனும் ஒரு தியேட்டரை இரண்டு நாளைக்கு வாடகைக்கு எடுத்து நடத்தலாம் என்று சொல்லிக்கொண்டே இருந்தான்.

அலையன்ஸ் தியேட்டர்  மிகவும் சிறியது. ஆசிரமம் தியேட்டர் அனுமதி  கிடைக்கவில்லை. கமர்சியல் தியேட்டர்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் இல்லை. அந்த சூழ்நிலையில் ஆசிரமத்தை  அணுகியபோது, பல்கலைக்கழக தொடர்பு  அங்கிருந்த நண்பர்கள் மூலம் கிடைத்தது. மின்னணு தொடர்பியல் துறைப் பேராசிரியர் அருள் செல்வன் அவர்களைச் சந்தித்தோம். 2011ஆம் ஆண்டு சர்வதேச ஆவணப்பட, குறும்படத் திருவிழா புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் ஆதரவோடு நடத்தலாம் என்று முடிவு செய்தோம். அத்துடன் மும்பை பிலிம் டிவிஷன், சென்னையிலிருந்த சென்சார் போர்டு அதிகாரி பக்கிரிசாமி, எடிட்டர் லெனின், இயக்குனர் எம். சிவக்குமார்  இவர்களுடைய ஒத்துழைப்புடன் விழாவை திட்டமிட்டோம். அனைவரையும் நானும் கருணாவும் சந்தித்து கொண்டே இருந்தோம்.

புதுச்சேரியில் சர்வதேச திரைப்பட விழா தொடங்கியதிலிருந்து கருணாவோடு நெருக்கம் எனக்குள் கூடிக்கொண்டே இருந்தது. அழைப்பிதழ் தயாரிப்பிலிருந்து திரையிடல்களின் பட்டியல் வரை  அத்தனை பணிகளிலும் நாள்தோறும் தொலைபேசியில் கருணாவுடன் பேசிக்கொண்டே இருப்போம்.  பேசாத நாட்களே இல்லை என்று சொல்லலாம். விழா நான்கு நாட்கள் நடக்கும். கருணா நான்கு நாட்கள் முன்னதாகவே புதுச்சேரிக்கு  வந்துவிடுவான். திரைப்பட விழா களைகட்டிவிடும். பேனர் வடிவமைப்பு, பணிகள் ஒருங்கிணைப்பு, பல்கலைக்கழகம் செல்லுதல், திரைப்படக் குறிப்புப் புத்தகங்கள் உருவாக்கம் என அத்தனை பணிகளிலும் கருணாவினுடைய பங்களிப்பு இருக்கும். ஸ்கிரீனிங் ஷெட்யூல் அனைத்திலும் கருணாவின் கைவண்ணம் தெரியும். என்னை அறியாமலேயே நான் திரைப்பட விழா அமைப்பாளனாக  மாறிக் கொண்டு இருந்தேன். திரைப்பட அரசியல் குறித்து பேசுபவனாக மாறி இருந்தேன். தொடக்க விழாவில் பிடித்த மைக்கை நிறைவு நிகழ்ச்சி வரை கீழே வைக்க மாட்டான் கருணா. அது விழா உற்சாகமாக நிகழ   மிகவும் உதவிகரமாக இருக்கும்.

கருணாவிடம் ஒரு ‘அரகன்சி’ இருப்பதாக தோன்றும். ஒரு கருத்தை அவன் எப்படி எடுத்துக் கொள்வான் என்ற அச்சம் சொல்பவர்களுக்கு இருக்கும். (ச.தமிழ்செல்வன் தவிர)  அவ்வளவு சீக்கிரம் சொல்லி விட முடியாது. ஆனால் கருணாவை அரகன்சி என்று முடிவு செய்துவிட முடியாது.

இரண்டாவது ஆண்டு திரைப்பட விழா. பல்கலைக்கழகத்தினுடைய  துறைத் தலைவர் மாற்றம், பேராசிரியர் கிருஷ்ணாத்ரே  பொறுப்புக்கு வந்திருந்தார். அவர் குஜராத்திகாரர். பாஜகவின் ஆதரவாளர் என்று கேள்விப்பட்டோம். இந்த ஆண்டு திரைப்பட விழா நடக்குமா என்று எங்களுக்கு சந்தேகம். திரைப்படங்களின் உள்ளடக்கம் குறித்து அவரிடம் பேசுவதற்காக நானும் கருணாவும் சென்றோம்.  திரையிடல் பட்டியலில் பாரதி கிருஷ்ணகுமாரின் வெண்மணி குறித்த ராமையாவின் குடிசை திரைப்படம், இந்தோனேசியாவில் கம்யூனிஸ்டுகள் படுகொலை குறித்த ஆக்டிங் ஆப் கில்லிங் என்ற ஆவணப்படம் இன்னும் பல அரசியல் படங்கள் குறித்த தகவல்களை ஆங்கிலத்தில் நான் அவரிடம் விவரித்துக் கொண்டு இருந்தேன். என்னுடன் கருணா வழக்கம்போல் கருப்புச் சட்டை, கருப்புக் கண்ணாடி, ஒழுங்கு செய்யப்படாத தாடி, மீசையுடன். கிருஷ்ணாத்ரே அனைத்தையும் கேட்டுக் கொண்டார். அவர் கருணைவையே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் என்ன சொல்லப் போகிறாரோ, நாளை மறுநாள் விழா தொடங்குகிறது. தமிழகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் வருகிறார்கள். தங்குமிட ஏற்பாடுகள் எல்லாம் தயார் செய்து விட்டோம். அப்பொழுதெல்லாம் மூன்று நாட்களுக்கும் உணவு ஏற்பாடு செய்வோம். அந்த ஏற்பாடுகளும் செய்து விட்டோம். பதட்டத்துடன் நாங்கள் கிளம்பினோம். கிளம்புவதற்கு முன் கிருஷ்ணாத்ரே கருணாவை பார்த்து, “இந்த தாடி மீசை எல்லாம் ரொம்பத் தேவையா? இதெல்லாம் கிளீன் செய்ய கூடாதா, என்று இந்தியிலும், ஆங்கிலத்திலும் கேட்டார். பக்கத்தில் இருந்த பேராசிரியர் அருள் செல்வனுக்கு சங்கடமாகதான்  இருந்தது. எனக்கு விழா நல்லபடியாக நடக்க வேண்டுமே என்கிற கவலை. கருணா ஏதாவது ‘ரியாக்ட்’ செய்துவிடுவானோ  என்ற பதட்டம் என்னைத்  தொற்றிக் கொண்டது. நல்லவேளை அமைதியாக இருந்தான்.

வெளியில் வந்தவுடன் என்னிடம் இவனோட எல்லாம் நாம சேர்ந்து வேலை செய்யக் கூடாது. நாம தனியா செய்யணும். எல்லாத்திலும்  தலையிடுவானுங்க.  உடனடியாக, இல்லை கருணா, இவ்வளவு பெரிய காம்பஸ், ஆயிரக்கணக்கான மாணவர்கள், மத்திய பல்கலைக்கழகம், மும்பை பிலிம் டிவிஷன் இவர்களுடன் தொடர்பு நமக்கு நல்லது, புதிய அனுபவங்கள். உன்ன தாடியை எடுக்கச் சொன்னால்,  நீ ஏன் இப்படி யோசிக்கிற, உனக்கு அதெல்லாம் தெரியாது எஸ்.ஆர்.  தாடி  ஒரு அடையாளம், அதை அவன் எப்படி எடுக்கச் சொல்லலாம் என்று கருணா கேட்டுக்கொண்டே வந்தான். மறுநாள் ஸ்கிரீனிங்   ஷெட்யூலுடன்  வருவதாகச் சொல்லிவிட்டு வந்தோம். கிருஷ்ணத்ரே, ஒவ்வொரு நாளும் பல்கலைக்கழக மாணவர்களின் படத்தை முதல் படமாக திரையிட வேண்டும் என்றார். கருணாவை தங்கும் விடுதியில் விட்டுவிட்டு, பேப்பர் பேனா கேட்டான் அதையும் வாங்கி கொடுத்து விட்டு வந்து விட்டேன்.

மறுநாள் காலை யுனிவர்சிட்டிக்கு போவதற்காகச் சென்றபோது கருணா ஒரு புதிய தோற்றத்துடன் காட்சி தந்தான். தாடி எல்லாம் எடுத்துவிட்டு, கிளின் ஷேவ் செய்து  இருந்தான். எனக்கு ஆச்சரியம்! என்ன பாக்குற, நைட்டெல்லாம் யோசிச்சேன்.  ஒரு பெரிய மனுஷன் சொல்றான். அவனுக்கு நம்ம  மேல அக்கறை இருந்திருக்கும். நீயும் சொன்ன,  நிகழ்ச்சியை நடத்துவது எவ்வளவு கஷ்டம்னு எனக்குத் தெரியும். இந்த தாடி 10 நாளில் வளர்ந்திடும். என்ன இப்ப, நம்ம அமைப்பு பற்றி அவனுக்கு ஒரு மரியாதை வரும். அவனோட நல்ல உறவு அமைப்புக்கும் நல்லது. அதுவரைக்கும் கருணா  எதுக்கும் கட்டுப்பட மாட்டான் அரகன்சிங்கிற என்னுடைய நினைப்பபிலிருந்து மாற்றம் வந்தது. அவனுக்கு அமைப்பின் நலன்தான் பிரதானம். அவன் அரகன்ட்  இல்லை.

பின்னர் நடைபெற்ற திரைப்பட விழாக்களுக்கு அழைப்பிதழ் தயாரிப்பில் தொடங்கி அனைத்து வேலைகளையும் நானே செய்யத் தயாராகி விட்டேன். ஆனால் அனைத்திலும் பைனல் டச்சப் கருணா செய்வான். திரைப்பட விழா தொகுப்பு பல்கலைக்கழக மாணவர்கள் செய்வார்கள்.

9 திரைப்பட விழாக்கள் நடந்து, பத்தாவது திரைப்பட விழா கரோனாவையும்  கடந்து கருணாவின் நினைவுகளோடு நடத்த வேண்டும். எவ்வளவுதான் நாம் நம்பிக்கையோடு நிகழ்ச்சிகளை நடத்த முடியும் என்றாலும் பைனல் டச்சப்புக்கு கருணா இல்லையே.

நான் விபத்தில் காலில் அடிபட்டு ஆறு மாதங்கள் வீட்டில் இருந்த போது திருவண்ணாமலையிலிருந்து என்னைப் பார்க்க வந்தான். அவனுக்கு  ஜிப்மரில் கண் ஆபரேஷன், அதில் திருப்தி இல்லை என்று தனியார் மருத்துவமனையில் மீண்டும் ஆபரேஷன். புதிய வீடு திறப்பு விழா. பத்து ஆண்டுகள் திருவண்ணாமலை மாவட்டத்தினுடைய பொறுப்பு எனக்கு. அப்போது  வந்தவாசியில், ஆரணியில் மாவட்ட மாநாடுகள், திருவண்ணாமலையில்  மாநில மாநாடு. 15 ஆண்டுகளுக்கு மேலாக பல விஷயங்களை பேசிப்பேசிக்  கொண்டே இருந்தோம். முரண்பாடுகளோடு பேசிக் கொண்டே இருந்தாலும், அவனுடைய அணுகுமுறையில் ஒத்துப் போகவே முடியாது. அதனாலேயே பேசிக்கொண்டே இருந்தோம்.  நாம் ஒரு பிரச்சனையை எந்தப் புரிதலில் சொல்கிறோமோ, அதே  புரிதலில் எடுத்துக் கொள்வான் கருணா.  அவனுக்கு சரி என்று ஏற்றுக் கொண்டதை அவன் மாற்றிக் கொண்டதே  இல்லை. அதை வறட்டுப் பிடிவாதம் என்று சொல்லத் தோன்றும். ஆனால் அவனது அத்தனை செயல்பாடுகளிலும் அவன் ஏற்றுக் கொண்ட  அரசியல் வெளிப்படும். அதுவே அவனது தனிச்சிறப்பு.

புதுச்சேரியில் நடந்த த.மு.எ.க.ச. 14ஆவது மாநாட்டில், “சிலைகளுக்கு மரணமில்லை” நிகழ்ச்சி அவனது கருத்துருவாக்கமே  செயல்வடிவம் பெற்றது. புதுச்சேரியோடு அவனுக்கு ஒரு பிணைப்பு நீடித்துக் கொண்டே இருந்தது.

புதுச்சேரியில் 1989இல் திருவண்ணாமலைக்கு வெளியே மக்கள் மத்தியில் கலைப் பயணத்தோடு பொது வாழ்க்கையை தொடங்கினான்.

கருணா த.மு.எ.க.ச. செயற்குழுவில் பொறுப்பேற்ற போது அவனது முதல் பொறுப்புப் பகுதி புதுச்சேரி.

அவனது குறும்படம் ஏழுமலை ஜமா புதுச்சேரியில் ரிலீஸ்.

அவன் பங்கேற்ற  த.மு.எ.க.ச. மாநில மாநாடும் புதுச்சேரியில் தான்.

நிறைவாக பங்கேற்ற பொது நிகழ்வும் புதுச்சேரி நடந்த  திரைப்பள்ளியே.

தஞ்சை தென்னிந்திய மக்கள்  நாடகவிழா. நாங்கள் இருவரும் வழக்கம் போல் ஒரே அறையில் தங்கியிருந்தோம். திருவுடையான் அந்த வருடம் காலமாகிப் போயிருந்தார்.   தீக்கதிரில்  வெங்கடேசனின் இரங்கல் கட்டுரை வெளியாகியிருந்தது. அக்கட்டுரையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். வெங்கடேசனின் இரங்கல் கட்டுரைக்காகவே நாம் சாகலாம். தபேலாவில் பவுடர் போட்டு தேய்ப்பதை எல்லாம் இரங்கல் செய்தியில் நேர்த்தியாக சொல்லி இருந்தான்.  இப்படி பேசிக் கொண்டே இருக்கும் போது நான் இறந்தால்,  நீ எனக்கு  இரங்கல் கூட்டத்தில் என்ன பேசுவாய்  என்று கேட்டான்  கருணா. நான் பேசுவேன். சரி நான் போய்ட்டா, நீ என்ன பேசுவே, முதல்ல நீ பேசு, என்று கேட்டேன். உட்கார்ந்து கேட்டால் எனக்கு வராது என்று சொன்னான். நான் பெட்டில் படுத்துக்கொண்டேன். கருணா இரங்கல் உரையைத் தொடங்கினான். எஸ்.ஆர். சிரித்துக் கொண்டே இருப்பதாகத்தான் பலருக்குத் தெரியும். ஆனால் அவர் ஒரு சீரியஸான காம்ரேட். அவரை நாம் இப்பொழுது இழந்திருக்கிறோம். த.மு.எ.க.ச. ஒரு நல்ல பொருளாளரை  இழந்திருக்கிறது என்று என்னென்னவோ கருணா பேசினான். யாருக்குமே கிடைக்காத வாய்ப்பு கருணாவின்  இரங்கல் உரை எனக்கு கிடைத்தது. பின்னர் கருணா எனக்காக நீ என்ன பேசுவே எஸ்.ஆர். என்றான். நான் உடனே எப்படி நான் பேசுவேன், நான்  தான் இறந்து விட்டேனே என்றேன்.

மாநாடு தொடக்க நிகழ்வுகளில் தப்பாட்ட நிகழ்ச்சியோடு இடையில் கருணாவின் முழக்கமிடும் குரல்களும், திரைப்பட விழாக்களிலும், மாநில குழு கூட்டங்களின் கடைசி பெஞ்சில் இருந்து ஒலிக்கும் குரல்களுடன்  தொடர்ந்து கொண்டே இருப்பான் கருணா. அவனுடைய செயல்பாடுகளினால் காலத்தைக் கடந்தும் நம்முடன் இருப்பான்.

கருணா சுதந்திரமானவன். கவிதைகள் எழுதுவான். சிறுகதைகள் எழுதுவான். நாவல் எழுத முயற்சித்தான். ஓவியன்.  வண்ணக் கலவைகளின் ரகசியம் அறிந்தவன். வடிவமைப்பாளன். திரை இயக்குனன். நடிகன். பன்முக கலைஞன் கருணா.

கருணாவின் தோழமை நினைவுகளோடு

எஸ்.ராமச்சந்திரன், புதுச்சேரி .

94430 69075, revathiramachandran96@gmail.com

0000000000000000000000000000000000

எஸ்.ராமச்சந்திரன் பற்றிய சிறுகுறிப்பு :

எஸ்.ராமச்சந்திரன் இசையில் இளங்கலை பயின்றவர், புதுச்சேரி மாநில அரசு ஊழியர் சங்கத்தின் கெளரவத் தலைவர் தோழர் பாலமோகன் பற்றிய ஆவணப் படத்தை இயக்கியுள்ளார். இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளராகவும் இருந்து வருகிறார்.

நடு குழுமம்

நடு லோகோ

(Visited 158 times, 1 visits today)
 

2 thoughts on “கருணா என்னும் கலைஞன்-தோழர் கருணா நினைவுக்குறிப்புகள்-கட்டுரை- எஸ்.ராமச்சந்திரன்”

Comments are closed.