கருணா என்றொரு இயக்கம்.பேசாத பேச்செல்லாம் பேசித்தீர்த்த மானுடன்!-கருணா நினைவுக் குறிப்புகள் – ச.மதுசுதன்

கருணா என்கிற பெயர் தமிழ் நிலத்தில் எல்லா காலங்களிலும் அதிர்வுகளை ஏற்படுத்திய பெயராகவே இருந்துவந்திருக்கிறது.அப்படித்தான் எங்கள் கருணாவும் கருப்பு கருணாவாக அடையாளம் கொண்டார்.

தோழர் கருணாவுடனான எனது முதல் சந்திப்பு எதுவென்று யோசித்து யோசித்து பார்க்கிறேன் சட்டென நினைவுக்கு வரவில்லை.ஆனால் அவரை முதன் முதலாக நான் பார்த்தது திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் பள்ளியில் நடைபெற்ற தமுஎகச மாவட்ட மாநாட்டில் தான்.தமுஎகச திருவண்ணாமலை மாவட்ட மாநாடு எப்போதும் பன்முகத்தன்மையுடன் தனது நிகழ்வுகளை தொகுத்து அரங்கேற்றும் என்பதால் தான் என்னை போய் பார்த்துவரச்சொன்னார் அப்போதைய எங்கள் விழுப்புரம் மாவட்ட செயலாளர் கே.வேலாயுதம்.மாநாட்டு அரங்க நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த அறைக்குள் நான் நுழையும் போது ஏதோ ஒரு உலகத்திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது.அது என்ன படம் என்பது கூட எனக்கு நினைவில்லை.பொதுவாக படங்களின் மீது எனக்கு எப்போதும் ஆர்வம் இருந்ததில்லை என்பதால் அது போன்ற திரைப்பட நிகழ்வுகளை என்னால் ஒருபோதும் நினைவில் வைத்துக்கொள்ள முடிந்ததில்லை.தர்மசங்கடத்தில் தான் கொஞ்சநேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தேன்.கொஞ்ச நேரத்தில் படமும் முடிந்தது.அனைக்கப்பட்ட அறை விளக்குகள் எல்லாம் எரிய துவங்கியது.முழு ஒளியும் அறையின் பரப்பை மெல்ல ஆக்கிரமிக்க துவங்கியது போது தான் மேடை பளிச்சென்று கண்ணுக்கு பட்டது.ஒரு எழில் சூழ்ந்த காட்டுவழியில் மேலிருந்து கதிரவன் ஒளிவீச சிறுவர் கூட்டம் நடந்துபோவதைப்போன்ற ஒரு படத்துடன் மாநாட்டு மேடை அலங்கரித்திருந்தது அந்த டிஜிட்டல் பேனர்.பார்த்தவுடனேயே பார்வையாளர்களை ஈர்க்கும் வண்ணமாக ரசனையுடன் இருந்தது அந்த படம் அத்தகைய பிரத்தியேக வடிவமைப்புகள் திருவண்ணாமலை தமுஎகசவின் தனித்த அடையாளங்கள் என்பதை பின்நாட்களில் தான் தெரிந்துகொண்டேன்.
அதுவரை முகநூல் வழியாக மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த கருணாவை அப்போது தான் நேரில் பார்க்கிறேன்.ஒயர்லெஸ் மைக்கை கையில் பிடித்துக்கொண்டு மேடை ஏறினார்.கருணா மேடையில் இருக்கிறார் என்றால் அங்கே ஒரு ரசனைமிகுந்த சொல் பிரவாகமும் ஜனரஞ்சகமான பேச்சும் பார்வையாளர்களை தன் வசப்படுத்தும் என்று அத்தகைய காட்சிகளை பார்த்தவர்கள் உணர்ந்திருப்பார்கள்.எப்போதும் போல் கடைசி வரிசையில் உட்காரும் பழக்கம் வகுப்பறையில் இருந்து பயணிக்கும் குணம் என்பதால் அங்கும் நான் கடைசியில் தான் உட்கார்ந்திருந்தேன்.மேடையில் இருந்த கருணா இடதுகையில் மைக்கைப் பிடித்துப் பேசிக்கொண்டே இருக்க,அவர் பேசும் வார்த்தைகளின் லாவகத்திற்கேற்ப அவரது வலதுகை காற்றில் ஒரு தூரிகையை வரைந்துகொண்டிருப்பதைப் போல அதன் போக்கில் சூழன்று கொண்டிருந்தது.அதை பார்த்தவர்களுக்கு அது அவரின் மேனரிசம் தானே என்று கூட தோன்றலாம்.ஆனால் அதை வெறுமனே மேனரிசம் என்று மட்டும் சொல்லிவிடமுடியாது.அது கருணாவை யாரென்று புரிந்து கொள்வதற்கான ஒரு துவக்க முகவரியும் ஆகும்.அந்த சிம்பாலிக் முகவரியால் தான்,பலர் அவரின் பால் ஈர்க்கப்பட்டார்கள்.அவர் கைகளும் வாயும் எப்போதும் ஓய்ந்திருந்தது கிடையாது.வீட்டில் இருக்கும் போது கூட அமைப்பிற்காகவும் சமூகத்திற்காகவும் அசைந்துகொண்டே இருந்த கைகள் அவருடையது.அந்த ஓயாத அசைவுகள் தான் அவருக்கான பெரும்பரப்பை கருத்தியல் முரண்பாடுகளுக்கும் அப்பாற்பட்டு சிவப்பு-நீலம்-கருப்பு என சமூகவிடுதலைக்கான ஆகச் சிறந்த குழைவுகளால் பல ஆயிரம் பேரை அவருக்கு சம்பாதித்து கொடுத்தது.
சேவின் கைகள்,அவரை படுகொலை செய்தபிறகு பொலிவிய ராணுவம் வெட்டி எடுத்துக்கொண்டது.அது ஏனென்று நமக்கு தெரியும்.வெட்டியெடுக்கப்பட்டாலும் பல ஆயிரம் கைகளாக உலகின் திசையெங்கும் முளைத்த கைகள் சேவுடையது.இன்றைக்கும் துருவ அடையாளங்கள் கடந்து முளைத்துக் கொண்டுதான் இருக்கிறது.அது சே கொண்ட தத்துவத்தின் பால் ஏற்பட்ட ஈர்ப்பு மட்டுமல்ல.அத்தத்துவத்தின் உயிர்ப்பு நிலையிலானது அது.தனிமனிதர்களை கொலை செய்துவிடலாம் ஆனால் அவர்கள் கொண்ட கருத்தை ஒருபோதும் கொலை செய்துவிட முடியாது என்பார் மாவீரன் பகத்சிங்.அப்படித்தான் காலம் கருணாவை நம்மிடம் இருந்து வாரியெடுத்துக்கொண்டாலும் கருணா கொண்ட கருத்தும் அவர் நமக்கு விட்டுச்சென்ற தத்துவமும் இன்னும் உயிர்ப்பு நிலையிலேயே தான் இருக்கிறது‌.அது பல ஆயிரம் உயிர்களை ஈர்க்கும் வசீகரமும் வார்ப்பும் கொண்டது.
மானுட விடுதலைக்கான வசீகரம் எப்படியும் பற்றிப் படரும் என்பதற்கு நானே ஒரு நிகழ் உதாரணம் தான்.அப்படியாகத்தான் அமைப்பிற்குள்ளேயும் வெளியாகவும் பல ஆயிரம் பேரை தன் கருத்தால் ஈர்த்து கொண்டவர் கருணா.அதன் பிரதிபலிப்பு தான்,அவர் இறந்த அன்று முகம் தெரிந்த தெரியாத பலரும் கருணாவின் இறப்பிற்கு முகநூலில் வருந்தியதும் இரங்கல் குறிப்பு எழுதியதும் கண்கூடானது.அப்படியான ஒரு பெரும் பரப்பை தன் கருத்தால் ஸ்தாபித்திருக்கிறார் கருணா என்பதே அவரது வாழ்வியல் வெற்றிக்கான சான்று.அவர் பெயருக்கு என்ன பொருளோ அதன் தன்மைக்கு கொஞ்சமும் பிசகாமல் வாழ்ந்து மறைந்தவர் அவர்.எல்லோராலும் அப்படி வாழ்ந்துவிட முடியுமா என்று நிச்சயம் சொல்லிவிடமுடியாது.அதற்கு தத்துவார்த்த பிடிப்பும் தான் கொண்ட கொள்கையின் மீதான தீராத காதலும் மானுட அசைவியக்கத்திற்கான எரிசக்தியாய் உள்ளூர எரிந்து கொண்டே இருக்கவேண்டும்.கள இயங்குதலுக்கான வெளியில் அவருக்கு சில முரண்பாடுகள் முன்னும் பின்னும் இருந்தாலுமே கூட தொடர் இயங்குதல் அவருக்கு சாத்தியமானது.
பெருந்தடாகத்தை நோக்கி பசிகொண்ட பறவைகள் பலதொலைவு கடந்து வருவதைப் போல,கருணா எனும் பெருஞ்சுனையில் ஊற்றெடுக்கும் சுனையை அள்ளிப் பருகுவதற்காக அந்த தடாகத்தின் நீண்ட வரிசைகளில் இங்கும் அங்குமாக நீறருந்தியவர்கள் ஏராளம் ஏராளம்.அது பிரத்தியேக காலத்தில் மட்டும் ஊற்றெடுக்கும் பருவச்சுனையல்ல.எல்லா காலத்திலும் மடைதிறந்த வெள்ளமாய் அன்பை மட்டுமே புனலாய் பாய்ச்சிட்ட ஜீவநதி.
பொதுமேடைகள் அல்லது அரங்க மேடைகள்,மாநாட்டு மேடைகள் என எதுவாக இருப்பினும் அந்தந்த கூட்டத்தின் மனநிலை,அச்சூழலின் தனித்த தாக்கம் என ஒவ்வொன்றையும் குறிப்புணர்ந்து அக்கூட்டத்தின் மனநிலைக்கேற்ப அத்துனைபேரையும் ஈர்க்கும் வகையில் சொற்கோலம் பூனுவதில் கருணா ஒரு தனித்த மானுடன் என்பதை அவருடன் பழகிய அணைவரும் அறிந்ததே.சூழலின் இருக்கத்தை தளர்ப்பதிலும் தானிருக்கும் இடத்தை பரவசமாக்குவதிலும் அதை கலகலப்பாக்குவதிலும் கருணாவை யாரொருவராலும் மிஞ்சிவிடமுடியாது என்று திமிரோடு சொல்வேன்.எத்தனை சிக்கலான விஷயமாக இருந்தாலும் தனிநபர் சார்ந்த அல்லது ஸ்தாபனம் சார்ந்த மிகநெருக்கடியான அமைப்பியல் கோளாறாக இருப்பினும் அதை உடைத்து பேசுவதிலும்,அதற்கான தீர்வை ஜனநாயக்கபூர்வமாகவும் அதே நேரத்தில் பளிச்சென்று தன்வாதத்தை கூர்மையாக முன்வைப்பதிலும் அவரொரு தனிப்பிறவி தான்.அதற்காக பல சங்கடங்களையும் நெருக்கடிகளையும் அவர் சந்தித்ததுண்டு.அவை எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும் வலிமை எழுத்திற்கு கூட இல்லை என்பதால் தான் அவருக்கு மட்டுமே தெரிந்த சில சங்கதிகள் காற்றோடு கரைந்து போனது.
முதல்முறையாக நான் கருணாவை நேரில் சந்தித்த அந்த திருவண்ணாமலை மாவட்ட மாநாட்டில் அவருடன் எனக்கு பழக்கம் இல்லை என்பதனால் அவரை நோக்கி நான் நெருங் துணியவில்லை.தூரத்தில் இருந்துகொண்டே அவரின் அசைவுகளை பார்த்துக்கொண்டிருந்தேன்.திருவண்ணாமலை கோயிலின் பிரதான வாயில் என்பது பக்தர்கள் கற்பூரம் ஏற்றி அதன் தனல் மேனியில்பட பக்தியோடு இருகைகள் கூப்பி கோபுர தரிசனத்தை பெறும் இடம் என்றே அதுவரை அறிந்திருந்த நான் இது பக்திக்கு மட்டுமே பிரதிச்சி பெற்ற இடமாக இருக்கவில்லை என்பதை அப்போது தான் முதன்முதலாக உணரத்தொடங்கினேன். முற்போக்கு கருத்துகளை பிரச்சாரம் செய்யும் மேடைக்கும்(தேரடிக்கு அருகிலான இடம்) அவ்விடம் பிரசித்தி பெற்றது தான் என்று பின்னர் தான் அறிந்துகொண்டேன்.தமிழக முற்போக்கு கலை இலக்கிய மேடைகளுக்கு ஒரு புதிய முன்மாதிரியை பன்முகத்தன்மையுடன் கூடிய ஜனரஞ்சகத்துடன் அமைத்துக் கொடுத்தது திருவண்ணாமலை தமுஎகச தான் என்பது ஊரறிந்த சங்கதி.ஆனால் அதன் பின்புலமாக இயங்கியது கருணா என்றொரு இயக்கம் என்பது பலர் அறியாதது.அமைப்பின் பரினாமத்திலும் அதன் தனித்த பரிமானத்திலும் தனிமனிதர்கள் பங்களிப்பை நாம் ஒருபோதும் தவிர்த்துவிடமுடியாது.அதற்கொரு சமகால சாட்சி கருணா எனும் பேரொளி.அப்பேரொளியின் வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் உதிர்ந்து போன சில இலைகளும் உண்டு.துளிர்த்தோங்கிய பல தளிர்களும் உண்டு.கருணா ஒரு பெரும் மரமாக அங்கே பல கிளைகளை உயிரோட்டத்துடன் படரவிட்டிருக்கிறார்.அதன் பிரதிபலிப்பாக ஒவ்வொரு கிளையும் அதன் சுய சக்திக்கேற்ப பல இலைகளை இன்னும் இன்னும் பிரசவித்துக் கொண்டு தான் இருக்கிறது.
அன்றைய இரவு குளிர் காற்றுடன் மென்பனி பொழிந்துகொண்டிருந்தது.கோயிலின் பிரதான வாயிலுக்கு அருகில் இருக்கும் தேரடிற்கு அருகே அமைக்கப்பட்டிருந்தது கலைஇரவு மேடை,மேடைக்கு எதிரே போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகள் பக்தர்களாலும் கலைஇரவு பார்வையாளர்களாலும் சூழப்பட்டிருந்தது.மேடை ஏறிய கருணா,பாப்பம்பாடி ஜமாவின் பெரியமேலத்தை தன் வார்த்தை கோலத்தால் அடவுபோட்டு மேடையேற்றினார்.ஜமாவின் ஆட்கள் ஒரு பெரும் கூத்தாடி ஓய்ந்த பொழுதில் மீண்டும் ஜமா மேடையேரும் என்கிற அழைப்பை விடுத்து அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கான அறிவிப்பை மேடையில் அறிவித்துக் கொண்டிருந்தார்.ஒவ்வொன்றாக முடிந்த மாத்திரத்தில் அடுத்தடுத்த நிகழ்வுகள் மேடையேறின.அடுத்து பேச்சாளர் நேரம்.இரவு பணிரெண்டுக்கும் மேலாக இருக்கும் என நினைக்கிறேன்.சிறப்பு பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்த இயக்குநர் தாமிரா மேடை ஏறினார்.காலையில் மாநாட்டு அரங்கத்தில் எங்களுக்கு கிடைத்த அடுத்த பாரதி கிருஷ்ணகுமார் என கருணா பாராட்டிய அதே தாமிரா இப்போது மேடையில் இருக்கிறார்.தனது அரங்கப் பேச்சில் எஸ்.ராமகிருஷ்ணனையும்(அவன்-இவன் திரைப்பட வசனத்திற்காக) இயக்குநர் அமீரையும் வருத்தெடுத்த அதே தாமிரா தானே என நானும் ஆவலோடு பனியைக்கூட பொருட்படுத்தாமல் நண்பர்களோடு அமர்ந்திருந்தேன்.மேடை எரியவர் இலக்கியம் சினிமா என்று பேசிக்கொண்டே இருந்தவர் சட்டென “எழுவர் விடுதலை” குறித்து பேசத்துவங்கினார்.கூட்டத்தில் ஒரு சலசலப்பு எழுந்தது.பார்வையாளர்களில் பாதிபேர் கட்சியினர் என்பதால் சலசலப்பு அதிகமாகவே இருந்தது.கட்சித் தோழர்கள் அப்படித்தானே இருப்பார்கள்.தாமிரா பேசி முடித்த பிறகு கருணா மேடையில் இருந்தார்.கூட்டத்தின் சலசலப்பை உள்வாங்கி இருந்ததால்,கருணா மேடையேறியதும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் “தோழர்களே கோவப்படவேண்டாம்.நமது மேடை ஜனநாயக மேடை.யார்வேண்டுமானாலும் அவர்களது கருத்தை இங்கே சொல்வதற்கான உரிமை உண்டு.அதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் நமது அரசியல் நிலைப்பாடு சார்ந்தது” என்று சொல்லி அத்தனை சிக்கலானதொரு விஷயத்துக்கும் சட்டென ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.கருணா எனும் ஆளுமையை புரிந்துகொள்வதற்கு இது ஒரு சிறு உதாரணம்.இந்த சம்பவத்திற்கு முன்புவரை திருவண்ணாமலை என்றால் என் சிந்தனையில் கிரிவலமாகவும் கோவிலாகவுமே இருந்தது.இதற்கு பின்பு திருவண்ணாமலை என்றால் அது கருணா என்பதாக எனக்குள் ஆழமாக பதிந்து போனது.மாற்றம் தானே மாறாதது.அப்படியான மாற்றத்தை எனக்குள் நிகழ்த்தினார் கருணா.
எனக்கு தெரிந்து எதையும் பெரிதாக உள்ளுக்குள் போட்டு குழப்பிக்கொண்டதில்லை அவர்.மிக எளிதான சொற்களால்,யாவரும் புரியும் வண்ணம்,தன் தரப்பு வாதத்தை வைப்பதிலும்,பிரச்சனைக்கான தீர்வை முன்மொழிவதிலும் அவரிடம் ஒரு எளிமைத்தன்மை இருக்கும்.நான் தத்துவார்த்தமாக மண்டையை போட்டு உடைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அவர் மிக எளிதாக அதை கடந்து போவார்.அது கருத்து செறிவோடு அழுத்தமாகவும் காத்திரமாகவும் இருக்கும்.அதில் மறுத்து பேசுவதற்கு ஒன்றுமிருக்காது.அப்படியானவர் தான் கருணா.அதனால் தான் ஒரு பெரும் ஆளமரமாக பல ஆயிரம் பேருக்கு அவரால் பேதிமரமாக அறிவுப்பொக்கிஷத்தை போதித்துக்கொண்டே இருக்க முடிந்தது. இதைப்போல் ஏராளம் நிகழ்வுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.சொல்வதற்கு அவ்வளவு உண்டு.ஆனால் அப்படியான கருணாவும் பதற்றம் அடைந்தவொரு நிகழ்வு நடந்தது.
அவர் ச்செயின் ஸ்மோக்கர் என்று தெரியும் ஆனால் ஆற்றாமையில் கண்டினியூசாக சிகரெட் பற்றவைத்து நான் அதுவரை பார்த்ததில்லை.உடல் அயர்ச்சியில் இருந்த நான்,விவாத அரங்கில் அமரமுடியாது,இரண்டொரு முறை பக்கத்து கடையில் டீ குடித்துவிட்டு பின்வாசல் வழியாக போவதும் வருவதுமாக இருந்தேன்.அப்படி இரண்டாவது முறை அரங்கிற்குள் நுழைந்த போது வழியில் கருணா ஆற்றாமையில் புகைத்துக்கொண்டிருந்தார். அவர் முகத்தில் படரி இருந்த சலனத்தை வாசிக்கமுடிந்ததால்.என்ன தோழர் என்றேன்.”நீ போ…. நான் வரேன்” என கூட்டம் நடந்துகொண்டிருந்த அரங்கத்திற்கு வெளியே புகைத்துக் கொண்டிருந்தார்.ஒவ்வொருவராய் தன்தரப்பு வாதத்தை பேசிக்கொண்டிருந்தனர்.அன்று எனது உடல்நிலை மிகவும் மோசமாகி நான் அயர்ந்துபோய் இருந்ததால்,ஒழுங்காக என்னால் கூட்டத்தில் கவணம் செலுத்தி அமரமுடியவில்லை.கருணா பேசுவதற்கு முன்பே நான் சாய்ந்து சாய்ந்து விழுந்து கொண்டிருந்ததை பார்த்த சுகியும் சிராஜூம்,நீ ரூமுக்கு போய் ரெஸ்ட் எடு.சாயங்காலம் பாத்துக்கலாம் என ஆட்டோ ஏற்றி அனுப்பிவிட்டார்கள்.திருப்பரங்குன்றத்தின் நெரிசல் மிகுந்த அந்த வீதிகளை பார்ப்பதற்கு கூட மனமில்லாமல் அறையில் சென்று வீழுந்தேன்.இரவு தான் தகவல் வந்தது கருணா என்ன பேசினார் என்று.கருணாவை பார்த்து நான் வியந்த கணங்களில் அதுவும் ஒன்று.எப்பேர் பட்ட மானுட நேசன் கருணா.
கருணாவை முன் தீர்மானத்தோடு அனுக முயல்பவர்கள் எல்லா நேரங்களிலும் தோற்றே போவார்கள்.அதுதான் கருணாவின் இயல்பு.அவரை நீங்கள் ஒரு அடையாளத்திற்குள்ளோ அல்லது ஒரு சிறு வட்டத்திற்குள்ளோ அடைத்து விடமுடியாது.
இருள் விலகாத வைகறைப்பொழுதின் நீல வானத்தில் செஞ்சூரியனாய் தன் கிரணங்களின் வழி செம்பழுப்பு நிலத்தை ஆரத்தழுவிக்கொள்ளும் பேராளுமை அவர்.அத்தகைய அதிகாலைபொழுதின் வெப்பத்தில் தகிக்கும் இளஞ்சூட்டில் உடலுக்கும் அறிவுக்குமாக இரண்டர ஒளி யேற்றிக்கொண்டவர்களில் நானும் ஒருவன்.
விருதுநகர்,திருப்பூர் கடைசியாக புதுவையில் நடைபெற்ற மாநில மாநாட்டு மேடைகள் என,அவர் அழகியல் பூர்வமாக மேடைகளை காட்சிப்படுத்திய விதமும் அம்மேடையை தன் அறிவிப்புகளால் ஆளுகை செய்ததும் செறிவான நிகழ்வுகளாக இன்னும் நினைவுக்குள் நிழலாடிக்கொண்டே இருக்கிறது.பாசிச பேயாட்சி இரண்டாம் முறையாக ஆட்சிப்பொறுப்பிற்கு வந்தபிறகு நாடுமுழுவதும் இருக்கும் லெனின்,அம்பேத்கர்,பெரியார் சிலைகளின் கம்பீரத்தை கண்டு மிரட்சி கொண்டதோடு,அச்சிலைகளை தகர்ப்பதிலும் சேதப்படுத்துவதிலும் காவிச் சாயம் ஊற்றி அவமானப்படுத்துவதாகவும் நினைத்துக்கொண்டு அராஜகத்தில் இறங்கிய அந்நாட்களில்,”சிலைகள் மரணிப்பதில்லை.எழுகிறதே சிலைகள் எழுகிறதே” என்கிற உயிரோட்டமானதொரு பாடலை எழுதி அதற்கொரு இளம் இசையமைப்பாளரை தெரிவுசெய்து இசையமைத்து புதுவை மாநில மாநாட்டில் வெளியிட்டார் கருணா.அப்பாடலை நீங்கள் கேட்கவேண்டும்.அத்தனை காலப் பொருத்தமான வரிகள் அவருடையது.கால ரேகையின் தடங்களில் அவர் கிளைப் பரப்பி பயணித்த களங்களை இப்படி ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டே போகலாம்.
திருவண்ணாமலை கோயிலை தொல்லியல் துறை கைப்பற்ற நினைத்தபோதும்,மாட்டுக்கறிக்கு எதிராக காவி பாசிஸ்டுகள் நாடு முழுவதும் ஒரு பெரும் களவரத்தையும் படுகொலைகளையும் நிகழ்த்திக் கொண்டிருந்த போதும்,நித்தியானந்தா என்கிற ஒரு இளமைக்கிருக்கன் பக்தியென்கிற போர்வையில் திருவண்ணாமலை பவளக் குன்றை ஆக்கிரமிக்க செய்யத் துணிந்த போதும்,கிரிவலப் பாதையின் மரங்களை சாலை விரிவாக்கத்திற்காக நெடுஞ்சாலை துறை மரங்களை வெட்டியடுக்க துணிந்த போதும் என தொடர் நிகழ்வுகள் திருவண்ணாமலை அரசியல் களத்தில் சூடுபிடிக்கத் துவங்கிய எல்லா நாட்களிலும் தன் கருத்தியலுக்கும் அப்பாற்பட்டு தனது நட்பு வட்டத்தை,ஒரு பொதுமேடையாக உருமாற்றி அதற்கொரு கூட்டரசியல் அழுத்தத்தை கொடுத்து,மேற்சொன்ன அனைத்து ஆக்கிரம்புகளுக்கும் அக்கிரமங்களுக்கும் கூட்டு சக்தியால் தீர்வு கண்டவர் கருணா.அதற்காக தனிப்பட்ட முறையில் அவர் நேர்கொண்ட சங்கடங்களும் எதிர்ப்புகளும் பலப்பல.அதையும் தன் தோழமை சக்தியால் இறுதியில் வென்று காட்டியவர் கருணா.கருணாவின் கூர் உணர்வுக்கும் அறிவுச் செயல்பாட்டிற்கும் மேற்சொன்ன விஷயங்கள் போதுமான உதாரணங்களாகும்.
கடைசியாக தூத்துக்குடியில் நடைபெற்ற கட்சியின் மாநில மாநாட்டில் அவர் டெலிகேட்டாக வந்திருந்தார்.அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த அறையில் தான் சிராஜூம் நானும் நவநீயும் தங்கியிருந்தோம்.இரண்டாம் நாள் தோழர் பிரகதீஸ்வரன்,புதுவை விநாயகம் என எங்களுடன் இணைந்துகொண்டனர்.அந்த மூன்று நாட்களிலும் எங்கள் அறைமட்டும் இரவு முழுவதும் உரையாடல்களால் நிரம்பி இருந்தது.பனி பூசிய அந்த இரவுகளில் ஜன்னல் கதவுகளை திறந்து வைத்தவாறே அருகில் இருக்கும் சுங்கச்சாவடியின் இரைச்சல்கள் மேவிவர,எதையெல்லாம் பேசினோம் என்பதற்கு எல்லைகள் இல்லை.அப்படிப் பேசித்தீர்த்தோம்.புதுவை விநாயகம் கருணாவை கிண்டலடித்ததும் அதற்கு கருணா மறுநாள் மாற்றுமொழி கொடுத்ததும் இனி ஒருபோதும் காணக்கிடைக்காத அபூர்வமான தருணங்கள்.சிரித்துச்சிரித்து வயிறு புன்னாகிய தருணங்கள் அவை.
இறுதியில் அன்றிரவின் உரையாடல் திசை வெண்புறாவை நோக்கி நகர்ந்தது.மணி இரவு ஒன்றறைக்கு மேலாக இருக்கும்.”எட்ரா வண்டிய அவனைப் போய் பார்ப்போம்” என பொதுக்கூட்டம் நடக்கவிருந்த மைதானத்தை நோக்கி பிரகதீஷை வண்டியை விடச் சொன்னார்.அரைமணி நேர பயணத்தில் இருக்கும் அந்த மைதானத்திற்கு ஓடியது வண்டி.விஸ்தாரமான அந்த மைதானத்தின் விளிம்பில் மேடை சிறுவெளிச்சத்துடன் காட்சியளித்தது.பனியுடன் புகைமூட்டமும் மேடையை சுற்றி குமைந்து கொண்டிருந்தது.கையில் ஒரு சிகரெட்டுடன் மேடையில் நாளை வைக்கவிருக்கும் பிரம்மாண்டமான “சுத்தியல்-அரிவாள்-நட்சத்திரம்” சின்னத்தை வடிவமைத்துக்கொண்டிருந்தார் வெண்புறா சரவணன்.எர்டிகாவில் இருந்து இறங்கி கருணா,கையில் ஒரு சிகரெட்டை பற்றவைத்துக்கொண்டு வெண்புறா இருக்கும் மேடைக்கு ஏறினார்.அப்போது அவர் வெண்புறாவை பார்த்து பேசியதை எல்லாம் இங்கே அப்படியே பதிந்திவிட முடியாது.
தான் ஒரு தேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி ஊழியன் என்பதை அவராக எப்போதும் பிரசங்கப்படுத்திக்கொண்டதில்லை.ஆனால் அவரது செயல்கள் அதனை எல்லா காலத்திலும் நிரூபணமாக்கிக்கொண்டே தான் இருந்தது.அப்படித்தான் அன்றைய இரவில் வெண்புறாவிடம் அவர் பேசிய வார்த்தைகள் இன்னும் கூட அப்படியே பசுமையாக எனக்குள் பதிந்திருக்கிறது.அப்போது வெண்புறா வுடன் எனக்கொரு சண்டை முடிந்திருந்த சில மாதங்கள் என்பதால் நான் சற்று ஒதுங்கி இருந்து அணைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.டேய் இங்க வா…. அப்புடியே இவரு சண்டை போட்டுட்டாறு…. என்று சொல்லிக்கொண்டே என்னை அருகில் வரச்சொல்லி வெண்புறாவுடன் புகைப்படம் எடுக்கவைத்தார் கருணா.இப்படியாக பலப்பல சம்பவங்கள் மடை திறந்த வெள்ளமாய் நினைவுப் பேராழிக்குள் சுழன்று கொண்டே இருக்கிறது.
கடைசியாக அவர் மரணச்செய்தி பேரிடியாய் வந்து சேர்ந்த அந்த திங்களுக்கு போன வாரம் தான் புதுவை யாத்ரி ரிவாசில் அவரோடு ஒரே அறையில் நாங்கள் தங்கி இருந்தோம்.தோழர்கள் அன்பரசன்,பகத்சிங்,அருண்,சிராஜ்,நான்,வாசுகி பாஸ்கர்,ஜோதிசங்கர்,புதுவை விசாகன்,களப்பிரன் என முதல் நாளும் இரண்டாவது நாள் எஸ்.ஆர்-ருமாக நகர்ந்த அந்நாட்களை நினைத்துப் பார்த்தால் நெஞ்சம் கனக்கிறது.பட்டென புடைத்து துடிக்கும் விம்மல்களை அடக்கமுடியவில்லை.கடைசி நாள் காலை அறையின் உள் வெளிச்சம் பரவியபோது எங்களுக்கும் புத்தெழுச்சி தொற்றிக்கொண்டதாய்,அதுவரை யாரையும் புகைப்படம் எடுத்திராத நான் கருணாவையும் எங்களையும் மாறி மாறி களிப்பின் விசைபடர புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.பின் அது நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த லாசுபேட்டை மொழியியல் பண்பாட்டு கழக வளாகம் வரை தொடர்ந்தது.புகைப்படங்கள் வரிசைகட்டின.எனக்கும் அதுவொரு ஆச்சரியமான அனுபவம் தான்.ஆனால் காலன் முன்னரிவித்த அணிச்சை செயலென அப்போது அது புரியாமல் போனது.
கருணா என்னும் எக்ஸ்பிரசில் கடைசியாக ஏறிய பயணிகளில் நானும் ஒருவன்.அந்த பயனத்தில் விரிந்து பரந்த தளத்தில்,நான் கற்றதும் பெற்றதும் அனேகம்.தோழமை அனுக்கத்திற்கு அவரொரு நிகழ் உதாரணம்.அவர் சொல்லால் சாடியது ஏராளம் இருப்பினும் சொல்லால் நிகழ்த்திக் காட்டியதும்,தனக்கான பரப்பை விஸ்தரித்துக்கொண்டதும் அந்த அனுக்கச்சொற்களால் தான்.சொல்லுக்கு ஒரு வசீகரத்தையும் அனுக்கத்தையும் குழைத்துக் கொடுத்தவர் கருணா.
எப்போதும் என்னை திட்டி இருக்காத அவர்.சுற்றி தோழமைகள் சூழத் திட்டித் தீர்த்தார்.அத்தோடு நில்லாமல் நீ சேப்பியன்ஸ் படிச்சியா என்றார்.சிரித்துக்கொண்டே நான் இல்லை என்றேன்.எதைஎதையோ படிக்கிற அத படிக்கலையா என்றார்.வந்தபோதே வாங்கிவிட்டேன் அதை படிப்பதற்கான நேரம் தான் கூடிவரவில்லை என்றேன்.அதுல அந்தாளு என்ன சொல்லி இருக்கான் “இமேஜின் பன்னச் சொல்றான்.இமாஜினேஷன் தான் எல்லாவற்றையும் உருவாக்கி இருக்கிறது, மாற்றி இருக்கிறது.உனக்கான உலகத்தை இமேஜினேஷன் பன்னிப்பாறு,எல்லாம் தானாய் மாறும் என்றார்”.
அப்படியே ஒரு உதாரணத்தையும் முன்வைத்தார்.நீ பிரபஞ்சனின் அந்த வரிகளை படிச்சி இருக்கியா என்றார்.எந்த வரியென்றேன்.”எல்லா பிரச்சனைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத் தானே செய்கிறது” என்று சொல்லி இருப்பாறே அந்த வரி என்றார்.சமீபத்தில் பிரபஞ்சனின் நினைவு நாளில் கூட முகநூல் எங்கும் அந்த வரிகள் தானே போஸ்டாகிக்கொண்டே இருந்தது என்றேன்.ஆங் அந்த வரிதான்.அது எதச் சொல்லுது தெரியுதா என்றார்.மீண்டும் நான் சிரித்தவாறே அது கருத்துமுதல்வாதம் என்றேன்.உங்கள திருத்த முடியாதுடா…. என்றார்.அதைநான் மீண்டும் தத்துவ பின்புலத்தில் மறுத்து பேசினேன்.ஆனால் அதற்கொரு அட்டகாசமான விளக்கம் கொடுத்தார் கருணா.என் தத்துவார்த்த மனதை தூக்கி தூர வைத்துவிட்டு அவர் முன்வைத்த கருத்தோடு என்னால் கன்வின்ஸ் ஆகமுடிந்தது.அது தான் கருணா.அதனால் தான் இயற்கையாகவே அவருக்கு அந்த பெயர் வாய்க்கப் பெற்றிருக்கிறது.கடைசிவரை என்ன பிரச்சினை என்று அவர் கேட்டும் நான் சொல்லவில்லை.அதற்கு மேல் என்னையவர் தொந்தரவும் செய்யவில்லை.ஆனால் ஒரு உறுதி மொழி மட்டும் கேட்டார்.அதுவரை அப்படியான பழக்கம் இல்லாத நான்,முதன்முதலாக உறுதிமொழி கொடுத்தேன்.அதுவே நான் அவருக்கு செய்து கொடுக்கும் கடைசி உறுதிமொழி என்று அப்போதெனக்கு தெரியாமல் போனது.
இப்போது அந்த எக்ஸ்பிரஸ் தனது பயணத்தை நிறுத்திக்கொண்டது.ஆனால் அதன் பயணிகள் திசைமுழுக்க,உயிர் ரேகைகளாக பரவியிருக்கிறார்கள்.உங்களை எங்களது நெஞ்சத்தில் உருவேற்றி வைத்திருக்கிறோம்.போய் வாருங்கள் கருணா.உங்களுக்கு மரணமில்லை.

தோழமையுடன்,

ச.மதுசுதன்,தமுஎகச,

மாவட்ட செயலாளர்,விழுப்புரம்.

madusudandyfi@gmail.com

9994270849

மதுசுதன்

000000000000000000000000000000

ச. மதுசுதன் பற்றிய சிறுகுறிப்பு :

ச. மதுசுதன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாலர் கலைஞர்கள் சங்கத்தின் விழுப்புரம் மாவட்டச் செயலாளராகவும்  அவ்வமைப்பின் மாநிலக் குழு உறுப்பினராகவும் உள்ளார். புதிய புத்தகம் பேசுது மாத இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர் மற்றும் மேலும் சில சொற்கள்… புத்தகத்தின் ஆசிரியர்.

நடு குழுமம்

நடு லோகோ

 

(Visited 163 times, 1 visits today)