இரண்டு சோம்பேறிகளின் கதை-தோழர் கருணா நினைவுக்கு குறிப்புகள்-கட்டுரை-எஸ்.தாஸ்

உள்ளாடைகளை தவிர மற்ற அனைத்தையும் என்னோடு பகிர்ந்து கொண்டவன் கர்ணா. தொன்னூறுகளில் சென்னையை மையமிட்டே அரங்க செயல்பாடுகள் இருந்தன. அதுகுறித்து அதிருப்தி தமிழ்நாடு முழுக்க உலவியது. அதற்கான செயல்திட்டமும் கையிருப்பில் இல்லை. அறிவியல் இயக்கமும், அறிவொளி இயக்கமும் அரங்க செயல்பாடுகளை தமிழ்நாடு முழுக்க விஸ்தரிக்க நல்வாய்பினை வழங்கியது. நான் சென்னைக் கலைக்குழுவில் இயங்கி வந்தேன். கர்ணா திருவண்ணாமலையில் தமுஎச (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்) வின் தீவிர செயல்பாட்டாளன். கர்ணாவும் பவாவும் கலை இலக்கிய இரவு முக்கிய நிகழ்வின் மூளையாக செயல்பட்டார்கள். அறைக்கூட்டங்களுக்கு பதில் திறந்தவெளியில் தமுஎச-வின் நிகழ்ச்சிகள் நடக்கத் துவங்கின. மேடையில் நாடடுப்புற கலைஞர்கள் மீது வெளிச்சம் பாய்ந்தது. எழுத்தாளர்கள் மக்களிடையே பேசினார்கள். ஆட்டோ ஓட்டுநர் பீனிக்ஸின் கவிதைத்தொகுப்பு வெளியிடப்பட்டது. கலை இலக்கியம் முச்சந்திக்கு வந்து சாமானியர்களை தழுவி நின்றது. திருவண்ணாமலை கலை இலக்கிய இரவு என்ற தீபம் திருப்பரங்குன்றம் தொடங்கி மற்ற மாவட்டங்களிலும் ஒளிவீசியது.

கர்ணாவை எப்போதும் நான் தனியாகப் பார்த்ததில்லை. அவனுக்கு பேச்சு துணைக்கு ஆள் வேண்டும். அவன் பேச்சு எப்போதும் செயல் நோக்கியதாக இருக்கும். நூற்றுக்கணக்கான சைக்கிள் டயர் தட்டிகளை தனது பிரஷ்ஷால் பேசிக்கொண்டே பொன்மொழிகளால் நிரப்புவான். சிந்து பிரிண்டர்ஸ் ஏழுமலையின் அச்சகத்தில் எத்தனை இரவுகள் அவன் கலை இலக்கிய இரவுக்கான பிரச்சார தட்டிகள் எழுத நான் பேச்சுத்துணைக்கு இருக்க கழிந்திருக்கிறது. சினிமாவுக்கும் கலை இலக்கிய இரவு மேடைகளில் இடம் அமைத்துத் தரவேண்டும் என்று வலியுறுத்தினேன். “” நீ சினிமா சினிமான்னு தான சுத்தறே.. செய் ” என்று செயலுக்கு தூண்டினான்.

படத்தொகுப்பாளரும் இயக்குநருமான பீ.லெனின் அவர்களின் குறும்படங்களில் உதவி இயக்குநராக அப்போது பணியாற்றிக்கொண்டிருந்தேன். தேசியவிருது பெற்ற நாக்-அவுட் குறும்படத்தையும் லெனின் சாரையும் திருவண்ணாமலைக்கு அறிமுகம் செய்து வைத்தேன். அன்றுமுதல் லெனின் சாருக்கும், கர்ணாவுக்கும் நட்பு தொடர்ந்து அவர் இயக்கிய “” கண்டதைச் சொல்கிறேன் ” என்ற முழுநீள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கும் அளவிற்கு வலுபெற்றது. கர்ணா தமுஎகச சார்பில் ஒருங்கிணைத்த திரைப்பட விழாக்களுக்கும், முகாம்களுக்கும் சார் தவறாமல் அழைக்கப்பட்டார். சலிப்பின்றி அவரும் கலந்து கொண்டார். “” தமுஎகச-வுக்கும் சினிமா இன்டர்ஸிக்கும் லிங்க் கொடுத்தவன் தாஸ் தான்” என்று வெளிப்படையாக என்னை பலமுறை பாராட்டி பேசியிருக்கிறான்.

பிபி நம்பரும், கடிதங்கள், மட்டுமே தொடர்பு சாதனமாக இருந்த காலம், அறிவொளி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சார்பில் எனக்கு அனுப்பப்படும் கடிதத்தின் கடைசிவரி “” கருணா-வும் வருகிறார்” என்றிருக்கும். கர்ணாவுக்கு அனுப்பப்படும் கடிதத்தில் நான் வருவதாக குறிப்பிடப்பட்டிருக்கும்.

நான் சென்னையிலிருந்து, அவன் திருவண்ணாமலையிலிருந்து அழைக்கப்பட்டிருக்கும் மாவட்ட தலைநகர் பேருந்துநிலையத்தில் இருவரும் இறங்குவோம். பெரும்பாலும் ஒரே நேரத்தில். அதுவரை பார்த்திராத இடம், மனிதர்கள். எங்களின் முதல் நடவடிக்கை தேநீர் அருந்துவது. “” திருவண்ணாமலை மாதிரி டீ வராது” என்பான். “” மெட்ராஸ் டீ-க்கு இது சூப்பர் ” என்பேன். இப்படி புதிய ஊரின் டீ-யை பற்றிய மதிப்புரைகளோடு எங்கள் உரையாடல் தொடங்கும். நாடக முகாம் நடக்கும் இடம் விசாரித்து போய்ச் சேருவோம். அறிவொளி பொறுப்பாளர்கள் எங்களைப் பார்த்ததும் திருப்தியை வெளிப்படுத்துவார்கள். குளியிலில் அலாதி பிரியம் கொண்டவன் கர்ணா. புதிய ஊரின் தண்ணீர் குறித்து சிலாகிப்பான் என்னையும்  குளிக்கத் தூண்டுவான். எனக்கும் தண்ணீருக்கும் ஏழாம் பொருத்தம். குளித்து முடித்து வெளியே வந்ததும், “” எப்படியிருந்துச்சி தண்ணீ ” விசாரிப்பான். நான் எதிர்பாராத இந்த கேள்வியால் தடுமாறி சமாளிப்பேன். அப்புறம்… அப்புறம் என்ன?

பாண்டிச்சேரி விநாயகத்தின் தவில் முழங்க நாடக பயிற்சி முகாம் தொடங்கும். அறிவொளி  பொறுப்பாளர்கள் அலைந்து திரிந்து திரட்டியிருக்கும் இளைஞர்கள், இளம் பெண்கள், மாணவ மாணவியர், ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் நாங்கள் அறிமுகப்படுத்துவோம். அடுத்த பத்தே நாட்களில் அவர்களை நாடகக் கலைஞர்களாக மாற்றும் பணி எங்களுடையது. இப்படி ஒரு முகாமில் பயிற்சி பெறுபவர்களாக வந்து பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்டு குழுக்களின் பயிற்சியாளர்களாக பணிசெய்த சேலம் காவிரிதுரை-வசந்தி தொடங்கி பலருக்கு குழுக்கள் பிரித்துத் தரப்படும். கர்ணாவும் நானும் குழுவினரின் தனித்திறன்களை மேம்படுத்த ஆலோசனைகளையும் பயிற்சிகளையும் வழங்குவோம்.

அதுவரை வாழ்நாளில் நாடகம் கூட பார்த்திராத எத்தனையோ பேர் முகாமுக்கு வந்து பயிற்சிபெற்று நடிகர்களாக திரும்பியிருக்கிறார்கள். அரங்க செயல்பாடு தன்னம்பிக்கையை உருவாக்கும் என்பது எங்களின் அனுபவம். உலகந்தழுவிய கோட்பாடும் கூட…

முகாம் முடியும் நாளில் குழுவினருக்கு சீருடைகள் வழங்கப்படும். ஊர்வலமாக கலைப் பயண துவக்க நாள் மேடைக்கு செல்வோம். பயிற்சி நாட்களில் விநாயகத்தால் தவில் பயிற்சி பெற்றவர்கள் தவில்களை முழங்குவார்கள். மேடைகளில் குழுக்களின் பெயரை அழைக்க குழுவின் தலைவர் கலெக்டரிடம் கொடியை பெற்றுக் கொள்வார். கலைப்பயணம் மாவட்டத்தின் கடைக்கோடி வரை நடைபெறும்.

மீண்டும் எங்கள் இருவரின் பயணம், குழுக்களின் செயல்பாடு, மேம்பாடு குறித்து கண்காணிக்கும் பணி. அரங்கம் சுதந்திரத்தையும் நட்புணர்வையும் உணரச்செய்யும். எதிர்பார்பின்றி கடமையுணர்வோடு குறையான வசதிகளை பொருட்படுத்தாமல் பயணிக்கும் கலைஞர்களை எங்கள் வருகை உற்சாகப்படுத்தும். அரங்க செயல்பாடுகள் சென்னையை தாண்டுகிறது என்பதில் மகிழ்ந்தோம்.

ஆடல், பாடல், நடிப்பு என அந்த எளிய உடல்கள் உற்சாகத்தோடு சுற்றிச் சுழன்றதை கண்டோம். நிறைவு விழாவில் மீண்டும் எல்லாக்குழுக்களும் சந்திக்கும் வாய்ப்பு. அங்கு பரவும் நெகிழ்ச்சி. வாய் சொற்கள் பயனில. அனைவரும் கண்ணீரோடு எங்களுக்கு விடை தருவார்கள். நாங்கள் கண்ணீரை மறைத்து விடைபெறுவோம்.

மீண்டும் கடிதம் வரும் “” கர்ணாவும் வருகிறார் ” என்ற கடைசி வரியோடு. பயணம், பரிச்சயமில்லாத பேருந்து நிலையம், டீ கடை. “” டீ சொல்றா ” என்பான். “” ரெண்டு டீ ” என்பேன். நானும் அவனும் ஒன்றாக சுற்றிய நாட்களில் ஏனோ தெரியவில்லை ஏனோ சோம்பேறிகளாக அறியப்பட்டோம். ஒருவித அலட்சிய உடல்மொழி இருவருக்கும் பொதுவானதாக இருந்ததுகூட காரணமாக இருக்கலாம்.

எப்போதும் தனியாக இருக்க விரும்பாத கர்ணா, கண்ணாடிப் பேழையில் தனியாக உறங்கிக் கொண்டிருந்தான். பனிவிழும் இரவில் கம்பளிச் சால்வை போர்த்தி அவன் முன் நின்று கொண்டிருக்கிறேன்.

கடைசியாய் உன்னைப்பற்றி சொல்வதற்கு ஒன்றிருக்கிறது.

எல்லா முரண்களையும் நட்பின் கதகதப்பு குறைந்து விடாமல் தீர்க்கமுயன்றவன் நீ.

கோவில்பட்டியில் கோணங்கி அழுது கொண்டிருக்கிறார்.

சென்னையில் நான் தனியாக டீ குடித்துக் கொண்டிருக்கிறேன்.

உனக்கான தேநீர் குளிர்ந்து கொண்டிருக்கிறது.

இன்னும் கொஞ்சகாலம் வாழ்ந்திருக்கலாம் கர்ணா.

ஏன் அவசரப்பட்ட..?

எஸ்.தாஸ் -இந்தியா

00000000000000000000000000000000000

எஸ்.தாஸ் பற்றிய சிறு குறிப்பு :

தருமபுரி மாவட்டம்  தகடூரை சேர்ந்த எஸ்.தாஸ் அறிவொளி இயக்கத்தில் கருணாவுடன் இனைந்து பணியாற்றியவர். அத்துடன் நிகழ்த்துக்கலை செயற்பாட்டாளராகவும் இயங்கி வருகின்றார் .

நடு குழுமம்

நடு லோகோ

(Visited 124 times, 1 visits today)