ஓரங்க நாடகம்-கவிதை-மதுசுதன்

ஓரங்க நாடகம்

மதுசுதன்

மௌனத்தை மொழிபெயர்க்கும் ஓரங்க
நாடகம் மெல்ல அரங்கேறுகிறது
சுற்றி பார்வையாளர்கள் சூழ்ந்து நிற்க
நடிகனோ ஒருவன்
Let us play என அவனும் கிளம்புகிறான்
மேடை அவனுக்கான விஸ்தாரத்தோடு
இருகரம் விரித்து வரவேற்கிறது
முதல் பாவனைகளிலேயே அவன்
பார்வையாளர்களை சலிப்புற
வைத்துவிட்டான்
கூச்சல் எழுந்து கூடி இருந்தோர்
குரலெழுப்பி ஆட்சேபனை செய்தார்கள்
இரண்டாம் காட்சியில் அவனது
அசாத்தியத்தை பாவனைகள் உடைத்து
நிழலுருவாய் முன்னிறுத்தினான்
சற்று நொடிக்கு முன்பு
ஆட்சேப குரலெழுப்பிய அதே கூட்டம்
இப்போது விசிலடித்து வரவேற்றது
மூன்றாவது காட்சி மேடையின் விளிம்பில்
சூழ்ந்திருக்கும் இருளுக்குள் அவன்
மூழ்குவதாக வடிவமைக்கப்பட்டிருந்தது
நான்காவது காட்சியில் இருள் கிழித்து
அவன் வெளியேறவேன்டும்
ஐந்தாவது காட்சியில் அவன் ஒருவனை
கொலை செய்தே ஆகவேண்டும்
யாரைக் கொல்வது அவன்
கத்தியை பிடித்து பழக்கம் இல்லாத
கைகள் பதட்டத்தில் துடித்துக்
கொண்டிருந்தது
பார்வையாளர்களே அதைப் பார்த்தும்
ஆரவாரித்தனர்
கத்தியின் கூர்முனையை தன்னையே
நோக்கியே திருப்பினான்
அது அவன் வயிற்றை குறிபார்த்திருந்தது
தாய் வளர்த்த வயிறை
யார் கொண்டு போவது
எது கொண்டு கிழிப்பது
என்கிற முடிவிலேயே கத்தியை கையில்
எடுத்திருந்தான் அவன்
சூன்ய காலத்தின் இருளுக்குள் வயிறெது
வாயெது என்று தெரிவுசெய்வதற்கில்லை
இருந்தாலும் காட்சியமைப்பின் படியே
கண்களை மூடிக்கொண்டு குத்திக்கொண்டான்
ஆறாவது காட்சியில் அவன்
வயிற்றுக்குள்ளாக கட்டி இருந்த
சிவப்புசாயம் கிழிந்து மேடையில்
வழிந்தோடியது
எதையோ பேசி அவன் கீழே வீழ்ந்து
கிடந்தான்
சத்தம் கதை பிளக்க அரங்கம்
கரவொலியாலும் விசில் சத்தத்தாலும்
அதிர்ந்து கொண்டிருந்தது
கத்தியின் கூர்முனை அவன் உதிரத்தை
ருசித்து குடித்திருந்தது கடைசிவரைக்கும்
யாருக்குமே தெரியவில்லை
இப்போது நாடகத்தில் யாரும்
எதிர்பார்த்திராத அந்த ஏழாவது காட்சி
அரங்கேறிக் கொண்டிருந்தது.

0000000000000000000000000000000000000

மரம்

கொடுமழை பெய்துகொண்டிருந்த
வனாந்திரத்தின் பச்சைவெளிகளில்
போன கோடைக்கு பெய்த
மழையொன்றில் மின்னல்
தாக்கி பட்டுப்போன
அந்தமரத்தால் மட்டும் ஒரு சொட்டு
நீரைக் கூட உறிஞ்சிவிடமுடியவில்லை
காடு முழுக்கவும் பள்ளம் படுகுழி
சமதளம் என வஞ்ஜனை வைக்காமல்
காட்டோடு கலந்த பேய்மழை
சகலத்தையும்
மூழ்கடித்து புரண்டோடியது
மூதாயின் குதிகால்கள் ரெண்டும்
வெடித்து
கிளைப்பரப்பி அவள் நடந்தே தீர்த்த
வரலாற்றின் மிச்சங்களை
பறைசாற்றுவது போல் வெடித்துப்போன
அதன் வேர்களுக்கு சூரியவெப்பைத்தை
ஈர்க்கமுடிந்தளவுக்கு ஒருதுளி நீரைக் கூட
உறிஞ்சிவிடமுடியவில்லை
காடு விழுங்க தண்ணீர் மட்டம்
கூடிக்கொண்டே இருந்தது
பச்சைக் கொடிகள் கனம் தாங்காமல்
நீரோடு கலந்தது
பெயரறியாத செழித்தோங்கிய மரங்கள்
நீர்குடித்து திமிறிய தனம் போல் முறைத்து
நின்றது
சிறு மரங்களும் செடிகளும்
நீரோட்டத்திற்கு ஏற்றாற்போல்
அசைந்தாடிக் கொடுத்தது
நீர் மேலும் கூடியது
பேய் மழையோ விடாது பெய்து தீர்த்தது
நீருக்கு வேராடு போன ஜெனனத்தின்
தீர்க்கப்படாத போரொன்று மூர்க்கமாக
நடந்துகொண்டிருந்தது
அசைந்து கொடுக்காத மரம் இப்போது
கொஞ்சமாக ஆடத்துவங்கியது
எப்போதோ செத்துப்போன அதன்
வேர்கள் மண்ணுடனான அதன்
பிணைப்பை
இத்தருணத்திற்காகவே
காத்திருந்ததைப்போல்
தனது பிடியை விருப்பத்துடன்
தளர்த்திக்கொண்டது
மழை ஓய்ந்த இறுதியின் நிச்சலனத்தில்
வேரிழந்த மரம் காடதிரும்படியாக
விழுந்து முறிந்தது
முப்பிறவி நிராசையை இப்போது
வேரை வென்று நீர் கொண்டாடிக்களித்தது.

மதுசுதன்-இந்தியா

மதுசுதன்

(Visited 282 times, 1 visits today)
 

2 thoughts on “ஓரங்க நாடகம்-கவிதை-மதுசுதன்”

Comments are closed.