நிலவை வாசித்தல்-கவிதை-டணிஸ்கரன்

நிலவை வாசித்தல்

டணிஸ்கரன்

சற்றுமுன் என்னோடு
முரண்பட்டுக்கொண்டிருந்தவை
வாக்கிய பஞ்சாங்கம் அல்லது அது
ஒரு சோதிடப் புத்தகமாக இருக்கலாம்
இரண்டில் ஒன்றுதான் என்று மட்டும்
உறதியாகவும் சொல்லமுடியாது

யாரோ வரைந்திருந்த வானத்தில் வன்மங்களை கொழுவிக்
கொள்ள அவர்களுக்கு நூற்றாண்டுகளாய் இடம்
கிடைத்திருக்கிறது

வரைந்திருந்த அவ்வானத்தில்
நிலவை மட்டும் நீக்கி விடுகிறேன்.

நேற்றுவரை ராசி பலன்கள் பற்றியும்
நட்சத்திரங்கள் பற்றியும்
எழுதப்பட்டிருந்த சொற்கள் பல
அகராதியில் இருந்து அழிபட்டால் தான் என்ன?

இனி எவருக்கும் தோசங்கள் இருக்காது.
யாதகக் குறிப்புகளை வாசிப்பது பற்றிய
பாப்பண மாநாடுகள் ஏற்பாடாகலாம்
நிலா பற்றிய கவிதைகள்
அதன் வெறுமையைப் பேசலாம்
ஆனால் ஒளிரும் இரவுகளில்
ஒரு குழந்தையை கூட ஏமாற்ற முடியாது

வெற்றுக் கண்களால் பார்க்க முடியாத
கிரகனங்களை இனி
எந்த கண்களும் பார்க்கமுடியாது

வாசிப்பதை சற்று நிறுத்துங்கள்
அம்மா ஒருவள் அழுவது கேட்கிறது
இதுவரை நீங்கள் வாசித்த
இந்தப் பிரதியை நான் நீக்கியாக வேண்டும்

அழுதுகொண்டிருக்கும் அவளிடம்
ஐந்து சோற்றுருண்டைகள் இருக்கின்றன

00000000000000000000000000000000

கவிதையும் மூன்று வினாக்களும்

நேற்றிலிருந்து ஒரு மூத்த கவிஞன்
என் எழுத்துகளோடு முரண்பட்டுக் கொண்டிருப்பதாக
கவிதை சொல்லிக்கு கடிதம் எழுதியிருந்தது
முதலாம் மரணமும் மூன்று பெயர்களும் என்ற கவிதை.

புரியாத சொற்கள் நிறைய இருப்பதாகவே
முறைப்பாடு பேசுவது கேட்டு
மெல்ல எழுந்தேன்,
கலைந்து கிடந்த சொற்களில்
கதைத்துக்கொண்டிருந்தவர்கள்
கரமசோவின் சகோதரர்கள்தான்
அதில் கவிதைக்கும் சந்தேகம் இல்லை.

இப்போது மூத்த கவிஞனுக்கு
ஒரு கடிதம் எழுதியாக வேண்டும்

எழுதுவதற்கிருந்த உழைப்பிற்கும்
அதை வாசிப்பதற்கான உழைப்பிற்கும்
இடையே சிக்கிக்கொண்டு தவித்த
பதில் கடிதத்தின் கடைசிப் பந்தியில்
மூத்த கவிஞன் என்பதன் அர்த்தம் குறித்து
இருந்த இரண்டு கேள்விகள்
ஒன்று கவிஞனின் வயதா
மற்றையது எழுத்தா

டணிஸ்கரன்-இலங்கை

க.டணிஸ்கரன்

(Visited 191 times, 1 visits today)