நானும் நாற்காலியும்-கவிதை-டணிஸ்கரன்

நானும் நாற்காலியும்

டணிஸ்கரன்

தசாப்தங்கள் கடந்த தனிமை
ஒற்றை நாற்காலி
பறவைகளின் சிலுசிலிர்ப்பில்
பறந்து விழும் வர்ண இறகுகள்
நேரம் தவறாமல்
தூசுகளை சுமந்தபடி
ஜன்னல் வழியாகவ
எனையழைக்கும் ஒளியுறவு

புரட்டியதும் புரட்டாததுமாய்
பல நூறு புத்தகங்கள்
இன்னுமாய்
படிப்பதற்கென பக்கங்கள் புரட்டி
தேர்ந்தெடுத்த சில நாவல்களும்,
என்னைப் படிக்கும் முயற்சியில் நானும்.

கைகள் கட்டப்படவில்லை
கதவுகள் சாத்தப்படவில்லை
ஆனாலும் கானகத் தனிமை

நாவல்களும் நகரவில்லை
நாற்காலியும் நகரவில்லை
தனிமை எழுதிய கவிதைகள் மட்டும்
காற்றில் பறந்தபடி
கலைந்து கிடக்கின்றன
வெறும் காகிதங்களாக.
0000000000000000000000000

தனிமையின் சுவர்கள்

பிரச்சினைகளால் கட்டியெழுப்பப்பட்ருக்கிறது
என்னைச் சுற்றியிருக்கும் சுவர்
தனிமையின் சுவர்களை உடைத்து
வெளியேறும் நேரத்துள்
புதிய சுவர் ஒன்று கட்டப்பட்டுவிடுகிறது
இப்போது,
சுவர்களைச் சுற்றிப் பார்க்கிறேன்
துயரின் பெரும் பரப்பொன்றின் நடுவில்
நின்றுகொண்டிருக்கிறது என் தனிமை.

உடைந்து கிடக்கும் சுவர்களையும்,
சிதறிக் குவிந்த கற்களையும்
பொறுக்கி வாசித்துப் பார்க்கிறேன்
நெடுநாளாய் எழுதிவந்த
நாவல் பிரதி ஒன்று
காற்றில் கலைத்து வீசப்பட்டதுபோல
கலைந்தே கிடக்கின்றன
என் தனிமையின் நாட்கள்

இப்போது
தனிமைத் துயரின் பெருவெளியில்
தனிமனிதன் பற்றிப் பேசிக்கொள்கிறது
உடைந்தும், உடையாததுமான சுவர்கள்
அதற்குள்ளாக
ஆயிரம் ஆயிரம் பேர்கள் வந்து போகுறார்கள்.

டணிஸ்கரன்-இலங்கை

டணிஸ்கரன்

(Visited 76 times, 1 visits today)