டணிஸ்கரன் கவிதைகள்

டணிஸ்கரன்

1
மரணத்தின் அவலக்குரல் கேட்ட
அந்த வாவிக்கு விரைந்த கண்கள்
நீர்வெளியில் கையிறறுந்து
காற்றில் அசைந்தபடி புதைந்துகொண்டிருந்த
படகைச் சுற்றிப் பார்த்தன

நீருக்குள் மூழ்கிக்கொண்டிருக்கும்
சிறுவர்களின் முதுகுகளில்
கவிஞர்கள் சிலர் சிறகுகளை
வரைகிறார்கள்
இன்னும் சிலரால்
படகைச்சுற்றிலும்
ஊதிப்பருத்த சில உடல்களும்
சில புத்தக பைகளும்
கீறிக் குவிந்திருந்தன

சில ஓவியர்கள்
சரிந்த படகை மேலும் சரித்தபடியும்
புதைந்த புத்தக பைகளை
காற்றில் மிதந்தபடியும் வரைந்துகொண்டிருந்தனர்

முகப்புத்தகம் தீப்பிடித்து எரியத் தொடங்கி
சில மணி நேரத்திற்குள்
நிலத்திலும் எரிந்து எரிமலையாக
வெடித்துச் சிதறின தீக்குழம்புகள்

2
காலத்தை முன்னகர்த்தி பார்க்கிறேன்
விடுதி ஒன்றில் கொந்தராத்துக்காரர்களும்
சில அதிகாரிகளும்
நாற்காலிபோட்டு அமர்ந்திருக்கிறார்கள்
இன்னும் நெருக்கமாக சென்று பார்க்கிறேன்
சில விலையுயர்ந்த மதுப்புட்டிகளும்
கட்டுகளாய் அடுக்கி கட்டப்பட்ட
மஞ்சள் நிறத்திலான நோட்டுகளுமென
அவர்கள் மேஜைகளில் குவிந்து கிடக்கின்றன

மதுக் கோப்பைகள் காலியாவதற்குள்
இழுவைப்படகு தயாராகியிருந்தது
ஆனால்
பாலத்தின் நீள அகலம் குறித்த விவாதங்கள்
நீடித்துக்கொண்டிருந்தன
தரம் பற்றிய எந்த குறிப்பும் இல்லாத
மேஜையை விட்டு அகல முற்படும் நொடிக்குள்
என் காதுக்குள் நுழைந்த சொற்களை விசாரித்தேன்
மக்களைத் தரக்குறைவாகப் பேசியவற்றை
சொல்லி அகன்றன அச்சொற்கள்

3
கோபத்தோடு மீண்டும் வாவிக்குகள் நெருங்குகிறேன்
படகுகளில் விரைந்து வந்த கடவுள்களில்
ஒரு கடவுளாரின் கைகள் ஏந்திக்கொண்டிருக்கின்றன
மீட்கப்பட்ட சிறுவனை

கண்கள் கசிய இன்னும் நெருங்கிப் போகிறேன்
மீசான் கட்டைகளுக்கு கீழே உறங்கப்போகும்
சிறகு நனைந்த சிறுவர்களைச்சுற்றி
கபனிடப்பட்டிருக்கிறது

4
இப்போது எதிர்காலத்தை நோக்கி
பயணித்து பார்க்கிறேன்
ஒரே புகை மண்டலமாக இருக்கிறது
நான் நின்றுகொண்டிருக்கின்ற
ஒரு நீண்ட பாலம்

பட்டாசு சத்தம் ஓய்ந்ததும்
மெல்ல புலப்படுகின்றன சில காட்சிகள்
சற்றுப் பொறுங்கள்
ஒரு புகைப்படத்தை எடுத்து
உங்களிடம் காண்பிக்கிறேன்

ஒரு சட்டத்திற்குள்
வரிசையில் மாலையணிந்தபடி
ஒரு சிலர் நின்றுகொண்டிருக்கிறார்கள்
ஒரே கத்திரியை பிடித்துக்கொண்டிருப்பவர்களுக்கு
மிக நெருக்கமாக கட்டப்பட்டிருக்கிறது
பாலத்தை மறித்து
பழுப்பு நிறத்தில் ஒரு ரிப்பன்

கடன் : இறந்த உடலைச்சுற்றும் வெள்ளைத் துணி
மீசான் கட்டை : புதைகுழிக்கு மேலே நடப்படும் சிறு மரக்கட்டை

டணிஸ்கரன்-இலங்கை

டணிஸ்கரன்

(Visited 135 times, 1 visits today)