நீலக்கல்-கவிதை-கவி.கோ. பிரியதர்ஷினி

நீலக்கல்

கவி.கோ. பிரியதர்ஷினி
ஓவியம் : சமித்திரா ஸ்ரீரங்கநாதன்

நான் என்பது எதை ஒத்தது
பின்னல்களற்ற கூந்தலுக்கு
அடங்காபிடாரி என்றா

முக்கால் கால் நிரப்பும்
கெட்டி ஜீனுக்கு
அவுத்துவிட்ட கழுதை என்றா

வைத்தாலுமே நழுவிவிட்டு
ஓடும் ஸ்டிக்கர் பொட்டில்
இல்லாது போகும் பசைக்கு
தப்புத் தப்பாய் வாங்கிக்
கொள்கிறேன் வசை

கொலுசுகளற்ற கால்களை
மூடிக்கொள்கின்றன
என் நீளச்சேலைகள்

மறைத்துக் கொள்கின்றன
பிடித்த கம்மலை விட
தங்கத்தில் வடித்த கம்மல் இல்லாத காதுகளை
வழிந்தோடும் கற்றை மயிர்

அன்னியத்தின் பார்வையிலிருந்து
கண்ணியம் காக்க மாட்டச்
சொல்கின்றன கால் கிராமில் மூக்குத்தி
மூக்கணாங்கயிறற்று
திரியும் பெண் மாடா
நான்

கோபத்தை இறுக்கிக் கொண்டே
தனிச்சிறை கொள்ளட்டும்
உடலெனும் கலனில்
பெண் தொடர்பான அணிகலன்கள்

பிந்தியதாய்
பெண் வரலாறு பேசுமொரு
சீவ உதடுகளில்
ஜீவனற்ற கற்புத்தன்யை
ஆடையெனும் பெயரில்
உலவ விடுவோம்

கவிச்சி கூத்தாடும் பிராண குழிகளில்
கட்டித் தொங்கவிடட்டும்
பெயர் வைக்கா அணிகலொன்று

ஆனந்த கூத்தாடிக் கொண்டே
மழித்துக் கொள்கிறேன்
குருதியில் ஊறத்துவங்கும்
ஆண்மையின் மீசைக்குட்டிகளை

நீலக்கல் ஒன்றில் நம் பெயரினையும்
எழுதிக் கொள்வோம்
இன்னும் இடிவாங்கிக் கொண்டே
இருக்கும் இடுப்பின் ஒட்டியானங்களில்
சொற்திறம்பான்மை சாவியொன்றையும் மாட்டிக் கொள்வோம்

என்ன செய்வது
நோவுக் கண்களுக்கு
உடலில் எது இருந்தாலும் நோவு
இல்லாவிட்டாலும் நோவு

பரவாயில்லை இன்னும் கண்டும்
காணாமல் கணவன்கள்
உள்ளாடை விளம்பரங்களை
ஓரப் பார்க்க அனுமதி கிடைக்கிறது
ஓடிச்சென்று மூடிக் கொள்வோம்
கொடியில் காயும்
அவரவர் வீட்டின் உள்ளாடைகளை

பெண்ணியம் கெட்ட வார்த்தையும் அல்ல
ஆணியம் புனிதமானதும் அல்ல
இரண்டுக்கும் சேர்த்தே
குரல் கொடுப்போம்
வயது வரும் ஆணுக்கென
விழாவொன்றெடுக்க

கவி.கோ. பிரியதர்ஷினி-இந்தியா

பிரியதர்ஷினி

 

(Visited 199 times, 1 visits today)
 

2 thoughts on “நீலக்கல்-கவிதை-கவி.கோ. பிரியதர்ஷினி”

Comments are closed.