காடுலாவுகாதை, பாகம் 27-தமிழ்க்கவி

தமிழ்க்கவி
பிருந்தாஜினி பிரபாகரன்

மகளின் கோபத்தை தணிய வைக்க கந்தப்பு அந்தக்கயிற்றை வாங்கி கீழே போட்டுவிட்டு வீட்டுக்குள் இருந்த புதிய தேடா வளையமொன்றை எடுத்து வந்தான். லெச்சிமி தலையை திருப்பிக் கொண்டு மாமரத்துடன் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். கந்தப்பு ஊஞ்சலைக் கட்டி முடித்துவிட்டு ஒரு சாக்கை எட்டாக மடித்து அதில் போட்டான் பின் மகளிடம்,

“வா வந்து ஏறு, ஆட்டி விடுறன்” என்றான். அவள் தலையைச் சிலுப்பிக் கொண்டு மறு புறம் திரும்பினாள்; . அவன் ‘வா’ என மறுபடி கேட்க. ‘எனக்கொண்டும் வேண்டாம்’ என்றாள். கந்தப்பு விடுவதாயில்லை. அவளருகே போய்க் குனிந்து ,

“உனக்கொண்டும் வேண்டாம். ஆனா எனக்கு என்ர பிள்ளை வேணுமே…ங.என்ன நடந்தது? ஆர் என்ன சொன்னவை? ம்.. சொன்னாத்தானே தெரியும்.”

என்று அவளை இறுக்க அணைத்தான். அப்போதும் திமிறிக் கொண்டிருந்த லெச்சிமி,

“அப்பூ…நேற்றுக் கூட்டத்துக்கு போகேக்க என்ன சொல்லிவிட்ட நீ?”

“கட்டாயம் பிள்ளையள் உதை கேக்க வேணும். உப்பிடி கூட்டங்களை பாக்கவேணும் எண்டு”

லெச்சிமி பெருங் குரலெடுத்து அழுதாள்.

“ங்ஙாஆஅஅ…நான் பாக்கேல்ல,.. என்னை அம்மா வெளியால கலைச்சு விட்டிட்டா”

“ஆ,  அட, எனக்குத் தெரியாதே இண்டைக்கு இருக்கு அவவுக்கு இருக்கு.. ச்ச அழாத… அப்பு சொல்லுறனெல்லே..ங..இண்டைக்கு ராக்கூட்டத்துக்கு அப்புவும் பிள்ளையும் போறம்.” அவள் விசும்பியவாறே,

“மெய்யாவோ…….?”

“சத்தியமா….”

“அம்மாவும். சூப்பியும் வேண்டாம்.”  கந்தப்புவுக்கு இப்போதுதான் உண்மை வெளித்தது.

இரவு நீதிமன்றத்துக்கு அருகாக நின்ற கூமா மரத்தடியில் நின்ற அப்புவின் தோளில் அமர்ந்து அவர்தலையைப் பிடித்துக் கொண்டு கூட்டததை ரசித்தாள் லெச்சிமி. மங்கையற்கரசி அமிர்தலிங்கம் பாடினா…

‘வாழ்க ஈழத்தமிழகம் வாழ்க என்றும் வாழ்கவே.’ அந்தப்பாடல் காலையில் சுதந்திரன் பேப்பரில் வந்திருந்தது. அதன் பின் பல கூட்டங்களில் பாடப்பட்ட பாடல் அது.

அனல் தெறிக்கப் பேசிய பேச்சுகள் லெச்சிமிக்கு மிகவும் பிடித்திருந்தது. எல்லாவற்றையும்விட அப்புவை மிகமிக பிடித்திருந்தது. ..அவளுடைய மகிழ்ச்சி கந்தப்புவுக்கும் பிடித்திருந்தது. மறுநாள் ஒரு மகாராணிபோல வளையவந்தாள் அவள்.

கந்தப்பு எதிர்பார்த்தபடி வீட்டு வேலை அவ்வளவு விரைவாக முடியவில்லை. அவர்களை அறியாமலே அந்த வேலைகளை அரசியல் பூந்து கெடுத்தது. ஆயிற்றா மாநாடு குறைந்தபட்சம் எழெட்டு நாட்களை விழுங்கி விட்டது.

குளத்தக்குள் ஊறப்போட்ட மாவரைக்கம்புகள் பட்டை அழுகி பதமாகியிருந்தன. கந்தப்பு அவற்றை மேட்டில் இழுத்துப்போட லெச்சிமி மணியன் சகுந்தலா எல்லோருமாக அழுகிய பட்டையை உரித்து வரிச்சுக்கம்புகளை  வீட்டடிக்கு இழுத்துக் கொண்டுபோய் போட்டனர். கந்தப்பு மறுபடி வீட்டுக்கு வரிச்சு வரிய ஆரம்பித்தான். கீழே நின்று சகுந்தலாவும் லெச்சிமியும் எடுத்துக் கொடுத்தார்கள் வேலை விறு விறுப்பாக போய்க் கொண்டிருந்தது. வெளியே கடப்படியில் காறாப்பிச்சு துப்பியவாறே வந்த வைத்திலிங்கத்தார் தனக்குளதான் என்றாலும் சத்தமாக பேசிக்கொண்டு வந்தார்.

“தமிழரை என்ன போடுதடியெண்டே நினைச்சிட்டாங்கள். உவங்களை கேக்க ஆளில்லையெண்டோ.” கோபமாகத்தான் பேசினார்.

“என்னண்ணை பிரச்சனை? எங்களுக்கும் சொன்னாத்தானே தெரியும்”

“கொழும்பில எங்கட தலைவர்மாரை அடிச்சுப்போட்டாங்கள்.”

“இவை ஏன் கொழும்புக்கு போனவை?”

“எட இழவு நீ பேப்பர் பாக்கயில்லையே?”

“இல்லையண்ணை செத்த வீட்டோட பாதியில விட்டாச்சு எங்க நேரம் இஞ்ச பாரன் நான் படுற பாட்டை”

“என்னவோ மொழிச்சட்டமாம். அதை எதிர்த்து சத்தியாக்கிரகப்போராட காலிமுகத்திடலுக்கு போனவையாம்.”

“ஏனண்ணை அரசாங்கம் என்ன செய்யுது? உதுகளொண்டையும் கேளாதோ?”

“அவன்தான் சொன்னானாமே தமிழ் தலைவர்கள் கேட்டதைத்தான் எங்கட மக்கள் குடுக்கினம் எண்டு”

கந்தப்பு பதற்றமாக வீட்டுக்கூரையிலிருந்து கீழே இறங்கினான். கொடுப்புக்குள் இருந்த வெற்றிலையை நாவால் தட்டி அதக்கித்திரட்டி வெளியே துப்பிவிட்டு வாயைக் கொப்பளித்தான். தாய் கொடுத்த தேநீரை ஊற்றிவிடாமல் பதுங்கிப்பதுங்கி நடந்து கொண்டு வந்த மகளிடம் வாங்கிக் கொண்டு, “போய் அம்மாட்ட இன்னொரு தேத்தண்ணி வாங்கிக் கொண்டுவா” என்றான்.

“ச்சாய்……  எனக்கு வேண்டாம். நான் இப்பான் உதில வேலுப்பிள்ளையர் வீட்டில குடிச்சிட்டு வாறன்” எனமறுத்த வைத்திலிங்கத்திடம்,

“உவங்கள் ஏதோ திட்டத்தோடதான் இருக்கிறாங்கள்.”

“ஓம் கந்தப்பு இது தம்பழராயனுக்கு தெரியுமோ தெரியாது நான் அங்கயும் ஒருக்காப் பொகோணும் வரட்டே” என்றபடி வெளியேறினார். வானொலி தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாதகாலம் பத்திரிகைகளும் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. இப்படி ப்பட்ட ஊரவர்களே தகவல்களை சேகரித்து விநியோகித்தும் வந்தார்கள்.

‘பிறகும் ஏதென் கூட்டம் கீட்டமெண்டு துவங்க முதல் வேலையை முடிச்சுப்போடோணும்’ என்றபடியே கந்தப்பு கூரையில் ஏறினான். வரிச்சுகளைப் பொறுத்தவரை எல்லாம் வெட்டி பட்டையடித்து சேகரித்தாயிற்று. கட்டுக்கட்டாக மாவரை உலுவிந்தை இரண்டையும் குளத்தில் முழுகப்போட்டு சிலநாள் கழித்து பட்டை அழுகியதும் உரித்து எடுத்தார்கள். தரணிவரிச்சைப் பொறுத்தவரை அது பட்டை உரிக்கத் தேவையில்லை. கந்தப்பு வீட்டுக்கு மரந்தடி இறக்கியதிலிருந்து மணியனும் லெச்சிமியும் பட்டையடிப்பதையே பெரிய வேலையாகச் செய்தார்கள்.லெச்சிமி வெடுக்குநாறிகளையே தெரிவு செய்வாள். சுத்தியலால் அடித்தே கழற்றிவிடலாம்.

“வெடுக்குநாறியை நிலத்துக்குள் நட்டால் ஆறுமாதத்தில் இத்துப்போகும். பட்டையடித்து மேலே போட்டால் அதும் குசினிப்பக்கமாக என்றால் புகை பிடிக்கப் பிடிக்க வெண்கலம்போல அறுபது எழுபது வருடங்களுக்கு இருக்கும்.

இப்படி பெரிய வீடாக கட்டியது பாக்கியத்துக்கு பிடிக்கவில்லை.

“உதென்ன வீடாப்பா அண்டாகா கஜூம் மாதி. ஒருக்கா மேய ஆயிரம் மட்டை கிடுகெண்டாலும் வேணும்போல.”

“ஹஹ பிள்ளையளும் பெருக்கப் பெருக்க வேணுந்தானேப்பா” இது கந்தப்பு.

“மெய்யேப்பா வீடு பிறிம்பா மால் பிறிம்பா குசினி பிறிம்பா எண்டு போட்டா அப்பப் காசு கிடைக்க கிடைக்க மேயலாந்தானே. இது ஒரு முதல் கையில வேணும் வீடு மேச்சலெண்டா”

‘ம்…பெண்புத்தி பின்புத்தியெண்டது சரியாத்தான் இருக்கு உதை நானே யோசிக்கேல்லயே  என மனைவியை மனதுக்குள் பாராட்டினாலும்,அவனுக்கிருந்த ஆண்மை தன்னை  கைவிட விரும்பவில்லை.

“ஓமடி ஓ…வரிச்சென்ன மேகந் தெரியாம இருக்கவே வரியிறன்  ங…எங்கட வயலால வாற வைக்கோலக் கத்தை கட்டினாலே மேஞ்சிடலாம் பிறகேன் மேய்ச்சல் சிலவை?”

“ஓ…நீங்கள் அந்த வளமா யோசிக்கிறியளோ?” இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த லெச்சிமி,

“அப்பூ…இந்த வீடு அஞ்சாண்டுத்திட்டமே?” என்றாள்.

“ஏன்ரீ?”

இல்லை மரம் வெட்டினது 1955-ல கட்த்துவங்கினது 1956-ல, வரிச்சு வரியத் தொடங்கி ஒருவரியமாகிது போல.”

“கழுதை பேப்பருகளப் படிச்சுப்படிச்சு நல்லா பெச வெளிக்கிட்டுட்டாய்.”

“அப்பூ பக்கத்து காணியெல்லாம் குடி வந்திட்டினம். நாங்கள் மட்டும்தான் இன்னும் கோயில்குளமும் சின்னக்குளமும் எண்டு அலையிறம்”

“விசரி குடிவந்தா தெரியும் பள்ளிக்கூடம் தூரமாயிடும்.”

“ஏன் சமளங்குளத்திலயிருந்தே பிள்ளையள் போகுதுகள்தானே?”

“சரிசரி விட்டிட்டு வேலையளப்பாருங்க கதை கண்டா கைலாயந்தான்.” என அதட்டி கதையை முடித்து வைத்தான் கந்தப்பு.

காடு விரியும்

தமிழ்க்கவி-இலங்கை

தமிழ்க்கவி

(Visited 64 times, 1 visits today)