காடுலாவு காதை-பாகம் 17-தமிழ்க்கவி

தமிழ்க்கவி
பிருந்தாஜினி பிரபாகரன்

வேலை செய்ய கூலியாட்களாக வந்தவர்கள் இருவர் தென்னிந்தியாவிலிருந்து வந்திருந்த தமிழர். இருவர் ஊரவர்கள். தென்னிந்தியாவிலிருந்து தொழில் தேடி இலங்கைக்குள் பிரித்தானியர் காலம்முதலே மக்கள் வரத் தொடங்கியிரந்தார்கள். என்றாலும் இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் அப்படி வருபவர்கள் கள்ளக் குடியேற்றக்காரர்களாகவே இருந்தனர். அதென்னவொ அனுமதிக்கப்பட்ட ஒரு விடயமாகவே மக்கள் கருதினார்கள். ஏனெனில் இன்னும் இதை தடுப்பதற்கான சட்டமுமில்லை. மலையகத்தில் வேலை செய்ய வந்தவர்களைப்போலவே இவர்களும் கருதப்பட்டார்கள்.

ஆயிரத்து தொளாயிரத்து ஐம்பத்தைந்தாம் ஆண்டில்தான் அரசாங்கம் இந்;த அத்துமீறிய குடியேற்ற வாசிகளை கவனத்தில் எடுக்கத் தொடங்கியது. அந்த நாட்களில் வன்னிப்பகுதியிலிருந்து அரிசி கடத்தப்படுவதை தடுக்க ஒரு பதினைந்து பொலீஸாருடன் ஆனையிறவுத் தடை முகாம் 1955ல் அமைக்கப்பட்டது. அதே வருடத்தில் கள்ளக்குடியேற்றக்காரரை தடுக்க, பிடிக்க மன்னார் மாந்தைப்பகுதியில் தள்ளாடியிலும் ஒரு காவலரண் அமைக்கப்பட்டது. அதற்கடுத்தபடியாக பலாலித்த ளமும் கள்ளக்குடியேற்றத்தை தடுக்கவே அமைக்கப்பட்டது.

அதற்கு முன்பே கடல்வலயம் கண்காணிக்கப்பட்டாலும் அவ்வளவு கூர்மையான கடற்படைக் கட்டமைப்பு இருக்கவில்லை.  காக்கியில் தைத்த தொளதொள அரைக்காற்சட்டையும், மேல்கோட்டும், ஒரு பக்கமாக மடித்து விடப்பட்ட தொப்பியும், கையில் ஒரு கருங்காலிக் கொட்டனுமாக ரோந்து வரும் இலங்கைப் பொலீஸாருக்கு இது முக்கியமான வேலையாகவும் இல்லை. எனவே பெருமளவான தென்னிந்திய மக்கள் மன்னார் வவுனியா போன்ற பகுதிகளில் முன்னரே வந்திருந்த தமது உறவினர்களுடன் சேர்ந்து கொண்டனர்.

அப்படி முன்னரே வந்தவர்தான் கறுப்பையா. அவருடன் குஞ்சுப்பிள்ளை ராமசாமி என இருவர் வந்து வேலை செய்தனர். தென்னிந்தியாவின் பஞ்சம், மழையின்மை, நோய் என அவர்களை விரட்டிய காரணங்கள் பல இருந்தன. இங்கே கடுமையாக உழைத்தும், ஊரவர்களிடம் பணிந்தும் தமது வாழ்க்கையை நடாத்திக் கொண்டிருந்தனர்.

தேநீரை கோப்பைகளில் ஊற்றிக் கொடுத்தாள் பாக்கியம். ஆதைக்குடித்தபின். தட்டத்தைக் கொண்டு வைத்தாள் லெச்சிமி. வெற்றிலைத் தட்டத்தை தன் பக்கமாக இழுத்த வாறே கறுப்பையா ஒருதரம் செருமிக்கொண்டு ,

“ அண்ணே நம்ப நெலத்தில கொஞ்சூண்டு நெலத்தை  ந்தா இந்த ராமசாமிக்கு கொடுத்தீங்கன்னா … அவனும் எதனாச்சும் நட்டுக்கிருவான் கெணத்தையுங் கூடமாட வெட்டிக்கிரலாம், அப்றம் தண்ணி மேடேறிச்சின்னா ஒரு குத்தவைப் போட்டுக்கிரலாம். பாவண்ணே  போக்கத்த பய பிள்ளைங்க வேற ரொம்பக் கஸ்டப்படுறாண்ணே” என்றான். கந்தப்பு இதை சற்றும் எதிர் பார்க்கவில்லை.

“அது சரிகறுப்பையா… எனக்கு இவங்க  ஆர் எவர் எண்டு தெரியாதே அதோட பழக்கமில்லாத மனிசரை வளவுவழிய பிழங்கவிடுறது….”

“அண்ணே ஒங்க கிட்ட சொல்றதுக்கென்ன பஞ்சம்பொழைக்க ஊர்ல இருந்து மன்னார் பக்கிட்டா வந்திட்டாய்ங்க… நம்ப சாதிசனந்தா பெரச்சனையில்ல. வேணா நாங் கூட இருந்துக்கிறண்ணே” என்றான்.

“எதுக்கும் நான் ஒருக்கா பாக்கியத்துட்டயும் கதைச்சிட்டு சொல்லுறன்.” என அந்தக்கதையை முடித்து வைத்தான் கந்தப்பு.

அடுத்த வாரமே கிணற்றில் கந்தப்புவுடன் கறுப்பையாவும் ராமசாமியும் கூடமாட வேலை செய்ய தொடங்கிவிட்டனர். அதே வேளை சுப்பம்மா அதுதான் ராமசாமியின் மனைவி பெயர் தன் சின்னஞ்சிறு பிள்ளைகளை கொண்டுவந்து நாவல் மர நிழலில் உட்கார்த்தி வைத்து  விட்டு அவர்களை செய்கைபண்ணச் சொன்ன வேலிக்கால் நிலத்தில் பற்றைகளை வெட்டத் தொடங்கியிருந்தாள். பாக்கியம் அந்த நாவல் மர நிழலில் பொத்தமிளகாய்க் கன்றுகளை நட்டிருந்தாள். அதைவிட கானக் கொச்சிக்காய் மரமும் ஒன்று நின்றது. கறிக்கு காய் ஆயப் பொனவள் அந்தப்பிள்ளைகளைப் பார்த்துவிட்டு,

“மெய்யே …எனக்கு உங்கட பேருந் தெரியாது. குறை நினைக்காதையுங்கோ. இதில கட்டெறும்பு சூகை எல்லாம் நிறைய, நாவல் மரமெல்லே பாம்பு பூச்சியும் உலாவும். புள்ளையள் அதில எங்கட கொட்டில்ல விடுங்க. நானும் பிள்ளையளும் நிக்கிறந்தானே.” என்றாள். இரண்டும் ஆண்பிள்ளைகள் ஒன்றுக்கு மூன்றுவயது மற்றது இரண்டுவயதுதான் இருக்கும். சுப்பம்மா மறுக்கவில்லை.

ஆனால் பிள்ளைகள் தாயைவிட்டு தள்ளி நிற்க மறுத்து அழுதன. பாக்கியம் அவர்களுடைய கையில் ஒவ்வொரு வாழைப்பழத்தைக் கொடுத்தாள. அவர்கள் அமைதியடைந்தார்கள். சுப்பம்மா சமையல் செய்து சாப்பாட்டைக் கட்டிக் கொண்டே வருவாள். இடையில் பாக்கியம் தேநீர் கொடுப்பாள். மாலையில் நான்குமணிக்குப்பின் அவள் தனது வீட்டுக்கு போவாள். அங்கிருந்து ஒரு இருநூறு மீட்டர் தொலைவில் அவர்கள் காட்டில் ஒரு ஓரத்தை வெட்டி சிறு குடில் போட்டிருந்தார்கள். அது அரச காடு. ஆனால் அவர்களுடைய மகன் பதினாலு வயது நல்லு என்பவனை பாராளுமன்ற உறுப்பினர் வீட்டில் வீட்டுவேலைக்காக  விட்டிருந்தார்கள். அவருடைய தயவில்தான் அந்தநிலத்தை அவர்கள் பிடித்திருந்தார்கள். அவரும் பின்னாளில் தன் கருணையில் அதில் ஒரு ஏக்கர் நிலத்தை அவர்களுக்கு ‘பட்டா’ போட்டும்  எடுத்துக் கொடுத்தார்.

ராமசாமி தனது பெயரை அருணாசலம் என்று சொன்னார். சுப்பம்மா தனது மனைவியல்ல என்றும் சொன்னார். சுப்பம்மா தோற்றத்தில்கூட அவருக்கு அக்கா போலவே இருந்தாள். இதையெல்லாம் சொன்ன போது ராமசாமியின் கண்களிலிருந்து கண்ணீர் பொலபொலவென உதிர்ந்தது.

காடு இன்னும் விரியும்

தமிழ்க்கவி -இலங்கை

தமிழ்க்கவி

 

 

 

(Visited 81 times, 1 visits today)