காடுலாவு காதை-பாகம் 9-தமிழ்க்கவி

தமிழ்க்கவி“மெய்யேப்பா சொல்லுறனெண்டு கோவியாதைங்கோ கிணத்துக்கும் வீட்டுக்கும் உள்ள துலையப்பாத்தா அடுத்த வீட்டுக்கு தண்ணிக்கு போறமாதிரி கிடக்கெல்லே” கந்தப்பு இதைக்கேட்டு பெரிதாக சிரித்தான்.

“எடி அப்ப பங்கை கிழக்கில ஒரு நிலையம் இருக்காம், அதில வெட்டுவமே ? வீட்டுக்கு கிட்ட பத்து முழத்தில தண்ணியுமாம்.” என்றான் கேலியாக .

“பங்க, தம்பிராசர் பத்து முழத்தில தண்ணி எண்டு புளுகி புளுகி வெட்டிப்போட்டு இப்ப பின்வளவுக்கு தண்ணி பாச்ச ஆகாசம் முட்ட வாய்க்கால் உசத்திறான். காணேல்லயே. கிணத்து வெட்டுச்சிலவை விட வாய்க்கால் சிலவு கூட, அதோட அந்த உசரத்துக்கு ஏற்றமும் போடோணும். இனி நாள் வேலை வினைக்கேடும்.” என்றான் புதினம் பார்க்க வந்த சந்தியா. (அந்தக்காலத்தில் நீரிறைக்கும் யந்திரமோ கோஸ் பைப்புகளோ இல்லை. யாழ்ப்பாணம் துலா பட்டை இறைப்பு. வன்னியில் ஏற்றம் போட்டு மாடுகள்கட்டி இறைக்கிறார்கள்.)

கந்தப்பு கிணற்று வெட்டில் இறங்கினான். தானே வெட்டி மண்ணை முதலில் கிணற்றை சுற்றி கொட்டி வெளியே வரும் வெள்ளம் மழை வந்தாலும் உள்ளே வராதவாறு அணையாக கொட்டினான். ஒரு கூலியாள் போட்டாலும் பின்னேரம் ரெண்டு ரூவாக் குடுக்க வேணும். ஆர் குடுக்கிறது. அந்தக்காசிருந்தா ரெண்டு நாளைக்கு வடிவாச் சாப்பிடலாம்.

பாக்கியத்திற்கு பிறந்த எட்டாவது ஆண்கழந்தை பிறந்த போதே நோஞ்சான். அடிக்கடி சளியும் வயிற்றோட்டமும் மாறிமாறி வந்தது. அப்போதெல்லாம் லெச்சிமியின் வேலைதான் அதிகரிக்கும்.. தம்பியின் சாணைத்துண்டுகளை எல்லாம் பாக்கியம் கட்டி வைத்திருப்பாள். பாடசாலை விட்டு வந்ததும், அயலில் எங்காவது தோட்டங்களுக்கு இறைக்கும் வாய்க்கால்களிலோ, அல்லது சின்னப்புதுக்குளத் திலோ கொண்டு போய் அலம்பிக் கொண்டு வருவாள்.

இரவில் தம்பி அழுதாலும் அவள்தாள் எழுந்து தொட்டிலை ஆட்டி அவனை தூங்கப்பண்ண வேண்டும். பாக்கியம் எழுந்திருக்க முடியாத அளவுக்கு வாத நோயாளியாக இருந்தாள். அதோட பாக்கியத்தின் வயிற்றில் இன்னுமொரு கரு உருவாகியிருந்தது. வீட்டில் வருமானத்துக்கு எந்த வழியும் இருக்கவில்லை. கந்தப்பு கிணற்று வெட்டில் மும்முரமாக நின்றான். வேறு வழியின்றி பாக்கியத்தின் நகையை எதிர்பார்க்க வேண்டியதாயிற்று.

“நீயும் நோயில கிடக்கிறாய். பிள்ளையும் அப்பிடி, நானும் உந்த கிணத்தை ஒரு வழியா வெட்டி தண்ணி கண்டிட்டா… எல்லாருக்கும் விடிவு கிடைச்சிரும்.” கந்தப்பு மனமுருகித்தான் பேசினான்.

“என்ன செய்யிறது……….? நானும் ஏலுமெண்டா வந்து நாலு கூடை மண்ணாவது சுமந்து கொட்டுவன்.” ‘எனக்கு இப்ப வயித்திலயும்’ என்பதை சொல்ல பாக்கியம் முயலவில்லை. சொன்னாலும் அவனிடமிருந்து எந்த பதிலும் வரப்போவதுமில்லை.

“ச்சா இப்ப நீ வரயில்லயெண்டு ஆரப்பா அழுத…ங சிலவுக்கு காசு வேணுமேப்பா…மெய்யேப்பா ஏதேனும் அடைவத்தனிய வச்சா சமாளிக்கலாம்…”கந்தப்பு இப்பதான் சரியான இடத்தை தொட்டான். பாக்கியம் சீறினாள்.

“ஙா நகையோ வச்சிட்டு ஆர் திருப்பிற…ங. வடிவேலன்ர கலியாண எழுத்துக்கு குடுத்த நாலுபவுண் சங்கிலி மீளாமக்கிடக்கு.?”

“எடி……………. அவன் இப்பானே வேல வெட்டிக்கு போறான். எடுத்து தருவான், எப்பன் பொறு.”

“தருவானோ…ஊரவனுக்கு கலியாணம் முடிக்க என்ர நகைய அடகு வச்சவர்.” பாக்கியம் பொருமினாள்.

வடிவேலு அவர்களுடைய மூலை வளவுக்குள் சட்டிபானை வனையும் தொழில் செய்து கொண்டிருந்தான். அவர்களது பூர்வீகம் தெலுங்கு. இவர்களுடைய இன்னுமொரு குடிசையில் சின்னையா இருந்தார் அவருடைய மனைவி வேறொருவருடன் போய் வாழத் தொடங்கியதால, இவர் தமது மூன்று பிள்ளைகளையும் வெவ்வேறு வீடுகளில் வீட்டு வேலைகளுக்காக விட்டிருந்தார். ஞானமணி எட்டு வயது யாழ்ப்பாணத்தில் ஒரு தியேட்டர் முதலாளிவீட்டில் வேலை செய்தாள். பர்வதம் பத்து வயது ஒரு டொக்டர் வீட்டில் வேலை செய்தாள். சேனாதி மன்னாரில் யாருடனோ வேலை செய்தான்.

ஒருநாள் காலை பத்து மணிக்கு அந்த ஊருக்குள் சிவப்பு சைக்கிள் வந்த போது ஊரே அவன் பின்னால் ஓடியது. தபாற்கந்தோரிலிருந்து யாருக்காவது தந்தி வந்தால்தான், அதை இப்படி சிவப்பு சைக்கிளில் சென்று கொடுப்பார்கள். அது மட்டுமல்ல பெரும்பாலும் வெளியூர்களிலிருந்து யாராவது இறந்த செய்திகளே  தந்தியில் வரும். அதனால் விடுப்பு பார்ப்போர் யார்வீட்டில் யாருடைய மரணம் என்றறிய ஒடினார்கள். தந்தி சேவகனே அதை பிரித்து வாசித்தான்.

‘ஞானமணி வயசுக்கு வந்திட்டாள்’ என்ற தந்தி சேவகன் வாசித்து சொன்னான்.  தந்தியில் சொற்களுக்கே கட்டணம் அதனால் அது இப்படி சுருக்கமாகத்தான் இருக்கும். சனங்கள் கலைந்து போனார்கள். சின்னையாவும் அதை அப்படியே போட்டுவிட்டு தன்வேலையைப் பார்க்கப்போனார். மாலையில் வாசிப்பு கேட்க கூடும் கூட்டத்தில் பாக்கியம் கேட்டாள்.

“என்னண்ணை தந்தி வந்ததாம் ?”

“ஞானமணி சாமத்தியமாம்.”

“அண்ணை இனி குமரை வீட்டு வேலையளுக்கு அனுப்பக்கூடாது. அவளை கூட்டிக்கொண்டந்து இங்ஙின விடு. பேத்தியோட நிக்கட்டும். உனக்கும் சமைச்சுப் போடுவாள்தானே?”

இது. இதுதான் பாக்கியம் தனது தலையில் தானே கொட்டிய மண். ‘பாத்திரம் அறிஞ்சு பிச்சையிடு, கோத்திரம் அறிஞ்சு பெண்கொடு’ எண்டு சும்மாவே சொல்லுறது.

காடு விரியும்

தமிழ்க்கவி-இலங்கை

தமிழ்க்கவி

(Visited 81 times, 1 visits today)