கிராமங்களை அறிவோம்-வன்னி வளநாடு-கட்டுரை-தமிழ்க்கவி

ஆசிகுளம்

தமிழ்க்கவிவன்னி என்றால் நெருப்பு என்பது பொருள். வன்னி வேங்கையைக் குறிக்கும். வன்னி என்பது ஒரு விருட்சம். வன்னி என்பது எமது மாநிலம்.

வன்னிக்கு வளம் சேர்ப்பவை குளங்கள் என்றால் அது மிகையாகாது. சுமார் அறுநூற்று ஐம்பது குளங்கள்வரை இங்குண்டு. இவற்றிலும் மிகவும் பயன் தருபவையாகவும் வரலாற்றுத்தலங்களாகவும் விளங்குபவை அநேகம். வன்னி வளநாட்டின் எல்லையில் அமைந்துள்ள ஆசிகுளம் கிராமம் பற்றி இத்தொடரில் பார்ப்போம்.

வடக்கே தமிழ்க்கிராமங்களையும் மேற்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் சிங்களக் கிராமங்களையும் கூடார வளையமாக கொண்டு  சூழப்பட்டுள்ள பழைய மிகப்பழைய கிராமம் ஆசிகுளம். இதன் தெற்கெல்லையில் காடுகள் மண்டியிருந்ததும் அவற்றின் இடையே பெருங்குன்றுகள் அமைந்திருப்பதும் இந்தக்கிராமத்திற்கு பெரும் அழகு சேர்க்கின்றன. தெற்கெல்லை மலையில் “தென்பழநி” அல்லது “ஈழத்துப்பழநிமுருகன்” என்ற கோவில் அமைந்துள்ளது. அண்மைக்காலத்தில் இந்தக்கோவில் பிரசித்தி பெற்ற தலமாக விளங்கினாலும் பூர்வீகத்தில் இம்மலையில் தேன் கல்லி எடுக்க வந்த வேட்டையாடும் மக்களால் ஒரு சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பொதுவாக இவ்வாலயம் பிரசித்தி பெற வைக்கப்பட்டதன் பின்னணியில் அத்துமீறிய பெரும்பான்மையினரின் குடியேற்றத்தை தடுத்து  உள்ளமையானது கண்கூடு.

ஆசிகுளத்தின் இவ்வாலயச் சூழல் ‘சிதம்பரபுரம்’ என அழைக்கப்படுகிறது. யுத்தம் தீவிரமடைந்த காலப்பகுதியில், மலையகத்திலிருந்து அகதிகளாக வந்து திரும்பிச் செல்ல விரும்பாத மக்களில் சுமார் ஐம்பது குடும்பங்கள் வரையில் இங்கு குடியேற்றப்பட்டனர். அன்றைய ஆசிகுளம் கிராம அபிவிருத்திச்சங்க தலைவரும், பிறப்பு இறப்பு விவாகப்பதிவாளருமான திரு சிதம்பரப்பிள்ளை அவர்களது முயற்சியின் பயனாக இம்மக்கள் குடியேற்றப்பட்டதும் குடியேற்றப்பட்ட பகுதிக்கு “சிதம்பரபுரம்” என்ற பெயரும் சூட்டப்பட்டது.

எல்லைக் கிராமங்களின் பயங்கரம் அறியாமலும் பெரும் பண்ணையார்களின் நிலத்தில் வேலை செய்யும் கூலிகளாகவும், வன விலங்குகளாலோ, எதிரிகளாலோ  எல்லைப்புறம் தாக்கப்படும்போது முதல் பலிக்கடாக்களாகவும் இவர்களே இருந்து வந்துள்ளனர் .

ஆயிரத்து தொளாயிரத்து எண்பத்தியாறாம் ஆண்டு ஆடிமாதம் இந்தக்கிராமத்துள் புகுந்த சிங்களக்காடையர்கள் முதலில் சிதம்பரப்பிள்ளை அவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும்  தாக்கினார்கள்.  அந்த தாக்குதலில் சிதம்பரப்பிள்ளை அவர்களும் அவரது இரண்டுவயதுப் பேரனும் வெட்டிக் கொல்லப்பட்டனர். மகள் படுகாயமுற்றார். அதேவேளை சிதம்பரபுரத்தில் அகதிகளாக வந்து குடியேறிய மக்களில் ஆறுபேர் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்தும் போயினர். அச்சமயம் ஊரடங்குச்சட்டம் அமுலில் இருந்தது.

ஆசிகுளம் கிராமம் விவசாயக்கிராமம் என்றாலும் அங்குள்ளவர்கள் கல்வி கற்று அரச உத்தியோகங்களிலும் உள்ளனர். இந்தக்கிராமத்திலிருந்து படித்தவர்கள் எட்டுக்கிலோமீட்டர்களுக்கும் மேலாக மிதிவண்டியில் பயணித்தே பாடசாலைக்குச்  செல்ல வேண்டியிருந்தது. யாழ்ப்பாணம்  போன்ற வெளியிடங்களில் வாடகைக்கோ விடுதிகளிலோ, உறவினர் வீடுகளில் தங்கிப் படிக்க முடிந்தவர்களே பெரும்பாலும் அரச உத்தியோகம் பார்க்கின்றனர். இன்று நிலைமை அப்படியில்லை. பாடசாலைகள் அருகிலேயே அமைந்துள்ளன என்பதுடன் அனைவருக்கும் கல்வி கற்கும் வாய்ப்புகளும் பெருகியுள்ளன.

பாடசாலை, ஆரம்பசுகாதாரநிலையம், விளையாட்டுத்திடல், கோவில்கள், சிறு சந்தை, பஸ்தரிப்புநிலையம் என்பனவற்றுடன்  யுத்த காலத்தில் பெருமளவு அகதிகளைக் கொண்டமைந்த சிதம்பரபுரம் அகதிமுகாம் மேலும் விஸ்தரிக்கப்பட்டு ராணுவக் காவலரண் , பொலீஸ் நிலையம் என்பனவும் அமைக்கப்பட்டுள்ளது.

இயற்கையாக அமைந்த குளங்களில் கொட்டியும் ஆம்பலும் தாமரையும் பூத்து கிடக்க அங்கே எருமைமாடுகள் கூட்டம் கூட்டமாக நீரில் விளையாடும் அழகை இன்றும் காணலாம்.  இவர்களது நகரம் வவுனியாதான்.  முற்காலத்தே காட்டுவழியூடாக பெரிய சத்தமாக பேசியவாறே காலையில் நடந்து நகரத்துக்குப் போவார்கள். தமக்கான பொருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் நடந்தே வருவார்கள். ‘ஏனிப்படி சத்தமாக பேசிக் கொண்டு போகிறீர்கள்’ என்று கேட்டதற்கு ஒரு அம்மா சிரித்தபடியே சொன்னார்,

“காட்டு வழி மகள், ஆனை கரடி நிக்கும். நாம சத்தமா கதைச்சிட்டுப்போக அவங்களும் வெலகிப் போவாங்க. சோலிஎன்னத்துக்கிண்டு” என்றார். பெருங்காடுகளூடாக அன்று கால்நடைப்பயணம் மேற்கொண்ட மக்களுக்கு இப்போது வேண்டிய அளவு பேரூந்துகள் சேவையிலுள்ளன.

ஆசிகுளம் போகவர இரண்டு பாதைகளில் பேருந்து செல்கிறது. ஒன்று மகா மயிலங்குளம் சிங்களக் கிராமத்தினூடாகவும் மற்றது கோவில்குளம்,சமளன்குளம் பெரிய கோமரசன்குளமூடாக செல்லும் பாதை. இவ்விரண்டு பாதைகளும் இன்று தமிழ் சிங்களப் பிரதேசங்களுக்கு ஆட்சியாளர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை பறை சாற்றி நிற்கின்றன. ஆம்…… தொலைவு கூடிய மயிலங்குளப்பாதை நேர்த்தியான திருத்தப்பட்ட வீதியாக இருக்கக் குறைந்த தூரத்தைக் கொண்ட தமிழ்க்கிராமங்கள் உடான பாதை மகமோசமாக சேதமடைந்து போயுள்ளது.  இதனல் பெரும்பாலும் ஆசிகுளத்துக்கு வரும் அரச அதிகாரிகள் மயிலங்குளப்பாதையையே பயன்படுத்துகின்றனர். சுமார் ஆயிரத்துக்கும்மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்தக்கிராமம் அபிவிருத்திக்கு தொலைவிலேயே உள்ளது என்பது உறைக்கின்ற வரலாற்று உண்மையாகும்..

தமிழ்க்கவி -இலங்கை

தமிழ்க்கவி

(Visited 144 times, 1 visits today)