மலையகத்தின் நாட்டாரியல் பாடல்களை முன்வைத்து-கட்டுரை-தமிழ்க்கவி

 

தமிழ்க்கவிநாட்டார் பாடல்கள் நாட்டுக்கு நாடு உண்டு. வானொலி தொலைக்காட்சி சினிமா என்று இன்றுள்ள பொழுது போக்குச் சாதனங்கள் இல்லாத காலத்திலும் இயல் இசை நாடகமெனத் தமிழ் வரையறை செய்யப்பட்டிருந்தது. இதில் நாடகமென்பது இசையும் நடிப்பும், இசையென்பது பாடல்.

இலக்கியங்கள் செந்நெறி இலக்கியங்களாக வரும்வரை வாய்மொழி இலக்கியங்களாகவே இருந்தன. தீர்வறக்கற்றோர் எனப்படுவோர் இவற்றை ஓலைச்சுவடிகளில் சேர்த்து வைத்தாலும் அவை எல்லாவற்றையும் எல்லோருக்கும் கொடுக்குமளவுக்கு வளரவில்லை. எனவே கல்வி என்பதே மனனம் செய்வதாகவே அமைந்தது. வாய்வழி சொல்லக் கேட்டு மனப்பாடம் செய்வதே கல்வி. எனவே சகல நூல்களையும் பாடல்களாக செய்யுள்களாக ஆக்கி வைத்தனர்.

எனவே மக்கள் அறிந்த மொழிநடையாக எதுகை மோனை சந்தங்களுடன் கூடிய ஒரு பேச்சு வழக்கே வழி வழி வந்ததாகியது. இந்த வகையில் மலையகத்தார் என நாம் குறிக்கும் பெருந்தோட்டச் செய்கையில் ஈடுபடும் இந்திய வம்சாவழித் தமிழரிடையே வழக்கிலிருந்துவந்த பாடல்களை வாழ்வியலுடன் பார்ப்போம்.

“நாங்க புதுசா தோட்டத் தொழிலாளியில்லீங்க. நம்ப

பாட்டன் பரம்பரையே தோட்டந்தானுங்க”,

என இன்றைய தலைமுறை பாடலாம் ஆனால் பிரித்தானியர்களால் இங்கு கொண்டுவரப்பட்ட மக்களது கதை வேறாகவிருந்தது.

 “கால்கடுக்க நடந்து வந்தோம்

 கெண்டிமலைச் சீமையிலே தெயலத்தூருக்குள்ள தேனா வடியுதின்னு

 வந்த சீமையில வாடுறமே எங்காத்தா

 அடைமழையிலயும் அட்டைக்கடியிலயும்

 அரை உசுரு போயிரிச்சே”

என்று வாடி தமது ஊருக்குப்போன சிலரும் கண்டியிலே வாழ்க்கை வசதியாக இருப்பதாக கூறினார்களாக்கும்.அதற்கு அங்குள்ள பெண்ணொருத்தி,

“கண்டி கண்டி எங்காதீங்க கனத்த பேச்சு பேசாதீங்க

சாதிகெட்ட கண்டியில சக்கிலியன் கங்காணி”.

என்றாளாம்.அதுமட்டுமா இங்கிருந்து போறவர்களுக்கு எண்ணை வைத்து குளிப்பாட்டி தீட்டுக்கழித்தே வீட்டுக்குள் எடுத்தார்களாம். ஆனாலுமென்ன இங்குள்ள மக்களுக்கும் தமது களைப்புத்தீர பாட்டும் பகடியும் தேவைப்பட்டது. தமது நன்மை தீமைகளைப் பாடிவைத்தனர். எல்லாத்தாய்மாரையும்போல இவர்களும் குழந்தைகளைத்தாலாட்ட நேரமின்றி பால்வாடிகளில் விட்டுவிட்டு வேலைக்குப் போனாலும், தாலாட்டுப்பாடினார்கள்,

“ங்ங்ஙாயியி….ளொளொளெழொழ ஆயியி…..

கண்ணுறங்கு கண்மணியே கண்ணுறங்கு 

மருதையிலே குருத வண்டி எம்மவனே

மாமன் வரும் தேருவண்டி…கோட்ட வாசலதாம்.

மவனே கொத்தமல்லி பூப்பூக்கும்,கொத்தமல்லி பூப்பூக்க

கொடிமௌகோ காய் காய்க்கும்.

ஏரி நெறைஞ்சிருக்கும், எருமை பட்டிகளாம்

தோப்பு நெறைஞ்சிருக்கும். மாமன் தூக்கிவரும் சீர்தளைக்கும்”

பெரும்பாலும் விளையாட்டுப்பாடல்கள் கிடைக்க வில்லை. தொழிற் செய்யும் இடங்களில் கங்காணிகளால் செய்யப்படும் சேட்டைகள் பற்றியும் கொடுமைகள் பற்றியும் பாடல்கள் உண்டு.

“கறுத்தக்கோட்டுக் கங்காணி

 கம்மத்திலகொடைய வெச்சு கமுக்கமா வாறாண்டி

 கதைய பேச்ச விட்டுப்பிட்டு கெவனிச்சு பேசுங்கடி.”

“கொழுந்து கொறையுதிண்ணு கொறை பேரு போட்டானே

வேலை கொறையுதுண்ணு அரைபேரு போட்டாண்டீ”

“சாலா சாலையில சரசு சயிக்கிள ஓடையிலே,

வேலையத்த கங்காணி வெட்டி மறிச்சானாம்’ 

நேரா நேரத்தில கமலா நிமிந்து நடக்கயிலே

ராக்கப்பக் கங்காணி ரவுசு வைச்சானாம்.”

இந்தப்பாடலில் இடத்துக்கு தக்க மாதிரி பெயர் மாறும்.

பணிய லயத்துச்சாவல் பாசமுள்ள வெள்ளைச்சாவல்,

காலு வளந்த சாவல் கண்டாலும் பேசுதில்ல,

கொந்தரப்பு காரக்குட்டி கொழுந்தெடுக்கும் சின்னக்குட்டி

கொழுந்தெடுக்கும் கையில என்னகொய்துவிட்ட  சின்னக்குட்டி

கவ்வாத்துக்காரப்பையா கத்தி வெட்டும் பாண்டிமன்னா

கத்தியென்ன மின்னுறதுன் கவ்வாத்தென்ன பிந்தறது.”

இப்படி உருகி உருகி காதலித்தாலும்  திருமணம் என்னவோ பெரியவர்கள் விருப்பப்படிதான்.

“இது பொழைக்க வந்த இடம். ஒனக்கு பொண்ணு வேணுமின்னா காதக்கழுத்த மூடி எடுத்திட்டுப் போ” என்று விடுவார் தலைவர்.எனவே தான் மணக்க விரும்பும் பெண்ணுக்கு சீர்வரிசையை ஆண்களே தேடவேண்டியதாகவிருந்தது.இங்கே ஒரு மாமி தனக்கான சீர்வரிசையை வரிசையாக ஒப்படைக்கிறார்.

“தலைக்கு நெறைஞ்ச தொரு சடைபில்லை  ஜடலாக்கொடி

 மயிர்மாட்டி சோடிவேணும்.

 காதுக்கு நெறைஞ்ச நல்ல காது வளையம்,

 வாளி, சிமிக்கி, மின்னி,லோலாக்கு சோடி வேணும்

 மூக்கு வளையம் பெசறிமின்னி காதுமாட்டீ பிலாக்கு சரியா?

 கழுத்துக்கு நெறைஞ்சதொரு காசுமாலை ரெட்டைவடம்

 பதக்கம் சங்கிலி, அட்டியல், அம்ஸமா இருக்ணும்

 ரொம்பரொம்ப பரிசப்பணம் நாங்க கேக்கறதில்லை

 மனசில மன வருத்தம் வைக்கவேணாம்.

 கையில தங்கமா நாலு ஜதை. வளைவி.

 பத்து வெரலிலயும் பாங்கான மோதரங்கள்

 நவமணியாப் பதிச்சா நல்லதுதாங்க

 இடுப்பில ஓட்டியாணம் ரெட்டைவெரல் தடிப்பா

 காலுக்கு தண்டை செலம்பு பாதவெரல்ல

 பாங்கான மிஞ்சி குலுங்க குலுங்க.

 பொண்ணு நடந்துவந்தா பெரட்டுக்களம் டாலடிக்கணும்”

“அப்டியா அப்போ?”  

அசோசா ரோசாப்பட்டு டிமிக்கிலோரியா சேலை

முழுக்கறுப்பு முத்து வண்ணம் டிமிக்கிதையில் பாவாடை(ரவிக்கை அப்போது கிடையாது)

இத்தனையும் கொண்டு என் இளகுமயில் செண்டு எழுந்து நடப்பாபளா…?

அஞ்சுவண்டி சனமும் ஆறுவண்டி செலவும்

அரைவண்டி செலவும் அதில நம்ப பொண்ணும்

ஏறி பவனி வந்து பந்தல் கிடுகிடுங்க பாத்து பறை முழங்க  வாருவாளாம் வருவாளாம். ( முடிஞ்சா பொண்ணு கேளுங்கப்பா)

நலுங்கு வைக்கும் போது வருமே ஒரு நையாண்டி பாடல்.

“மாப்பிளையாம் மாப்பிளை  எங்க வேலை எண்ணு கேட்டாங்க

மாப்பிளைக்கு கோறணமேந்தில் வேலையின்னாங்க,

கொறணமேந்தில வேலையின்னு கொடுத்தோமே பொண்ண

மாப்பிள கோழிமேய்க்கிற வேலையின்னாங்க’

பட்டு வேட்டி கட்டி பத்துவெரல் மோதிரமும்

கட்டின தலைப்பாகை கவரி மினுமினுங்க

எங்க மாப்பிளை ஊஞ்சல் ஆடுறப்போ ஒண்டி நிண்டு பாத்தவளே 

காடு கலகலண்ணு ஆவரை பூத்திருக்க

பூப்பறிக்க போறேண்ணு  புறண்டயே போனவளே” …

இதெல்லாம் சும்மா நடிப்புக்குத்தான். இவைதவிர வழிபாட்டுப்பாடல்கள் ஏராளமாக உண்டு .

“கதிர்காமத்துக்கு காவடி எடுத்து

 காதுகுத்தி மொட்டையடித்து

 வேண்டுதலை செய்ய வேணும் ஆசை மச்சானே

 கொண்டாட்டம் வேலனுக்கு கொடியும் ஏறிடுச்சே”

என்கிறாள் மனைவி, எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட கணவன்,“அதனாலயென்ன சடம்பங்கட்டு பொறப்படலாம்” என்கிறான்.

மனைவிக்கு யோசனை இவன் சடம்பங்கட்டி அதை தூக்கிருவான். நான் எப்பிடிபிள்ளைங்களோட….

“கதிர்காமத்துக்கு காவடி எடுத்து காது குத்தி மொட்டையடித்து

கந்தனையும் தரிசனம் பண்ணனும் தானே அத்தானே

ஒரு காரு பிடிச்சா போவது சுகந்தானே.”

அவன் சொல்லும்பதில் இப்படி வருகிறது,

 “காரு பிடிச்சா காசுக்கு செலவு

 கால்நடைப்பயணம் யாத்திரைக்கழகு

 கைவீசி நடந்து போகலாம் கண்ணே ரஞ்சிதமே

 களைப்பின்னா நிழலிலும் நிப்போம் பொண்ணே ரஞ்சிதமே” அடப்பாவி,

“நடக்கிற பிள்ளை கையிலிருக்கு

 தவழுற பிள்ளை மடியிலிருக்கு

 கர்ப்பமும் கனதியாச்சு தானே அத்தானே

 ஒரு காரு பிடிசச்சா போவது சுகந்தானே”

இப்படி லோலாயப்பட்டு யாத்திரை போகணுமாக்கும் என்று சினந்தானாம் புருசன்.

00000000000000000000000000

இனி சோகங்களும் பாடலாகியதை பார்ப்போம்,

“காடு வெட்டி தோட்டமிட்டு மன்னா மன்னவரே

கத்தரியப் பாவு விட்டேன் மன்னா மன்னவரே

கத்தரியும் காய்க்கலியே மன்னா மன்னவரே

காத்திருந்து வீணானேன் மன்னா மன்னவரே

வேலிகட்டி  தடி கொழுத்தி மன்னாமன்னவரே

வெள்ளரியப்பாவு விட்டேன் மன்னா மன்னவரே

வெள்ளிரியும் காய்க்கலியே மன்னா மன்னவரே

நான் வெலை செஞ்சு வீணானேன் மன்னா மன்னவரே”

இது ஒரு வகைக் கவலை, இதையே,

“ஊரான் ஊரான் தோட்டத்தில

ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா

காசுக்கு ரெண்டு விக்கச்சொல்லி

காயிதம் போட்டானாம் வெள்ளைக்காரன்.

ஊரான் ஊரான் தோட்டத்தில

ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா

காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி 

காயிதம் போட்டானாம் வெள்ளைக்காரன்”

உழைப்பவனுடைய பொருளுக்கு விலை நிர்ணயிப்பது யார்? வெள்ளைக்காரனா.. அந்த வேதனையில் எழுந்தபாடல் இது.காலங்காலமாக தாம்பட்ட துயரங்களை பதிவு  செய்து வைக்கும் போது வாக்குரிமை பறிக்கப்பட்டு நாடற்றவராக்கப்பட்டு கள்ளக் குடியேற்றக்காரர் என பிடிக்கப்பட்டு பலவந்தமாக தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்ட அந்த நாளை பதிவு செய்துது பல பாடல்கள் அதில்  இதுவுமொன்று.இவன் இலங்கைப் பெண்ணை திருமணம் செயதிருந்தான் இப்போது அவளைப் பிரிய வேண்டிய நிலை,

“மன்னாருக் கோச்சியேற மனசு சரியில்லே என்

மனசுக்குகந்த கண்ணே உன்னை மறக்க முடியவில்லை

அடி வாழவந்த பொண்ணே என்ன மதிமயக்கிய கண்ணே

பூமரத்து சிட்டே என் புனுகு சாந்துப் பொட்டே

கால்கடுக்க நடந்து வந்து கண்டி மலை சிமையிலே

காடு வெட்டி தோட்டமிட்டோம் கண்ணே ரஞ்சிதமே

இப்போ கைகழுவி வுட்டுட்டாங்க பொண்ணே ரஞ்சிதமே

என்னை இக்கரை இருக்க ஒட்டார்

உன்னை அக்கரை வாழ ஒட்டார்

இது இமிக்கிரேசன் சட்டம் அது எனக்கும் உனக்கும் நட்டம்”

தமது சோகங்களைப்பாட அவர்கள் ஒப்பாரியையே பெரிதும் நாடினர்,

“பாவக் கொடியொதுக்கி பத்துலச்சம் பொன்னொதுக்கி

பார்வதியக் காவல் வைச்சேன். பத்திரம்னு சொல்லி வச்சேன்

இண்ணைக்குபாவக்கொடியளிஞ்சு பத்துலச்சம் பொன்னிழந்து

படுமரமா நிக்கிறனே…”

மல்லிகப்பூ மாலையிட்டு மடியில் வெச்சுப்பாக்காம

எருக்கம்பூ மாலையிட்டோ எடுத்தெறிஞ்சே பூமியிலே

கூடல் பனஞ்சோலை குயிலடையும் பூஞ்சோலை

கூட்டைக் கலைச்சமா குயில் கூட்டைப்பிரிச்சமா

இண்ணைக்கு ஒத்தைப்பனமரமா ஒதுங்கி நிக்கிறனே”

இதிலும் நையாண்டிப்பாடல் உண்டு.தன் மாமியார் இறந்த பொழுது  மருமகள் பாடினாளாம்,

“செத்ததுதான் செத்தாய் அத்தே

உன் சொத்தெல்லாம் எங்க வெச்சே…ஏஏஏஏ

நீ மாண்டதுதான் மாண்டாய் அத்தேஏஏஏஏ,,,,

உன் மயிர்மாட்டி எங்க வெச்சேஏஏஏ…. “

மலையகத்துப்பாடல்கள் நூல்வடிவில் வெளிவந்திருக்கின்றன அவற்றில் இடம்பெறாத அநேகமான பாடல்களையே இந்த ஆய்வில்  நான் சேர்த்திருக்கிறேன்.

தமிழ்க்கவி- இலங்கை

தமிழ்க்கவி

(Visited 537 times, 1 visits today)