காடுலாவு காதை-பாகம் 12-தமிழ்க்கவி

தமிழ்க்கவி
ஷமீலா யூசுப் அலி

இரவு குழந்தையை வைத்து தாலாட்டுப்பாடிக்கொண்டிருந்த பாக்கியம், பாடலில் வசை கொட்டினாள்.

“நான் கொடி எலுமிச்சை இண்ணைக்கு கொடி தப்பி பூத்தனய்யா……..

நான் வாடி வரமிருந்தோ வாழ வந்த பூமிஅய்யா

நீங்க தேடி வந்ததென்ன. திக்கத்து நிப்பதென்ன

மாட மாளிகையாம் தம்பிக்கு மயிலடையும் சோலைகளாம்………..”  

பாடலின் வரிகள் எங்கே போய் முடியும் என்று கந்தப்புவுக்கு விளங்காமலில்லை. எல்லாம் உந்த வடிவேலனால வந்தது. கலியாணம் முடிஞ்சு ஆறுமாசமாகியும் அவன் ஒரு சதம்தானும் தரயில்லை.  திருமணம் நடந்து அவன் வெளியே போனது சூட்டோட சூடாக சின்னையாவும் அநுராதபுரம் போய் அங்கிருந்து ஒரு பெண்ணை கூட்டிவந்து அவளுடன் குடித்தனம் நடத்த தொடங்கினார்.

“வடிவேலன விடுங்க… பெத்த பிள்ளையின்ர கலியாணம். சின்னையாண்ணை எண்டாலும் கொஞ்சக் காசத் தந்திருக்கலாமே…ங…இப்பான் இளந்தாரிமாதிரி போய் பொம்பிள கொணந்திருக்கிறார்.”

“ஏன்ரீ கொப்பர் உன்ர தங்கச்சிக்கு மாப்பிளை பாக்க மட்டகட்களப்புக்கு போனவர் மாப்பிளையின்ர தமக்கைய தான் கிளப்பிக் கொணந்து வாழேல்லயே? அதுகும் ரெண்டு பிள்ளையளோட… கண்டோட மாடவுட்டவர். அது திறமே………..?”

“இஞ்சேருங்கோ……. நான் அந்தாளை அப்புவெண்டு கூப்பிடுறதும் இல்லை. அந்த வாசல் மிதிக்கிறதுமில்லை. பிறகேன் அந்தக்கதைய இஞ்ச பறையிறியள்?”

“சரி விடப்பா….. நான் ஒண்டும் பறையேல்ல. ஏதோ எனக்காகவே எல்லாம்? இல்ல மற்றவங்கள் மாதிரி ஏதும் குடிச்சு வெறிச்சு அழிக்கிறனே?”

கந்தப்பு தன் பாயைத் தட்டி விரித்தான். படுத்தான். உறங்கியும் போனான். பாக்கியம் எழுந்து போய்  அவனது போர்வையை இழுத்து போர்த்திவிட்டாள். பகல் முழுதும் பாடுபடுபவன் பாவம்.

00000000000000000000000

அதிகாலையிலேயே  எழுந்த கந்தப்பு காணியை நோக்கி நடக்க ஆயத்தமானான். இரவு முழுதும் குழந்தைக்கு சளி மூச்சு முட்டியதில் அழுது கொண்டே இருந்தது. வயிற்றோட்டம் வேறு நிற்பதாகவே தெரியவில்லை. அயலில் உள்ள நாட்டு வைத்தியர்கள் எல்லோரும் கைவிட்டுவிட்டனர்.

“மெய்யேப்பா மத்தியானம் வேளையோட வாறியளே” என்ற பாக்கியத்திற்கு பதில் சொல்லாமலே கந்தப்பு போய்விட்டான். பாக்கியம் எதவும் தோன்றாமல் நின்றாள். ஆறுமாதமேயான குழந்தையை லெச்சிமி தூக்கி மடியில் வைத்திருந்தாள்.

“லெச்சிமி…….. நீ இண்டைக்கு பள்ளிக்கூடம் போகவேண்டாம்,நில்லு. தம்பிய ஆசுப்பத்திரிக்கு கொண்டு போவம்.”

ஏனோ பாக்கியத்தின் மனம் பதறிக் கொண்டிருந்தது. சூப்பிக்கு முன்னதாக ஒரு பெண்குழந்தை பிறந்தது. ஒரு வருடமாக நோயில் அழுந்தி அதுவும் துன்பப்பட்டு பாக்கியத்தையும் படாதபாடு படுத்திவிட்டு ஒன்றரை வயதில் அது செத்தும் போயிற்று. வயிற்றோட்டம்தான். இதுவும் அப்படி…?அந்தக்; குழந்தையின் நிலவு முகம் அவளைக் கெஞ்சியது. என்னைக் காப்பாற்றம்மா என்பதுபோல. கந்தப்புவுக்கு இந்த பராமரிப்புகளில் ஒருபோதும் பங்கிருப்பதில்லை.

“வேலைய விட்டிட்டு இப்ப உதுகளுக்கலையட்டே? லெச்சிமிய மலரக் கூட்டிக்கொண்டு போப்பா” என்பான்.

வைத்தியசாலையில் பெரிதாக கூட்டமில்லை. அம்மா தம்பியை தூக்கிவர, பின்னாலேயே லெச்சிமி சாணைத்துண்டுகள் பால்போத்தல் அடங்கிய தலகணி உறையை தூக்கிக் கொண்டு நடந்தாள். போய் வருவதற்குள் மூன்றுமுறை வயிற்றால போய்விட்டது. வீட்டுக்கு வந்ததும் கந்தப்புவின் தாய்’ பாக்கியத்தின் மாமியார் வந்து பார்த்தாள்.

“சாணைத்துண்டுகள் முடிஞ்சுது. நான் அலம்பிக்கொண்டாறன் பிள்ளைக்கு பக்கத்தில் கொஞ்சம் இருங்க” என்று மாமியாரிடம் சொல்லிவிட்டு பாக்கியம் துணிகளை எடுத்துக்கொண்டு கிணற்றடிக்குப்போனாள்.

பொன்னிப்பெத்தா பால்போத்தலை சூப்பி மாட்டி பிள்ளையின் வாயில் வைக்க அது பாலைக் குடித்து முடித்தது. லெச்சிமி மிச்சம் இருந்தபாலையும் பேத்தியாரிடம் நீட்டினாள். அதை போத்தலில் விட்டு சூப்பியை மாட்டி மீண்டும் வாயில் வைக்க அது மெதுவாக உவியத் தொடங்கியது.

பால் உள்ளே இறங்காமல் கடைவாய்வழியே வடியத் தொடங்க. பொன்னிப்பெத்தா அதன் தலையில் கைகொடுத்து சற்றே உயர்த்திப் பிடித்தாள். கறகறவென்ற ஓசையுடன் வயிற்றாலும் போக குழந்தையின் கண்கள் சொருகின. உடல் ஒரு தடவை முறுகுவது போல தெரிந்தாலும். பெரியவர்களைப் போல கைகால்களை நீட்டி நிமிர்த்தினான். குழந்தையின் உடல் நேர் கோடானது.

“அய்யா பட்டமரம் நானிருக்க….

பசுமரமோ பாழாச்சு….ஒ….

விட்ட மடம் இங்கிருக்க,

விளைவயலோ பாழாச்சு ஒ…ஒ.”

பொன்னிப்பெத்தா ஒப்பாரியில் ஊரைக்கூட்டினாள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த லெச்சிமிக்கு உடல் நடுங்கியது.

பாக்கியம் தலையிலடித்தவாறே கிணற்றடியிலிருந்து ஓடி வந்தாள். பத்துமாதமும் வயிற்றில் சுமந்துகொண்டே படாதபாடுபட்டு தெந்தட்டாக வாழ்ந்து பிரசவ வலியில் துடிதுடித்துப் பெற்றெடுத்த குழந்தை தங்க விக்கிரகம் போல அவ்வளவு அழகனாக இருந்தான். ஆறு மாதங்கள்தான் கடன்போல வாங்கிமுடிய போட்டானே.

“ஐயோ…என்ர மனம் தாங்கயில்லயே… எடி லெச்சிமி ஓடிப்போய் கொப்பருக்கு சொல்லி கூட்டிக்கொண்டு வா…” என்று அழுகையினூடே சொன்னாள்.

லெச்சிமி அங்க பிடித்த ஓட்டம். ஒரு மைல் கடந்து காணியில் வந்துதான் நின்றாள்.

“அப்பூ..அப்பூ…என்றபடி கிணறு வெட்டும் இடத்துக்கு ஓடினாள். கந்தப்பு மேடேறியிருந்தான். லெச்சிமி மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க வந்து நின்ற கோலம் அவனை திகைக்க வைத்தது.

“அப்பூ …தம்பி செத்திட்டான் உங்களை வரட்டாம்” அவன் பதில் பேசவில்லை. அவளை கையில் பிடித்தவாறே வேகமாக நடந்தான். அந்தக்காலத்தில் மிதிவண்டி அந்த ஊரில் யாரிடமும் இல்லை.

காடு விரியும்

தமிழ்க்கவி-இலங்கை

தமிழ்க்கவி

(Visited 151 times, 1 visits today)