காடுலாவுகாதை-பாகம் 21-தமிழ்க்கவி

தமிழ்க்கவிபரவலாக அந்த ஊரில் பலர் கிணறு தோண்டிக் கொண்டிருந்தார்கள். விவசாயக்கிணறுகள் கொள்ளவு அதிகமாக இருந்தால்தான தண்ணீர் நிறைய கிடைக்கும் எனவே கிணற்றின் விட்டம் அகலமாகவே அமைந்தது. கந்தப்புவும் இருபத்து மூன்றடி விட்டம் வைத்தே கிணறு வெட்டினான். அயலவர்களுடன் ஒப்பிட்டால் அது மிக பெரியதுதான்.

“அண்ணே கெணத்த மிச்சம் விரிச்சிட்டீங்கண்ண….நம்ப அல்லாத்தையும் எறக்க வேணாம், ஏத்தம் வர்ற பக்கிட்டா கொஞ்சமா இறக்கிக்கலாண்ண, அப்பறமா மத்தப்பக்கிட்டா வெட்டிக்கிரலாம்.” குஞ்சுப்பிள்ளை தன் தொழில் நுட்ப அறிவை வைத்து பேசினான் .

இப்போது குஞ்சுப்பிள்ளை கந்தப்பு ராமசாமி மூவருமே நிலக்கடலை பயிரிட்டடிருந்தார்கள். பத்துப் பதினைந்து நாட்களுக்கொரு இறைப்பு கிடைக்குமளவுக்கு தண்ணீர் போதுமானதாக இருந்தது.

“இது ஆடிமாதம். அங்கால ஆவணி புரட்டாசி காத்தும் அமந்தறையா எழும்பினாத்தான் தண்ணியின்ர நிலை தெரியும்.” என்றான் கந்தப்பு.

முதல் பாறைகளை உடைத்து மேலே ஏற்றியாக வேண்டும். ஏழு றாத்தல் சிலசு பதினாலு றாத்தல் சிலசு, என அயலில் கேட்க முடியாது. இதெல்லாம் கொல்ராசனிட்ட போய் சொல்லி செய்யிற சாமான் இல்லை. கடையில வாங்கி நல்ல கருங்காலிப்படுதடியில பிடி போட்டு சரிக்கட்டி வைச்சாச்சு.கந்தப்பு தன் முன் யோசனையை தானே தனக்குள் மெச்சிக் கொண்டான்.

பெரிய பெரிய முண்டனாகப் பிளந்து போய்க்கிடந்த பாறைகளை  சிலசு கொண்டு உடைத்து கூடைகளில் நிற்குமளவுக்கு சிறுப்பித்துப் போட்டால் இரண்டு பாரஊர்திகளில் ஏற்றுமளவுக்கு கருங்கல் இருந்தது. இரண்டு தினங்களில் எல்லாவற்றையும் உடைத்து மாடுகளை ஏற்றில்;பூட்டி இழுத்து தனியாக குவித்தார்கள்.

அவ்வளவு கல்லும் அங்கிருந்து ஓரு தனவந்தர் தனது அரிசி ஆலைக்கு நெல் காயவைக்கும் தளம் அமைக்க கொள்வனவு செய்தார்.கல் முழுவதும்  ஐநூறு ரூபாவுக்கு விற்றான். அந்தக்காசைக் கண்டதும் பாக்கியம். “மெய்யேப்பா நகையள மீட்டுப்போடலாம்” என்றாள்.

“கொஞ்சம் பொறப்பா…இன்னும் ரெண்டு மூண்டு வெடி போடவேணும் பிறகும் கல்லு வருந்தானே  விக்கலாம். உவள கஸ்டப்பட்டு கிணத்தை வெட்டிப்போட்டு கட்டாம விட்டா இடிஞ்சு போகாதே” கந்தப்புவின் முழுக்கனவுமே அந்தக் கிணற்றில்தான் மையங் கொண்டிருந்தது.

காலையில் ஊறிப்பரந்திருக்கும் நீரை பயிருக்கு இறைத்தபின் பாறையில் குழியடித்து வெடி வைத்து உடைத்தனர். இம்முறை ஒருபுறப்பாறை அழுத்தமாக எட்டடி உயரத்துக்கு ஒரு சுவர்போல உடைந்து பெரும் பகுதிப் பாறைகளை நொருக்கித் தள்ளியிருந்தது. இதனால் பாறைகளை நொருக்கும் வேலை குறைந்திருந்தது.

மறுபடி ஆளணி உதவியில்லாமலே மாடுகளை துணைக்கு வைத்துக் கொண்டு மூன்று பாரஊர்திகளில் ஏற்றுமளவுக்கு கருங்கற்கள் வெளியே வந்து சேர்ந்தன.  கிணற்றை கிழக்கும் தெற்கும் ஓதுக்கி விட்டத்தை குறைத்து ஏற்றத்துக்கு நேராகஇறக்கினார்கள் அதுவும்கூட ஒரு ஆளுயரத்துக்கு இறங்கிவிட்டது. ஓவ்வொரு காலையிலிருந்தும் பத்துறாத்தல் சிலசு மாறி பதினாலுறாத்தல் சிலசு என மாறி மாறி அடித்து பாறைகளை உடைக்க மூவரும் பாடுபட்டனர்.

“போதும் இனி வெடி வெக்க முடியாதுண்ணே… ஆமாமா ஆழம் ரொம்ப ஆவிடுச்சில்ல வெடி வெச்சிட்டு ஓடி ஏறிக்க முடியாதுண்ணே” குஞ்சுப்பிள்ளை பயந்ததில் ஒரு நியாயம் இருந்தது. அவனுடைய நண்பன் ஒருவன் இப்படி கிணற்றுவிளிம்பில் ஏறி பத்தடி ஓடுமுன் வெடி வெடித்து விட்டதாம்.

“அட அப்பிடியா பிறகு. பக்கத்துலயே ஒர நவ்வா மரம் இருந்துச்சா அதுக்கப்பால் பாஞ்சிட்டனாம்.”

“உயிர் தப்பீருச்சில்ல” என்றான் ராமசாமி, பொதுவாக இவன் மௌன சாமிதான் இப்பஇப்ப கொஞ்சம் பேசமுயல்கிறான்.

“உயிர்தப்பினா ஆச்சா காது போயிருச்சில்ல” வேடிக்கைப் பேச்சுகளுடன் அவர்களுடைய வேலை நடக்கும் போது லெச்சிமி வந்து விட்டாலோ அவர்கள் அவளை “பாடும்மா ஒரு நல்ல பாட்டா பாடு” என கேட்டு பாடவைத்தும் மகிழ்வர். அவள் பாடுவது மட்டுமல்ல நன்றாக கதையும் சொல்வாள். எல்லாம் அருகிலுள்ள கிழவிகளை நச்சரித்து வாங்கிய கதைகள்தான்.

கோவில்குளம் வயல்காணியை அடுத்துள்ள ஆற்றில் மணல் இருந்தது. மாட்டு வண்டியை கொண்டு போய் காலையில் இரண்டு வண்டியும் மாலையில் ஒரு வண்டியுமாக மணல் ஏற்றி வந்து கிணற்றருகே ஒரிடத்தில் சேர்த்து வைக்கத் தொடங்கினான். மழைவந்து விட்டால் வயல் நிலத்தில் வண்டி கொண்டு போக முடியாது. சேறாகிவிடும் ஆற்றிலும் தண்ணீர் வந்துவிடும். எனவே அவசர அவசரமாக செய்ய வேண்டிய வேலையாக அதை முடித்தான் தேவைக்கு அதிகமாகவே மணல் சேர்த்தான்.

மாத்தறையிலிருந்து புதிதாக குடிவந்த மேசன் ரணசிங்க, அருமையான அமைதியான மனிதர் மெலிந்த சிவந்த தேகம் அதிரப் பெச மாட்டார் இவரது மனைவி மிகவும் குள்ளமானவர் அவரது பெயரை அங்கு யாரும் சொல்வதில்லை எல்லோரும் மாமி என்றுதான் அழைப்பார்கள். மற்றவர்களுக்கு சொல்லும்போது சிங்களமாமி, அல்லது கட்டைமாமி என்றால்தான் புரியும் நிறைய பிள்ளைகள் அந்தக் கிராம மக்களுடன் இரண்டறக்கலந்த நண்பர்களாகி வாழ்ந்தவர்கள்.

அந்த பாஸையா வந்து கிணற்றைப் பார்த்தார் சுற்றளவையும் கவனித்துவிட்டு எத்தனை பை சீமெந்து வேணும் என்று கணக்கிட்டார். கிணற்றிலிருத்து வந்த கருங்கற்களையே வைத்து கட்டலாம் என்றார். மணலும் போதும் என்றார் சீமெந்து பை இரண்டு ரூபாய், மேசனுக்கு நாட்கூலி இரண்டு ரூபா, முட்டாள் வேலைகளை கந்தப்பு செய்தான். கற்களை அருகில் எடுத்து வைப்பது தரம்பிரிப்பது, எல்லாம் மணியம் லெச்சிமி சகுந்தலா ஆகியோரின் வேலையாயிற்று. பாடசாலை லீவு விட்டிருந்தது.இனி இருபத்தைந்து நாட்களுக்கு வேலைதான் விளையாட்டும்தான்.

காடு விரியும்

தமிழ்க்கவி -இலங்கை

தமிழ்க்கவி

(Visited 42 times, 1 visits today)