காடுலாவு காதை-பாகம் 18-தமிழ்க்கவி

தமிழ்க்கவிஅருணாசலம் எனப்படும் ராமசாமி தனது கதையை சொல்லி அழுவதை கந்தப்புவால் பார்க்க மட்டுமே முடிந்தாலும் அவனுக்காக அனுதாபப்படவே முடிந்தது. கிணற்றில் இப்போது வேலை அதிகமாகிக் கொண்டே வந்தது. யாழ்ப்பாணத்து தொழில் நுட்பமே கையாளப்பட்டு வந்ததை அவதானித்த குஞ்சுப்பிள்ளை,

“அண்ணே நம்ப வூட்டில மாடுங்க நிக்குதே… அதுங்கள பழக்கிக்கிட்டா மண்ணும் இழுத்துக்கலாம். தண்ணியும் எறைச்சுக்கலாம். என்னண்ணே சொல்றீங்க.”

“அதுக்கென்னப்பா அதுகளும் இப்ப வேலையில்லாமத்தானே நிக்குதுகள்.” என்றான் கந்தப்பு.

வண்டி இழுக்கவும் கலப்பை இழுக்கவுமே பழகியிருந்த மாடுகளை முன்னும் பின்னுமாக நடக்கப் பழக்கினான் குஞ்சுப்பிள்ளை. நலமடித்த மாடுகள். குழப்படி இல்லாமல் பழகிக் கொண்டன. அப்படியே நுகம் வைத்து நடைபாதையில் மண்ணை இழுத்துக் கொண்டு அது முன்னே செல்லவும் கூடை மேலேறியதும் ‘ஆறிவா” என்றால் சற்று அசரவும், மீண்டும் கூடையை உள்ளே விட பின்னோச்கி நடக்கவும் மெதுவாக அவற்றை பழக்கி முடித்தார்கள். அதே பாதையில் நீரையும் இறைக்க முடியாது. யாழ்ப்பாணம் போல துலா போட வேண்டும் அல்லது கைகளால்தான் இறைக்கலாம். அந்தக்காலத்தில் நீர் இறைக்கும் யந்திரம் பிழக்கத்துக்கு வரவில்லை.

ஆனால் குஞ்சுப்பிள்ளை ஒர் ஏற்றம் போடுவதில் தன் கவனத்தை செலுத்தினான். அதற்காக கிணற்றிலிருந்து வெளியேற்றிய மண்ணில் ஒரு ஏற்றப்பிட்டி உருவாக்கினார்கள். இரண்டு பெரிய பார்  மரங்கள் நிலத்திலிருந்து ஒன்றரை அடி கிணற்றுக்குள் நீட்டியவாறு இரண்டு மூன்று அடி இடைவெளிவிட்டு போட்டு அது கிளம்பி விடாதிருக்க மேலே கூனிகளை இறுக்கி சீமெந்த குழைத்து நடுவே போட்டார்கள்.

அவ்வளவுதான் பார் மரத்திலிருந்து மேல் உழண்டி போடுவதற்காக நடப்படும் மரம் கிணற்றுக்குள் சாய்வுள்ளதாக பொருத்தினர். இது ஏழடி உயரமானது. அதில் ஒரு தோரணப்பலகை இரு தொளைகளை இட்டு மாட்டப்பட்டது. அதன்மீது மரத்தால் செய்யப்பட்ட ஒரு உழண்டி மாட்டினார்கள் அது கிணற்றுக்குள் வாளியையோ கூடையையோ இறக்கி ஏற்ற, தோதாக உள்வளைவாக மாட்டப்பட்டது. அதற்கு கிளிக்கால் என்று பெயர். இப்போது மேலே வடம் சால் எனப்படும் பெரிய நீர்த்தாங்கியை பிணைக்க கீழே தும்பி எனப்படும் வால்பகுதி மாட்டுத்தோலால் செய்யப்பட்டது. வால்க்கயிறு எனப்படும் சிறுகயிற்றில் இணைக்கப்படும் . இந்த தும்பி சாலின் அடிப்பகுதியுடன் சேர்த்து கட்டப்படும். கருத்தம்மா திரைப்படத்திலும், ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்திலும் இந்தமாதிரி ஏற்றத்தை நீங்கள் பார்க்கலாம். இந்த தொழில் நுட்பம் வவுனியாவில் சகல இடங்களிலும் இருந்தது. ஒரு முறை கிணற்றுக்குள்ளிருந்து இரண்டு மாடுகளால் இழுக்கக்கூடிய அளவாக சுமார் ஐம்பது அறுபது லீற்றர் நீர் வெளியே வரும். இந்தப் பொறி முறை இறைப்பில் அன்றாடம் கிணற்று நீர் கலக்கி இறைக்கப்படுவதால் கிணற்றில் பாசி குப்பைகள் சேராது. ஊற்றுக்கண் திறந்திருக்கும் சுத்தமான கிணறு முத்துப்போல தண்ணி.

வெகு விமரிசையாக வேலை நடந்தது. ராமசாமி மட்டும் வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் எதையோ பறி கொடுத்தவன்போல இருந்தான். அவனிடம் கேட்க முடியுமா? கந்தப்பு பாக்கியத்திடம் பேசும்போது இதைப்பற்றி பேசினான்.

“மாடு மாதிரி வேலை செய்யிறான்பாவி ஆனா முகத்தில ஏதோ பூடம்பிடிச்ச மாதிரித்தான் இருக்கிறான். ஒரு சிரிப்பு சந்தோசம் ஒண்டுங்கிடையாது.”

‘பாவமப்பா அவன். தெரியாத்தனமா மாட்டிக்கொண்டு கழட்டமாட்டாம கிடக்கிறான். சரியா மனிசியோடயும் கதைக்கிறேல்ல கவனிச்சநீங்களே.”

பாக்கியம் பெண்களுக்கேயுரிய ஆராயும் திறமையை கையாண்டு அவர்களது சோகக் கதையை கேட்டு வைத்திருந்தாள்.

00000000000000000000000000000000

திருச்சியில் ஒரு சின்னக் குக்கிராமம் அவர்களுடையது. ராமசாமி சுப்பம்மாவை திருமணம் செய்து நான்கு பிள்ளைகளைப் பெற்றிருந்தான் கடைசிக் குழந்தை கைக்குழந்தையாக இருந்தது. அவனுடைய தம்பி அருணாசலமும் அவர்களுடனிருந்தான். காலக் கொடுமை நான்கு வருசமாக வானம் பொய்த்து விட்டது. அவனிடமிருந்த கொஞ்ச நிலமும் வீடும் வட்டிக்கடனில் மூழ்கிவிட்டது.

“இன்னமே முடியாது செல்லம் பிள்ளைகுட்டிங்களக் கூட்டிக்கிட்டு நம்ப கெண்டிசீமைக்கு போயிரலாம். வயத்தைக் கழுவணுமில்ல” என்றான் ஒருநாள். சுப்பம்மா எதுவும் பேசவில்லை இந்த திட்டத்தை அவர்கள் வெளியிலும் யாரிடமும் சொல்ல முடியாது, ஊரிலும் கடன்காரர்கள் இருந்தார்கள். இவர்கள் ஊரைவிட்டு ஓடிவிட்டால் அவர்கள் கடனை யாரிடம் வாங்க மடியும். ஆனால் அருணாசலத்துக்கு இது தெரிந்த விட்டது. அவன் அண்ணனிடம் கெஞ்சினான்.

“அண்ணே ஊரெல்லாங் கடம்பட்டிட்டு என்ன உட்டிட்டு போயிராதண்ணே. நீங்க போயிட்டா  நாம் மாட்டிக்கிறுவண்ணே. நானும் வந்துர்ணேண்ண” என்று கண்ணீர் விட்டான்.

“வேற வகையில்லப்பா நீயுங் கௌம்பு பொயிரலாம் இங்க இருந்துதான் என்ன செய்ய முடியும். அங்கிட்டுப்போய் ஒழைச்சினாலும் கெடனைக்கெட்டிரலாம் தம்பி “ என்றான் ராமசாமி.

ஒருநாள் ஊரடங்கியதும் அந்தக்குடும்பம் ஊரைவிட்டுப்பிரிந்தது. அது நல்ல நேரமோ ராகுகாலமோ என்பதை அவர்கள் பார்க்கவுமில்லை. பதினைந்து நாட்கள் பசிபட்டினிகிடந்து கால்நடையாகவே நடந்து கடற்கரையை அடைந்தபோது அது ராமேஸ்வரமா என்பது கூட அவர்களுக்கு தெரியாது. கைக்குழந்தைக்கு கடுமையான ஜுரம் அடித்துக் கொண்டிருந்தது.

காடு விரியும்

தமிழ்க்கவி-இலங்கை

 

தமிழ்க்கவி

(Visited 110 times, 1 visits today)