வாக்குமூலம்-கவிதை-தேன்மொழி சதாசிவம்

வாக்குமூலம்

தேன்மொழி சதாசிவம்

படைத்தவன் சொன்ன
பத்துக் கட்டளைகளில்
எவையெவை மீறலாமெனப்
பட்டியலிடுகிறது மனது.
என் தேவைகளுக்கேற்ப
நான் மீறுவேன்.
உன் தேவைகளுக்கேற்ப
நீயும் மீறலாம்.
உன்னால் கெட்டது உலகமென
நான் கூறுவேன்.
என்னால்தான் என்று நீ
உரக்கச் சொல்.
ஒருவரையொருவர்
புறங்கூறி
மணணோடு மண்ணாய்
மக்கிச் சாகலாம்.
உறவினர்களே, நண்பர்களே !
நீங்கள் எனக்களித்த
குணவதி, அன்ன பூரணி,
மகாலட்சுமி, “பெய்யெனப் பெய்யும் மழை”
நற்சான்றுப் பத்திரங்களைத்
தயவுசெய்து திரும்பப்
பெற்றுக் கொள்ளுங்கள்.
“வருத்தப்பட்டு பாரம் சுமந்த”
என் முதுகுக் கூனல் வலிக்கிறது.
உங்கள் புராணங்களிலிருந்தும்
இதிகாசங்களிலிருந்தும்
எனைச் சற்றே
விடுதலை செய்யுங்கள்.
எனக்கு வேண்டியதை
நான் சமைத்துக் கொள்கிறேன்.
என்னோடு உணவருந்த
எனக்கெனப் பத்து பேர்.
கை தட்டுங்கள், இல்லை
கண்ணை மூடிக் கொள்ளுங்கள்.
கண்ணாடி வீட்டினுள்ளிருந்து
கல் எறியாதீர்கள்.
பசித்தால் வாருங்கள்
பகிர்ந்தளிப்பேன் நான்.

000000000000000000000000000000

உணர்வுப் பூர்வமான பந்தம்
உயிர் குடிக்குமென்றாய்.
தாமரை இலைத் தண்ணீரே
போதுமென்றாய்.
மன்னிக்க தோழி.
புல் பூண்டிலுமெனக்கு
பந்தமுண்டு.
என் வாசல் காக்கும் வேம்பு
மரித்துப் போன
என் பாட்டியல்லோ?
என் தோட்டத்துச் செம்பருத்தி,செவ்வரளி
பிரதி திங்கள்
குழவியாய் ஜனிக்காமல்
நான் நழுவ விட்ட
என் இரத்தப் பிரதிகள்.
என்னைப் பெற்ற
என் பள்ளி
நுழைவாயிலில்
கைகள் விரித்து நிற்கும்
ஏசுபிரான்
எனக்கள்ளித் தந்தது
விரித்த அவன் கரங்களைத்தானே?
அவன்
எனக்களித்த
அன்புச் சிலுவையை ஏந்தி
எத்தனை கல்வாரியும் ஏறுவேன்.
அவனணிந்திருந்த முட்கிரீடத்தை
வேண்டி விரும்பியே
பெற்றேன்.
சிறகுகள் தந்த கல்லூரியை
வாமனக் கைகள்
கொண்டல்லவா
இன்றும்
வாரியணைக்கிறேன்!
யூதாஸ் எனை
முத்தமிடட்டும்.
உலகம் எனைச் சிலுவையிலறையட்டும்.
புரூட்டஸ் என் நெஞ்சில்
கத்தி சொருகட்டும்.
இராமன் எனைத்
தீக்குளிக்கச் சொல்லட்டும்.
மாதவி வீடேகி
கோவலன் மனை திரும்பட்டும்.
சித்தார்த்தன் எனை
நள்ளிரவில் நீங்கட்டும்.
“இற்றைக்கும்
ஏழேழ் பிறவிக்கும்”
அன்பு செய்தழிந்து
மண்ணில்
கலக்கிறேன் நான்.

தேன்மொழி சதாசிவம்- இந்தியா

தேன்மொழி சதாசிவம்

(Visited 107 times, 1 visits today)
 

2 thoughts on “வாக்குமூலம்-கவிதை-தேன்மொழி சதாசிவம்”

Comments are closed.