காதலைக் காணவில்லை-கவிதை-தேன்மொழி சதாசிவம்

காதலைக் காணவில்லை

முயக்கத்தின்
முதலிலும் இல்லை
முடிவிலும் இல்லை
முத்தம்
தெள்ளத் தெளிவு
வயதாகி விட்டது

காதல் எனப்
பெயர்சூட்டிச் சுமந்திருந்த
கர்வச் சிறகுகள்
உதிர்ந்தன ஒவ்வொன்றாய்
இரவென்பது
காமத்திற்காகி விட்டது
முயக்கமும் உறக்கமும்
அலுவல்கள்

காமப் பூக்குழி
தீச்சட்டி ஏந்தி
திடுதிடுவென ஓட்டம்
ஏதோ பூக்குழி இறங்கிய திருப்தி
வாழ்வின் வாகனம் ஓடும்

குழந்தைகள் உயரமும்
உச்சி நரையும்
ஓடிவிட்ட வருடங்களும்
அவ்வளவுதானா வாழ்வு

தக்கை மனமே
உள்ளெரியும் அகலே
கிணற்றடி விசும்பலே
என்னதான் வேண்டும்
அவ்வளவுதான்
அவ்வளவேதான்
ஆறு.

கால்நீட்டிப் படுத்தவுடன்
தீயிட்டுக் கொளுத்தி
திரும்பாமல் சென்று
திசைக்கொன்றாய் பறப்பர்
அதற்குள்
உனக்கென்ன வேண்டும் சொல்
உன் வாழ்வை நீ வாழ்.

0000000000000000000000

உனக்கென்ன வேண்டும்?

உனக்கென்ன வேண்டும்
என்றாய்.
ஒரு வரியில் வேண்டுவது முடியுமா?
எனக்கு மட்டுமில்லை,
எல்லாப் பெண்களுக்குமான
கவி சொல்வேன் கேள்.

முதல் இறைஞ்சுதல்.
என்னுடனிருக்கும்
நிமிடங்களில்
உன் மிருகத்திற்கு
இரை தேடாதே.
உன் கடவுளுக்கும்,
குழந்தைக்கும்,
பைத்தியத்திற்கும்,
விருந்தளிக்கிறேன் நான்.

பேசு.
எதைப்பற்றியாவது பேசு.
பாப்லோ நெரூடா,
மனுஷ்ய புத்திரன்,
வால்ட் விட்மன்,
எது வேண்டுமானாலும் பேசேன்.
வளவளவென்று நிறுத்தாமல்
நானும் பேசுவேன்
உன்னோடு.

மருதாணிப் பூக்களின் மணம்
எனக்குப் பிடிக்கும். உனக்கு?
கொல்லையிலிருக்கும்
பன்னீர் மரத்தடியில்
பனியும் பன்னீர் பூக்களும் கொட்ட
சற்று நேரம் பேசலாமா?

செம்பருத்திப் பூக்களில்
இத்தனை வகைகளா?
கண் விரித்து
என்னிடம் கேள்.

துளசியைக் கிள்ளி
வாயிலிட்டு
என்ன மணம் என்று
என்னிடம் சொல்.

கிணற்றடியிலுள்ள
துவைக்கும் கல்
ஜில்லென்றிருப்பதாகச்
சிரித்துச் சொல்லேன்.

ரோஜாப் பூக்களைத்
தொடாமல் ரசிக்க நான் சொல்வேன்.
நானும் அப்படியே என்று
மகிழ்வோடு சொல்.

கொய்யாப்பழம்
தின்ன வரும்
வௌவால்களை
வையாதே.
அவை உண்டது போக
மீதியே நமக்கு.

முற்றத்தில் நிற்கும்
வேம்பின்
பிடரியை
கையால் தொட்டு
ஸ்பரிசித்துப் பார்.
அவளும் முரடு
எனைப் போல்.

என்ன பிடிக்குமென்று
நான் வினவினால்
எல்லாம் பிடிக்குமென்று
சிரித்துச் சொல்.

அள்ளிக் கொட்டாமல்
ஆற அமர உண்.
கூட்டு சுவையென்று சொல்.
அவியல் காரமென்று சொல்.
ஏதாவது சொல்லேன்.
என் முகம் பார்த்துச் சொல்லேன்.

நீயும் சாப்பிடேன் என்று
உபசாரம் செய்.
நான் உண்ணும்போது
என் அருகிரு.
உப்பெடுத்துக் கொடு.

கலகலவெனப் பேசு
நீரோடை போல்.
உள்ளிருக்கும் கூழாங்கற்கள்கூட
வெளித் தெரியட்டும்.
சத்தமாகச் சிரி
ஐந்தருவி போல்.
அடித்து இழுத்து
அத்தனையும்
வெளிக்கொணர்ந்து போடு.

பனிகொட்டும் இவ்விரவில்
நெடுஞ்சாலையில் நடந்து
தெருவோரக் கடையில்
இருவரும் தேநீர்
அருந்தலாம்.

நடுநிசிக்கு மேலாகி விட்டதென்றும்
உறங்க வேண்டுமென்றும்
நீ
எனக்கு நினைவூட்டு.
கண் பார்த்துப் புன்னகைத்துக்
கைகுலுக்கிக் கொண்டு
அவரவர் கூடு திரும்பலாம்.

எனக்கு வேண்டியது
என்னவென்று
புரிகிறதா
என் நண்பனே?

தேன்மொழி சதாசிவம்-இந்தியா

(Visited 369 times, 1 visits today)
 

One thought on “காதலைக் காணவில்லை-கவிதை-தேன்மொழி சதாசிவம்”

Comments are closed.