பொல்லாப்பு வேண்டாம் போடீ நீ தமிழ்க்கிழவி-கவிதை-வாசுதேவன்

பொல்லாப்பு வேண்டாம் போடீ நீ தமிழ்க்கிழவி

பொல்லாப்பு வேண்டாம் போடீ நீ தமிழ்க்கிழவி
செல்லாதே போயிற்றுன் செருக்குத் திமிர்
பயனின்றியென் கண்முன்னே நில்லாதே
சுட்டபழமுமில்லை சுடாதபழமுமில்லை
வெட்டியே வீழ்த்திவிட்டாருன் பழமரத்தை
வெட்டவெளியில் சேலையின்றி நிற்கின்றாய்

மூவாயிரம் நூல்கற்று
மூளைவலுத்தவனாம் உன் மூத்தமகன்
மொக்கனடி கிழவியவன் மொக்கன்
பாவாயிரம் அவன் பாடியுமென்ன
சாவாயிரமாயிரமாய் பார்த்திருந்த மடையன்

இசைகேட்டுருகியதால் குருடனுக்குக்
கொடுத்த நிலமாம் யாழ்ப்பாணம்
குருடனடி உன்னிளையமகன் யாழ்ப்பாணதத்தான்
அவன் குடும்பத்தில் கற்றவன்தான் கடையன்
மற்றவனை அழித்த மடையன்
புத்தியுள்ளோன் படையழிக்க
எதிரிக்குப் பகடை கொடுத்தோன்
படித்தறிந்த யாழ்ப்பாணத்தான்

சோறும் கறியும் அத்தோடு சிறிதே கள்ளும் கொடு
யார்முதுகும் சொறிவானடியுன் இளைய மகன்
மாலைப் பொழுதுகளில் சிறுவரைப்போல்
மகிழ்ந்து விளையாடக் கோவிலொன்றும் கொடு
போதுமடி அவனுக்கது

பல்லாயிரமாண்டுப் பொய்ப்பொறிக்குள் அகப்பட்டு
பல்பிரிவாய்ப் போனவுன் குடும்பம்
பலவீனப்பட்டதனை அறிவாய் நீயே
இன்னுமென்ன கேட்கின்றாய்
வருந்தியழுதாலும் இனியெதுவும் வாரா வாரா
பறையடித்துச் சொல்வேன்
இனியெதுவும் வாரா.

மூடனாய்ப் போனான் மூத்தோனென்றும்
குருடனாய்ப் போனான் இளையோனென்றும்
ஏனடி வந்து நின்றழுகின்றாய்
இனிதென்றாய் ஏகாந்தம் இனியெதற்கு நிற்கின்றாய்
போடீ நீ தமிழ்க்கிழவி பொல்லாப்பு வேண்டாம்
செல்லாதே போயிற்றுன் செருக்குத் திமிர்.

00000000000000000000000

இதோ பார்
இந்த வீதியில்தான் இறந்தான் என் தந்தை.
ஜேர்மனியப் படைகள் நிலைகொண்டிருந்தபோது
இந்தக் கட்டடத்தின் முகவாயிற் காப்பரணில்
நின்றிருந்த நாசி இராணுவத்தால்தான்
எம் எதிரிகளை அணுக முடியாதிருந்தது.

என் தந்தை மாமிசக் கத்தியை எடுத்தான்.
ஒரு நத்தையைப் போல் ஊர்ந்து சென்றான்.
மெதுவாக இருளில் நழுவி நழுவிச் சென்றான்
என் தந்தை.
இதயத்துடிப்பை நிறுத்தி எல்லோரும்
நடக்கப்போகும் ஏதோவொன்றிற்காகக் காத்திருந்தார்கள் .
யாருக்கும் என் தந்தை போன்று துணிவிருக்கவில்லை.

இருபத்து மூன்றாவது நிமிடத்தில்
நாசியின் துப்பாக்கியின் சத்தம் இந்தக் குறிச்சியை
அதிர வைத்தது.
அதே கணத்தில் என் தந்தையின் கத்தி
அவன் குரல்வளையில் பாய்ந்திறங்கியது.
இவ்வாறுதான் இவ்விடத்தில் தொடங்கியது
எம் நாசியழிப்புப் போராட்டம்.

இன்று,
நீங்கள்,
எல்லாவற்றையும் விட்டுக்கோழைகள் போல்
என் மூதாதையர்களின் குருதியில் நாம்
உருவாக்கிய தேசத்தில் ஓடிவந்த நீங்கள்…..

என்னை இனவாதியென்கிறீர்களா ?
என்னுடன் ஆயுதந் தரித்தவர்களை
“அடையான், கறுவல்” என்று அழைக்கிறீர்களா ?
கோழை அகதிகளே,
நீங்கள் இங்கு இரந்து வந்தவர்கள்.
அவர்கள் உரிமையுடன் வந்தவர்கள்.
புரிகிறதா ?

வாசுதேவன்-பிரான்ஸ்

(Visited 177 times, 1 visits today)