சுகன்யா ஞானசூரி-கவிதைகள்

நீலம் பாரித்த கடல்!

அழும் குழந்தைக்கு
கொஞ்சம் திரவம் வேண்டியிருக்கிறது.
மார்பு வற்றியவளின்
கண்கள் பனித்திருக்கிறது.
நீலம்பாரித்த கடல்மீது
அகதியின்
பாதங்கள் சிறுதுண்டு
நிலம் தேடுகிறது.
இயலாதவர்களின் கண்ணீராலே
கடல்
உப்புக்கரித்துக் கிடக்கிறது.

000000000000000

நினைவின் அடிக்கோடு!

பிரயாணத்தின் அவசரமொன்றில்
பொதுக்கழிப்பறை சென்றவன்
கரித்துண்டின் கீறலில்
கண்விழிக்கிறான்.
இருமலைக் குன்றுவழி
வழியும் சிற்றாறு.
பெரும் வனமொன்றிற்கு
நீர் பாய்ச்சும்
எண்ணற்ற குழாய்களென
சிறியதும் பெரியதுமாய்.
வேட்டைக் காட்டில்
வேட்கையின் துர்நாற்றம்
வெம்மை பரப்ப மேய்ந்த கண்
நிலைகுத்தி நின்றது
ஓரிடத்தில்.
எவனோ ஒருவன்
அகதி வாழ்வின் எச்சமாய்
பெருங் கடலையும்
சிறு படகையும்
கீறிச் சென்றிருக்கிறான்…
இரத்தப் பிசுக்கும் உப்புக் கரிப்புமாய்
நிலமற்று வெளித்தள்ளப்பட்ட
நாளின் கீழ்
அடிக்கோடிடுகிறது கரித்துண்டு.

00000000000000000000

யாழ் வெளியேற்றம்!

நரம்பறுந்த யாழென
நிலமறுந்த யாழ்ப்பாணத்தார்
செருக்ககன்று நின்றனர்
வன்னிப் பெருங்காட்டில்
அகதியாய்.

00000000000000000000000000000

நினைவிலாடும் ஊர்!

பூவரசு முள்முருங்கை கிளுவை
வேலிக் கதியால்களின்
சடைத்த நிழல் பரவும்
குச்சொழுங்கைகள்.

ஒவ்வொருவர்
வீட்டு வளவுக் கிணத்தடியில்
தென்னை மா பலா ஈரப்பலா நெல்லி மாதுளை
ஏதோவொன்று அல்லது அனைத்தும் சடைத்திருக்கும்.

தென்னங் கீற்றுவழி எழும்
சூரிய உதயம்
முற்றத்துச் செவ்வரத்தையிலும்
பின்வளவு பனங்கருக்கிலும்
பட்டுத் தெறிக்கும் பேரொளி.

மரங்களுக்கு மேலால் எழாத
வீடுகளே
அச்சுவேலியின் பேரழகு.

குளம் நிறைந்த வயல்
ஆளுயர நெல்
கிழங்கு காய் கீரையென
பசுமை மண்டியிருக்கும்
துலா இறைக்கும் தோட்டம்
உப்புக் காற்று வீசும்
வல்லைத் தரவை
பட்டங்கள் பறக்கவிட்ட கனாக்காலம்.

நேர்ச்சைச் சேவலை
காளிக்குப் படையலிடும்
சித்திரையில்
பலகாரங்களின் வாசம் ஊரெங்கும்
காற்றில் மணந்திருக்கும்.

சோளமும் கச்சானும் தின்றபடி
தூக்குக் காவடிகளோடு
செல்வச் சந்நிதியான் தரிசனம்
பரவசமுண்டாக்கும்.
கயவர்கள் எரித்த இரும்புத் தேர்
(உலகில் நான்காவது பெரிய தேர்)
மனதைக் கனதியாக்கும்.

நல்லூர்த் திருவிழா
இதுவரை பார்த்ததில்லை.
தியாக தீபத்தைக் காப்பாற்றாத
நல்லூரானை
தரிசிப்பதில்லையென அப்பா
சபதமெடுத்ததாக அம்மா சொன்னபோது
வீரம் என்பது அகிம்சையிலும்
உண்டென அறிந்தேன்.

போர் நிலத்தில் இரவுறக்கம்
கோவில்களிலும் பள்ளிக்கூடங்களிலும்
சாதி மதமற்று ஒன்றாய்
விழித்தெழுந்த நாட்களது.

அடைக்கலமான தேசத்தில்
நடைப்பிணங்களாய்த் திரிகின்றோம்
நினைவில் ஊரைச் சுமந்தபடி.

00000000000000000000

கீழடி!

அகழ்ந்து எடுக்கப்பட்ட
நிலத்தின் படிமக் காட்சிகளுக்குள்
விழித்த இனத்தின்
தொன்மங்களைக் காண
கும்பல் கும்பலாய்ச் செல்கிறீர்கள்.
உங்களில்
முன்னொரு நாளில் அலங்கரிக்கப்பட்ட
சிலையைக் காணச் சென்றவர்களும்
கட்டிவைத்து சித்திரவதைத்த
சாதியத்தின் கொடூரத்தை
கண்டிக்கத் தவறியவர்களும்
இருக்கிறீர்கள்.
இதுவரை அகழ்ந்தவற்றில்
சாதியும் மதமும் இல்லையென்பதில்
மனம் மகிழ்ந்திருக்கிறது.
இப்போதும் நீங்கள்
சொல்ல மறுக்கிறீர்கள்
கீழடி
ஆதித் தமிழினத்தின்
முன்னத்தி ஏரென.

0000000000000000000000000

போர் நிலத்தில் ஒருகணம் இறந்தே போயிருக்கலாம்!

ஒவ்வொரு பொழுதும் என்
நினைவுக் காட்டின் அசைவு
பேரச்சமாய் இருக்கிறது.
நீருக்குள் மூழ்குபவரைப்போல்
மூச்சுத் திணறுகிறது
அதிகாரத்தின் கடிதல்களில் துவள்பவனின்
அறையெங்கும் வெக்கை வியாபித்திருக்கிறது
ஏக்கத்தின் பெருமூச்சுகளில்
மொழியிலிருந்தும் இனத்திலிருந்தும்
வெளியேறிவிடும் நாளின் வாசலை
எதிர்பார்த்திருக்கிறேன் கூண்டுக்குள் அடைபட்ட
விலங்கின் விழித் தெறிப்பில்
உறக்கங்களைத் துலைத்துவிட்டு
தினந்தினம் இப்படி
இறப்பதைக் காட்டிலும்
போர் நிலத்தில் ஒருகணம்
இறந்தே போயிருக்கலாம்
புலம்பெயராது.

சுகன்யா ஞானசூரி
ஈழத்தில்-யாழ்ப்பாணம்
தமிழ்நாட்டில்-ஈழ அகதிகள் முகாம், தோப்புக்கொல்லை, புதுக்கோட்டை

(Visited 124 times, 1 visits today)
 
இரத்தத்தின் கதை

இரத்தத்தின் கதை-கூடுதல் பொறுப்பினைக் கோருகிறது-கட்டுரை-சுகன்யா ஞானசூரி

என் இரத்தத்தின் இரத்தங்களே எனும் பெண் சிங்கத்தின் கணீர் குரலில் எனக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு. அதனைக் கேட்கும் போதெல்லாம் மனதுக்குள் ஒரு சிலிர்ப்பு. மக்களால் நான் மக்களுக்காகவே நான் […]

 

One thought on “சுகன்யா ஞானசூரி-கவிதைகள்”

Comments are closed.