உழலும் நிஜங்கள்-கவிதை- நவஜோதி ஜோகரட்ணம்

உழலும் நிஜங்கள்

வலுவின்றிய உண்மையை
எண்ணி
வியர்க்கிறது உள்ளம்
உலர்ந்த பூமிக்குள்
முகங்கள் போலியாகி
வலிக்கின்றது மனது
முரண்படும்போது
அமைதி அற்று
உடைகின்ற வாழ்க்கையை
இழுத்திழுத்தே
உழல்கின்ற நிஜங்களுக்குள்
அமைதியென்னும் அறுவடைகாண
சகதிகளையும்
கடக்கின்றது எருமைகள்
உருப்படியான வரவைத்தேடி
என்ன உலகம் இது…
என்னென்ற கேள்விகளோடு…
மாந்தர்களாக…

0000000000000000000000

ரௌத்திரம்

அவள் கூந்தலிலிருந்து
முத்துக்கள் போல் வழியும்
தண்ணீர் விடுகிறது கண்ணீர்
தொட்டுப்பார்த்து பகிர முடியாத
அவளின் மன உணர்வுகள்
மலர் மொட்டுக்குள் கவிந்து குவிகிறது

திரை மறைவுக்குள்
திரண்டு ஒளிர்கிறது அழகு
அந்தப் பரவசத்தில்
அவள் மருண்டு இயங்குகையில்

ஏதோ சூட்சுமம்
அவளைப் புரட்டிப் போடுகிறது
அவளுள்
ரௌத்திரம் பெருகி
சிந்தனையோ அடர்ந்த காடாகிறது
அக்கினியால் அதைச்சுட்டெரிக்க -அவள்
அசைகின்ற வேளை

இளமைக்கால
அவள் அம்மாவின் புகைப்படம்
பேரழகியாய் கண்களை மயக்குகிறது
செல்வக் குமாரத்தியென
ஆசையாய் அழைத்த செல்லக்குரல்
காற்றாடியாய் ஆடுகிறது
விரிந்த உணர்வுகளோ
அருவியில் கலந்து
மௌனமாகிச் சிரிக்கிறது…

0000000000000

உனக்காக…

கள்ளிச் செடியின் அழகுகாட்டி
உன் மொழிகளில்
ஆழ்ந்த அறிவுகளில்
பூத்துக் குலுங்குகின்றேன்..

எனது துக்கங்களையும்
தூக்கங்களையும் கலைத்துவிட்டு
இரவில்லைப் பகலில்லை
உன்னோடு நான்
பேசிய நிமிடங்கள்…

புலனுகர்ச்சியில் ஈடுபட்டு
உண்ணுவதும் உறங்;குவதுமாய்
இந்த மின்னல் சமூகம்…
தெருக்களில் மிதிபட்டு
வடுக்களைச் சுமந்து
துடிதுடித்து அழுது
துயரப்பட்டு
வெடிக்கிற மனசில் – என்
மந்திரங்களுககெல்லாம் நீ சாய்ந்தபடி…

குள்ள நரிகள் கூட்டமாய் வந்து
கோலங்கள் காட்டுகையில்
நொந்த உள்ளத்தில்
நோகாக் குரலாக்கி
வேதனையை நீக்கிடுவாய்..

உலகப் புகழ்பெற்ற
பேனா மன்னர்கள்
மனதைத்; தாலாட்டுகையில்
அறியாத புத்துயிர்களை -என்
தந்தை வழி தாவி நின்று
தாரகையாய் பூத்திடுவாய்
மௌனமாகி உந்தும் உன்
வழிகாட்டலில்
தொலைந்த நான்
இரைதேடும் பறவையாய்
உன்னை
சுற்றிச் சுற்றி பயணிக்கிறேன்
வங்கக் கவிஞன் தாகூரோ
தமிழ் கவிஞன் பாரதியோபோல்
இல்லை நான் என்றாலும்
படைக்கின்றேன் கவிதை
உனக்காக ஒன்று

நவஜோதி ஜோகரட்ணம்-ஐக்கிய இராச்சியம்

5.9.2019

 

(Visited 108 times, 1 visits today)