மானிடத்தின் கடப்பு (Transhumanism)-கட்டுரை-வாசுதேவன்

னித வாழ்வுநிலை பற்றிய ஓரு ஐம்பதாயிரம் வருடங்களுக்கு முன்னான காட்சியைக் கண்ணிறுத்துவோம். பாறைக்குள்ளான குகையொன்று. மனிதர்கள் அங்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனக் கூட்டமாய் கூடிவாழ்கிறார்கள். குழந்தைகள் நிர்வாணமாக இருக்கிறார்கள். வயதுக்கு வந்தவர்கள் விலங்குத்தோல்களாலான அரைகுறை ஆடைகளை அணிந்திருக்கிறார்கள். வேட்டையாடிய விலங்கொன்று அண்ணளவாக வேகவைக்கப்படுகிறது. பிரத்தியேக சேர்ப்புகள் எதுவுமின்றி, பாத்திரங்களின்றி வெந்த இறைச்சியை அவர்கள் உண்கிறார்கள். நிலத்திலேயே உண்டுறங்கிக் காலத்தைக் கழிக்கிறார்கள். தம்முள் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்வதற்கு அவர்கள் சத்தங்களை எழுப்பிகிறார்கள். கொடிய விலங்குகளும், நோய்க்கிருமிகளும் அவர்களின் வாழ்க்கையைக் குறுக்கிக்கொண்டேயிருக்கிறது. சனத்தொகை வளர்ச்சி மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது.

இருபத்தோரம் நூற்றாண்டின் இந்த முற்பகுதியில், ஒரு குடும்பத்தின் மாலைப் பொழுதை அவதானிப்போம்.
மின்சார ஒளி பாய்ந்து பகல்போல் காட்சியளிக்கும் ஒரு நவீனவீடு. கதகதப்பான, நாகரீகமான ஆடைகள் அணிந்த இரு நடுத்தரவயதுப்பிள்ளைகள் வசதியான இருக்கைகளில் அமர்ந்து பெருந்திரையில் இன்னொரு கண்டத்தில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியொன்றை நேரலையில் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு ஆண் நவீன வசதிகளுடன் கூடிய சமையலறையில் நின்று பொத்தான்களை அழுத்திச் சமையல் வேலையில் ஈடுபட்டுள்ளார். சமையல் முறைக்கான குறிப்பை ஒரு பெண் இணையத்தில் தேடி எடுத்து அந்த ஆணின் கையில் கொடுத்து விட்டுத் தான் விரும்பி வாசிக்க எண்ணும் ஒரு புத்தகத்தை இணையத்தில் கொள்வனவு செய்து, தனது வங்கியிருப்பையும் அதே நேரத்தில் சரிபார்த்துக்கொள்கிறார்.

முகநூல், ருவிட்டர், கூகுள், அமாஷோன் என பல்வேறுபட்ட இணையங்களில் “நீந்துகிறார்”. ஒரேயொரு பொத்தானை அழுத்துவதன் மூலம் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு தனிப்பட்ட ஒரு செய்தியை அனுப்பி வைக்கிறார். தனது 96 வயதுத் தாயிற்கு ஒரு மலர்க்கொத்தை அனுப்புவதற்கான கட்டளையை இணையத்தில் வழங்குகிறார். இப்படியாக இப்படியாக …….

மனிதத்தின் இந்தப் பாய்ச்சலை என்னவென்று சொல்வது ? இது ஒரு சுருக்கமான பார்வைதான்.

மனிதர்கள் எழுந்து நடந்தார்கள். தீ மூட்டற்கற்றுக் கொணடார்கள். கொய்துண்டும், கொன்றுண்டும் அலைந்து வாழ்ந்த மனிதர்கள் ஓரிடத்தில் தரித்து வாழத்தொடங்கியது மானிட வரலாற்றின் மறுக்கமுடியாத மாபெரும் புரட்சியின் தொடக்கமாகவிருந்தது. மொழிகளைக் கட்டமைத்தார்கள். பல்வேறுதுறைகளில் அறிவைப் பெருக்கிக் கொண்டார்கள். வியாபாரங்கள் பெருகின. அவதானித்தார்கள் ஆய்வுகள் செய்தார்கள். இயற்கையின் வசப்பட்ட வாழ்க்கையைக் கொண்டவர்கள் இயற்கையையும் வசப்படுத்த ஆரம்பித்தார்கள். அரசுகளும் ஆட்சிகளும் உருவாகின. யுத்தங்கள் செய்தார்கள். யுத்தங்கள் புதியபுதிய கண்டுபிடிப்புகளுக்கான பாதைகளையும் திறந்துவிட்டன.

பின் மின்சாரம் வந்தது. மீண்டும் மனிதவரலாற்றில் ஒரு மாபெரும் புரட்சி. மின்சாரத்தின் வருகை மனிதர்களாலேயே கற்பனை செய்து பார்த்திருக்காத அறிவியற் பெருவெளிகளைத் திறந்துவிட்டது. கைத்தொழிற்புரட்சி உருவாகியது. மாபெரும் தொழிலாளர் வர்க்கத்தையும், முதலாளித்துவத்தையும் கூர்மையடைவைதத்தது. நவீன கட்டடக் கலை வாழ்க்கையை மேலும் மெருகூட்டியது. விமானங்கள் கண்டங்களுக்கிடையேயான இடைவெளிகளைச் சுருக்கிக்கொண்டே செல்கின்றன. அதிவேகப்பாதைகள் பூமியின் நரம்புகளாக படர்ந்து கிடக்கின்றன.

நுண்மின்னியலின் (electronic) பிரயோகங்கள் மனிதவாழ்க்கையின் எல்லாத் தளங்களிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. நுண்மின்னியலின் அதியுச்ச வெளிப்பாடாக கணணிகள் உருவாகின. கணணிகள் நானொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக, வருடாவருடம் தமது பலத்தை அதிகரித்தன.

கணணியும், இணையவலையமைப்பும் இவற்றினால் ஏற்பட்டிருக்கும் அறிவியற்பரம்பல்களும், ஆய்வுகளும் மேலும் மேலும் புத்தம் புதிய தேடல்களையும் கண்டுபிடிப்புகளையும் ஊக்குவித்தன.

மனித வாழ்க்கை அடிப்படைப்புரட்சி ஒன்றுக்குத் தயாராகிவிட்டது. மனித இருப்பு தன்னைத் தாண்டிச் செல்வதற்கான கால கட்டத்தில் வந்து நிற்கிறது.

அண்டவெளியையும், பிரபஞ்சத்தையும் இடைவிடாது ஆய்வுக்குட்படுத்தி பல மர்மங்களை துலக்கிக்கொண்ட மானிடம் தற்போது, தன்னையும் தன்னுடலையும் ஆழந்து பார்த்து உயிரியல் கையாளல்கள்மூலம் தன்னை புனரமைக்கவும், புதுப்பிக்கவும், பல்வேறுபட்ட வழிகளில் தன் பலத்தை பாரிய அளவில் அதிகரிக்கவும் தயாராகிவிட்டது.

வரவிருக்கும் முப்பது ஆண்டுகளுள் சராசரி மனித ஆயுளை 120 ஆண்டுகளாக அதிகரிக்கமுடியும் என விஞ்ஞானிகள் திட்டவட்டமாகக் கூறுகிறார்கள் ( முதற்கட்டத்தில்,இது முன்னேறிய நாடுகளின் மனிதர்களுக்குக் கிடைகும் வாய்ப்பாக இருக்கமுடியும் என்றுதான் கருதமுடியும்). இந்நூற்றாண்டின் இறுதியில் அது இரட்டிப்பாக்கப்படும் என்றும் எதிர்வு கூறுகிறார்கள்.

பலகோடிக்கணக்கான முதலீடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் பலகோணங்களிலான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகள் மனித ஆயுளை அதகரிக்கும் நோக்கில் மட்டுமல்லாது மரபணுக்களின் கையாழுகையையும் புதிய தொழில் நுட்ப உபயோகத்தையும் பயன்படுத்தி “புதிய மனிதர்களை” உருவாக்கும் நோக்கிலானவை.

விரும்பிய விதத்தில் (நிறம், ஊயரம், தோற்றம்…..) மனிதர்களை வடிவமைப்பது, விரும்பிய விதத்தில் அவர்களின் பலவேறு சக்திகளை (ஞாபக சக்தி, கணிப்பு, புலணுணர்திறன்….) அதிகரிப்பது உட்பட பல்வேறு விடயங்களைச் சாத்தியமாக்கும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்விலக்குகள் சில பத்துவருடங்களில் எய்தப்படுவதற்கான வாய்ப்புகள் நிறையவேயுள்ளன.

கலிபோர்ணியாவிலுள்ள சிலிக்கொண் பள்ளத்தாக்கில் 2008 ல் உருவாக்கப்பட்ட Singularity University எனும் தனியார் கற்கை நிறுவனம் நவீன தொழில் நுட்பங்களின் கற்பிக்கும் நோக்கிலும், புதிய ஆய்வுகளை முன்னெடுக்கும் நோக்கிலும் உருவாக்கப்பட்டது. எதிர்கால அறிவியல் மற்றும் விஞ்ஞான வளர்ச்சிப்போக்கை சாதாகமாகப் பயன்படுத்தும் நோக்கிலான சிந்தனை மையமாகவும் இக்கற்றை நிறுவனம் இயங்கிக்கொண்டிருக்கிது. இக்கற்றை நிறுவனத்திற்கு கூகிள் நிறுவனமும் முதலீடு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். நவீன தொழிநுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி நிறுவனங்களை உருவாக்குவதும் இக்கற்கை நிறுவனத்தின் இலக்குகளில் ஒன்றாகும். உலகின் பல்வேறுபட்ட நாடுகளிலிருந்து சிறந்த மாணவர்களையும், ஆய்வாளர்களையும் உள்வாங்கி ஒரு மாபெரும் சத்தியாக மாறிக்கொண்டிருக்கும் இந்நிறுவனம் உயிரியல் தொழில்நுட்பத்தின் முன்னோடி ஆய்வுகளில் பெரிய முதலீட்டைச் செய்துள்ளது. மனிதக் குறைபாடுகளைப் போக்குவது, செயற்கையான உடலுறுப்புகளை உருவாக்குவது, மரபணுக் கையாள்தல்களின் மூலம் மனிதனின் புலன்களை மேலும் வலுவுள்ளதாக்குவது போன்ற விடயங்களில் இக்கற்கை நிறுவனம் அதிக அளவு அக்கறை காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

கூகிள் நிறுவனம் பிரத்தியேகமாக உருவாக்கியிருக்கும் CALICO (California Life Company) ஆய்வுமையம் செயற்கை உடலுறுப்புகளை உருவாக்குவதையும், மரபணுக்களைக் கையாள்வதன் மூலம் நோய்களை, குறிப்பாகப் புற்றுநோயைத் தீர்ப்பதையும் மற்றும் வயோதிபத்திற்கெதிரான நடவடிக்கைகளுக்கான ஆய்வுகளை முன்னெடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பல்வேறு அமெரிக்க மற்றும் சீன நிறுவனங்கள் இவ்விடயத்தில் பாரிய முதலீடுகளைச் செய்து ஆய்வுகளை முன்னெடுத்துக் கணிசமான வெற்றிகளையும் ஈட்டியுள்ளன.

NBIC (Nano-Bio-Info-Cognitif) என்பது தற்போது விஞ்ஞானிகள் ஆய்வாளர்கள் மத்தியில் சாதாரணமாகப் பேசும் விடயமாகிவிட்டது. இயற்கை போட்டிருந்த பெரும் தடைகளை உடைத்தெறிந்து அறிவியல் அதிவேக முன்னேற்றத்தில் உயிரியல் ஆய்வுகளைத் மேலும் மேலும் துரிதப்படுத்திக்கொண்டிருக்கிறது.

இரசாயன, இலத்திரனியல் தயாரிப்பு முறைகளின் மூலம் மூலகங்களையும், இரசயான நுண்கட்டமைகளையும் கையாளும் அதிதிறன் வாய்ந்த அணுத்துகள்வெளித் தொழில்நுட்பம் (nanotechnology) இரண்டு அணுக்களுக்கிடையேயான இடைவெளியளவிலான மூலக்கூறுகளையும் கையாழும் ஒரு தொழில் நுட்பமாகும். இத்தொழில் நுட்பம் மேற்கூறிய இலக்குகளை எட்டுதலை இலகுவாக்கியுள்ளது.

அடுத்து, முன்னர் என்றுமில்லாத அளவிற்கு, கணணிகளின் செயற்திறன் அதிகரிக்கப்பட்டடுள்ளது. வருடாவருடம் அது மேன்மேலும் பன்மடங்காகிக்கொண்டிருக்கிறது. நுண்இலத்திரனியல் கருவிகள் அவற்றின் அளவுகளில் சிறுதாகிக்கொண்டு செல்லும் அதேவேளையில் சக்திமிக்கவையாகவும் மாறிக்கொண்டு செல்கின்றன. விளைவாக கணணியில் தேக்கிவைக்கக் கூடிய தரவுகளின் அளவும் எண்ணிக்கையும் அதிசயிக்கத் தக்க அளவில் முன்னேற்றங்கண்டுள்ளன. குரல், பனுவல் மற்றும் படங்கள் போன்றவை கோடானுகோடி எண்ணிக்கையில் கணணிகளில் தேக்கிவைக்கப்பட்டுள்ளன.

மகாதரவுத் தேக்கம் (Big-Data) எனப்படும் கூகிள் நிறுவனத்தின் தரவு மையத்தின் பரிமாணம் ஒரு அமானிடச் சாதனையாகும். இத்தரவுகளை மனிதத் தலையீடின்றி கையாழும் தொழில் நுட்பம் ஆழஆறிதல் (DeepLearning )என அழைக்கப்படுகிறது. அதாவது, மிகவும் நுட்பமான கணிதக் கட்டமைப்புடன் கூடிய செயல்நெறி (Algorythm) கொண்டு இயங்கும் கணணிகள் தரவுகளைத் தாமாகவே வகைப்படுத்தி, பகுத்துணரும் ஒருவிதச் செயற்கை அறிதிறன் (Artificial intelligence) இதுவாகும். மனித மூளை பல நாட்களில் செய்யக்கூடியதை அதிசக்த வாய்ந்த கணணிகள் ஒருசில வினாடிகளில் செய்யும் ஆற்றல் உருவாக்கியிருக்கும் சாத்தியககூறுகள் எண்ணிலடங்காதவை.

இவற்றின் நடைமுறை உதாரணமாக வரவிருக்கும் சுயஇயங்கி வாகனங்களைச் சொல்லலாம். இன்னும் ஏராளம், ஏராளம். மகாவல்லமை வாய்ந்த செயற்கை அறிதிறன், மாபெரும் சக்திவாய்ந்த கணணிகளின் தலையீடு, பிரமாண்டமான தரவுத்தேக்கம் என தொழில்நுட்பம் கைவசப்பட்டிருக்கும் இந்நிலையில்தான் மனிதம் தன்னைக் கடந்து இன்னொரு புதிய பரணாமத்திற்குள் நுழையவிருப்பது உணரப்படுகிறது, உரத்துக் கூறப்படுகிறது.

மரபணுக்கட்டமைப்புகளின் அறிவு என்றுமில்லாதவாறு இன்று முன்னேற்றங்கண்டுள்ளது. தீர்க்கவே முடியதென்று தீர்மானிக்கப்பட்ட பல நோய்களுக்கான மருத்துவதற்கும் வழிபிறந்திருக்கிறது.

மனித உயிர்க்கலங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நுண் தொழிற்சாலைகள் போன்றியங்குபவை. அத்தொழிற்சாலைகளின் நுண்மட்டத்திலான தொழிநுட்பத்தலையீட்டை ஆற்றும் வல்லமை அங்கு உருவாகக் கூடிய சிக்கல்களைச் சீர் செய்யவும், மரபணுக்கட்டமைப்புகளைக் கூட இலகுவாக மாற்றியமைக்கவும் வல்லமை கொள்வதற்கான புதிய பாதைகள் திறக்கப்பட்டுள்ளன.

உடலுக்கு வெளியிலான மாற்றங்களுக்கு ஏற்றவகையில், அவற்றிற்கு ஈடுகொடுத்து, தேவையேற்படின் அவற்றிலிருந்து தப்பி வாழும் வகையிலான மாற்றங்களை உடலின் உட்புறத்திலேயே ஏற்படுத்தக் கூடிய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திறன் வளர்ச்சிப் பாதையில் பாரிய பாய்ச்சல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
மனித மூளையின் இலத்திரன் சமிக்கைகளை நுண்ணுணரிகளால் வசப்படுத்தவும் அவற்றுடன் இடைத்தாக்கங்களை ஏற்படுத்தி தரவுகளை உள்ளிடவும் வெளியேற்றிச் சேமிக்கவுமான தொழில் நுட்பம் உருவாக்கப்படுவதற்கான காலம் இன்னும் அதிகம் இல்லையென நிபுணர்கள் கட்டியம் கூறுகிறார்கள். ஒரு மனித உயிரியின் ஞாபகங்களை, மனித மூளையின் தகவற் சேகரிப்புகளை பிரதிசெய்து அவற்றை வெளிப்புறத்தில் தேக்கிவைத்தல் என்பது சாத்தியமாகும் காலம் வெகுதொலைவில் இல்லையெனவும் துறைசார் நிபுணர்கள் முன்னறிவிக்கின்றனர்.

உடலுக்குள் நிரந்தரமாகப் பொருத்தும் வகையிலான நுண்துணிக்கை இயந்திரங்கள் (Nanomotors) நுண்துணிக்கைக் கணணிகள் (nanocomputors)நுண்துணிக்கைக புலனுணரிகள் (nanosensors) பரந்த அளவில் உருவாக்கம் கொள்ளும்போது மனிதன் தனது பலத்தைப் பலவகையிலும் அதிகரித்துக் கொள்ளமுடியும்.

இத்தனை முன்னேற்றமும், பெரும் பாய்ச்சல்களும் மனிதகுலத்தின் அழிவை நோக்கியே செல்கின்றன என்ற அச்சமும் எழாமலில்லை. ஆனால், பின்னோக்கிய பயணம் சாத்தியப்படக்கூடியதாகவும் இல்லை.

வாசுதேவன்

வாசுதேவன்
வாசுதேவன்
(Visited 52 times, 1 visits today)