கிழக்கின் எழுச்சி-கட்டுரை-அரசியன்

முப்பது வருடங்களுக்கு பின் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மீண்டும் ஒரு அரசியல் எழுச்சியை காணமுடிகிறது. முதல் எழுச்சியால் காலம் சென்ற அஷ்ரப் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அங்கீகரிக்கப்பட்டு முஸ்லீம்களுக்கு தனியான அரசியல் அடையாளம் ஒன்று கிடைக்கப்பெற்றது.

2000 ஆண்டில் ஹெலிகொப்டர் விபத்தொன்றில் அஷ்ரப் மரணமடைந்ததன் பின்  கட்சியின் தலைவராக திரு. ஹக்கீம் அவர்கள் கட்சியின் உயர்பீடத்தால் அறிமுகப்படுத்தப்பட்டார். கட்சியின் மீதிருந்த நேசத்தால் கிழக்குக்கு அன்நியமானவராயினும் ஹக்கீமை கிழக்கு முஸ்லீம்கள் மாற்றுவழியின்றி ஏற்றுக்கொண்டனர். என்றாலும் காலப்போக்கில் ஹக்கீமில் அதிருப்தியுற்ற வட, கிழக்கைசேர்ந்த செல்வாக்கு மிக்க உயர்பீட உறுப்பினர்கள் பலர் கட்சியிலிருந்து வெளியேறினர் அல்லது வெளியேற்றப்பட்டனர். அவ்வாறு வெளிச்சென்றவர்களில் வடக்கைச்சேர்ந்த ரிஷாத் பதியுதீனும் கிழக்கைச்சேர்ந்த அதாவுல்லாஹ்வும் தனிக்கட்சிகள் நிறுவி தமது பகுதிகளில் செல்வாக்கைப்பெற்று அமைச்சர்களாக  அதிகாரங்களையும் பெற்று தமது பிராந்தியங்களை அபிவிருத்தி செய்து மேலும் மக்கள் ஆதரவை பெருக்கிக்கொண்டிருந்த அதேவேளை ஹக்கீமின் தலைமையான முஸ்லிம் காங்கிரஸ் நாளுக்கு நாள் செல்வாக்கை இழக்கத்தொடங்கியது. என்றாலும் கிழக்கு மக்களின் ஒரு கணிசமான  பகுதியினரின் பார்வையில் முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தெய்வீக அமைப்பாக பார்க்கப்படுகிறது. ஆதலால் மு. காவை எதிர்ப்பவர்களை இஸ்லாத்தின் துரோகிகளாக முத்திரை குத்திவிடுகின்றனர்.

என்றாலும் அண்மைக்காலமாக ஹக்கீமின் நிலைப்பாடுகள், செயல்பாடுகள் மீது கிழக்கு முஸ்லிம்களின் அதிருப்தி உச்சத்தை எட்டிவிட்டது. கட்சியின் செயலாளரான கிழக்கைச்சேர்ந்த ஹஸன் அலியின் அதிகாரக்குறைப்பை கிழக்கு மக்கள் ஹக்கீமின் கிழக்குப்புறக்கணிப்பின் எல்லை மீறிய செயலாகக்கண்ட  கிழக்கைச் சேர்ந்த ஆரம்பகால மு. கா முக்கியஸ்தர்கள்  ஒன்றிணைந்து கிழக்கின் எழுச்சியொன்றை முன்னெடுத்து செல்கின்றனர். கிழக்கின் எழுச்சி தமது பிரதான இலக்காய்  ஹக்கீமின் தலைமையிலிருந்து  மு.காவை விடுவித்து கிழக்கைச்சேர்ந்த ஒரு தலைமையின்கீழ் மு.காவை  கொண்டுவருவதையும் கொண்டுள்ளனர். அதற்காக முஸ்லிம்  காங்கிரசின் ஸ்தாபக பொருலாளரான வபா பாறுக் அவர்களை முன்நிலைப்படுத்தியுள்ளனர். கிழக்கின் எழுச்சியின் இம்முன்னெடுப்பு வெற்றி பெறுமாயின் சிங்கள பேரினத்தீவிரவாதத்துக்கு எதிரான மு. காவின் புதிய தலைமையின்  அணுகுமுறையிலும் முஸ்லிம்களின் அடையாளப்படுத்தலிலும் பாரிய வரலாற்று மாற்றங்களை காண நேரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அரசியன் 

அரசியன்

 

(Visited 46 times, 1 visits today)
 

One thought on “கிழக்கின் எழுச்சி-கட்டுரை-அரசியன்”

Comments are closed.