எழுத்தாளர் “செங்கை ஆழியான்” அண்மையில் இயற்கை எய்தினார்-கட்டுரை-ஜேகே 

ரு எழுத்தாளரின் மரணத்தை எப்படி உள்வாங்குவது என்ற சங்கடம் வாசகர்களுக்கு எப்போதுமே இருக்கும். வாசகரைப்பொறுத்தவரையில் புத்தகங்களே ஒரு எழுத்தாளரின் அடையாளம். இரத்தமும் தசையும்கொண்ட எழுத்தாளரின் உருவம் வாசகருக்கு அவ்வளவு முக்கியமானதல்ல. தாதேவஸ்கி கறுப்பா சிவப்பா? தெரியாது. சங்க இலக்கியங்களின் ஏராளமான பாடல்களை எழுதியவர்கள் யார் என்றுகூட எமக்குத் தெரியாது. ஆனால் அவர்களோடு எமக்கு நெருங்கிய உறவு இருக்கிறது. ஒரு புத்தகத்தை வாசிக்கத்தொடங்குகையில் கூடவே எழுத்தாளரும் பிறக்கிறார். அந்தப்புத்தகம் வாசகரின் மனப்பதிவுகளில் நிலைத்திருக்கும்வரை எழுத்தாளரும் கூடவே வாழ்கிறார். சமயத்தில் ஒரு எழுத்தாளரின் பிறப்பு என்பது அவருடைய வாழ்நாளுக்குப்பின்னரேயே இடம்பெறுவதுண்டு. புதுமைப்பித்தனை எமக்கு எப்போது தெரியும்?  செல்லம்மாள் வாழும்வரை அவரும் வாழ்வார். இன்னமும் சொல்லப்போனால், செல்லம்மாளுக்குக்கூட இங்கே மரணம் நிகழுவதில்லை. பிரம்மநாயகம் பிள்ளையாக எத்தனை தடவை நாமே மாறியிருக்கிறோம்? எழுத்தும் வாசிப்பும் நிகழ்த்தும் அற்புதங்கள் இவை. ஆகவே ஒரு எழுத்தாளரின் உயிரியல் மரணத்தை எப்படி ஒரு வாசகர் எதிர்கொள்ளுவது? அழுவதா? அஞ்சலி செய்வதா? அரற்றுவதா? இல்லை மரணச்செய்தியைச் ஒரு சந்தர்ப்பமாகக் கருதி எழுத்தாளரை மீள்வாசிப்புச்செய்து கொண்டாடுவதா? பின்னையதே சிறந்ததாகப்படுகிறது.

“செங்கை ஆழியான் நம்மிடமிருக்கும் மிகச்சிறந்த கதை சொல்லி”

என்று பேராசிரியர் சிவத்தம்பி ஒரு கட்டுரையில் அவரைப்பற்றிக் குறிப்பிட்டிருப்பார். “செங்கை ஆழியானை முற்றிலும் தெரியாத ஒரு வாசகன், வாசிப்பதற்கு ஒரு நூல் இருக்கிறது, ஒரு கதை இருக்கிறது என்பதற்காக வாசிக்கின்ற ஒரு வாசகன், இலக்கியப் பிரக்ஞை இல்லாமலேயே வாசகனைக் கவருகின்ற ஒரு பொதுநிலை வாசக வட்டத்தைச் செங்கை ஆழியான் ஏற்படுத்தியுள்ளார்” என்று சிவத்தம்பி அதே கட்டுரையில் மேலும் குறிப்பிட்டிருப்பார்.

நாற்பதுக்குமதிகமான நாவல்கள். அதற்கிணையாக வரலாற்றுப் புத்தகங்கள். சிறுகதைத் தொகுப்புகள். ஆய்வுக் கட்டுரைகள். இப்படிச் செங்கை ஆழியான் கடந்த நாற்பது ஆண்டுகளாக எழுதிக்குவித்துவிட்டுப்போயிருக்கிறார். ஈழத்தின் எந்த வாசகரும் செங்கை ஆழியானைக் கடக்காமல் செல்லவே முடியாது என்னுமளவுக்கு அவருடைய புத்தகங்கள் ஈழத்து வாசிப்புலகத்தை ஆக்கிரமித்து நிற்கின்றன. அவர் குத்திவிட்டுச் சென்றுள்ள புள்ளிகள் பயணம் முழுதும் நிறைந்திருக்கின்றன. அவற்றில் நான்கு முக்கிய புள்ளிகளில் மாத்திரம் நின்றபடி அந்த யானையினைத் தடவிப்பார்ப்போம்.

முதன்மைப்புள்ளி அவருடைய நாவல்களில் இடம்பெறுகின்ற பல்வேறுபட்ட பகைப்புலங்கள்  பற்றிய பதிவுகள். அவரளவுக்கு ஈழத்துக்கேயுரிய வெவ்வேறு தனித்துவ பகைப்புலங்களை மையமாகவைத்து நெய்யப்பட்ட புனைவுகளை வேறு எவருமே தரவில்லை. அரசசேவை நிமித்தம் யாழ்ப்பாணம், வன்னி என்று பல்வேறு நிலங்களில் பணிபுரிந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் அவ்வகை நிலங்களின் வாழ்க்கையையும் இயல்புகளையும் ஒரு புனைவுக்குள் பதிவுசெய்கின்ற வித்தை தெரிந்த மனிதர் செங்கை அழியான். யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து சற்றே தூரத்திலிருக்கும் நெடுந்தீவு நிலத்தை வைத்து எழுதப்பட்ட நாவல் “வாடைக்காற்று”. அந்த நெய்தல் நிலத்தின் பல்வேறு விதமான மாந்தர்கள், அந்த மண்ணுக்கேயுரிய குதிரைகள், வட துருவத்திலிருந்து பருவகாலத்துக்கு இடம்பெயர்ந்து தங்கும் கூழைக்கடாப் பறவைகள், வாடைக்காற்றுக் காலத்தில் வேறு இடங்களிலிருந்து வந்து வாடிக்குடிசைகள் போட்டு மீன்பிடிக்கும் கூட்டத்தார், இவர்களோடு நெடுந்தீவு நெய்தல் நில மக்களுக்கிருக்கும் உறவுகள் என்று காட்சிப்படிமங்களோடு விரியும் சுவாரசிய புனைவினைக்கொண்டு வாடைக்காற்று நாவலைக் கட்டியமைத்திருப்பார் செங்கை ஆழியான். நாவலின் முன்னுரையில் இந்தக் கதையை பாரதிராஜா தன்னிடம் அனுமதி பெறாமலேயே “கல்லுக்குள் ஈரம்” திரைப்படத்தில் பயன்படுத்தியதாகவும், நாவலின் நெய்தல் நிலத்தை பாரதிராஜா மருதமாக மாற்றிவிட்டதாகவும் செங்கை ஆழியான் குறைபட்டிருப்பார். வாடைக்காற்று செங்கை ஆழியானின் “முத்திரை” நாவல்.

செங்கை ஆழியானுடைய சிறுகதைகள்கூட பகைப்புலங்களால் நிறைந்துநிற்கும். “தூக்குத்துலா” என்று ஒரு சிறுகதை. ஒரு துலாக்கிணறு அமைப்பதை மையமாக வைத்து எழுதப்பட்டது. கிணறு வெட்டுவதற்கான இடத்தினைக் கண்டறிவதுமுதல், அதனை வெட்டுவது, துலாவுக்கான பனையையும், ஆசாரியாரையும் தேர்ந்தெடுப்பது என்று சின்னச் சின்ன தகவல்களால் செங்கை ஆழியான் மூச்சுத்திணற வைப்பார். எப்படிக் கரிசல் நில வாழ்க்கையை கீ.ரா தன்னுடைய நாவல்கள்மூலம் பதிவு செய்தாரோ, அதுபோன்றே ஒரு தலைமுறை மாந்தரையும் வாழ்வினையும் செங்கை ஆழியான் பதிவு செய்துவிட்டுப்போயிருக்கிறார். “வாடைக்காற்று” ஆகட்டும்.  “காட்டாறு” ஆகட்டும். “வற்றாநதி” ஆகட்டும். “யானை”, “போரே நீ போ, போ”, “மீண்டும் வருவேன்”,  “கிடுகு வேலி” என்று ஏகப்பட்ட நாவல்களில் வெவ்வேறுவிதமான மண்ணையும் இன்றைக்கு நாம் தொலைத்துவிட்ட மாந்தர்களையும் பதிவு செய்துவிட்டுப்போனமையானது செங்கை ஆழியான் நமக்குச் செய்த “கீ.ரா” வகைச்சேவையாகும்.

இரண்டாவது கொண்டாட்டப்புள்ளி புள்ளி செங்கை ஆழியானுடைய வரலாற்று நவீனங்களாகும்.  வரலாற்று நவீனங்கள் என்றாலே அவை கல்கிக்கும் சாண்டில்யனுக்கும் ஏகபோக உரிமையாகவிருந்த காலப்பகுதியில் செங்கை ஆழியானின் வரலாற்று நவீனங்கள் அவர்களிடமிருந்து வேறுபட்டுத் தெரிந்தன. சேர, சோழ, பாண்டிய, பல்லவ காலங்களில் குதிரைகளிலும் பாய்க்கப்பல்களிலும் பயணம்செய்துகொண்டிருந்த வரலாற்று நவீனப்போக்கிலிருந்து விலகி செங்கை ஆழியானின் நாவல்கள் ஈழத்தில் நிகழ்த்தப்பட்டன. உண்மைச்சம்பவங்களை அடியொற்றி அதிகமான கற்பனைகள், விவரணங்கள் இல்லாமல் புனையப்பட்டன. நாட்டுச்சிறப்பு நாற்பது பக்கங்களுக்கு நீளாமல் நாளே வரிகளில் முடிந்தன. ஈழத்தின் வரலாறு, அதன் நில அமைப்பு, அதன் வாழ்க்கைமுறை இவற்றை மையப்படுத்தியே அவை எழுதப்பட்டன. அவருடைய “கடல் கோட்டை” நாவலில் போர்த்துக்கேயருக்கு எதிராகத் தளபதி திசைவீரசிங்கம் கலகம் செய்வான். போர்த்துக்கேயரை ஈழத்திலிருந்து துரத்துவதற்கு ஒல்லாந்தரின் உதவியை நாடுவான். ஆதிக்கச் சக்திகளாலும் கூடவே இருந்தவர்களாலும் முதுகில் குத்தப்படுவான். போர்த்துக்கேய கப்பித்தான்களும் வெள்ளையினப்பெண்களும் யாழ்ப்பாண முதலியார்களும் இராசதானிகளும் படகுத்துறைகளும் குடியானவர்களும் நாவலின் உள்ளடக்கமாயின. நானூறு வருடங்களுக்கு முன்னரான யாழ்ப்பாணத்து வாழ்க்கையும் பழக்கவழக்கங்களும் நாசூக்காக அந்தச் சுவாரசிய நாவலினூடாகச் சொல்லப்படும். “கடல் கோட்டை” என்பது தமிழில் வெளியான ஒரு கிளாசிக் வரலாற்று நவீனம். ஈழத்திற்கு முதன்முதலாகச் சிங்களவர்கள் கப்பலில் வந்திறங்கிய காலப்பகுதியில் வாழ்ந்த ஆதிக்குடிகளான இயக்கர் நாகர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எழுதப்பட்ட இன்னொரு கிளாசிக் “குவேனி”.  “ஈழ ராஜா எல்லாளன்” என்பது அடுத்தது. இப்படி வித்தியாசமான நிலங்களையும் பின்னணிகளையும் கொண்ட வரலாற்று நவீனங்கள் என்பது ஈழத் தமிழ் எழுத்துலகத்துக்கே புதிதானது.

செங்கை ஆழியானைக் கொண்டாடவேண்டிய மூன்றாவது புள்ளி அவருடைய வரலாற்றுப் பதிவுகள். புனைவு அல்லாத வரலாற்றுத்தகவல்களையும் புவியியல் விவரணங்களையும் சுவாரசியமாகச் சாதாரண வாசகர்களையும் கவரும் வண்ணம் தருவதில் செங்கை ஆழியான் ஒரு முன்னோடி என்றே குறிப்பிடலாம். பேராசிரியர் இந்திரபாலா, புஷ்பரத்தினம் போன்ற தொல்பொருள் வரலாற்றாசிரியர்கள் வெளியிட்ட ஆய்வுநூல்களை எளிமைப்படுத்தி ஈழத்தினுடைய புவியியலையும் வரலாற்றையும் செங்கை ஆழியான் சாதாரண மக்களிடம் கொண்டுசேர்த்தார். அவருடைய “ஈழத்தவர் வரலாறு” என்கின்ற நூல் ஈழத்தமிழருடைய பூர்வீகத்தை அறியவிரும்பும் எவரும் நிச்சயம் வாசிக்கவேண்டிய ஒன்று. சிங்களவருடைய வரலாற்றை இட்டுக்கட்டி எழுதப்பட்ட மகாவம்சம் குறிப்பிடுகின்ற பல தகவல்களை மறுதலித்துப் பல வரலாற்றுச் செய்திகளை ஆதாரப்பூர்வமாக எடுத்துச்சொல்லும் நூல் “ஈழத்தமிழர் வரலாறு”. மகாவம்சம் சொல்வதுபோல எல்லாளன் ஒரு சோழமன்னன் கிடையாது, அவன் பூநகரியைத் தலைநகராகக்கொண்ட ஈழத்து மன்னன் என்கின்ற தகவல் வாசிக்கும்போது நமக்குக் கிடைக்கிறது. பூநகரி இராச்சியம் பற்றிய முக்கிய குறிப்புகள், யாழ்ப்பாண வரலாறு என்று பல்வேறு தகவல்களால் அப்புத்தகம் நிரவியிருக்கும். தமிழர்களின் வரலாற்றின் பெருமை மாத்திரம் பேசாமல், அவர்கள் செய்த மலினமான விடயங்களையும் செங்கை ஆழியான் அம்பலப்படுத்துவார். ஈழத்து முஸ்லிம்களுக்கும் ஈழத்தமிழர்களுக்குமிடையேயிருக்கும் உறவுகளும் பிரிவினைகளும் இன்று நேற்று உருவானதல்ல. சில நூறு ஆண்டுகளுக்கு முன்னமேயே முஸ்லிம்களை விரட்டுவதற்காக அவர்களுடைய கிணற்றிலே பன்றித்தலைகளை தமிழர்கள் வெட்டிப்போட்டமை, நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தோடு முஸ்லிம்களுக்கு இருந்த உறவு என்று பல விடயங்கள் நாவலில் கிடைக்கின்றன. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கென முன்னேறிவந்த போர்த்துக்கீசப் படையினை கைலாசபதி பிள்ளையார் ஆலய முன்றிலில் வைத்து முஸ்லிம்கள் வழிமறித்துத் தாக்கியமை என்ற பலரும் அறியாத பல தகவல்களையும் செங்கையாழியான் பகிரங்கப்படுத்தியிருக்கிறார். “மகாவம்சம் தரும் இலங்கை வரலாறு”, “பூதத்தம்பி”, “யாழ்ப்பாண தேசம்” என்று இன்னும் ஏராளமான பொக்கிஷங்களை செங்கை ஆழியான் கொடுத்திருக்கிறார். நம் அண்மைக்கால வரலாறுகளையும் செங்கை ஆழியான் பதிவு செய்யத்தவறவில்லை. “சுருட்டுக் கொட்டில்” என்ற நூலில் யாழ்ப்பாணத்தின் சுருட்டுக் கைத்தொழிலை அக்குவேறு ஆணிவேறாக தகவல்களோடு ஆவணப்படுத்தியிருப்பார். “யாழ்ப்பாணம் எரிகிறது” என்கின்ற நூலில், யாழ் நூலக எரிப்போடு அண்டிய மூன்றுநாள்களில் இடம்பெற்ற சம்பவங்களை செங்கை ஆழியான் மிகத் தெளிவாக இடம், தேதி, நேரத்தோடு ஒரு பத்திரிகையாளருக்கேயுரிய துணிச்சலோடும் நேர்மையோடும் எழுதியிருப்பார். உயிர் அச்சுறுத்தல் காரணமாக அவன் அந்த நூலை நீலவண்ணன் என்ற பெயரிலேயே வெளியிட்டிருப்பார். “யாழ்ப்பாணம் எரிகிறது” என்பது தமிழில் எழுதப்பட்ட மிக முக்கியமான investigative journalism நூல்.

செங்கை ஆழியானை மிகுந்த நன்றியோடு காலகாலத்துக்கும் கொண்டாடவேண்டிய நான்காவது புள்ளி  அவர் ஈழத்து வாசிப்புலகுக்குச் செய்த அளப்பரிய சேவையாகும். இடர்மிகுந்த போர்க்காலத்தில் ஒரு தலைமுறையின் வாசிப்பை மிக உயிர்ப்பாக வைத்திருந்த பெருமை அவருக்குண்டு. தொண்ணூறுகளில் செங்கை ஆழியான் நாவல் ஒன்று வெளிவருகிறது என்றால் புத்தகக்கடைகளில் காத்திருந்து வாங்கிப்போகிறவர்கள் பலர் இருந்தனர். அவருடைய தொடர்கதைகளுக்காகவே வாரப்பத்திரிகைகளை வாங்கிவாசித்தவர்கள் ஏராளம். அவருடைய வாடைக்காற்று நாவல் வெற்றி விழாவின்போது அவரைத் தேரிலேற்றி வாசகர்கள் கொண்டாடினார்களாம். எழுத்தையும் எழுத்தாளர்களையும் கொண்டாடிய சமூகம் அது. இன்றைக்கு இயல்பான ஈழத்து வாழ்க்கையை எழுதுகின்ற ஒரு இளம் தலைமுறை உருவாகியிருக்கிறது என்றால் அதற்கான விதை காட்டாறிலும் கிடுகுவேலியிலும் இன்னும் ஏராளமான நூல்களிலும் எப்போதோ பயிரிடப்பட்டிருந்திருக்கிறது. அந்தப்பெருமை செங்கை ஆழியான், எஸ்.பொ, மருதூர்க்கொத்தன் போன்ற முன்னோடிகளுக்கே போய்ச்சேருகிறது.

செங்கை ஆழியானின் எழுத்துகள் ஜனரஞ்சகமானவை என்றொரு விமர்சனம் இருக்கிறது. அதற்கு அவர், வாசிக்கப்படாத எழுத்துகளால் பயனில்லை என்பார். அவருடைய நாவல்களில் அக எழுச்சிகள் இல்லை. அழகியல் மேலோட்டமாக இருக்கிறது என்று ஒரு விமர்சனமும் உண்டு. ஒரு குறிப்பிட்ட எழுத்தை அழகியல் இல்லை என்று விமர்சனம் செய்யலாம். ஆனால் ஒரு எழுத்தாளரிடம் அழகியல் இல்லை என்று சொல்வதற்கு குறைந்தது அவருடைய தொண்ணூறுவீதமான புத்தகங்களையேனும் வாசித்திருக்கவேண்டும். செங்கை ஆழியான் ஜனரஞ்சகமான எழுத்தாளராக இருக்கலாம். ஆனால் அவருடைய எழுத்துகளில் அழகியல் இல்லை என்பது மிகவும் மேம்போக்கான முன்முடிபுகளுடன் கூடிய ஒரு விமர்சனம்.  மிக நாசூக்காக, இயல்பாக, எளிமையாகப் படிமங்களையும் அழகியல்களையும் பதிவுசெய்வதில் செங்கை ஆழியான் வல்லவர். வட துருவத்தின் குளிர் பருவத்தின்போது கூழைக்கடாப் பறவைகள் யாழ்ப்பாணத்தை அண்மித்திருக்கும் நெடுந்தீவுக்கு இடம்பெயர்வதுண்டு. பருவகாலம் மாறும்போது அவை திரும்பப் பறந்துவிடும். இதுகாலங்காலமாக பருவங்கள் மாறுகையில் இடம்பெறும் ஒரு இயற்கை நிகழ்வு. கூழைக்கடாக்கள் இல்லாமல் நெடுந்தீவு மண் முழுமையுறாது. ஆனாலும் அந்தக் கூழைக்கடாக்களை நெடுந்தீவு பனைவடலிகளில் பார்த்தால் ஏதோ சுற்றுலாவுக்கு வந்த வெள்ளைக்காரர்கள் பனை மரத்தில் ஏறி நிற்பதுபோலத் தோன்றும். என்னதான் நெடுந்தீவு மண்ணோடு உறவாக இருந்தாலும் கூழைக்கடாக்களுக்கு பனை வடலிகள் சொந்தமில்லை. இன்றைக்கு வாடைக்காற்று எழுதி நாற்பது வருடங்கள் ஆகின்றன. தமிழர்கள் கூழைக்கடாக்களைப்போல புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளார்கள். அந்தந்த நாடுகளோடு ஒன்றிப்போய்விட்டார்கள். ஆனாலும் பனைவடலியில் கூழைக்கடாபோலவே தமிழர்களும் புலம்பெயர் நாடுகளில் ஒருவித ஒட்டாத தோற்றத்தோடு வாழ்கிறார்கள். அவர்கள் விடுமுறைக்கு புகலிடம் திரும்பும்போது அங்கேயும் அவர்களை கூழைக்கடாக்கள்போலவே பார்க்கிறார்கள். புலம்பெயர் தமிழர்கள் என்ற கூழைக்கடாக்களுக்கு ஈற்றில் வடதுருவமும் சொந்தமில்லை. தென்துருவமும் சொந்தமில்லை. இன்றைக்கு வாடைக்காற்றை மீள் வாசிப்புச் செய்கையிலே இதுவெல்லாமே வந்துபோகிறது. இது காலத்தால் அழியாத அகவெழுச்சி இல்லையா? காதலியின் கன்னத்துச் சிவப்பு சுட்ட வெட்டிரும்பின் சிவப்பு நிறத்தை ஒத்ததாக இருந்தது என்பார். இரும்பு சூடாக இருக்கையில் சிவந்து அழகாக இருக்கும். தொட்டால் சுடும். நீருக்குள் வைத்தால் அந்த அழகு மறைந்துவிடும். அற்புதமான அழகியல் விரிகிறதல்லவா? ஒரு புளியமரத்தைச் சுற்றி நிகழும் சிறுகதை. காய்க்காத கூகைப்பலாவை படிமமாக்கி எழுதப்பட்ட கணவன், மனைவி, கள்ள உறவு என்று போகும் ஒரு கதை என்று செங்கை ஆழியான் இலக்கியத்தில் செய்யாத நுட்பங்கள் இல்லை. வெறுமனே இரண்டு நாவல்களை வாசித்துவிட்டு தெருவில் சும்மா கல் கிடக்கிறதே என்று தூக்கி வீசுபவர்களை என்ன சொல்வது? நாம் வாசிப்பினூடு ஒரு எழுத்தாளரைக் கடந்துபோனபின்னர் அந்த எழுத்தாளரை எள்ளி நகையாடுவதன் மூலமும், ‘இலக்கியவாதியே இல்லை’ என்று நிறுவ முயல்வதன் மூலமும் சாதிக்கமுனைவதுதான் என்ன?

செங்கை ஆழியானின் பலவீனம் என்று நான் கருதுவது அவர் சமூக நாவல்களில் பயன்படுத்துகின்ற கதைமூலம். அநேகமான சமூக நாவல்களில் அவருடைய கதைமூலம் ஒரே பாத்திரங்களையே சுற்றிவரும். ஒரு வயோதிபர், ஒரு காதல் ஜோடி, ஒரு இடதுசாரிச் சிந்தனையுள்ள இளையவர் அல்லது போராளி. ஒரு சண்டியர். இப்படி நாவலுக்கு நாவல் பரிச்சயமான பாத்திரங்கள் வெவ்வேறு பெயர்களில் செங்கை ஆழியானிடம் வந்துபோவதுண்டு. வரலாற்று நவீனங்கள்கூட இதில் தப்பியதில்லை. அதிலும் அந்த வயோதிபர் பாத்திரமாக செங்கை ஆழியானே தன் கருத்தைச் சொல்ல வருவதும் வாசிக்கும்போது தெரியும். பட்டறிவுத்தன்மை (Reflectivity) என்று சிவத்தம்பி குறிப்பிடும் விடயமும் இதுவே. சமயத்தில் புனைவின் அற்புதக்கணங்களைத் தொடாமலேயே கதையை முடித்துவிடுவதும் அவருடைய பலவீனம் என்றுங் கொள்ளலாம். செங்கை ஆழியான் தன்னுடைய மிகச்சிறந்த நாவலை எழுதாமலேயே இறந்துபோய்விட்டாரோ என்று சமயத்தில் எண்ணத்தோன்றும்.
எந்த எழுத்தாளரும் ஒரு நல்ல வாசகருக்கு இறுதி எழுத்தாளர் ஆகமுடியாது. எல்லோருமே வாசிப்புப்பயணங்களின் படிநிலை எழுத்தாளர்களே. வாசகர்களை அடுத்த நிலைக்கு உயர்த்தி விடுபவர்களே சிறந்த எழுத்தாளர்கள். அது பாலகுமாரனாக இருந்தாலென்ன, சுஜாதாவாக இருந்தாலென்ன, நாஞ்சில் நாடனாக‌இருந்தாலென்ன. ஜெயமோகனாக இருந்தாலென்ன. எல்லோருடைய எழுத்துகளும் வாசகரை அடுத்த நிலைக்கு உயர்த்திவிடவேண்டும். அல்லாமல் ஒரு குறிப்பிட்ட எழுத்தாளருடனேயே வாசகர் தேங்கிவிட்டால் அது எழுத்தாளர், வாசகர் என்ற இருவரினதும் குறைபாடாகத்தான் பார்க்கப்படவேண்டும். செங்கை ஆழியானின் சிறப்பு அவர் தன்னுடைய வாசகர்களை அடுத்த நிலைக்கு உயர்த்திவிட்டபடியே இருந்தார். இனிமேலும் அதனைத் தொடர்ந்தும் செய்வார். இந்த ஏணி என்றென்றைக்கும் சரியப்போவதில்லை.

செங்கை ஆழியான் நீடூழி வாழட்டும்.

ஜேகே 

(Visited 187 times, 1 visits today)
 
ஜெ கே

வெற்று முரசு- The Empty Drum-கட்டுரை-ஜெ கே

அதிகாரம் என்ற சொல் ஆலமரங்களில் ஒட்டுண்ணியாகப் படரும் குருவிச்சைத் தாவரம் போன்றது. அது தான் அடையாகும் மொழியையே தனது விருந்து வழங்கியாக்கி முழுங்கிவிடவல்லது. மொழியின் எந்தச்சொல்லோடும் பொருந்திவர வல்லது. அதிகாரம் […]