ஈழத்துச் சிறுவர் இலக்கியம் ஒரு நோக்கு திறனாய்வு-தேவகி விக்கினதாசன் 

ஈழத்தில் சிறுவர் இலக்கியத்துறையில் வளர்ச்சி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது என்பது எனது கருத்தாகும். ஈழத்தில் இலக்கியத்துறைகள் சார்ந்த வெளியீடுகள் மிகக் கடினமான செயலாகும். எனினும் ஆரோக்கியமற்ற இந்நிலைமைப் பற்றி விமர்சர்களோஇ பெற்றோர்களோஇ இலக்கிய ஆர்வலர்களோ எவரும் அதிகம் பேசிக்கொள்வதில்லை. இத்தகைய நிலைமையை இரண்டு வருடங்களுக்கு முன் யாழ்ப்பாணத்திற்கு நான் விடுமுறையில் சென்றிருந்த போது உணர்ந்து கொண்டேன். சிறுவர் இலக்கியத்தில் அடங்குபவை கதையும் பாட்டும் ஆகும். ஆனால் நான் இங்கு எடுத்துக் கொள்ளவிருப்பது சிறுவர் பாடல்கள் மட்டுமே ஆகும். சிறுவர் பாடல்கள் தொடர்பாக தமிழ் மக்களிடையே வாய்மொழி நிலையில் நிலவும் சிறுவர் பாடல்களை சரிவரப் பேணி பாதுகாக்கும் முறைமை அல்லது பண்பு நம்மிடையே இல்லை ஆகும். எனவே சிறுவர் இலக்கியத்துறையில் நாம் எங்கே நிற்கின்றோம் என்பதே என் நோக்காகும்.

சிறுவர்களின் அறிவு வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுவன கதையும்இ பாட்டும் ஆகும். தமிழில் சிறுவர் பாடல் வளர்ச்சியை நோக்கும் போது குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தை மையமாகக் கொண்டே சிறுவர் பாடல்கள் பல வெளிவந்துள்ளமையினை அறிய முடிகின்றது. பத்தொண்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் வரவோடு ஏற்பட்ட நவீனகரமான மாற்றங்களில் எல்லாம் யாழ்ப்பாணம் முன்னிலை வகித்தது போன்றே தமிழ் சிறுவர் பாடல்கள் வளர்ச்சியிலும் யாழ்ப்பாணம் அதிக பங்களிப்பினைச் செய்துள்ளது. இதனால் ஈழத்தின் சிறுவர் பாடல் வளர்ச்சி என்பது பெரும்பாலும் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டே ஆய்வாகவே அமைந்து வருகின்றது என்பது ஆராய்சியாளர்களின் கருத்தாகும். தமிழில் வெளிவந்த முதலாவது சிறுவர் பாடல் நூலாக இருப்பது யாழ்ப்பாணம் தம்பிமுத்துப்பிள்ளை என்பவர் 1886 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட “பாலியக் கும்மி” எனும் நூலாகும்.

பாலியக்கும்மிக்கு முப்பத்திரண்டு ஆண்டுகளின் பின்னர் 1918 இல் ச. வைத்தியநாதரால் “தமிழ்ப்பாலபோதினி” என்ற குழந்தைக் கவிதை நூல் வெளிவந்துள்ளது. இதில் “சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு”, “கைவீசம்மா கைவீசு” “என் தாயே” பேன்ற சிறந்த பாடல்களும் அடங்கியிருந்தன. இதனைத் தொடர்ந்து 1935 ஆம் ஆண்டில் வடபெரும்பாக வித்தியாதரிசியாக இருந்த அருணந்தி அவர்களது கேள்விப்படி வட இலங்கை தமிழாசிரியர் சங்கத்தால் “பிள்ளைப்பாட்டு” எனும் குழந்தைப்பாடல் தொகுதி யொன்று வெளியிடப்பட்டது.

அன்று யாழ்ப்பாணம் தம்பிமுத்துப்பிள்ளை (1886) தொடக்கம் இன்று மணடுர் தேசிகன் (2002) வரை ஈழத்தில் சிறுவர் பாடல்கள் இயற்றியோர் பலருளர். எண்ணிக்கையில் மட்டுமின்றி ஏனைய வகை சிறுவர் இலக்கிய முயற்சிகளுடன் ஒப்பிடும் போதும் தரத்தில் சிறுவர் பாடல் துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எய்தியள்ளது. எனினும் இத்தகைய வளர்ச்சி மேலைத்தேய நாடுகளுடன் ஒப்பிடும் போது எவ்வளவு திருப்தி தருகின்றது என்றொரு கேள்வி எழுகின்றது?

பேராசிரியர் க. கைலாசபதி குழந்தை இலக்கியம் பற்றிக் குறிப்பிடும் கருத்தை நோக்கினால் ஈழத்துக் குழந்தைப் பாடல்களுக்கும் பொருந்துவதாக உள்ளது. அவர் கூற்றின் ஒரு பகுதி பின்வருமாறு:

“குழந்தைகளின் வயது, மூளை வளர்ச்சி மொழித்திறன் ஆற்றல ஏற்புடைமை இவற்றையெல்லாம் கவனத்திற் கொண்டு சீரிய பாடல்களை எழுதியோர் பொதுவில் குறைவு. சிறுவர் கவிதைகள் பற்றிச் சொல்லிய குறைபாடுகள் சிறப்பாகக் குழந்தை இலக்கியத்திற்குப் பொருந்துமாயினும் கூர்ந்து கவனிக்கும் பொழுது இவை தமிழ் இலக்கியத்தில் நிலைகொண்டுள்ள குறைபாடுகளே என்பது புலனாகாமற் போகாது. அறிவியல் பண்பாட்டுச் சுமைகளைத் தாங்கும் வாகனமாகவே இலக்கியம் இன்னும் பரவலாகக் காணப்படுகின்றது என்பதற்கு இது மறைமுகமான சான்று ஆகும்.”

தமிழரின் ஆரம்பகாலக் குழந்தை இலக்கியங்கள் என்று கூறப்படும் ஆத்திசூடி கென்றை வேந்தன் முதலியன அற நீதிக் கருத்துக்களைப் போதிப்பவையாகவே காணப்படுகின்றன. ஆத்திசூடி அகரவரிசையை அறிவததோடு அறக்கருத்துக்களை அறிய வேண்டும் என்பதும் ஆத்திசூடியின் பிரதான நோக்கமாகும். எனினும் ஈழத்துக் சிறுவர் பாடல் மரபக்கு வளமும் வனப்பும் சேர்த்த நவாலியூர் சோமசுந்தரப்புலவரை தலைசிறந்த குழந்தைக் கவிஞராக போற்றும் மரபு நம்மிடையே உண்டு. அவரது பாடல்களில் ஒன்றான “ஆடிப்பிறப்பு” எனும் பாடலை சிறுவயதில் பாடிப்பாடிப் பரவசமடைந்திருக்கின்றேன்.

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே

என்ற பாடலைப் பாடாத குழந்தைகளோ, கேள்விப்படாத பெரியவர்களோ ஈழநாட்டில் இல்லை என்பதும் எமக்குத் தெரியும். ஆனால் நான் புலம் பெயர் நாடுகளில் அவதானித்ததை இங்கு பகிர்ந்து கொள்ள எண்ணுகின்றேன். இத்தகைய பாடல்களை புலம்பெயர் மாணவர்களுக்கு பயிற்ற எண்ணுகின்றோம். ஆடிப்பிறப்பு என்றால் என்ன? அதற்கு விடுதலை விடுவார்களா? கூடிப் பனங்கட்டி கூழ் என்றால் என்ன? இவ்வாறு தாம் அனுபவப்படாத அறியாத விஷயங்கள் பற்றி சிறுவர் கேட்கலாம். ஆனால் விடை கூறி விளக்குவது கடினம். இவற்றில் எத்தனை தூரம் வெற்றி பெற முயலும் என்பதனை நாம் சிந்திக்க வேண்டும். பயன் அடைவோமா? புலம் பெயர் சிறுவர் சமூகத்தில் ஈழத்துச் சிறுவர் இலக்கியம் சென்றடைய மாற்று வழி உண்டா? அல்லது இத்தகைய பாடல்களால் புலம்பெயர் சிறுவர்களை மகிழ்விக்கமுடியுமா? மாற்று வழிகள் ஆராயப்பட வேண்டும் என்பது எனது கருத்தாகும்.

“கத்தரித் தோட்டத்து வெருளி” “பவளக்கொடி” எனும் சிறந்த சிறுவர் பாடல்களையும் நவாலியூர் சோமசுந்தரப்புலவர் எழுதிய பாடல்களே ஆகும். ஈழத்துக் குழந்தைப் பாடல் வரலாற்றிலே சோமசுந்தரப்புலவருக்கு அடுத்த தலைமுறையினராக யாழ்ப்பாணன் கவிஞர் செல்லையா வேந்தனார் இதம் கனக. செந்திநாதன் முதலியோர் குறிப்பிடப்பட வேண்டியவர்கள்.

யாழ்ப்பாணனின்,

ஆட்டுக் குட்டி எந்தன் குட்டி
அருமையான சின்னக் குட்டி
ஓட்ட மோடி வந்திடுவாய்
உனக்கு முத்தந் தந்திடுவேன்.

என்ற பாடலும்,

தம்பி நாங்கள் கோயில் கட்டிச்
சாமி ஒன்றை உள்ளே வைத்து
கும்பிட் டிங்கு பூசை செய்வோம்
கூடி ஆடிப் பாடிக் கொள்வோம்.

எனத் தொடங்கும் அபிநயப்பாடலும், கவிஞர் செல்லையாவின்,

அம்மா வெளியே வா அம்மா
அழகாய் மேலே பாரம்மா
சும்மா இருந்த சந்திரனைத்
துண்டாய் வெட்டின தாரம்மா!

என்ற பாடலும் இன்று வரை நின்று நிலைப்பானவாகக் காணப்படுகின்றன. எனினும் ஈழத்துக் குழந்தைக் கவிதை முன்னோடிகளுள் தமக்கெனத் தனியான இடத்தைப் பெற்றவர் வித்துவான் க. வேந்தனார். ஏனையோரின் பாடல்களுக்கு இல்லாத சில சிறப்புக்களை இவரது பாடல்களில் காணலாம். மிக மிக எளிமையான சொற்களை அழகான சந்தங்கள் அபிநயத்துடன் குழந்தைகள் பாடத்துண்டும் சக்தி கொண்டவை இவரது பாடல்கள். வித்தவான் க. வேந்தனாரின் பாடல்களில் இரண்டினை உதாரணமாக எடுக்க விரும்புகின்றேன். நம்மில் பலர் இப் பாடலை சிறு வயதில் இருந்தே அறிந்திருந்தாலும் அப்பாடலை மீண்டும் நினைவு படுத்த விரும்புகின்றேன். பெற்ற தாயின் அன்பைப் பெரிதும் மகிழ்ந்து பிள்ளை பாடுவதாக அமைந்த பாடல் இதுவாகும்:

காலைத் தூக்கிக் கண்ணில் ஒற்றக் 

கட்டிக் கொள்ளும் அம்மா

பாலைக் காய்ச்சி சீனி போட்டுப்
பருகத் தந்த அம்மா.

புழுதி துடைத்து நீரும் ஆட்டிப்
பூவஞ் சூட்டும் அம்மா
அழுது விழுந்த போதும் என்னை
அணைத்து தாங்கும்.

அள்ளிப் பொருளைக் கொட்டிச் சிந்தி
அழிவு செய்த போதும்
பிள்ளைக் குணத்தால் செய்தானென்று
பொறுத்துக் கொள்ளும் அம்மா.

பள்ளிக் கூடம் விட்ட நேரம்
பாதி வழிக்கு வந்து
துள்ளிக் குதிக்கும் என்னைத் துக்கித்
தோளில் போடும் அம்மா.

பாப்பா மலரப் பாட்டை நானும்
பாடி ஆடும் போது
வாப்பா இங்கே வாடா என்று
வாரிக் கொஞ்சும் அம்மா.

இரண்டாவது உதாரணமாக நான் நினைவு கூற விரும்பும் பாடல் வீட்டில் வளரும் பூனையைப் பற்றிய பாடல் ஆகும்.

சின்னச் சின்னப் பூனை
சிறந்த நல்ல பூனை
என்னைப் பார்த்துத் துள்ளும்
எங்கள் வீட்டுப் பூனை

வட்டமான கண்கள்
வண்ண மான செவிகள்
கட்டை யான கால்கள்
காட்டும் நல்ல பூனை

உண்ணும் சோறும் பாலும்
ஊட்டி வளர்த்த பூனை
கண்ணைப் போன்ற பூனை
கட்டிக் கரும்புப் பூனை.

இப்பாடல்கள் மூலம் பள்ளிப் பருவத்தின் பசுமையான நினைவுகளை நினைவு படுத்தியுள்ளேன் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் இவ்வகையான சிறுவர் பாடல்கள் மனதில் இலகுவாக ஆழப்பதிந்து விடுகின்றன என்பது உண்மையாகும். இவ்வகையான பாடல்கள் குழந்தைகளின் மனப்பக்குவத்திற்கு ஏற்றபடி பாடத்தக்கதாக அமைக்கப்பட்டிருப்பதால் குழந்தைகள் அபிநயம் செய்து ஆடக்கூடியதாகவும்இ அழகான மனங்கவரவைக்கும் காட்சிக் கோலங்களைக்; கொண்டிருப்பதால் இப்பாடல்களை குழந்தைகள் பெரிதும் விரும்பிப்பாடுவர் என்பது உண்மையாகும்.

இறுதியாக ஒரு விடயத்தினை அழுத்திக் கூற வேண்டும். சிறுவர் பாடல்கள் எழுதும் பொழுது சிறுவர் மனப்பாங்கு உளவியல் கற்பனை எளிமை என்பவற்றை கவிஞர்கள் மனங்கொள்ள வேண்டும். ஏனெனில் சிறுவர் இலக்கியங்களில் அளவுக்கு மிஞ்சி அறங்களையும் நீதிகளையும் புகட்டும் மரபொன்று தொன்று தொட்டே தமிழில் இருந்து வருகின்றது. குழந்தைகளின் உள்ளத்தை உணராமலும் குழந்தைகளின் வேட்கைகளை நிறைவேற்றாமலும் குழந்தைப்பாடல்களை இயற்றும் பொழுது தங்கள் கருத்துக்களையும் நியதிகளையும் வலிந்து குழந்தைகளின் மனத்தில் திணித்து வருகின்றார்கள். அத்துடன் சிறுவர் இலக்கியத்தில் பாலர் பிரிவினருக்கான பாடல்கள் மேலைத்தேய நாடுகளுடன் ஒப்பீடுகையில் மிக மிக குறைவான பாடல்கள் காணப்படுவதாகவே எனக்கு தோன்றுகின்றது. இது மிகப் பெரிய குறையாகவே சிறுவர் இலக்கியத்தில் உள்ளது. இன்று தமிழராகிய நாம் நம்மிடம் உள்ள குறைபாடாக இருப்பது தாலாட்டுப் பாடல்களை உசாதீனம் செய்வது வெறுமனே ஓர் இலக்கியப் பிரச்சனை மட்டுமன்று. அது ஓர் சமூகவியற் பிரச்சனையும் ஆகும். எனவே சிறுவர் இலக்கியம் இன்னும் சிறப்பாக வளர வேண்டும் எனில் பெரியவர்களாகிய எமது கைகளில் அடங்கியுள்ளது என்பது எனது தாழ்மையான கருத்தாகும்.

பேராசிரியர் அ.சண்முகதாஷ் ஒரு சிறுவர் நூல் வெளியீட்டின் போது இறுக்கமாக பின்வருமாறு விமர்சித்தார்:
“எமது நாட்டில் கிடைக்கும் சிறுவர்களுக்கான நூல்களில் சிறுவர்களைப் பற்றி எழுதுகிறாரார்களேயன்றி சிறுவர்களுக்கு எழுதுகிறார்களில்லை.”

தரமான சிறுவர் இலக்கியங்களை பேணிப் பாதுகாப்பதுடன் மட்டுமல்லாது இவற்றை நாம் செழித்தது வர முழு முயற்சியும் செய்தாக வேண்டும். இது நமது இன்றைய அடுத்த தலைமுறையினருக்கு அர்ப்பணிப்போடும் தெளிவோடும் நாம் ஆற்ற வேண்டிய பணிக்கடன்.

தேவகி விக்கினதாசன் 

(Visited 831 times, 1 visits today)
 

One thought on “ஈழத்துச் சிறுவர் இலக்கியம் ஒரு நோக்கு திறனாய்வு-தேவகி விக்கினதாசன் ”

Comments are closed.