கிழக்கிலங்கையில் சிறுவர் பாடல்கள் – தோற்றமும் வளர்ச்சியும்-சிறுவர் இலக்கியம்-தேவகி விக்னேஸ்வரன்

தேவகி விக்னேஸ்வரன்இலங்கைத் தமிழர் பூர்வீக காலம் முழுதாகச் செறிந்து வாழும் பிரதானமான நிலப் பகுதிகளில் மட்டக்களப்பும் ஒன்றாகும்.  மட்டக்களப்பு தேசத்தின் பிரதான அம்சம் அதன் நடுவண் அமைந்துள்ளதும் 50 மைல் நீளங் கொண்டதுமான வாவியாகும். அதன் காரணமாகவே மட்டக்களப்பு என்னும் பெயர் உண்டானதென்று கொள்ளப்படும். மட்டக்களப்பின் வனப்பிற்கும் வளத்திற்கும் வாவி ஒரு காரணமாகும் அது போலவே மட்டக்களப்பு பிரதேசத்தில் சிறுவர் பாடல்களின் பிறப்பிற்கும் சில கவிஞர்கள் மூலமாக அமைகின்றனர். நம்மவரிடையே சிறுவர் பாடல்களை சேகரிக்கும் முயற்சி இடம்பெறாது போனமைக்கு பல காரணங்களுண்டு. அதாவது பெற்றோர்களோ, பாடசாலை ஆசிரியர்களோ, விமர்சகர்களோ இத்துறையின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் உணர்ந்திருக்கவில்லை என்பதாகும். பெரும்பாலான சிறுவர்களுக்கான விழாக்களில் சினிமா பாடல்களை ஆர்வத்துடன் அபிநயிக்கப்படுவதையிட்டு இச் சிறுவர் பாடல்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் கொள்வதன் மூலம் இப் பாடல்களை நாம் தக்கவைத்துக் கொள்ளலாம் என்பது எனது ஆர்வமாகும். அத்துடன் இப் பாடல்களுக்கு ஏற்ற மெட்டு உருவாக்கப்படுதலின் அவசியமும் கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும். பாடலின் அமைப்பும் பாடலுக்கான மெட்டுமே இச் சிறுவர் பாடல்களை தக்கவைத்துக் கொள்ளும் எனலாம். அந்த வகையில் அமைக்கப்பட்டதே இச் சிறு கட்டுரையாகும். அத்துடன் இச் சிறு கட்டுரையானது மட்டக்களப்பு பிரதேசத்தில் சிறுவர் பாடல்களின் பிறப்புப்பற்றி அறிய முனைவதாகும்.

மட்டக்களப்பு பிரதேசத்தில் சிறுவர் பாடல்களின் பிறப்பு ஐம்பதுகளிலே இடம் பெறுகின்றதென அறிய முடிகின்றது. இவ் வகையில் ஆரையூர் அமரன்,  திமிலைத்துமிலன் ஆகியோரின் சிறுவர் பாடல்களே அடிப்படையாகின்றன எனும் கருத்து நிலவினும் இவர்களுக்கு முன்னரேயே எஷ். இ. கமலநாதன் என்பவர் சிறுவர் பாடல்களை எழுதியுள்ளதாக சிறுவர் இலக்கியம் தொடர்பான ஆய்வாளராக செயற்பட்டவரும் கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறையில் முதுநிலை விரிவுரையாளராகவும் விளங்கியவருமான திரு.கலாநிதி செல்லையா. யோகராசா தனது கட்டுரையான “மட்டக்களப்பும் பிரதேச சிறுவர் இலக்கியத்தின் முன்னேடி எ.ஷ்.இ. கமலநாதன்;” (2007) என்ற தலைப்பில் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.

கவிஞர் எ.ஷ்.இ கமலநாதனின் பாடல்களுள் ஒன்றான “புவனாவின் பூனைக்குட்டி” என்ற பாடல் ஆகும். அப் பாடல் பின்வருமாறு ஆரம்பிக்கின்றது. இப் பாடலானது 19.09.1948 இல் தினகரனினில் வெளியானது.

புவனா வளர்த்த பூனைக் குட்டி
துள்ளி ஆடுதே – அதைப்
பார்த்திருந்த எலிகளெல்லாம் –
துள்ளி ஓடுதே.
சின்ன சின்ன காலை வைத்து
மெல்லப் போகுதே – சோறு
தின்ன வந்த எலியை எல்லாம்
கொல்லப் கோகுதே.

வட்ட வட்டக் கண்ணை அது
வெட்டிப் பார்க்குதே – சட்டி
பெட்டிக்குள் இருந்தே எலிகள்
ஒட்டிப் பார்க்குதே.

அத்துடன் இவர் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பாடலையும் எழுதியுள்ளார். அது பின்வருமாறு:

கீச்சிக் கீச்சித் தம்பலம்
கீயா மாயாத் தம்பலம்
ஆச்சி வாயில் தம்பலம்
அப்பா கையில் சம்பளம்.

சிறுவர்களுக்கான விருப்பமான மற்றொரு படைப்பு தின்பண்டம் பற்றியது.

அது பின்வருமாறு:

அண்ணா அக்கா பலகாரம்
ஆச்சி தந்த பலகாரம்
இஇ ஈஇ உஇ ஊ என்றதால்
எனக்குத் தந்த பலகாரம்
அண்ணா அக்கா வாருங்கோ
ஆச்சியிடம் ஓடுங்கோ
இஇ ஈஇ உஇ ஊ என்னுங்கோ
இனிய பலகாரம் தின்னுங்கோ.

 இவரை அடுத்து மட்டக்ளப்பு பிரதேசத்தில் சிறுவர் பாடல்களை உருவாக்கியவர்கள் வரிசையில் இடம்பெறுபவர்கள் ஆரையூர் அமரன் மற்றும் திமிலைத்துமிலன் ஆகியோர் ஆவர். ஆரையூர் அமரன் ஏறத்தாழ 150 சிறுவர் பாடல்கள் இயற்றியுள்ளதாக அறிய முடிகின்றது. 1951 வைகாசியில் அம்புலிமாமாவில் வெளிவந்த “ஆட்டுக்குட்டியாரே” என்ற பாடல் இவ்வாறு ஆரம்பிக்கின்றது.

“துள்ளித் துள்ளிப் பாயாதே
வெள்ளை ஆட்டுக்குட்டியாரே
பள்ளம் மேடு இருக்குமே
பாய்ந்தால் கால்கள் உடையுமே”

செயற்கரிய செய்த பெரியவர்களைப் பற்றி இக்காலச் சிறுவர்கள் அறிய வேண்டியது மிகவும் அவசியம் என்பதை உணர்ந்த கவிஞர் அவர்களில் பாரதியைப் பற்றிப் பாடும் போது நாவிற்கினியப் பாடுகின்றார்.

பாட்டு நல்ல பாட்டு – சின்னப்
பாலர் பாடும் பாட்டு
பாட்டி என்னை வீட்டில் – தினம்
பாடச் சொல்லும் பாட்டு

பாலும் பழமும் சேர்த்து – அதில்
பாகும் தேனும் வார்த்து
பாப்பா என்னைப் பார்த்து – பாடிப்
பருகத் தந்த பாட்டு

பாப்பா பாப்பா என்று – கவி
பாரதி பாடிய பாட்டு
பாடப் பாடக் கேட்டு – எங்கள்
பாட்டி மகிழும் பாட்டு.

இவ்வாறே திமிலைத்துமிலன் அவர்கள் நாவலர் பெருமானைப் பற்றிப் பாடும் போதும் நாவினிக்கப் பாடுகின்றார்.

சைவம் தழைக்கவில்லை – தமிழ் உரை
தத்தித் தவழவில்லை.
தெய்வம் நினைத்ததடா – ஆறுமுகத்
தென்றல் உதித்ததடா.

என்று அழகாக பாடியுள்ளார். திரு. திமிலைத்துமிலனின் சிறுவர் பாடல்களின் ஒரு தொகுப்பான “அழகுமுல்லை” இல் இருந்து ஓரு பாடல். இப் பாடல் ஒரு குழந்தை அம்மாவிடம் கூறுவதாக அமையும்.

பட்டுச் சட்டை போட்டுவிடு
பையைத் தோளில் மாட்டிவிடு
பொட்டும் அழகாய் வைத்துவிடு
போகும் முன்போர் முத்தமிடு.

என்று ஒரு குழந்தையின் உள்ளத்தை எடுத்துக் காட்டியுள்ளார். “தவளைக் கூத்து” என்ற பாடல் இவ்வாறு அமைந்துள்ளது. இப் பாடல் ஒரு அழகான மழைக்காட்சியை கண் முன் கொண்டு வருகின்றது.

டும் டும் மழை டும் டும்
கும் கும் தவளைகள் கும் கும்
சல்லரி நான்கு மத்தள மேழு
தவிலும் சேர்ந்தே டும் டும்
மெல்லென வீங்கும் புல்லாங்குழலும்
வீணையும் சேர்ந்தே கும் கும் கும்

குப்பை மிதந்திடும் பள்ளத்தி லேயொரு
கூத்து நடக்குது தெய் தெய் தெய்
செருப்பு நெருஞ்சியும் வட்டத் தகரையும்
சீலை விரிக்குது மெய் மெய் மெய்
பச்சைத் தேரை பிடில் வாசிக்க
பனைமரத் தேரை குழலூத
மொட்டைத் தவளை நாட்டிய மாட
மோசங்கு கேட்குது ஞொய் ஞொய் ஞொய்

கொட்டும் மழையும் தாளம்; போடக்
குளிரும் காற்றும் கவிபாட
பொட்டல தரையில்; தவளைகள் சேர்ந்தே
போடுது கூத்து தெய் தெய்.

தேவகி விக்னேஸ்வரன்– நோர்வே 

தேவகி விக்கினதாசன்

(Visited 377 times, 1 visits today)