ஐரோப்பாவில் நாட்டுப்புறக்கதைகள்-கட்டுரை-தேவகி விக்னேஸ்வரன்

ஆதி மனிதன் வேட்டையாடச் சென்று திரும்பியவுடன் தன் அனுபவங்களைப் பிறருக்குச் சொன்னதிலேயே கதையின் தொடக்கத்தைக் காணலாம். இலக்கிய வரலாற்றுப் பரப்பில் இலக்கியங்களை ‘நாட்டுப்புற இலக்கியங்கள்’, ‘செந்நெறி இலக்கியங்கள்’ என இருவேறு கிளைப்பட்டதாகப் பார்க்கும் மரபு நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. செந்நெறி இலக்கிய மரபின் வளர்சிக்கும் அதன் வளமைக்கும் செழிப்புக்கும் நாட்டுப்புற இலக்கியங்கள் பல்வேறு நிலைகளில் பங்களிப்புச் செய்து வருகின்றன. நாட்டுப்புற இலக்கிய வடிவங்கள் பலவாகும். நாட்டுப்புறப்பாடல்கள், கதைப்பாடல்கள், பழமொழி, விடுகதை, நாட்டுப்புறக்கதை முதலானவை அவற்றுட் சிலவாகும். ஒரு நாட்டு மக்களுடைய சமுதாய நிலை, மனநிலை வரலாறு, மொழிவளர்சி, பொருளாதாரம், சமயம் முதலியனவற்றை உள்ளடக்கிய பண்பாட்டின் பல்வேறு கூறுகளையும் அந்நாட்டு மக்களிடையே பயில்நிலையில் இருந்து வரும் நாட்டுப்புற இலக்கியங்களினூடே துல்லியமாக அறிந்து கொள்ளலாம். இக்கருத்துடன் இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் மட்டுமின்றி சமூகவியல் மானுடவியல் ஆராச்சியாளர்களும் ஒத்துப்போகின்றனர்.

மக்களிடம் வாய்மொழியாக வழங்கப்படும் மரபுவழிக்கதைகளை நாம் ‘நாட்டுப்புறக்கதைகள்’ என்று பெயர் இட்டு அழைக்கின்றோம். நாட்டுப்புறக்கதைகள் தொன்மைக்காலத்தில் இருந்தே மக்களிடம் வழக்கில் உள்ளன. ஒரு பண்பாட்டின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் புரிந்து கொள்ளும் அறிவுத்திரளாக நாட்டுப்புறக்கதைகள் அமைந்துள்ளன. நாட்டுப்புறக்கதைகள் பெரிய ஆழமான கட்டமைப்பாகும் அத்துடன் உலகமெல்லாம் ஆழ வேர்விட்டுள்ளது. அத்துடன் நாட்டுப்புறக்கதைகள் சேகரிக்கப்பட்டு முதலில் 1800 இல் வாய்மொழிமரபு எழுத்துருப்பெற்றதுடன் இலக்கியவடிவமும் பெற்றது என்று கருதப்படுகின்றது. ஒரு சில நாட்டுப்புறக்கதைகள் பல நாடுகளில் பல முறையில் திரிபு பெற்றுள்ளது ஆனால் எவ்வாறு நாட்டுப்புறக்கதைகள் நாடு விட்டு நாடு சென்றடைந்தது என்று கூறுவது கடினமாகவுள்ளது. ‘தவளை ராசா’ என்னும் பெயரில் அமைந்த ஈழத்து நாட்டுப்புறக்கதை யேர்மனிய நாட்டுப்புறக் கதைகளில் ‘FROSKEKONGEN’ எனும் பெயரில் அமைந்துள்ளது. ‘FROSK’ என்பதின் தமிழ் வடிவம் தவளை ‘KONGEN’ என்பதின் தமிழ் வடிவம் அரசன் ஆகும். ஆனால் கதையின் இறுதியில் மட்டும் ஒரு சிறு இணைப்பு காணப்படுகின்றது. இது தமிழ் வடிவத்தில் காணப்படவில்லை. ஆனால் கதையின் முடிவு ஒரே மாதிரியே அமைந்துள்ளது. எனினும் ‘தவளை ராசா’ பெரும்பாலும் ஜெர்மனியம் மற்றும் ஈழம் இரண்டும் சார்ந்த மக்களோடு தொடர்புடையனவாகவே அமைந்துள்ளமை கவனத்திற்குரியதாகும். ஏனெனில் இதில் தவளை என்னும் பிராணி குறிப்பாக ஐரோப்பிய நாட்டுப்புறக்கதைகளில் பயன்படுத்துவது அரிதாகும். ஆகவே கதையின் அமைப்பில் ஈழத்து நாட்டுப்புறக்கதைகளின் செல்வாக்கும், ஜெர்மனிய நாட்டுப்புறகதைகளின் செல்வாக்கும் உள்ளது எனலாம். எனினும் ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி நாட்டுப்புறக்கதைகள் எப்பொழுது தோன்றியவை அல்லது எங்கு தோன்றியவை என்பதை கூறமுடியாமலே உள்ளனர்.

‘தவளை ராசா’ பின்வருமாறு அமைகின்றது:-

ஓரு ஊரிலே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு மகள் இருந்தாள். அவள் ஒரு நாள் பூங்காவில் தோழியருடன் பந்து விளையாடிக் கொண்டிருந்தாள். அப்பொழுது அவளது பந்து குளத்தினுள் சென்று விழுந்துவிட்டது. அதனை எடுப்பதற்காக அவள் குளத்தினுள் இறங்கினாள். குளத்தினுள் இருந்த ஒரு குகையில் ஒரு தவளை இருந்தது. அது, ‘ஏய்……… ராஐகுமாரியே! நீருள் இறங்காதே. என்னை நீ அரண்மனைக்குள் அழைத்துச் செல்வாயானால் நான் பந்தை எடுத்துத்தருவேன்’ என்றது. அதைக் கேட்டு பயந்தாளானாலும் பந்தை எடுக்க வேண்டும் என்பதற்காகச் சம்மதித்துவிட்டுப் பந்தை எடுத்ததும் தவளையைத் திரும்பிப் பாராமல் ஓடிவிடுகிறாள். தவளை பலமுறை கத்தியும் அவள் செவிசாய்கவில்லை.

ஆனால் தவளை நீருக்கு வெளியே வந்து ராஐகுமாரி சென்ற வழியைப் பின்பற்றிச் சென்று அரண்மனையின் வாயில் கதவைத் தட்டியது. தவளையிடம் விசாரித்த காவலரிடம் , ‘ராஐகுமாரி வரச்சொன்னாள் அதனால் தான் வந்தேன்’ என்றது. இதனை ராஐகுமாரியிடம் காவலர் தெரிவித்ததும் அவள் பயந்து தந்தையிடம் சென்று கூறினாள். தந்தை, ‘இந்தச் சிறிய பிராணிக்கா பயப்படுகிறாய்? போய் அது கேட்டதைச் செய்துகொடு’ என்று கூறிவிட்டார்.

ராஐகுமாரியும் ஒரு வழியும் இல்லாமல் தவளையைத் தன் அறைக்கு வரவழைத்தாள். அது ராஐகுமாரிக்குச் சமானமாகத் தட்டில் சாப்பாடு கெண்டுவருமாறு அழைப்பித்துச் சாப்பிட்டது. அது கேட்பவற்றையெல்லாம் அரசகுமாரி அருவருப்பு ஏற்பட்டாலும் அதனைத் தட்டிக் கழிக்க முடியாது செய்து கொடுத்தாள். கடைசியாகத் தவளை, ‘எனக்குக் களைப்பாக இருக்கிறது. படுக்கப்போகின்றேன். உன் கட்டிலைத் தட்டிப்போடு. என்னை தூக்கி அதில் விட்டுவிட்டுக் கதவைச் சாத்திவிட்டு வா…………’. என்று கட்டளை பிறப்பித்தது. அரச குமாரியும் தவளையின் ஆணைகளுக்கு எல்லாம் பணிந்தாள்.

தவளையைக் கட்டிலில் விட்டுக் கதவைச் சாத்திவைத்து விட்டு வந்த ராஐகுமாரி திடுக்குற்றாள். அங்கு தவளையைக் காணவில்லை. பதிலாகக் கட்டிலில் அழகிய ராஐகுமாரன் ஒருவன் படுத்திருக்கக் கண்டாள். பின் கதவைத் திறந்து கொண்டு தந்தையிடம் ஓடிச் சென்று நடந்தவைகளைக் கூறினாள்.

இதற்கிடையில் ராஐகுமாரனும் வந்து அரசனை வணங்கித் “தான் ஒரு ராஐகுமாரனாக இருந்தான் என்றும், ஒரு முனிவரின் சாபத்தால் இவ்வாறு தவளையாய் மாறினேன் என்றும், யாராவது ஒரு ராஐகுமாரி தீண்டப்பெறின் உனது சுய உருவை மீளப்பெறுவாய் எனும் சாபவிமோசனத்தால் இன்று இவ்வதிசயம் நடந்தது” என்றும் கூறிநின்றான். அவனது அழகையும் நற்குணங்களையும் கண்ட அரசன் தன் மகளை அவனுக்கே மணம் முடித்து வைத்தான்.

நாட்டுப்புறக்கதைகளின் தோன்றிய காலம் பற்றிய ஆராய்ச்சில் ஆராய்ச்சியாளர்களிடையே பெரிய கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றது. ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் கருத்தின் படி , மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்தே நாட்டுப்புறக்கதைகள் தோன்றியதாகவும், மற்றும் சிலர் எழுத்துவடிவம் தோன்றிய காலத்திற்கு முன் ஒரு சிறியகாலப்பகுதியிலிருந்தே நாட்டுப்புறக்கதைகள் தோன்றியதெனவும் கருதுகின்றனர். எனினும் உண்மையில் மக்களிடம் வாய்மொழி, மரபுவழி என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்களிடம் வழக்கில் உள்ளதாகக் கூறப்படுகின்றது. 1690 ஆம் ஆண்டில் அதிகப்படியான சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான நாட்டுப்புறக்கதைகளின் தொகுப்புகளையும் மூலப்பிரதிகளின் மொழிமாற்றங்களையும் வெளியிடத்தொடங்கினர்.

விசேடமாக நாட்டுப்புறக்கதைகள் பிரெஞ் புரட்சியின் பின்னரே ஜெர்மனியில் மறுவடிவம் பெற்றன. ஜெர்மனி நாட்டில் ஆரம்பகாலத்தில் சகோதரர்கள் கிறிம் (Brødrene Grimm) அவர்கள் தான் களப்பணி வழி நாட்டுப்புறக்கதைகளைச் சேகரிப்பதிலும் வகைப்படுத்தி ஆய்ந்து வெளிப்படுத்துவதிலும் முயற்சிகளை மேற்கொண்டார்கள். சகோதரர்கள் என்று அழைக்கப்படும் யாக்கப் (Jacop1785 – 1863) ம் வில்ஹெல்ம் கிறிம் (Wilhelm Grimm1786 – 1859) இவர்கள் இருவரும் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மொழி மற்றும் இலக்கிய ஆய்வாளர்களாவர். இவர்கள் இருவரது களப்பணி மூலம் சேகரிக்கப்பட்ட கதைகள் முதன் முதலில் 1812 இல் முதல்பிரதியாக நூல் வடிவில் வெளியாகியது. இரண்டாம் பிரதி 1815 இல் வெளியாகியது. இவர்கள் இருவரின் முயற்சிகள் ஏனைய நாட்டுப்புறக்கதைகள் சேகரிப்பவர்களுக்கு ஆர்வத்தையும் ஊக்கத்தையும் அளித்தன. அத்துடன் ஜெர்மனிய நாட்டுப்புறக்கதைகள் 160 -ற்கும் அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இருவருடைய சேகரிப்பிலான நாட்டுப்புறக்கதைகளும் ஐரோப்பாவில் சிறுவர்களிடையேயும் பெரியவர்களிடையும் பெரும் வரவேற்பைப் பெற்றன. இவர்கள் இருவரது ஜெர்மனிய நாட்டுப்புறக்கதைகளின் தொகுப்புப் பிரதி மிகவும் பிரசித்தி அடைந்தததுடன், இவர்கள் ஐரோப்பிய பண்பாட்டு அடையாளங்களை உலகுக்கு எடுத்துக் கூறியவர்களாகவே போற்றப்படுகின்றனர். நாட்டுப்புறக்கதைகள் தொர்பான ஆராய்ச்சியானது கிறிம் சகோதரர்களின் நாட்டுப்புறக்கதைகளின் சேகரிப்பின் பின்னரே வளர்ச்சி பெற்றதாகும். அத்துடன் நாட்டார்கதைகள் பற்றிய ஆய்வுத்துறை இன்று உலகலாவிய ரீதியில் பெருமுனைப்புப் பெற்று வருவதற்கும் பல்கலைக்கழகங்களிலே நாட்டார் வழக்காற்றியலுக்குத் தனித்தறை நிறுவப்பட்டு சேகரிப்புக்களுக்கும் ஆய்வுகள் நடைபெறுவதற்கும் இவர்களே காரணிகள் ஆவர். இவர்களின் தொகுப்பு முயற்சியும் ஒரு வகையில் ஆரம்பகட்ட ஆய்வு தான். ஆனால் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகளுக்கு அடி அத்திவாரமாக அமைந்தவை இத் தொகுப்புகளே ஆகும். இந்த ஆராய்ச்சியின் பலனாக ஜெர்மனியரான Thedor Benfys hypotese , ‘அனைத்து நாட்டுப்புறக்கதைகளும் ‘இந்தியாவில்’ இருந்தே ஆரம்பமாயின’ என்ற கூற்று மனங்கொளத்தக்கதாகும். அத்துடன் பஞ்சதந்திரக்கதைகள் தான் முதன் முதல் தோன்றியதாகவும் கூறப்படுகின்றது. இதனாலேயே நாட்டுப்புறக்கதைகளின் பரவலாக்கம் பற்றிய கருத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகும். அத்துடன் ஆராய்ச்சியின் முடிவின் படி கதைகளில் பலவும் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு மாற்றங்களுடன் பயில்நிலையில் இருந்து வருவதைப் பார்க்க முடிகின்றது. தொடக்கத்திலிருந்த மூலவடிவம் பலவாறாகத் திரிபடைந்தும் மாறுபட்டும் வந்துள்ளதைக் கதைகள் சில புலப்படுத்துகின்றன. ஆயினும் கதைகள் பலவும் தமது மையக் கருத்தை இன்றுவரை பற்றிப் பிடித்திருப்பதனைப் ஒரேவகையான கதைகளினூடே பார்க்க முடிகின்றது. இதன் அடிப்படையே ‘தவளை ராசா’ வின் பரவலும் ஆகும் .

ஐரோப்பாவில் நாட்டுப்புறக் கதைகளின் தற்போதைய நிலை மிகவும் வளர்ச்சியுற்றே காணப்படுகின்றது. இந்த நாட்டுப்புறக்கதைகளை அடுத்துவரும் தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல தற்கால கல்விமுறையின் அமைப்பு பெரிதும் வாய்ப்பளித்துள்ளது எனலாம். அத்துடன் சிறுவர்களுக்கு ஏற்ற நாட்டுப்புறக்கதைகளை படமாக்குதல் போன்ற முயற்சிகள் இலகுவாக அவற்றை அடுத்துவரும் தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல உதவுகின்றன. ஐரோப்பிய நாட்டுப்புறக்கதைகளே தற்காலத்தைய சிறுவர் இலக்கியங்களின் வளர்ச்சிக்கு ஆதாரங்களாகவும் ஆய்வாளர்களுக்கான உண்மைகளைத் தேடும் மூலங்களாகவும் சிறுவர்களுக்கான படங்களைத் தயாரிக்கவும், வளர்த்தெடுப்பதற்கும் ஆதாரங்களாகும். அத்துடன் நாட்டுப்புறக்கதைகள் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் அமைந்துள்ளதையும் முக்கியமாக குறிப்பிடலாம். முக்கியமாக ‘DISNY’ நிறுவனம் சிறுவர்களுக்கான திரைப்படங்களை தயாரிப்பதில் நாட்டுப்புறக்கதைகளைப் பயன்படுத்தியது. பல நாட்டுப்புறக்கதைகளை உலகம்பூராகப்பரவவைப்பதற்கு திரைப்படத்துறையும் உதவியது. இப்படியான ஊடக ஆதிக்கம் உலகமயமாதல், நவீனமயமாதல், திறந்த பொருளாதாரக் கொள்கை போன்ற காரணிகளால் ஐரோப்பிய நாட்டார்க்கதைகள் வேகமாக உலகம் முழுவதும் பரவலடைந்தன.

திரைப்பட ஊடகங்கள் ஐரோப்பிய நாட்டுப்புறக்கதைகளை இளைய தலைமுறைக்குக் கொண்டு செல்வதற்கு பாரியபங்களிப்பு செய்துள்ளன. அதுமட்டுமல்லாமல் பரபரப்பான இன்றைய ஐரோப்பிய வாழ்க்கைச் சூழலில் கிடைக்கின்ற குறைவான ஓய்வுநேரத்தையும் தொலைக்காட்சிப் பெட்டி, கணிப்பொறி முதலான இலத்திரனியல் சாதனங்களுடன் விரயம் செய்யவே சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்புகின்றனர். இத்தகைய சூழலில் நாட்டுப்புறக்கதைகளை சொல்லவோ அவற்றைச் செவிமடுக்கவோ இன்று பலருக்கும் நேரம் இல்லை. ஆயினும் ஐரோப்பாவில் கதைகூறும் , கேட்கும் மரபு இன்று வரை ஏதோ ஒரு நிலையில் உயிர் துடிப்புடன் இருந்து வருகின்றன. அத்துடன் ஐரோப்பிய சமூகம் தனது பண்பாட்டு அடையாளங்களை அடுத்ததலைமுறையினருக்கு கொண்டு செல்வதிலும் பழைமை போற்றும் பண்பைப் பேணுவதிலும் கவனம் செலுத்துகின்றது.

தேவகி விக்கினதாசன்

தேவகி விக்னதாசன்

(Visited 116 times, 1 visits today)
 

One thought on “ஐரோப்பாவில் நாட்டுப்புறக்கதைகள்-கட்டுரை-தேவகி விக்னேஸ்வரன்”

Comments are closed.