ஐயரும் சர்ச்சைகளும்………….நேர்காணல்-நடுகுழுமம்

நடு லோகோஅண்மையில் முதுபெரும் இலக்கிய உபாசகர் பத்மநாப ஐயர் தொடர்பாக பலத்த சர்ச்சைகள் எழுந்தன. இது தொடர்பாக பிரித்தானியாவை சேர்ந்த ராஜா எமக்கு ஓர் கடிதம் அனுப்பி இருந்தார்.அந்தக்கடிதம் பின்வருமாறு இருந்தது:-

அன்பின் நண்ப,

நான் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி, வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நானும் மு. நித்தியானந்தனும் சேர்ந்து பத்மநாபஐயருக்கு 480 பக்கத்தில் ஒரு மலர் தயாரித்தோம். . யார்யாரிடம் எல்லாம் கட்டுரை சேகரிக்க வேண்டும் என்று அவரே லிஸ்ட் கொடுத்தார் . மாதக்கணக்கில் இரவுபகலாக இதற்காக உழைத்தேன். அது பெருங்கதை. அது ஒருபுறமிருக்கட்டும். இந்த மலருக்கு அட்டையில் தலைப்பு போடும் வேளையில்தான் அவருடைய உண்மையான முகத்தை அறியமுடிந்தது. “நூலை ஆராதித்தல் : பத்மநாபம் 75′ என்று பெயர் கொடுத்தோம். கட்டாயம் ‘ஐயர்” என்று வரவேண்டும் என்று அடம்பிடித்தார், வாதிடார். இன்றைய சூழலில் ”ஐயர்” என்று வந்தால் உங்களுடைய பெயர்தான் இலக்கிய உலகில் அடிபட்டுப்போகும், தொகுப்பாசிரியர்களாகிய நாங்கள்தான் பதில் சொல்லவேண்டிவரும் என்று சொல்லியும் அவர் மறுத்துவிட்டார். எங்களுடைய பெயர்களை அகற்றிவிட்டு நூலை வெளிவிடுவோம் என்றோம். அப்படிசெய்தால் தான் தற்கொலை செய்வேன் என்று மிரட்டினார். அந்தப்பழியும் எங்களில் வந்துவிடும் என்ற பயத்தில் அவர் விரும்பியபடியே “ஐயர்” என்று போட்டு நூலை முடித்தக் கொடுத்தோம்.. இவருக்குள்ளே தான் ஒரு ஐயர் என்கிற சாதிவெறி இருக்கிறதென்பதை இவருடைய கடைசிமகளுடைய திருமணத்திலும் வெளிப்படுத்தினார். மகளுடைய காதலன் மீனவசமூகத்தை சேர்ந்தவன் என்பதனால் திருமணத்திலும் கலந்துகொள்ளவில்லை. நானும் எனது துனைவியாருமே தாய் தந்தையாக நின்று அந்த திருமணத்தை நடாத்திக்கொடுத்தோம்.

இன்றைய நிகழ்வை நான் நித்தி உட்பட லண்டனில் வசிக்கும் சில இலக்கிய நண்பர்கள் பகிஸ்கரிக்கின்றோம். இந்த மன உளைச்சலில் இருந்து விடுபடவே நித்தி நோர்வே சென்றுவிட்டார். நானும் லண்டனைவிட்டு வெளியேறுகிறேன். இந்த மனிதனுக்குள்ளே இன்னுமொரு மோசமான முகம் இருக்கிறதென்பதை உங்களுக்கு தெரியப்படுத்துவதனால் எனக்கு கொஞ்சம் ஆறுதல் கிடைக்கிறது.

Kanagasabai Krishnarajah 8/27, 1:52pm

இந்த சர்ச்சைகள் தொடர்பாக பத்மநாப அய்யரின் தன்னிலை விளக்கம்,ஆதரவு தளம், மற்றும் எதிர் தளம், போன்ற நிலைகளில், பிரித்தானியாவை சேர்ந்த சந்திரா ரவீந்திரன்,சேனன் மற்றும் பத்மநாப ஐயர் ஆகியோருடன் நடு வாசகர்களுக்காக ஓர் கலந்துரையாடலை மேற்கொண்டோம். இந்த மூவரும் தங்கள் எண்ணப்பாடுகளைப் பகிர்ந்து கொள்கின்றார்கள்.

நடு குழுமம்

 

00000000000000000000000000000
சந்திரா ரவீந்திரன்அண்மையில் எழுந்த பத்மநாப ஐயர் தொடர்பாக எழுந்த சர்ச்சையில் தமிழ் எழுத்துப் பரப்பில் ஓர் இலக்கியவாதியாக அறியப்பட்ட உங்களின் கருத்து என்ன ?

ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்து,பிரித்தானியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் பல்துறைக் கலைஞர்களில் சுறுசுறுப்பாகவும் ஆக்கப்பூர்வமாகவும் பல பயனுள்ள இலக்கியப்பணிகளைச் செய்துகொண்டிருக்கும் ஒரு இலக்கிய நட்பு வட்டத்திற்குள் சிறு கருத்து வேறுபாட்டால் எழுந்த சலசலப்பு இது.

பத்மநாப ஐயரை நான் நேரில் கண்டு பழகிய இந்த இருபது வருட காலங்களிற்கு மேலாக அவர், எத்தருணத்திலும் சாதியம் பார்த்து இயங்கியவராக ஒருபோதும் நான் அடையாளம் கண்டதில்லை. இலக்கிய உலகில் ஒரு பார்ப்பன மனோநிலையில் எவருடனும் அவர் பழகியவருமல்லர்.எத்தனையோ சமூகங்களில் தாழ்த்தப்பட்ட சாதியினராகப் பார்க்கப்பட்டவர்கள் எல்லாம் அவருடைய வீட்டிற்கு விருந்தினர்களாக வந்து தங்கியிருந்து போயிருக்கிறார்கள். சாதியம் பார்த்து இன்னுமொருவர் வீட்டில் அவர் உணவு உண்ண மறுத்து முரண்டு பண்ணியவருமல்லர்.

இது காலவரையில் “தமிழியல்” வெளியீடுகளாக பத்மநாப ஐயரினது பெரும் பங்களிப்போடு பல நூல்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் 1985ல் வெளியான “மரணத்துள் வாழ்வோம”, 1986ல் வெளியான கவிதாவின் “யுகங்கள் கணக்கல்ல” , அ.யேசுராசாவின் “தேடலும் படைப்புலகமும்”, மு.பொன்னம்பலத்தின் “யாதார்த்தமும் ஆத்மார்த்தமும்”,சண்முகம் சிவலிங்கத்தின் “சிதைந்து போன தேசமும் தூர்ந்து போனமனக்குகையும்” செல்வா கனகநாயகத்தின் “இலக்கிய வரலாறும் திறனாய்வும்”, மற்றும் “ஸ்ரீதரன் கதைகள்” எனப் பலவற்றைக் சொல்லிக்கொண்டு போகலாம்.

அவர் சாதியத்தைத் தன்பால் சுமந்து கொண்டு திரிபவராக இருந்திருந்தால் இத்தகைய சாதி, மதம் கடந்த இலக்கியப் பணிகளை அவரால் செய்திருக்கவே முடியாது. ஈழத்துப் படைப்பாளிகளையும்,ஈழத்துப் படைப்புகளையும் சாதி, மதம் கடந்து, கடல் கடந்து கொண்டு போய் இந்தியாவில் – தமிழ்நாட்டில் சேர்ப்பதற்கு ஒரு பெரும் பாலமாக இயங்கியவர் அவர்.

இந்த சர்ச்சையில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் பத்மநாப ஐயரோடு நீண்ட பல வருடங்களாக இணைந்து நூலாக்கப் பணிகளில் மிகுந்த சிரத்தையுடன் கடும் உழைப்பைப் பேணியவர்கள். இந்த ஒருமித்த பணியில் நான் அவர்களது கலைப்பணிகள் பற்றி மட்டுமே அறிந்திருக்கிறேன். அதன் பால் பெருமதிப்பும் வைத்திருக்கிறேன். அதுதவிர்ந்த அவரவர் தனிப்பட்ட வாழ்க்கை முறைகள், தனிப்பட்டகொள்கைகள், அவரவர்கட்கிடையேயான கருத்து வேறுபாடுகள் பற்றியெல்லாம் நானறிய முற்பட்டதில்லை. ஆனால் கருத்துவேறுபாடுகள் இருந்திருப்பினும் அதனை ஒரு சர்ச்சையாக்கி விவாதிப்பதற்கு உகந்ததருணமும் இதுவல்ல என்பது முக்கியமான விடயம்.

“ஐயர்” என்ற பெயரை வைத்துக் கொண்டு அவரை ஒரு பார்ப்பன, சாதியவெறி பிடித்தவராக சித்தரிக்க முற்படுவது தர்மத்திற்கும்,மனச்சாட்சிக்கும் முரணனானது என்றே கருதுகிறேன். ஒருவரை எந்தப் பெயர் சரியாக அடையாளப்படுத்துகிறதோ அந்தப்பெயரை அவர் பாவிக்க விரும்புவதில் தர்க்க ரீதியாக பிழையேதும் காணமுடியாது . பத்மநாப ஐயரை, “பத்மநாபன்” என்று யாராவது குறிப்பிட்டுப் பேசினால் அவரை சரியாக அடையாளம் காண்பதற்கு நிச்சயம் இன்னுமொரு கேள்வி கேட்டேயாக வேண்டும் என்னும் அளவிற்கு “பத்மநாப ஐயர்” என்னும் பெயர் நீண்ட காலம் பரிச்சயமாகி விட்டமை தவிர்க்க முடியாதது.
இது பற்றி அதிகம் பேசுவதற்கு ஏதுமில்லை.

பலர் புறக்கணிப்பு செய்த ஓர் விழாவில் நீங்கள் கலந்து கொண்டதன் காரணம் என்ன ?

நான் விழா மண்டபத்திற்குச் செல்லும் வரை குறிப்பாக யார் யார் அந்த விழாவைப் புறக்கணிப்புச் செய்கிறார்கள் என்பது பற்றிய விபரம் எல்லாம் எனக்குத் தெரியாது. இந்தச் செய்தி அறிந்தவுடன் நான் ஓவியர் கிருஷ்ணராஜா அவர்களையும் பேராசிரியர் நித்தியானந்தன் அவர்களையும் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தேன் .அதற்குக் காரணம் கிருஷ்ணராஜா அவர்கள் சில வருடங்களிற்கு முன்பே என்னைத் தொடர்பு கொண்டு ஐயருக்கு விழா எடுப்பது பற்றியும் அது தொடர்பாக ஒரு நூல் வெளியிடவிருப்பதாகவும் தெரிவித்து ஐயர் பற்றிய எனது கட்டுரை ஒன்றையும் எழுதித்தரும்படி கேட்டிருந்தார். பின்னர் அண்மையில் ஆகஸ்ட்12ம் திகதி கிருஷ்ணராஜா அவர்கள் மீண்டும் தொலைபேசியில் என்னுடன் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட திகதியில் ஐயருக்கு பவளவிழா நடைபெறவிருக்கிறது என்றும் அதில் நான் ஒரு வாழ்த்துரை வழங்கவேண்டுமென்றும் கேட்டிருந்தார். இந்த விழா தொடர்பாகவும்,இந்த நூல் தொடர்பாகவும் முன்னின்று பெரும் பணியாற்றுபவர்கள் திரு. ராஜா அவர்களும் திரு.நித்தி அவர்களும் என்று ஏற்கனவே நான் அறிந்திருந்தேன். அதனால் தான் நான் முக்கியமாக அவர்களுடன் முதலில் தொடர்பை ஏற்படுத்த முனைந்தேன். ஆனால் விழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ருந்த தினத்தன்று காலையிலிருந்து எனக்கு அவர்களது தொடர்பு கிடைக்கவில்லை.

அதற்குப் பின்னர் திரு.பௌசர் அவர்களையும் சபேசன் அவர்களையும் தொடர்பு கொண்ட போது விழா குறிப்பிட்டபடி நடைபெறும் என்று தெரியப்படுத்தினார்கள். எனவே விழா நடைபெறும் என்று உறுதிப்படுத்தப்பட்டபின்னர் நான் ஏற்கனவே முடிவுசெய்திருந்தபடி விழாவிற்குச் சென்றிருந்தேன்.

விழா நடைபெறும் தினத்தன்று மதியம் கிருஸ்ணராஜா அவர்களது ஆதங்கமும்,கோபமும் நிறைந்த கடிதம் ஒன்று எழுத்து வடிவில் என் கைத்தொலைபேசிக்கு வந்திருந்த போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் குறிப்பிட்ட விழாவைப் புறக்கணிப்பு செய்வதற்கு என்னிடம் தகுந்த காரணங்களேதும் இருக்கவில்லை. சரியான நேரத்தில், சரியான ஒருவருக்குச் செய்யப்படும் இந்தப் பவளவிழா சிறப்பாக நடக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் தான் என்னிடம் அப்போது அதிகமாக இருந்தன. அதனால் நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி விழாவிற்குச் சென்றிருந்தேன் என்பது தான் உண்மை.

பத்மநாப ஐயர் பற்றிய பலத்த விமர்சனங்கள் வந்துள்ள நிலையில், நீங்கள் அவரை எத்தகைய தளத்தில் இருந்து ஆதரிக்கின்றீர்கள் ?

இந்தக் கேள்விக்கான பதிலை விழா நடைபெற்ற அன்றைய தினம் வெளியிடப்பட்ட “நூலை ஆராதித்தல்” என்ற நூலில் இடம்பெற்றிருக்கும் எனது “என் நினைவிடை பத்மநாப ஐயர்” என்ற கட்டுரை வாயிலாக நீங்கள் அறிந்து கொள்ளலாம். ஈழத்து இலக்கியத்தைப் பொறுத்தவரையில் பத்மநாப ஐயர் அவர்கள்,

ஒரு தூண்!

ஒரு பாலம்!

ஒரு நம்பிக்கை!

இந்தத் தளத்திலிருந்து தான் ஆதரிக்கிறேன்.

இலக்கியத்துறையில் நீண்ட காலமாக ஓர் புனைபெயரில் அறியப்பட்ட ஓர் படைப்பாளியின் பெயரை மாற்றும்படி கோருவது எந்தவிதத்தில் அறமாகும் ?

ஒருவர் புனைபெயரில் எழுதுவதென்பது தனக்கான சுதந்திரம். அதனை மாற்றும்படி கோருவது சம்பந்தப்படடவரது சுயஉரிமைக்கும்,கருத்துச்சுதந்திரத்துக்கும் முரணானது.
இலக்கிய உலகில் புனைபெயரில் அறியப்பட்ட படைபாளிகள் விரல்விட்டு எண்ண முடியாதளவிற்கு இருக்கிறார்கள். எனக்குப் பிடித்த ஜானகிராமன், சுஜாதா, அம்பை, புதுமைப்பித்தன், கண்ணதாசன் என்ற வரிசையில், ஈழத்தில் செங்கையாழியான், குந்தவை, இலங்கையர்க்கோன், தெணியான், ஆழியாள், ஊர்வசி என்று இப்படியே பட்டியல் நீளும். அவர்களது படைப்புகள் அவர்களது புனைபெயரினூடாகவே அறியப்பட்டிருக்கின்றன. அவர்கள் தத்தமது புனைபெயர்களினூடாகவே இலக்கிய உலகில் அறியப்பட்டிருக்கிறார்கள். அது அவர்களின் அடையாளம் அல்லது சுட்டுப்பெயர் ஆகின்றது. அவரவர் சுதந்திரத்திற்குட்டபட்ட விடயங்களை இன்னுமொருவர் மாற்றக்கோருவது நியாயத்திற்கு அப்பாற்பட்டது. பெயரை மாற்றக் கோருவதால் ஏற்படும் குழப்பமான மனோநிலை படைப்பாளியையே அதிகம் பாதிக்கும்

சந்திரா ரவீந்திரன் – பெரிய பிரித்தானியா

000000000000000000000000000000

சேனன்என்ன காரணங்களுக்காக பத்மநாப ஐயரின் பவள விழா பகிஸ்கரிக்கப்பட்டது ?

இது பற்றி ராஜா விளக்கமாக எழுதிய தகவல் வெளிவந்திருக்கிறது. பத்மநாபர் எழுபத்தைந்தாவது பிறந்த நாளை கோலாகலமாகக் கொண்டாட இருக்கிறார் என அறிந்தோம். அது பற்றி அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை. இந்த விழாவை ஒட்டி ஒரு புத்தகம் வெளிவர இருப்பதும் எமக்குத் தெரிந்திருக்கவில்லை. இந்த விழா பற்றி எமக்கு எந்தத் தகவலும் தெரிய வராமல் இருந்தது ஆச்சரியமான விடயமில்லை. விழா நிகழ்வு நேரத்தின்போதுதான் பல தகவல்கள் வெளிவந்தன. ஐயர் என்ற பெயரில் புத்தகம் ஒன்று வெளி வருவதும் – மற்றும் பத்மநாபரின் சாதி காக்கும் நடவடிக்கைகளும் வெளிவந்தன. இது பற்றி ராஜாவின் குறிப்பைப் படிக்கவும். எதிர்ப்பைத் தெரிவிப்பதில் நாம் ஒரு சொட்டும் தயங்கவில்லை. சத்தியம் புரையோடிக் கிடக்கும் எமது சமுதாயத்தில் அதற்கு எதிர்ப்பை வைப்பதில் நாம் ஒரு கணமும் பின் நிற்கக் கூடாது. ஆனால் எம்மிடம் கேள்விகள் உண்டு. நண்பர்கள் ராஜாவும் நித்தியும் ஏன் இந்தப் பிரச்சினையை முன்பே வெளிக்கொண்டு வரவில்லை? பிரச்சினை தெரிந்த பிறகும் ஏன் பல நண்பர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்? இக்கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்லவேண்டும். பிராமணியம் சார்ந்த வேறும் பல விசயங்கள் இருப்பின் அதை அவர்கள் வெளிக்கொண்டு வரவேண்டும். மௌனம் ஒரு விதத்தில் சம்மதமே. சாதியம் காப்பதற்குச் சம்மதிக்காதீர்.

தமிழ் எழுத்துப்பரப்பில் /இலக்கியத்துறையில் நீண்ட காலமாக இருந்து வரும் ஒருவரின் பெயரை மாற்றும் படி கேட்பது எந்த வகையில் உங்களுக்கு அறமாகத் தெரிகின்றது? இது இலக்கியப் பாசிச வடிவத்தின் மறுபக்கம் என்பதை நீங்கள் உணரவில்லையா?

பாசிசம் என்பதற்கு என்ன விளக்கம் என்ற பேச்சுக்கு இங்கு நுழைவதைத் தவிர்ப்போம். இத்தகைய சொற்கள் சரியான விளக்கத்துடன் உபயோகப் படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். யாரையும் பெயர் மாற்றச் சொல்லி நாம் வன்முறை செய்யவில்லை. ஐயர் என்ற பெயரில் அவர் நிறையக் கலை செய்துள்ளார் –பெயர் மாறினால் குழப்பம் வந்துவிடும் என்ற நிலையுமில்லை. இலக்கியவாதிகள் பலருக்கு ஊக்கம் கொடுத்து –பல புத்தகங்கள் வெளியிட ஆதரவு கொடுத்து – இலக்கிய உலகில் அறியப்பட்டவர் பத்பநாப ஐயர். ஒரு பதிப்பகம் பெயர் மாற்றுவது இல்லையா? பின்னுக்குத் தொங்கும் ஐயர் என்ற சாதிப் பட்டத்தை விட்டால் என்ன குறைந்து விடும் எனத்தான் கேட்கிறோம். எனக்கு வேறு வழியில்லை –இந்த பெயர்தான் பாவித்தாகவேண்டும் என சொல்கிறாரா? அதற்கு என்ன காரணங்கள்? ஐயர் என்ற சொல்லில் சாதி இல்லை எனச் சொல்லலாமா? இதில் இன்னுமொரு விசயத்தை நீங்கள் நன்றாக அவதானிக்க வேண்டும். சாதியத்துக்குக் கடுமையான எதிர் நிலையில் நின்று கொண்டு இந்தப் பெயரில் இயங்குவதற்கும் சாதி காத்துக் கொண்டு இந்த பெயரில் இயங்குவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ‘நான் பிறப்பால் ஐயன் – ஆனால் சாதிய அடக்குதலின் எதிரி –பெற்றோர் வைத்த ஒடுக்கும் சாதிப் பெயரை வைத்துக்கொண்டு நான் அதை எதிர்த்திருப்பேன்’ என்று ஒருவர் கூறினால் ஓரளவு விளங்கிக் கொள்வது எம்மால் முடியும். அடையாள அரசியல் செய்பவர்கள் அல்ல நாம். ஆனால் சாதி காத்துக்கொண்டு சாதிப் பெயருடன் விழா எடுப்பது சரியா? ஒவ்வொரு நாளும் சாதியின் பெயரால் எத்தனை சாவுகள் நிகழ்கின்றன என்பது தெரியாதா உங்களுக்கு? சாதி காத்தல் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியதே. இதிலென்ன மாற்றுக் கருத்திருக்க முடியும் ? பாசிசக் கொலைகள் செய்த ஹிட்லருக்கு அதற்கு உரிமை இருக்கு என்றோ – சுவஸ்திக் இலச்சினையைத் தூக்கிப் பிடித்துப் பிரச்சாரிக்க துவேசிகளுக்கு உரிமை இருக்கு என்றோ வாதிட முடியாது தானே. உரிமை என்பது சமூகம் சார்ந்தது. சமூக நலனுக்குப் புறம்பானது சாதியம். அதைக் காப்பவர்களும் சமூக நலனுக்கு எதிரானவர்கள். எதிர்க்கப்பட வேண்டியவர்கள். மற்றும்படி வெறும் சொல்லோடு வெற்று மல்லுக்கட்டு செய்யவில்லை நாம். சாதியத்தை மறுப்பவர் என்ன பெயரும் எடுக்கட்டும். சாதியத்தை கடுமையாக எதிர்த்துவரும் மீனா கந்தசாமி சாதியம் சார் சொற் பாவனையை எதிர்த்து ஒரு சொல் எழுத முதல் அடிக்க வருபவர்கள் – சாதிப் பெயர் வைப்பதை நீண்ட காலமாக எதிர்க்கும் ஷோபாசக்தியை கண்ட பாட்டுக்குத் திட்டுபவர்கள் – சாதிப் பெயர்கள் பற்றிய விளக்கமின்றி சாதி சொல்லித் திட்டுபவர்கள் – உங்கள் எல்லோரிடமும் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். ஐயரின் சாதி காக்கும் பண்பு பற்றி அவருடன் மிக நெருக்கமாக இதுவரை பழகிய ராஜா போன்றவர்கள் தான் வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள். இது பற்றி ஐயரிடம் ஒரு கேள்வி கேட்டீர்களா ? சாதி காக்கும் செயல் ஏன் உங்கள் இரத்தத்தைக் கொதிக்க வைக்கவில்லை ? காலங்காலமாக மிதிக்கப்பட்டு வரும் உயிர்களின் குரல்கள் ஏன் உங்கள் காதில் விழவில்லை? ஏனிந்தத் தயக்கமும் மயக்கமும் ? உங்களுக்குள்ளும் அந்தப் பாம்பு உருளுகிறதோ என்ற சந்தேகத்தை இது கிளப்புகிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

சேனன் -பெரிய பிரித்தானியா

பிற்குறிப்பு :-

பத்மநாப அய்யர் தன்நிலை விளக்கத்துக்காக நாம் பலமுறை திரு பத்மநாப ஐய்யரைத்தொடர்பு கொண்டோம்.தனது மனம் நடைபெற்ற சம்பவங்களால் மிகவும் கவலையடைந்து இருப்பதால் இது பற்றி தான் மேலதிகமாகப் பொதுவெளியில் பேச விரும்பவில்லை என்று அவரால் சொல்லப்பட்டது.

நடுகுழுமம்

 

(Visited 96 times, 1 visits today)