தேசியத்தின் பெயரால்-கட்டுரை-சபேசன்

 

கலைக்கூடம்-ஓவியம்-புகழேந்திடந்த 11.09.2016 அன்று உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸில் நடத்திய மாநாட்டில் கண்களில் கடும் எரிவையும், மூச்சுத் திணறலையும் உருவாக்கக் கூடிய புகைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பேசிக் கொண்டிருந்த போது கத்திக் கூச்சலிட்டு, குழப்பத்தை விளைவித்த நான்கு இளைஞர்கள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றார்கள்.கலந்து கொண்ட சிறுவர்கள், குழந்தைகள், பெரியவர்கள் என 40 பேர் வரையில் இதனால் பாதிக்கப்பட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ள இந்தத் தாக்குதலின் பின்னணி பற்றி பார்க்கலாம்.

பிரான்ஸில் மாநாட்டை நடத்திய உலகத் தமிழ்ப் பாண்பாட்டு இயக்கம் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இப்படியான மாநாடுகளை பல்வேறு நாடுகளில் நடத்தி வருகிறது. இந்த மாநாடுகளில் பல நாடுகளைச் சேர்ந்த தமிழ் மொழி சார்ந்த அறிஞர்கள், அரசியல்வாதிகள் கலந்து கொள்வது வழக்கம். ஆனால் சொல்லிக் கொள்ளக் கூடிய பாரிய திருப்பங்களை அந்த மாநாடுகள் இதுவரை உருவாக்கி விடவில்லை என்பதையும் இதில் குறிப்பிட வேண்டும்.ஆயினும் ஒவ்வொரு

மாநாடும் ஏதோ ஒரு சர்ச்சையை சந்தித்தபடிதான் நடந்திருக்கிறது. பிரான்ஸ் மாநாடு தொடங்குவதற்கு முன்னரே இரண்டு விதமான சர்ச்சைகள் ஆரம்பமாகின. இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்துக்குள் ஒரு பிளவு உருவாகியது. இரண்டு தரப்புக்கள் இந்தப் பெயருக்கு சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. இரண்டு தரப்புமே ஒரே பெயரையும் ஒரு இலச்சனையையும் பயன்படுத்துகின்றன.இரண்டு தரப்பினரும் மாறி மாறி அறிக்கை விடுகிறார்கள். தமது இலச்சனையை பயன்படுத்தினால் வழக்கு போடுவோம் என்றும் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் எச்சரிக்கின்றார்கள். ஆனால் யாரும் வழக்குப் போடுவதாகத் தெரியவில்லை. இரண்டு தரப்பினருக்கும் உலக அளவில் பெயர் மற்றும் இலச்சினை சம்பந்தமான சரியான சட்ட வலு இல்லை என்பதனை நாம் இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.இதில் ஒரு தரப்பு தமது பலத்தை நிரூபிப்பதற்கு அவசரமாக நடத்திய மாநாடுதான் இந்த பிரான்ஸ் மாநாடு. பொதுவாக உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் மாநாடுகளில் செய்வது போல் இந்த மாநாட்டிற்கும் இலங்கையில் இருந்து தமிழ் அரசியல்வாதிகள் அழைக்கப்பட்டிருந்தார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு தமது தரப்பிற்கே உண்டு என்பதை வெளிப்படுத்துவதும் அவர்களின் ஒரு நோக்கமாக இருந்தது.

பிரான்ஸ் மாநாடு முடிய சில வாரங்கள் கழித்து ஜெர்மனியில் ஒரு மாநாட்டை நடத்துகிற திட்டமும் அந்தத் தரப்பிடம் இருந்தது. இந்த நிலையில் மறுதரப்பு „இந்த மாநாட்டிற்கும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை“ என்று அறிக்கை விடுத்தது. ஏற்கனவே கட்டுரையில் குறிப்பிட்டதன்படி அறிக்கை மட்டும்தான் விட்டார்கள். வழக்கு ஏதும் போடவில்லை.ஆனால் இந்த மறு தரப்பிற்கும் நடந்த தாக்குதலுக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என்பதையும் இதில் சொல்லியாக வேண்டும். தமது எதிர்த் தரப்பு நடத்திய மாநாட்டில் குழப்பம் நடந்தது பற்றி அவர்களிடம் ஒரு திருப்தி காணப்படுகிறதே தவிர, அவர்கள் தாக்குதலை தூண்டி விடவில்லை.தாக்குதலுக்கான தூண்டுதலை வேறு ஒரு குழு செய்தது. மாநாட்டிற்கு மாவை சேனாதிராஜா வருவதன் அடிப்படையில் யாரும் எதிர்பார்க்காத ஒரு சர்ச்சையை அந்தக் குழு உருவாக்கியது.

பொதுவாக மாவை சேனாதிராஜா மேல் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக செயற்படுவதாக இதுவரை எந்தக் குற்றச்சாட்டும் வந்தது இல்லை. சுமந்திரன், சம்பந்தர் போன்றவர்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் போல் மாவை சேனாதிராஜா மீது விமர்சனங்கள் வைக்கப்படுவது இல்லை.

ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த காலங்களில் மாவை சேனாதிராஜா இலங்கை அரசால் தேடப்படுபவர்கள் பட்டியலில் இருந்தார். விடுதலை இயக்கங்களோடு மாவை எப்பொழுதும் நட்புடனேயே இருந்து வந்தார்.இந்த நிலையில் பிரான்ஸில் தன் மீது இப்படி ஒரு தாக்குதல் நடத்தப்படும் என்று மாவை சேனாதிராஜா எதிர்பார்த்திருக்க மாட்டார்.ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது சொற்படி நடப்பதில்லை என்ற கோபத்தில் இருந்த அந்தக் குழு, மாவைக்கு எதிர்ப்பு தெரிவுக்கும்படி அறைகூவல் விடுத்தது. அந்தக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள இணைய ஊடகங்கள் இந்தச் செய்தியை பெரிது படுத்தி பிரசுரித்தன. ஒவ்வொரு நாளும் மாவைக்குக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் எதிரான பிரச்சாரங்கள் நடந்தன.

இப்படியான ஒரு நிலையில்தான் மாநாடு ஆரம்பமாகியது. மாவைக்கு எதிராக வன்முறையை தூண்டும்படியான பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையிலும், மாநாட்டுக் குழவினர் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்கவில்லை. மாவை சேனாதிராஜா பேசிக் கொண்டிருந்த போது, அங்கே நின்ற நான்கு இளைஞர்கள் கூச்சலிட்டு குழப்பம் விளைவித்தனர். அவர்களை சிலர் அமைதிப்படுத்த முற்பட்ட போது, திடீரென்று மண்டபத்தில் கண்ணீர்புகை தாக்குதலை மேற்கொண்டு விட்டு அங்கிருந்து வேகமாக அகன்று விட்டனர்.இந்தத் தாக்குதலால் மேடையில் இருந்த மாவை சேனாதிராஜா பாதிக்கப்படவில்லை. ஆனால் நிச்சயம் அதிர்ச்சியுற்றிருப்பார். அதே வேளை புகைக் குண்டினால் மண்டபத்து இருக்கைகளில் அமர்ந்திருந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். பலர் கண்ணெரிவுக்கும் மூச்சுத் திறணலுக்கும் உள்ளாகினர். பாதிக்கப்பட்டவர்களில் சிறுவர்களும் இருந்ததார்கள் என்று செய்திகள் வெளியாகின.

கருத்துச் சுதந்திரத்தை ஆதரிப்பவர்களாலும், பொதுமக்களாலும் இந்தச் சம்பவம் வன்மையாகக் கண்டிக்கப்படுகிறது. மறுபுறம் தீவிரவாத அரசியலை பேச்சிலும், எழுத்திலும் கொண்டிருக்கிற தரப்பால் இந்த் தாக்குதல் ஆதரிக்கப்படுகிறது.

இரண்டு நாட்கள் கழித்து தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களில் ஒருவன் இது பற்றி விளக்க அறிக்கை ஒன்றை வீடியோ மூலமாக வெளியிட்டான். “மாவை ஒரு துரோகி, அவருடைய கூட்டத்திற்கு செல்பவர்களும் துரோகிகள், சிறுவர்கள் பாதிக்கப்படவில்லை, பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் தமது செயலை ஆதரிக்கிறார்கள்“ என்பது அந்த அறிக்கையின் சாரம்சமாக இருந்தது.இந்த வீடியோவும் இணையத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பெருமளவு பரப்பப்பட்டது. இணையத்தில் புனைபெயர்களில் தீவிர அரசியல் பேசுபவர்கள் இந்த வீடியோ அறிக்கையை வரவேற்று இதை பரப்பினார்கள்.

இந்த இடத்தில் சில விடயங்களை சொல்லியாக வேண்டும். வன்முறையை வளர்த்து விடுவது, ஒரு நேரத்தில் அதை வளர்த்தவர்களை நோக்கியே திரும்பி விடும். ஏற்கனவே பிரான்ஸ் நாட்டில் இதற்கு உதாரணங்களை தரக் கூடிய சம்பவங்கள் நடந்துள்ளன.அதை விட இந்த வன்முறையை கண்டிப்பதற்கும் நிராகரிப்பதற்கும் ஒரு முக்கியமான காரணம் உண்டு.வன்முறையில் ஈடுபடுகின்ற குழுக்கள் இன்று உலகம் முழுவதும் „தமிழ்த் தேசியம்“ என்பதை தமது கவசமாகவும், தம்மைப் புனிதப் படுத்தும் ஒரு கருவியாகவும் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

திடீரென்று ஒருவன் ஏதோ ஒரு கோபத்தில் வன்முறையை கையில் எடுப்பது என்பது வேறு. ஆனால் தொடர்ச்சியாக வன்முறை மீது நாட்டம் கொண்டு அதில் ஈடுபவது மனச்சிக்கல் சார்ந்த ஒரு விடயம். மற்றவர்களின் கவனத்தை தன்மீது குவியச் செய்கின்ற விருப்பம் அதில் ஒளிந்திருக்கிறது. அப்படியே வன்முறையில் ஈடுபடுபவர்கள் ஒரு நேரத்தில் தாதாக்களாக வளர்ந்து விடுகிறார்கள். அவர்கள் தம்மை ஹீரோக்களாக கற்பனை செய்யத் தொடங்கி விடுகிறார்கள். ஆனால் அவர்களின் வன்முறையின் காரணமாக பொதுமக்களின் முகச்சுளிப்பையும், புறக்கணிப்பையும் அவர்கள் எதிர்கொள்ள நேர்கிறது. இந்த இடத்தில்தான் தமிழ்த் தேசியத்தை கையில் எடுத்து பொதுமக்களின் கவனத்தை தமது பக்கம் சாதகமான முறையில் திருப்ப முனைகிறார்கள்.

விடுதலைப் புலிப் போராளிகள் மது அருந்துவது இல்லை. போதைப் பழக்கங்கள் எதுவும் அற்றவர்கள். அவர்கள் மக்களிடம் போகின்ற போது, தமது வெளித் தோற்றம் பற்றி மிகவும் கவனமாக இருப்பார்கள். தமது தோற்றமும், தாம் மக்களோடு பழகுகின்ற முறையும், அவர்கள் முகம் சுளிக்காத வண்ணம் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பவர்கள். இதற்கான அறிவுறுத்தல் அவர்களின் தலைமையால் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் இதற்கு முற்றிலும் நேர்மாறாக உள்ளவர்கள் இன்று தமிழ்த் தேசியம் பேசுகிறார்கள். தனக்கு பக்கத்தில் நிற்கின்ற சக மனிதன் மீது கனிவு காட்ட முடியாதவர்களுக்கு, எங்கேயிருந்து இனப்பற்று வருகிறது என்பது புரியமுடியாது ஒரு புதிராக இருக்கிறது.தமிழ்நாட்டிலும் இன்று சுயசாதிப் பெருமை பேசுபவன் கையில் புலிக் கொடியை ஏந்திக் கொண்டு, தலைவர் பிரபாகரன் பெயரை உச்சரிப்பதையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு புறம் சாதிப் பெருமை, மறுபுறம் இனப்பெருமை என்று இரண்டையும் தூக்கிக் கொண்டு திரிகிறான். கவசமாக தமிழ்த் தேசியத்தை பயன்படுத்துகிறான்.

தலைவர் பிரபாகரன் தமிழர் தாயகத்தில் சாதிப் பிரயோகம் இல்லாமல் பார்த்துக் கொண்டார். சாதியை இல்லாமல் ஒழித்து விட வேண்டும் என்கின்ற நோக்கத்தை அவர் கொண்டிருந்தார். அவருடைய காலத்தில் சாதியின் பெயரிலான ஏற்றத் தாழ்வுகள் செயற்பாட்டில் இல்லாமல் போயிருந்தன.இன்று அவரின் பெயரை சொல்லிக் கொண்டே சாதிப் பெருமையை பேசுகிறார்கள்.

தமிழ்த் தேசியத்தையும், தலைவர் பிரபாகரனின் பெயரையும் தவறான சக்திகள் பயன்படுத்துவது உலகம் முழுவதும் அதிகரித்துக் கொண்டு போகின்றது. மாவை மீதான தாக்குதலை விட, இந்த நிலைமையே அச்சம் தருவதாக இருக்கிறது.

சபேசன்-ஜெர்மனி 

சபேசன்

(Visited 72 times, 1 visits today)