இலங்கையிலும் முஸ்லிம் பெண்களுக்கு விருத்தசேதனம் (கிளிடோரிஸ் நீக்கம் வழக்கத்தில் உண்டு)-கட்டுரை-நஸீஹா முகைதீன்

நிறையுருவாக என்னுடலை கடவுள் படைத்தபடியே நான் பிறந்தேன்.

ஆண்கள் என்னை கொள்ளையடித்துக் கொண்டார்கள்.

எனது சக்தியையும் திருடிக்கொண்டார்கள்.

என்னை எதற்கும் இயலாத முடமாகவும் கைவிட்டார்கள்.

எனது பெண் பருவம் கன்னமிடப்பட்டுவிட்டது.

என்னிலிருந்து போக்கப்பட்ட எனது உடற்பாகங்கள்

கடவுளுக்கு தேவைப்பட்டிருந்தால் ஏன் அதனை அவர் படைத்திருக்க வேண்டும்.

எந்தப் பெண்ணும் இந்த வலியை உணராத நாள் ஒன்று

உதயமாக வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.

உனக்குத் தெரியுமா பெண்கள் பாலியல் உறுப்பு சிதைத்தல் சோமாலியாவில் தடைசெய்ப்பட்டுவிட்டது என்று மக்கள் சொல்லக் கேட்க வேண்டும்,.

அடுத்த தேசம், அப்படியே அடுத்த தேசம், அதற்கு அடுத்த தேசம் இந்த தடை பரவ வேண்டும். பெண்களுக்கான பாதுகாப்பான உலகம் ஒன்று ஏற்படும் வரை.

Waris Dirie (Desert Flower: The Extraordinary Journey of a Desert Nomad)

00000000000000000000000000000000000

நஸீஹா முகைதீன்பெண்விருத்தசேதனமானது பெரும்பாலும் பாரம்பரியமாக விருத்தசேதனம் செய்யும் பெண்ணகளால், பெண்களின் வீடுகளிலேயே பாதுகாப்பற்ற, சுகாதாரமற்ற முறைகளில் பெரும்பாலும் மயக்கமருந்து இன்றியே நிகழ்த்தப்படுகின்றது. சிலவேளைகளில் சில நாடுகளில் அல்லது பிரதேங்களில் முடிதிருத்தும் ஆண்களினாலும் இது நிகழ்த்தப்படுகின்றது. எகிப்து போன்ற நாடுகளில் மருத்துவர்களினாலும், சுகாதார பணியாளர்களாலும் 77 சதவீதத்திறகு மேல் பாதுகாப்பாக செய்யப்பட்டாலும், இன்றும் கிராமங்களிலும், பல்வேறு பிரதேசங்களிலும் கத்தி, கத்திரி, கண்ணாடித் துண்டுகள், பிளேடுகள் கொண்டு சுகாதாரமற்ற முறைகளில் பெண்கள் விருத்தசேதனம் நிகழ்த்தப்படுகின்றன.

பெண் விருத்தசேதமானது பின்வருமாறு வரையறுக்கப்படலாம். “கலாசாரத்திற்காக அல்லது மருத்துவ காரணங்களுக்கு அப்பால் பாலியல் பிறப்புறுப்பின் வெளிப்புற உறுப்பின் பகுதிகளை பகுதியாக அல்லது முழுமையாக அகற்றுதல் அல்லது அவற்றில் காயத்தை ஏற்படுத்துதல். இது பெரும்பாலம் நான்கு வகைப்படும்.

1)            கிளிற்றோரிசை நீக்காமல் அதில் சிறுபகுதியை வெட்டுதல்

2)            கிளிற்றோரிசை வெட்டி. அதை முற்றாக நீக்குதல்.

3)            கிளிற்றோரிஸ், சிறுபிற்சொண்டு, பெரும் பிற்சொண்டு போன்றவற்றை நீக்குதல்

4)            கிளிற்றோரிஸ், சிறுபிற்சொண்டு, பெரும் பிற்சொண்டு போன்றவற்றை வெட்டி, காயங்களை சேர்த்து தையல்போட்டு யோனித்துவாரத்தை மூடி, ஒரு சிறு துவாரத்தின் மூலம் சிறுநீர், மாதவிடாய் இரத்தம் வர அனுமதித்தல்.

மேற்சொன்ன வகைகளில் எங்களுடைய நாட்டில், முதலாவதும், இரண்டாவதும் நடைமுறையில் உள்ளது போல் தெரிகிறது. மூன்றாவது நான்காவது வகைகள் இலங்கைக்கு  அப்பால் பெரும்பாலும் ஆபிரிக்க நாடுகளிலேயே நடைமறைகளிலுள்ளவையாக இருக்கின்றன.

மூன்றாவது, நான்காவது வகையே மிகப் பாரதூரமான பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது. இவைகள் பெரும்பாலும் ஆபிரிக்க நாடுகளிலேயே நடைமுறைகளில் உள்ளன. தற்போதைய கணிப்பின்படி ஆபிரிக்காவில் 140 மில்லியன் பெண்கள் இவ்வாறு விருத்தசேதனம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.  ஒவ்வொரு வருடமும் 3 மில்லியன் பெண்கள் விருத்தசேதனத்துக்காக  உட்படுத்தப்படுகிறார்கள்.

மதத்தின் பெயராலும் கலாச்சாரத்தின் பெயராலும்  செய்யப்பட்டாலும், இவற்றால் சுகாதார ரீதியாக எந்த நன்மையும் ஏற்படுவதில்லை என்று கருதப்படுகின்றது. மேலும் இவற்றால் குறுகியகால, நீண்டகால பிரச்சினைகள் காணப்படுகின்றன. உடல், உணர்வு ரீதியான பாதிப்புக்கள் வாழ்க்கைபூராக காணப்படும். ஆபிரிக்க நாடுகளில் கருவேல மரங்களின் முட்கள் கொண்டு யோனித்துவாரங்கள் தைத்து மூடப்படுகின்றன. பாதூகாப்பற்ற முறையில் நிகழத்தப்படும் இந்த விருத்தசேதனத்தால்  , யோனித்துவாரங்கள் சிறிதாக்கப்பட்டு, சிறுநீர், மாதவிடாய் இரத்தங்கள் வெளியேறுவது கடினமாக்கப்படுகின்றது. வீக்கம், இரத்தப்போக்கு, வலி, சிறுநீர்கழிக்க முடியாமை, காயத் தொற்று, குருதிச்சோகை, சிறுநீர்த்தடத் தொற்று, செப்ரிசீமியா, ஏற்புவலி, பல வகையின தொற்று நொய்கள், தோல் நோய்கள், புண்கள் கட்டிகள், காயங்கள், சீழ்கட்டிகள், கருப்பைக் கழுத்து புற்றுநோய்கள் போன்ற பிரச்சினைகள் பெண்களுக்க ஏற்படுகின்றன. தொற்றுநீக்கப்படாத உபகரணங்களைப் பாவித்து இந்த விருத்தசேதனமானது  நிகழ்த்தப்படுவதனால் ஹெப்பாறிற்றிஸ் ஏ, பீ, எய்ட்ஸ் போன்ற நோய்களின் தாக்கம் ஏற்படுகின்றன. கருவுறுவதும், பிள்ளைப்பேறும் மிகுந்த சிரமத்திற்குள்ளாக்கப்படுகின்றன. உளவியல் ரீதியாக கவலை, மனஇறுக்கம், மனத் தளர்வு, அதிர்ச்சி போன்ற பல்வேறு தாக்கங்களுக்கும் உட்படுகிறார்கள். சில பேர் இறந்தும் விடுகிறார்கள்.

இந்த பெண்கள் விருத்தசேதனமானது. பல நாடுகளில் சட்டவிரோதமானதாக கருதப்படுகின்றது. ஐஎஸ்ஐஎஸ் தாங்கள் பிடித்துவைத்துள்ள நாடுகளிலும், நிலப் பிராந்தியங்களிலும் 11 வயது தொடக்கம் 46 வயதான பெண்கள் இதற்கு கட்டாயம் உட்பட வேண்டும் என்று கட்டளை இட்டு நிர்ப்பந்தித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நாடுகள் வாரியாக விருத்தசேதன பரவல். உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள வரைபடம்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் பல்வேறு இடங்களில் இந்த வழக்கங்கள் காணப்படுகின்றன என்று கூறினாலும் போறா, இஸ்மாயிலிய மூடிய சமூகங்களுக்குள்ளே இன்றும் வழக்கிலிருப்பதாக கருதப்படுகின்றன. தமிழ்நாட்டில் அறவே இல்லை என்று ஒரு சாரார் வாதிடும்போது, இன்னுமொருசாரார் ஆங்காங்கே மிகக்குறைந்தளவில் காணக்கிடக்கின்றது என்ற வாதங்களை முன்வைக்கின்றனர். இலங்கையைப் பொறுத்தவரையில் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் மிகத் தீவிரமாக காணப்பட்டாலும் கல்வியால் ஏற்பட்ட விழிப்புணர்வு, சில மதநிறுவனங்களின் தீவிரமான பிரச்சாரங்கள் காரணமாக மிகப் பாரியளவில் குறைந்தும் காணப்படுகின்றன. சூபித்துவ, தரீக்கா மத ஒழுங்குகளைப் பின்பற்றுபவர்களிலும், சில கிராமப் புறங்களிலும் இன்னும் இந்த வழக்கம் காணப்படுவதாக கருதப்படுகின்றது.

பெண்களின் பாலியல் ஆசைகளை குறைத்து, அவர்களை திருமணத்திற்கு அப்பாலான சட்டவிரோத பாலியல் உறவுகளிலிருந்து தடுத்தலும், திருமணத்திற்கு முன்னரான உறவின்போது, கட்டுக்கள் பிரிந்து துவாரங்கள் பெரிதாகி, திருமணத்தின் போதான உறவின் போது அது காட்டிக் கொடுத்துவிடும் என்பதும், இதன் காரணமாக சட்டவிரோத விடயங்கள் தடுக்கப்பட்டு, கன்னித் தன்மை பாதுகாக்கப்படும் என்றும் கருதப்படுகின்றது.

இந்த பெண் விருத்தசேதனமானது இஸ்லாத்திற்கு முன்பிருந்த புராதன காலத்திலிருந்தே அறியப்படுகின்றது. தற்போது நடைமுறையிலுள்ளது எகிப்திய “பாரோ” (பிர்அவ்னிய) முறையாகும். எனவே இது எகிப்திலிருந்து அரபு நாடுகளுக்கு கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும் என்றும கருதப்படுகின்றது.

என்னதான் இதனை மத ரீதியாக அணுகினாலும். இதற்கும் மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இன்றியே காணப்படுவதுபோல் தெரிகிறது. இந்த விருத்தசேதன முறை இஸ்லாத்திற்கு முந்திய எகிப்திலிருந்து அரபு நாடுகளுக்கு கடத்தப்பட்டவை போன்றே தெரிகின்றன. பெண் விருத்தசேதனம் சம்பந்தமாக காணப்படுகின்ற இஸ்லாமிய மத விளக்கங்கள் ஆதாரமற்றவை என்று தற்கால அறிஞர்களால் கருதப்படுகின்றன. ஒவ்வொரு இஸ்லாமிய மத ஒழுங்கும் (மத்ஹப்) ஒவ்வவொரு கருத்தைக் கொண்டிருக்கின்றன. தற்கால இஸ்லாமிய சட்ட அறிஞர்களுள் அல் ஸையித் ஸாபிக் அவர்கள் “பெண் விருத்தசேதனம் பற்றி கூறப்படும் அனைத்து ஹதீஸ்களுமே பலவீனமானவையாகும் அவற்றுள் எதுவுமே ஆதாரபூர்வமானதல்ல என்று உறுதியாக கூறுகிறார் (பிக்ஹ் அல் ஸூன்னா 1/36).

இஸ்லாமிய சட்டத்தில், ஒரு தனிமனிதனது வாழ்வு, உடல் ஆரோக்கியம் என்பவற்றைப் பேணிப் பாதுகாப்பது, சட்டரீதியான தேவைப்பாடு ஆகும். இந்த சட்டரீதியான தேவைப்பாடு எவற்றுக்கும் தீங்க விளைவிப்பது எதுவும் சட்டவிரோதமானது ஆகும்.

எனவே பெண் விருத்தசேதனமானது, இஸ்லாத்தின் போதனைசார்ந்த விடயம் அல்ல என்பதும், அது வழிவழியாக பின்பற்றப்பட்டுவரும் ஒரு கலாச்சார செயன்முறை என்றுமே கருதவேண்டும். அதாவது பெண்ணுடலை எல்லையில்லாமல் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்த வேண்டும் என்ற ஆண்மையவாத கருத்தியலால் கட்டமைக்கப்பட்ட சட்டவிரோத செயல் என்றுமே முடிவுக்கு வரவேண்டி இருக்கிறது.

நஸீஹா முகைதீன்

(Visited 148 times, 1 visits today)