கிழக்கிலங்கையின் பின்நவீனத்துவ எழுத்துக்கள், றியாஸ் குரானாவை முன்வைத்து-கட்டுரை-சாஜீத் அஹமட்

 

சாஜீத் அஹமட்படைப்புக்கள் தன்னை நோக்கி விடப்படுகின்ற ஓராயிரம் கேள்விகளின் பின்னால் தஞ்சம் புகுகின்றன. காலத்தினை நோக்கி வெகு விரைவாகப்  பாய்ந்து விடும் பிரதிகளின் வழியே எழுத்துக்கள் முளைக்கின்றன. மாமூலான இருப்புக்களைத் தாண்டி வெளிப்படைத் தன்மையில் இயங்குகின்ற பரீட்சார்த்த முறைமைகளை, நிலைமைக்கு ஏற்றவாரு பிரதிகள் உருவாக்கிக் கொள்கின்றன. ஒரு பிரதி காலத்தின் நிழலாகவும், நிகழ்வுகளின் தலையீடாகவும் எம்முன் விரிவடைகிறது. யதார்த்தங்களின் பார்வைக் கோட்டிலிருந்து விடுபட நினைத்து, பிரபஞ்சம் தாண்டிய, அல்லது யதார்த்தங்களை மீறிச் செயற்படுகின்ற பிரதி வெளிக்குள் நாம் தள்ளப்படாமலில்லை. எவ்வாறு இம்முறையினை அணுகி, செயற்பாட்டுத் தளத்தினை புரிந்து கொள்வது எனும் குழப்பத்தில் இவ்வெளியினை விட்டு அகண்டோடியவர்கள்தான் அதிகம். எவ்வளவு புயல் வீசிய போதும், சுழியினில் அகப்படாமல், தங்களை பாதுகாத்துக் கொண்டு பிரதிகளின் ஊடாக எம்முன் உரையாடத் தொடங்கிய தளத்தினை, எமது சூழலில் ஒரு சிலரே முன் வைத்தனர். அவர்களுள்  மிகப் பிரதானமானவர் கவிஞர் றியாஸ் குரானா. ஏதோ ஒரு வகையில் பிறப்பொடுத்துக் கொண்டிருக்கும் புதுமைகளின் வாசனை, குரானாவின் எழுத்துக்களில் இருந்தே தமிழ்ச் சூழலுக்கு அறிமுகமாகியது. எல்லாப் பிரதிகளும் ஒரு போக்கினைத் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்த வேளையில், குரானாவின் பிரதி வடிவங்கள் மொழியியல் மீதான கட்டுடைப்பினை செய்து கொண்டிருந்தன. இயற்கைத் தனங்களில் வெளிப்பட்டு நிற்கின்ற மரணம், வாழ்வு, கனவு, காட்சி, பௌதீகம், என விரியும் பரப்பினில், சிறு கருவியாக அவற்றுல் மாற்றத்தினை கொண்டுவந்த பிரதிகளுள்  குரானா முக்கியமானவர். மட்டுப்படுத்தப்பட்ட எல்லைகளைத் தகர்த்து, அழுத்தமும் யதார்த்தங்களை மீறிச் செயற்படும் கண்டுபிடிப்பாளனின் யுக்தியும் குரானாவின் கவிதைகளில் நிரம்பியிருக்கின்றன. நுகர்கின்ற வாசகப் பரப்பின் மீது, சுமையற்ற மீட்சியினை எப்பொழுதும் வேண்டி நிற்கின்ற சொற்களை குரானா அதிக இடத்தினில் கையாளவில்லை. இதன் காரணமாகவே ஒரு வாசகன் குரானாவின் எழுத்துக்களில் நவீன இயங்குதளத்தின் பெரும்பாரத்தை புரிந்து கொள்கின்ற அதே சமயம், ஓர் அபரிதமான விடுதலைப் பண்பினையும் உணர முடியும். வரட்சியான நிலத்திலிருந்து உருவாக்கப்படுகின்ற ஒரு மரத்தினை புறவயக் காரணிகளின் செயற்பாடு இயங்க வைக்கின்ற புதினத்தை குரானாவிடம் கற்க வேண்டியிருக்கிறது.

“ஆதி நதியிலிருந்து கிழக்குப் பக்கம் பிரிகிறது ஒரு கிளை”, “வண்ணத்துப் பூச்சியாகி பறந்து திரிந்த கதைக்குரிய காலம்”, “நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு”, “மிகுதியை எங்கு வாசிக்கலாம்”, “மாற்றுப் பிரதி” ஆகிய தொகுப்பாக்கங்களை  முன்வைத்த குரானாவின் படைப்புலகத்தினை, மிக எளிதாக வகைப்படுத்திவிட முடியாது. காலத்தின் மிகத் தீவிரமான உருவாக்கம், அவற்றின் மீதான உரையாடல்கள், பிரதிகளின் உணர்வுத்தளமாக அமைந்திருக்கின்றன. காலத்தின் உக்கிரமான பேரிருப்பின் மூலையில் வசிக்கவும், அக்காலத்தின் மறைவிடங்களை பேசுவதும் பெரும் குற்றங்களாக்கப்பட்ட சூழலில், அவற்றினை மறுதலித்து தமது பிரதிகளினூடே பெரும் அரசியலினை நிகழ்த்திய குரானாவின் எழுத்திமைப் போக்கு, ஒர் விரிந்த அடையாளம். கவிதைகள் கொண்டியங்கும் மாற்றியல் போக்கினை பெரும் விவாதத்திற்கு அழைக்கும் விமர்சனப் பாங்கும்; குரானாவின் எழுத்துக்களில் தங்கியிருக்கின்றன. ” நவீன கவிதைகள் காலாவதியாகிவிட்டன” எனும் பெரும் பரப்பினை இங்கு ஏவிவிட்டு, காத்திரமான உரையாடல் மொழியினை குரானா தோற்றுவித்தார். முரண்பாட்டைக் காட்டிலும் கவிதைகளை பராமரிக்கும் முக்கியமான முரண்பாடு குரானா. குரானாவினைப் பொறுத்தவரை கவிதைகளும், மொழியும் பொது வெளியில் நிகழ்வதாகிவிட்ட அல்லது, பொது வெளியில் மதிப்பிடப்படும் பெருத்த விவாதக்காரணியாக மாறிவிட்டிருக்கின்றன. ஒரு பிரதி உருவாக்குகின்ற சிக்கலை, பல்லாயிரம் கேள்விகளை, பிரதிகளோடு நாம் புரிகின்ற வினைகளை குரானாவின் இயங்குதளம் மிக வேகமாக இயக்கியிருக்கிறது. மொழிகளின் போக்கினை தனக்கான ஒன்றாக உருவாக்கிக் கொள்ளும் குரானாவின் இயங்குதளம் எதிர்பார்ப்புகளுக்கும், வெற்றிகளுக்கும், தோல்விகளுக்கும், நிராசைகளுக்கும் ஆரம்பமாகவிருக்கின்ற குறுகிய வெளியிலிருந்து வெளியேறுகின்ற உபவழிகளை சொல்லித் தருகின்றன. நமது யதார்த்தங்களைக் காட்டிலும் பிரமாண்டமான பேரிருப்பின் இயற்கையினைத்  தனது மொழிக் கூட்டிற்குள் நகர்த்திச் செல்லும் பண்புகளை தனது பிரதிகளுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார் குரானா. சாவகாசமான மொழிப் போக்கில் அமைந்த சித்தரிப்புக்களின் ஊடே, எதிர்பார்க்கப்படாத கூரிய ஆழ்படிமங்களானது, மொழியினில் செலுத்துகின்ற அதிகாரத்தின் வடிவம், முற்போக்கான கலாச்சாரத் தேடுதல், உடைத்து விடப்படுகின்ற சமூகக் கட்டமைப்பின் விரிசல்கள் என பெரும் போக்கு முறைமைகள் குரானாவின் பிரதிகளாக வெளிப்பட்டு நிற்கின்றன. நிறுவன சூழ்ச்சிகளுக்கு ஆட்பட மறுக்கின்ற, நிறுவன வங்குரோத்தின் மீது பிரிதொரு எதிர்வினையினை பாய்ச்சுகின்ற அமைப்பியல் சார் வடிவம் கொண்ட மொழி, ஒரு படைப்பின் நேரடிக் காலமாகும். அக்காலத்தின் திரிசங்கு நிலையியலை வாசகன் நுகர்கின்ற பிரதிக்கோணத்திலிருந்து, குரானா மிக அதிகமாகவே வேறுபடுகிறார்.

 கூந்தல் மயிரினால்

 வேயப்பட்டு விரிந்து கிடக்கும் கூடாரத்தில்

 ஓம் என்ற தாய்ச்சொல் துயில்கிறது.

 

 நிலத்தின் கொதிக்கும் சூட்டினால்

 தோல்களில் இறுக்கிக் கட்டப்பட்டிருக்கும் துணிவு

 நீல வானத்தை அதிர்த்தக் கூடியது.

 இது பொய் மாதிரி தெரிகிறதா?

 இன்றைய தினத்தில்

 உனக்கு அத்தாட்சியிருக்கிறது

 நீ கவனிக்கத் தவறமுடியாதபடி

 

 இழக்க முடியாத பலம்

 முன்னோர்களின் திசைகளில்

 மண்டியிட்டுக்கிடக்கும் பிராத்தனையில்

 முறுக்கேறித்தெறிக்கும் எனது முற்றத்தில்

 இன்னும், அத்தாட்சிகள் இருக்கின்றன.

 

 சிறு பூச்சிகள்

 சிங்கப்படைகளை துரத்துவது தவிரவும்

 இங்கே அத்தாட்சிகள் இருக்கின்றன.

2003 ல் “ஆதி நதியிலிருந்து கிழக்குப் பக்கம் பிரிகிறது ஒரு கிளை” எனும் பிரதியில் இடம்பெற்ற குரானாவின் செயற்பாடுகளில் இதுவும் ஒன்று. கவிதை, நாவல், சிறுகதை எனும் வடிவங்களைத் தாண்டிப்  பின் இலக்கியச் செயற்பாடு குறித்த பார்வைகளுடனும், சட்டகங்களின் இருப்பினை கேள்விக்குட்படுத்தும் ஒரு வகைமுறை இப்பிரதியில் தங்கியிருக்கின்றன. இவ்வாறன பிரதிகளை (Micro fiction) எனும் சட்டகத்தினுள் வகுத்திருக்கிறார் குரானா. எதை இழந்தேனும் பெறப்போகும் முஸ்லிம் தேசத்திற்காக சமர்ப்பணமாக்கப்பட்ட இப்பிரதி முக்கோண அதிகாரத்தின் போராட்டங்கள் மீது புனைவுகள் நிகழ்த்திய சமர். ஒரு நதி எப்படியான குறியீட்டுடன் பயணிக்கிறது. நதிகளின் மீது சாத்தியங்கள் எவ்வாறு உருவாகின்றன, நதிமூலத்திலிருந்து ஒரு சமூகத்தின் காவுவளங்கள் விரிந்து செல்லும் கோட்டினை பிரதியாக்குகின்றமையே குரானாவின் அன்றைய மொழி. 90 களில் வீரியம் பெற்றிருந்த அரசியல் விடுதலைப் பிரதிகளினதும், போரியல் பிரதிகளினதும் பெருத்த சூழலின் இம்மாறான மொழிப் போக்குகள் தனிக்கோடுகளாய் கீறப்பட்டன. குரானாவின் இலக்கியச் செயற்பாடுகளோடு ஒன்றித்துப் பயணித்த கவிஞர் மஜீத் இவ்வாறு கூறுகிறார்.

“சட்டகங்களை கலைக்க முடியாத உண்மையாக இன்னும் நிர்மானித்திருப்பதும் அவைகளின் வழிகாட்டுதலின் மூலமே நமது இலக்கியச் செயற்பாடு நீட்சி கொள்வதையும் சிதைத்துப் பார்க்க வேண்டியதன் அவசியத்தை பேசுவதாகும். றியாஸ் குரானாவின் “ஆதி நதியிலிருந்து கிழக்குப் பக்கம் பிரிகிறது ஒரு கிளை” எனும் இப்பிரதியை சட்டகங்களைக் (வகைமாதிரி) கேலி செய்யும் பின் இலக்கியச் செயற்பாடாகவே பார்க்கவிரும்புகின்றேன். இப்பிரதி கவிதையா? காப்பியமா? சிறுகதையா? நாவலா? வரலாறா? எதுவென அடையாளப்படுத்த முடியாமல் திமிறிக் கொண்டிருப்பதோடு, பல்தரப்பட்ட வகைமாதிரிகளின் கூறுகளையும் படிமங்களையும் பொறுக்கியெடுத்து பிரதியின் எல்லையற்ற வெளியில் உயிர்ப்பித்துக் கொண்டிருக்கின்றது. இப்பிரதி வரலாற்றின் தற்காலிக நிகழ்வில்  கரையக் கரைய எழுத்தாகி விட்ட இலக்கியத்தனம் எனலாம்”.

பிரதி வெளி அரசியலிலிருந்து தேசத்தினை பாட முனையும் நினைவுப் படிமங்கள் குரானாவின் கவிதைகளில் வண்ணத்துப் பூச்சியாகி பறந்த கதைக்குரிய காலமாக இருந்திருக்கிறது. (Micro fiction )சட்டமை கொண்ட இப்பிரதியும் முஸ்லிம் தேசிய அடையாளத்துடன் முன் வைக்கப்பட்ட எழுத்து முறைகளாகும். இப்பிரதி பற்றி சிறாஜ் மஷ்ஹர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“சொற்களுள் கருத்துக்களை மடக்கிப் பிடிக்கும் மந்திரக்கோல்தான் ஒரு நல்ல கவிஞனை வழி நடாத்தும் என்றிருப்பின், றியாஸிடம் அந்த மந்திரக் கோல் நிச்சயம் இருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது”.

குரானாவின் கவிதைகளால் நிரப்பப்பட்ட உலகம் மிக விசித்திரமானது. எங்கும் வியாபித்திருக்கின்ற அழகியல் கூறுகளிலிருந்து கவிதைகளை நுகர முயற்சிக்கலாம். அத்துமீறிய உணர்வுகளின் மெல்லிய வெளிச்சத்திலிருந்து குரானாவின் கவிதைக்கான வேர்கள் நடப்படுவதாக நம்புகிறேன். பொது நிலை மனப்பாங்கு சார்ந்த கவிதைகளின் வெளியிலிருந்து ஏராளமான உரையாடல்கள் இங்கு உருவாக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும் அடுத்தகட்ட நகர்வின் சாயலினை கொண்டிராத கவிதைகளின் இறக்குமதி இவையெல்லாவற்றிக்கும் சவாலகவே இருந்திருக்கின்றன. வெளிப்பாட்டு நிலையியல் பற்றி உரையாடத் தொடங்கிய கவிதைப் பாங்கிலிருந்து முற்று முழுதாக மாறி, கவிதைகளின் கோர்வையானது மசாலா பரப்பினுல் தூவப்பட்டிருப்பதினை அல்லது தூவுகின்ற கால ஓட்டம் எம்மை பீடித்திருக்கிறது. அதிகார வங்குரோத்து வாதம், தேசிய, சர்வதேச இருப்பியல் கேள்வி, இன அடையாள மறுதலிப்பின் எதிர்ப்பு வாதம், நில அடையாளங்களின் பார்வை, போர் யுகம் என விரிவடைந்திருக்கும் பரப்பது. மொழி எனும் பெருத்த அடையாளத்தின் ஊடாகவே பல்வேறு வகையான எழுத்து முறைமைகளை உருவாக்கிக் கொள்கிறார் குரானா. மொழியினை பார்வைக்கு கொண்டுவருகின்ற இம்மாதிரியான செயற்பாட்டு முறை, பிரதிகள்; மீதான எமது வாசிப்பு மனத்தினை அதிகரித்திருக்கின்றன.

பன்முகப் பார்வையினைக் கொண்ட பிரதிகள் எல்லா செயற்பாடுகளின் மீதும் தனது காலடியினை பதித்திருக்கிறது, என்பதினை நாம் நம்பியே ஆக வேண்டுமா என்ன? இவ்வாறான நிகழ்வுகள் நமது வாழ்வின் நிம்மதியற்ற கணங்களில், நாம் நம்பிக்கை இழந்திருக்கும் பொழுதில் நம் உடல் சோர்வடைந்திருக்கும் போது, சில நேரங்களில் ஒரு கவிதை நம் நினைவிற்கு வந்து, நம்முடைய சிந்தனையினை கிண்டிவிடும். ஒரு பிரதியோ ஒரு புதுமையோ போதும், நமக்கு வியப்பினை அளிப்பதற்கு, கலக்கம் விடுபடுவதற்கு. பிரதிகளின் இன்பத்தினை அறிவதற்கு. இவ்வாறே குரானாவின் அடுத்த நகர்வு பெருவெளிக் காலத்திலிருந்தே வேறொரு முகமாய் வெளிவருகிறது. விமர்சனப் பரப்பிலிருந்தும், பின்நவீனத்துவ இயங்குவாதியாகவும் பெரும் இருப்பினை தனது பிரதிகளில் தெளிக்கிறார் குரானா. நடைமுறை  இலக்கியச் சூழலின் மரபிலிருந்து பின் அமைப்பியலுடன் காத்திரமாய் வெளிவந்த பெருவெளி, அதன் செயற்பாட்டாளராக இயங்கிய குரானாவின்  micro fiction அமைப்பிலிருந்து poerty fiction  முறையாக தோன்றுகிறது. பெருவெளியின் விரிந்த  இயங்குதளம் பற்றி “இஸ்லாமிய தமிழிலக்கியம் நான்காவது பரிமாணத்தை நோக்கி” எனும் கட்டுரையில் பெருவெளி செயற்பாட்டாளர் எம். அப்துல் றஸாக் இவ்வாறு கூறுகிறார்,

“ஆசிரியனின் அதிகாரம், உடைவில் நிர்மாணம் போன்ற பின்நவீன கோட்பாட்டம்சங்களை பெருவெளியினர் இதுவரை கொட்டிக் கவிழ்க்க முனைந்துள்ளனர். தேசியம், விளிம்பு நிலைக் கதையாடல், சிறுபான்மைச் சொல்லாடல் போன்றவற்றை கடும் விவாதப் பொருளாக ஆக்கியிருக்கின்றார்கள். முஸ்லிம் தேச இலக்கியத்தை முன் கொண்டு செல்பவர்கள் என்ற அடிப்படையில் பின்நவீனத்துவம் உலகளாவிய அளவில் போராடும் பல கோணல்கள் குறித்த கோட்பாடு (Queer theory)விடயத்தில் பல சவால்களை எதிர்நோக்கியுள்ளனர். இது விடயத்தில் இவர்களுக்கும் மற்றவர்களுக்குமிடையிலான உரையாடல் வெளிதான் முஸ்லிம் தேச இலக்கியத்தை தீர்மானிக்கப் போகிறது என்று தீவிரமாக நம்புகிறார்கள்” .

எழுத்துக்களின் ஊடான கூறுகளை அறிந்து கொள்வதற்கான அனைத்து வாய்ப்புக்களையும், இன்றைய உலக அதிகாரத்தின் பெருத்த கருத்துப் பறிமாற்றல் எனும் விரிந்த பரப்புக்களே தீர்மானிக்கின்றன. இவற்றினை சாத்தியப்படுத்தக் கூடிய செயற்பாடுதான் சமூகக் கட்டுடைப்பு சார்ந்த கருத்தியல் கோட்பாடாகும். இன்று பெரும் விவாதக் கருப் பொருளினையும், அதிகார அடையாளங்களையும் பிரதிபலிக்கின்ற பின்நவீனத்துவ கருத்தியல் போக்கானது மையத்தின் மீது நிகழ்த்தப்படும் அதிகார இருப்பியலின் வங்குரோத்தில் கவனம் கொள்கின்றன. இதனால் பிரதி சார்ந்த உரையாடல்கள் உலகலாவிய ரீதியல் வேகமாகப் பரவி தன்னுடைய அடையாளப் பரப்பினை விஸ்தரித்திருக்கிறது. அதிகார செயற்பாடுகள் பிரதிகளுக்கான உரிமைகளை தக்க நேரங்களில் வழங்காமல் அவர்களின் தனித்துவமான கடமைகளுக்கு முட்டுக் கட்டையாக செயற்படுகின்ற நிலையினை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆசிரிய இறப்பின் பின் வாழ்வுண்டா என்று நாம் விவாதிக்கும் அதே வேளையில், பிரதியின் பின் வாழ்வுண்டா? எனும் கேள்வியும் எழுகிறது.  குரானாவின் பிரதிகள் கூறும் குறிக்கோள் அல்லது நனவாக்கவிரும்பும் கனவு என்னும் பரப்பு பரந்துபட்டது. தற்போது நிலவிவரும் பின்நவீனத்துவ வடிவத்தையே, அதிகார வர்க்கத்தினைப் பார்த்து கேள்வி கேட்கின்ற உரிமைப் போக்கின் வடிவமாகவும், புரிந்து கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் நிறையவே இருக்கின்றன. இவற்றிலிருந்து விடுபட முயற்சிப்பதும், அல்லது ஒதுங்கிச் செல்வது எனும் நிலைப்பாட்டினை எடுப்பவர்கள், புதிய தளத்தினை விட்டு நகர்கிறார்கள் என்பதினை புரிந்து கொள்ள முடியும்.

பெருவெளி இதழ் 03 ல் , “பின் நவீன நிலவரம் : முஸ்லிம் தேச இலக்கியம் – கவன ஈர்ப்புக்கான பிரதி” எனும் தலைப்பில் வெளிவந்த குரானாவின் கட்டுரை அதிகார வெளியினில் நின்று, குழியோடி தப்பித்து விட முடியாத இருப்பின் அந்தரங்கங்களை, பின் இலக்கிய மாற்றிலிகளிலிருந்து தெரிந்து எடுப்பதற்கான நிர்மாணங்களின் கட்டுடைப்பாகும். இக்கட்டுரையின் பிற்குறிப்பு அடையாள வெளியின் ஈர்ப்புமாகும். அக்குறிப்பு…

“பின் நவீனத்துவத்திலிருந்து முஸ்லிம் தேச இலக்கியத்தை வாசிப்பதற்கான மேலாட்டமான முயற்சிதான் இந்தக் கட்டுரையின் நோக்கம். முஸ்லிம் தேசத்தின் சிறு கதையாடலை கருத்து நிலைக்கு கொண்டுவரும் ஒர்  சிறு முயற்சி. அதே நேரம் சிறுபான்மைக் கதையாடல் அதாவது வரையப்படும் எல்லைகளுக்கு வெளியே திமிறிக் கொண்டிருக்கும் மிச்சங்களின் அரசியல் முக்கியத்துவம். என்ற பின் நவீன நிலவரத்தின் பாற்பட்ட வாசிப்பினையே இது அதிகம் கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறது. கட்டுரைப் போக்கில் குறிப்பிடப்படும் எழுத்துச் செயற்பாட்டாளர்கள் என்பது குறித்த நேரத்தில் நினைவுக்கு வந்தவர்கள் மாத்திரம்தான். நினைவில் தட்டுப்படாதவர்கள் பலர் இருக்கலாம். ஆகவே குறிப்பிடப்படுபவர்கள் முக்கியத்துவம், முக்கியத்துவமின்மை என்ற அளவில் வாசிப்புக்குட்படவில்லை. கட்டுரைப் போக்கிற்குப் பொருந்தி வரக்கூடியவர்களில் நினைவில் தட்டுப்பட்டவர்கள் என்றளவிலே கருதப்படுகிறார்கள். மற்றும் அ.மார்க்ஸ், இஹ்ஹாப் ஹஸன், எட்வேர்ட் செய்ட், சார்ள்ஸ் பேர்ன்டயின் போன்றவர்களின் கருத்தாக்கங்கள் திருடப்பட்டும், விளக்கப்பட்டும் இக்கட்டுரை அமைந்துள்ளது. “என்கிறார் குரானா.

பரந்து கிடக்கும் இலக்கியப் பிரதியின் மீது நாம் எவ்வகையான ஆதிக்கத்தினை செலுத்த முடியும் என்பதே எமது பிரதிகளின் அங்கீகாரம். ஒரு பிரதியானது தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள பல்வேறுபட்ட விமர்சனங்களை எதிர்பார்த்தபடி, உரையாடல்களை உருவாக்கியபடி இருக்கும். இவ்வகை எதிர்பார்ப்பானது இலக்கியப் பிரதிகளைப் பொறுத்தவரை மிக அவசியமான ஒன்றாகவே நான் கருதுகிறேன். ஒரு பிரதி தன்னை பெருப்பித்துக் கொள்வது அதன் மீது முன் வைக்கப்படும் பல நூறு கேள்விகள் மூலமாகவே இடம் பெறுகிறது. குரானாவைப் பொறுத்தவரை விமர்சனங்கள், கேள்விகள் என்பன இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. சில அபரிதமான  பின்புலத்தினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் கவிதைகள் மிக அதிகமான கேள்விக்கு உட்படுத்தப்படுவதினை நாம் அவதானிக்க முடியும். அவ்வாறான கவிதைகள் மீது பாரிய வரலாற்றுச் சுமை இருப்பதாக நாம் யூகிக்கலாம்.

“பிரதி என்பது மொழிக் குறிகள் நடத்தும் விளையாட்டு” என்கிறான்  ரொலான் பார்ட். இவ்வகைப் போக்குடன் இயங்கிக் கொண்டிருக்கும் குரானாவின் மொழிகளும் ஒரு சுழற்சி விளையாட்டினையே மேற்கொள்கின்றன. தனது இலக்கிய செயற்பாடு பற்றிய குரானாவின் மொழிதல் கூட விசித்திரமானது. மாற்றுப் பிரதியில் இவ்வாறு சொல்கிறார்,

“தற்செயல் நிகழ்வுகளால் கிளைத்துச் செல்லும் காலங்கள் பற்றிய புனைவுகளை உண்மையென நம்பும் வாழ்வு அவர்களை நடத்திச் செல்கிறது. கதை மனிதர்களை என்ன செய்ய வேண்டும் என்பதை முன் கூட்டியே தீர்மானித்து விடுகிறான். இரண்டு கொலைகளை செய்ய வைத்ததும் தலை மறைவுத் துயர வாழ்வை கதை மனிதன் மீது திணித்ததும் யாரென்று இப்போது புரிந்திருக்கும் கடைசியாக ஒளிந்திருக்கும்படி அவன் பணிக்கப்பட்டது அந்த நூலகத்திலிருக்கும் மிகப் பழமையான புத்தகத்தினுள் நான் – எனது எழுத்துக்கள் இலக்கியத்தை கொல்பவனின் சாட்சியம் மட்டுமே”.

அதிகாரத்தினை தாண்டிய அமைப்பலிருந்து விடுபடும் ஆசிரிய விம்பத்தினை ஆதரித்து, ஆசிரியன் அதிகாரக் காட்சியின் பொருளாக மாறிவிடக் கூடாது எனும், ஆசிரியன் செத்துவிட்டான் பரப்பில் குரானாவின் எழுத்துக்கள் பெரும் மாற்றமைப் பண்புகளை பேசியிருக்கின்றன. அதிகாரக் காட்சியினை இலக்கியப் பரப்பினூடும், செயற்பாட்டுத் தளங்களினூடும் சாட்டி விட்டு, நிதர்சனமாக வெளியேறும் பிரதிகளாகவும் இருக்கின்றன. எழுத்துக்கள் எப்பொழுதும் உயிரின் மையத்தினை ஆட்டுவிக்கக் கூடியவையே. ஒரு படைப்பினை நுகர்கின்ற போது அது எம்மாதிரியான விளைவினை நுகர்வோன் மத்தியில் ஏற்படுத்தும் என்கின்ற வகைப்பாடுதான் அப்பிரதியினது உயிரின் மையம். ஒரு பிரதி என்று அறியப்படுவது மொழிகளின் மூலமே தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது. பிரதிகளின் காத்திரம் மொழியினை ஒரு ஒப்பற்ற தளத்திற்கு கொண்டு செல்கிறது. பிரதிகளின் உணர்வுகள் எப்பொழுதும் விசாலமானவை, பூலோகத்தின் சகலதையும் பதிவு செய்யக் கூடியவை, மொழியிலிருந்து  வெளிவருகின்ற அனைத்து விடயங்களினதும் இன்பமானது பிரதியாளனின் மொழிகளின் வீரியத்திலிருந்து உருவாக்கம் பெறுகின்றன. இதுவே பிரதியாளன் கொண்டிருக்கின்ற மாய விம்பமாகும். இவ் விம்பத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளாமல்;  பிரதிகளை எப்பொழுதும் மிக நேர்த்தியாக நேசிக்கின்ற ஒரு படைப்பாளனால்  மட்டுமே தரமான இலக்கியங்களைத் தர முடியும்.

நிறுவன கட்டமைப்புகளின் மீது நிகழ்த்தப்படுகின்ற கோட்பாட்டு வாதங்களை எழுத்தியக்கம் விவாதப்படுத்திய சூழலில், இலக்கியமும் பின்நவீன சிந்தனைப்பாட்டிற்கு கடமை புரிகின்ற சேவகனாக தோற்றம் கொண்டது. குரானாவின் மிகுதியை எங்கு வாசிக்கலாம், மாற்றுப் பிரதி, நாவலொன்றின் மூன்றாம் பதிப்பு (poerty fiction)  இருப்பினை அடையாளப்படுத்தி வாசிப்பு செய்யப்பட்டன. இதற்குப் பின் பலவிதமான சிந்தனை வார்ப்புகள் இருப்பதாக நாம் நம்ப முடியும். மொழியில் உருவாக்கப்படுகின்ற மாயைகள் என்பது பிறஅடையாளத்திற்கான புரிதல்களாகவே இருக்கின்றன. தமிழ்ச் சூழலினைப் பொறுத்தவரை பிறஅடையாளங்கள் மீதான அரசியலினை புரிந்து கொள்வது மிகத் தேவையாகிறது. பெரும்பாலும்  அரசியல் நிலைப்பாட்டினை கதைப்பரப்பில் தக்க வைக்கின்ற பெரும் பணியினை அவை செய்கின்றன. அந்நிய நிலத்தில் விதைக்கப்பட்ட இப்போக்கின் தாக்கம்; பிற்பாடு தமிழ்ச் சூழலில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கிறது. உள்ளதை உள்ளபடி கூறுவதா? அல்லது மையத்தின் அமைவினை மொழிமாற்றம் செய்வதா? போன்ற கேள்விகள் இவ்வகைப் பிரதிகளின் மீது முன்வைக்கப்படுகின்றன. எவ்வாறு இருப்பினும் ஒரு பிரதியினை வாசகன் நுகர்கின்ற போது அங்கு வியாபித்திருக்கின்ற பிரதி பற்றிய கனவுச் சித்திரங்களை நேரடித் தமிழ் இலக்கியங்கள் மிகக் குறைவாகவே தந்திருக்கின்றன.

” மறுகா” இதழ் 09 ல் வெளிவந்த குரானாவின் “நவீன கவிதை காலாவதியாகிவிட்டது” எனும் கட்டுரை தமிழ்ச் சூழலின் இன்னுமொரு முகத்தினை உருவாக்குவதற்கான இயங்கியல். கவிதைகள் குறித்த பெரும் உரையாடலினை சாத்தியப்படுத்துவதற்கும், மாற்றுச் சிந்தனையுடான ஒரு நிகழ்ச்சி நிரலினை உருவாக்குவதற்குமான நெடிய கோட்டினை அக்கட்டுரை, அதன் மீதெழுந்த விவாதங்கள்; ஏற்படுத்தியிருந்தன. இக்கட்டுரையில் குரானா குறிப்பிடும் போது

“நவீனத்துவம் என்ற கருத்தாக்கம் தமிழைச் சந்திப்பதற்கு முன் இலக்கியம் என்ற சொல் கவிதைகளையே குறித்தது. அவை இலக்கியம் என்ற அர்த்தத்திலோ கவிதை என்ற அர்த்தத்திலோ பயிலப்பட்டு வந்திருக்கவில்லை. கற்றல், அறிவு என்ற நிலையிலே பயிலப்பட்டன. தமிழ் இலக்கிய வரலாற்றை அரசியல் வரலாற்றோடு இணைத்து வாசிப்பதை இன்று வரை நாம் காண்கிறோம். ஆனால், தமிழின் கவிதை ஒரு மெய்யியல் வரலாற்றினூடாகவே கவித்துவம் என்ற நிலைப்பாட்டை வளர்த்து வந்திருக்கிறது “. என்கிறார்.

பாரம்பரிய முறையாக பின்பற்றப்பட்ட கலை வடிவத்தின் செல்வாக்கானது மொழி எனும் பெருத்த வெடிப்புக்களாய் மாறியிருக்கின்றன. பிரதி மீதான ஈர்ப்பானது கலை வடித்தின் ஒரு பகுதியாகவே நோக்கப்பட்டது. நாடக அமைப்பிலிருந்து வெளியேறிய திரைப்படங்களுக்கான அங்கீகாரம் இலக்கிய போக்கலிருந்து விடுபடாமல் இருப்பது போலவே, தொழில் நுட்ப வளர்ச்சியின் துணையோடும், ஐரோப்பியர்களின் விசித்திர சிந்தனைகளும் பிரதிகளை ஒரு வெகுசன ஊடகமாக மாற்றி நுகர்வோனுக்கு முன் வைத்தன. அதிலிருந்து தோற்றம் பெற்ற பிரதிகளின் முனைப்பானது கோட்பாட்டியல் விஞ்ஞானத்தின் மிகப் பெரும் எல்லையினைத் தொடுகின்ற நிலைக்கு விவாதிக்கப்பட்டும், எழுதப்பட்டும் இருக்கின்றன.

இன்று பெரும் விவாதக் கருப் பொருளினையும், அதிகார அடையாளங்களையும் பிரதிபலிக்கின்ற கோட்பாட்டு கருத்தியல் போக்கானது குரானாவின் விமர்சனப் பார்வையிலிருந்து விலகி விட முடியாத விடயங்கள். ஒரு குறிப்பிட்ட செயலுக்குள் மாத்திரம் இயங்கிவிட்டு விலகிச் செல்கின்ற எழுத்து முறைமைகளை, இருப்பியல் வரையறைக்குள் வைத்து நோக்க முடிவதில்லை. பரவிச் செல்கின்ற எழுத்து முறைமைகளின் ஊடாக விரிந்த பரப்பின் மீதான போர்களைத் தொடுக்க முடியும். அங்கிருந்து ஏராளமான உரையாடல்களைத் பிரட்டிக் கொள்ளலாம். குரானாவின் கவிதை வெளியானது, உரையாடல்களை முன் வைத்தே இயக்கம் பெறுகின்றன. கவிதை, கவிதைக்குப் பின்னால் எழும் கேள்வி, கேள்விகளுக்குப் பின்னால் உருவாக்கப்படும் நீண்ட உரையாடல்கள் என்பன ஒட்டு மொத்த சூழலின் நவீனப் பெரும் விவாத்தின் தொகுப்புக்களாகும்.

விளைவுகளுடன் விரிந்து பயணிக்கும் கவிதைகள் மீதான உரையாடல்கள் நவீன நுகர்வோனின் பெருமிதமான வெளியீடு. நுகர்வோனால் நிரம்பிய  மாற்றுப் பார்வைகளின்  நிர்மாணமானது பொதுக் கட்டமைப்பினை உருவாக்குவதும், அல்லது அதன் மீது கேள்விகளை முன்வைப்பதுமாகும். குரானாவின் கவிதைகளை பொறுத்தமட்டில் அடையாளம், அடையாளத்தினை வேண்டி நிற்றல், அடையாளப்படுதல் போன்ற இன்னோரன்ன வகை மாதிரிப் போக்கிலிருந்து விரண்டோட நினைக்கின்ற கவிதை வடிவம்தான். அரசியல் சார்ந்து உருவாக்கப்பட்ட பிரதிகளின் வெளியேற்றமும், பின்னர் புகுந்து கொண்ட பின் நவீன வடிவப் போக்குகளும் அரசியல் பொலிவினை சாராமல் இயங்கியதில்லை. ஆனால் நீட்சியான வாசிப்பின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப குரானாவின் பணி பின்நவீன அறிதலுக்கான தமிழ்ச் சூழலின் இயங்குதளமாகும்.

சாஜீத் அஹமட்-இலங்கை 

சாஜீத் அஹமட்

(Visited 106 times, 1 visits today)