மட்டக்களப்பு தொல்தமிழ் மரபுரிமைப் பிரதேசம் அல்லது பழந்தமிழ் பண்பாட்டுப் பிரதேசம்-கட்டுரை-விஜய் எட்வின்

விஜய் எட்வின்தனித்துவமான பண்பாட்டம்சங்கைளக் கொண்டதொரு பிரதேசம் மட்டக்களப்பு எனப் பலரும் குறிப்பிட்டுள்ளனர். மட்டக்களப்பின் சமூக – பண்பாட்டம்சங்களைப் பற்றி ஆய்வு செய்தெழுதியோர், தங்கள் ஆய்வுகளில் மட்டக்களப்பின் தனித்துவமான அம்சங்கள் பலவற்றை எடுத்துக் காட்டியுமுள்ளனர்.

இந்த “மட்டக்களப்பின் தனித்துவமான பண்பாட்டம்சங்கள்” என்ற விடயம், மட்டக்களப்பானது இலங்கையின் வடபிரதேசம், தமிழகம் என்பவற்றோடு மொழி, மதம் என்பவற்றால் ஒன்றிணைந்துள்ள போதிலும் சமூக-பண்பாட்டம்சங்களில் வேறுபட்டு நிற்கின்றது என்பதனைக் குறிக்கின்றது. இதனால் இந்த வேறுபாடு முக்கியமானதொரு விடயமாகிறது.

இக்கட்டுரை, ஆய்வாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மட்டக்களப்பின் தனித்துவமான அம்சங்களாக இனங்கண்டு காட்டியிருப்பவற்றை தொகுத்து முன்வைக்கிறது. இந்த தொகுப்பின் பயனாக, மட்டக்களப்பு  தொல்தமிழ் மரபுரிமைப் பிரதேசமாக அல்லது பழந்தமிழ் பணண்பாட்டுப் பிரதேசமாக அமைகிறது என்ற கருத்தைப் பெறமுடிவதானல், அது தலைப்பாகவும் இடப்பட்டுள்ளது.

00000000000000000000000000000

ஏரால் இயன்றசெந்நெல் இண்சுவைத்தீங் கன்னலொடு

தெங்கி னிளநீரும் தீம்பலவி னள்ளமிர்தும்

எங்குங் குறையா இயலுடைய நன்னாடு

மட்டக் களப்பென்னும் மாநாடு 

என்ற சுவாமி விபுலாந்தரின் பாடல்வரிகள் மட்டக்களப்பின் தனித்துவத்தினை நயமுறக் காட்டுகின்றது.

“மட்டக்களப்புத் தமிழ் நிலத்திடை வளைந்து சூழ்ந்து கிடக்கும் வாவி தமிழ்ச்சுனை ; ஆங்கு வாழும் மக்கள் பண்பட்ட பழந் தமிழ்க்குடிகள்” எனக்குறிப்பிட்டிருக்கிறார் திருவண்ணாமலை ஆதினத்தைச் சேர்ந்த குன்றக்குடி அடிகளார் எனும் தெய்வசிகாமணி அருணாசலதேசிக அடிகளார். வி.சீ.கந்தையா எழுதிய மட்டக்களப்புத் தமிழகம் எனும் நூலிற்கு எழுதிய வாழ்த்துரையிலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஈழத் திருநாட்டிற் சிறந்தோங்கும் மட்டக்களப்புப் பிரிவினது இயற்கை வனப்பு, கலை, மொழிவளம், பண்பாடு முதலியவற்றில் நிறைந்த ஆர்வம் எனக்குண்டு எனக்கூறும் சேவியர் தனிநாயகம் அடிகளார், தமிழகத்தின் “ஏனைய பகுதிகளிலே வழக்கினின்றொழிந்தனவாய் இங்கே வழங்கிவரும் சொற்கள் சிலவற்றின் பயிற்சிச் சிறப்பு” பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார் வி.சீ.கந்தையா எழுதிய மட்டக்களப்புத் தமிழகம் எனும் நூலிற்கு எழுதிய அணிந்துரையில்.

மட்டக்களப்பாரை, ”ஈழநாட்டின் ஒரு பகுதியில் வாழும் ஒரு பழந்தமிழ்க் குழுவினர்” எனவும்  மட்டக்களப்பை தமிழகம் எனவும் குறிப்பிட்டிருக்கிறார், மட்டக்களப்பு பற்றி விரிவான தகவல்களைத் தேடியறிந்து ‘மட்டக்களப்பு தமிழகம்’ எனும் நூலை எழுதிய வி.சீ.கந்தையா. வி.சீ.கந்தையா, மட்டக்களப்பு தனித்துவமான பண்பாட்டம்சங்களைக் கொண்டிருந்தமையால்தான்,  மட்டக்களப்பை, ”தழிழகம்” என்றே இனங்கண்டிருக்கிறார் என்பதனைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

வி.சீ.கந்தையா தனது நூலில், மட்டக்களப்பின் தனித்துவமான அம்சங்களாக உணர்ச்சிக் கவிநலம், நாட்டுக் கூத்துக்கள், நீரமகளிர், செந்தமிழ்ச் சொல்வளம், கண்ணகி வழிபாடும் அதனோடிணைந்துள்ள கண்ணகி சடங்கு – வழக்குரை – கொம்பு விளையாட்டு – தமிழ்க்குரவை – வசந்தன் ஆடல், மற்றும் புலவர் பரம்பரை, மருந்தும் மந்திரமும், வரலாறு என்பன பற்றி விபரித்திருப்பதுடன், திருமணமுறை – சமயம் – குலவிருதுகள் – பழக்கவழங்கங்கள் எனச் சில தனித்துவமான அம்சங்கள்; பற்றியும் விபரித்திருக்கிறார்.

மட்டக்களப்பின் பழக்க வழக்கங்கள் பற்றிய விபரிப்பில், மருமக்கட்தாய முறை, தேங்காய் கலந்த உணவுண்ணல், தலைக்குத் தேங்காயெண்ணெய் பூசுதல், மங்கல நிகழ்ச்சிகளில் குரவை அயர்தல், நாட்டுக்கூத்து நிகழ்த்துதல் – பெண்ணடி முதுசம் போன்ற சேரநாட்டுடன் – மலையாளக் கரையுடன்  தொடர்புற்றுக் காணப்படும் பழக்கவழக்கங்கள் பற்றி குறிப்பிட்டிருக்கிறார் வி.சீ.கந்தையா.

வி.சீ.கந்தையா, மட்டக்களப்பின் ஆரியக் கலப்பற்ற மணமுறை பற்றி; தனது நூலில் விபரித்திருக்கிறார். தொடர்ந்து, மட்டக்களப்பின் வேளாண் செய்கை, வேளாண் செய்கையின் போது பயன்படுத்தும் குழூஉக்குறிச் சொற்கள், பொலிப்பாடல்கள், ஓய்வு காலங்களில் மக்கள் மேற்கொள்ளும் வசந்தனடித்தல் மற்றும் நாட்டுக்கூத்து, கொம்பு விளையாட்டு, கண்ணகியம்மன் குளுத்திப்பாடல், கண்ணகையம்மன் வழக்குரை, பழந்தமிழர் முருக வழிபாடு என்பவற்றுடன், பழங்காலத் தொடர்புடைய ஆபரணங்கள் எனப்பல விடயங்கள் குறித்துக் குறிப்பிட்டிருக்கிறார்.

கலாநிதி  சு.வித்தியானந்தன்(1962), “ஈழ நாட்டிலே கிராமியக் கவிதை நலம் நிறைந்துள்ள பகுதி மட்டக்களப்பு. தேனுக்கும் பாலுக்கும் தழிழர் வீரத்திற்கும் பெயர் பெற்ற மட்டக்களப்பு, மக்கள் கலைகளைப் பேணி வளர்ப்பதிலும் தலைசிறந்து விளங்குகின்றது. உணர்ச்சி கவிதை நிறைந்த மட்டக்களப்பு நட்டுப் பாடல்கள் பல்வேறு துறைப்பட்டு, நிறைந்து வழங்குகின்றன. கிழக்கிலங்கையின் மூலை முடுக்குகளிலும் வயல்வெளிகளிலும் வீடுகளிலும் வீதியிலும் உலவும் இப்பாடல்களை..” எனக் குறிப்பிட்டிருக்கிறார். “மட்டகளப்பு பகுதியில் வழங்கும் நாட்டுப் பாடல்களில் பெரும்பாலான அகத்தினையைச் சார்ந்தவையே.எல்லோருடைய காதல் நிகழ்ச்சிகளையும் உணர்ச்சியுறக்காட்டும்”  எனவும் “இவ்வகத்திதிணைப்  பாடல்கள் மட்டக்களப்பிற் ‘கவிகள்’ என வழங்குகின்றன. பாடல் அனைத்தையும் குறிக்கும் கவி என்னும் சொல் மட்டகளப்பிலே அகத்தினை நாட்டுப்பாடல்களைக் குறிக்கும் சிறப்புசொல்லாக வழங்குகின்றது. இக்கவிகளில் அதிகம் ஈடுபாடுடையவர் மட்டக்களப்பு இஸ்லாமிய மக்களே. சிறந்த கவிகளைப்பாடவல்லவர் இவர்களிடையே இன்றும் பலர் உளர்.” எனவும் குறிப்பிட்டிருக்கிறார் வித்தியானந்தன்.

வரலாறு, மொழி, பண்பாடு, சமூகக் கட்டமைப்பு ஆகிய நான்கு அம்சங்களில் மட்டக்களப்பின் தனித்துவம் வெளிப்படுகின்றது. ஒப்பீட்டளவில் இது தனிமைப்படுத்தப்பட்ட பிராந்தியமும் (Zone of Relative Isolation) ஆகும். இந்த தனிமைப்படுத்தப்படுத்தலுக்கு புவியியல், வரலாற்றுக் காரணங்கள் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார் மானிடவியலாளரான டெனிஸ் பி. மக்ஜில்வ்ரே. (Dennis B. McGilvray)

அக்கரைப்பற்று, கொக்கட்டிச்சோலை ஆகிய இரு இடங்களில் விரிவான ஆய்வுகளைச் செய்து (1970 களில்) எழுதிய “முக்குவர் வன்னிமை : இலங்கையின் மட்டக்களப்பில் தமிழர் சாதியும் தாயக்குடிக் கருத்தியலும்” என்ற கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார் மக்ஜில்வ்ரே.

டெனிஸ் பி. மக்ஜில்வ்ரே, கிழக்கிலங்கையில் விரிவான களவாய்வு மேற்கொண்டு (1993) எழுதிய  “மோதலின் உலைக்களம்” எனும் நூல் பற்றி, “இலங்கையின் கிழக்குக் கரையோரத்தின் தமிழர்களும், முஸ்லிம்களும்” என்ற சுருக்கமான அறிமுகக் கட்டுரையில், மட்டக்களப்பின் சமூக- வரலாற்றின் தனித்துவமான பண்புகளை மக்ஜில்வ்ரேயின் நூலின் உதவியுடன் பின்வருமாறு அட்டவணைப் படுத்தியிருக்கிறார் க.சண்முகலிங்கம்.

பிராமணர் முக்கியம் பெறாத சாதிப் படிநிலை அமைப்பு.

சமயப் பன்மைத்தவம்  (இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர், பௌத்தர்).

தாய்வழிக் குடி மரபு.

சீதன முறை, கணவன் மனைவியின் தாய் வீட்டில் குடியிருத்தல் (Matrilocal Residence).

முக்குவரின் வீரமரபு அதாவது போர் வீரர்களாகவும் அரசாட்சி அதிகாரம் கொண்டோராகவும் முக்குவர் இருந்தனர் (Mertial Tradition).

சாதி மேலாதிக்கத்தை விட அரச அதிகார மேலாதிக்கம் அழுத்தம் பெற்று இருந்தமை.

வரலாற்று ரீதியில் ஆழமான வேர்களைக் கொண்ட முஸ்லிம் சமூகம் அருகருகே இருத்தல்.

வீரசைவ குருக்கள் வம்சம் பிராமண எதிர்ப்பு மரபை உடையதாக இருத்தல்.

அதிகம் பிராமணமயமாகாத கிழக்குப் பண்பாடு தொடர்பில் மோகம் கொண்டிருந்தார், மண்டூர் பிரதேச பிரயாணம், பிராமணியமும் ஐரோப்பியமும் அதிகம் கலக்காத ஒரு தனித்துவமான தமிழ்ப் பண்பாட்டினை தனக்கு உணர்த்தியதாகக் குறிப்பிட்டார் பேராசிரியர் மௌனகுரு. பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள், தனித்துவமான மட்டக்களப்பின் பழக்க வழங்கங்கள் பற்றியும் அக்கறை கொண்டிருந்திருக்கிறார்.

அத்துடன், தேசத்துக் கோயில், ஊர்க்கோயில் என்ற பிரிவு, மட்டக்களப்புச் சமூகத்தையும் பண்பாட்டையும் புரிந்து கொள்வதற்கான திறவுகோல் எனவும்  பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், “மட்டக்களப்பின் மதம்சாராக் கட்டிடக் கலைகள்”, “மட்டக்களப்பின் பனையோலை வேலைப்பாடுகள்(கைவினைகள்)” போன்ற மட்டக்களப்பின் கலை வெளிப்பாடுகளின் ஆய்வுகள் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் வழிகாட்டுதலின் கீழுருவானவையாகும்.

பேராசிரியர் மௌனகுரு (2005), “மட்டக்களப்புப் பிரதேசம் இந்தியாவினின்று வெகு தொலைவிலிருப்பதாலும் ஐரோப்பிய நாகரீகத்திற்குள்ளான இலங்கையின் பிரதான பகுதிகளிலிருந்து விலகியிருப்பதாலும் ஆரியமயமாக்கம், மேற்கு மயமாக்கம் என்ற இரண்டு பண்பாட்டுத் தாக்கங்களுக்குப் பெரிதும் உட்படாத பிரதேசமாகவே இருக்கின்றது. எனவே புராதன அடையாளங்களைத் தேடும் தமிழ்ப் பண்பாட்டாளருக்கு அரிய சுரங்கமாக இருப்பது மட்டக்களப்புத்தான். புராதன இலங்கைப் பண்பாட்டின் எச்சங்களைக் கூட மட்டக்களப்பின் மிகப்பின்தங்கிய கிராமப் பகுதிகளில்தான் காணமுடியும்.” என, வெல்லவூர்க்கோபாலின் மட்டக்களப்பு வரலாறு – ஒரு அறிமுகம் எனும் நூலுக்கு எழுதிய அணிந்துரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

பக்தவத்சல பாரதி, “மரபுவழிப்பட்ட இந்த மூன்று வாழ்வு முறைகளும் (யாழ்ப்பாணத் தமிழர்கள், மட்டக்களப்புத் தமிழர்கள், சிங்கள மக்கள்)  மூன்று வெவ்வேறு சமூக அசை வியக்கங்களைக் கொண்டுள்ளன”, “கிழக்கே மட்டக்களப்புத் தமிழர்கள் முக்குவர் சட்டத்தைப் பின்பற்றுகிறார்கள்.” எனக்குறிப்பிட்டுள்ளதுடன், “தமிழகத்தில் தமிழ்ச் சமூகம் கொண்டுள்ள தொன்மையைவிட ஈழத்தமிழர்கள் கொண்டுள்ள பாரம்பரியம், தமிழர்களின் தொன்மையை நன்கு விளக்குகிறது. தமிழ்ச் சமூகத்தின் தொன்மையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் சேரர் தேசத்தையும் மட்டக்களப்பு, யாழ்குடா நாட்டையும் ஒப்பிட்டு அறிய வேண்டியது மிகவும் அவசியமாகும். மனித குலத்தில் தோன்றிய முதல் சமூக அமைப்பான தாய்வழிச் சமூக முறையை இத்தகைய ஒப்பிட்டு நிலையில்தான் மீட்டுருவாக்கம் செய்ய முடியும். சேர நாட்டில் காணக்கூடிய ‘மரு மக்கள்தாய முறை’ இன்னும் உயிர்ப்புடன் மட்டக்களப்பில் உள்ளது.” எனவும்  “…பண்டைய சேரர் தேசம் தொடங்கி மட்டக்களப்புவரை உள்ள பண்பாட்டுப் பிரதேசம் தாய்வழிப் பிரதேசமாக இருப்பதை அறிய முடிகிறது.” எனவும் “தமிழகத்தில் இன்று கண்ணகி வழிபாடு முற்றிலும் இல்லை. அது மாரியம்மன் வழிபாடாக முழுவதும் உருமாறிப்போய் நிற்கிறது. ஆனால் ஈழத்தில் கண்ணகி வழிபாடு உயிர்ப்புடன் இன்றும் காணப்படுகிறது. குறிப்பாக, மட்டக்களப்பில் 30க்கும் மேற்பட்ட கண்ணகி கோயில்கள் இன்றும் உள்ளன.”எனவும் “கூத்து ஆற்றுகையுடன் தொடர்புடையவர்களை ‘அண்ணாவியார்’ என்று மக்கள் அழைக்கின்றனர். இத்தகைய வழக்கத்தைத் தமிழகத்தில் அதிகம் காண முடியவில்லை.” எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

ஆய்வாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் இனங்கண்டு காட்டியிருப்பவற்றிற்கு அப்பாலும் பல தனித்துவமாக அம்சங்கள் மட்டக்களப்பில் உண்டு. அவையும் கண்டறிந்து இனங்காட்டப்பட வேண்டும்.

உச்சாந்துணைகள் :

சு.வித்தியானந்தன், 1962, “ மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள்”, பதிப்பாசிரியர்- இலங்கைக் கலைக்கழகத் தமிழ் நாடகக்குழு.

வி.சீ.கந்தையா 1964, மட்டக்களப்புத் தமிழகம், ஈழகேசரிப் பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம், யாழ்ப்பாணம்.

சி. மௌனகுரு, 2008  “நினைவில் நிலைத்தவை” – பேராசிரியர் கா.சிவத்தம்பியின் மட்டக்களப்புடனான உறவுகள்” , “மட்டக்களப்பும் பேராசிரியர் சிவத்தம்பியும்”, மட்டக்களப்பு வாசகர் வட்டம்.

க.சண்முகலிங்கம், 2011 “மட்டக்களப்பில் சாதி” – இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும், குமரன் புத்தக இல்லம், கொழும்பு – சென்னை.

க.சண்முகலிங்கம், 2011, “இலங்கையின் கிழக்குக் கரையோரத்தின் தமிழர்களும், முஸ்லிம்களும்”, “இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்” , குமரன் புத்தக இல்லம், கொழும்பு – சென்னை.

பக்தவத்சல பாரதி,(2011) “யாழ்ப்பாணத்து நினைவுகள்”, காலச்சுவடு, அக்டோபர்-2011.

விஜய் எட்வின்-மட்டக்களப்பு

விஜய் எட்வின்

(Visited 258 times, 1 visits today)
 
விஜய் எட்வின்

கேரளத்து ஈழவர்கள் ஒரு நோக்கு-கட்டுரை-விஜய் எட்வின்

  கேரளத்தில் வாழுகின்ற “ஈழவர்” சமூகம் குறித்த ஆய்வு, இலங்கையில் பண்டைக்காலம் முதல் வாழ்ந்து வருகிற தமிழர்கள் குறித்து அதாவது ஈழத்தமிழர்கள் குறித்து அறிந்து கொள்வதற்கு பயனுடையதாகலாம் போல் தெரிகிறது. […]