கிழக்கிலங்கையின் கவி வித்தகன் சோலைக்கிளி-கட்டுரை-பரீட்சன்

 

பரீட்சன்அது ஒரு காலம், சோலைக்கிளி என்று உங்களால் அறியப்பட்ட எனது நன்பன் அதீக்கும் நானும் பகல் மங்கத்தொடங்கும் வேளையில் எமதூரின் அடையாளமான கொடியேற்றப்பள்ளியின் பரந்த மணல் பரப்பில் ஏதாயினும் கொறிபண்டங்களுடன் போய் அமர்ந்து கொள்வோம்.

திருமணம் முடிக்காத வாலிபர்கள் என்பதால் நேரப்பங்கீட்டில் சுதந்திரம் நிறையவே இருந்தது. இரவு 12 மணியும் எமக்கு பகலாகவே இருக்கும். முந்தியநாளில் பேசிய விசயங்கள் அதீகின் அதிசய சொற்களுக்குள் கைதாகி கவிதையாய் காகித துண்டுகளாய் சட்டைப்பைருலிருந்து விரிக்கப்படும். அவரே வாசிப்பார் பின் என் கருத்தை கேட்பார்.

இலகுவில் திருப்தி அடையாதவன் நான். இப்படி அமைந்திருந்தால் இன்னும் நன்றாயிருக்குமென்பேன். மறுநாள் முற்றிலும் வேறான வடிவத்தில் வேறொன்றாய் அதே கரு புது செய்தி சொல்லும்.

இப்படியே நாளாந்தம் ஆச்சரியங்கள் அமைதியாய் அறிமுகமாகும். அதீக் எனக்கு அபினாக மாறிவிட்டார்.

தினமும் அவரின் கவிதை எனும் வித்தையை அலையோசையுடன் விருந்தாக ருசித்துக்கொண்டிருப்பேன்.

காலங்கள் நகர புரிதல்களும் எங்களை   புடம் போடத்தொடங்கின. அதீக்கின் எல்லைகளும் விசாலித்தன.

எனக்கும் அபிப்பிராயம் சொல்லக்கூடாத பக்குவமும் வரத்தொடங்கியது. அதீக் ஒரு தனித்துவம், அதில் கலப்படம் கூடாதென்ற மன நிலை என்னை மௌனமான ரசிகனாக்கியது. வியப்பைத்  தவிர  வேறொன்றும் என்னிலிருந்து வெளியாக மறுத்தது. கவிதைகளின் இன்னொரு வடிவம் அதீக் என்ற தீர்க்கமான தீர்ப்புடன் திரும்பிப்பாராமல் எழுதட்டும், புரட்டிப்படிப்பதே என் வேலை என்றாக்கிக்கொண்டேன்.

அவரும் எழுதினார் நானும் ரசித்தேன், ரசித்துக்கொண்டேயிருந்தேன். எல்லைகள் இல்லை எழுதுங்கள் என்பது மட்டுமே எனது ஒரே  வேண்டலாயிருந்தது.இடைக்கிடை மிதி வண்டியில் தூரப்பயணங்கள், இரவு நேர ஆற்றோர சமையல் சாப்பாடுகள்.

பிறகென்ன திருமணம், குடும்பம் நேரங்களில்  பங்கு எடுத்ததுக்கொள்ள சந்திப்புக்கள் குறைந்தன. நான் தலைநகரின் இயந்திர வாழ்க்கைக்குள், அவரோ தொடர்ந்தும் கவிதைச்சோலைக்குள். தகவலாய் கேள்விப்படுவேன், அதீக்குக்கு விருதுகள் கிடைத்ததாய். ஆச்சரியப்படமாட்டேன், அடுத்த விருது எதுவென்று காத்திருப்பேன்.

இப்படியே இரண்டு தசாப்தங்கள் உருண்டோட நானும் நோயாளியாய் ஊர்வந்து சேர்ந்தேன். காணும் வாய்ப்பை நோய் தடுத்துக்கொண்டே வந்தது. முகநூலில் இறையில்லம் தரிசிக்க மக்கா செல்லும் செய்தியொன்று தற்செயலாய் குறிக்கிட்டு மீண்டும் தொடர்பை புதுப்பித்தது.

இடைகாலத்து சோலைக்கிளியை வாசிக்க துடித்தேன். அந்நாளில் ஒருநாள் ‘நடு’ ஆசிரியர் தொடர்பு கொண்டு சோலைக்கிளியின் கவிதைகள் மீதான திறனாய்வு ஒன்றை எழுத இயலுமா என்று கேட்டார்.  அதைவிட மகிழ்ச்சி எதுவாயிருக்கும், எழுதுகிறேன் என்றேன், சோலைக்கிளியின் தொகுப்புக்களை அவரிடமே கேட்டுப்பெற்றேன்.  சரி எதிலிருந்து தொடங்குவது என்பதுதான் விடைதேடும் வினாவாகியது சோலைக்கிளியின் ‘அவணத்தை விரித்தேன், படிக்கத்தொடங்கினேன்.குறிப்புகளும் எடுத்தேன். திறனாய்வுக்கான தலைப்புகளையும் நிரல் படுத்தினேன்.

சோலைக்கிளியின்;  நுண்நோக்கல் ,கருவாக்கல், பிரங்ஞை, வழக்குப்பிசைவும் பிறழ்வும், மொழியாக்கல்,    கலையாக்கல்,  ஆகிய ஆறு தளங்களிலிருந்து சோலைக்கிளியின் எழுத்துக்களை திறனாய்வு செய்யலாம் என்று ஆரம்பிக்கும் போதே ரமளானும் வந்ததுடன் எனது உடல் நிலையும் மீண்டும் மோசமாகி விட்டது. என்றாலும் இதை எழுதும் போது  சோலைக்கிளியின் எழுத்துக்களில் உள்ள மேலும் சில விஷேட அம்சங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என எண்ணத்தோன்றுகின்றது. எத்தனை தளங்களிலிருந்து அவரின் எழுத்துக்களை ஆய்வு செய்ய வேண்டும் என்பது பெரும் வினாவாகவே இன்னும் வளர்கின்றது.

மரபுரீதியிலான ஒப்பீட்டு ஆய்வு முறையை நான் அடியோடு நிராகரிப்பவன். ஆதலால் சோலைக்கிளியின் எழுத்துக்களை நான் எதனால் வியக்கின்றேன் என்பதே திறனாய்வின் உள்ளீடாக இருக்கவேண்டும் என்பது எனது அவா.

துரதிஷ்டவசமாக சோலைக்கிளியின் எழுத்துக்கள் மீதான பரந்த ஆய்வை எழுதி முடிக்க எனது உடல் நிலை இப்போதைக்கு இடந்தரவில்லை. இனி எப்போதும் வாய்ப்பளிக்குமோ தெரியாது. ஆகவே சுருக்கமாக சொல்வதாயின் மேற்சொன்ன ஆறு அம்சங்களாலும் இன்னும் பல காரணங்களாலும் சோலைக்கிளியின் எழுத்துக்கள் தனித்துவமானவை. இப்போதைக்கு இவ்வளவே என்னால் எழுத முடியும். மரணம் தாமதமாகி உடல் நிலையும் இசைந்து உதவினால் இன்னும் ஒரு சந்தர்ப்பத்தில் எழுதுவேன் இப்போதைக்கு கீழ்வரும்  சில வரிகளுடன் முடிக்கிறேன்.

சோலைக்கிளி தமிழின் ஒரு தனி வடிவம். தமிழை திரும்பி பார்க்க வைத்தவன். மாற்று மொழி எழுத்துக்களை  முந்த  முனைந்தவன். பூர்வீகத்தை தத்தெடுத்து புதுமைகள் செய்தவன். நாரைகளையும் நாத்துக்களையும் பிரித்திடாமல் பயணித்தவன். முந்தானையும் துலாக்காலும் சோலைக்கிளியால் மீண்டு கொண்டன.

வழக்காறுகளை அசலாக்கினான், நவீனத்தை நகலாக்கினான். தனக்கு மட்டுமே  தான் போட்டியானான்.

அவன் ஒரு அவணம்!

தமிழின் ஆவணம்!!

பரீட்சன்-இலங்கை

பரீட்சன்

 

(Visited 61 times, 1 visits today)
 
பரீட்சன்

உயில்-கவிதை-பரீட்சன்

உயில்   உச்ச நவீனத்தின் பிந்திய காலத்தில் ஒரு பாம்பு நூற்றாண்டுகளுக்கு முந்திய வரலாற்றுப் பதிவுகளை தன் இறக்கையில் சுமந்து பறக்கும் புறாவின் புரிதலை பரீட்சிக்க விரும்பி உள்ளடக்கத்தை வாசிக்குமாறு […]