பலதும் பத்தும்-உயர்வு நவிற்சி, ஊர், இலக்கியம் மற்றும் புலம்பெயர் வாழ்க்கை-கட்டுரை-உமையாழ்

உமையாழ்
Rajkumar Sthabathy

கதையாக எழுதுவதா அல்லது கட்டுரையாக எழுதுவதா எனக்  கனநேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். முதலில், எதைப்பற்றி எழுதுவது என்று தீர்மானிக்க வேண்டும்!

கோமகன் இந்த ‘நடு’ இணைய இதழை ஆரம்பித்த காலத்தில் இருந்து ஏதாவது எழுதச் சொல்லிக் கேட்டுக்கொண்டே இருக்கிறார். ‘சரி கோமகன், எழுதித் தருகிறேன்’ என்பதுடன் சரி. ஒரு நாளும் எழுதிக் கொடுத்ததில்லை. புகைப்படங்கள் அனுப்புங்கள் என்பார். அதையும் செய்வதில்லை. ஒருமுறை அவருடன் பேசிய போது ‘தொடராய் பத்தி எழுதுகிறேன் கோமகன்’ என்றேன். ‘சரி, ஏதாவது வித்தியாசமாக எழுதுங்கள்’ என்றார். அதையும் செய்யவில்லை. செய்யக்கூடாது என்றில்லை. ஆனால் இந்தப் பாழாய்ப்போன சோம்பேறித்தனம்தான், வேறென்ன!

இந்தமுறை அவர் கேட்ட போது ‘ஐயோ, இந்த மனுசனும் ஒவ்வொரு முறையும் ஏதாவது கேட்கிறாரே. நான் எதுவுமே எழுதி கொடுக்கவில்லையே. எவ்வளவு நம்பிக்கை வைத்து கேட்டிருப்பார். ஒவ்வொரு முறையும் ‘அனுப்புகிறேன்’ எனச் சொல்லி, எதுவுமே எழுதி அனுப்பாமல் இருந்த போது, என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பார்?’ என எண்ணிக்கொண்டேன். அதுதான், என்ன எழுதுவது என்பதை முடிவுசெய்யாமலே, இதோ எழுத ஆரம்பித்துவிட்டேன்.

ஆக, இந்த இது இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டும் என்று இருந்திருக்கிறது. முதலில் கோமகன் கேட்ட அந்தப் புகைப்படங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

00000000000000000000000000000

இருப்பதை இல்லை என்றும், இல்லாததை இருக்கிறது என்றும் எழுத்தில் இலகுவில் எழுதிவிட முடிகிறது. புனைவிற்கும் அபுனைவிற்கும் இடையில் நின்று பகடை ஆடுபவனைப் போலத்தான் அது. தாங்கள் அள்ளிவிடுகிற பொய்களைக் காலப்போக்கில் தாங்களே மெய்யென நம்பிவிடுதல் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அப்போது நான் சவுதி அரேபியாவின் றியாத் நகரத்தில் இருந்தேன். துருக்கி என்ன நிறம் என்றுகூட எனக்குத் தெரியாது. ஆனால் ஓரான் பாமிக்கின் Snow நாவல் எப்போதுமே எனது மேசையில் கிடக்கும். அந்த நாட்களில் துருக்கி பற்றிய என் எண்ணவோட்டம் யுகங்கள் தாண்டிச் சென்ற இரவுகள் எல்லாம் இன்னும் என் ஞாபகத்தில் நிழலாடுகின்றன. அவ்வாறான ஒரு இரவில் நான் முகநூலில் இப்படி எழுதி இருந்தேன்..

” எனக்கு முன்னால் பரந்து விரிந்து கிடக்கிற இந்த வெள்ளை மணலின் வரலாற்றை பேசாமல், ரோமப் பேரரசின்  வரலாற்றை எழுதிவிட முடியாது.

துருக்கியின் Sedir Island இல், ஒரு கடற்கரை மணலில் நின்று கொண்டிருக்கிறேன். நானும் ஒரு நாய்குட்டியும் சில நூறு காவலர்களும் மட்டுமே இங்கு இருக்கிறோம். கடந்த நான்கு மணி நேரமாக அந்த கடலையும் மணலையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் உள்ளமெல்லாம் Cleopatra நிறைந்திருக்கிறாள்.

வரலாறு, இதுவரையும் அவளைப்  போன்ற அழகும் அறிவும் கொண்ட பெண்ணை பதிவு செய்யவேயில்லை. பண்டய எகிப்தின் Alexandra தான் அவளது பூர்வீகம். பிறப்பு – 69 B.C.  தந்தை Ptolemy XII யின் மரணம் அவளை ஆட்சிபீடம் ஏற்றுகிறது. சகோதரர்கள் சதி செய்கிறார்கள். உதவி செய்ய வந்த Julius Caesar மேல் காதல் வந்துவிடுகிறது. அது வரலாற்றில் பதியப்பட்டுள்ள பிரபலமான கள்ள காதல்.

Caesar உம் Cleopatra உம் சந்திக்க ஒரு இடம் தேவைப்படுகிறது. ரோமப் பேரரசின் ஒரு மூலையில் இருந்த ரம்மியமான ஒரு கடற்கரையை தேர்வு செய்கிறார்கள். பலநூறு கப்பல்களில் செங்கடலின் ஆற்றுப்படுக்கையில் இருந்து ஒரு வகையான வெள்ளை மணல் கொண்டுவரப்பட்டு தீவு போல கட்டமைக்கப்படுகிறது. இவ்வளவும் Cleopatra வை மகிழ்ச்சி படுத்த Caesar மேற்கொண்ட முயற்சிகள்.

இந்த கடற்கரையின் ஒவ்வொரு மணலும், Perfect Sphere என்று சொல்வார்களே, அப்படி இருக்கிறது. ஒரு பிடி மண்ணை கூட உங்களால் வெளியே கொண்டு போக முடியாது. அவ்வளவு பாதுகாப்பு.  இந்த மண் எகிப்தின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த மண்ணிலேயே காலை வைக்கிற போது, நான் அந்தப் பேரழகியை என் காதலி ஆக்கிக்கொள்கிறேன். என் உள்ளமெல்லாம் Cleopatra நிறைந்திருக்கிறாள்.

இன்னும் சில மணிநேரங்கள் தான் இங்கே இருப்பேன். அதற்குள் அந்தப் பேரழகியை முழுவதுமாய் அனுபவித்துவிட வேண்டும்.

என் காதலி உமையாழிற்கு அழைப்பை ஏற்படுத்தி, Cleopatra வை நான் காதலிப்பதாகச்  சொன்னேன். என்னை ஆசுவாசப்படுத்தினாள்.

” நான் உன்னை முழுவதுமாய் புரிந்து கொள்கிறேன். உனக்காக காத்திருக்கிறேன்”.

உமையாழ் ஒரு மஹா உத்தமி.

நாளை சாஹித்தைச் சந்திக்க வேண்டும். சாஹித், ஒரான் பாமுக்கின் மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர். ஒரு பேராசிரியர். அவரை இந்த பெயரில்தான் இங்கே அழைக்கிறார்கள். சாஹித் என்றால் துருக்கிய பாஷையில் மொழிபெயர்ப்பாளராக இருக்கலாம். அது தெரியவில்லை. அவரை சந்திக்க $400 செலுத்த வேண்டும். எனக்கு 42ம் இலக்க டோக்கன். பணம் செலுத்துகிற போது, “இவர் ஒரான் பாமூக்கை விட பணகரகாரராய் இருக்க வேண்டும்” என நினைத்துக்கொண்டேன்.

பின்குறிப்பு:

1) துருக்கி வருபவர்கள், வெறுமனே நீல மசூதியும், கலாட்டா டவருடன் மட்டுமே நின்றுவிடுகிறார்கள். துருக்கிக்கு “கொன்ஸ்டன்டுநோபலையும்” தாண்டிய ஒரு வரலாறும் உண்டு. நீங்கள் துருக்கி போனால் Cleopatra Island யை ஒருமுறை தரிசித்து விடுங்கள்.

2) இதைப் பற்றி எழுத போவதில்லை என்று உமையாழிடம் சொன்னேன். “ஏன்” எனக் கேட்டாள். உனக்கும் எனக்குமாய் சில விடயங்களையாவது பத்திரப்படுத்தி கொள்ள வேண்டும். இதை உனக்காக மட்டும் ஆங்கிலத்தில் எழுதி விடட்டுமா என கேட்டேன்?

“வேண்டாம்பா, உன்னை அவர்கள் வாசிக்கிறார்கள். அது மகிழ்ச்சி. அது மட்டுமில்லாமல் உன்னுடைய ஆங்கிலம் எனக்கு அலர்ஜியை உண்டுபண்ணி. பின்னொரு நாளில் நாம் சந்திக்கும் போது நீ உன் துருக்கிய பயணம் பற்றி பேச, நான் கேட்டு கொண்டிருக்க வேண்டும். இப்போதைக்கு தமிழலேயே எழுது, போதும்” என்றார்.

3) நேற்று நண்பி அழைப்பை ஏற்படுத்தி, “எங்கே?” என்றாள். “துருக்கியில்” என்றேன். “என்னது துருக்கியா? ISயில் சேர போறயா? “

என்னது IS ஆ? அய்யோ ஆளை விடுங்கள் சாமி. “

0000000000000000000000000000000000

இதில் எது பொய் எது மெய் என்பது எழுதுகிற போது எனக்குத் தெரிந்திருந்தது. ஆனால் எழுதி முடித்ததும் நான் உண்மையில் துருக்கி போய் வந்ததாகவே உணர்ந்தேன். அதையே உண்மையென நம்பவும் ஆரம்பித்தேன். அப்போது நான் துருக்கியில் யுக யுகங்களாக வாழ்வதாக எண்ணிக்கொள்வேன்.

இதைத்தான் அந்த மூத்த எழுத்தாளர் ‘sensibility’ என்று சொல்கிறாரோ?

துருக்கியின் அருமை பெருமை எல்லாம் பொய் கலந்து உயர்வு நவிற்சியில் சொல்லி, துருக்கியரைவிட எனக்குத்தான் துருக்கி பற்றி அதிகம் தெரியும் என தோழியரிடம் சொல்லி வைத்திருப்பேன். என் பேச்சைக் கேட்ட அவர்களும் என்னை முழுதாய் நம்பினார்கள். அந்த நம்பிக்கை எனக்கும் நம்பிக்கை தரும். இப்படியாகத்தான், இப்போதும் எனக்கு Sedir Island யின் Landscape காட்சிகளாக மனக்கண்ணுக்குத் தெரிகிறது. Cleopatra வை நான் பார்த்ததாகவும், ஓரான் பாமுக்கின் மொழிபெயர்ப்பாளரை நான் சந்தித்ததாகவும் இன்னமும் நான் நம்புகிறேன். ஆனால் நான் பொய் சொல்கிறேன் என யாராவது சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவமும் எனக்கிருக்கிறது. நான் இப்படி எழுதுவதுகூட உங்களுக்கு பெரும் குழப்பமாக இருக்கலாம். ஆனால் என்ன செய்வது, சில நேரங்களில் இப்படித்தான் குழம்பிப் போகிறது மனது. எது மெய், எது பொய் என எளிதில் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு குழப்பத்தின் நீட்சி இருந்துவிடுவதுண்டு.

ஊர்பற்றிச் சிந்திக்க இதுதான் சரியான நேரம். இப்படியான குழப்பான நேரங்களில் எங்கள் ஊரில் கவி படிக்க ஆரம்பித்துவிடுவார்கள். குழப்பம் என்றில்லை, என்ன மாதிரியான மனநிலையிலும் அவர்களால் கவி படித்துவிட அல்லது படைத்துவிட முடிகிறது.

எங்களூரின் ஆன்மாவை தனது படைப்புகளில் பதிவு செய்துவைத்திருக்கிற விமல் குழந்தைவேல் தனது ‘கசகறணம்’ நாவலில் இந்தக் கவிகள் பலதையும் பதிவு செய்திருக்கிறார். காலச்சுவடு வெளியீடாய் வந்த அந்த நாவலின் இரண்டாம் பதிப்புக்கு நான் எழுதிய முன்னுரையின் ஓர் இடத்தில் இப்படி எழுதி இருப்பேன்.

“வெள்ளும்மாவின் கவி மனது எங்கள் ஊரின் சொத்து. நல்லதோ கெட்டதோ, எதற்கெடுத்தாலும் கவி படிப்பார்கள் அந்த ஊர்க்காரர்கள். அந்தக் கவிகளில் பலவிதமான உணர்ச்சிகளை காட்டுவார்கள். அதிலும் ‘நையாண்டி’ என வந்துவிட்டால் இறங்கி அடிப்பார்கள். இதோ தண்ணீரில் நின்று கொண்டு வெள்ளும்மாயை பகடிக்காய் வம்புக்கிழுத்த கொமர் பொண்டுகளை கவிபாடி எப்படி வெள்ளும்மா கௌத்துவிட்டார் எனப் பாருங்கள்.

‘மார்பளவு தண்ணியில

மண்டி மண்டி குளிக்கும் பொண்ணே-உன்

மார்புக்குக் கீழிருக்கும்

மாதுளங்காய் கவனம் புள்ளே…

அவளுகளும் அவ்வளவு லேசுப்பட்டதுகள் இல்லை. ஏதோ வாயடிக்க, வெள்ளும்மா தொடர்ந்து படிக்கா..

‘மாம்பழக்கெழுத்தி வந்து

மாதுளம் காம்ப நொள்ளும்-உன்

மாமன் மகன் வந்துகேட்டா-நீ

மறுமொழிதான் என்ன சொல்வாய்…கா…?’

இதைக் கேட்ட ‘பொட்டைகள வெக்கம் பிய்ச்சித்தின்னுது’ என்று எழுதுகிறார் விமல். அந்தப் பொட்டைகளை மட்டுமா! வாசிக்கிற எம்மையும் அல்லவா வெட்கம் பிடிங்கித் தின்கிறது”

அந்த நாவல் நெடுகிலும் வருகிற வெள்ளும்மா பாத்திரம் எனது தாய்வழிப் பாட்டியை நினைவூட்டிக் கொண்டே இருந்தது. அதுவும் பிறப்பால் ஒரு கவிதான். அதுவும் ஆசுகவி. நினைத்தால் நாவில் கவி கொட்டும்.

எங்களூரில் கவி மட்டும் என்றில்லை, திட்டுவதென்றாலும் ‘டிசைன் டிசைனாகத்தான்’ திட்டுவார்கள்.

“அறவாப்போவான், கங்கெடுவான், கங்கெட்டு ஊத்தின்றுவான், இடி உழுந்துருவான், நாசமா போவான், கை மொடங்கிருவான், கருமம் புடிப்பான்”

இப்படியாக அந்தப் பட்டியல் நீளும். ஆனால் எங்க பாட்டி இப்படி எல்லாம் யாரையும் திட்டி நான் பார்த்ததில்லை.

தலையால வளர்ந்திடுவாய், நாசமத்துப் போவாய், நாடுபிடிச்சுருவாய், நல்லா இருந்துருவாய்

எனத்தான் திட்டும். அப்போதெல்லாம் அர்த்தம் புரியாமல் அதுவும் ஏதோ ஒரு திட்டுத்தான் என எண்ணி இருந்தேன். பின்னர் வளர்ந்து அர்த்தம் தெரிந்த பின், எப்படி எல்லாம் வாழ்த்தி இருக்கிறது எனஅறிந்தபின் ஆச்சரியமாக இருந்தது.

இப்போது பாட்டிக்கு எண்பத்து மூனு வயதாகிறது. எனது மகள் பூங்குழலி பிறந்து நாற்பத்தாறு நாட்களாகிறது. மூன்று தலைமுறை இடைவெளி! அதை   எண்ணிப்பார்க்கிறேன்.

ஒவ்வொரு முறையும் Skype -இல் கதைக்கிற போது, எப்படியாவது குழலியை கையில் ஏந்திவிட வேண்டும் என்கிற தவிப்பை, அந்த ஒளி மங்கிய கண்களில் வடிகிற முத்திய கண்ணீர் எனக்குணர்த்துகிறது. ஊருக்குப் போகவேண்டும், குழலியை பாட்டி மடியில் கிடத்தி ‘எங்களுக்கு படித்தாயே ‘வா வா கோழி வா, புள்ளட கோழி வா கோழி, மாஞ்ச கோழி வா கோழி, மைமு நோக்கி வா கோழி’  என ஒரு தாலாட்டு, அதைப் பாடி குழலியையும் தூங்க வைக்கச் சொல்லிக் கேட்க வேண்டும் என்பது வெறும் ஆசை மட்டும்தான் என்று சொல்லிவிட முடியாது. எங்கோ ஒரு தூரதேசத்தில் இருந்து கொண்டு, மீசைக்கும் ஆசை, கூழுக்கும் ஆசை என்றால் என்ன செய்வதாம்!

பாட்டி, எண்பதைத் தாண்டியும் தலையில் ஒரு வெள்ளை முடியில்லை. தலைக்கு, வீட்டிலேயே முறுகக் காச்சிய தேங்காய் எண்ணையிட்டு பின்னிக்கட்டி ‘வூல்’ போட்டுத்தான் எப்போதும் தலைமுடியை வைத்திருக்கும். எனக்கு வயது இன்னும் முப்பதைத் தாண்டவில்லை. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக கிடைக்கிற எல்லா வகையான ‘ஜெல்’ வகைகளையும் கபாலத்தில் ஏற்றி முடிகளை நிற்க வைத்திருப்பேன். இப்போது தலை நிறைய வெள்ளிக் கம்பிகள் குத்தி நீட்டி இருப்பதைப் போல நரைகூடிவிட்டது. இந்த இடத்திலும் தலைமுறை இடைவெளியைத்தான் எண்ணிப்பார்க்கிறேன்.

‘நரைகூடி, கிழப்பருவம் எய்து…’ பாரதி கவிதை ஞாபகத்தில் வருகிறது. அதில் இறுதியாக ‘வீழ்வேன் என நினைத்தாயோ!’ என அவன் ஏதோ உணர்ச்சி வேகத்தில் எழுதி வைத்துவிட்டுப் போய்விட்டான். ‘வீம்பு பிடித்தவர்கள்’ அதைத் தமக்கான கவிதையாக்கிக் கொண்டனரோ எனத் தோன்றும். முகநூலில் யாரைக்கேட்டாலும் ‘வீழ்வேன் என நினைத்தாயோ! வீழ்வேன் என நினைத்தாயோ!’

என்னயா உங்க பிரச்சினை?

00000000000000000000000000000

கிழக்கிலங்கையில் அக்கரைப்பற்று ஒரு பிரச்சனை பிடித்த நகரம். அதாவது அங்கிருக்கிற மக்கள் பிரச்சனைக்குரியவர்கள். படித்தவர்கள்தான், அன்பானவர்கள்தான், பண்பானவர்கள்தான். ஆனாலும் பிரச்சனைக்குரியவர்கள். பிரச்சனை என்றால் இந்த ‘வீழ்வேன் என நினைத்தாயோ!’ கோஷ்டி. வீம்பு பிடித்தவர்கள். நான் பிறந்ததும் அதே மண்ணில்தான்.

எல்லா ஊரானும் ஒருபக்கம் நின்றால் எங்க ஊரான் மற்றப்பக்கம் நிற்பான். எல்லா இடங்களிலும் அப்படித்தான். பல்கலைக்கழகங்களில்கூட எங்களூர் மாணவர்கள் தனியே தெரிவார்கள், திரிவார்கள். அரசியல் என்று வந்தாலும் எங்கூர்காரர்கள் அப்படித்தான். அடிபுடி என்றாலும் அவர்கள் அப்படித்தான். வீம்பு!

இப்போது யோசித்துப் பார்த்தால், அது வெறுமனே வீம்பில்லை; ‘மிடுக்கு’ எனச் சொல்லத்தான் தோன்றுகிறது. ‘ஆயிரம் இருந்தாலும் எங்க ஊருயா அது. நாங்க உங்களைவிட கொஞ்சம் உசத்திதான்யா’ அப்டீன்னு எல்லா ஊரானுக்கும் இருக்க வேண்டிய கர்வம்தான் அது.

நாங்கள் எங்களுக்குள் பேசிக்கொள்வதுண்டு, ‘அக்கரைப்பற்றைத் தனியே ஒரு நாடாக்கிவிட்டால், பொருளாதாரம் உட்பட அனைத்து விடயங்களலும் தன்னிறைவு கண்ட ஒரு சமூகமாக எங்களால் வாழமுடியும்’

உயர்வு நவிற்சிதான் என்றாலும் சொல்ல வருகிற செய்தி என்னவோ உண்மைதான்.

ஊருக்கு கிழக்காக கடல், மேற்காக மலையும் ஆறும், குளமும் குட்டையும். இடையில் வாய்க்கால்களும் வரப்புமாக வயல் நிலங்கள். தொலைவில் காடுகளனி, ஏரி, கம்மாய், மக்களுக்கு மக்கள் என எல்லா வளமும் ஒருங்கே பெற்ற ஒரு மாநகரம் எங்கள் ஊர். பணத்துக்குப் பணம், குணத்துக்கு குணம் என வாழ்கிற மக்கள். படிப்பு, கலை, இலக்கியம் என எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகிற மக்கள்.

சிறு மக்கள் குழுக்களாக இருந்து, கிராமமாகி, பட்டினமாகி, இன்று மாநகரமாகவும் மாறிப் போயிற்று என்பது தற்செயலாக நிகழ்ந்ததல்ல. இதை நீங்கள்’நான் ஊர்ப் புகழ் பாடுகிறேன்’ என வேண்டுமானால் சொல்லிக் கொள்ளுங்கள். அதுதான் மெய்யும் கூட. இந்த வையத்திலே யார்தான் ஊர் பெருமை பாடார்! எது சிறந்தது என்றில்லாமல் அவரவருக்கு அந்தந்த ஊர் சிறந்த ஊரே. உலகத்தின் எந்த மூலையில் நின்றும் ஒரு வீதியில் போகிற யாரை நிறுத்திக் கேட்டாலும் தன் ஊரின் சிறப்புப்பற்றி மணிக்கணக்காய் பேசுவார்கள். அது அப்படித்தான். இந்த அடிப்படை தெரிந்த மேலகரம் திரிகூடராசப்பக் கவிராயர், தான் இயற்றிய திருக்குற்றாலக் குறவஞ்சியில் குறத்தி தனது ஊர் குறவஞ்சி பற்றிப் பாடுவதாக இரண்டாவது கண்ணியிலேயே ஒரு பாடல் எழுதி இருப்பார்,

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்

மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்

கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பார்

கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்

தேனருவித் திரையெழும்பி வானின்வழிஒழுகும்

செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்

கூனலிளம் பிறைமுடித்த வேணியலங் காரர்

குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே.’      

தொடர்ந்து,

‘பக்கம் வாழைப் பாய்கனி யோடு பலவின்தேன்

கொக்கிக் கோட்டுப் பைங்கிளி தூங்கும் குற்றாலம்

என்று முடிகிறது பாடல்.

எங்களூரில் மான் இருக்கு மரை இருக்கு, பாலிருக்கு, தேன் இருக்கு என்பது பொருள், வேறென்ன. ஊர்ப்பெருமை!

பாரதிகூட செந்தமிழ் நாடெனும் போதினிலே என்று ஒரு பாடல் எழுதி இருப்பானே. ஆக இந்தப் ‘பற்று’ புரிந்துகொள்ளக் கூடியதுதான். ஆனால் என்னால் புரிந்து கொள்ள முடியாத ஒரு விடயம் இருக்கிறது. என்னைப் போல ஏதிலிகளாக ஊர்விட்டு நாடுவிட்டு, வேறொரு நாட்டில் சொகுசாக வாழ்ந்துகொண்டு ‘எங்க ஊர் போல வருமா?’ எனக் கேட்டு ஏங்குவதோ அல்லது பெருமை பேசுவதோ அநியாயத்திலும் அநியாயம். மஹா அக்கிரமம். உங்களுக்கு அவ்வளவு ஊர் பற்றிருந்தால் நாட்டோடு போய் இருக்க வேண்டியதுதானே! உங்களை யார் தடுக்கிறார்கள்? இப்படி யாராவது என்னைப் பார்த்துக் கேட்டால் நான் என்ன பதில் சொல்லுவேன் தம்பிரானே!!

எங்கள் ஊரில் சொல்லுவார்கள், ‘கேட்கிறவர்கள் கேனப்பய என்றால் எலி ஏரோ பிளேன் ஓட்டுமாம்’. சும்மா அடிச்சி விடுறது. இவர்களுக்கெல்லாம் நாட்டுப்பற்று அது இது என்று ஒரு மயிரும் இல்லை. என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

நீங்கள் இதை ஏற்றுக்கொண்டாலும், இல்லாவிட்டாலும் எனக்கு இதை இங்கு சொல்ல வேண்டி இருக்கிறது. யுத்தம் எம்மவர்கள் சிலருக்கு அடித்த பெரும் யோகம். யுத்தத்தின் பெயரால் மெய்யாலுமே பாதிக்கப்பட்டு நாட்டைவிட்டு ஓடியவர் மிகச்சிலரே. பலரும் ‘வாசி’ தேடி மேற்கை நோக்கி வந்தவர்கள்தான். அவர்களுக்கு அவர்கள் தேடிவந்தது நிச்சயம் கிடைத்துவிட்டது. ஆனால், பாவம் என் மக்கள்.  யுத்தத்தால் மெய்யாலுமே பாதிக்கப்பட்டு, கையிழந்து, காலிழந்தவர்கள் எல்லாம் அந்த நாட்டில் இன்னமும் அடைபட்டுக்கிடக்கிறார்கள். இதில் என்ன இன்னொரு வேடிக்கை என்றால், இந்தியாவில் இருந்து வந்து, கடவுச் சீட்டைக் கிழித்து எறிந்துவிட்டு, நான் இலங்கை அகதி என குடியுரிமை பெற்று, இங்கிலாந்தில் வாழ்கிற பிரபலங்களை எல்லாம் எனக்குத் தெரியும். காலக்கொடுமை என்று தலையில் அடித்துக் கொள்ள வேண்டியதுதான். நம்மால் வேறு என்னதான் செய்ய முடியும்!

இரண்டாம் உலக யுத்தம் நடந்தபோதும் சரி, அதற்குப் பிறகான நாட்களிலும் சரி, பெல்ஜியம் பற்றி எமக்குக் கிடைக்கிற தகவல்கள் மிகச் சுவாரஷ்யமானவை. ‘ஐரோப்பாவின் யுத்தகளம்’ என பெல்ஜியத்தை அழைக்கிறார்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் ? அதற்குக் காரணமிருக்கிறது. பிரான்ஸுக்கும், ஜேர்மனுக்கும் இடையே அமைந்த நாடு என்பதால், ஐரோப்பாவில் எப்போதெல்லாம் யுத்தம் மூண்டதோ அப்போதெல்லாம் பெல்ஜியம் ஏதோ ஒரு வகையில் பாதிப்படைந்திருக்கிறது. குறிப்பாக முதலாம், இரண்டாம் உலகப்போரின் போது பெல்ஜியம் பட்ட துன்பங்கள் சொல்லிமாளாது. அதிலும் குறிப்பாக இரண்டாம் உலக யுத்த காலத்தில், முன்னேறிய ஜேர்மனியப் படையினர் பெல்ஜியத்தில் நிகழ்த்திய அட்டூழியங்களை இணையத்தில் வாசிக்கக் கிடைக்கிறது. ஆர்வம் உள்ளவர்கள் தேடி வாசியுங்கள்.

இலங்கையைப் போலத்தான் பெல்ஜியமும், இரண்டு பிரதான மொழியைக் கொண்டிருக்கிறார்கள். சரி பாதிப் பேர் ஃபிளெமிஷ் மொழி பேசுபவர்களாவும், மற்றவர் பிறெஞ்  மொழியைப்  பேசுபவர்களாகவும் இருக்கிறார்கள். இரண்டு மொழி, நிச்சயமாக உரசல்கள்தான். ஆனால் எங்களுக்கு நிகழ்ந்ததைக் போல ஒரு உள்நாட்டு யுத்தத்திற்கு கொண்டு சொல்கிற அளவிற்கான உரசல்கள் இல்லை.

இங்கே நான் பெல்ஜியம் பற்றி எழுத வந்ததற்கு இலக்கியம்தான் காரணம். எப்படி ?

யுத்தத்திற்குப் பிறகான எம்மவர்களின் இலக்கியம் மிக வீரியம் கண்டிருப்பதாக நான் கருதுகிறேன். குறிப்பாக கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் ஈழத்தவர்கள் எழுதிய நாவல்கள் தமிழில் மிக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. சயந்தனின் ஆதிரை, குணா கவிஅழகனின் மூன்று நாவல்கள், தமிழ்நதியின் நாவல் என அந்த வரிசை நீளமானது. ஆனாலும் பாருங்கள், இந்த நாவல்கள் எல்லாம் புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் எழுதியதாக இருக்கிறது. இதை ‘புலம்பெயர் ஈழத்து இலக்கியம்’ என்றுதான்  வகைப்படுத்த வேண்டி இருக்கிறது. இந்தக் காலப்பகுதியில் இலங்கையில் இருந்து கொண்டு எம்மவர்கள் எழுதிய நாவல்கள் பற்றிப் பெரிதாகக் கதைகள் இல்லை.

லூயிஸ் போல் பூன் (Louis Paul Boon) ஃபிளெமிஷ் மொழியில் முதன்மையான படைப்பாளி. இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து 1947யில் அவர் எழுதிய ‘My little war’ அந்த மொழியின் மகத்தான படைப்புகளில் ஒன்றாக இன்றும் கொண்டாடப்படுகிறது. யுத்தத்தை முழுமையாக அனுபவித்த ஒரு மனிதன், கடைசிவரை அந்த மண்ணிலேயே இருந்து, அந்தக் கொடுர யுத்தம் முடிந்த பின்னர் எழுதிய காவியம் அது. ஆயினும் யுத்தம் பற்றிய கதை அல்ல அது. மாறாக, அந்த கொடுர யுத்தத்தை எதிர்கொண்ட மனிதர்களில் இருந்து ரத்தமும் சதையுமாக கிண்டி எடுத்த கதை.

My little war, எனது சிறிய யுத்தம் என்கிற பெயரில் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. படு மட்டமான, வாசிக்க கடுமையான மொழிபெயர்ப்புத்தான் என்றாலும், ஒருமுறை வாசித்துவிடுங்கள். ஏன் என்றால் அதில் இப்படி ஒரு இடம்வரும்…

“உலகமே பெல்ஜிய தேசபக்தியால் நிறைந்திருந்தாலும் யாரும் தந்தையர் நாடு என்ற மயிரைப் பற்றிக் கவலைப்படப் போவதில்லை. நான் விரும்புவதெல்லாம் மேசையில் கொஞ்சம் உணவு, தணல் அடுப்புக்குக் கொஞ்சம் நிலக்கரி, அயர்வதற்கு இதமான படுக்கை, பக்கத்தில் மனைவியின் உடல், பார்ப்பதற்கு என் குழந்தைகளின் கண்கள் மட்டுமே. என்னைச் சுற்றிச்சுழன்று கொண்டிருக்கும் உலகத்தைப் பற்றி உணராமல் மனிதர்களுக்குள் மனிதனாகவும் மனிதர்களை நேசிப்பவனாகவும் இருக்கவே விரும்புகிறேன். கண்டிப்பாக தந்தையர் நாட்டை நேசிப்பவனாக இல்லை”

ஆக புலம்பெயர் தேசத்தில் வாழ்பவர்களே, லூயிஸ் சொல்லி இருப்பதுதான் நிஜம் என நான் நம்புகிறேன். இப்படித்தான் இருக்க வேண்டும் எனவும் நம்புகிறேன். இருக்கிற இடத்தையும் மக்களையும் நேசித்தால் போதும் என இன்னும் திடமாக நம்புகிறேன். நாட்டுப்பற்று என்கிற பெயரில் ஊரில் நிம்மதியாக இருப்பவர்களை ‘உசுப்பேத்தி, மீண்டும் போராடு நாங்கள் பிச்சை போடுகறோம்’ என்பதெல்லாம் மஹா கொடுஞ் செயல்.

எமக்கும் அந்த மண்ணுக்கும் தொடர்பறுந்த நிலையில், மேற்கில் எங்கோ மனிதனை மனிதனாக மதிக்கும் ஒரு இடத்தில் சொகுசாய் இருந்துகொண்டு யுத்தத்தின் கோரப்பிடியில் சிக்குண்டு அல்லோலப்பட்டு, உயிரை கையில் பிடித்தலைந்த, எஞ்சிய அந்த சனங்களை தமிழ் என்றும், தமிழர் என்றும், இனமென்றும், மானமென்றும் உசுப்பேத்தி நீங்கள் இலக்கியம் படைப்பதும், கட்டுரை எழுதுவதும் பெரும் கயமை. அதைவிடுத்து நாங்கள் இருக்கிற இருக்கிற இடங்களில் இருந்து கொண்டே எங்களின் இரண்டாம், மூன்றாம் தலைமுறைக்கு தமிழைக் கற்பித்தாலே அது பெரிய விடயமாகப் போகும்.

உமையாழ்-ஐக்கிய இராச்சியம்  

உமையாழ்

(Visited 127 times, 1 visits today)