விரிவும் ஆழமும்-நடுகல் குறித்த பார்வை-உமையாழ்

அறிமுகம்

ஈழ இலக்கியம் முழுவீச்சில் இயங்கிக் கொண்டிருக்கிறது. கவிதைகளே எப்போதும் முன்நிலைப்பட்டிருந்த ஒரு மண்ணின் மைந்தர்கள் உரைநடை இலக்கியத்தில் ஆர்வம் கொண்டுள்ளனர். போரும் போருக்குப் பின்னரான எம்மவரின் அவலங்களும் முதிர்ந்த இலக்கியப் பதிவுகளின் அவசியத்தை உணர்த்தி இருக்கின்றன. படைப்புகளில் மொழியாழுமையும், பண்பு முதிர்ச்சியும் ஈழத்தவரிடம் சற்றே தூக்கலாக இருப்பது தெரிகிறது. அதற்கு எம்மவர்கள் கடந்துவந்த பாதை ஒரு காரணமாக இருக்கலாம். உலகில் எங்கெல்லாம் போர் நடந்ததோ, அங்கிருந்தெல்லாம் தரமான இலக்கியப் படைப்புகள் வெளிவந்திருக்கிறது. இது ஈழ இலக்கியத்துக்கான காலம். போருக்குப் பின்னர் ஈழத்தில் இருந்து வெளியான நாவல்களின் பட்டியல் நீண்டது. நீண்ட அந்த வரிசையில் புதிதாக இணைந்திருக்கிறது தீபச் செல்வனின் நடுகல். போரும் போருக்குப் பிந்தையதான வாழ்வும் குறித்தான கதை என முகநூலில் விளம்பரப்படுத்தப்பட்டது.
பிரேம் ஒரு நீண்ட முன்னுரை எழுதி இருக்கிறார். தமிழ்நாட்டு இலக்கிய ஆர்வலர்கள் கொண்டாடுகின்றனர். வெளியான மாத்திரத்தில் முதல் பதிப்பு விற்றுத் தீர்ந்திருக்கிறது. எப்போதும் போல புலி ஆதரவாளர்கள் கொண்டாடுகின்றனர். மறுதரப்பினர் இந்தப் படைப்பை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். பல விமர்சனக்கூட்டங்கள் உலகளவில் நிகழ்த்தப்பட்டுவிட்டன. அது ஒட்டி எழுந்த இலக்கிய பூசல்களுக்கும் அளவில்லை. இது இப்படி எல்லாம் இருக்க, இதற்கு மேலும் இது குறித்து எழுத என்ன பாக்கி இருக்கிறது எண்ணுமளவில் பேசிமுடித்துவிட்டார்கள்! இருந்தாலும், நடு இணைய சிற்றிதழின் ஆசிரியர் கோமகன் கேட்டுக் கொண்டதால், இந்தப் படைப்பு குறித்தான எனது எண்ணங்களை சுருக்கமாக எழுதிவிடலாம் எனப் பார்க்கிறேன். வெறுமனே எண்ணங்களை எழுதிவிட்டால் போதுமா? அந்த எண்ணங்களின் தோற்றுவாய் குறித்து பதிவுசெய்ய வேண்டாமா? அதனால் எனது புரிதலில் நாவல் எனும் மகத்தான இலக்கியப் படைப்பின் அடிப்படைகள் குறித்தும் எழுதிவிடலாம் எனப் பார்க்கிறேன்.

நடுகல்லின் கதை

போருக்கூடே கிளிநொச்சியில் வாழ்ந்த ஒரு குடும்பத்தின் கதை. இளையவன் வினோதன் கதைசொல்லி. மூத்தவன், வெள்ளையன் என்கிற பெயரில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராடி வீரச்சாவடைகிறான். அவனது ஒரு புகைப்படம் கூட கையில் இல்லாத நிலையில் அந்தக் குடும்பம் இடப்பெயர்வுகளுக்கு மத்தியில் அலைந்து அல்லலுறுகிறது. வினோதன் எப்படியாவது அண்ணாவின் ஒரு புகைப்படத்தைக் கண்டுபிடித்துவிட வேண்டும் என அலைகிறான். இடையில் ஆனையிறவு , யாழ்ப்பாணம் என யுத்த விபரிப்புக்கள், முகாம் வாழ்க்கை, யுத்தத்திற்குப் பின்னரான கிளிநொச்சி என பதிவுகளாக நிறைந்து கிடக்கின்றன. உண்மையைச் சொல்வதென்றால், கனகச்சிதமாக எழுதப்பட்டிருக்கிறது.

மேலும் இந்தப் படைப்பின் முக்கியத்துவம், போரினூடே வாழ்ந்த ஒரு சமூகம் முகங்கொடுக்க நேர்ந்த அவலங்களின் தொகுப்பை ஒரு சிறுவனின் பார்வையில் கண்ணீருடன் பதிவு செய்தல் என்கிற அளவில் மிக முக்கியமானதொன்று. அது வரவேற்கப்பட வேண்டியதும் கூட. மாற்றுக் கருத்தில்லை.

மேலும், இந்தப் படைப்பை தீபச்செல்வன் ஒரு அடர்த்தியான முதிர்ந்த மொழியில் எழுதி இருக்கிறார். Maturity of language அதன் நேரடியான அர்த்தத்தில் உச்சங் கண்டிருக்கிறது. படிமங்களின் ஊடான காட்சி விவரணைகள் மனதில் நிற்கும் படியாக இருக்கிறது. யுத்தக் காட்சிகளை விவரிக்கிற இடங்களிலும் சரி, இயற்கையை விவரிக்கிற இடங்களிலும் சரி, தீபச்செல்வன் ஒரு தேர்ந்த கவிஞனுக்கான தூய்மையுடன் எழுதி இருக்கிறார். தீபச்செல்வனால் எழுதியே அழவைத்துவிட முடிகிறது. உணர்ச்சிப் பெருக்கில் உள்ளம் வடிக்கும் இந்தக் கண்ணீர்தான் இந்தப் படைப்பை தமிழ்நாட்டு வாசகர்களிடம் கொண்டு சேர்க்க உதவி இருக்கிறது. ஆனால் இவையெல்லாம் ஒரு இலக்கியப் படைப்பையின் மேன்மையை நிர்ணயிக்கப் போதுமானதா என்கிற ஒரே வினா இந்த எல்லாக் கூச்சல்களையும், நீர், ஈசல்களை அள்ளிச் செல்வதைப் போல கழுவி விட்டிருக்கிறது.

படைப்பின் வடிவம்

தீபச்செல்வனின் இந்தப் படைப்பு ஒரு ‘நாவல்’ என சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியாயின் அது நாவலுக்கான அடிப்படைகளுடன் தன்னைப் பிரதிபலிக்கிறதா என்பதைக் குறித்து முதலில் பார்க்க வேண்டும்.

இலக்கியத்தில் வடிவப் பிரக்ஞை குறித்த விவாதம் எப்போதும் இருப்பதுதான். ஆனால் நவீன இலக்கியத்தின் பிரதான மூன்று வடிவங்களான கவிதை, சிறுகதை, நாவல் என எதற்குமே இலக்கண அடிப்படையில் உருவாக்கப்பட்ட வரையறைகள் என்றைக்குமே இருந்ததில்லை. இது இலக்கியத்தின் ஒரு சுவாரஸ்யமான தன்மையும் கூட. ஆனால் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக மெருகேறி வந்த இலக்கிய ரசனை, இந்த மூன்று வடிவங்களுக்குமான வித்தியாசங்களை விமர்சகர்களும், வாசகர்களும் உணர்ந்து கொள்ள வழி செய்திருக்கிறது. அதில் இருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவிலும், பின்னர் இருபதாம் நூற்றாண்டின் மத்தியிலும் ஐரோப்பாவில் வாழ்ந்த இலக்கிய விமர்சகர்கள், இலக்கிய வடிவங்களுக்கான பொதுத்தன்மைகள் குறித்து நிறையவே எழுதி இருக்கிறார்கள். அவற்றில் இருந்து I A Richard, TS Eliot போன்ற விமர்சகர்களிடம் இருந்து கற்றுக்கொண்ட இலக்கியக் கோட்பாடுகளையே இந்தக் கட்டுரையில் மூலமாக பயன்படுத்த முயல்கிறேன். மேலும் தமிழில் எஸ்ரா, ஜெயமோகன் அ.ராமசாமி போன்றவர்களும் நாவல் குறித்து நிறையவே எழுதி இருக்கிறார்கள். அந்த விடயங்களையும் சேர்த்துக் கொள்கிறேன். இது ஒரு ஆய்வுக் கட்டுரை இல்லை என்பதால், கோட்பாடுகள் குறித்தான தகவல்களுக்கு அடிக்குறிப்புகளோ வேறு தரவுல்களோ தரப்படவில்லை.

காப்பிய மரபின் நீட்சிதான் நாவல் எனக்கொண்டால், நாவல்கள் வாழ்வின் முழுமையை எழுதும் ஒரு வடிவமாக இருக்க வேண்டும். இந்த ‘முழுமை’ என்பதை வரையறுப்பதுதான் விமர்சகர்களுக்கு உள்ள சவால். உதாரணமாக, தமிழ் மரபிலக்கியத்தில் கம்பராமாயணம் போன்ற காப்பியங்களில் பிரதான பாத்திரமான ராமனுடைய வாழ்க்கை ஆறு காண்டங்களில் எழுதப்பட்ட விரிவை, முழுமை என்கிறார்கள் விமர்சகர்கள். நவீன தமிழ் இலக்கியத்திலும் இதற்குப் பல உதாரணங்கள் உண்டு. நான் அண்மையில் வாசித்த வற்றில் இருந்து சொல்வதென்றால் எஸ்ரா வின் நெடுங்குருதி நாவலைச் சொல்ல முடியும். நாகு எனும் பாத்திரத்தை சுற்றிப் பின்னப்பட்ட கதை, தன்னை விரிவை நோக்கி எங்கனம் நகர்த்தியது என்பதுதான் அந்நாவலின் சாதனை.

அப்படி என்றால் ஒரு மனிதவாழ்வை நொடிக்கு நொடி எழுதிவிட்டால் இந்த ‘முழுமை’ கிடைத்துவிடுமா என்றால், அதுவும் இல்லை. அப்படி, மனித வாழ்வை நொடிக்கு நொடிக்கு எழுதினால் அது தட்டையான படைப்பாகதான் இருக்கும். ஏனெனில், யதார்த்தத்தில் மனிதவாழ்வு அசுவாரஸ்யங்களால் ஆனதுதான். அதில் சுவாரஸ்யமான கணங்கள் ஒப்பீட்டளவில் மிகக்குறைவானதே. ஆனால் இலக்கியம் அசுவாரஸ்யங்களை பதிவு செய்வதற்கான ஒரு ஊடகம் அல்ல. ஆக ‘அழுத்தம் பெறாத’, வாழ்வின் எந்தப் பகுதியும் இலக்கியமாக முடியாது. நிஜமும் புனைவும் சந்திக்கும் புள்ளியையும் மேற்சொன்ன விடயம் தான் தீர்மானிக்கிறது.
ஒரு நாவலாசிரியனின் பணி எழுத எடுத்துக்கொண்ட விடயத்தின் மொத்த சாரத்தின் முழுமையை கண்டடைவதும், அதை அழுத்தமான அனுபவங்களால் சாத்தியப்படுத்துவதும்தான்.

அப்படி எனில் சிறுகதை என்றால் என்ன?

யதார்த்தமான படைப்புகள் எல்லாம் வாழ்க்கையில் இருந்துதான் எடுத்துக் கொள்ளப்படுவதாக இருந்தால், வாழ்வை கூறுகளாக்கி, அந்தக் கூறுகளில் சிலதை சுருங்கக் கூறல் (விரிவை அல்ல), அல்லது சில கணங்களை மாத்திரம் நிறுத்தி உணர்த்துவது தான் சிறுகதையாக இருக்க முடியும். கவிதைகளையும் இந்த சட்டகத்துக்குள் அடக்கி விட முடியும். இப்படியாக கணங்களை உறையவைக்கும் தன்மை நாவலுக்குரியதல்ல. மேற்சொன்னதைப் போல, ஒரு நாவல் விரிவை நோக்கி தன்னை நகர்த்திக் கொண்டே இருக்கும்.
ஒரு நாவலை ஒரு சிறுகதைக்குள் எழுதி விட முடியும் எனத் தோன்றினால் வாழ்பனுபவத்தின் மொத்த ‘முழுமை’ எனும் நிலை தவறவிடப்பட்டுவிடும். அப்படியான படைப்புக்கள் ஒரு ‘நாவலாக’ முடியாது.

நாவலுக்கான பண்புகள்

மரபிலக்கியத்தில் நல்படைப்புக்கான இலக்கணமாக அறம், பால், பொருள், இன்பம் என இந்த நான்கும் சொல்லப்பட்டன. ஒரு படைப்பாளி இந்த நான்கையும் கொண்டு ஒரு தரிசனத்தை கட்டமைத்து விட்டால் அது நல்படைப்பெனக் கொள்ளப்பட்டது. இத் தரிசனங்கள் நன்கு கட்டமைக்கப்பட்ட படிப்பினைகளாக இருந்தன. ஆனால் நவீன இலக்கியத்தில் தரிசனங்கள் ஓர் நிலைப்படுத்தப்பட்டதோ, அல்லது அறத்தினை போதிக்கும் படிப்பினைகள் மட்டுமோ அல்ல. மேலும், நவீன இலக்கியத்தில் படைப்பின் தரிசனம் வாசகர் ஈடுபாட்டுடன் தான் முழுமை பெறும். ஒரு படைப்பின் ஊடே கட்டமைக்கப்படும் இடைவெளிகளே பெரும்பாலும் அதைச் சாத்தியப்படுத்துகின்றன. கவிதைகளில் படிமங்களும், குறியீடுகளுமே அந்த இடைவெளிகளை உருவாக்கும். சிறுகதைகளில் அந்த இடைவெளிக்காக வாசகன் அதன் முடிவுவரை காத்திருக்க வேண்டும். அது கலவியில் உச்சமடைவதைப் போல நிகழ்ந்து முடிவது. ஆனால் நாவல்களைப் பொறுத்த வரை அது ஒரு பரந்தவெளி. அந்த வெளியில் நகர்கிற கதையின் ஊடே பக்கத்துக்குப் பக்கம் இடைவெளிகள் சாத்தியமாகிக் கொண்டே இருக்கும். அப்படியாக உருவாகும் அந்த வெளி, வாசக சஞ்சாரத்துக்குரியது. வாசகன் அந்த இடைவெளிகளில் உழன்று உழன்று இன்னொரு நாவலை எழுதுவான். அது இன்னுமொரு நாவலாக விரிவடையும். ஆக இந்த விரிவை ஒரு நாவலாசிரியர் தன் வாசகர்கள் உழல்வதற்கான களமாக சாத்தியமாக்குகிறார். அப்படியான சாத்தியங்களும் அமைந்த நாவல்களை வாசிக்கும் வாசக மனநிலை, மலை ஏறி இறங்குவதைப் போல, உச்சத்திற்கும் பள்ளத்திற்கும் இடையே பரவசநிலையில் அலையும். அதை Eternal orgasm (முடிவற்ற பரவசநிலை) என்கிறார்கள். அதனால்தான் நாவல்களில் காலம் முடிவற்றது என்கிறோம். இந்த விரிவிலும் முன்னர் விவாதிக்கப்பட்ட ‘முழுமை’ சாத்தியமாகிறது. ஆகவே, வாழ்வின் முழுமையை எழுதுவதென்பது, நாவலில் எழுதப்பட்ட காலத்துடன் சம்மந்தப்பட்டதொன்றல்ல. அதாவது வாழ்க்கையை பிறப்பில் இருந்து இறப்பு வரை எழுதுவதென்பது மட்டுமல்ல. மாறாக கால விரிவின் சாத்தியங்களை எழுதுவதும்தான். இந்த வாதத்திற்கு உதாரணமாக மிலான் குந்தரேயின் ‘Unbearable lightness of being’ நாவலைச் சொல்ல முடியும். அதில் முழுமை காலத்தால் வரையறுக்கப்பட்டதொன்றல்ல. மாறாக விரிவும் வாசக இடைவெளிகளும்தாம் அவற்றை சாத்தியப்படுத்திற்று.

சிறுகதைகளைப் போல ஒரு இடத்தில் தொடங்கி ஓர் இடத்தில் முடிவதல்ல நாவல். எங்கேயுமே தொடங்காமல் எங்கேயுமே முடியாமல் நீண்டு கிடப்பதுதான் நாவல். ஒரு நாவலாசிரியன் பொட்டலில் பாம்பூர்வதைப் போல கதையை விரிவை நோக்கி நகர்த்த வேண்டும். அதில் வாசகன் தனக்கான இடைவெளியில் அவனுக்கான தரிசனங்களை அவன் அடைந்துகொண்டே பயணிப்பான். வாசகர்களைப் பொறுத்து படைப்பின் தரிசனம் வேறுபடலாம். எனவேதான் ஒரு நாவலின் சாத்தியங்கள் எண்ணற்றவை என்கிறோம். அதனால்தான் நாவல்கள் இலக்கியத்தின் மகத்தான வடிவமாகக் கொள்ளப்படுகிறது.

மேலும் இந்தப் புரிதல்களைச் சிக்கலாக்க, தர்க்கமும் தத்துவமும் நாவல் கோட்பாடுகளை குறிக்கிடும் புள்ளி குறித்துப் பேசமுடியும். ஆனால் அது இந்தக் கட்டுரைக்கு அவசியமானதில்லை என்பதால், சமூக மதிப்பீடுகளையும், நம்பிக்கைகளையும் கேள்விக்குட்படுத்துவது குறித்து நோக்கலாம்.

காப்பிய மரபில் படைப்பாளி மைய நீரோட்டத்தில் தன்னை எப்போதும் இணைத்துக்கொண்டே முன்நகர முயல்வான். ஆனால் நவீன இலக்கியம், எல்லாவற்றையும் கேள்விக்குட்படுத்தவே நாடும். அதனால்தான் நவீன நாவல்களில் பக்கச் சார்பும், ஒருமறையான கொண்டாட்டங்களும் சாத்தியமே இல்லை. ஒன்றைப் புனிதப்படுத்துவதும், மற்றொன்றை இழிவுபடுத்துவதும் முறையான தர்க்க நியாயங்கள் இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. புனிதங்கள் கேள்விக்குற்படுத்தப்படாமல், மறுபக்கத்தின் குறைந்தபட்ச நியாயங்கள் கணக்கில் கொள்ளப்படாமல் நவீன இலக்கியத்தில் முழுமை சாத்தியமில்லை.

மேலும் எஸ்ரா பௌன்ட் சொல்வதைப் போல ஆழமான பார்வையும், மனவிரிவும் இல்லாதவன் நாவலாசிரியன் ஆக முடியாது. சொந்த அனுபவங்களை புனைவுகளாக முன்வைக்கும் போது புனைவும் அபுனைவும் புனையும் புள்ளி குறித்த தெளிவு ஒரு படைப்பாளனுக்கு அவசியமாகிறது. போலவே, லட்சியவாதம் புனைவில் எங்கனம் கையாளப்படுகிறது என்கிற புரிதலும் தேவையாக இருக்கிறது.
சரி, இந்த விடயங்களை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் எழுதப்படும் படைப்புகளுக்கு என்ன நடக்கும்?

வரலாற்றில் இருந்துதான் மனிதன் மானுடவியலை கற்றுக்கொள்ள முடியும். இருபதாம் நூற்றாண்டின் மகத்தான தத்துவவியலாளர்கள் எல்லாம் வரலாற்றை மீள்பார்வை செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக, MICHAEL FOUCALT போன்றவர்கள் வரலாற்றில் இருந்துதான் எதிர்காலத்துக்கான தத்துவயியல் வரையறுக்கப்பட முடியும் என்பதை செய்துகாட்டினார்கள். அந்த வகையில் மேலே உள்ள கேள்விக்கும் வரலாற்றில் இருந்தே ஒரு பதிலை சொல்லி விட முடியும். ஆனால் தமிழ் சூழலில் விமர்சன மரபின் அடியும் தெரியாமல் நுனியும் புரியாமல் ‘கோட்பாடு’ என்கிற ஒற்றைச் சொல்லின் ஒவ்வாமையை எல்லாவற்றின் மீதும் பொதுவான ஒவ்வாமையாக பார்க்கும் மனோபாவம் மூத்த எழுத்தாளர்களிடமும் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதனால் கீழுள்ளவைகளையும் தெளிவுபடுத்த வேண்டி இருக்கிறது.

நாவல் ஒன்று அடிப்படையில் கொண்டிருக்க வேண்டிய விடயங்கள் குறித்து நான் மேலே எழுதி இருக்கிறேன். அவைகள் ஒன்றும் இலக்கண விதிகள் அல்ல. மாறாக நூற்றாண்டாக மேருகேறிவந்த ரசனையின் அடிப்படைகள் என்பதை பதிவு செய்திருக்கிறேன். எப்படி எழுத வேண்டும் என்பதை ஒரு எழுத்தாளனுக்கு சொல்லிவிட முடியாதுதான். ஆனால் எப்படி எழுதக்கூடாது என்பதை கோடிட்டுக் காட்டலாம் என்பதுதான் தெளிவு. இதை, அடிப்படைகளை புரிந்துகொள்ள ஒரு முயற்சி எனபதாகவும் சொல்லலாம்.

படைப்பில் இருந்துதான் விமர்சனம் உருவாகிறது. விமர்சனங்களின் வழியே கோட்பாடுகள் கட்டமைக்கப்படுகின்றன. அவை, குறித்த படைப்பு வடிவத்தை பின்னோக்கி நகர்த்துவதைத் தடுத்து, முன்னோகிச் செல்வதற்கான வழியை படைப்பாளிகளுக்கு சமைத்துக் கொடுக்கிறது. அந்தக் கோட்பாடுகளை ஒட்டியோ, அல்லது அதை மீறியோ ஒரு படைப்பாளி முன்நகர்வான். கோட்பாடுகளை மீறுதல் என்பது, கோட்பாடுகளை மறுப்பது எனப் பொருள்படாது. அந்த மீறல் விமர்சனத்துக்குள்ளாகி, புதிய கோட்பாடுகள் உருவாக்கப்பட்டு, அவை மீறப்பட்டு வேறு கோட்பாடுகள் உருவாக்கி என அந்த சுழற்சி தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கும். இது வெறுமனே இலக்கியத்துக்கானது மட்டும் அல்ல. மாறாக கட்டிடகலை, நாடகம், தர்க்கம், அரசியல் என சமூக விஞ்ஞானத்தின் எல்லா பரப்புக்கும் பொதுவானதுதான். ஆகவேதான் சொல்கிறோம், ஒரு படைப்பாளி எப்படி எழுத வேண்டும் என்பதை யாரும் சொல்லிவிட முடியாது. அப்படி ஒரு வரையறை இருந்தால் அது கோட்பாட்டு மீறலை சாத்தியப்படுத்தாது. ஆனால் எதை எல்லாம் எழுதக்கூடாது என்பதை வரையறுத்துவிட முடியும். அந்த வரையறையைத்தான் நாவல் கோட்பாடு என்கிறோம். இப்படியாக கட்டமைக்கப்பட்ட கோட்பாடுகளின் அடிப்படையில் நாவலொன்று ஆராயப்படுகிற போது அதை விமர்சனங்கள் என்கிறோம். ஆக, ஒரு இலக்கியப் படைப்பின் தரத்தை நிர்ணயிப்பது கோட்பாடுகளின் வழியே முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தாம்.

இந்த நாவல் கோட்பாடுகளின் அடிப்படைகள் இல்லாது எழுதப்படும் படைப்புகள் வெளியாகும் நாளில், அவற்றுக்கு வெகுஜனங்களின் மத்தியில் கீழுள்ள இரண்டில் ஒன்று நிகழ முடியும்;

1) அந்தப் படைப்புகள் முற்றாக நிராகரிக்கப்படலாம். அந்தப் படைப்பு குறித்து யாரும் அக்கறை கொள்ளாது போகலாம். இப்படியான படைப்புகள் தான் தமிழ் பரப்பில் அதிகமாக வெளிவருகின்றன. இது ஒருவகை.

2) படைப்பு வெளியான காலத்தில் ஒருசாராரால் கொண்டாடப்பட்டு மறுசாராரால் குப்பை என கடாசி வீசப்படலாம்.
இது இரண்டும் இல்லாமல் மூன்றாவது வகை ஒன்றும் உள்ளது. அது ஜனரஞ்ஜகமான படைப்புகள் மீதான நீண்ட காலக் கவர்ச்சி. உதாரணமாக ரமணிச்சந்திரனின் நாவல்களை பதின்ம வயதினர் படிப்பதைச் சொல்லலாம்.

இதில் முதல் வகைபற்றிச் சொல்ல எதுவுமில்லை. அதனால் நாங்கள் இரண்டாவது வகை குறித்தே பார்க்க வேண்டி இருக்கிறது. அதற்கு முன்னர் பதிவுசெய்ய வேண்டிய இன்னொரு விடயமும் இருக்கிறது. அது ஒரு படைப்பின் ஆயுட்காலம் சம்பந்தமானது.
சேக்ஸ்பியர் எழுதிக்கொண்டிருந்த 16ம் நூற்றாண்டில் பல ஆங்கில படைப்பாளிகளும் நாடகங்கள் எழுதிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் எத்தனை பேரை வரலாறு ஞாபகத்தில் இருத்தி மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டிருக்கிறது! இந்தக் கேள்வியை மையப்படுத்தியே TS Eliot தனது what is a classic என்கிற நீண்ட உரையை 1944யில் Virgil Societyயில் நிகழ்த்தினார். அது பின்னர் எழுத்திலும் பதிப்பிக்கப்பட்டது. அதில் படைப்பின் முதிர்ச்சி பற்றிப் பேசுகிற எலியட், படைப்பில் மொழியின் முதிர்ச்சி உடன், படைப்பின் பண்பு முதிர்ச்சி என்கிற ஒரு விடயத்தையும் வரையறுக்கிறார். அது வெறுமனே உடனடியான உணர்வுத் தூண்டல்களால் உந்தப்படும் படைப்புகள் கொண்டாடப்பட்டு பின்னர் வரலாற்றில் எப்படி காணாமல் போகும் என்பதை நிறுவப் போதுமாக இருக்கிறது. இந்த உடனடியான உணர்வுத் தூண்டல்தான் தற்கால ஈழ இலக்கியத்தின் மீது குவிக்கப்பட்ட ஒட்டுமொத்த தமிழ் இலக்கியப் பரப்பின் கவனத்திற்குக் காரணமாகவும் இருக்கிறது.

தீபச்செல்வனின் நடுகல் நூலுக்கும் நிகழ்ந்தது இதுதான். இந்த நூல் வெளியான போது ஒருசாரார் அதைக் கொண்டாட, மறுசாரார் அதை நிராகரிக்கின்றனர். இந்த ஏற்பும் நிராகரிப்பும் எதனடிப்படையில் என்பது கவனிக்கத்தக்கது. பெரும்பாலும் தீபச்செல்வனின் அரசியல் நிலைப்பாடுதான் இவற்றைத் தீர்மானிப்பதாகத் தெரிகிறது. அதைத் தாண்டி தீபச்செல்வனின் இந்தப் படைப்பு மீது இலக்கியக் கோட்பாடுகளின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட நியாயமான இலக்கிய விமர்சனங்களை அவ்வளவாக காணக்கிடைக்கவில்லை.

நடுகல் மீதான விமர்சனம்

மேலே, நாவல் கோட்பாடுகளின் அடிப்படைகளைப் பட்டியலிட்டிருக்கிறேன். அவற்றின் அடிப்படையில் நடுகல் மீதான விமர்சனத்தை பின்வரும் நான்கின் அடிப்படையில் முன்வைக்கலாம்;

1)  விரிவும் ஆழமும்

நடுகல் ஆரம்பம் முதல் இறுதிவரை கனகச்சிதமாக எழுதப்பட்டிருப்பதால், அது விரிவை நோக்கி நகரவோ, வாசகர்களுக்கான இடைவெளியை உருவாக்கவோ இல்லை. கால விரிவு சாத்தியப்படவில்லை. அதனால் ‘முழுமை’ அடையவில்லை.
2)  பக்கச் சார்பும், உயர்ந்து கேட்கும் ஆசிரியர் குரலும் நடுகல் ஒற்றைப்படையான தன்மை உடனேயே தன்னை முன்நிறுத்துகிறது. படைப்பில் ஆசிரியரின் குரலே மேலோங்கிக் கேட்கிறது. விடுதலைப் புலிகள் புனிதர்களாகவும், அரச படையினர் சாத்தான்களாவும் சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். குறைந்தபட்சம் சாத்தான்கள் ஏன் சாத்தான்களாக அலைகின்றன என்பதுகூட தர்கரீதியாக விவாதிக்கப்படவில்லை.

03)  பாத்திரங்களின் அகவளர்ச்சியும் பண்பு முதிர்ச்சியும்.

உதாரணமாக, இந்தப் படைப்பில் குழந்தை வினோதனுக்கும் வளர்ந்த வினோதனுக்குமான மனவளர்ச்சி, பதிவு செய்யப்படவில்லை. அது இந்தப் படைப்பை ஒரு தட்டையான படைப்பாக ஆக்கிவிடுகிறது. ‘சாத்தான்கள்’ மீதான தர்க்க வினவல்கள் அந்த மனவளர்ச்சியை சாத்தியப்படுத்தி இருக்கலாம். தர்க்க வினவல்கள் சாத்தான்களை நியாயப்படுத்துவதற்காக அல்ல. மாறாக சாத்தான்கள் ஏன் சாத்தான்களாக அலைகின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்காகவே.

4)  பாத்திரங்கள் மீதான கரிசனை இன்மையும், பாத்திரங்களின் உணர்வுப் போராட்டம் குறித்து விரிவான பார்வையை முன்வைப்பதில் ஆசிரியருக்கு உள்ள புறத்தடைகள்.

உதாரணமாக, விநோதனின் அம்மாவின் உணர்வுகள் மீதான முழுமையான விபரிப்புகள் இந்தப் படைப்பில் இல்லை. ஒரு மகனை யுத்தத்தில் இழந்த தாயின் அக உலகம் காட்டப்படவே இல்லை.
5)  ஆசிரியரின் அரசியல் நிலைப்பாடு நேசராசா போன்றவர்களது பிரச்சினைகள்தான் என்ன என்பதையாவது பேசி இருக்கலாம். ஏன் நேசராக்கள் உருவாகிறார்கள்? என்கிற ஒற்றைக் கேள்வி அதை படைப்பிற்குள்ளேயே சாத்தியப்படுத்தி இருக்கும். ஆனால் ‘துரோகி’ எனும் ஒற்றைச் சொல்லுக்குள் அந்தப் பாத்திரம் புதைக்கப்பட்டு விட்டது. ஒருநாவலுக்கும் ஒரு சிறுகதைக்குமான வித்தியாசங்களை இந்தப் புள்ளியில் உணரலாம். நினைவுறுத்துவோம்; நாவல் விரிவை நோக்கி நகர்வது.

இப்படியாக நிறைய விடயங்களைப் பட்டியலிடலாம். அவை எல்லாம் இந்தப் படைப்பின் இலக்கியத் தரத்தை தீர்மானிக்கவே. ஆனால் அதை எல்லாம் தாண்டி, ஒரு காலகட்டத்தின் நிதர்சனங்களை பதிவு செய்த படைப்பு என்கிற அடிப்படையில் இதற்கு ஒரு முக்கியமான இடம் எப்போதும் இருக்கும். ஆயினும், இப்போதைக்கு எனது கவலை எல்லாம் இப்படியான படைப்புக்களின் இன்னும் எத்தனை நாட்களுக்கு இதே வீரியத்துடன் படிக்கப்படும் என்பதாகவே இருக்கிறது.

உமையாழ் -ஐக்கிய இராச்சியம்

உமையாழ்

 

 523 total views,  1 views today

(Visited 79 times, 1 visits today)
 

One thought on “விரிவும் ஆழமும்-நடுகல் குறித்த பார்வை-உமையாழ்”

Comments are closed.