தெவியன் பிஹிடய்-பத்தி-சஞ்சயன்

சஞ்சயன்

2000 ஆண்டுகளில் இலங்கைக்குச் செல்லும்போது எனது மூத்தவள் நான்கு வயதைக்கடந்திருந்தாள். கொழும்பின் புறநகரான மொறட்டுவ பகுதியில் உள்ள மாடிக்குடியிருப்பொன்றில் மூன்றாம்மாடியிலுள்ள அம்மாவின் வீட்டில்,  தங்கியிருப்போம். அங்கிருந்து கொழும்பிற்கு செல்வது என்றால் ஏறத்தாள 45 நிமிடங்கள் வேண்டும்.

அக்காலத்தில் அறிமுகமாகியவர்தான் பிரேமசிறி. சிங்களவர். சொசொய்சாபுரம் ஆட்டோ நிறுத்துமிடத்தில் அவரது மஞ்சல்நிற ஆட்டோ நிற்கும். அவருக்கும் எனக்கும் 20 வயது வித்தியாசமிருக்கும். ஓரிருமுறை அவருடன் பயணித்தபோது இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப்போயிற்று. அவருக்கு எனது அரைகுறை சிங்களமும் புரிந்தது என்பதில் எனக்குத் திருப்தி.

எனது மூத்தமகளுக்கு கார் பயணங்களை விட  அவரது ஆட்டோப் பயணங்கள் பிடித்துப்போயின. அவருக்கு “ஓட்டோ மாமா” என்று பெயர்வைத்தாள். ஆட்டோவில் ஏறினால் பெரும் குதூகலமாகிவிடுவாள். அவருக்கும் அவளைப் பிடித்துப்போயிற்று. அவளை தூக்கித் திரிவார். அவளுடன் விளையாடுவார். அடிக்கடி காலிமுகத்திடலுக்குச் செல்வோம். அங்கு மகள் பட்டம் விடுவதற்கு பிறேமசிறியைத்தான் கேட்பாள். அவரும் சலிக்கமாட்டார். எனது இளையமகள் அப்போது கைக்குழந்தை. நாம் இலங்கையில் நிற்கும் காலங்களில் அவர் அதிகமாக எங்களுக்காகவே ஆட்டோ ஓட்டினார். நட்பு வளர்ந்து குடும்ப நட்பாகியது.

அவர் UNP கட்சியின் தீவிர ஆதரவாளர். பிரேமதாசவின் பக்தன் எனலாம். ஏழைகளின் நண்பன் அவர் என்பார். நாம் அரசியலும் கதைத்ததுண்டு. அதன்பின்பும் நண்பர்களாகவே இருந்தோம்.

எங்கள் வீட்டில் நாற்பது வருடங்களுக்கு அதிகமாக ஒரு சிங்களப் பெண் வாழ்ந்திருந்தாா். எங்கள் பெற்றோர் அரச வேலையாளர்கள். எனவே அவர்தான் எங்கள் மூவரையும் வளர்த்தார். எங்கள் இரண்டாவது தாயார் அவர். அவரை முதன் முதலில் நான் எம்மி என்று அழைத்ததால் அதுவே அவரது பெயராயிற்று. அவரது குடும்பத்தவர்களுடன் இப்போதும் தொடர்புகள் உண்டு.

தங்கைக்கு மறுநாள் திருமணம். வீடே கலகலத்துக்கொண்டிருந்தது. மகளுடன் விளையாடிக்கொண்டிருந்தார் எம்மி. மகளின் வேகத்துக்கு அவரால் ஈடுகொடுக்கமுடியாதிருந்தது. விளையாடிக் களைத்து எம்மியுடன் உறங்கிப்போனாள் மகள். மகள் உறங்கியதும் குசினிக்குள் சென்ற எம்மி நிலத்தில் விழுந்த சத்தம்கேட்டு ஓடிப்போனேன்.

அவசரகால வண்டியில் எனது மடியில் தலையும், அம்மாவின் மடியில் காலும் இருக்க வாகன நெரிசலில் சிக்குண்டு மெதுமெதுவாகச் சென்றபோது அவரது உயிர் எனது மடியில் பிரிந்தது.

நாளை தங்கையின் திருமணம். தங்கைக்கு விடயம்தெரிந்தால்  திருமணத்தை நிறுத்திவிடுவாள். நானும் அதே எண்ணத்தில் இருந்தேன். எம்மியின் குடும்பத்தவர்கள் வந்தார்கள். திருமணத்த நிறுத்தவேண்டாம். தங்கையிடம் எம்மிக்கு காயப்பட்டிருப்பதால் அவர் வைத்தியசாலையில் இருக்கிறார் என்று கூறுங்கள் என்றார்கள். பெரியவர்களும் அதையே சொன்னார்கள்.

ஒரு புறம் திருமணம், மறுபுறம் ஒரு மரணவீடு இரண்டையும் ஒருங்கிணைக்க ஓடி ஓடி உதவி செய்தவர் பிரேமசிறி. அந்த மூன்று நாட்களும் சில மணிநேரங்களே அவர் உறங்கியிருப்பார். அதன்பின் அவர்மீதிருந்து மதிப்பு பெருமடங்காகியது.

அதேபோல் இன்னொரு நாள் நாம் புறப்பட்டு விமான நிலையத்திற்கு செல்லவேண்டும். அன்று காலை பல இராணுவத்தினரின் உடலங்கள் கொழும்புக்கு கொண்டுவரைப்பட்டது என்று வதந்தி பரவியிருந்தது மட்டுமல்ல  கொழும்பில் ஒரு குண்டுவெடித்தது. தொலைக்காட்சிச் செய்திகளில் மக்களை அவதானமாக இருக்கச்சொன்னார்கள். ஊர்பாதுகாப்பு என்று ஊரார் வீதிகளில் நின்று வரும்போகும் வாகனங்களை நிறுத்தி பரிசோதித்து அனுப்பிக்கொண்டிருந்தனர்.

மாலை 9 மணிபோல் நாம் ஒரு வாகனத்தில் புறப்பட்டோம். அம்மாவும் வந்தார். சாரதி பயந்தவர். வரும்போதே வீதியில் பலர் நின்றிருப்பதை கண்டிருக்கிறார். நாம் தமிழர்கள் என்றதும் இன்னும் பயந்தார். அவருக்கு நம்பிக்கையூட்டி, முன்னிருக்கையில் அவரது மடியில் அமர்ந்துகொண்டார் மூத்த மகள். வாகனம் இரண்டாவது சந்தியில் திரும்பியதும் கையில் தடி, பொல்லுகளுடன் ஒரு கூட்டம் வழிமறித்து விசாரனையை ஆரம்பித்தது.

வாகனத்தில் இருந்து வெளியே இறங்கிச்சென்று அவர்களுடன் உரையாடி அவர்களுக்கு அனைத்து ஆவணங்களையும் காண்பித்து அனுமதிபெற்று அழைத்துப்போனார். அன்று அவர் இல்லாவிட்டால் நடந்திருப்பதே வேறு.

காலம் ஓடிக்கொண்டிருந்தது. அவரது குழந்தைகள் வளர்ந்தார்கள். எனது குழந்தைகளும்தான். இப்போதும் பிரேமசிறிதான் எமக்கு ஆட்டோ ஓட்டினார்.

2012/2013 காலப்பகுதியில் ஒரு போராளிக்கு நோர்வே, கனடா வாழ் நண்பர்கள் இருவர் இணைந்த ஒரு ஆட்டோ வாங்குவதற்கு உதவி செய்தனர். அப்போராளிக்கு முழங்காலில் காயம். முழங்கால் மடிக்கமுடியாது. எனவே அவருக்கு சாரதி அனுமதிப்பத்திரம் கொழும்பில்தான் பெற முடியும். அவரை அழைத்து வந்து பிரேமசிறியிடம் ஒப்படைத்தேன். அவர் போராளி என்பதையும் மறைக்கவில்லை. அப்போராளியின் சாரதிப்பத்திரத்திற்கான இரண்டு முழு நாட்கள் தனது வருமானத்தையும் இழந்து உதவினார். அவரது இரண்டு நாட்களுக்குரிய வருமானத்தை நான் கொடுத்தபோது, “இந்த உதவி பணத்துக்கானது அல்ல” என்று பணத்தை வாங்க மறுத்தார். மனிதம் என்பது இன, மத, அரசியல் வேறுபாடுகளைக் கடந்தது என்பதை உணர்ந்த மனிதர் அவர்.

அன்றில் இருந்து கடந்த 5 வருடங்கள்வரையில் அவரின் ஆட்டோவைத்தான் நாங்கள் பாவித்தோம். நாம் மட்டுமல்ல எங்கள்வீட்டுக்கு வருபவர்கள், அருகில் வாழும் எங்களை அறிந்தவர்கள் என்று எல்லோரும் அவரையே பாவித்தார்கள்.

அம்மாவின் உடல்நிலை அவரை அவர் 3ம் மாடியில் வாழமுடியாததாக்கியதால் அவர் வேறு இடத்திற்கு இடம்மாறவேண்டியதாயிற்று. அதன்பின் பிரமேசிறியுடன் தொடர்புகள் குறைந்துபோயின.

இறுதியாக அவரைச் சந்தித்தபோது வயோதிபம் அவரை உள்ளே இழுத்துக்கொள்ளத் தொடங்கியிருந்தது.

அதன்பின் இலங்கைக்குச்செல்லும்போதெல்லாம் அவரை சந்திக்க நினைப்பேன். ஆனால் காலம் அதற்கு ஆவன செய்யவில்லை. ஏறத்தாள 4 – 5 ஆண்டுகள் கடந்துபோயின.

இதற்கிடையில் அவரது மகன் விமான நிலையப் பொறியலாளராகவும், மகள் ஒலிபரப்புத் துறையிலும் தொழிலாற்றத் தொடங்கினர். அவர்களுக்கு திருமணமாகி பிறேமசிறி மூன்று பேரக்குழந்தைக்கு (B)பாப்பா ஆகினார். (சிங்களத்தில் தாத்தாவை (B)பாப்பா என்கிறார்கள்)

எனது மூத்தமகள் சுழலியற்கல்வியியில் மேற்கல்வியினை மேற்கொள்கொள்கிறாள். இளையவள் பல்கலைக்கழகத்திற்குச் செல்லவிருக்கிறாள்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு கொழும்பில் அம்மாவுடன் தங்கியிருந்தபோது மூத்தவள் விடுமுறைக்காக வந்தாள். அன்று காலிமுகத்திடலில் நடந்தபடியே உரையாடிக்கொண்டிருந்தோம். திடீரென்று “ஓட்டோ மாமாவைப் பார்க்கவேண்டும்” என்றாள். “சரி, உன் தங்கை நாளை வருகிறாள். அவள் வந்தபின் செல்வோம்” என்றேன்.

இரண்டு நாட்களின்பின் அவரிடம் செல்வோம் என்று புறப்பட்டு அவரது வீட்டுக்குச் சென்றோம். வீட்டினை கண்டுபிடிக்கமுடியவில்லை. அவருக்கு தொலைபேசினேன். வீதியில் நின்றபடி எங்கள் வாகனத்திற்காக காத்திருந்தார்.

இறங்கியதும் அணைத்துக்கொண்டார். அவர் கண்களில் வட்டமான சோடாப்பொத்தலின் அடிப்பக்கத்தைப்போன்ற மொத்தமான கண்ணாடி அணிந்திருந்தார்.

வலதுகண் பார்வையை இழந்துவிட்டது, இடதுகண் சற்றுத்தெரிகிறது, நாளை காலை சத்திரசிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறார் என்றும் அறியக்கிடைத்தது.

குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள் என்றார். அவர்களும் அவருடனான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்கள். என்னைத்தேடி வந்தீர்களே என்று அவர் அடிக்கடி கூறிக்கொண்டிருந்தார். அவர் நெகிழ்ந்திருப்பதை அறியமுடிந்தது.

சூடான கருங்கோப்பி அருந்தியபடி பேசிக்கொண்டிருந்தோம். நட்புக்கும் கோப்பிக்கும் ஏதோவொரு நெருங்கிய தொடர்பு இருக்த்தான் செய்கிறது.

நாம் புறப்பட்டபோது வீதிவரை வந்து குழந்தைகளின் கையைப்பற்றி தெவியன் பிஹிடய் (இறைவன் ஆசீர்வதிக்கட்டும்) என்றார்.

வாகனத்தின் வெளிக் கண்ணாடிவழியே அவரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். வாகனம் மறையும்வரையில் வீதியில் நின்று அவரும், மனைவியும் கையசைத்துக்கொண்டிருந்தனர்.

இப்போதும் மூத்தவள் அவரைச் சந்திக்கக்கேட்டதை நினைத்து நினைத்து மனம் நெகிழ்கிறேன்.

சஞ்சயன்-நோர்வே

சஞ்சயன்

 285 total views,  1 views today

(Visited 61 times, 1 visits today)
 

One thought on “தெவியன் பிஹிடய்-பத்தி-சஞ்சயன்”

Comments are closed.