பூனையின் காதலன்-பத்தி-சஞ்சயன்

எனது வீட்டுக்காரருக்கு 3 பெண்குழந்தைகள்.

இதை நீங்கள் பிழையாக விளங்கிக்கொள்ளக்கூடாது என்பதற்காக ஒரு சிறு தகவல்: அவரது வீட்டில் நான் வாடகைக்கு இருக்கிறேன் என்பதால் அவர் வீட்டுக்காரர் ஆகிறார். இனி கதைக்குள் செல்வோம்.

சஞ்சயன்
சமித்திரா ஸ்ரீரங்கநாதன்

பெண்குழந்தைகளுக்கும் பூனைகளுக்கும் ஒரு தொடர்பு இருப்பதாயே என் வாழ்க்கையனுபவம் எனக்குக் கற்பித்திருக்கிறது. எனது இரண்டு இளவரசிகளும் தங்களுக்கு ஒரு பூனை வேண்டும் என்று விண்ணப்பித்து சில நாட்களுக்குள் ஒரு பூனைக்குட்டி எங்கள் வீட்டுக்குக் குடிவந்தது.

அதற்கு ‘திமூத்தி’ என்று பெயர்வைத்தார்கள். அது அப்படி ஒன்றும் காரணஇடுகுறிப்பெயர் அல்ல. இளையவளின் மனதில் தோன்றியதொரு பெயர். அந்தப் பூனைக்கு மகள்களிடம் பலத்த செல்வாக்கு இருந்தது. அது வீட்டுக்குள் எங்கும் போகலாம்; வரலாம், ஏறலாம் இறங்கலாம், துள்ளலாம் விளையாடலாம். அதற்குக் கட்டுப்பாடு என்பதே இல்லை என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

இந்தவிடயத்தில் பூனைக்கும் ஆட்சேபனை இருக்கவில்லை. கட்டில், சொகுசு இருக்கை, மேசை, நாற்காலி என்று அது தன்னிஸ்டத்திற்கு ஏறியிறங்கியதைக் கண்ட நான் எனது அதிகாரத்தைப் பாவித்து பூனைக்குத் தமிழிலும் நோர்வேஜியமொழியிலும் மிகக்கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தேன்.

அது புடவைக்கடைக்குள் ஆண்களின் கருத்துக்கள் நிராகரிக்கப்படுவதுபோன்று எனது கருத்தை முற்றாக நிராகரித்தது. எனவே எனது அதிகாரத்தைப் பாவித்து அதன் காதில் ஒரு முறை சுண்டினேன். அது தேவைக்கு அதிகமான சத்தத்துடன் “மியாவ்” என்று கத்தியதால் அன்று வீட்டில் பெரும் பிரளயமே நடந்தது.

மூத்தவள், “நீ கொடுமைக்காரன், மிருகவதையாளன், இரக்கமில்லாதவன்” என்று முகத்தைத் திருப்பிவைத்துக்கொண்டாள். சின்னவள் விம்மி விம்மி அழுதாள். கண்ணீர் ஆறாக ஓடியது எங்கள் வீட்டில்.

எந்த அப்பன்தான் இந்தக் கொடுமையான தண்டனையைத் தாங்குவான்? பூனைக்கும் இளவரசிகளுக்கும் இனிப்பு வாங்கிக்கொடுத்து, மன்னிப்புக்கேட்டு, பூனைக்கு அழகிய கழுத்துப்பட்டி வாங்கிக்கொடுத்து, இனி பூனையை வதைக்கமாட்டேன் என்று சத்தியம் செய்தபின் ஒருவாறு சமாதானமாகினார்கள். சில காலத்தின் பின் பூனைக்கு நகம் வளர்ந்தது. அது தன் நகத்தைக் கூர்மைப்படுத்த எங்கள் வீட்டு சுவற்றையும், தோலினாலான கதிரைகளையும், சொகுசு இருக்கையையும், நிலவிரிப்பையும் பாவிக்கத்தொடங்கியது. அவற்றில் நகக்கீறல்கள் தெரியத்தொடங்கியதைக் கண்டதும் எனக்குக் காதால் புகை வந்தால் நானும் அங்கும் இங்கும் பார்த்துவிட்டு அதன் காதில் சுண்டுவேன். அது மியாவ் என்று கத்தும். இருவரில் ஒருத்தி ஓடிவருவாள். பூனையைத் தூக்கி அப்பா அடித்தாரா என்பாள்;. அது வாயைத் திறக்காவிட்டால் நான் தப்பினேன். அது மியாவ் என்றால் நான் தொலைந்தேன்.

ஒரு நாள் இளையவளுக்குப் பூனையை, நாய்போன்று கட்டி இழுத்துச்செல்லும் ஆசை வந்தது. நானும் முடியுமானவரையில் எடுத்துக்கூறினேன் பூனையை அப்படி அழைத்துச்செல்ல முடியாது என்று. “இல்லை. அது எங்களுடன் வெளியே நடந்துவரவேண்டும்” என்றாள் அவள். நானும் அனுபவத்தில் கற்றுக்கொள்ளட்டும் என்று விட்டுவிட்டேன்.

பூனையின் கழுத்துப்பட்டியில் ஒரு கயிற்றைக்கட்டி “திமூத்தி, வாங்கோ, நடந்துபோவம்” என்று அழைத்தாள். முதலில் நகர்ந்த பூனை சற்றுநேரத்தில் சத்தியாக்கிரகம் செய்ய ஆரம்பித்தது. இவள் இழுக்க. அது தரையில் உட்கார. இவள் மீண்டும் இழுக்க, அது இழுபட்டபடியே வர வீட்டில் இருந்து 15 மீற்றர் தூரத்தினுள் அந்தப்பயணம் முடிந்துபோயிற்று.

கடைக்குச் சென்றால் அதற்கும் உணவு, இனிப்பு வாங்கினார்கள். அதை நீராட்டினார்கள், அழகிய துணியால் துடைத்தெடுத்தார்கள். பூனை ராஜவாழ்க்கை வாழ்ந்து வந்தது. ஒருமுறை பூனை சுகயீனமுற்றதால் வைத்தியரிடம் சென்றோம். அவர் பூனைக்கு ஒரு ஊசி குத்தினார். பூனைக்கு வலித்தோ என்னவோ ஆனால் எனது பணப்பைக்குப் பெரிதாக வலித்தது.

அது ஒரு பெண்பூனை. நான் வேலைசெய்த இடத்தில் பெண்பூனை குட்டிபோட்டால் பெரும் சிரமம் என்றார்கள். ஒரு பூனையுடனேயே என்னால் வாழ முடியவில்லை. 7 – 8 குட்டிகளுடன், என்ன செய்யப்போகிறேன் என்று யோசித்தபோது நண்பர் ஒருவர் பூனைக்கு குடும்பக்கட்டுப்பாடு செய் என்றார்.

மறுநாளே பூனையின் கர்ப்பப்பையை வைத்தியர் அகற்றினார். இப்போதும் எனது பணப்பைக்குதான் அதிகமாகத்தான் வலித்தது. இளவரசிகள் இருவரும் பூனை, மயக்கத்தில் இருந்து விழிக்கும்வரையில் அதைத் தடவியபடியே உட்கார்ந்திருந்தனர். ஏன், அது வைத்தியரிடம் வந்தது, மயங்கியிருக்கிறது என்ற கேள்விக்கு நான் பதில்சொல்லவில்லை. அந்தக் கதையை நிறுத்திவிட்டேன்.

அப்போது எனது மூத்தவள் 6ம் வகுப்பில் கற்றுக்கொண்டிருந்தாள். எனது போதாதகாலம் மறுநாள் பாடசாலையில் இனப்பெருக்கம் கற்பித்திருக்கிறார்கள். எனது குட்டு உடைந்துவிட்டது. ஒருவாரம் அவள் முகத்தைத் திருப்பிவைத்திருந்தாள். தங்கைக்கு விடயம் புரியாவிட்டாலும் அக்காவுக்காக என்னை முறைத்துப்பார்த்தாள். நான் பூனையின் வம்சத்திற்குத் துரோகம் செய்துவிட்டேனாம் என்று என்னை ஒரு இனப்படுகொலையாளி எண்ணுமளவிற்குத் திட்டித்தீர்த்தாள் பெரியவள்.

அந்த நாட்களில் எங்கள் கீழ் வீட்டுக்கு போலந்து நாட்டினர் சிலர் குடிவந்தார்கள். பூனை அவர்களுடன் நட்பாகியது. நாம் விடுமுறையிற் சென்றால் அவர்களிடம் பூனை தங்கியிருந்தது. இளையவள் அவர்களிடம் “அதற்குப் பசிக்கும், உணவு நீர் கொடுக்கவேண்டும், கக்கா செய்ய வெளியில் விடவேண்டும். அதனுடன் விளையாடவேண்டும்” என்று ஆயிரம் கட்டளை இடுவாள். அவர்களும் அனைத்திற்கும் தலையாட்டினார்கள்.

இந்த நாட்களிற்தான் எனது வாழ்வில் பிரளயம் வெடித்தது நான் நோர்வேயிலும், குழந்தைகள் இங்கிலாந்திலும் என்றாகியது வாழ்க்கை. இங்கிலாந்துக்குப் பூனையைக் குடிபெயரச்செய்யும் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. பூனை போலந்துநாட்டவர்களுடன் வாழத்தொடங்கியது. இப்போதும், ஏறத்தாழ 8 – 9 வருடங்களின்பின் அவ்வப்போது “திமூத்தி” எங்கள் உரையாடல்களில் வந்துபோகும். அதனுடனான காலங்கள் மிக அழகானவை. பல மனதுக்கு நெருக்கமான நினைவுகளை அது தந்திருக்கிறது.

இப்போது நான் குடியிருக்கும் வாடகை வீட்டின் உரிமையாளருக்கு மூன்று பெண்குழந்தைகள். அவர்களில் எனது மகள்களின் அப்போதைய வயதில் இருவர் இருக்கிறார்கள். அவர்கள் எனது வீட்டுக்கு மேல்வீட்டில் வாழ்கிறார்கள்.

இவர்கள் வீட்டில் ஒரு கரிய நிறப் பூனை ஒன்று வளர்கிறது. அந்தப் பூனைக்கும் எனக்கும் இருந்த ஒரே ஒரு ஒற்றுமை, நிறம் மட்டுமே. அது என்னைக் கண்டால் அருகில் வர முயற்சிக்காது. நானும் அதனருகில் செல்வதில்லை, புன்னகைப்பதும் இல்லை. நாம் நண்பர்களும் இல்லை, விரோதிகளும் இல்லை என்று வாழ்ந்துவந்தோம்.

சஞ்சயன்- நோர்வே

சஞ்சயன்

(Visited 79 times, 1 visits today)