மேய்ப்பனுக்குக் காத்திருக்கும் ஆட்டுக்குட்டிகள்-சினிமா விமர்சனம்-பாகம் 12-விஜய ராவணன்

The Red Balloon (French,1956)

விஜய ராவணன்பாரம்பரிய பிரம்மாண்டத்தைத் தொலைத்துவிட்ட தலைநகரின் போர்த்தழும்புகள் அப்போது முற்றிலும் ஆறிவிடவில்லை… இரண்டாம் உலக யுத்தம் கழிந்து பத்து வருடங்களான பின்னும் ஆறாத அகத்தின் ரணங்களை எந்த ஒப்பனை பூசி மறைக்க முடியும்…? வல்லரசு என்ற வார்த்தையை எப்போதோ முணுமுணுத்ததாக மட்டுமே ஞாபகம்! நூற்றாண்டுகளாய் அனுபவித்து வந்த ஏகாதிபத்திய ஆதிக்கத்தை இழந்துவிட்ட சீற்றம் உள்ளுக்குள் அலையடித்துக் கொண்டேயிருக்கிறது… பறிக்கப்பட்ட கடந்தகால ஆடம்பரத்தின் கசப்பு மனதின் ஆழம் வரை பாய்ந்து சகமனித வெறுப்பாக மட்டுமே எஞ்சி இருக்கும்… உலகின் கலாச்சாரத் தலைநகரம் எனக் கொண்டாடப்படும் பாரீசும் கூட இதற்கு விதிவிலக்கல்ல.

1956 யில் இயக்குனர் ‘Albert Lamorisse’ காட்டும் பாரீஸ் நகரமும் மனித மனங்களைப் போல குறுகலான வீதிகளைக் கொண்டிருக்கிறது… பொலிவிழந்த வீடுகள்… சுண்ணாம்புப் பூச்சு உதிர்ந்துபோன கருப்படித்த சுவர்கள்… ஈஃபில் டவரின் போலி மிடுக்கு அங்கு காட்சிப்படுத்தப்படவில்லை… மாறாக சோம்பலான சாலைகளும் வண்ணங்கள் உதிர்ந்துபோன குடியிருப்புகளும் பழுப்பேறிய சோர்வடைந்த முகங்கள் மட்டுமே காணக்கிடைக்கின்றன… பல வருடப் போர் விட்டுச்சென்ற அயர்ச்சியும் வெறுப்பும் வெளிப்படையாகத் தெரிகிறது… போரின் வடு ஆறாத நகரை உய்வித்து அதன் பண்டைய மேன்மைகளை மீட்டெடுக்க, இயற்கைக்கு அப்பாற்பட்டதொரு இடத்திலிருந்து இறங்கிவந்து நம்பகத்தன்மைக்கு முரணான அதிசயங்களை நிகழ்த்திக் காட்டும் ஒரு அற்புத சக்தியால் மட்டுமே முடியும்.

ஆளில்லா வீதியின் தெருவிளக்கில் கட்டப்பட்டு, தன்னையொத்த ஒரு பரிசுத்த ஜீவனுக்காக மௌனமாய்க் காத்திருக்கிறது ஒரு பலூன். வண்ணங்கள் நீர்த்துப் போன நகருக்கு மீட்சியாய்ப் பளிச்சென்ற சிவப்பு நிறத்தில்… கண்ணைப் பறிக்கும் அதன் நிறமே இருப்பிடத்தின் வெறுமையை நிறைத்துக் காட்டுகிறது… புவியை உய்விக்க வரும் இறைத்தூதர் எப்போதும் மனித உருவில் தான் அவதரிக்க வேண்டுமா என்ன? சந்தோஷங்களை தன்னுள் அடைத்து வைத்திருக்கும் ஒரு வண்ண பலூனுக்கும் அது சாத்தியப்படும்!

தன் எஜமானனாக தேர்ந்தெடுத்த சிறுவனை ஒருகணப்பொழுதும் அந்தச் சிவப்புப் பலூன் விலக மறுக்கிறது.. ஒரு வளர்ப்பு நாயக்குட்டியைப் போல்….அவன் சொல்லுக்குக் கட்டுப்பட்டும்… காத்திருந்தும்… அவனை மௌனமாகப் பின்தொடரவும் செய்யும் ஒரு பலூனுக்கும் அந்தச் சிறுவனுக்கும் இடையேயான உறவைப் பற்றிப் பேசும் ‘The Red Balloon’  சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதைப் பெற்ற ஒரே குறும்படம்.

சிறுவனைத் தவிர யாரும் அந்த பலூனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. தனக்கு அப்பாற்பட்ட அற்புதம் அருகாமையில் நிகழும்போது அதன்மீது இயல்பாய் உண்டாகும் பொறாமையின் வெறுப்பு நிலை… சிறுவர்களும் அதற்கு விதிவிலக்கல்ல… போரின் லட்சக்கணக்கான மரணங்களுக்கு மத்தியில் பிறந்து வளரும் ஒரு தலைமுறையிடம் வேறென்ன எதிர்பார்த்துவிட முடியும்? துவேஷத்தைத் தவிர…

பழைய பொருட்கள் விற்கப்படும் வீதிக்கடை ஒன்றில் சிறுவன் வேடிக்கை பார்க்கும் எண்ணெய் ஓவியத்தில், புன்சிரிப்புடன் தென்படக்கூடிய ஒரு சிறுமியின் சாந்தமான முகம் தான் அந்நகரம் போரில் தொலைத்தது. அந்தச் சிறுமியின் தனிமையையும் அதன் அமைதியையும் சிறுவன் வெறித்துப் பார்க்கிறான்… பெருநகரின் அத்தனை ஜனநெருக்கடியிலும் அவன் உணர்வது அந்தத் தனிமையைத் தான்… ஆளுயர நிலைக்கண்ணாடியில் காற்றிலாடும் தன் பிம்பத்தை உற்றுநோக்கும் சிவப்புப் பலூனும் அதையே உணர்ந்திருக்க வேண்டும்…

உயிர்ப்பித்து வந்த இறைத்தூதரைப் போல் முடிவில் அந்த அற்புதம் நிகழ்கிறது… உண்மையில் அப்படியானதொரு அதிசயத்தை எதிர்நோக்கியே இப்போதும் பல்வேறு தேசங்கள் காத்திருக்கின்றன… ஆனால் நம் கைகளுக்கு எட்டாத உயரத்துக்கு பலூன்கள் எப்போதோ பறந்து போய்விட்டன… நம் எல்லைக்கு அப்பால்… அவைகளுக்கு மட்டுமே சொந்தமான அமைதியானதொரு உலகைத் தேடி…

குறும்படத்தின் இணைப்பு:

https://www.youtube.com/watch?v=-mGRynunevU

With a Little Patience ( Hungarian, 2007)

விஜய ராவணன்இரண்டு மணிநேர முழுநீளத் திரைப்படங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தைச் சிலநிமிட குறும்படத்தில் உண்டாக்க காட்சிகளின் கூர்மை மிக முக்கியம். பக்கம் பக்கமான உரையாடல்களில் சாத்தியப்படாத தீவிரத்தை நேர்த்தியான காட்சிகளின் கனத்த மௌனம் இன்னும் ஆழமாய்க் கடத்திவிடுகிறது…

கானகத்தின் நடுவில் தனித்து இயங்கும் அலுவலகத்தில் பணிபுரியும் இளவயது பெண்ணின் உள்ளங்கைக்குள் திணிக்கப்படும் விலையுயர்ந்த ஆபரணத்தின் குருதிப் பின்னணி அவள் அறிந்ததே. இருந்தும் அதை உள்ளங்கையில் ஏந்திப் பார்த்து மேலும் மேலும் உவகை கொள்கிறாள்… மரணவாடை வீசும் அந்த ஆபரணமும் பாரமான அலுவலகச் சூழலும் அவ்வப்போது கேட்கும் கிறீச்சிடல்களும் விசும்பல்களும் அவளை நடுங்கச் செய்யவில்லை மாறாக சமநிலை குலையாத அவளின் இயல்புத்தன்மையே புண்பட்ட வரலாற்றின் கீழ்மைகளை நமக்கு மீண்டும் நினைவுபடுத்துகிறது.

வன்மம் நிறைந்த கடந்தகால துயர வரலாற்றை ‘László Nemes’ எந்தச் சலசலப்பும் இல்லாமல் திருப்பிப் பார்க்கிறார்… தன் புகழ்பெற்ற ‘Son of Saul’ திரைப்படத்தின் வீரியத்தை ‘With a Little Patience’ குறும்படத்தில் கடத்த சிலநிமிடக் காட்சிகள் போதுமானதாய் இருக்கிறது.

கதவைச் சாத்திக் கொண்டதும் வெளியுலக மரண ஓலங்கள் என்றுமே நம் செவியை அடைப்பதில்லை… மாறாக கனத்த நிசப்தம் நம்மைச் சூழ்ந்து கொள்கிறது…. நாமும் பாதுகாப்பாக இருப்பதாக நம்பி ஒரு பூனையைப்போல் கண்மூடிக் கொள்கிறோம்…

குறும்படத்தின் இணைப்பு:

https://www.youtube.com/watch?v=5g1FIkw9CYM   (With A little patience)

விஜய ராவணன்-இந்தியா

விஜய ராவணன்

(Visited 76 times, 1 visits today)