கனவுகள் உயிர்க்கும் தருணம் (cinema paradise (Italian,1988) சினிமா விமர்சனம்-பாகம் 09-விஜய ராவணன்

விஜய ராவணன்‘ சினிமா ’ என்ற வார்த்தையை அழுத்தமாய் உச்சரிக்கும் போதே மனதில் ஒரு க்ரீச்சொலி. மூடிய குடுவைக்குள் கட்டுண்டு கிடக்கும் மனசுக்கு எங்கிருந்தோ ராட்ச சிறகுகள் முளைத்துவிடும். தான் சிறைபட்டிருக்கும் இறுகிய கணங்களிலிருந்து விடுதலையாகி அவை சிறகடிக்கும் அரவம் தான் திரையரங்கின் நிசப்தத்தில் நிறைந்து கேட்கிறது. எதிரே நீள்சதுர வெள்ளைத் திரையிலோடும் பிடித்த காட்சியின் ஏதோவொரு புள்ளியில் தன் பாரமான சிறகுகளை அவை உதிர்க்கும் வரை அந்தச் சப்தம் ஓய்வதில்லை.

தன்னால் உரக்கப் பேசமுடியாத வார்த்தைகளை, வாழத்தவறிய பொழுதுகளைத் திரையில் வாழ்ந்து காட்டும் கதாபாத்திரங்களின் நிழலுடக்குள் பார்வையாளன் புகுந்துகொண்டு சில மணித்தியாலங்கள் தன் இஷ்டத்திற்கு வாழ்ந்துவிட்டுத் தான் வெளியேறுகிறான். அப்படியான தருணங்கள் தான் ஒரு திரைப்படத்தின் வெற்றியைத் தீர்மானிப்பது. அத்தகைய திரைப்படங்கள் தரும் உவகை பல விடியல்கள் கடந்தும் தீருவதில்லை.

வெள்ளைத் திரையில் தோன்றும் சினிமாவின் முதல்சொட்டு என்றுமே அலாதி சுவைமிக்கது. பக்கவாட்டில் திறந்தே கிடக்கும் டூரிங் டாக்கீசின் மண்தரை, தூசும் புழுதியும் படிந்த குறுகலான இருண்ட டிக்கெட் கவுண்ட்டர், நீண்ட நேரக் காத்திருப்பு, தள்ளாடும் இருக்கை, விட்டுவிட்டு எரியும் மின்விளக்குகளோடு மேலேறும் சிவப்புத் திரை, விசில் சத்தத்தைத் தொடர்ந்து படரும் மௌனம், எதிர்பாரா கண்ணீர், நேர்மையான சிரிப்புச் சத்தம்… திரையரங்கு பசுமையான பல நினைவுகளின் பிறப்பிடம்… கனவுகளை உய்விக்கும் மந்திரக்கோல். அதன் ஒற்றை அசைவு போதும் இறுகிய மனம் விடுதலை பெற. சாலையில் கடந்தபோகும் சினிமாவின் சுவரொட்டிகள் கூட அத்தனை வல்லமை படைத்தவை.

போருக்குச் சென்று திரும்பாத அப்பாவைப் பற்றி வருடங்கள் கடந்துவரும் மரணச்செய்தியைக் கூட சிறுவன் Salvatore சினிமா சுவரொட்டியை வேடிக்கைப் பார்க்கும் கணத்தில் எளிதில் கடந்துவிடுகிறான். அதுதான் பால்யத்தின் மனப்போக்கு… சினிமாவின் ஆற்றல்…

டேவிட்டுக்கும் கோலியாவுக்கும் இருக்கும் மாபெரும் இடைவேளி தான் அக்கதைக்கும் நமக்குமான நெருக்கம். அதேபோன்ற நேர்மறை வயது வரம்பைச் சார்ந்த Alfredo என்ற தியேட்டர் ஆபரேட்டருக்கும் Salvatore என்ற எட்டு வயது சிறுவனுக்கும் இடையேயான நட்பு தான் ‘cinema paradise’ படத்தின் நாடித்துடிப்பு. இருவரையும் ஒன்றிணைக்கிறது சினிமா மீதான நேசம். திரையில் தோன்றும் புதுப்புது கதைகள் தரும் பரவசம். சினிமாவின் சிலந்திவலையில் அவர்கள் இருவர் மட்டுமல்ல ஒட்டுமொத்த Giancaldo நகரமே பின்னிக்கிடக்கிறது. அந்த ஒற்றைத் திரையரங்கு தான் அந்தச் சிறுநகர மக்களின் வாழ்வியல் அச்சாணி. Alfredo மற்றும் Salvatore வின் அன்றாடம். உணவு பரிமாறுபவனுக்கு, சாப்பாட்டு மேசையில் விருந்தினர்களின் முகமலர்ச்சி தரும் மனநிறைவைத் தான் தியேட்டர் ஆபரேட்டர்களும் நித்தம் உணர்கிறார்கள் போலும்.

வாலிபத்தின் காதல் விசையில் உழலும் Salvatore வுக்கு ஆறுதலாய், பேரழகி இளவரசிக்கும் சாதாரண படை வீரனுக்கும் இடையேயான காதல் கதையை முதிய Alfredo சொல்கிறார். இரவின் கடுங்குளிரிலும் அடர்மழையிலும் உறக்கத்தையும் உணவையும் வெறுத்தவனாக இளவரசியின் கூற்றுப்படி நூறு பகல்கள் நூறு இரவுகள் அவளது பார்வைபடும் தொலைவில் காத்துக்கிடக்க விழையும் படைவீரனின் அர்ப்பணிப்பும் திடீர்விலகலும் Salvatoreவை முழுதாய் ஆட்கொள்கிறது. நித்தம் வெள்ளைத் திரையில் பல கதைகளைத் தரிசிப்பவனுக்குக் கூட செவிவழிக் கதைகளின் புனைவுலகின் அரவணைப்பு தேவைப்படத்தான் செய்கிறது.

நினைவுகள் துரத்தும் நீண்ட இரவில் பின்னோக்கி நகரும் திரைக்கதை இறுதியில் தன் தளாத மனபாரத்தை நம்மீதே இறக்கி வைத்து விடுகிறது. உணர்வு ரீதியாக சொல்லப்படும் கதைகள் இருமுனைக் கத்தியே. அதைக் கையாளுபவன் நேர்த்தியைப் பொருத்தது.

வாழ்வின் ஏதோவொரு புள்ளியில் நினைவுகளின் சுவடுகள் பதிந்திராத தொலைதூரத்தை நோக்கி தன் இருப்பையும் அடையாளத்தையும் உதறித் தள்ளிவிட்டு விலகியோடும் பலரைப் போல் Salvatore வும் ஓடுகிறான். தன் அலைக்கழிப்பை வெற்றி கண்டுவிட்ட நினைப்போடு பல வருடங்களுக்குப் பிறகு ஊர் திரும்புகிறவனுக்கு நிதர்சனம் வேறொன்றாய்க் கனக்கிறது. கடந்த காலத்தின் புழுதியப்பிய கால்களின் முன்னால் மண்டியிடும் தருணம் அது.

நினைவிலிருந்து கத்தரித்துப் போட்ட வாழ்வியல் தருணங்கள் அகக்கண் முன் ஓடும்போது மனதில் எழும் உணர்வலைகள் அளப்பரியவை… உறைந்த விழிநீர்த் துளிகளின் பிசுபிசுப்பும் சிந்தபடாத புன்முறுவல்களின் வெற்றுத் தடங்களும் பேசத் தவறிய வார்த்தைகளும் கொடுக்கப்படாத முத்தங்களின் ஈரமும் என கடந்தகால நினைவுகள் கருவண்டாய் நெஞ்சைக் குடைந்துவிடும்….

இன்றும் எத்தனையோ ஊர்களில் பழைய திரையரங்குகள் தான் அடையாளம். அவை புதுப்பிக்கப்பட்டாலும் சரி இல்லை தரையோடு தரையாய் இடிக்கப்பட்டு பணம் சுரக்கும் வேறு உருவுக்கு அவை மாற்றப்பட்டாலும் சரி, அதன் பழமைபடிந்த பசுமையான நினைவுகளும், நூற்றுக்கணக்கான இருக்கைகளுக்கு முன்னால் சொல்லப்படட்ட கதைகளும், அவ்விடத்தைக் கடக்கும் ஒவ்வொரு ஷணத்திலும் இன்னமும் உயிர்வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன, ‘cinema paradise’ போல்.

விஜய ராவணன்-இந்தியா

விஜய ராவணன்

 

 

(Visited 79 times, 1 visits today)