‘தாய்’ படகின் அலைக்கழிப்பு-சினிமா தொடர்-பாகம் 01-விஜய ராவணன்

வெவ்வேறு சமயத்தில் சூரியன் உதித்து மறையும் வேறுபட்ட மொழிபேசும் எல்லா நிலப்பரப்புகளின் எல்லைக் கோட்டுக்கு அப்பாலும் தாயின் முகம் மட்டும் பொதுவானதாய் அறியப்படுகிறது. வெவ்வேறு முகங்கள் கொண்ட எல்லாத் தாய்க்கும் ஒரே மாதிரியான வாழ்க்கைதான். தன் பிள்ளைகளின் கனவுகளுக்காகத் தத்தளிப்பும் அலைக்கழிப்பும் நிறைந்த பொதுவான வாழ்க்கைதான் அவர்களுடையது. அப்படியான இரு வேறு துருவத்தைச் சேர்ந்த தாய்களின் அன்றாட வாழ்வியல் பயணத்தை அவர்களது பிள்ளைகளினூடாய் மறைமுகமாகப் பேசுகின்றன  ‘BOYHOOD’ மற்றும் ‘The Village Rockstars’ திரைப்படங்கள்.

ஆசைகளின் கைப்பிடித்து…

0000000000000000000000000000

The Village Rockstars (Assamese, 2017)

ஆசைகள் தான் நம்மை அடித்துச் செல்லும் நீரோட்டம். சுவாரசியமும் வனப்பும் இல்லாத வறண்ட வாழ்க்கை தான் ஆசைகளற்றது. கையை முன்னும் பின்னும் அலைக்கழித்தோ இல்லை சிறு ஓடத்தில் அமர்ந்து துடுப்பிட்டோ இல்லை கரும்புகை கக்கும் நீராவிக் கப்பலில் பயணித்தோ ஆசைகளை ஆரத்தழுவி அரவணைக்க நித்தம் பயணித்தபடி இருக்கிறோம். ஆசைகளில் சிறியது பெரியது ஏது? கைதொடும் தொலைவையும் எட்டா தூரத்தையும் அவனவன் புறச்சூழலே நிர்ணயிக்கின்றன.

ஏழு வயது சிறுவனுக்குச் சொந்தமாக ஒரு கிரிக்கெட் மட்டை வாங்கினால் போதும், அதோடு வாழ்வின் எல்லா இலக்கையும் அடைந்து விட்டதாய் நினைத்துக்கொள்வான். அப்போதைய அவனின் தேவையும் ஆசையும் அது ஒன்றுதான். அதன் கைப்பிடித்தே தான் காலை முதல் இரவு வரை நடப்பான். நாளை அப்பா வாங்கித் தருவார், தன் கனவு மெய்ப்படும் என்று தோன்றும் தருணங்களில் கண் அயர்வான். பின் அதே எண்ணத்தில் படுக்கையை விட்டு குதித்து விழிப்பான். ஆசைகள் பெரிதும் சிறிதுமாய் விரிந்து சுருங்குவதில்லை அவ்வாறாக நம்மை நம்ப வைக்கின்றன. அப்படியான ஒரு ஆசையைச் சுமந்து செல்லும் திரைப்படம் தான் “The Village Rockstars”. பால்யத்தின் ஈரமனதில் ஆசைகளின் நீரூற்றில் முளைத்துச் செழித்திடக் காத்திருக்கும் அசாமிய சிறுமி ‘தனு’ வின் கனவை, நமக்கு அத்தனை பரிச்சயமற்ற அல்லது நாம் பரிச்சயப்பட விழையாத ஒரு நிலப்பரப்பின் வாழ்வியலோடு சொல்கிறது.

எத்தனை அழகான, அதேசமயம் ஆபத்தான வாழ்க்கை அவர்களுடையது. அள்ளிக் கொடுக்கும் இயற்கை அன்னையின் பச்சைநிறம் படிந்த செழிப்பான கரங்கள்… அவளின் கைப்பிடித்தே வாழும் மக்களைக் கட்டித் தழுவி அரவணைக்கும் பாசம்… பின் ஏனோ துணுக்குற்றுக் கொடுத்ததை எல்லாம் வட்டியும் முதலுமாய்த் திரும்பிப் பிடுங்கிக் கொள்ளும் புரிந்து கொள்ள முடியாத அவளின் சினம்… அடிப்படை வாழ்வியலுக்கானப் போராட்டம் நிறைந்தது அவர்களின் வாழ்க்கை. ஒளிபுகும் தெளிவான நீர் எந்நேரத்திலும் தன் தன்மையை இழந்து, அழுக்கும் சகதியும் மரணமும் கலந்த மங்கிய வெள்ள நீரோட்டமாய் அத்துமீறி நிலப்பரப்பில் நுழையலாம். புயல் காற்று புரட்டிப் போடலாம். பஞ்சம் தலை விரிக்கலாம்… இவற்றுக்கு இடைப்பட்ட நாட்களில் தான் அவர்களின் வாழ்வும் நகர்கிறது. அவர்களும் நம்மைப் போல் கனவு காண்கிறார்கள். ஆசைப் படுகிறார்கள். அந்த ஆசையின் அளவுகோலே அவர்களை உயிர்ப்புடன் இருக்க வைக்கிறது. அந்த நிலப்பரப்பையே சுவாசித்து உழன்றால் தான் அதன் ஆழத்தை இத்தனை நுட்பமாய்ப் பேச முடியும். ‘RimaDas’ என்ற பெண் இயக்குனரின் இரண்டாவது படமான ‘The Village Rockstars’ நான்கு தேசிய விருதுகள் பெற்றதும் 2017 ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுக்காக இந்தியத் தரப்பிலிருந்து பரிந்துரைக்கபட்டதும், அதன் நீட்சியே…

பள்ளிக்கூடம் போகும் பத்து வயது சிறுமியின் அன்றாட வாழ்க்கை, அவர்கள் வாழும் நிலப்பரப்பு, நீர் சூழ்ந்த வயல்வெளியின் மண்வாசம், இயற்கையின் விளங்காத கோபம் என்று நம்மைக் கைப்பிடித்து கூட்டிச்செல்கிறாள், அந்தச் சிறுமி. அவளுக்குள் ஒரு ஆசை அரும்புகிறது ‘கிடார்’ இசைக்கருவியின் மீது.

அந்த ஆசை மெய்யானதா இல்லையா என்பதைப் பற்றியல்ல இப்படம், அதன் மெல்லிய இழைகளின் ஊடாக, தன் பிராயத்துச் சிறுவர்களுக்கு நிகராய் அந்தச் சமுதாயத்தோடு பொருந்தாத ஒரு சிறுமியின் சுதந்திரப் போக்கையும் அதை ஒரு முரணாய்ப் பார்க்காத அவளின் விதவைத் தாயைப் பற்றியும் இயற்கையின் கைப்பிடித்துப் பேசுகிறது. நாம் கேள்விப்பட்ட ஆனால் எட்டிப் பார்க்காத வேறொரு உலகத்தின் கதவு திறந்து கிடக்கிறது, ஆசையுடன் நுழையும் விழிகளுக்காக….

00000000000000000000000000

ஓர்மமில்லாப்பயணம்

Boyhood(2014)

எல்லாரும் இதைச் செய்வதுண்டு. நத்தையாய் நகரும் நாட்களில் நம் கடந்தகால வாழ்வின் நினைவுப் பெட்டியைத் திறந்து கைபோனப் போக்கில் அலசுவது. அப்போது எத்தனை வேகம்? நம் கைவிரல்களிலும் துழாவும் கண்களிலும்… அவைகளுக்குத் தானாகவே தெரியும். மனதும் மூளையும் கட்டளையிடத் தேவையில்லை. எந்தவொரு சலனமும் மறுயோசனையும் இன்றி அவை நம் கடந்தகால வாழ்வில் தேடுவது, நம் குழந்தைப் பருவத்தை…. மொழியும் நடையும் கற்றபின் நினைவு தெரிந்த நாள் முதல் தொடங்கும் குழந்தைப் பருவம் தான் எத்தனை அலாதியானது. பருவம் என்று சொல்வது கூடச் சரியாகாது. அது ஒரு பயணம்! இறங்க வேண்டிய இடத்தைப் பற்றிய ஓர்மமில்லாமல் தோன்றும் பாதைகளில் மனம் போனபோக்கில் நடக்கும் நிர்பந்தமற்றப் பயணம்.

சிறு ஏமாற்றங்களுக்குக் கூட வெட்கம்விட்டு அழமுடியும்… இடம் பொருள் ஏவலைப் பொருட்படுத்தாமல் சந்தோஷமாய்க் கத்திச் சிரிக்க முடியும்… பிடித்த பாடலைக் கேட்டால் கால்கள் தைரியமாக நடனமாடலாம்… கோபம் தீர அடித்து விழுந்து புரண்டு சண்டைபிடிக்கலாம்… அழுக்காகிய ஆடையைப் பற்றிய அவமானமில்லை. மறுநாளே சண்டை போட்டத் தோளில் கைபோடத் தடுக்கும் சுயகவுரவமில்லை… நினைப்பதை அதன்போக்கிலே செய்யும் சுதந்திர நாட்கள் எல்லோர் வாழ்க்கையிலும் குழந்தைப் பருவத்தில் இருந்திருக்கிறது என்பதே எத்தனை மலைப்பான ஒன்று.

அந்த அசாத்திய வாழ்க்கையை அப்படியே படமாக்குவதும் அத்தனை எளிதல்ல.ஆனால் அந்த அசாத்தியத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது ‘Boyhood’ என்ற ஆங்கிலத் திரைப்படம். எல்லாருக்கும் பரிச்சயமான பொதுவான விஷயத்தை ஒரு திரைப்படம் எடுத்துப் பேசும்போது தன் அழுத்தத்தை மனதில் பதிக்க அதற்கானத் தனித்துவம் தேவை. ஆறு வயது முதல் கல்லூரி செல்லும் வரை ஒரு அமெரிக்கச் சிறுவனின் பன்னிரண்டு வருட பால்யத்தைப் படமாக்க இயக்குனர் ‘Richard Linklater’ எடுத்துக் கொண்ட காலஅவகாசமும் பன்னிரண்டு வருடங்கள். Ellar Coltraneஎன்ற சிறுவன் தான் நிதர்சனத்தில் வளரவளர ‘Mason’ என்ற கதாபாத்திரமாக இப்படத்திலும் வளர்கிறான்.

கதைநாயகனான அந்தச் சிறுவனின் கதாபாத்திரம் மட்டுமல்ல இப்படத்தின் ஏனைய கதாபாத்திரங்களும் அப்படித்தான். கதைக்கு உள்ளும் வெளியும் சேர்ந்தே வளர்ந்தனர்… வாழ்ந்தனர்… அதுதான் எளிமையான இக்கதையின் உயிரோட்டத்திற்கு ஆதாரம். Harrypotter போன்ற திரைப்படங்களிலும் இவ்வாறு படமாக்கியுள்ளார்கள் என்ற போதிலும் அவை எட்டு பாகங்கள் கொண்டவை.

 ஒரு சிறுவனின் வாழ்க்கை என்பது தனியானதல்ல. அவனைச் சுற்றிச் சுழலும் பிற உறவுகளால் இணைந்த முத்துச்சரம் அது. ஒவ்வொரு முத்தும் மதிப்பற்றவை… தனித்துவமானவை…ஒன்றாய்க் கோர்க்கப்பட்டதால் இன்னும் அழகானவை. அதிலும் சிறுவன் Mason வாழ்வில் மறைமுகமாய் ஒளிரும் முகம் அவன் அம்மா olivia உடையது.

விவாகரத்து பெற்ற தாய், தத்தளிக்கும் தன் படகில் பயணிக்கும் மகனையும் மகளையும் கரைசேர்க்கத் தன் கனவுகளைத் தூக்கி எறிந்துதான் படகின் பாரத்தைக் குறைக்கிறாள். அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் இயல்பாய் நடந்தேறும் விவாகரத்தும் மறுமணங்களும் குழந்தைகளின் வாழ்வியலில் ஏற்படுத்தும் தாக்கத்தை அதன் இயல்பிலேயே இத்திரைப்படம் கையாள்கிறது. அதற்காக இப்படம் ஆள்காட்டி விரலை உயர்த்தி யாரையும் குற்றம் சொல்லவில்லை. அது தேவையுமில்லை; எல்லோரும் ஏதோவொரு விதத்தில் இங்கே சூழ்நிலைக் கைதிகளே.

“இத்தனை வருஷம் உங்களுக்காக மட்டுமே நான் வாழ்ந்துட்டேன்…? இனி என் வாழ்கையில எனக்காக மிச்சம் இருப்பது என் சாவு மட்டும்தானா…?” என்று கல்லூரியில் சேரப்போகும் மகனைப் பிரியும்போது கதறி அழும் olivia கதாபாத்திரத்தின் வார்த்தைகளைத் தான் நம்மில் பலரும் வாழ்கிறார்கள். அமெரிக்கா ஈராக் போர் அரசியலையும், பாலினஉறவு பற்றியப் புரிதலையும், குறுகியக் கட்டத்திற்குள் அடைப்பட்ட பெரும்பாலான செம்மறி ஆட்டு வாழ்கையை விட்டுத் தனித்திருப்பதன் அவசியத்தையும், போகிற போக்கில் தன் பிள்ளைகளிடம் சொல்லிவிடும் அப்பா கதாபாத்திரத்தின் மிடுக்கற்ற நடிப்பிலும், மனதில் ஆணியடிக்கும் வார்த்தைகளிலும் தான் எத்தனை எளிமை.

ஒரு சிறுவனின் பன்னிரண்டு வருடப் பயணம் என்பது குறும்பும், சகோதரியுடனான சண்டையும், பெற்றோர் பிரிவின் சோகமும், வார இறுதியில் அப்பாவுடன் செலவிடப்போகும் மணித்துளிகளுக்கானக் காத்திருப்பும், பதின்மவயதில் அரும்பும் காதலும் காமமும் திருட்டுப் போதையும், தன் வருங்காலத்துக்கான பிரத்யேகக் கனவும் நிறைந்தவை. அதன் எல்லா பக்கங்களையும் நம்மையே அறியாமல் இரண்டரை மணிநேரத்தில் புரட்டி விடுகிறோம். உலகின் தலைசிறந்த படங்களில் இதுவும் ஒன்றாக அறியப்படுவதில் வியப்பொன்றுமில்லை.

பக்கத்து ஊருக்குப் போகும் பேருந்தின் ஜன்னல் ஓர இருக்கைப் பயணத்தில், பின்னால் நகரும் ஒரே மாதிரியான சில மரங்களையும் தரிசு நிலங்களையும் தவிர ஏதுமற்ற நீண்ட புறவழிச்சாலை மட்டும்தான்… எல்லாம் நமக்கு பழக்கப்பட்ட காட்சிகள் தான், அங்கு வேடிக்கைப் பார்க்கவோ போட்டோ பிடிக்கவோ எதுவும் இருக்காது; இருந்தும் மனம் அந்த பயணத்திலேயே லயித்துக் கிடக்கும், இறங்க வேண்டிய இடத்தின் விசில்சப்தம் கேட்கும்வரை… அதைப் போன்றதொரு பயணம் தான் இத்திரைப்படமும்…

விஜய ராவணன்-இந்தியா

விஜய ராவணன்

 

(Visited 108 times, 1 visits today)