எளிமையின் பேருருவம்-சினிமா விமர்சனம்- பாகம் 06- விஜய ராவணன்

Koker trilogy, Iran

இவ்வளவு மெல்லிய இழையை ஒரு திரைப்படமாக்குவது அத்தனை எளிதல்ல. கொஞ்சம் பொதி ஏற்றினாலும் இழை அறுந்துவிடும். அதேநேரம் சுவாரசியமும் குன்றக்கூடாது… ஒன்றரை மணி நேரத்தில் ஒவ்வொரு நிமிடமும் பொக்கிஷம். ஈரானிய இயக்குனர்களுக்கு இது இயல்பாக சாத்தியப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக ‘Abbas Kiarostami’ க்கு…

‘Koker’ கிராமத்தை மையப்படுத்திய ‘Abbas Kiarostami’ யின் மூன்று படைப்புகள் தான் ‘Koker trilogy’. ஒன்றோடொன்று மிக நுணுக்கமாய்ப் பின்னப்பட்ட எளிய படைப்புகள்…. ‘Where Is the Friend’s Home?’ (1987) , ‘Life, and Nothing More…. (1992), Through The Olive Trees (1994).

Where is the Friends House? 1987

“சிறுவனாக இருந்தபோது அப்பா ஒருவாரம் கைச்செலவுக்குப் பைசாவும் அடுத்தவாரம் கட்டாயம் அடியும் கொடுப்பார். அப்போதுதான் நான் பொறுப்புள்ளவனாகவும் சமுதாயத்திற்குப் பயனுள்ளவனகாவும் வளர்வேன் என்று நினைத்தார். நானும் என் மகனை அப்படித்தான் வளர்த்தேன்… ஒருவாரம் அடிப்பேன் அடுத்தவாரம் காசு தருவேன். காசு கொடுக்காத வாரங்கள் கூட உண்டு. ஆனால் அடிகொடுக்காத வாரங்கள் கிடையாது…”

“சரி… ஒருவேளை அவன் அந்த வாரம் அடி கொடுக்குமளவு தப்பு எதுவும் செய்யவில்லை என்றால்…”

“காரணம் கண்டுபிடித்து அடிப்பேன்…”

‘Koker’, ‘Poshteh’ இரு கிராமங்களுக்கு இடையே ஓடிக்கொண்டிருக்கும் தன் பேரனைப் பார்த்து ‘ஒழுங்கற்றவன்’ என நண்பனிடம் அலுத்துக்கொள்ளும் தாத்தாவின் தலைமுறை பிந்தைய பார்வையில் தெரிவதைப்போல், ‘Ahmed’ ஒன்றும் பொறுப்பற்ற மரியாதை தெரியாத சிறுவனல்ல. மாறாக அவர்கள் எல்லாரையும் விட அதீத பொறுப்புணர்வோடு தன் சிறு தவறின் நாளைய ஆபத்திலிருந்து நண்பனை மீட்க தொடர்ந்து மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறான்.

‘Ahmed’ தான் Abbas Kiarostami எண்பதுகளில் காட்ட நினைத்த இல்லை காண விழைந்த அன்றைய ஈரானின் துளிர்விடத் தொடங்கிய தலைமுறையின் வளர்முகம்.

பள்ளிவிட்டு வீட்டுக்கு ஓடும் அவசரத்தில் கீழே விழுந்துவிடும் நண்பன் ‘Mohamad Reza’ வை ‘Ahmed’ தூக்கிவிட்டு சிதறிய புத்தகங்களை எடுத்து வைக்கிறான். குழாய்த் தண்ணீரில் கால் கழுவி விடுகிறான். கதையின் மையப்பொருளான இரு சிறுவர்களின் நட்பை முன்கூட்டியே விவரிக்கும் இக்காட்சியின் பின்னால் கொட்டகையில் வெண்ணிறக் குதிரை காட்டப்படுகிறது. உலகமறியா வயதில் நட்பின் நிறம் வெண்மைதான்!

தெரிந்தோ தெரியாமலோ இதை நாம் செய்திருப்போம். வீட்டிற்குப் போய் பார்த்தால் வகுப்பின் ஒரே பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் நண்பனின் பாடப்புத்தகம் எப்படியோ நம் பைக்குள் வந்திருக்கும். பலநேரம் கவனிக்காமல் இது நடந்திருக்கும். சரி நாளை வகுப்பில் கொடுத்துக்கொள்ளலாம் என்று மீண்டும் பொதிமூட்டைக்குள் அலட்சியமாக திணித்து விடுவோம்… சிலசமயம் பழித்தீர்க்கும் நோக்கில் வேண்டுமென்றே எடுத்து வந்திருப்போம்… வீட்டுக்கு வந்ததும் லேசான குற்ற உணர்வு மேலிடும். நண்பன் மீதான கோபத்தை அதற்கு விடையாக்கி யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைப்போம் இல்லை அடுத்தநாள் எவரும் அறியாதவாறு எடுத்த இடத்தில் வைத்துவிட்டு ஒருவித பதட்டத்தோடு விளையாடப் போவோம்.

ஆனால் சிறுவன் ‘Ahmed’ அப்படியானவனல்ல…

தன்னுடையது போலவே வெளிப்புற அட்டைப்படமிருக்கும் தன் நண்பன் ‘Mohamad Reza’ வின் வீட்டுப்பாட நோட்டையும் தான் எடுத்து வந்திருப்பது தெரிந்ததும், அது தன் தவறுதான் என்றும் அதை சரிசெய்யும் பொறுப்பு தன்னுடையது என்றும் நினைக்கிறான்.

அம்மாவிடம் விளக்குகிறான்… எப்போதும் சிறுவர்களின் பேச்சு பெரியவர்களின் செவி சேர்வதில்லை. இடுப்பளவு மகன் அண்ணாந்து கோரும் வேண்டுகோள் எடுபடவில்லை. மீண்டும் மீண்டும் சாந்தமான முகத்தோடு முறையிடுகிறான். கெஞ்சுகிறான். மிஞ்சியது என்னவோ திட்டும் அச்சுறுத்தலும் தான்.

“படிப்பதை போல் நாடகம் ஆடியது போதும். போய் ரொட்டி வாங்கிவா…” என்று அதட்டலாய்ச் சொல்லியதும் கிளம்புகிறான். ஆனால் ரொட்டிக் கடைக்கல்ல… ஸ்வெட்டருக்குள் மறைத்து வைத்திருக்கும் நண்பனின் வீட்டுப்பாட நோட்டோடு தொலைவிலுள்ள ‘Poshteh’ கிராமத்திற்கு…

நண்பனின் வீட்டைத் தேடி z வடிவ மணல்பாதையில் முன்னும்பின்னுமாய் ஏறி இறங்கும் Ahmed  ஓட்டம் அந்தக் கணத்திலிருந்து துவங்குகிறது…

விஜய ராவணன்

கடினமான வாழ்க்கை பயணத்தின் குறியீடாகக் காட்டப்படும் வளைந்து நெளிந்து நீளும் கரடுமுரடான பாதை அச்சிறுவனை சலிப்படையச் செய்யவில்லை. ஆனால் ‘Mohamad Reza’ என்ற நண்பனின் பெயரையும் ‘Poshteh’ கிராமத்தில் வசிக்கிறான் என்ற தகவலைத்தவிர அவன் வேறெதுவும் அறிந்திருக்கவில்லை.

பல கதவுகளைத் தட்டுகிறான். சில திறக்கின்றன… சில உதவுகின்றன… ஒரு கை பல திசைகளைக் காட்டுகிறது. சில நேரங்களில் ஒரே வழி வெவ்வேறு விதமாய் ஏமாற்றுகிறது…. இரு கிராமங்களுக்கு இடையே அவனது கால்கள் சளைக்காமல் ஓடிக்கொண்டே இருக்கின்றன…

“இந்த கிராமம் முழுதும் இருக்கும் மரக்கதவும் ஜன்னலும் நானும் என் தம்பியும் சேர்ந்து செஞ்சதுதான். நாற்பது வருஷம் மேல ஆச்சு. இன்னும் அப்படியே இருக்கு… ஆனா ஏன்னு தெரியல? இப்போ எல்லாரும் இதை மாத்தி இரும்பு கதவு போடுறாங்க…. கேட்டா அது வாழ்நாள் முழுசும் வருமாம்… வாழ்நாள் முழுசும்னா எவ்வளவுனு யாரால சொல்ல முடியும்….?”

வாழ்க்கை பயணத்தின் விளிம்பில் இருக்கும் மரவேலை செய்யும் பெரியவர், தலைமுறை கடந்த கேள்வியை சிறுவனிடம் வைக்கிறார். ‘Ahmed’ விழிக்கிறான். பேசிக் கொண்டே இருவரும் ‘Mohamad Reza’ வீட்டைத் தேடி நடக்கின்றனர்.

பழையது என்ற ஒரே காரணத்தால் நாம் துடைத்தெறியும் பல நேர்த்தியான முகங்களின் கூட்டு உருவகம்தான் மர ஜன்னல்கள். தனிமையில் உழலும் முதிய தச்சர் யாரும் பொருட்படுத்தாத தன் மரஜன்னல்களின் வேலைப்பாடுகளை சிறுவனுக்குக் காட்ட நினைக்கிறார். ஆனால் ஓட்டமும் நடையுமாய் முன்னால் போகும் சிறுவனின் கால்கள் அவரைவிட குறைந்தது ஐம்பது வருடங்களாவது இளையவை… அதீத வேகமும் துடிப்பும் மிக்கவை. நண்பனின் வீட்டை வேறு கண்டுபிடிக்க வேண்டும்.

நமக்கு மிகவும் பரிச்சயமான எளிய ஒரு நாள் நிகழ்வுதான் இப்படம். ஆனால் நாம் கவனிக்க மறந்த விடயங்களை உள்ளடக்கியது. எப்போதும் அப்படித்தான். அன்றாடத்தின் ஆழங்களை நமக்குச் சுட்டிக்காட்ட ஒரு தேர்ந்த படைப்பாளியின் பேனா கூர்மை தேவைப்படுகிறது. அதில் வெற்றியடையும் போது, Ahmed யின் பாடப்புத்தகத்தின் நடுவே புதைந்திருக்கும் காய்ந்த மலரை போன்றதொரு மேலான அழகை அப்படைப்பு எட்டிவிடுகிறது.

‘Life, and Nothing More…. (1992)

Korke கிராமத்திற்கான பாதையில் அழுகைச் சப்தம் கேட்டு, வாகன நெரிசலில் இருந்து விடுபட்டு தேடிச்சென்று பார்க்கையில், ஆள் இல்லா இடத்தில் தூளியில் கிடத்தப்பட்டிருக்கும் குழந்தை வெறித்துப் பார்க்கிறது. Kiarostami வேடிக்கை காட்ட, குழந்தையும் திருதிருவென விழித்தபடி இரு கை கால்களையும் ஆட்டுகிறது, கட்டுப்போடப்பட்டிருக்கும் தன் அடிபட்ட வலது காலையும் இடக்கையும் சேர்த்தே அசைத்து சிரிக்கிறது…

எத்தனையோ சுவாசத்தை நிலத்தினடியில் அலட்சியமாய்ப் புதைத்த ஒரு பேரிடரின் தோல்விதான் வலியைக் கடந்த அந்த மழலையின் சிரிப்பு. ஆயிரக்கணக்கான உயிர்களைத் தன் மணல் வயிற்றுக்குள் புதைத்துதீர்த்த பூகம்பத்திற்கு, Kiarostami யின் கதாபாத்திரங்கள் காட்டும் எதிர்வினை!

1990ல் ஈரானை உலுக்கிய பூகம்பத்திற்குப் பின் சில மாதங்கள் கழித்து மீண்டும் Korke கிராமத்திற்குத் தன் சிறுவயது மகனோடு பயணப்படுகிறார் Abbas Kiarostami.  தன் ‘Where Is the Friend’s Home?’ படத்தில் நடித்த இரு சிறுவர்களைத்தேடி… கதாபாத்திரங்களை நோக்கிய ஒரு கதைசொல்லியின் தேடல் தான் ‘Life, and Nothing More…. (1992). அதே கதைசொல்லியின் பயணத்தை படமாக்குவதையே கதைக்களமாக கொண்டது Through The Olive Trees (1994).

Kiarostami க்கு பூகம்பத்தின் கோரத்தை சொல்ல, சாம்பல் புழுதிபடலமோ கண்ணீர் வறண்ட முகங்களோ, கூக்குரலோ, ஓலமோ, கான்க்ரீட் குவியலோ அதனடியில் சிக்குண்ட உடல்களோ தேவையற்றவை. இயற்கையின் ஆத்திரத்தின் முன் தன் கையறு நிலையை ஏற்றுக்கொண்டு எஞ்சியிருப்பதிலிருந்து மீண்டும் தன் வாழ்க்கையோடு மல்லுக்கட்ட தயாராகும் கதைமாந்தர்களின் இயல்பே Kiarostami க்குப் போதுமானதாய் இருக்கிறது. அவர்களின் சிதைந்த வீட்டு முற்றத்தில் பூகம்பத்தால் சிதலைடையாத பூந்தொட்டிகள் இன்னமும் பூக்கத் தான் செய்கின்றன…

விஜய ராவணன்

‘Where Is the Friend’s Home?’ திரைப்படத்தில் தன் நண்பனின் வீட்டைத் தேடி அலைந்த சிறுவனால் தட்டப்பட்ட பல நீலநிறக் கதவுகள் இப்போதில்லை. வாழ்நாள் முழுமைக்கும் வரும் என்று சொல்லி விற்கப்பட்ட இரும்பு ஜன்னல்களும் மிஞ்சவில்லை. ஆனால் கதவு ஜன்னலற்ற சிதிலமடைந்த வீட்டினூடாய்த் தெரியும் வெட்டவெளி இன்னமும் பச்சைப்பசேலென, எதிர்காலத்தை நோக்கியபடி இருக்கிறது.

‘Where Is the Friend’s Home?’ போல் இப்படமும் ஒரு தேடல் தான். மரணத்தின் கரும்புள்ளியில் இருந்து உயிரின் இருப்பை நோக்கிய Kiarostami யின் பயணம். வருங்காலத்தின் ஆச்சரியங்களை நோக்கிய இப்பயணத்தில் கடந்தகாலத் துயரச்சகதியில் சிக்கித் தவிக்கும் தேக்கமில்லை.

செங்குத்தான சாலையின் ஏற்றத்தைக் கடக்கும் மஞ்சள்நிறக் காரின் பயணம் உருவம் சிறுத்து தூரத்து புள்ளியாய்…. கானலாய்… தொடர்ந்து கொண்டே இருக்கிறது… பயணம் என்பதே தொடர்வது தானே!

Through the Olive Trees  (1994) 

புனைவுக்கும் நிதர்சனத்துக்கும் இடையேயான மெல்லிய திரையின் இருபக்கமும் நின்று ஒரேநேரத்தில் இருவேறு கதைகள் சொல்ல முடியுமா? அப்படிச் சொல்லப்பட்டால் அதில் கற்பனை எது? உண்மை எது? ஒருவேளை நாம் யதார்த்தம் என்று நினைப்பது தான் புனைவா? இல்லை அந்த எண்ணமும் கூட கதைசொல்லியின் சித்துவேலையா?

கேள்விகளும் ஆச்சரியங்களும் நிறைந்த எளிமையாய் சொல்லப்பட்ட மிகநுட்பமான திரைப்படம் ‘Through The Olive Trees’. திரைப்பட காமெராவின் வெறித்தப் பார்வைக்கு முன்னும் பின்னும் நிகழும் நேர்முரணின் காட்சிப்படைப்பு.

விஜய ராவணன்

Life, and Nothing More….(1992) திரைப்படத்தில் இயக்குனர் ‘Kiarostami’ ஆக நடித்த கதாபாத்திரத்தை, Through the Olive Trees  (1994)  திரைப்படத்தில் வேறொரு Kiarostami இயக்குகிறார். இரண்டு திரைப்படத்திற்கும் பாலமான ஒரு காட்சி, ‘Through The Olive Trees’ யில் மீண்டும் மீண்டும் படமாக்கப்படும் விதமும் அதன் காரணமும் நவீன கதைசொல்லலின் உன்னதம்.

காமெரா அயர்ந்து கண் சிமிட்டும் தருணங்களில், புனைவுலகமும் மெய்யுலகமும் ஒன்றையொன்று வெறிக்கும் ஏக்கப்பார்வையும் அலட்சியப்போக்கும் தான், வாழ்வியலின் எதார்த்த சூழலுக்கும் கலையுலகின் மாயவெளிக்கும் இடையான நிதர்சனம். அந்த நிதர்சன உலகின் அடித்தளம், நிராகரிப்புகளாலும் தனிமையாலும் வெறுப்புகளாலேயே பெரிதும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

“என்னை ஒருவேளை அவளின் அப்பாவும் அம்மாவும் சரியாக நடத்தி ஏற்றுக்கொண்டிருந்தால், இந்த பூகம்பத்தில் அவர்கள் இறந்திருக்க மாட்டார்கள். கடவுளும் தண்டித்திருக்க மாட்டார்… எனக்கு வீடு இல்லை என்று பெண் தர மறுத்தார்கள். இப்போது பாருங்கள்! இங்கு யாருக்கும் வீடு இல்லை…”, புனைவுலகில் கதாநாயகனாகவும் ஆனால் நிஜத்தில் அற்புதத்தை எதிர்நோக்கி இருப்பவனின் ஆதங்கம் தான் இங்கு நிதர்சனம்.

காதல் எப்போதும் தொடர்ந்து கோருவதாலும் புன்னகையாலும் கனிவான வார்த்தைகளாலும் மிடுக்கான வாக்குறுதிகளாலும் மட்டுமே கைகூடுவதில்லை. காதலின் அடிநாதம் கனத்த மௌனத்தாலானது. திரைப்பட காமெராவின் பார்வை விட்டத்திற்குள் வராத அந்த மௌனத்தை உதிர்க்கக் கோரி காதலன் கெஞ்சியபடியே ஆலிவ் மரங்களினூடாய் காதலியைப் பின்தொடர்கிறான். அவளின் மறுமொழிக்குக் காத்திருக்கும் பார்வையாளனைப் போல் ‘Kiarostami’யும் பின்தொடர்கிறார், இயக்குனராய் அல்லாமல் தூரத்திலிருந்து கைகட்டி வேடிக்கைப் பார்க்கும் சராசரியாய்…

விஜய ராவணன்-இந்தியா

விஜய ராவணன்

 

(Visited 71 times, 1 visits today)