சினிமா விமர்சனம்-மூதாதையரின் முணுமுணுப்பு-பாகம் 08- விஜய ராவணன்

Birds of Passage (Columbia, 2018) 

விஜய ராவணன்

கனவுகள், கட்டி எழுப்பப்படாத எதிர்காலச் சுவர்களில் முட்டிமோதி நிகழில் எதிரொலிக்கும் சீரற்ற ஒலிகளா இல்லை இறந்தகாலப் புழுதியில் மண்ணோடு மண்ணாய் மக்கி நைந்துபோன மண்டை ஓடுகளின் பேச்சரவமா? இவற்றில் எதுவாயினும் கனவுகள் நிகழ்காலத்துக்குச் சொந்தமானதல்ல. வெறும் இரவல் மட்டுமே. சிலநிமிடத் தழுவல். கனவுருவின் தேகச்சூட்டை வியர்வை வாடையை அடையாளம் காண எத்தனிக்கும் தருணத்தில் அந்தத் தழுவல் விலகிவிடும். கனவுகளுக்குத் தேவை கண்கள் கட்டப்பட்ட குருட்டுப் பார்வையாளன்.

எங்கிருந்தோ ஒலிக்கும் அபாயச்சங்கொலி தான் கனா. யாரோ பாடும் மொழியற்ற தாலாட்டு. பொருள் விளங்கா ஆறுதல் வார்த்தைகளை காதில் ஓதிவிட்டு விலகி ஓடும் கனவுகளின் காலடிச் சுவடுகளை ஆராய்ந்து பின்தொடர்வது கடினம். ஏனெனில் அதன் ஒவ்வொரு அடியிலும் தன் முந்தைய தடங்களை மறைத்த வண்ணம் நிஜத்திலிருந்து தன்னை பத்திரப்படுத்திக் கொள்கிறது. மங்கலாக தூரத்தெரியும் புள்ளியாக கனவுகள் கலையும் தருணத்தில், பரிச்சயமற்ற கானகத்தில் தனித்து மாட்டிக்கொண்ட மான்குட்டியின் பதைப்பு மட்டுமே இமைகளுக்கு எஞ்சும்.

“நான் இனி கனவு காண விரும்பவில்லை” என்று ‘Zaida’ சொல்லும் நொடியும் அதுபோன்ற ஒன்றே.

தன் கனவில், முடிவற்ற பாலைவன வெளியில் மரித்த ஆட்டுக்குட்டியை கைகளில் ஏந்திக்கொண்டு, வெண்மணலில் புதைந்துபோன ரயில் தண்டவாள கட்டைகளில் தன் தளர்ந்த கால்களை அழுத்தமாய் ஊன்றிச் செல்லும் கிழவியின் வெறுமை தோய்ந்த முகமும், கடலில் போய்ச்சேரும் அந்த ரயில் பாதையும் அப்படியானதொரு பதைபதைப்பை அவளுக்குத் தந்துவிடுகிறது.

“உன் பாட்டி தான் அது. அவள் தான் நமக்கு ஏதோ எச்சரிக்கை செய்கிறாள்… பயப்பட வேண்டாம். கனவுகள் ஆத்மாக்களின் இருப்புக்கான ஆதாரம்…” என்று சொல்லும் மூதாட்டியின் கூற்றுப்படி கொலம்பியாவின் ‘Wayuu’ இன மக்களைப் பொறுத்தவரை கனவுகள் வெறும் தொடர்பற்ற கானல் காட்சிகள் அல்ல புதைந்த மூதாதைகளின் பேச்சுமொழி.

தங்களின் பழமைவாய்ந்த நாடோடி இனமும் அதன் வழி பேணப்படும் தொன்மமுமே அவர்களுக்குப் பிரதானம். ஸ்பெய்னின் காலனி நாடான போதிலும் இனமொழி ‘Wayuunaiki’ முன் ஸ்பானிஷும் ஆங்கிலமும் பொருட்டல்ல..

‘அப்படியான ஒரு ‘Wayuu’ குடும்பத்தின் எழுச்சி வீழ்ச்சியைத் தான் நான் மறந்து போவதற்கு முன் பாடப்போகிறேன்…’ என்ற பார்வையற்ற இடையனின் நாடான் பாட்டில் தொடங்கும் புள்ளியிலேயே, வெகுஜன gangster படங்களின் வழமையான பாதையிலிருந்து தன்னைத் துண்டித்துக்கொள்கிறது, David Gallego யின் ‘Birds of Passage’. மிக நெருக்கத்தில் கடந்துபோகும் முற்றிலும் பரிச்சயமற்ற புதுப்பறவை.

பரந்த மணல்வெளியில் தன்  ராட்சஸ நிழல்களைப் பரப்பி திறந்த வானில் வட்டமடிக்கும் பறவைகளின் சிறகடிப்பெல்லாம் அந்த நிலப்பரப்பில் கனவுகள் பூக்கும் வரைதான். கனவுகள் நிரந்தரமாக உதிர்ந்துவிடும் நாட்களில் அவை வலசை போய்விடும். பூப்படைந்ததும் ஒரு வருட தனிமை வாழ்விற்கு பின் வெளியுலகில் அடியெடுத்து வைக்கும் Zaida,  முகமெங்கும் செந்நிற மை பூசி, மஞ்சள் புள்ளிகள் கொண்ட சிவப்பங்கி காற்றில் படபடக்க இரு கைகளையும் சிறகாய் விரித்து ஆடும் ‘Yonna’ நடனத்தில் பாலைவனப் பருந்தின் ஓங்கரிப்பு.

1960-1980 வரையான இருபதுவருட காலவெளியில் கொலம்பியாவின் Guajira கிராமத்தின் பாலை நிலப்பரப்பில் “Wild Grass”, “The Graves”, ” Prosperity”, “The War”  and  “Limbo”  என ஐந்து பகுதிகளாக நீளும் ‘Birds of Passage’ ல் ஒலிக்கும் துப்பாக்கிகளின் உலோகச் சத்தம் வெறும் இரு குழுக்களுக்கு மத்தியிலான சமரல்ல. தொன்மத்தின் மீது நவீனம் தொடுக்கும் பாலைவன யுத்தம். நிலையற்ற அப்போரின் ஒவ்வொரு படியிலும் தொன்மத்தை கனவுகள் வழிநடத்துகின்றன. எச்சரிக்கின்றன…

முதுகுடியின் வாய்ப்பாட்டோடு இறந்தவர்களின் எலும்பு மிச்சங்களைத் தோண்டி எடுத்து சுத்தம் செய்து மீண்டும் புதைக்கும் பாரம்பரிய ‘இரண்டாம் அடக்கம்’ நிகழ்வுக்கு முந்தைய இரவுகளில், தனக்கு மட்டுமே தெரிந்த எதிர்காலத்தைப் பற்றி கனவுகள் குறி சொல்கின்றன. தெளிவு கொண்டு கேட்பது கனாக்காணும் விழிகளைப் பொறுத்தது.

காய்ந்த கஞ்சா இலைகளின் காட்டமான மணமும் புது நோட்டுகளின் டாலர் வாசமும் உலர்ந்த குருதிவாடையும் மிகுந்து ஓய்ந்துபோன புழுதிக் காற்றில், வட்டத்தொப்பியைச் சரிசெய்து கொண்டு வெட்டவெளியில் தன் குருட்டுக் கண்ணை மேயவிட்டபடி கிடாரி பாடும் பாடல் கேட்கிறது…

‘புயல் காற்று வருகிறது…

மணல்வெளியில் நம் பாதச் சுவடுகளை அழித்துவிடும்…

அதனால் தான் பாடுகிறேன்…

பறவைகளும் இப்பாட்டை பாடிக்கொண்டே இருக்கும்

என்றென்றைக்குமாக….

கனவுகளிலும் நினைவுகளிலும்…’

விஜய ராவணன்-இந்தியா

விஜய ராவணன்

(Visited 72 times, 1 visits today)