சரியாலிச இலக்கியம் (surréaliste littérature)-ஒரு அறிமுகம்-கட்டுரை- அப்பாதுரை அர்விந்

 

அப்பாதுரை அர்விந்மனிதனின் பிரஞை,  புத்தி,சிந்தனை, சிந்தனையின்  லயம், பார்வை, பார்வையின் கூர்மை, இயற்ககையை அணுகும் முறை, மற்றவர்களின் உடனான உறவின் இயல்பு, பண்பு, இத்யாதி… இத்யாதி… பொதுவாக மனிதன் இயங்கவும், படைக்கவும் உதவும் அத்தனை பொருண்மியங்களும், விழுமியங்களும், அவன் வாழும் சமுதாயம் அவனுக்கு கொடுத்தது.

அவ்வாறே ஐரோப்பியாவில், ஒவ்வொரு வரலாற்று கட்டங்களிலும், பொதுவாக  படைப்பு, சில இயல்புகளை கொண்டதாக விளங்கி வந்துள்ளது. அது இளகிய படைப்பாக இருந்தாலும், ஓவியம், சிற்பம், போன்ற நுண்கலை படைப்புகளாயினும் இந்த பண்பினை நாம் பொதுவாக அவதானிக்க கூடியதாக உள்ளது. இந்த இளகிய போக்குகளுக்கு முகாந்தரமாக விளங்குவது, வரலாற்று சம்பவங்கள், தத்துவங்கள், சமூக-அரசியல் சூழல் போன்றவை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், இயற்கையியல் (Naturalisme), அதனை அடுத்து, டாடாயிசம், அதனை அடுத்து சரியலிசம் போன்ற கோட்ப்பாடுகள் தோன்றின.

இருபதாம் நூறாண்டின் துவக்கத்தில் பிறந்த டாடாயிசதின்,  கொள்கை சமுதாயத்தின் அஸ்திவாரத்தை கேள்விக்குறியாக்குவது மற்றும் மொழி சுதந்திரம், கவித்துவம், பன்முகத்தன்மை ஆகியவை அதன் இயல்புகள்.

டாடாயிசம் பிறந்த ஓரிரு ஆண்டுகிலேயே முதலாம் உலகப்போர் வெடிக்கின்றது. நினைத்து பார்க்க கூட முடியாத அளவு இழப்புகள். துளிகூட மனிதாபிமானமற்ற போர் நடவடிக்கைகள். இது நம் சமுதாயத்தில் நடக்குமா, நடந்ததாக நம்ப முடியுமா என்ற அளவுக்கு பேரழிவு. கோடிக்கணக்கான உயிரிழப்பு. அப்படியான ஒரு கொடூர சம்பவம் நடக்கும் உலகில், தத்துவங்கள் இருந்து பயனென்ன? விஞ்ஞான முன்னேற்றங்கள் இருந்து பயனென்ன? கலைகள், கவிதைகள், மாதங்கள், மாதிரிகள் இருந்து பயனென்ன? இப்படி மனிதன், மனிதனை துளியும் இரக்கமின்றி  கொள்வதற்கான காரணிகள் யாவை ? இந்த சூழ்நிலைக்கு மனிதகுலத்தை அழைத்து சென்ற, எதுவுமே இனி இருக்க கூடாது. அதன் விளைவாக, அவற்றின் உதவியோடு படைக்க படும் எந்த கலை பொருட்களுக்கும், இலக்கியங்களுக்கும் இவ்வுலகில் இடமில்லை.

முதலாம் உலகப்போரால் ஏற்பட்ட பேரழிவிற்கு பின்னர், எதனை சரி தவறென்று அழைப்பது ? படைப்பு என்று ஒன்றிருந்தால், அதில் சொல்லப்படும் விஷயங்கள் இது சரி இது தவறு என்று நிச்சயமாக சுட்டி காட்டும். இனி அப்படி படிப்பதற்கான வாய்ப்பில்லை. ஆனால் பிரக்ஞையோ, சுழன்றுகொண்டே இருக்கின்றது. அதனை நிறுத்த வழியில்லை. மனிதன் வாழும் வரையில், அவனுடைய  பிரக்ஞை சுழன்றுகொண்டேதான் இருக்கும், ஆர்த்து படைக்க தூண்டிக்கொண்டேதான் இருக்கும். என்னே செய்வது. சரி, கிரகிக்க கூடிய எந்த முயற்சியும் இல்லாமல், அது தானாகவே இயங்காட்டும். அதனை, இது சரி இது தவறு, என்றெல்லாம் தார்மீக ரீதியில் வழி காட்டாமல், அது போகும் பாதையில் செல்ல விட்டு, என்ன தான் படைக்கின்றது என்று பார்ப்போம்… இவ்வாறன சிந்தனையில் எழுந்ததுதான் சரியாலிசம். கவிதை , ஓவிய துறைகளில் செயல்பட்ட கலைஞர்கள் இவ்வாறான போக்கை பயன்படுத்தி படைப்புகளில் ஈடுபட்டனர்.

சரியாலிசம், ஒரு சுதந்திர அனுபவம்:

சுதந்திரத்தை அனுபவிப்பது ஒரு சாதாரண காரியம் அல்ல. சுதந்திரத்தை அனுபவிக்க துவங்கும் போதுதான், தர்க்கத்தை தகர்த்தெறிவது என்பது சுலபமான காரியம் அல்ல என்பதை உணர முடியும். கலை படைப்புகளில் அர்த்தத்தை தேடுவது மனிதனின் சுபாவம் ஆகிவிட்ட காரணத்தால் அந்த சுதந்திரத்தை அனுபவித்து படைக்க முற்படும்போது நம் படைப்பு அர்த்தமற்றதாக தெரியும். சமூக விழுமியங்களால் கட்டப்பட்ட சிறைச்சாலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதை உணர்வதற்கு சில காலமாகும். அதற்கு முன்னர் தானியங்கியாக மனித மனம் செயல்பட்டு படைக்கும் கவிதையும் கலையும், அர்த்தமற்ற, இன்னும்   சொல்லப்போனால் பித்தனின் படைப்பாகவே தெரியும்.

இந்திய கலாச்சார பின்புலத்தில், பித்தனென்பவன் இறைவன் என்றொரு மூல-எண்ணக்கரு உண்டு. அதற்கு நாம் அந்நியர்களாகிவிட்டோம் என்பது, இந்த சரியாலிச  முயற்சியில் ஈடுபட்டால்  வரும். தானியங்கி புத்தி படைக்கும் கலைப் பொருளின் தூய்மையை நாம் பித்தலாட்டம் என்றழைக்கும் காலத்தில் வாழ்கின்றோம் என்பது புலனாகும். ஏனெனில், இலக்கியமாகட்டும், கலையாகட்டும், அதன் தேவை என்ன என்ற கேள்வியை நாம் நம்மை அறியாமலேயே எழுப்புகிறோம். இறுதியில், கலை என்பது பொழுதுபோக்கிற்கான ஒரு விஷயம் என்ற முடிவிற்கு வந்து விடுகிறோம். கலை என்பது ஆன்மீகத்தின் சாரம் என்பதை உணர்வதில்லை.

சரியாலிச கவிதை பழக ஐந்து முறைகள்:

01 நேர்த்தியான சடல-விளையாட்டு (Cadavre Exquis)

தனியாகவும்  விளையாடலாம் (கவிதை செய்யலாம்). குழுவாகவும் விளையாடலாம்.

கடிவாளமற்ற புத்தி, ஒரு பத்து சொற்களை உதிர்க்கட்டும். அவற்றை ஒரு காகிதத்தில் எழுதுங்கள்.

பிறகு, எந்த ஒரு அர்த்த தேடலுமின்றி , சொற்களை வரிசை படுத்துங்கள். இரண்டு சொற்கள், மூன்று சொற்கள், நான்கு, ஐந்து என்று, மனம் போன போக்கில் அவற்ற்றை வரிசை படுத்தி விளையாடுங்கள். சரியாலிச கவிதைகள் பிறக்கும்.

02 இருவழியொக்கும் :

இடத்திலிருந்து வலது புறமாகவும், வலதுபுறத்திலிருந்து இடதுபுறமாகவும் படிக்கும் பொழுது ஒரே ஓசை எழுப்பின் சொற்களை படைப்பது

உதாரணம் : விகடகவி

இடத்திலிருந்து வலது புறமாகவும், வலதுபுறத்திலிருந்து இடதுபுறமாகவும் படிக்கும் பொழுது ஒரே ஓசை எழுப்பின் சொற்தொடர்களை படைப்பது.

03 எதிரொலி -கவிதை :

ஒருவர் ஒரு  படைக்க, வேறொருவர் அந்த வாக்கியத்திற்கு எதிரொலியாக ஒன்றை கூற வேண்டும்

உதாரணம் :

வீட்டில் கிளி கூச்சல் =  பாடும், போடும்

04 தானியங்கி எழுத்து :

சரியாலிச எழுத்து முறைகளில் மிக முக்கியமானது தானியங்கி எழுத்து முறை எனலாம். அதாவது, மனதிற்கு வந்ததை, எந்தவித தயக்கமுமின்றி, அப்படியே காதித்ததில் பதிவது தானியங்கி எழுத்து முறையாகும். அதன் சாரம், மனதை, எந்தவித கிரகிக்கும் தாக்கங்களுமின்றி இயங்கவிடுதல், ஒருவிதமான கட்டுக்குள்ளடங்கா கச்சா-உயிரை படைத்தல் .

05 வெட்டி ஓட்டும் முறை :

பல  சொற்களை காகிதத்தில் எழுதி அவற்றை வெட்டி ஓட்டுதல். அந்த முறையில் கவிதை படைத்தல்.

அப்பாதுரை அர்விந்

இம்முறைகளில் கவிதை எழுதும் பொழுதும் அதை வாசிக்கும் பொழுதும், அதன் சுவையை பற்றிய கேள்வி எழும். கவிதையை சுவைத்தல், இரசித்தல் போன்ற நமக்கு பழக்கமான கவிதை அணுகும் முறைகள் வலுவிழப்பதை நாம் அவதானிக்க முடியும். ஒவ்வொரு சொல்லிலும் ஒரு சுவை உண்டு. அதை சொல்லை அதற்காகவே எடுத்துக்கொண்டு அதன் இயல்புகைளை, வடிவத்தை, மனதில் கொண்டு தியானித்தல். பழகிய சொற்கட்டுகளிலிருந்து விடுதலை பெறும் நேரம் அதில் தென்படும் புத்துயிரை ரசித்தல் ஆகியவை, சரியாலிசம் நமக்கு கொடுக்கும் அனுபவங்கள். இறுதியாக, கவிதை படைத்தல் ஒரு தனிமை விரும்பும் பிராணியின் செயல்பாடாக நாம் பார்த்து வந்தோம். அது ஒரு கூட்டு முயற்சியாகவும் அமையலாம் என்பதை இந்த முறைகள் நமக்கு எடுத்துரைக்கின்றன.

அப்பாத்துரை அர்விந்-பிரான்ஸ் 

அப்பாதுரை அர்விந்     

(Visited 62 times, 1 visits today)
 

கவிதை-அப்பாத்துரை அர்விந்

வெகு தூரத்தில் உறங்கிக் கொண்டிருக்கின்றன கனவுகள் …… பனிப்பிரதேசத்தில் பிறந்த குழந்தையொன்று நடுப்பகலின் நரம்பிலிருந்து கடைந்தெடுத்த நஞ்சுகலந்த போதையூட்டும் அமிர்தங்களை நள்ளிரவை நோக்கி தவழ்ந்திடும் குழந்தையின் கைகளில் இரட்சிக்கும் பரிசாக்கி […]