ஈழத்து நவீன கவிதை : ஏற்புகளும், மறுப்புகளுமாக ஓர் ”அத்து மீறும்” வாசிப்பு- தொடர் கட்டுரை- அங்கம் 02-றியாஸ் குரானா

தொடரை வாசிக்காத வாசகர்களாக :

அங்கம் 01

https://naduweb.com/?p=15832

0000000000000000000000000000000000

தமிழ்த் தேசியவாதம் என்ற ஒரே குடைக்கீழ் ஈழத்து நவீன இலக்கியம், குறிப்பாக ஈழத்து நவீன கவிதை உட்கார்ந்துகொண்டது. அதன் சாட்சியாக, ”மரணத்துழ் வாழ்வோம்” தொகுப்பு இருக்கிறது. இப்படி இன்னும் பல தொகுப்பாக்கங்கள் வெளிவந்தன. இவை எண்பதுகளின் முற்பாதியில் எனில், இரண்டாம் பாதியில் தனிநாட்டைப் பெறுவதற்காக ஆயுதம் ஏந்திய இயக்கங்களுக்குள் உட்பூசல்களும், படுகொலைகளும் நடந்தேறத் தொடங்கின. அதைக் கேள்வி கேட்டுக்கொண்டும், எதிர்த்துக்கொண்டும் பலர் வெளியேறத் தொடங்கினர். எண்பத்து மூன்றில் நிகழ்ந்த ஜூலைக் கலவரத்தைப் பின்தொடர்ந்து நிற்பவை இவை. அப்போது புதிய தலைமுறை ஒன்று உருவாகின்றது.  தமிழ்த் தேசியவாதத்திற்கான போராட்டத்தில் ஏற்படும் அதிருப்தியாளர்களை அதிகம் கொண்ட வகையினம் அது. இந்த அதிருப்திகளும், எதிர்ப்புக்களும் கவிதைகளிலும், பிற இலக்கியப் பிரதிகளிலும் பதிவுசெய்யப்படத் தொடங்கின. எண்பதுகளில் எழுதத் தொடங்கிய புதிய தலைமுறையினரே இதில் அதிகம் இடம் பிடித்துக்கொண்டனர்.  அவர்கள் போராட்ட இயக்கங்களில் பங்கெடுத்துக் கொண்டவர்களாகவும் இருந்தனர் என்பது முக்கியமாகக் கவனங்கொள்ளப்பட வேண்டிய ஒன்று. அந்தவகையில், செழியன், இளவாலை விஜயேந்திரன், சுகன், சக்கரவர்த்தி, செல்வம் போன்றவர்களின் கவிதைகள் இயக்க உட்பூசல்களையும், தமிழ்த் தேசியவாதத்தில் உருவான அதிகார பாசிச மையத்தையும் எதிர்க்கும் குரல்களாக இருந்தன.

ஆனால், பாசிச நடவடிக்கைகளை இலட்சியப் போராட்டத்தின் அடியாகக் கவனத்திற் கொள்ளாது மறைக்கவும், மறக்கவும், அவற்றை ஆயுதப் போராட்டத்தின் போது சமூக வெளியில் நடந்தேறக்கூடிய சாதாரணமான உபவிளைவுதான் என ஆதரிப்பவர்கள் உட்பட தமிழ்த் தேசியவாத ஆதரவாளர்களே ஈழத்து இலக்கியப் பரப்பில் அதிகமிருந்தனர். இதனால், இந்தவகையான எதிர்க்குரல்கள் அதிக கவனத்தைப் பெறாமல் சமூக வெளியில் கைவிடப்பட்டிருந்தன. ஏன், ”மரணத்துள் வாழ்வோம்”  கவிதைத் தொகுப்பு வெளிவரும்போதுகூட தமிழ்த் தேசியவாத இலட்சியத்தை வரித்துக்கொண்ட போராட்ட இயக்கங்கள் வெளிப்படுத்திய பாசிச நடவடிக்கைகளை வெளிப்படுத்திய கவிதைகளும் எழுதப்பட்டிருந்தன. ஆனால், அவை திட்டமிட்டு ”மரணத்துள் வாழ்வோம்” தொகுதியில் இணைக்கப்படாமல் ஓரங்கட்டப்பட்டு விட்டன.

இலக்கியத்தைப் புரிந்துகொள்ளவும், பன்மைத்தன்மையை வலியுறுத்தவுமான கோட்பாடுகள் அப்போது ஈழத்து இலக்கியவெளியில் இருக்கவில்லை என்பதே பிரதானமான விஷயமாகும். அமைப்பாக்கத்தின் வன்முறை பற்றி எல்லாம் அப்போது ஈழத்து இலக்கியவாதிகளுக்கு அறிதலில்லை. தமது தவறுகளை மறைத்துக்கொண்டு பொதுவான எதிரிக்கு (அரசு) எதிராகக் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும், பழமையை நினைவுகூர்ந்து மகிழ்வதும், போராட்டத்திற்கு ஆதரவான ஒரு சோகத்தை உருவாக்கி மக்களை இழுப்பதும் தான், இலக்கிய , அரசியல் அறமாக அப்போது புரிந்துகொள்ளப் பட்டிருந்தது என்பதுதான் உண்மை.

அதேநேரம், பெண் கவிஞர்களின் வருகை கணிசமான அளவு தாக்கத்தை ஏற்படுத்தியது. பெண் கவிஞர்களின் கவிதைகள் அரசியல், சமூகப் பிரச்சினைகளை வெளிப்படுத்தியதோடு, பெண்ணாக இருத்தலின் வலிகளை, துயரங்களை அதிகம் பேசின. இருந்தபோதும், குடும்பம், சமூகம் போன்ற கூட்டுணர்வில் பெண்கள் இரண்டாந்தரமாக வரையறுக்கப்பட்டு இருக்கும் பொதுக் குணத்தையும் சில கவிதைகள் வெளிப்படுத்தாமலில்லை. அதுவே, பெண்ணியம் என தமிழின் விரிந்த பரப்பிற்குள் பின்னர் உருவான தனிப்போக்குக்கு அடிகோலிய விஷயமாக அமைந்திருந்தது.  ஈழத்து நவீன கவிதைகளின் தனித்தன்மைகள் என வரையறுக்கப்பட்டிருந்த கச்சாப் பொருட்களைப் பொருட்படுத்தாது, பிச்சமூர்த்தி வழியாக வளர்ந்து நின்ற எடுத்துரைப்பு முறைமைகளையே இவர்கள் முற்றிலும் கவனத்திற்கொண்டிருந்தனர் என்பது மிக முக்கியமாகக் கவனத்திற்கொள்ள வேண்டிய ஓர் அம்சமாகும்.  இந்தவகையில், ஊர்வசி, அ. சங்கரி, ஔவை, சுல்பிகா,  சிவரமணி, செல்வி,மைத்திரேயி என நீளும் ஒரு பட்டியலே உள்ளது. ”சொல்லாத சேதிகள்” தொகுப்பு இதனடியாகப் பெரும் கவனத்தைப் பெறுகிறது. இது பல பெண் கவிஞர்களின் தொகுப்பு நூல். சித்திரலேகா மௌனகுரு பெண்ணியச் சிந்தனையின் மங்கலான முன்னோடியாக முன்னுக்கு வருகிறார்.

அதேநேரம், எச். எம். பாறுாக், கல்லுரன், சோலைக்கிளி, கருணாகரன், நிலாந்தன், கலாமோகன், வாசுதேவன், கி.பி. அரவிந்தன், ஜாபர், வண்ணச்சிறகு உள்ளிட்டோருடன் எழுபதுகளிலும் அதற்கு முன்னரும் களத்தில் நின்ற பல கவிஞர்களும் தொடருகின்றனர்.  இந்தக் காலத்தில், ஜெயபாலன், சு.வில்வரத்தினம், புதுவை இரத்தினதுரை, வானம்பாடி முகாமிருந்து வெளிப்பட்ட மேமன் கவி, எழுபதுகளின் கடைசிக் காலத்தில் நுழைந்த சேரன் போன்றவர்களே பெரும் கவிஞர்களாக உருவாகி நின்றனர்.

இவர்களில், சேரன் வானம்படிச் சாயலைக் கைவிட்டு பிச்சமூர்த்தி வழி எடுத்துரைப்பு அமைப்பு முறைகளில் தோய்ந்தும், ஈழத்து நவீன கவிதைப் பண்புகள் எனக் கருதப்பட்ட பேச்சுநடையின் வழிகளில் முக்குளித்தும் ஒரு கலவையான கவிதை நடையை உருவாக்கி, தேசியவாதத்தை உள்ளீடாகவும் கொண்ட பல கவிதைகளை எழுதுவதினூடாக ஒரு தனித்தன்மையைத் தனக்கென உருவாக்கி நிற்கிறார். அந்த எடுத்துரைப்பு முறையின் நவீன கவிதை நடை , தென்னிந்திய நவீன கவிதையின் நடைச் சாயலையே அதிகம் சாய்வுகொண்டுள்ளது என்பதே உண்மை.

எச்.எம்.பாறுக்கோ, ஈழத்து நவீன கவிதையின் பண்பாக வரித்துக்கொண்ட பண்பான பேச்சு நடையை எழுத்து நடையாக மாற்றி, அதற்கெனத் தனியான ஓர் அழகியலை கவிதையின் எடுத்துரைப்பு முறைமைக்குள் கொண்டு வருகிறார். நுண்ணளவிலான விஷயங்களையும் கவனிக்கும் புதியதொரு பார்வைக் கோணத்தையும் அவர் முன்வைத்தார். இதுகாறும் சமூக வெளியில் அதிகம் பொருட்படுத்தாத, சமூகவெளியில் உள்ள சின்னச் சின்ன விஷயங்களையும் கவிதையின் கவனத்திற்குள் கொண்டு வருகிறார்.

இந்த எச்.எம். பாறுக்கின் பார்வைக் கோணத்தோடும், எழுத்து நடையாக மாற்றி பேச்சுநடையை எடுத்துரைப்புகளில் வசீகரமானதும், பன்மையானதுமான சொல்முறைக்குள் உட்படுத்தி, பிரமிளின் படிமத்தை அதீதமாகப் பெருக்கி, அஃறிணைகளுக்கு மனிதப் பண்புகளை ஏற்றி உருவகத் தன்மையிலான ஒரு  புதிய கவிதை எடுத்துரைப்பை, சொல்லுதல் முறையை உருவாக்கி தனிக் கவிஞனாக தொண்ணூறுகளில் எழுந்தவர்தான் சோலைக்கிளி. பிரமிளுக்குப் பிறகு ஈழத்து நவீன கவிதைவெளியில் மிகமுக்கியமான பெருங்கவிஞன் சோலைக்கிளிதான். அவரின் கவிதைகளைத் தனியாக ஆய்வுக்குட்படுத்தும் போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளையும், அவற்றிலுள்ள சிக்கல்களையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்பவில்லை.

எச்.எம். பாறுக்கின் எடுத்துரைப்பு முறைமையைச் செழுமைப்படுத்தி பன்மையான பேச்சு நடையை அதாவது, பேச்சு நடையின் அனைத்துச் சாத்தியங்களையும் உள்ளெடுத்து, தேசியவாதத்தை மட்டுமல்ல, அதிகமான உள்ளடக்கங்களையும், நுணுக்கமான கவனிப்புக்களையும் செலுத்துவதோடு, அதிகமாக எழுதுவதினூடாகவும் தொண்ணூறுகளின் முக்கியமான கவிஞராகத் தனக்கென ஓர் இடத்தை உறுதி செய்கிறார் சோலைக்கிளி.  இவர்தான், ஈழத்து நவீன கவிதை என்று வரையறுக்கப்பட்ட பண்புகளின் பேச்சுநடையை பன்மையான வழிகளில் வளர்த்தெடுத்து உருத்திரண்டு எழுந்தவர் என்பதை இந்த இடத்தில் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

புலம்பெயர்ந்து சென்றவர்கள் அங்கு சிறுபத்திரிகைகளை உருவாக்கிச் செயற்படத் தொடங்குகின்றனர். இது தொண்ணூறுகளில் தான் பல கோணங்களின் இலக்கியக் கூட்டுக்கலவையாக உருத்திரண்டு மேலெழுகிறது. எஸ்.பொ அறிவித்த, ‘புலம்பெயர் இலக்கியம்’ என்ற அடைமொழி பரவலான ஏற்புடன் அனைவராலும் பயன்பாட்டுக்கு வருகிறது. அது குறித்து தொண்ணூறுகளைப் பற்றி பின்னர் பேசும்போது கவனத்திற் கொள்வோம். மீண்டும் எண்பதுகளுக்குத் திரும்புவோம்.

இதுவரை காலமும் தென்னிந்திய வானம்பாடிகளின் நவீன கவிதை இயக்கத்தைப் புறக்கணித்தே வந்த ஈழத்து நவீன இலக்கியவாதிகளுக்கு, என்ன நடந்ததோ தெரியவில்லை. அப்படியே ஓர் அந்தர் பல்டி அடிக்கும் நிகழ்வும் நடந்தேறுகிறது.  ஈழத்து நவீன கவிதைச் சிறப்பிதழ் ஒன்றை தென்னிந்திய வானம்பாடிகள் முகாம் வெளிக்கொணர முன்வருகிறது. அவ்விதழில் வானம்பாடி இயக்கத்தையும், அவர்களின் நவீன கவிதைகளையும் நிராகரித்த அத்தனை ஈழத்து கவிஞர்களின் கவிதைகளும் எந்தவிதமான வெட்கமும் இல்லாமல் பல்லிளித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தன.  காலம் இரக்கமற்றது என்பதற்கும், அவர்களின் அப்போதைய இலக்கிய இலட்சியங்கள் அத்தனை நியாயமானவை அல்ல என்பதற்கும் அதுவே உதாரணமாகிப் போய்விடுகிறது.

இந்தக் காலகட்டத்தில் ஈழத்தில் பெருங்கலவரங்கள் நடந்துகொண்டிருக்கின்றன எனக்கூறியிருந்தேன். அதுபோல இலக்கியச் சர்ச்சைகளும் இடம்பெறாமலில்லை.  அவற்றைக் கேட்டால் நீங்களே வாயில் விரலைவைத்து ஆச்சரியப்படுவீர்கள். எனினும், இவை ஈழத்து இலக்கியத்தில் நடந்தேறிய மிக முக்கியமான சர்ச்சைகள் என்பதுதான் உண்மை.

இலக்கிய வெளியில் சர்ச்சைகள் நடந்தேறுவது என்பது மிகச் சாதாரணமான ஒன்றுதான். ஆனால், தமிழ்த் தேசியவாதமும், அதன் அதிருப்திகளும் என இலக்கியப் பிரதிகள் வெளிவந்து கொண்டிருக்கும் காலத்தில்,  ஈழத்தின் முக்கியமான விமர்சகர்கள் பங்கேற்கும் விவாதங்கள் ”மல்லிகை” என்ற சிற்றிதழில் மூன்று வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்தன. ‘இழிசனர் மொழியைப் பயன்படுத்துதல்’ என்று மையப்படுத்தப்பட்ட ஒரு விவாதம் அதில் போய்க்கொண்டிருக்கிறது. அப்போது பின்நவீன சிந்தனை தமிழுக்கு வரவில்லை என்பதால், “தலித்தியம்” பற்றிய ஒரு புரிதல் இருக்கவில்லை என்பது முக்கியம்.

அடுத்து, ”யதார்த்தவாதமும் ஆத்மார்த்தமும்”’  என்ற தலைப்பில், ”மஹாகவி மட்டும்தானா சிறந்த கவி, நீலாவணனும்தான்” என்ற ஒரு கட்டுரையைச் சிந்தித்து எழுதிக்கொண்டிருக்கிறார் மு.பொ. இந்தக் கட்டுரை தொண்ணூறுகளில்தான் பிரசுரமானபோதும், நெருக்கடியான எண்பதுகளில் இவர் இதைத்தான் செய்து கொண்டிருந்தார் என அவரே ஒப்புக்கொள்கிறார்.

அதுபோல், கவிதையில் நாடகம் எழுதவேண்டும்; அதற்கு என்ன வகையான  அம்சங்கள் தேவை, எப்படி எல்லாம் அவை இருக்க வேண்டும் என நுஃமானும், ‘கவிதையில் நாடகம் எழுத வேண்டுமா?’ என மு.பொ.வும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்றனர்.

(இந்த விவாதங்கள் குறித்த காலத்தின் தகவலை உறுதி செய்ய வேண்டும். நினைவிலிருந்து எழுதுவதால் தவறுகள் இருக்க வாய்ப்புள்ளது. ஆனால், கட்டுரையின் போக்கிற்கு இவை பிரச்சினை அல்ல எனக் கருதுவதால் இணைக்கிறேன். தொகுப்பாக்கும்போது காலம் உறுதிப்படுத்தப்படும்).

ஆனால், ”மரணத்துள் வாழ்வோம்” தொகுப்பை முன்வைத்து சேரனும், சி. சிவசேகரமும் விவாதித்த விஷயங்கள் முக்கியத்துவமானவை. அவை சமகாலத்தைக் கவனத்திற் கொண்டவை. அதில் சிவசேகரத்தின் விமர்சனம் மீளவும் வாசிக்கப்பட வேண்டிய ஒன்று.

இப்படி எல்லாம் நடந்தேறுவதற்கு, சமகாலத்து இலக்கியத்தைப் புரிந்துகொள்வதற்கான, அதை விரிவுபடுத்திச் செல்வதற்கான கோட்பாடுகளும், விமர்சன முறைமைகளும் இல்லாமல் போனதே பிரதானமான காரணம் எனலாம்.

இரசனைக் குறிப்புகளும், தரப்படுத்தல் அளவுகோல்களும், ‘எனக்குப் படுகிறது சொல்கிறேன்’ என்ற உள்ளொளி பார்வைக் கோணங்களும், அழகியலைப் பரிசோதிக்கும் ஆராய்ச்சிக் கூடங்களும், உள்ளடக்கத்தைக் கண்டறியும் தொல்பொருள் ஆய்வுகளும், இலக்கியத்தைப் புரிந்து கொள்வதற்கான செயற்பாடுகளாய் ஆகிப்போய் விட்டன. ஆளாளுக்கு விரும்பிய வழிகளில் வியாக்கியானம் செய்வதே விமர்சனக் கோட்பாடாகவும் இலக்கித்தைப் புரிந்துகொள்ளும் வழிமுறைகளாகவும் உப்புச் சப்பற்ற ஒரு நிலைவரத்திற்குள் ஈழத்து இலக்கியத்தை கொண்டுபோய் தள்ளிவிட்டது எனலாம்.

எதிர்ப்பு இலக்கியம் என்ற வகையில் வெறும் சப்பைக் கட்டுக் கட்டி எண்பதுகள், என்ற பத்து வருடத்தை (அதற்குப் பிறகும் தொடர்ந்தது என்பது வேறு கதை) வழியனுப்பி வைத்துவிட்டனர். அதிலும், அரச பாசிச எதிர்ப்பு மட்டுமே கவனத்திற்கொள்ளப்பட்டது . அதை மையப்படுத்தியே விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. தமிழ்த் தேசியவாதத்தின் பாசிச நடவடிக்கைகளையும், அதிகார மையத்தையும் எதிர்த்த குரல்கள் எல்லாம் கவனிக்கப்படவே இல்லை.  வெறும் ‘ துரோகிகள்’ என்ற சொல்லால் பழிசுமத்தி கடந்து வந்துவிட்டனர். பிற்காலத்தில் இதுவே ‘புலி எதிர்ப்பு’, ‘புலி ஆதரவு’ என்ற மட்டரகமான புரிதல் நிலையால் விமர்சிக்கப்படும் இடத்திற்குச் சென்றது.  இவைதான் எண்பதுகளின் இலக்கியச் செயற்பாடுகளின் குறுக்கு வெட்டுத் தோற்றம்.  எண்பதுகளில் இப்படி எனில், அதிக சிக்கல்களும் சிடுக்குகளும் நிறைந்த தொண்ணூறுகளில் ஈழத்து இலக்கியத்தின் நிலை என்ன? ஈழத்து நவீன கவிதையின் நிலை என்ன?  நான் அதை விபரிக்காமலேயே நீங்கள் புரிந்துகொள்ளலாம்.

தொண்ணூறுகள் பல போக்குகளினதும், பிரிவுகளினதும் பெருக்கமான காலம். ஒரே மொழியைப் பேசுகின்ற, மதரீதியிலான சிறுபான்மையினரான முஸ்லிம்கள், தமிழ்த் தேசியவாதம் வரையறுக்கும் எல்லைக்குள்ளிருந்து வெளியேற்றப்படுகின்றனர்.  அவர்களின் மதத் தலங்களினுள்ளேயே மதவழிபாடுகளில் ஈடுபட்டிருக்கும்போது கொன்று குவிக்கப்படுகின்றனர். தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் முஸ்லிம்களாலும், அதாவது முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஊர்களில் சிறுபான்மையாக வசிக்கும் தமிழர்கள் தாக்கப்படுகின்றனர். யாழ்ப்பாணத்திலிருந்து எந்த அடையாளங்களும் இல்லாமல் புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப் படுகின்றனர்.  தமிழ்ப் பேசும் மக்களை உள்ளடக்கிய தமிழ்த் தேசியவாதம், இரண்டாகப் பிளந்து தமிழ்த் தேசியவாதமாகவும், முஸ்லிம் தேசியவாதமாகவும் மாற்றமடைகின்றது.

தமிழ்த் தேசியவாதத்திற்குத் தன்னால் முடிந்த வழிகளிலும், தெரிந்த வகையிலும் தலைமை கொடுத்து இயங்கிய நுஃமானுக்கு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் செயற்படுவதற்கான அனுமதி மறுக்கப்படுகிறது. சில இலக்கியவாதிகளிடம் எதிரியாகவும், சிலரிடம் நண்பராகவும் நுஃமான் மாற்றமடைந்து நிற்கிறார். மிக நெருங்கிய நண்பரே “திசைமாற்றம்’  என்ற சிறுகதையை எழுதிப் பகை தீர்க்கிறார்.

புலம்பெயர்ந்து போனவர்களிடமிருந்து தமிழ்த் தேசியவாதப் பாசிசத்திற்கெதிரான எதிர்க் குரல்கள் பலமடைகின்றன.  அதனூடாக, தமிழ்த் தேசியவாத இலக்கியம் அல்லது ஈழத்து இலக்கியம் என்ற அடைமொழி, தலைப்பு ‘ஈழத்துத் தமிழ் இலக்கியங்கள்’ என்ற போக்கை அடைகிறது.  ஒரு குடையின் கீழ் , ஒரே ஒத்த தன்மையோடும்,  (ஒபபீட்டளவில் பெரும்பான்மையாக இருந்த) ஒரே இலட்சியத்தையும் வரித்துக்கொண்ட தமிழ் இலக்கியம் என்பது பன்மையான போக்குகளாகக் கிளைபிரிந்து மேலெழுந்து தன்னை உறுதிப்படுத்துகின்றது. தமிழ்த் தேசியத்தின் பாசிசக் கூறுகளையும், அரச பாசிசத்தையும் எதிர்த்து இலக்கியச் செயற்பாடுகள் மேல் நிலைக்கு வருகின்றன. அவை கணிசமான கவனத்தையும் பெறுகின்றன. இந்த முகாமில் அரச பாசிச எதிர்ப்பென்பது தாழ்ந்த சுதியில் தன்னைத் தக்கவைத்துக்கொண்டது. ஆனால், தமிழ்த் தேசியவாத பாசிச நடவடிக்கைகளை எதிர்க்கும் முனைப்பு மையமாகச் சுழலத்தொடங்கியது.

தனிநபர்கள் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியவாதத்தின் பாசிசக் கூறுகளை எதிர்க்கும் இலக்கியச் சந்திப்பு கவனத்தைப் பெறுகிறது. கலைச்செல்வன் இதில் முக்கியமான பங்கை வகிக்கிறார்.

வெறும் எதிர்க்குரலாகவே உருப்பெற்ற புலம்பெயர் இலக்கியம், கோட்பாட்டின் வழியில் வாசிக்கப்படக்கூடிய ஓர் இடத்திற்கு நகர்கிறது. தமிழின் பின்நவீனத்துவச் சிந்தனையாளரான தென்னிந்தியாவைச் சேர்ந்த அ. மார்க்ஸ் புலம்பெயர் எதிர்க்குரல்களை வெளிப்படுத்தும் இலக்கியங்களுக்கு, ‘அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல்’ என்ற வகையில் புதிய பொருளை முன்வைக்கிறார்.  தமிழ்த் தேசியவாதத்திற்கும், அதன் பாசிசத்திற்கும், அதன் இலட்சியத்திற்கும் சவாலானதும், எதிர்ப்பதற்குமுரிய கருத்தியல் அலசப்படுகிறது. ‘தேசியம் ஒரு கற்பிதம்’ போன்ற கோணத்தில் பல பார்வைகள் மிக ஆழமாக விவாதித்து அலசப்பட்டு மேற்கிளம்புகின்றன.

தாயகம், புலம் என்ற புதிய பிரக்ஞையுடன் கூடிய சொற்களும் பாவனைக்கு வருகின்றன.  இலக்கியச் செயற்பாடுகள் புதிய தளங்களுக்கு விரிவுகொள்கிறது.  தமிழ் மொழியின் (ஈழத்துத் தமிழினதும்)  இலக்கியத்தின் அனுபவத்தளம் மிகப்பரந்த அளவில் விரிந்து அகலக் கால் பதிக்கிறது.

புலம்பெயர்ந்த இடங்களில் சிறுபான்மையினராகவும், கறுப்பர்களாகவும், விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டு உணரப்படும் புதிய அழகியல் மற்றும் புதிய அரசியல் பண்புகள் ஈழத்தமிழ் இலக்கியத்தின் ஒரு பகுதியான புலம்பெயர் இலக்கியங்களில் அத்துமீறி நுழைகின்றன. அதேநேரம், தாயக ஏக்கங்களும், பாசிசப் புலிகளின் அதிகாரத்திற்கெதிரான எதிர்க்குரல்களுமாக மாறி மாறி மேலெழும் பன்மையான ‘சுயத்தை’  உணரும் தன்னிலைகளாக மாறிவிட்டிருக்கின்றன. இது ஏலவே ஈழத்தில் கூட்டுணர்வாகப் பொதுத்தன்மையாகக் கடைப்பிடிக்கப்பட்ட, அதுவும் சமூக இலட்சியத்திற்கான போராட்டத்தில் உபவிளைவுகளாகப் பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தேறும்தான்; அவற்றைப் பொறுத்துக்கொண்டும், சகித்துக்கொண்டும், மறைத்துக்கொண்டும் சமூக இலட்சியமான தனிநாடு பெறும் செயற்பாட்டில் இறங்க வேண்டும் என்ற மனநிலைக்கு முற்றிலும் எதிரானது. அதைக் கலைத்துப்போடும் தன்மையிலானது என்பது இங்கு முக்கியமான விஷயம்.

புலம்பெயர் இலக்கியம் என வரும்போது இங்கொன்றை கவனஈர்ப்புச் செய்ய வேண்டியது கட்டாயப் பொறுப்பாகும். ‘ஈழத்து’ ”புலம்பெயர் இலக்கியம்” எனப் பெயரிட வேண்டுமானால், அந்த இடத்தை வழங்க வேண்டுமானால், உண்மையில் ‘மலையகத் தமிழ் இலக்கிய’த்திற்குத்தான் அதனை வழங்க வேண்டும். அந்தப் பெயரும் அதற்குரியதாக ஆக்கப்பட வேண்டும். அதன் நிழலிலேயே புலம்பெயர் இலக்கியம் தொடரப்பட வேண்டும். எல்லாவற்றையும் தனதாக்கிக்கொள்ளும், தமது துயரே தமிழைப் பேசுகின்ற அனைத்துச் சமூகங்களின் துயராகவும் இருக்க வேண்டுமென்ற அதிகார மனநிலையின் வெளிப்பாடுதான் ‘புலம்பெயர் இலக்கியம்’ என்பதை ஈழத்துத் தமிழர்கள் சுவீகரித்துக்கொண்டது.  இது குறித்து நான் ஏற்கெனவே பல சந்தர்பங்களில் பேசியிருந்தாலும், தனியாகவும், விரிவாகவும் பேசப்பட வேண்டிய ஒன்று என்ற வகையில் இச்சிறிய குறிப்புடன் நிறுத்திக்கொள்கிறேன்.

ஆரம்பத்தில் வேறு காரணங்களுக்காகப் புலம் பெயர்ந்து ஈழத்தமிழர்கள் உலகின் பல திக்குகளுக்கும் போயிருப்பினும், பின்னர் புலிகளே அதைத் தொழிலாகச் செய்யத் தொடங்கிவிட்டனர் என்பதும் கவனத்திற்கொள்ள வேண்டியதே. அதுவும் போதாதென்று புலம் பெயர்ந்து போனவர்களிடமிருந்து வரி வசூலிப்புக்களும், கப்பம் கோருதலும் புதியதொரு பொருளாதாரக் கொள்ளையடிப்புக்களாகத் திரண்டு வந்தது. புலிகள் என்ற பாசிச அதிகார அமைப்பு புலப்பெயர்வை பொருளாதார வளமீட்டும் ஒன்றாகப் பாவிக்கத் தொடங்கியது. அப்படிப் பாவித்துக்கொண்டே அந்தப் பாசிச அமைப்பின் ஆஸ்தான அரசசபைக் கவிஞரான புதுவை இரத்தினதுரையைக் கொண்டு புலம் பெயர்ந்து போனவர்களைப் பற்றி எந்தவகையான மதிப்பீடுகளை உருவாக்குகிறது என்பதை, புதுவையினுடைய குரலிலேயே இங்கு காணலாம்:

ஈழத்தில் போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, அதில் பங்கேற்காமல் தஞ்சம்கோரி தப்பிச்சென்றவர்களை கவிஞர் புதுவை இரத்தினதுரை இப்படி எழுதுகிறார்.

‘பெற்ற தாயினை எட்டி உதைப்பது போல
தாயகம் தீயில் எரிகையில் விட்டு
விமானத்தில் ஏறி பறந்தவர்
வீரம் இல்லாதவர் நாயிலும் கீழானவர்
சுற்றி வளைத்தனர் சிங்களப் படையினர்
சுட்டுத் தள்ளுவர் என்ற பயத்தினால்
விட்டுப் பறந்த கோழைகள் நாளையே
வீடு திரும்பினால் காறியே துப்புவோம்
கப்பல் ஏறி ஜெர்மன், பிரான்ஸ் உடன்
கனடா நாட்டிலும் தஞ்சம் புகுந்தனர்
அப்பு ஆச்சியை கவனம் கவனம் என்று
அங்கேயிருந்துமே கடிதம் எழுதினர்
தப்பிப் பிறந்தவர் தம்பியும் வாவென
தம்பிமாரையும் அங்கு அழைத்தனர்
துப்புக் கெட்டவர் அகதி லேபலில்
தூசு தட்டியே காசு பிழைத்தனர்
ஓடியவர் ஓடட்டும் ஊழைச் சதையர்
எல்லாம் பேடியர்கள் ஓடட்டும் போனவர்
போகட்டும் பாய்விரித்தால் போதும்
படுத்துறங்கும் இவர்கள் எல்லாம் நாய்சாதி
நாய்சாதி ஓடி நக்கிப் பிழைக்கட்டும்
தப்பிப் பறந்து தமிழன் என்று சொல்ல வெட்கி
கப்பலிலே எறி கனடாவில் நக்கட்டும்’

00000000000000000000000000000000

அதற்குப் புலம்பெயர்ந்து போனவர்கள் சார்பில் வ.ஐ.ச. ஜெயபாலன் சொல்லும் பதிலை அவரின் குரலிலேயே இங்கு காணலாம்:

வ.ஐ.ச. ஜெயபாலனின் கவிதையிலிருந்து சில வரிகள். ஏன் புலம்பெயர வேண்டியிருக்கிறது என்று சொல்கிறது,

“மரணம் மகத்தானது தான்
உயிர்வாழ்தல் அதைவிடவும் மகத்தானது ஆக இருக்கிறது
அன்றேல் அகதிப் பயணங்கள் ஏன் அமைகின்றன?”

இக்காலத்தே முஸ்லிம்களின் மத்தியிலிருந்தும் இன அழிப்புக்கு எதிராக பல குரல்கள் வெளிப்பட்டன. ஆனால், புலம்பெயர் சூழலில் உருவான புதிய விளிப்புகள் இங்கு முஸ்லிம்களின் இலக்கியச் செயற்பாடுகளில் உட்சென்றிருக்கவில்லை. பின்நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம் எனக் கோட்பாட்டு ரீதியிலும், கருத்தியல் ரீதியிலும் இலக்கியப் பிரதிகளைப் புரிந்துகொள்ளும் போக்குகள் கருத்தியல் ரீதியில் விவாதிக்கப்பட்டும், அலசப்பட்டும் இலக்கியப் பிரதிகள் உருவாக்கப்படவோ புரிந்துகொள்ளப்படவோ இல்லை. எண்பதுகளில் நடந்ததைப் போல வெறும் தன்னெழுச்சியான எதிர்ப்புக் குரல்களாகவே இலக்கியத்தில் அவை பதிவாகின. ”இதோ பாருங்கள், எங்களுக்கு நடக்கும் அநியாயங்களை” என்ற வகையிலேயே அவை இருந்தன. சரிநிகர் பத்திரிகையும், மூன்றாவது மனிதன் போன்ற சிற்றிதழ்களும் இங்கு இயங்கிய போதும் கருத்தியல் சார்ந்த ஒரு விழிப்புணர்வு ஈழத்து இலக்கியத்தில் (தாயகம்) உருவாகவில்லை என்பதையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட வேண்டும்.

தாயகத்திலிருந்த தமிழ்த் தேசியவாதிகளும், அதற்கு ஆதரவான இலக்கியவாதிகளும் அத்தனையையும் பார்த்துக்கொண்டு சும்மாவே இருந்தனர். ஒரு படி மேலே போய் முஸ்லிம்களின் வெளியேற்றமும், அவர்கள் மீதான இனவொழிப்புக் கொலைகளும் நியாயமானது என்ற தோரணையில் பேசவும் செய்தனர்.  எந்தவகை எதிர்ப்புமில்லை. ஒரு மகிழ்வான செய்தியைப் போல, ஓர் இரகசியமாக அது மாறியிருந்தது.

நமது மொழி, நமது இனம், அதன்மீதான கரிசனையே போதுமானது. அதுவே தேவையானது. பிறர் செத்தாலென்ன, இருந்தாலென்ன என்ற நிலைக்கு அவர்கள் போய்விட்டனர். பிரபஞ்சவாதம், உலகமே கோயில், பொதுவாழ்வே தொழுகை முகாமிலிருந்தவர்களும் ‘நவதுவாரங்களையும் பொத்திக்கொண்டு கப்சிப்’ என இருந்து விட்டனர். ‘வாடும் பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலாரின் பன்மைத் தன்மை நிரம்பிய கருத்தாக்கம் கண்ணெதிரே வாடத் தொடங்கிற்று. இலக்கியவாதிகள் வெளிப்படையாகவே பாசிச நடவடிக்கைகளை ஆதரிக்கும் நிலைக்குச் சென்றுவிட்டனர். இலக்கியத்தை பாசிச அரசியல் நடவடிக்கைகளுக்கு சேவகம் செய்யும் ஒரு நிலைக்குக் கீழிறக்கிவிட்டனர்.

இதேநேரம், தங்களுக்கு இலக்கியச் செயற்பாடுகளும், எதிர்க்குரல்களும் அதிகரிப்பதைப் பார்த்த பாசிசப் புலிகள் அமைப்பு, போராளிகளையே இலக்கியச் செயற்பாடுகளிலும் களம் இறக்கிவிடுகின்றனர். அவர்களின் பயில்நிலை இலக்கியப் பிரதிகளைத் தொகுப்புகளாக வெளியிட்டு, ”இதோ பாருங்கள்! பாசிசப் புலிகளுக்கும் இலக்கிய ஆதரவு இருக்கிறது. அதுவும் களத்திலிருந்தவர்களின் அனுபவங்களால் அவை உருப்பெருகுகின்றன” எனும் புதியதொரு தோற்றத்தையும் வெளிக்கொண்டு வருகிறது ஈழத்து இலக்கியம். இங்கே, ‘எதிர்ப்பு இலக்கியம்’  என ஒரு விசயத்தைக் கூறியிருந்தேன். அவை குறித்தும் இந்த இடத்தில் பேசுவது நல்லது என நினைக்கிறேன். அதற்குச் சரியான இடமும் இதுதான்.

தமிழ்த் தேசியவாத இலக்கியம் என்பதே எதிர்ப்பு இலக்கியமாகத்தான் தொடங்குகிறது. பாசிச அரசின் தமிழர்களினதும், தமிழர் தேசத்தின் மீதுமான இனவழிப்பு நடவடிக்கைகளை, அவர்களின் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை இராணுவக் கோணத்தில் எதிர்கொண்டு நசுக்கிய சம்பவங்களை எதிர்க்கும் கோணத்திலிருந்துதான் அவை வெளிக்கிளம்பின.

ஆரம்பத்தில் தமிழ் பேசும் மக்களின் ஒருமித்த குரலாக அரச பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக எழுந்தது. பின்னர் தமிழ்த் தேசியவாத இலட்சியத்தில் உருவாகிய ஆயுத இயக்கங்களினுள்ளும், புறத்தில் சக இயக்கக் காழ்ப்புணர்விலும் மோதல்களும், படுகொலைகளும் நடந்தேறி, கருத்து முரண்பாடுகள் துருத்திக்கொண்டு தவிர்க்க முடியாமல் வெளிவந்த நிலையில், அவற்றை விமர்சித்தும், மறுதலித்தும் எதிர்ப்புக் குரல்கள் பதிவாகின. இந்தவகை எதிர்க்குரல்கள் புலம்பெயர் தேசங்களிலிருந்தே அதிகம் பதிவாகின.

அத்தோடு, முஸ்லிம்களின் மீதான இனஅழிப்புக்களும், அதற்கு நிகரான வன்முறைகளும் புலிகளின் பக்கமிருந்து மேற்கொள்ளப்பட்ட போது, அதற்கெதிரான இலக்கிய எதிர்க்குரல்கள் பதிவாகத் தொடங்கின. தொண்ணூறுகள் என்பதைப் பன்மையான இலக்கியங்களின் காலம் என்று இதனால்தான் முன்பு குறிப்பிட்டிருந்தேன்.

இந்த வகை இலக்கிய எதிப்புக் குரல்கள் விரிவான ஒரு தளத்திற்குச் சென்றது. அரச பாசிசத்தை முதன்மைப்படுத்தியும், பிற பாசிச சடவடிக்கைகளை கவனத்திற் கொள்ளாததுமான சாய்வு கொண்ட எதிர்ப்புக் குரல்கள் என்றும், புலிகளின் பாசிச நடவடிக்கைகளை மாத்திரம் எதிர்த்த எதிர்ப்புக் குரல்கள் என்றும், முஸ்லிம் சமூகத்தின் ஆதரவையும், அச்சமூகத்திற்கெதிரான புலிகளின் பாசிசத்தை எதிர்த்த எதிர்ப்புக் குரல்கள் என்றும் தனித்தனியே பிரிந்து தனிப் போக்குகளாக ஈழத்து நவீன கவிதை கிளைபிரிந்து நின்றது. ஆயினும், இந்தப் போக்குகளினதும் அதன் இயங்கு வெளியையும் அக்கறைகொண்ட இலக்கியவாதிகளில் புலம்பெயர் தேசத்தைச் சேர்ந்தவர்கள்தான் கருத்தியல் ரீதியிலான உள்ளூட்டத்தோடு இயங்கியவர்கள் என்பதும் முக்கியமானது.  மற்ற இலக்கியப் போக்குகளும் அதன் இலக்கியச் செயற்பாட்டாளர்களும், தத்தமது சமூகத்தின் மீது மாத்திரம் அக்கறைகொண்டு செயற்பட்டதை நாம் அவதானிக்கலாம்.  இவை விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட மக்களின் அதிகாரத்திற்கெதிரான குரல்களாகக் கொள்ளப்படக்கூடிய நிலையிலிருந்தாலும், அதன் பலவீனமான பகுதி என்பது தங்கள் இனத்தை மாத்திரமே அவை கவனத்திற்கொண்டு எதிர்ப்பிலக்கியக் கவிதைகளையும், கருத்துக்களையும் உற்பத்தி செய்து, அதன் பக்கம் மாத்திரமே சாய்வுகொண்டவையாக இயங்கியதாகும்; இயங்கத் தூண்டியதுமாகும்.

ஆனால், இதற்கு அப்பால் பின்நவீனத்துவம் அர்த்தப்படுத்தும், வியாக்கியானம் செய்யும் விளிம்புநிலைக்குத் தள்ளப்படும் அனைத்துத் தரப்பினரையும் கவனத்திற்கொண்டு அவர்களனைவரின் பக்கமும் நின்று பேசும் நிலையை மிகச் சிலரே கையிலெடுத்தனர்.  இதில் புலம்பெயர் தேசத்திலிருந்து 1998 இல் வெளிவந்த, ‘எக்ஸில்’ சிற்றிதழ் உள்ளிட்ட பல இலக்கியவாதிகளையும் சுட்டிக்காட்டலாம். ஷோபாசக்தி, சுகன், கற்சுறா, சக்கரவர்த்தி, கலைச்செல்வன், கலாமோகன் என நீளும் பட்டியலில் இன்னும் பலர் வந்து சேரக்கூடியவர்களே.

இந்த வகை இலக்கியச் செயற்பாட்டாளர்கள் போரின் விளைவாக ஏற்படும் மனித உரிமை மீறல்களை, கருத்துச் சுதந்திரத்தை, செயற்பாட்டுச் சுதந்திரத்தை அக்கறை கொண்டனர்; வலியுறுத்தினர். விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட சமூகங்களின் பக்கம் நின்று இனமத பேதங்களுக்கு அப்பால் தமது சிந்தனையை விரிவுகொள்ளச் செய்திருந்தனர். புலத்தில் துளிர்த்த தலித் விழிப்புணர்வை அக்கறைகொண்டனர்.  இதனூடாக உருவான அர்த்தமுள்ள, கருத்தியல் ரீதியாக விரிவுகொண்ட எதிர்க்குரல்களை இலக்கியங்களில் பதிவு செய்தனர்.  கவிதை, சிறுகதை எனப் பல இலக்கிய வடிவங்களில் இது பதிவு செய்யப்பட்டது.  அந்த வகையில், சக்கரவர்த்தி, சுகன், போன்றவர்கள் மிக முக்கியமானவர்களாக மேலெழுகின்றனர்.

தான் சார்ந்த சமூகத்திற்கோ, தான் சார்ந்த கருத்து நிலைக்கோ நெருக்கடி வரும்போது மட்டும் மாய்ந்து மாய்ந்து குரல் கொடுப்பதும், தான் சார்ந்த சமூகத்தால் பிற சமூகங்களுக்குப் பிரச்சினை வரும்போது மௌனமாகக் கடந்து செல்வதும், அறிவியல் சார்ந்த, மிக மோசமான இனவாதமாகும். இது பின்னவீனச் செயற்பாடு அல்ல.  இப்படியான நிலையை எடுப்பவர்கள் எழுதும் இலக்கியங்கள் கூட இனவாதச் சாயல் கொண்ட இலக்கியங்கள்தாம்.

ஈழத்தில் தமிழ்த் தரப்பிலும், முஸ்லிம் தரப்பிலும் நிறைந்து கிடக்கும் எதிர்ப்பிலக்கியங்கள், எதிர்ப்புக் கவிதைகளின் பெருந்தொகை இனவாதச் சகதியில் விழுந்து தோய்ந்து எழுந்து நிற்பவைதான். ஆயினும், அவற்றை அந்தச் சமூகத்திற்கு ஏற்பட்ட நெருக்கடிகளினதும், பாதிப்புகளினதும் பதிவுகளாகவே நின்று ஆய்வு செய்வதற்கான ஆவணங்களாக மாத்திரமே பயன்படும். அதற்கப்பால், எதிர்ப்பிலக்கியம் என்ற முழுமையான அர்த்தத்தில் அவற்றை முன்னிறுத்த முடியாது என்பதே எனது திடமான கருத்தாகும்.

இலக்கிய அர்த்தத்தில் அவை வெறுமனே இனவாதத்தைப் புனிதமாக வளர்ப்பதற்கு  உதவியாக இருந்த இலக்கியப் பிரதிகளே அன்றி வேறில்லை.

புலப்பெயர்வு எண்பதுகளின் நடுப்பகுதியில் தீவிரமடைந்தாலும், அன்றிலிருந்து இலக்கிய முயற்சிகள் மேலெழுந்து வந்தாலும் தொண்ணூறுகளிலேயே திரட்சியடைந்த ஓர் இடத்தை அடைகிறது.  ஆக, தொண்ணூறுகளையே புலம்பெயர் இலக்கியத்தினதும் முக்கியமான காலமாகச் சொல்லலாம்.

புலம்பெயர்ந்து போனவர்கள் எழுதிய அனைத்தையும் புலம்பெயர் இலக்கியமாகக் கண்மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ள முடியாது.  மிக மோசமான பிற்போக்குவாதப் பழமையான பிரதிகளும் அங்கிருந்து வெளிவந்தன.   தாயகத்தைப் பிரிந்த ஏக்கம்,  புதிய சூழலில் ஏற்படும் அனுபவங்கள், அதிகாரத்திற்கு எதிரான குரல்கள், பெண்ணியவாதத்தின் கோணத்தில் எழுந்த முற்போக்குக் குரல்கள்,  அதற்குமப்பால்,  இனம், மதம், சாதி, மொழி கடந்து விளிம்பு நிலை மக்களின் மீதான கரிசனம், அனைத்துத் தரப்பிலிருந்தும் எழும் வன்முறை, அடக்குமுறை, பயங்கரவாதம் என அனைத்தையும் எதிர்க்கும், இலக்கியக் குரல்களை மாத்திரமே புலம்பெயர் இலக்கியமாகக் கருத முடியும். புலம்பெயர்ந்து போயிருந்து புலிப் பாசிசத்தை ஆதரித்தும் கொண்டாடியும் வெளிவரும் இலக்கியப் பிரதிகளையும், இனவாத, சாதியவாத மேன்மைகளைத் தூக்கிப் பிடிக்கும் இலக்கியங்களும் புலம்பெயர் இலக்கியங்களாகக் கருதுவதற்குத் தகுதியற்றவை.

‘எங்கு வாழ்ந்தாலும் தமது மண்ணில் வாழ்வதுதான்’ என்பதற்கு நெருக்கமான ஒரு கருத்தை நாற்பத்தி எட்டு ஆண்டுகளாக பிரான்சில் வாழ்ந்துவரும் எழுத்தாளர் ஜூலியோ கொத்தாசர் சொல்வதாக எக்ஸில் இதழொன்றில் படித்த நினைவு வருகிறது. அதைக் குறிப்பிட்டிருந்தவர் மறந்துபோய்விட்டார்.   அவர், நமது வேரும், வேரடி மண்ணும், நமது நினைவுகளும், உணர்வுகளின் சிதறல்களும் வாழ்ந்து கொண்டிருக்கும் ‘வரலாற்று ரீதியிலான நினைவுப் பரப்பை’ச் சொல்கிறார். அது தாயகமாக நினைவில் படிந்து கிடக்கிறது. எத்தேசத்தில் உழன்றாலும், நினைவுகளும், உணர்வுகளும் தாயகத்திலே வசிப்பது என்கிறார். எனக்கு இது குறித்த மாற்றுக் கருத்து இருப்பினும், இந்த இடத்தில்  அதனைப் பதிவு செய்ய விரும்பவில்லை.

தாயக ஏக்கத்தை தமக்குத் தெரிந்த வழிகளில், தம்மால் முடிந்த வகையில் புலம்பெயர் இலக்கியவாதிகள் அனைவரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்திலும், முழு நேரமாகவும் முன்வைத்தனர் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். எனினும், போர் முடிவுற்று பதினோர் ஆண்டுகள் கடந்த பின்னும், தமது தாயக ஏக்கத்திற்கு விடுதலை கொடுக்கக் கூடிய சூழ்நிலை அமைந்த பின்னரும், அவர்கள் தமது தாயக ஏக்கத்தை நிறைவு செய்யவில்லை.  அதை வெறும் சந்தர்ப்பவாத ஏக்கமாகவே பாவிக்க தொடங்கிவிட்டனர்.  இதனூடாக, தாயக ஏக்கம் என்ற போலியான வழிகளினூடாகத் தமிழின் விரிந்த பரப்பிற்குள் உருவான தனிப்போக்கான ‘புலம் பெயர் இலக்கியம்’  என்ற வகையினமே கலகலத்துப் போய் நிற்கிறது. இனி அதற்கு வேறு பெயர். கடைசியில், ‘புலம்பெயர் இலக்கியம்’ அதற்கு வழங்கப்பட்ட ஆழமான உணர்ச்சிகளினதும், அறிவியல் கருத்துரைகளினதும் கூட்டானதும் வளமானதுமான இடமான தாயக ஏக்கம் என்ற நிலைப்பாட்டின் காரணிகள் தோல்வியடைந்து போய்விட்டன. இனி இந்தத் தாயக ஏக்கத்தையும், அதுசார்ந்து உருவான தமிழின் விரிந்த பரப்பிற்குள்ளான ஜனரஞ்சக உணர்வெழுச்சியான அனுதாபங்களும், கழிவிரக்கங்களும் என்ற கோணத்திலிருந்து சிந்திக்கவும் ஆய்வு செய்யவுமான ஓர் எல்லைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

“அத்து மீறல்” தொடரும்

 றியாஸ் குரானா -இலங்கை

றியாஸ் குரானா

(Visited 379 times, 1 visits today)