வசனக்கவிதை- Prose Poem-றியாஸ் குரானா

நீங்கள் வாசிக்கப் போவது மாலை
நேரச் செய்திகள்
கடைசியாகப் பெய்த மழையில்
நனைந்தவர்களின் எண்ணிக்கை 216
ஆக உயர்ந்துள்ளது. இந்த
எண்ணிக்கை மேலும் உயரக்கூடும்
என, கவிதை அறிந்த வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.

மழை சிறிதும் படாமல்,
துளிகளுக்கிடையால் மறுக்கிச்
சென்ற பறவை
பிரமிளினுடையதாகத்தான் இருக்க
வேண்டுமென்று, ஒரு பிரபல விமர்சன
நிபுணர் சற்றுமுன்
அறிவித்திருக்கிறார்.

இதையொட்டி, கற்பனை
வெளியெங்கும் பெரும் பரபரப்பு
நிலவுவதாக பிந்திக் கிடைத்த
செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்தனை இரைச்சலின் மத்தியிலும்,
இரண்டு துளிகள் – மேகத்திலிருந்து
புறப்படும்போதே உரையாடத்
தொடங்கியதாக மேற்கு கவிநிலத்தின்
பேசவல்ல அதிகாரி தெரிவித்தார்.

ஆயினும், துளிகள் இரண்டும் என்ன
பேசிக்கொண்டன என்பதை கூற
மறுத்துவிட்டார்.

***இ.ர.ர. அறியும் குழு, அந்த
உரையாடலை ஒட்டுக்கேட்டதாக,
அந்த உரையாடலை வெளியிட்டிருக்கின்றன.

உரையாடல் :

1. எங்கே போறிங்க ?
2. உங்களப்போலதான்,
தெரியாத இடத்திற்கு.
1. எங்குபோனால் நல்லது என
நினைக்கிறீர்கள்?
2. ஒரு மலரினுள் விழுந்து சிதையாமல்
இருக்க விரும்புகிறேன். நீங்க?
1. குளத்திலோ அல்லது நீர்
நிலைகளிலோ விழுந்து உறவுகளோடு
இணைய விரும்புகிறேன்.
2. விருப்பம் எப்படியிருந்தாலும், நாம்
தவறான இடத்திற்கு போவதுபோல்
ஒரு உணர்வு வருகிறது.
அடுத்த துளி பதிலுரைப்பதற்குள்,
தரையில் விழுந்து சிதறிப்போனதாக
உண்மையறியும் குழு தெரிவிக்கிறது.
இத்துடன் செய்தியறிக்கை
முடிவடைகிறது.

வழமைபோல நாளையும் இதே
நேரத்தில் செய்திகளை வாசிக்கலாம்.
உங்களிடமிருந்து விடைபெறுவது.
றியாஸ் குரானா

*** : (இ.ர.ர.குழு) இலக்கிய ரசனையை ரகசியமாக அறியும் குழு.

றியாஸ் குரானா-இலங்கை

 

(Visited 138 times, 1 visits today)