நேர்காணல்-றியாஸ் குரானா-கோமகன்

“மக்களைக்கொல்லுவதற்கு உற்சாகமூட்டுவதும், கொல்லப்பட்ட மக்களுக்கு இரங்கல் செய்வதும்தானே போரிலக்கியங்களின் வேலை”

றியாஸ் குரானா

கவிதை உங்களைத் தைத்தது எப்படி ?

எனது இளவயது மகிழ்ச்சிகரமானது அல்ல. எனது குடும்பமே அதற்கான காரணமாக அமைந்திருந்தது. எனது சூழலில் நண்பர்கள் அதிகம் இருக்கவுமில்லை. ஆக, எனது தனிமையை கடக்க எனக்கு எந்த வழிகளுமிருக்கவில்லை. விரும்பிய ஒன்றைத் தேர்வு செய்யுமளவு அப்போது நானில்லை. மிகச்சிறுவனாக இருக்கும் நிலையில், புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதுவும் துப்பறியும் நாவல்கள்தான் எனக்கு கிடைத்தன. இலக்கியம் என்றோ, கவிதைகள் என்றோ ஒன்றிருப்பதாக எனக்குத்தெரிந்திருக்கவில்லை. கவிதைக் குடும்பத்தை சாரந்ததாக, அதிகபட்சம் எனக்குத்தெரிந்ததெல்லாம், திரைப்பாடல்களும், பாடநுால்களில் பதியப்பட்டிருந்த செய்யுள் மற்றும் கவிதைகள்தான்.

இந்த வாசிப்பின் தொடர்சியில் ஏதோ ஒரு தருணத்தில்தான், கவிதைப் புத்தகங்கள் எனக்கு அறிமுகமாயின. அதுவும், பின்நாட்களில் வானம்பாடி வகையைச் சேர்ந்தது என பலராலும் அழைக்கப்படும் கவிதைகள்தான் எனக்கு நெருக்கமாயிருந்தன. அவைகளைப் படிக்கும்போது நான் நெருங்கிச் சென்றதுபோலவும், அக்கவிதைகள் என்னை நெருங்கிவந்ததுபோலவும் ஒரு ஈர்ப்பு இருந்ததை இன்று நினைத்துப் பார்க்க முடிகிறது. எனது மூத்தாப்பா வழியாக ஒரு கவிதையுடனும், ஆன்மீகத்துடனும் தொடர்புடைய ஒரு தொடர்சி  இருந்திருக்கிறது. “எலவைக்கனிப் புலவனார்” என எனது மூத்தாப்பாவை அழைப்பார்கள். அதுபோல, சராசரியாக இஸ்லாமிய மையநீரோட்டத்தில் பொதுத்தன்மையாகக் கருதப்படும் “இஸ்லாமிய பின்பற்றுதல்” முறைக்கு சற்று விலகியதாக, அதற்கு முற்றிலும் எதிரான ஒரு பண்பாடாக ”மஃரிபா” எனும் பண்பாட்டு மற்றும் சிந்தனை முறையை எனது குடும்பம் ஈடுபாடு கொண்டதாக இருந்து வந்திருக்கிறது.

இப்படியான காரணங்களும் எனக்கு கவிதை நெருக்கமாக அமைவதற்கு காரணங்களாக இருந்திருக்கலாம். ஆனால், திட்டவட்டமாக இவைதான் காரணங்கள் என சொல்ல முடியாது என்றே நினைக்கிறேன். பின்னர் கவிதைகளை மட்டுமே எழுதமுடியும் என்ற காரணத்தால் அதைத் தொடரவிரும்பியும் இருக்கலாம்.

கவிதை என்பதன் வரைபு இலக்கணம் என்ன ?

இந்தக் கேள்வியை கண்டதும் இரண்டு விடயங்களைச்  செய்ய விரும்பினேன். ஒன்று, மரணித்த ஒருவருக்காக அஞ்சலி செய்வதற்குச் சில நிமிடங்கள் ”மௌனமாக” இருப்போம் அல்லவா அதையும், இரண்டாவதாக, பழைய காதலியை தற்செயலாக கணவனோடு காண நேரும்போது, அவரை நோக்கி நாம் அனுப்பும் புன்நகை இருக்கிறதே, அதே போன்றதொரு புன்நகையையும் கொடுக்கவிரும்புகிறேன்.

கவிதை என்பதற்காக எத்தனையோ வரைவிலக்கணங்கள் இந்த நெடிய வரலாற்றில் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. இந்த ”எத்தனையோ” என்ற சொல்லுக்குள், ஒன்றுக்கு மேற்பட்ட வரைவிலக்கணங்கள் இருந்திருக்கிறது என்ற பொருளை பொதிந்து வைத்திருக்கிறது அல்லவா? ஆக, கவிதை என்ற சொல் அப்படியே இருந்தாலும், அதற்கான வியாக்கியானங்கள் பெருகிக்கொண்டே இருக்கக்கூடியது என்பதுதானே இதன் மறைமுகமான கோரிக்கை. அதேநேரம், கவிதையல்லாதது என்ற ஒன்று இருப்பதாக நம்புவதனால்தான், கவிதை என்ற பயன்பாடு இன்னும் இருக்கிறது என்றும் நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன். எனவே, கவிதையல்லாத ஒன்றிலிருந்து வேறுபடுத்துவதற்கான வரைவிலக்கணத்தைதான் கவிதைக்கான வரைவிலக்கணமாக சொல்ல வேண்டியுமிருக்கிறது அல்லவா?

அதே நேரம், ஒரு பிரதியை கவிதை என்றும், கவிதையல்லாதது என்று வரையறுக்கும் நடைமுறைகளில் எனக்கு அதிக நம்பிக்கை இல்லை என்பதையும் இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ளவும் வேண்டும். ஏனெனில், கவிதைக்கு இருப்பதாக கருதப்படும் பல பண்புகள், கவிதையல்லாத பிரதிகள் என தீர்மானிக்கப்படுபவனவற்றிலும் இருக்கிக்கின்றது. எனவே, அந்த வரையறை குறிப்பிட்டுப்பேசுவதற்கான ஒரு தேவையை நிவர்த்தி செய்ய உதவுமே தவிர கவிதைக்கான மிச்சமற்ற வரையறையாக இருக்கமுடியாது. இதுகுறித்து சொல்லவும் சிந்திக்கவும் இன்னும் அதிகம் இருந்தாலும், உங்கள் கேள்விக்கு ஏதோ ஒருவகையில், பதில்சொல்ல முயற்சித்தால் என்னவகையான பதிலை சொல்ல முடியுமென்று யோசிக்கிறேன். அந்த யோசனையின் நிமித்தமாக ஒரு பதிலை சொல்லிவிட எத்தனிக்கிறேன். அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதை அறிந்த நிலையிலும்தான் இந்தப் பதிலை சொல்கிறேன்.

சாதாரணமானது என நம்பும் எதுவோன்றையும் அசாதரணமாக மாற்றுவது. என்று ஒரு தற்காலிகமான பதிலை இங்கு சொல்லிவைக்கலாம். இது மிக எளிமையானதொரு விளக்கம்தான். ஆனாலும், மிக முக்கியமானதொரு வியாக்கியானமும்கூட.

“நான் பாரதிக்கு முன் பிறந்திருந்தால், எனக்குப் பின் பாரதி என்ற ஒருவர் வந்திருக்கவே மாட்டார்” என்று நீங்கள் சொல்வதன் மூலம் என்ன செய்தியை சொல்ல வருகின்றீர்கள் ?

ஒரு கவிஞனுக்கு தன்நம்பிக்கையும் கர்வமும் அவசியமெனக் கருதினால், இந்தக்கூற்று பெறுமதியானது. அதை மறுத்தால், இந்தக் கூற்று மிக கேவலமானது. இந்தச் சிறிய பதிலே இந்தக் கூற்றை விளங்கவும், அது என்ன சொல்ல முற்படுகிறது என்பதை புரிந்துகொள்ளவும் உதவக்கூடியது என நம்புகிறேன்.

‘கவிதை எழுதுவது எப்படி என்று கற்றுத்தருகின்றேன்’ என்று சொல்லி இருந்தீர்கள். கவிதையை  இயற்றுவதற்கு யாராவது சொல்லிக்கொடுக்க முடியுமா என்ன ?

கவிதை என்ற ஒரு அம்சம் மொழியினுாடாக நிறைவடையக்கூடிய ஒன்று என்றால், அது நான் சொல்வதுபோல, கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுக்கவும் முடியுமான ஒன்றுதான். ஏனெனில் மொழி என்பதே உருவாக்கப்பட்ட ஒன்றுதான். நாம் மொழியினுாடாகவே சிந்திப்பதாக கருதினால், மொழியைப் பயன்படுத்தும் அனைத்து அம்சங்களும் கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுக்கவும் உரியதே. ஒருவர் எழுதவருவதற்கு முன், கவிதை என நம்பப்படும் பிரதிகள், வாய்மொழிச் செய்திகள் போன்றவற்றை அறிந்திராமல், ஏன் மொழியையே அறிந்திராமல் கவிதை என நம்பும் ஒரு பிரதியை எழுதிவிட முடியாது அல்லவா? இன்னும் வேறுவிதமாகச் சொல்வதென்றால், ”கவிதை”என நம்பப்படும் ஒரு விசயம், கற்பனை மட்டுமல்ல, அதை ஒரு பிரதியாக மாற்ற தேவைப்படும் பிரத்தியேகமான செயல்கள் பலவற்றைக்கொண்டது”.

மேலும், அது சொல் பயன்பாடு, உவமை, அமைப்பு (வடிவம்) எடுத்துரைப்பு முறைமை , இப்படி பல தொழில்நுட்ப விடயங்களாலும் உருவாகி நிற்பது. மனதில், சிந்தனைகூட ஒரு ஒழுங்கு முறையில் நேர்பாதையில் தொடர்ந்து வருவதே இல்லை. மனதில் பல நேரங்களில் தோன்றும் கற்பனைகளின் ஒழுங்குபடுத்தப்பட்ட வடிவம்தான் கவிதை. எனவே, நான் சொல்வதை மிகத்தெளிவாகவே சொல்லியிருப்பதாக நினைக்கின்றேன்.

பிறமொழிகளில் இப்படியான ஒரு கேள்வி சில நுாற்றாண்டுகளுக்கு முன்பே, கேட்கப்படுவதிலிருந்து மறைந்துவிட்டது என நினைக்கின்றேன். அங்கு பயிற்சிகள் இருக்கின்றன. பல்கலைக்கழகங்களில்கூட தனியான ஒரு துறையாக இருக்கிறது. ஆனால், பயிற்சி பெறுகின்ற அனைவராலும் முடியும் என சொல்லவரவில்லை என்பதை நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்கும்போதே விளங்கிவைத்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

கவிதைகள் மாற்றங்களுக்கு உட்படுமா ? ஆம் என்றால் எப்படியான மாற்றங்களுக்குட்படும் ?

கவிதை மாற்றங்களுக்குட்படுமா? எனப்  பொதுவாக கேட்கின்றீர்களா? அதாவது, எப்போதும் கவிதை என்பது மாற்றங்களுக்கு உட்படக்கூடியதா? எனக் கேட்கிறீர்களா? அல்லது இன்றிருக்கிற கவிதை மாற்றங்களுக்கு உட்பட கூடிய நிலையில் இருக்கிறதா? எனக்கேட்கிறீர்களா? என்பதை புரிந்துகொள்வதற்கு சிரமமாக இருக்கிறது. அதனால், எனது பதிலை இரண்டையும் தொடர்புபடுத்தி சொல்வது நல்லது என நினைக்கிறேன்.

கவிதை மாற்றங்களுக்கு உட்படுமா என கேட்டால், ஆம் மாற்றங்களுக்கு உட்டபடக்கூடியது. உட்பட்டும் இருக்கிறது. சங்ககாலம் தொடங்கி இன்றுவரை கவிதை என பாவிக்கப்பட்டு வந்த பிரதிகளை திரும்பிப்பார்த்தால் இது இலகுவாக தெரிந்துவிடும். இது ஓரளவு ஏற்றுக்கொள்ளக் கூடிய பதில் எனில், இன்றிருக்கின்ற கவிதை என நம்பப்படும் பிரதிகளும் மாற்றங்களுக்கு உட்படக்கூடியதே.

இதுவரை பலவகையான மாற்றங்கள் கவிதையில் நிகழ்ந்திருந்தாலும், பிரதானமான மாற்றங்கள் நிகழ்துதானிருக்கின்றன. கதையைக் கவிதையாக சொன்னது முதலாவது மாற்றம் என எடுத்துக்கொண்டால், (நமது காவியங்கள் அதற்கு சாட்சி) படிமங்களில் கவிதையை பதியவைத்தது இரண்டாவது மாற்றம். அதாவது, ஒரு பிரதி தன்னளவில் தனது எல்லைக்குள்ளாக ஒரு படிமத்தை உருவாக்குவதும், அதை வாசிக்கும் நபரின் மனதில் காட்சியை உருப்பெறச் செய்வதுத்தான். இதை நமது நவீன கவிதைகள் செய்துகொண்டிருக்கின்றன. புதிதாக இன்று உருவாகியிருக்கும் மாற்றமாக  நான் கருதுவது, கவிதையை கதையாக சொல்வதுதான். ஆனால், இந்தவகை கவிதைகளுக்கு பிரதானமான ஒரு பண்பிருக்கிறது. அனுபவத்தை பிரதிபலித்தல் என்ற கதையை அது நம்புவதில்லை. அதிகம் அக்கறைகொள்வதுமில்லை. புதியதொரு அனுபவத்தை பிறப்பித்தல் என்ற ஒரு விடயத்தை அக்கறை கொள்வதுதான் அந்த பண்பு.

புதுக்கவிதைகள், மரபுசார்கவிதைகள், மற்றும் நவீனகவிதைகள் பற்றிய உங்கள் சுயமதிப்பீடு என்ன?

இதை இப்படி புரிந்துகொள்வது இலகுவானது என நினைக்கிறேன். இலக்கண அமைப்பிற்கு உட்பட வகையிலான கவிதைகள், அதைக்கடந்த நிலையிலுள்ள கவிதைகள். அதாவது, இன்றியமையாத  அம்சங்களை நிச்சயமாக பின்பற்ற வேண்டும் என நம்மீது கட்டளையிடும் கவிதைச் செயற்பாட்டையே ”நான் மரபுக்கவிதை” என அழைக்க விரும்புகிறேன். புதுக்கவிதை, மற்றும் நவீன கவிதை என்ற இரண்டு வகையான விளிப்புக்களும் கிட்டத்தட்ட ஒரேவகையான கவிதைகளைச்  சுட்டவே பயன்படும். ”நவீனம்” என்பதை தமிழில் புதிது என்ற அர்த்தத்திலே பயன்படுத்துகிறார்கள். ஆனால், நவீனத்துவம் என்பது இதிலிருந்து வேறுபட்டது. ஆக இரண்டையும் நவீன கவிதை என்ற ஒற்றைச் சொல்லால் ஒரு வசதிகருதி இங்கு அழைக்கிறேன் .

“மரபுக்கவிதை ” என அழைக்கப்படுவனவற்றிற்கு  இன்றியமையாத சில கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் எனபது ஒரு விதியாக இருந்தது, இன்னும் இருக்கிறது. அந்த விதிமுறைகளை கடைப்பிடிப்பதினுாடகவே தன்னை கவிதை என்ற ஒர்  விடயமாக அடையாளப்படுத்த முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், நவீன கவிதை என்பது அந்த கட்டாய விதிமுறைகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றானது. இப்படி ஆனதன் மிக முக்கியமான காரணம் என்னவெனில், ஒரே மாதிரியான பண்புகளையும் தன்மைகளையும் கொண்டதாக கவிதை என்ற பிரதி இருக்கத்தேவையில்லை என்பதுதான். ஒன்றிலிருந்து ஒன்று முற்றிலும் வேறுபட்ட பிரதிகள் கவிதையாக கண்டடையப்பட வேண்டும் என்பதுதான். அதற்காக புதிது புதிதாக சிந்திக்க வேண்டும் என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டுவதுதான். கற்பனை என்ற ஆற்றலை சிந்திப்பதினுாடாக  அதன் உழைப்பை பெருக்குவதுதான். ஆனால், அப்படியா இங்கு நடந்திருக்கிறது?

ஒரேமாதிரித்தான் இருக்க வேண்டுமென்ற கட்டாய விதிமுறைகள் ஏதுமில்லாது போயினும், ஒரேவகையான தன்மைகளை அதிகம் பின்பற்றக்கூடிய கவிதைகள்தானே பெருகியிருக்கின்றன. ஒன்றிலிருந்து மற்றையது வேறுபடக்கூடிய எத்தனை வகையான கவிதைகளும், அமைப்பு முறைகளும் இங்கு சிந்திக்கப்பட்டிருக்கின்றன? ஆக ஒரு விசயம் நமக்கு தெரிகிறது. இதுபோல் இருந்தால்தான் நவீன கவிதை என்ற மனோபாவம், எழுதப்படாத ஒரு கட்டாய விதியாக கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. விதிமுறைகள் அற்றது நவீன கவிதை எனச் சொன்னாலும், ஒன்றுபோல் அமைந்துவிடக்கூடிய கவிதைகளின் பெருந்தொகையின் பெருக்கமாகவே நவீன கவிதை இருக்கிறது.

நவீன கவிதை என்பதே இன்று ஒரு மரபாக ஆகிவிட்டிருக்கிறது அல்லவா? ஆகையால், மரபுக்கவிதை என்ற சொல், இன்றைய நிலையில் நவீனகவிதையும் சேர்த்து உள்ளடக்குவதாகவே இருக்கும். நவீன கவிதை என பாவிக்கப்படும் பிரதிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட கவிதைச்செயலைத்தானே ”நவீன” என்ற சொல்லினுாடாக குறிப்பிட முடியும். ஆனால், ஏற்கனவே ஒருவகை கவிதைகளை விளிக்க அந்தச் சொல் பாவிக்கப்படுவதால், நவீன கவிதைக்கு அப்பால்…என தற்காலிகமாக ஒரு பயன்பாட்டை முன்வைக்கலாம்.

நவீன கவிதைகளை புரிந்து கொள்ளமுடியவில்லை என்று சொல்வோர் பற்றி உங்களது மதிப்பீடு எப்படியாக இருக்கின்றது?

நவீன கவிதைகளை புரிந்துகொள்ள முடியவில்லை என சொல்பவர்களை மதிக்கிறேன். அவர்களால் முடியவில்லை என்பதை பரிதாபத்துடன் பார்க்கிறேன். இந்த புரியவில்லை என்பதில் இரண்டு விடயங்கள் அடங்கியிருக்கின்றன. ஒன்று பிரதி புரியமுடியாததாக இருக்கவும் வாய்ப்புகள் உண்டு. இரண்டாவதாகப் புரிந்துகொள்ள முடியாத அளவு நிலைமை மோசமானவர்களாக இருக்கவும் வாய்ப்புண்டு.

ஆக, நவீன கவிதையின் மீது மாத்திரமே குற்றம் சாட்டுவதை மதிக்கவில்லை. ஆனால், இப்படி என்னிடம் சொன்னால் அதற்கான பதில் வேறுவிதமானதாக இருக்கும். எப்படி எனில், ”ஏதொன்றும் உங்களுக்கு புரியவில்லையோ, நிச்சயமாக அது உங்களுக்காக எழுதப்பட்டதல்ல”  உங்களால் புரிந்துகொள்ள முடிகிற பிரதிகளை தேர்வு செய்துவிடுங்கள். புரியாத பிரதிகள் என நம்புபவைகளை கட்டாயம் நீங்கள் படித்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் கொலைக்குற்றம் என எந்தச் சட்டங்களும் இல்லை. என்றுதான் கூறுவேன்.

சரி அப்படியே இருக்கட்டும், கவிதைகளை புரியாது எழுதுவதால் யாருக்கு என்ன லாபம் ?

கவிதைகளை யாரும் புரியாது போக வேண்டுமென்று எழுதுவார்களா? அப்படி எழுதப்பட்டால், லெமூரீயாக் கண்டத்தில் வழக்கொழிந்துபோன ஒரு மொழியில்தான் எழுதுவார்கள். கவிதை என்பது லாப நஷ்டம் சார்ந்தது அல்ல என எண்ணுகின்றேன். யாருக்கு புரியாது? அனைவருக்குமா? அல்லது ஒரு சிலருக்கா? புரியவில்லை என சொல்வதாக இருந்தால்கூட அது ஒரு இதழில் பிரசுரமாகவேண்டும். ஆக, அந்த இதழோடு தொடர்புடைய சிலருக்காவது புரிந்திருக்கலாம். அல்லது புரிவதுமாதிரி தோற்றம் தந்திருக்கலாம். இப்படித் தோற்றம் தருவது போதுமானதுதான் என எண்ணுகின்றேன்.

கவிதைகளில் உள்ள  உடல் அரசியல் பற்றி….. ?

நல்லது மிக்க நல்லது என்பதைத்தவிர வேறு என்ன சொல்ல முடியும். காலங்காலமாக பெண்ணுடல்கள் இலக்கியப்பிரதிகளில் எப்படிப் பாவிக்கப்பட்டுவந்தன என்பதும், அவை வெறும் துய்ப்பு நிலை சார்ந்ததுமாக புரிந்துகொள்ளப்பட்டிருந்த நிலைக்கு காரணமான ஆண்மையசிந்தனையை கலைப்பதாகவும் இலக்கியத்தில் அமைவதை நான் அதிகமும் விரும்புகிறேன். பெண்கள் தங்கள் உடலை எழுதவும், கொண்டாடவும், அதற்கான முக்கியத்துவத்தை கோரவுமான ஒரு இலக்கியச் செயற்பாட்டுக்கான ஒரு பக்கமே உடலரசியல் என கவிதைகளில் பயன்பாட்டுக்கு வந்தது.

பிரமிள் எந்த விதத்தில் கவிஞனாக இருக்கின்றார் அல்லது இருக்கவில்லை?

இப்படியானதொரு கேள்வி அவசியப்படாத அளவு, தமிழில் பிரமிள் குறித்து பேசப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. பிரமிளை ஈழத்து கவிஞனாக கடந்தகால ஈழத்து இலக்கிய மனநிலை ஏற்றிருக்கவில்லை. அதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம். அப்படியான மனநிலை இல்லாது போயிருப்பதும், ஆனால்  அவரை பெரும் கவிஞராக பிறிதொரு இடத்தில் பேசப்படுவதும் ஈழத்து இலக்கிய மனநிலைக்கு எப்போதும் சிக்கலானதாகவே இருக்க வாய்ப்புள்ளது.

“நவீனகவிதைகள் தங்கள் இருப்பைத் தொலைத்துவிட்டன”  என்று எதன் அடிப்படையில் சொல்கின்றீர்கள்?

இந்தக் குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன். நான் இருப்பை தொலைத்துவிட்டதாக சொல்லவே இல்லை. அதன் இருப்பு மிகப்பலமாக நிலைகொண்டிருக்கிறது. அப்படி நிலைகொண்டிருப்பதால்தான்  நமக்கு அது மிக நெருக்கமான ஒன்றாக மாறியிருக்கிறது. மிகப் பழக்கப்பட்டுப்போன ஒன்றாக ஆகியிருக்கிறது. இதை வேறுவிதமாக சொல்வதானால், நவீன கவிதை பழசுபட்டுப்போயிருக்கிறது. அதை மீன்றும் ” சுடவைத்து”  உண்ணத்தேவையில்லை. புதிதாகக்  கவிதைகளை சமைப்பதே சிறந்தது. நான் சொன்னது ஒரே ஒரு விடயம்தான், ”நவீன கவிதை காலாவதியாகிவிட்டது” என்பது மட்டும்தான். எப்படி அது நடந்திருக்கிறது என்பதை விரிவாக விவாதித்திருக்கிறேன். அந்தக் கட்டுரையை எதிர்கொள்வதே சரியானது. ஒரு சிறியபதில் அதை நிறைவு செய்யப்போதுமானதல்ல. அந்தக் கட்டுரை முறையாக எதிர்கொள்ளப்படுமானால், அதற்கான விவாதத்தை தொடர நான் தயாரகவே இருக்கிறேன்.

பேராசிரியர் சிவசேகரம் ஈழத்தின் முக்கிய நவீன கவிஞர்களில் ஒருவராக இல்லையென்று ஏன் சொல்கின்றீர்கள்?

முக்கியமான கவிஞர் இல்லை என நான் சொல்வது, அவரின் கவிதைகளை படித்துவருவதனால்தான். வெறும் பிரச்சாரங்கள் நிரம்பியது, அரசியல் கோஷங்கள் நிரம்பியது. ஒரு கட்சியின் களச் செயற்பாட்டுக்காக தெருக்களில் சிறுவர்களால் வினியோகிக்கத்தக் அளவிலுள்ள துண்டுப்பிரசுரங்களுக்கு நிகரானது. அந்த கவிதை மொழி, எடுத்துரைப்பு, என அனைத்தையும் படிக்கும்போது, தினசரி செய்தித்தாளை படிப்பதைப்போன்ற  உணர்வையே தருகின்றது. அதைக் கடந்து வேறு எதுவுமே அதிலில்லை.

சிறுபான்மையின் பக்கம் சாய்வுகொண்ட ஒரு அரசியல் அக்கறை மட்டுமே அவரது கவிதையில் முக்கியமாக எனக்குத் தென்படுகிறது. அவை கவிதையாக நிறைவடைய  இன்னும் வெகுதுாரம் பயணிக்க வேண்டும். சிவசேகரம் கவிஞர் என்பதில் எனக்கு எந்த கருத்து முரண்பாடும் இல்லை. முக்கிய கவிஞர் எனும்போது சற்று தயக்கமாகவே இருக்கிறது. முக்கிய கவிஞராக ஆக்கப்பட்டவர் என்றே நினைக்கிறென். இந்த ”முக்கிய” என்ற சொல்லை கேட்கும்போது ஒரு நகைச்சுவை நினைவுக்கு வருகிறது. தந்தையும் மகனும் இருந்த ஓரிடத்தில், செய்தித்தாள் ஒன்றில் வந்த ஒரு செய்தியை மகன் உரத்து வாசிக்கிறார். ” கொழும்பில் முக்கிய நபர் கைது” என்று தலைப்பை படித்ததும், தந்தை மகனை நோக்கி, ”ஒக்கா… ஒக்கா… இப்பயெல்லாம் கொழும்புல ”முக்கயும்” விடுறாங்க இல்லையோ…?  என்றார்.  ஆமாம்… இலக்கிய வெளியில் சிவசேகரம் ”முக்கிய” கவிஞர்தான்.

புலம்பெயர் நாடுகளில் வெளியாகும் இலக்கியப்படைப்புகள் பற்றி…….?

அனேகமானவை, ஒரே விடயத்தில் ஒத்ததன்மையை கடைப்பிடிக்கின்றன என்றே சொல்ல வேண்டும். அதாகப்பட்டது, அவர்களின் ”இலக்கிய ஆவி” ஈழத்தைச் சுற்றியே அலைகின்றது. தாய் மண் என கருதி களம்பிடித்து திரிவதும், அதற்காகத்  தற்கொலை இலக்கியங்களை எழுதுவதும் என கடும் முசுபாத்திகள்தான் நடந்துகொண்டிருக்கின்றன. புலம் பெயர்ந்த நாடுகளில் அவர்கள் எந்தவித அனுபவங்களையும் பெறவில்லை என்பதுபோலவும், எதுவித வாழ்வியல் சிக்கல்கள் இல்லாததுபோலவும்தான் அங்கிருந்து வெளிவரும் பெரும்பாலான எழுத்துக்கள் இருக்கின்றன. தாய் மண் என ஒப்பாரி வைத்து அழுது புலம்பும் இந்த இலக்கியங்கள், உண்மையில் அருவருப்பூட்டுகின்றன. அவர்கள் உயிராக நம்பும், தனது தாய் மண்ணுக்கு மீண்டும் வந்து வாழத்  தயாரே இல்லை. ஆனால், அதற்காக ஒப்பாரிவைக்க மட்டும் விரும்புவது எவ்வளவு போலித்தனமானது. வெளிநாடுகளில் ”கக்கூசு கழுவதைவிட தாய் மண்ணில் வசிப்பதை கேவலமாக கருதுபவர்கள், தங்களது அரசியல், மற்றும் இலக்கிய ஆவிகளை மட்டும் ஈழத்திலே அலையவிடுவது தந்திரமிக்கது. அந்த வகையில் புலம்பெயர்ந்த என்ற அடைமொழியோடு வரும் அனேக இலக்கியப்பிரதிகள் மீது எனக்கு எந்த மரியாதைகளுமில்லை.

புலம்பெயர் எழுத்துக்களால் ஈழத்து எழுத்துப் பரப்பில் மாற்றங்கள் அல்லது அதிர்வுகள் ஏற்பட்டுள்ளனவா? ஆம் என்றால் எப்படியான அதிர்வுகளை ஏற்படுத்தின?

ஆமாம், ஈழத்து இலக்கியம் என்பது அனேகமாக இங்கு அதிகாரத்தை தன்வசம் வைத்திருந்த பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் என்ற, மக்களுக்கான விடுதலை என்ற பெயரில் மிக மோசமாக மக்களை பயன்படுத்திய அமைப்பிற்கு ஆதரவான குரலை பிறப்பிப்பதுதான் என்ற நிலையை அது எதிர்த்து, அந்த அதிகாரத்திற்கு எதிரான குரலை ஈழத்து இலக்கிய வெளிக்கு அறிமுகம் செய்தது  என்ற வகையில் பாரிய பங்களிப்பு இருக்கத்தான் செய்கிறது.

புலம்பெயர் இலக்கியச்சந்திப்புகள் பற்றி…….. ?

சிங்கள அரசுகளுக்கெதிரான போராட்டத்திற்கு அமைப்புரீதியாக  மாறிய ஆயுதப் போராட்ட இயக்கங்கள், எந்தவகையான கருத்துச் சுதந்திர மறுப்புக்களை ஒரு வன்முறையாக பாவித்ததோ அந்த வன்முறைகளை எதிர்கொண்டு கருத்தச் சுதந்திரத்தை, உரையாடலை ஏற்படுத்த அவை உதவின. அதுவே இந்த இலக்கியச் சந்திப்புக்களின் மிக முக்கியமான கொடை என்பேன்.

யாழ்நகரில் நடைபெற்ற 41 ஆவது இலக்கிய சந்திப்பில் உங்கள் அனுபவம் எப்படியாக இருந்தது?

ஈழத்தில் முதன் முதலாக நிகழ்ந்த மாற்றுக்கருத்தாளர்களின் ஒரு பாரிய இலக்கிய நிகழ்வு என்றவகையில் அதை முக்கியமாகக் கருதுகிறேன். ஆனால், அது நடைபெற இருப்பதாக அறிந்ந நிலையிலும், அதன் பின்னரும், மஹிந்த தலமையிலான சிங்கள அரசின் ஆதரவுக் கருத்தாளர்களின் ஒரு நிகழ்வாக சிலலரால் பார்க்கப்பட்டது, பேசப்பட்டது என்பதும் உண்மையே. ஆனால், அந்தக் கருத்தை ஒரு சாதாரணமான , பொருளற்ற குற்றச்சாட்டாகவே நான் எண்ணுகின்றேன். அது   நடைபெறுவதற்கு முன்பிருந்தே, அதை விளக்க முற்படும் வகையில் எழுதியிருக்கிறேன். அதன் பின்னர் மட்டக்களப்பிலும் ஒரு இலக்கியச் சந்திப்பு நடைபெற்றது. மலையகத்திலும் நடைபெற இருக்கிறது. அனைத்துக்  கருத்துநிலைகளை ஆதரிப்பவர்களுக்குமான ஒரு இடமாக இந்த இலக்கியச் சந்திப்பை, அதன் செயற்பாட்டை எப்போதும் மரியாதையுடன் பார்க்கிறேன். இன்றுவரை, ஒரு அமைப்பாக திரட்சியுறாத, ஒரு இலக்கியச் செயற்பாடு இதுதான் என்ற வகையில் தமிழ் இலக்கியத்தின் விரிந்த பரப்பில் எப்போதும் இதற்கான மதிப்பும், கவனமும் இருக்கும் என எண்ணுகின்றேன்.

இலக்கியவெளியில் சுதந்திரம் என்பது எவ்வாறு வரையறை செய்யப்படுகின்றது ?

இந்தக் கேள்வி சற்று சிக்கலான ஒன்று. வரையறை செய்யப்படும் சுதந்திரம் என்பது உண்மையில் சுதந்திரம் அல்ல என்பதுதான் முக்கியமானது. மனிதர்களை, அவர்களின் செய்களை கட்டுப்படுத்துவதும், தடைசெய்வதும் என்பது, எப்போதும் இருக்கக்கூடிய ஒன்றுதான். அதுபோல, அதை மீறுவதும் நடைபெறக்கூடிய விசயம்தான். சுதந்திரமற்றிருப்பதாக கருதும்வரைதான், ”சுதந்திரம்” என்ற கருத்தாக்கமும் முக்கியமானதாக இருக்கும் அல்லது  பேசுபொருளாக இருக்கும். எனவே, அதை ஒரு கேள்வியாக நீங்கள் முன்வைக்கும்போது, இலக்கிய வெளி சுதந்திரமற்ற ஒன்றாக இருக்கிறது என்பதை மறைமுகமாக உணர்ந்தே  இருக்கிறீர்கள் என்றுதானே பொருள். ஆயினும், பிறதுறைகளைவிட ஒப்பீட்டளவில் சுதந்திரம் என்ற சொல்லுக்கு அதிகமான இடமிருக்கும் ஒரு இடமாக இலக்கியத்தை சொல்ல முடியும். அதற்கான பிரதானமான காரணம், ஒரு இலக்கியப் பிரதி நீதிமன்ற சாட்சியமாக இருப்பதைவிட, வேறுவிதமாக தோற்றம் தரக்கூடிய நிலையில் தன்னிடம் மொழியை பாவிக்க இடம்தருகிறது என்பதுதான்.

பொதுக்களத்தில் அனைத்தும் பேசப்பட வேண்டும் என்பதும், அப்படி பேசிக்கொண்டிருப்பதுதான்  இலக்கியத்தின் சுதந்திரத்தன்மைக்கு முக்கியமான ஒன்று. சமூக வெளி என்பது, முரண்பாடுகளின் உரையாடல்கள் ஓயாது நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒர் வெளி. அனைத்தும் பேசப்பட வேண்டும் என்பதும், அவை பேசப்படாது போகும்போதும்தான் சிக்கல்களே எழுகின்றன.  உரையாடல்கள் நிகழ்வதற்கான தடைகள் என்பதே இங்கு கவனத்திற்கொள்ள வேண்டிய ஒன்று.

உரையாடல் தடைப்படும்போது வன்முறை ஆரம்பிக்கிறது. ஆக, இலக்கியம் என்பது உரையாடல்களை அதிகமும் ஆர்வங்கொள்கிறது. அதேநேரம், மறைபொருளாக தன்னை இலக்கியம் முன்வைப்பதும் அதிகமான சுதந்திரத்தன்மையுடன் இருப்பதுபோல் காட்டிக்கொள்ள வாய்ப்பை தருகின்றது என்பதும் கவனத்திற்குரிய ஒன்றே.

இதற்கு மாறாக உலகளவில் பல விசயங்கள் நடந்தே இருக்கின்றன. நுால்களை அழித்தல் என்பது பெருமளவில் நடந்தே வந்திருக்கின்றன. தமிழிலும், சமண பௌத்த சுவடிகள் நெருப்பிலிடப்பட்டும், நீரில் வீசப்பட்டும் அழிக்கப்பட்டிருக்கின்றன. இலக்கியவாதிகள் கொல்லப்பட்டும், நாடுகடத்தப்பட்டும் இருக்கின்றனர். எந்வொரு இலக்கியப் பிரதியும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருப்பதில்லை. ஓரிடத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவது, பிறிதொரு இடத்தில் நிராகரிக்கப்படுவது சாதாரணமான ஒன்றுதான். ஆனால், இலக்கியவாதிகள் அனைத்தையும் எழுத அவர்களுக்கான விளைவைக்கொண்டிருக்கிறார்கள் என்றவகையில், மற்றைய துறைகளைவிட சற்று சுதந்திரமான ஒரு இடமாகவே கருதுகிறேன். உண்மையில் ”சுதந்திரம்” என்ற கருத்தாக்கம் என்பது, புத்திஜீவிகள் மத்தியில் புழக்கத்திலுள்ள மிக மோசமானஒரு ஏமாற்று உத்தி அவ்வளவுதான்.

நீங்கள் தமிழ் இலக்கியப்பரப்பில் சுதந்திரமாக இருப்பதாக உணருகின்றீர்களா?

இல்லை. ஆனால், நான் அதிக சுதந்திரத்தை எடுத்துக்கொள்வதாக நினைக்கிறேன். எதைப்பற்றியும், அதிக கவனத்தை பொருட்படுத்த நினைப்பதேயில்லை. ஆனாலும், நான் எழுதியவைகளை தவறானது என பின்னர் உணர நேரும்போது, அதற்காக வருத்தங்களை தெரிவித்துக்கொள்ளும் நடைமுறையைக்  கடைப்பிடிக்கிறேன்.

நீங்கள் படைப்பாளி வாசகன் உறவு நிலையை மறுதலிப்பதன் நோக்கம்தான் என்ன?

நான் ஆசிரியர், வாசகர் உறவு முறையை மறுதலிக்கவில்லை. அவர்களுக்கிடையிலான உறவை மிகவும் வலியுறுத்துகிறேன். அதற்கான வாய்ப்பு இன்றைய உலகில் மிகச்சாத்தியமானதும், இலகுவானதாகவுமாக இருக்கிறது. அதை மிகவும் அக்கறை கொள்கிறேன்.

ஆனால், பின்னமைப்பியல் மற்றும் அதற்குப்பிறகான இலக்கியம் குறித்த புரிதலில் மேலெழுந்து வந்த, ஒரு முக்கியமான கருத்தாக்கத்தை விரும்பியிருந்தேன். ஆசிரியரின் மரணம் என ரோலன் பார்த் முன்வைத்த கருத்து அது. அந்தக் கருத்து ஆசிரியருக்கும், வாசகருக்குமிடையிலான மறுதலிப்பை கவனத்திற்கொள்ளும் ஒன்றல்ல. ஒரு பிரதிக்கான அரத்தத்தை கண்டடைவதில் மேற்கொள்ளப்படும் புரிதல் நிலைபற்றிய புலத்திலிருந்து வியாக்கியானம் செய்யப்படுமு் ஒன்று. வரலாற்றில் ஒரு பிரதிமீது ஆசிரியனுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரம் தொடர்பிலான சிக்கல்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் விதமாக பேச்சுக்கு வந்த ஒன்று. மற்றும்படி ஆசிரியர்களுக்கும்  வாசகர்களுக்குமான உறவை நல்லதாகவே கருதுகிறேன்.

இலக்கிய வெளியில் நீங்கள் அடிக்கடி சகபடைப்பாளர்களுடன் முரண்படுவதாக ஓர் குற்றச்சாட்டு உண்டு. இதற்கு உங்கள் பதில் என்ன?

இந்த இடத்தில் ஒரு புன்னகையை தந்துவிட வேண்டும். சகபடைப்பாளர்களுடன் முரண்படுகிறேன் என்பது என்னவகையான குற்றச்சாட்டு என்பது தெளிவாகத்  தெரியவில்லை. ஆனால், நான் இந்தக் கேள்வியை அவர்களை நோக்கி வேறுவிதமாக கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். ஏன் நீங்கள் உங்கள் சகபடைப்பாளிகளுடன் முரண்படாமல் இருக்கிறீர்கள்?  உண்மையில் இதுதான் விடயமே. ஒவ்வொருவரும் முற்றிலும் வேறானவர்களே! ஆகவே முரண்பாடு என்பதுதான் இயல்பான ஒன்று. உடன்படுவதற்கான உரிமை என்பதைப்போல, முரண்படுவதற்கான வாய்ப்புகளே அதிகமிருக்கின்றன. இந்த முரண்பாட்டை ”பகை” என புரிந்துகொள்ளவேண்டிய அவசியமில்லை.

அதிலும், இலக்கியவாதிகள் எனபவர்கள் எப்போதும் தமக்கான கருத்துநிலைகளால் உருவாகியிருப்பவர்கள்தான். அவர்களுக்கு மற்றவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்ட கருத்துநிலைகளை கொண்டிருக்கும் வாய்ப்புகளே அதிகமானது. ஒவ்வொருவரும் தனக்கான தனித்தன்மைகளுடன் இருக்கிறார்கள். தனித்தன்மைகளுடன் இருப்பதென்பதே , மற்றவர்களிலிருந்து வேறுபட்டவர்களாக இருப்பது என்றுதானே அர்த்தம். ஆக, இந்த வேறுபாட்டையும், தனித்தன்மையும் இலக்கியச் செயப்பாட்டாளர்களின் மீது ஏற்றி வாசிக்கும்போது ”முரண்பாடு” என்ற விசயம் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றாகவே இருக்கும். வேறாக இல்லது, முரண்பாடுகளுடன் இருக்கும் உரிமையை மதிப்பதும் மிக முக்கியமான ஒன்றுதான். ஆனால், அந்த முரண்பாட்டின்காரணமாக, பகைவர்களாக ஆக்கப்படுவதை நான் மிகவும் கண்டிக்கிறேன். தவிர, உடன்பாடுகளுடன் இருப்பது என்பது, சிந்திக்காமலிருக்கிறோம் என்பதை மறைமுகமாக சொல்வதுமாகும். சிந்திப்பவர்களால் கூட்டத்தோடு கோவிந்தா போட முடியுமென்று நினைக்கிறீர்களா என்ன?  இப்படியான ஒரு கேள்வியை என்னிடம் நீங்கள் கேட்டிருப்பதை பெரும் பாராட்டாகவே கருதுகிறேன்.

படைப்பாளியானவன் சக படைப்பாளர்கள் மீது தொடர்ந்தும் அறம் படிப்பது மலினப்பட்ட விளம்பர உத்தி என்று எடுத்துக் கொள்ளலாமா?

விளம்பர உத்திகள் பல இருக்கின்றன. ஆனால், அறம்படிப்பது பற்றி எனக்கு தெரியவில்லை. அறம்படிப்பவர்கள் யாரும் தெரியவரும்போது கேட்டுச்  சொல்கின்றேன். ஆனால், சக படைப்பாளிகள்மீது என அழுத்தம் கொடுக்கப்பட்டிருப்பதால், நான் அப்படி நடந்துகொள்கிறேன் என நீங்கள் ஊகிப்பதுமாதிரி ஒரு தோற்றம் வருகிறது. அப்படி தோற்றம் வருவதை நான் மகிழ்வோடு ஏற்கிறேன். அது உங்கள் பிரச்சினையல்லவா? உங்கள் பிரச்சினையையும் நான் மதிக்கின்றேன்.

இலக்கியப்பரப்பில் இருக்கின்ற குழுமச்செயல்பாடுகளால் இலக்கியத்தின் தரம் முன்னோக்கி நகர்த்தப்படும் என்று எண்ணுகின்றீர்களா?

இலக்கியச் செயற்பாடு என்பது பன்மைத்தன்மையிலானது. அது ஒற்றைக் கருத்தைகொண்டதல்ல. அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பொதுக்கருத்தை கடைப்பிடிக்கவும் வலியுறுத்தவும் தேவையற்ற ஒன்று. பலவகையான கருத்துநிலைககளும், இலக்கியச்செயற்பாடுகளும் இருப்பதை அங்கிகரிக்கும் மனநிலைவரும்போது இந்தக் குழுச்செயற்பாடு என்ற அடையாளமிடப்பட்ட சொல் மறைந்துவிட வாய்ப்புள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட, ஏன் முடியுமானவரை அதிகம் அதிகமான பன்மையான கருத்துநிலைகளைக்கொண்ட இலக்கிய இயக்கங்களும், வகைமைகளும் செயற்பாடுகளும் மிகவும் அவசியமானது. அதே நேரம் அனைத்துக்குமிடையிலான உரையாடல்களும் அவசியமானதே. அதுவே, இலக்கியத்தை அதன் பன்மைத்தன்மையை, மற்றமைகளை மதிக்கின்ற பொருட்படுத்துகின்ற இடம்வரை இட்டுச் செல்லும். அதுவே, இலக்கிய வெளியில் ஆரோக்கியமானதும்கூட. இலக்கிய வளர்ச்சி என்பதில் எனக்கு எப்போதும் உடன்பாடு இல்லை. இலக்கியத் தொடர்ச்சி என்பதையே நான் அதிகமும் நம்புகிறேன். வளர்ச்சி என்பது பயனீட்டுதல் போன்ற  மனநிலைகளை இலக்கியத்தில் கலக்கும் ஒரு நடைமுறையன்றி வேறில்லை.

போரிலக்கியம் பற்றி….?

போரிலக்கியங்கள் பற்றி ஒரு மோசமான மதிப்பீடே என்னிடமிருக்கிறது. இது நெடுங்காலமாக இருந்த ஒன்றல்ல. ஆரம்பகாலங்களில் அதன்மீது பெரும்காதல் உருவாகியிருந்தது. பின்னர் நான் அதிலிருந்து துாரமாகத்தொடங்கினேன். அதற்குப் பல காரணங்கள் உண்டு. கருத்துநிலை மாற்றம். போராடுவதாக சொல்லிக்கொண்ட அமைப்புகள்மீதான விமர்சனங்கள் எனப்  பலதைச் சொல்லலாம்.

மக்களுக்காக போராடுவதாகச் சொல்லப்பட்ட குறித்த அமைப்புக்களுக்கான பிராச்சார உத்திகளாக இலக்கியங்கள் மாற்றமடையும்போது, அவைகளின்மீதிருந்த நான் மதிப்பை விலக்கிக்கொள்கிறேன். அதேநேரம், போராட்டங்களின் மீது எனக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை. அதைக் கொலைத்தொழிலாக மாற்றப்படுவதை நான் விரும்பவில்லை. தனிப்பட்ட முறையில், கொல்லுவதை நான் அடிப்படையில் வெறுக்கிறேன். எதன் நிமித்தமாக இருப்பினும். உலகளவில் போராட்டங்கள் எனக்கிளம்பிய அனைத்து அமைப்புக்களும் பெரும் கொலைகளை நிகழ்த்தித்தானிருக்கின்றன. கொலை செய்பவர்களை புனிதர்களாகவும், தியாகிகளாகவும் முன்வைத்து, கொலைசெய்வதற்கான ஆசைகளையூட்டியிருக்கின்றன. என்னைப் பொறுத்தவரையில், வாழ்வு என்பதே போராட்டம்தான். அதன் அனைத்து பகுதிகளிலும் போராட்டங்கள் நிரம்பியிருக்கின்றன. விடுதலை என்ற பெயரில், கொலைசெய்வதற்கான பலவழிகளைக் கண்டுபிடித்து செயற்படுத்த முற்படும் போராட்ட அமைப்புக்களையும், அந்த அமைப்புக்களுக்கு அல்லது, அதன் கருத்துக்களுக்கு சாய்வான வகையில் எழுதிக்குவிக்கப்படும் இலக்கியங்களின்மீது எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால், அவைகளை இலக்கியமாக மதிக்கிறேன். போராட்ட அமைப்புகளை மட்டுமல்ல, அரசுகளையும் நான் இந்தக் கண்ணோட்டதில்தான் பார்க்கின்றேன். ஆக, அரசுகளின் கொலைச் செயற்பாட்டை ஆதரிக்கும் இலக்கியங்களும் அந்தவகையானதுதான். சுருக்கமாகச் சொல்வதானால், மக்களைக்கொல்லுவதற்கு (எதிரிகளை) உற்சாகமூட்டுவதும், கொல்லப்பட்ட மக்களுக்கு (ஆதரவாளர்கள்)  இரங்கல் செய்வதும்தானே போரிலக்கியங்களின் வேலை.

‘இலக்கியப் பிரதி ஒரு அரசியல் சம்பவத்தை பிரதிபலிக்க முடியாது’ என்று அண்மையில் நீங்கள் குறிப்பிட்டுளீர்கள். அப்படியானால் நீங்கள் போர் இலக்கியத்தை மறுதலிக்கின்றீர்களா?

இலக்கியத்தை அரசுகள் தொடங்கி, போராட்ட அமைப்புகள் வரை, ஏன் கல்வி நிறுவனங்கள் என சமூகத்திலுள்ள பலவகையான நிறுவனங்கள் பயன்படுத்தியிருக்கின்றன. அப்படியே  போருடன் தொடர்புடைய அமைப்புக்களும், அரசுகளும் அதைப் பயன்படுத்தியிருக்கின்றன.  அப்படிப் பயன்படுத்துவதினுாடாக ”போர்இலக்கியம்” என்ற ஒன்று கட்டமைக்கப்பட்டும்  இருக்கின்றது . இது இலக்கியத்தில் ஒருவகைமை அல்ல. இலக்கியம் சார்ந்த கருத்துநிலைகளை உள்ளடக்கிய ஒரு போக்கு மாத்திரமே. ஆக, குறித்த வகையான தன்மைகளை கொண்டிருக்கும் பிரதிகளை பிற இலக்கியப்பிரதிகளில் இருந்து வேறுபடுத்தி ”போர்இலக்கியம்” என முன்வைக்க வாய்ப்பாக இருந்தது.

போர் என்பது அதிக பணத்தை தருகின்ற ஒருவிடயம். அதுபோல, உலகளவில் மிக முக்கியமான பிரச்சினையாகப்  பேசப்படும் ஒருவிடயம். மறுதலையாகச் சொல்வதானால், போர் என்பது பெரும் கவரச்சிகரமான ஒரு மனித நடத்தை. அதை மனிதர்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதன்மேல் கவர்ந்து இழுக்கப்படுகிறார்கள். கொல்லவும் கொல்லப்படவுமான மனிதவிருப்பம் என்பது மிகவும் பெரியது. உளவியல்ரீதியாகவும் பெரும் கவரச்சிகரமானது. அதை எதிர்ப்பதாக நாம் உரத்துச் சொல்லிக்கொண்டிருந்தாலும், அதையே மனிதர்கள் விரும்புகிறார்கள் என்பதற்கு உலக வரலாறே சாட்சியமானது. அது போர் இலக்கியத்தின் ஒரு பகுதியை பயன்படுத்தியது. அல்லது, இலக்கியத்தின் ஒரு பகுதி போரின்பக்கம் செயற்பட்டது. ஆகவே, அது ஒரு சமூக உண்மை. அதை ஏன் நான் மறுதலிக்க வேண்டும்?  ஆனால், போர் பயன்படுத்தியவை மட்டுமே குறித்த காலகட்டத்தின் இலக்கியம் என்ற கருத்தைமட்டுமே நான் எதிர்க்கிறேன். மற்றும்படி  ஏதுமில்லை.

ஈழத்தில் துவக்குகள் பேசிய காலத்திலும் அதன் பின்னர் பேசாத காலத்திலும் பேனைகளின் இருப்பானது எப்படியாக இருந்தது அல்லது இருக்கின்றது?

பெரியளவிலான மாற்றங்கள் இருக்கின்றன.  மக்களின் விடுதலைக்காகப் போராடுவதாக அறிவித்துக்கொண்ட அமைப்புக்கள்தான், இந்த பேனைகளுகெதிரான பல கொடூரங்களை நிகழ்த்தியிருக்கின்றன. இப்போது அப்படியான நிலவரங்கள் இல்லை.

எதன் அடிப்படியில் “தமிழ் இலக்கியச் செயற்பாட்டாளர்களிடம் கற்பனை இல்லை.” என்று சொல்கின்றீர்கள் ?

இது ஒர்  மர்மமான கூற்று அல்ல என்றுதான் நான் எண்ணுகின்றேன். அத்துடன் இதுவோர் மிகவும் வெளிப்படையான கூற்று ஒன்று. இதை ஊகிப்பது அவ்வளவு கடினமானதல்ல.  இன்று இலக்கியம் என கருதப்படும் பல அம்சங்கள், கருத்துநிலைகள் போன்றவை தமிழ் இலக்கியச் செயற்பாட்டாளர்களின் கற்பனையால் வந்தவை அல்ல. உதாரணமாக, நாவல், சிறுகதை, நவீன கவிதை, உரைநடை எனத்தொடங்கி, இலக்கியத்தோடு தொடர்புடையதாக கருதப்படும், கருத்துநிலைகள் கோட்பாடுகள் உட்பட, தமிழ் இலக்கியச் செயற்பாட்டாளர்களின் கற்பனை சாரந்த ஒன்றல்ல. அது வேறெங்கோ கற்பனை செய்யப்பட்டு சிந்தனையாக தமிழுக்கு வந்தவைதான். அனேகமாக தொல்காப்பியத்தோடு பல விடயங்கள் கற்பனை செய்யப்படுவது நின்றுபோயிருக்கிறது. தமிழர்களின் தத்துவங்கள் பற்றியெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால், இப்போது அவைகள்கூட இல்லை.

இலக்கியத்தை புரிந்துகொள்வதில் ஒரு புதிய கற்பனையை ஈழத்து இலக்கியச் செயற்பாட்டாளர், மு.தளையசிங்கம் முயற்சித்திருப்பார். அதை ”மெய்யுள்” என நாமறிவோம். இதுபோன்ற சில ஆரம்பங்களைத்தவிர – தமிழ் இலக்கியச் செயற்பாட்டாளர்கள் எதைத்தான் கற்பனை செய்திருக்கிறார்கள்?  தமிழ் இலக்கியச் செயற்பாட்டாளர்கள் கற்பனை செய்து உருவாக்குபவர்களாக இல்லாது, எங்கோ கற்பனை செய்தவற்றை பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள். அதைத்தான் இப்படிக் குறிப்பிட்டேன்.

இலக்கியப்பரப்பில் பின் நவீனத்துவத்திற்குப் பிறகு கோட்பாடுகள் அல்லது சித்தாந்தங்கள் என்று ஏதாவது உருவாகியிருக்கின்றதா?

பின்நவீனத்துவம் என்பது ஒரு கோட்பாடோ, சித்தாந்தமோ அல்ல. மாறாக நவீனத்துவத்தின் உச்ச விளைவுகளையும், அதனால் கைவிடப்பட்ட பல நுண்மையான அம்சங்களையும் உள்ளெடுத்துக்கொண்டு இலக்கியப் பிரதிகளில் செயற்படுத்த முனைந்துகொண்டிருக்கும் ஒர்  விடயம்தான் அது. பல நுண்மையான கூறுகள், அதுவும் ஒன்றோடொன்று முற்றிலும் முரண்படக்கூடிய கூறுகளை உள்ளடக்கிய ஒரு தொகுப்பான விடயங்களை பின்நவீனத்துவம் என அழைக்கின்றனர்.  இலக்கியப் பிரதிகளில் இதன்பயன்பாடு பலவகையிலானதாக அமைந்திருக்கிறது. பின்நவீனத்துவம் ஒரு கருத்தாக்கம் அல்ல என்பதால், அதன்பிறகு எந்த சித்தாந்தங்கள் வந்திருக்கின்றன என்பது முக்கியமான விடயமல்ல. இலக்கியப் பிரதியானது , பிறகருத்தாக்கங்களை தன்னோடு பொருத்திப்பார்த்து அதனுாடாக ஒரு அம்சத்தை பேச்சுக்குக்கொண்டுவர ஏதுவான வழிகளைக்கொண்டிருக்கிறது என்றவகையில், எந்தக் கருத்தாக்கங்களையும் இலக்கியம் என நம்பப்படும் ஒன்றோடு செயற்படுத்திப்பார்க்கலாம்.  அனுமான யதார்த்த வாதம், அதிநவீனத்துவம், மிஷெல் ஸெர்ரின் இயற்கை ஒப்பந்தம், கடந்த ஆண்டின் பிரதான சொல்லாக கண்டுபிடிக்கப்பட்ட ”பின்னைய உண்மை” போன்ற பலகருத்துநிலைகளை இலக்கியப்பிரதிகளோ வினையாற்ற செய்யும்படி முயற்சித்திருக்கிறார்கள் என்பது இங்கு முக்கியமான ஒன்றுதான்.

இலக்கியம் எந்தவகையில் ஆபத்தான செயல்பாடு என்று சொல்கின்றீர்கள்?

இலக்கியம் அதிகம் கட்டுப்பாடுகளற்றது. அதே நேரம் தேர்வுகளுக்கு அப்பாலானது. எதுவொன்றையும் குறியிடாக மறைத்துவைக்க வாய்ப்பைக்கொண்டது. இவைகளால்தான் அது ஆபத்தானது எனகிறேன்.  நிலவுகிறசூழலை அப்படியே பிரதிபலிப்பதும் இலக்கியமாக பாவிக்கப்படுகிறது. அதேநேரம் அச்சூழலை எதிர்க்கும் பிரதிகளும் இலக்கியமாக பாவிக்கப்படுகிறது. இலக்கியமானது அதிகாரத்திற்கு ஆதரவாகவும், அதற்தெதிராகவும் இருக்கிறது. எப்படியும்தன்னால் இருக்கமுடியும் என்ற வாய்ப்புக்களைக்கொண்டிருக்கும் மிக முக்கியமான ஒரு செயற்பாடு இலக்கியத்திற்கு வாய்த்திருக்கிறது என்றவகையில் அது ஆபத்தானதும்கூட.

இலக்கியத்துக்கு தரம் என்று ஏதாவது உண்டா? ஆம் என்றால் அதை எப்படி நிர்ணயம் செய்து கொள்வது?

இலக்கியத்துக்குத் தரம் இருக்கிறது. ஆனால், ஒற்றைப்படையான தரம் என்று இல்லை. பலவகையான தரங்கள் என அது சாத்தியப்படக்கூடியது. அது ஒருவர் எந்தவகையான தரத்தை தேர்வுசெய்கிறார் என்பதை பற்றியது. தேர்வு செய்வது சாதாரணமான ஒன்று ஆனால் அந்தத்தரத்தை  எப்படித்தேர்வு செய்தேன் என்ற வழிமுறைகளை முன்வைக்கும் தேவையைத் தன்னோடுகொண்டிருக்கும் ஒருவிடயம் அது. அதாவது, தரம் என்ற சொல்லை நாம் அதிகமும் சந்திக்கிறோம். அதைவிட, அதில் வித்தியாசங்கள்தான் இருக்கிறது என சொல்ல அதிகமும் விரும்புகிறேன். ஒன்றிலிருந்து மற்றையது எப்படி வேறுபடுகிறது என்பதும், குறித்த ஒரு பிரதி என்ன செய்ய முற்படுகிறது என்பதும்தான் பிரதியை அணுகுவதற்கான விடயம். தரம் என்பது ஒரு ஆரம்பநிலை புரிதல்மட்டும்தான். ஒரு எல்லைக்குமேல் அது தேவையே இல்லை. அதேநேரம் தரம் என்ற நிலையில் ஓர் பிரதி புறமொதுக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது என்பதனாலும் இந்த தரம் என்ற விடயத்தை நான் பொருட்படுத்துவதே இல்லை. இதை வேறுவகையில் சொல்வதாக இருந்தால், பல பிரதிகளை ஒப்பிட்டு அதற்கிடையிலான ஒப்பீட்டில் ஒரு பிரதிக்குத் தரச்சான்றிதழ் வழங்குவதை நான் விரும்பவில்லையே தவிர, அது தேவையில்லை என கறாராக சொல்ல விருப்பமில்லை. ஒவ்வொரு பிரதிக்குமென்று ஒவ்வொரு தரம் இருக்கிறது என்பதை நான் ஏற்கின்றேன்.

படைப்புகள் பற்றிய பட்டியல்கள் சமகாலத்தில் அதிகம் சர்ச்சைகளுக்கு உள்ளாகின்றன. இப்படியான பட்டியல்கள் எதற்காக?

பட்டியல்கள் அத்தியாவசியமானவை. அதனுாடாகத்தான், அந்தப் பட்டியலை முன்வைத்தவர்களின் இலக்கியம் குறித்த புரிதல்களை அவதானிக்க வாய்ப்புண்டு. அதுபோல, அதிகமான பட்டியல்கள் வெளிவரவேண்டும். அந்தப் பட்டியல்களை ஏன் தயாரித்தோம் என்ற கதைகளையும் சொல்லி, அதற்கான காரணங்களையும் முன்வைக்க வேண்டும். ஆக. பல பட்டியல்களினுாடாக ஒரு உரையாடல் சாத்தியப்பட வாய்ப்புள்ளது. ஆனால், இங்கு அப்படியல்ல. பட்டியலில் பெயர் இடம்பெற்றாலே அநேகர் மகிழ்ந்து பொங்கிப்போய்விடுகிறார்கள். அந்தப் பட்டியலைத் தயாரித்தவர், இலக்கியத்தை தீர்மானிக்கத்தக்க முக்கியநபராக கருதப்பட்டுவிடுகிறார். இதனால் உரையாடல் சாத்தியப்படுவதே இல்லை. இது ஒரு வகை இலக்கியச் சொறிதல் முறை என்று வரையறை செய்துகொள்ளலாம். சொறியும்போது ஏற்படும் சுகத்துக்காகவும், சொறிவதற்கான அதிகாரம் தனக்கிருக்கிறது என்ற பெருமிதத்திற்காகவும் நடைபெறுவது. ஆகவே மாறி மாறிச்சொறிவதும் இங்கு நிகழ்கின்ற ஒன்றுதான். இலக்கியத்தில்” சொறிபவர்களும்” அவசியம்தான் என எண்ணுகின்றேன் இல்லாவிட்டால்  பலரின் அரிப்புக்களை நிறுத்த முடியாது போகலாம்.

‘இலக்கியம் குறித்து இன்று அதிகம் உரையாடப்படுவதில்லை’ என்று நீங்கள் சொல்வதையிட்டு …………?

இலக்கியவாதிகள் குறித்தோ, இலக்கியப் பிரதிகள் குறித்தோதான் அதிகம் பேசுகின்றார்கள். அதுவும், நீண்டகாலமாக பேசப்படும் ஒரு பழமையான கருத்துநிலைகளை முன்வைத்தே தொடர்ந்தும் பேசுகின்றார்கள். அதைக் கடந்து எந்த உரையாடலும் இல்லைதான். இலக்கியம் என விளிக்கப்படுவது, அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்று. அது கருத்துநிலைகளையும் பொருட்படுத்தி உரையாடும் ஒன்று, அந்தவகையான பேச்சுக்கள் இல்லை என்றுதான் நான் குறிப்பிட்டிருக்கிறேன். மற்றும்படி, அனைத்து வெளிகளிலும் இலக்கியமும், இலக்கியவாதிகளும் எல்லையில்லாமல் பெருகியிருக்கிறார்கள் என்பதும் உண்மை.

எந்தவகையில் நாவல்கள் இன்று பெரும் சவால்களை எதிர்கொள்கின்றன?

நாவல்களின் இடத்தை உண்மையில் சினிமா எடுத்துக்கொண்டிருக்கிறது.  இந்த நிலமை அருகிவரும் ஒரு இலக்கிய வடிவமாக மாற வாய்ப்புள்ளது. தலையணை சைஸ் நாவல்களை வாசிக்க இப்போது யாருக்கும் விருப்பமில்லை என்பதும் முக்கியமானதுதான்.  மிலோராட் பாவிச் ” நாவல்களின் கடைசி நுாறு வாசகர்களை” எதிர்பாரத்திருக்கிறேன் எனச் சொல்லியது இந்த இடத்தில்எனக்கு  நினைவுக்குவருகிறது. நாவலின் வடிவங்களை அவர் முடியுமானவரை புதிதாக சிந்தித்திருப்பார். ஒரேவகையான முறையில், கதைகளை சொல்லுவதை அவர் விரும்பவில்லை என்பதும் முக்கியமான ஒன்று.

அனேகமாக நாவல்கள் கதைகளை அதிகமும் பெருக்கக்கூடியன. அது நினைவும், புனைவும் இணைந்த ஒருவகை விபத்து. அதை எதிர்கொள்ளுதல் என்பது, வெறுமனே கதைகளை கேட்க இருக்கும் ஆவல் மட்டுமேயானதல்ல. வரலாற்றில் கதைகள் எப்படியாக இருந்திருக்கின்றன. எப்படியாக சொல்லப்பட்டிருக்கின்றன. எந்தவகையான வடிவங்களில் அவைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பவைகளோடு, கதை என்ன செய்ய முற்படுகின்றன என்பதை அறிந்து கொள்வதற்கானதுமான ஒரு நடைமுறைதான் என நம்புகிறவர்களுக்கு எனது கூற்று மிகச் சரியான ஒன்று என்றே தோன்ற வாய்ப்புள்ளது. சொல்லப்படும் அனைத்தும் கதைகளுமல்ல.  தனக்குத் தெரிந்த ஒரு கதையை அல்லது தெரிந்ததாக நம்பும் ஒரு கதையைப் பழகிப்போன ஒருவடிவத்தில் , பரீட்சயமான ஒர்  எடுத்துரைப்பு முறையில் , எழுதுகின்றேன்  பேர்வழி என கொட்டிவைப்பதும் நாவல்தான். அனேகமாக, இருநுாறு ஆண்டுகளை கொண்ட ஒரு வடிவமாக இருந்தாலும், பல் குரல்தன்மைக்கும், பலவடிவங்களுக்கும், பல்வேறான உத்திகளுக்கும் தன்னை ஒப்புக்கொடுத்து வந்திருக்கிறது நாவல். பழகிப்போன ஒருவடிவ அமைப்பில் சலிப்பை ஏற்படுத்தும்போது, அதன் வடிவத்தில் மாற்றங்களைச் செய்து நாவலை உருவாக்கி அதன் பார்வையாளர்களை இழுத்துக்கொண்டுதான் வந்திருக்கிறது. ஆனால், அப்படியான முயற்சிகள் குறைந்திருக்கும் தமிழ்மொழியில் செயற்படும் ஒருவர் இதைவிடச் சிறந்த ஒர்  பார்வையை நாவல்கள் குறித்து சொல்லிவிடுவதைத்தவிர வேறென்ன தேர்வுகள் இருக்க முடியும்?

பொதுசன இலக்கியம்பற்றி……..?

ஒரு சமூகம் என்பது பலவகையான அதிலும், எதிரும் புதிருமான அம்சங்களால் ஆனது எனில், பலவகையான இலக்கியச் செயற்பாடுகளும் அவசியமானதே. அதற்கான தேவைகளும் சமூகத்தில் இருக்கிறது. ஆகவே, பொசன இலக்கியம் என்றவகையில், குறித்த வகை இலக்கியப் பிரதிகள் புறமொதுக்கப்படுவதையும், அவை இலக்கியமே அல்ல என அதன்மீது தீராத வன்மங்களை கட்டவிழ்த்துவிடுவதையும் நான் சரியானதாகப்  பாரக்கவில்லை. ஆனால், பலவகையான இலக்கியங்கள் சமூகத்தில் இருக்கிறது என்றேன் அல்லவா, அதில் எனது தேர்வு என்பது நிச்சயமாக பொதுசன இலக்கியமாக இல்லை என்பதுதான். அவை இருப்பதற்கும், அதை எழுதுவதற்கானதுமான உரிமையையும் தேவையையும் மதிக்கின்றேனே ஒழிய, அதன் காரணங்களால், அவைகளை தேர்வு செய்து நான் இயங்கவேண்டும் என்ற கட்டாயமில்லை என்பதையும், பொதுசன இலக்கியம் என்பதற்கப்பாலும் இலக்கியச் செயற்பாடுகள் உண்டு. அதன் தேவையும் அவசியமானது என்பதை பொதுசன இலக்கியத்தில் இயங்குபவர்களும் புரிந்துகொள்ள வேண்டுமென்று எண்ணுகின்றேன்.

விருதுகள் ஓர் படைப்பாளியின் ஆக்குதிறனை மழுங்கடிக்குமா ?

இல்லை.மழுங்கடிக்காது. அதேநேரம் அது உயர்த்தவும் செய்யாது.  விருதுகள் என்பது இலக்கிய செயற்பாடுகளில் நடந்தேறக்கூடிய ஒருவகை உபவிளைவுதான். அதை ஏற்பதும் ஏற்காதுவிடுவதும் இலக்கியச் செயற்பாட்டாளர்களின் புரிதலுடன் சார்ந்தது. சிலர் அதை பெரும் அங்கீகாரமாகக் கருதவும் வாய்ப்புள்ளது. அதில் எந்தப் பிரச்சினைகளும் இல்லை.  இங்கு ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன். ஒரு முட்டாள் உங்களைப் பார்த்து நீங்கள் பெரும் அறிவாளி எனச் சொன்னால் உங்களுக்கு சந்தோசமாக இருக்குமா?  ஒரு முட்டாள் பாராட்டுமளவுதான் நீங்கள் புத்திசாலியாக இருப்பதாக வருத்தமாக இருக்குமா? விருதுகளும் அப்படிப்பட்டதுதான். அதைப் பெற்றுக்கொள்ளும் எழுத்தாளர்களும், அதை வழங்கும் நிறுவனங்களையும் பொறுத்தது இது. ஆனால், எனக்கு விருது கிடைப்பதாக இருந்தால், அதனுடன் எவ்வளவு பணம் தருகிறார்கள் என்றே யோசிப்பேன். அதிக பணம் வருவதாக இருந்தால், ரமணிச்சந்திரன் பேரில் விருதுகிடைத்தாலும் பெற்றுக்கொள்வேன். ஏன் உலகில் மிகச் சிறந்த முட்டாள் என்ற பட்டம் தருவதாக இருந்தாலும் பெற்றுகொள்வேன். ஏனெனில், பணம் என்பது என் தேவையோடு சார்ந்தது. அதனிடம் நான் வறுமையாக நிற்கிறேன். ஆனால், பணத்திற்காக எதையும் செய்வேன் என்று அர்த்தமல்ல, எனது இலக்கியச் செய்பாடு தொடர்பில், ஒரு விருது வழங்கப்படுவதாக இருந்தால் மட்டுமே இந்த தேர்வு.

உயிருடன் இருக்கும் ஓர் இலக்கியனின் பெயரில் வழங்கப்படும் விருதுகள் பற்றி……?

விருது என்பது பெரிய விடயமே இல்லை எனும்பொழுது, செத்தவர் பேரில் கொடுத்தாலென்ன.. உயிருடன் இருப்பவராக இருந்தால்தான் என்ன?

படைப்பாளிகள் தாங்கள் பெற்ற விருதுகளை மறுதலிப்பதும் அல்லது மீளக்கொடுப்பதும் தங்களை பிரபல்யப்படுத்தவே என்றவோர் கருத்து உண்டு. இது பற்றி ……..?

இருக்கலாம்.  பிரபலப்படுத்துவதற்கு இந்த உத்தியை பயன்படுத்துவதென்றால் ஒருவகையில் நல்லதுதான். யாரையும் வால்பிடித்து தன்னை பிரபலப்படுத்துவதைவிட இது சிறப்பானதுதான். ஆனால், அதை திருப்பிக்கொடுக்கும்போது, அதனுடன் பெற்றுக்கொண்ட பணத்தையும் சேர்த்துக்  கொடுப்பதையே நான் சிறந்தது என்பேன். திருப்பிக்கொடுப்பது என்பது அதுதானே..  அப்படிச் செயற்படாவிட்டால் அது கேவலமானது.  அண்மையில், எனது தோழரும் எழுத்தாளருமான லக்ஷ்மி சரவணக்குமார், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தனக்கு கிடைத்த விருதை திருப்பிக்கொடுத்திருந்தார். அப்போதும், நான் இந்தக் கருத்தை வலியுறுத்தியிருந்தேன். நான் அவரிடம் கேட்டது “பணத்தையும் திருப்பிக்கொடுத்தீர்களா”? என்று.  அதன் பின்னர் அவருடனான எனது உறவை அவர் முறித்துக்கொண்டதும் முக்கியமான விடயம். ஒருவர் நண்பராக இருக்கலாம், ஆனால் அவர்களுடன் இலக்கியம் சார்ந்து என் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள முடியுமாக என்னால் இருக்க முடியவில்லை. இதற்காகப்  பல நண்பர்களை நான் இழந்திருக்கிறேன்.

இலக்கியனானவன் தன்னைச் சுற்றி ஓர் கூட்டத்தை எதற்காக அமைக்க வேண்டும்?

அப்படி அமைக்க முடியுமா எனத்தெரியவில்லை. அப்படி அமைப்பது சற்றுக் கடினமான ஒன்றுதான். ஒரு எழுத்தாளரால் தன்னைச் சுற்றி ஒரு கூட்டத்தை அமைக்க முடியுமாக இருக்குமானால்,அவரைப்  பாராட்டத்தான் வேண்டும்.  அரசியல் வாதிகளாலேயே சிரமமாக இருக்கின்ற ஒரு விடயத்தை ஒரு எழுத்தாளர் செய்வதென்பது பெரிய விடயமல்லவா?

ஓர் இலக்கியன் பொதுவெளியில் மற்றயவர்களால் உன்னிப்பாகக் கவனிக்கப்படுபவன். அவன் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும் என்ற கூற்றுடன் உடன்படுகின்றீர்களா? 

இல்லை. எடுத்தக்காட்டாகவும், வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும் என்பது மிகப்பழைமையான ஒரு கோரிக்கை. இக்கோரிக்கையை  இந்த சமூகம் அனைவரின் மீதும் முன்வைத்துத்தான் வந்திருக்கின்றது.

எழுத்து வன்முறை பற்றி……?

வன்முறை என்பது மனிதர்களின் பழங்குணம். ஆனால், இன்றுகூட முக்கியமாக பின்பற்றப்படும் ஒரு குணம். இந்த வன்முறை செலுத்துவதிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள முடியாத மனநிலையில்தான் மனிதர்கள்  இருக்கிறார்கள். அதை குறைப்பதற்கான நிலையை முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த வன்முறை என்ற அம்சம், மனிதனின் அனைத்து செயற்பாடுகளிலும் பெரும் பங்கை வகிக்கின்றது. மொழியிலும், சிந்தனைகளிலும் இது படிந்திருக்கிறது. ஆக, இலக்கியத்திற்கு பயன்படும் இரண்டு அம்சங்களாக மொழியும், அதனுாடாக நிகழும் சிந்தனையும் தேவையாக இருப்பதால், எழுத்திலும் இது நிரம்பிக்கிடக்கிறது. அப்படிக்கிடப்பதை கண்டுபிடுத்து விமரச்சிப்பதினுாடாக அதை தவிர்க்க ஏதும் வழிகளை சிந்திக்க வாய்ப்புண்டு. நிறையச்சொற்களுக்கு பெண்பாற் சொற்கள் இல்லை என்பதை சிறிய உதாரணமாக சொல்ல முடியும்.  எழுத்தில் நிகழும் வன்முறைகள் , எழுத்துப் பிரதிகளிடையே உருப்பெறும்  வன்முறை என இவைகள் பல வழிகளில் புரிந்துகொள்ள வாய்ப்புண்டு.

ஒரு சிறு உதாரணத்தை இந்த இடத்தில் குறிப்பிடலாம் என நினைக்கிறேன். புதுமைப்பித்தனின் ”விபரீத ஆசை” என்ற கதையை இங்கு நினைவுகூரலாம்.  நண்பன் இறந்துகிடக்கும் வேளையில், அவனுடைய மனைவியோடு உடலுறவு கொள்ளும் ஒரு சம்பவம் இந்தக் கதையில் பிரதானமான ஒரு விடயம். இந்தச் சம்பவத்தை எப்படிப் புரிந்துகொள்வது?  ஒரு இலக்கியப் பிரதி என்றவகையில் இதை கலைத்தன்மையானது எனவாசிப்பதா? அல்லது, உளவியல் சிக்கல் ஒன்றை முன்வைக்கிறது எனச் சிந்திப்பதா? இப்படியும் நடந்திருக்கிறது என எடுத்துக்கொள்வதா? இதற்கு வெளியே நின்று இந்தக் கதை என்ன செய்ய முற்படுகிறது என வாசிப்பதா?  இப்படி பன்மையான வாசிப்புக்களின் சாத்தியத்தை அக்கறைகொள்ளும் ஒரு தருணத்தில், ஒரு புறத்திலிருந்து, அந்தப் பிரதி நிகழ்த்தும் வன்முறையை கண்டுகொள்ளவும் வாய்ப்புள்ளது.  எழுத்து என்பது, இலக்கிய வரலாற்றில் ஒரு சம்பவம் எனப் பார்க்கப்படுவது மட்டுமல்ல.  சம்பவங்களை உருவாக்குகின்ற ஒரு நிகழ்வு என்றும் கருத வாய்பளிக்கிறதல்லவா?  ஆக, வன்முறை என்பது, எழுத்து என்ற வகையில் பலதிசைகளில் இருந்து உருவாக சாத்தியமுள்ளது. அந்த வன்முறையை புரிந்துகொள்வதும் அதை பற்றி மேலதிகமாக நல்லதொரு திசையை நோக்கி சிந்திப்பதுமாகும்.

ஈழத்து இலக்கியப்பரப்பில் முஸ்லீம் சமூகத்தின் பங்கு எப்படியாக இருக்கின்றது அல்லது இருந்தது?

ஈழத்து இலக்கியம் என்பது இலங்கையிலுள்ள இலக்கியங்கள் என்பதை விளிக்கிறது எனில், மிகப்பெரும் பங்களிப்பை செய்திருப்பதாகவே கருதுகிறேன். சிங்களம், தமிழ் ஆகிய இருமொழிகளிலும் பங்களிப்புக்களை செய்திருக்கிறார்கள். தமிழ் மொழியைப்பொறுத்தவரையிலும் பல பங்களிப்புக்களைச் செய்திருக்கிறார்கள். அதுவும், 80 களுக்குப் பிறகு இன்றுவரையான ஈழத்து இலக்கியச் செயற்பாட்டாளர்கள் என நீங்கள் ஒரு தகவலை எடுக்க நேருமானால், எண்ணிக்கையளவில் அதிகமானவர்கள் தமிழை மொழியாகக்கொண்ட இஸ்லாத்தை மதமாகக்கொண்டவர்களே அதிகமானவர்கள் வந்து நிற்க வாய்ப்புண்டு. அதுபோல, தமிழ் இலக்கியத்தில் ஒரு பகுதியாக இருக்கின்ற “இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்” என ஒரு வகைமையை முன்வைத்து பேசத்தக்க தனித்த பண்புகளைக்கொண்ட பிறிதொருவகை இலக்கியச் செயற்பாட்டையும் உருவாக்கியிருக்கிறார்கள். இப்படி சிந்தித்துப்பார்த்தால், பல விடயங்களை அடையாளம் காணமுடியுதாக இருக்கும். ஈழத்தில் முதலாவது நாவலை எழுதியது என்றவகையில் பார்த்தாலும் இது தென்படக்கூடியதே.

சமகாலத்தில் இருக்கின்ற சிற்றிதழ்களின் பொறிமுறையானது ஓர் குறுகிய வட்டத்திற்குள் சுழல்வதாகவும் அவைகள் அதன் அடுத்த கட்ட நகர்வுக்குத் தங்களைத் தயார்ப்படுத்தவில்லை என்ற ஓர் பாரிய குற்றச்சாட்டு உண்டு. இதுதொடர்பாக…….?

சமகாலத்தில் சிற்றிதழ்கள் இருக்கிறதா என்ற ஒர் சந்தேகம் எனக்கு அண்மைக்காலமாக வலுத்து வருகின்றது. அது ”அருகிவரும் ஒரு இனம்” என்றும் கூடச் சொல்லலாம்.

சிற்றிதழ்களுக்கு காலவரயறை என்று ஏதாவது இருக்கின்றதா?

நிட்சயமாக காலவரையறை இருக்கின்றது. தாம் விரும்பிய காலங்களில் வரலாம். அல்லது நின்றும்போகலாம்.

அப்படியானால் அதன் இருப்புகள் தொடர்பான நேர் எதிர்மறைக் கேள்விகள் எழவாய்ப்புகள் உள்ளது அல்லவா?

கேள்விகள் எதற்குத்தான் எழவில்லை. பதில்கள் சொல்ல முடிகிற வரைக்கும் ஒரு பிரச்சினையுமே இல்லை அல்லவா……?

உங்கள் மறுத்தோடி சஞ்சிகை என்ன காரணத்துக்காக ஓடவில்லை?

பொருளாதார நெருக்கடியே முக்கிய காரணமாக அமைந்தது.  ஆனாலும், இணைய இதழாக கொண்டுவரும் வேலைகளில் இருக்கின்றோம். அதற்கு அதிகளவிலான பணம் தேவையில்லை என்பதும் காரணம். இந்தக் கேள்வி எனக்கு மிகவும் சந்தோசத்தை தந்திருந்தது. வெளிவர இருக்கிறது என்று சொல்லி வராமலே போன ஒரு சிற்றிதழைப்பற்றி கேள்வி கேட்குமளவு அந்தச் செய்தி உங்களைப் பாதித்திருக்கின்றது என்பதுதான் அது. மிக்க அன்பு.

ஒப்பீட்டளவில் வடக்கை விட கிழக்கில் சாதியமானது இல்லை என்றவோர் எண்ணப்பாடு ஒன்று உண்டு. இது பற்றி என்ன சொல்கின்றீர்கள்?

இருக்கலாம். உயர்சாதியினர் என்று கருதப்படும் ஒரு வகைப் பிராணிகள் கிழக்கில் குறைவாக இருப்பதும் இதற்குக்  காரணமாக இருக்கலாம். அதே நேரம், வடக்கு எப்போதும் கிழக்கை விளிம்புநிலையில் வைத்தே பார்த்தது என்றவகையிலும் இதற்கான காரணங்களை சிந்திக்க முடியும்.

முஸ்லீம் சமூகத்தில் சாதீயம் என்பது உண்டா ? ஆம் என்றால் அது எப்படியான ஊடுருவல்களைச் செய்துள்ளது?

சாதியம் என்பது, சில சமூகக்குழுக்களை விளிம்பில் நிறுத்திப் பார்ப்பதையும் சேர்த்ததே எனில், சாதியம் இருக்கிறது. அது மிகச் சிறியளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒய்த்தா, மருத்துவச்சி, பக்கீர் என பல சமூகக் குழுக்களை தனது சமூக அமைப்பிற்குள் பேணிவந்திருக்கிறது என்பதை எப்படி மறுக்க முடியும்? இந்த வகையாக அடையாளபடபடுத்துபடுபவர்களுக்கென்று அது தனித்த தொழில்களையும் அடையாளப்படுத்தியிருந்தது.

இன்றும், அதிகாரங்களுக்கான படிநிலைகளாக இந்த நிர்ணயித்தல் இருப்பதைப் பார்க்கிறேன். அக்கரைப்பற்று பள்ளிவாசல்களில், அதன் நிர்வாக அமைப்புக்கான அதிகாரம் நிறைந்தவர்களை தேர்வு செய்வதற்கு இறுக்கமான நடைமுறைகள் பேணப்படுகின்றன.”குடி” என்ற ஒன்று பெரும் இடத்தை வகிக்கிறது. குறித்த ஒரு குடியைச் சேர்ந்தவர்தான் தலைவராக இருக்க முடியும் என்றும். இன்னுமொரு குடியைச் சேர்ந்தவர்தான் செயலாளராக இருக்க முடியும் என்றும் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஒரு முஸ்லிம் தலைவராக இருக்கலாம். அல்லது செயலாளராக இருக்கலாம் என்ற நிலைப்பாட்டுக்கு முற்றிலும் எதிரான, ஆனால், பிறிதொரு விடயத்தால் கட்டுப்படுத்தப்படுகின்ற அதிகாரப் படிநிலைகளை பாதுகாப்பதாக அமைகிறது அல்லவா? இவைகளைக்கூட சாதிய தன்மைகளுடன் பொருத்திப்பார்க்க அதிக இடமுண்டு.

இஸ்லாமிய அடிப்படை வாதம் என்ன காரணத்துக்காக மாற்றுக்கருத்துக்களை மறுதலிக்கின்றது?

அடிப்படைவாதம் என்பதே மாற்றுக்கருத்துக்களை மறுதலிப்பதனால்தான் இருக்கிறது.  இதில் ஒரு முக்கியமான விடயம் இருக்கிறது, அது என்னவெனில், அடிப்படைவாதம் இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள் மட்டும் கடைபிடிக்கும், அவர்களுக்கான பிரத்தியேக செயற்பாடு அல்ல. அனைத்து கருத்துநிலைகள் மற்றும் மதங்கள் என எதிலும் இந்த அடிப்படைவாதம் என்பது  இருந்துதான் வருகிறது.  அடிப்படைவாதத்தை இதன் வன்முறையை நான் எப்போதும் பொதுவாகப்பார்ப்பவன். அது எங்கெல்லாம் இணைந்து செயற்படுகிறதோ அனைத்தையும் எதிர்ப்பவன். அதை குறித்த ஒரு மதத்தோடு மட்டுமே தொடர்புபடுத்தி அதற்கான அடையாளமாக வரையறுப்பதையும் எதிர்ப்பவன்.

இஸ்லாமிய அடிப்படைத்தீவிரவாதத்தின் அசுர வளர்ச்சி குறித்து ஓர் இலக்கியவாதியாக எப்படிப் பார்க்கின்றீர்கள்?

“தீவிரவாதம்” என்பது அமெரிக்காவை எதிர்ப்பவர்களின் மீது சுமத்தப்படும் ஒர்சொல்லாகும் . இப்படி பொருள்தரும் படியாக “எட்வேர்ட் செய்ட்” கருத்துத்தளத்தில் விவாதித்ததை நானறிவேன். இது மிக முக்கியமான ஒரு கூற்றும் கூட. தனது ஒரியண்டலிசம் என்ற நுாலே, அதுகுறித்த விவாதங்கள் நிரம்பியதுதான். கீழ்த்திசையை மேற்குலகு எப்படி புரிந்துகொள்கிறது? அல்லது என்னவகையான பொருளை கீழ்திசை குறித்து உற்பத்திசெய்ய முயற்சிக்கிறது? என்றவகையில் அந்த நூல் அக்கறைகொண்டிருக்கும்.  இந்தத் தீவிரவாதம் என்பதை, இஸ்லாத்தை பின்பற்றுவதாக கூறிக்கொள்ளும் ஒரு குழுமம் இன்று தனது செயற்பாட்டுக்கு புதிதப் பெயரொன்றைச் சூட்டி முன்னெடுக்கிறது என்பது உண்மைதான். அதை மிகவும் பின்தங்கிய ஆனால், மூர்க்கமாக எதிர்க்க வேண்டிய ஒன்று என்பதில் ஒரு இலக்கியச் செயற்பாட்டாளனுக்கு என்ன கருத்துமுரண்பாடு இருக்க முடியும்?

ஆனால், இந்த விடயம் மேலும் பல விடயங்களை கிளர்த்தத்தான் செய்கிறது. ஐரோப்பாவின்  இன்றை செழிப்பு, பொருளாதார திருப்தி போன்றவற்றுக்குப்பின்னால் இருப்பதுகூட, கடந்தகாலத்தில் அவர்கள் உலகெங்கிலும் கொள்ளையடித்த, மிக மோசமாக பறித்தெடுத்த வளங்கள்தான். ஒரு அரசனின் குரலை பதிவு செய்து ஒலிபரப்பி, பல்லாயிரம்  கறுப்பு அடிமைகளை அழித்து கட்டி எழுப்பியவைதான் இந்த செழிப்புக்கள் எல்லாமே. அமெரிக்கா என்பதுகூட அப்படியானதுதான். இன்று ஜனநாயகம், மனித உரிமை, தீவிரவாதம் என்றெல்லாம் உரத்து தொண்டைகிழியக் கத்துவதும், தாங்கள் நாகரீகமானவர்கள் என நெஞ்சுநிமிர்த்திப்  பெருமிதங்கொள்ளுவதும், வரலாற்றை அறியாதவர்களுக்கு பெறுமதிமிக்கதாக இருக்கலாம். ஆனால், உண்மை அதுவல்லவே.

மேலைத்தேயம்தான், உலகின் பலபகுதிகளை முரட்டுத்தனமாகவும், கொடிய வழிமுறைகளாலும், பறித்தெடுத்து, தங்களை செழிப்பானவர்களாகவும், நாகரீகமானவர்களாகவும் காட்டுவதற்கு உரிய வாய்ப்பை  வழங்கியது. இது மிகவும் இழிவானது. இந்த இழிவானவர்கள்தான், இன்று தீவிரவாதம், சுதந்திரம், ஜனநாயகம் போன்ற கருத்துக்களை பிறர்மீது சுமத்துகிறார்கள். அப்படி அவர்கள்  சுமத்துவதை நான் சிறுநீர்கழிப்பதைப்போன்ற ஒரு சுகத்தோடுதான் பாரக்கிறேன். அதற்காக, தீவிரவாதம் என்பதை ஏற்கிறேன் என்பது இதற்கான பொருளல்ல. உலகளவில், பல அரசுகள் கூட, தீவிரவாத அரசுகள்தான். ஆனால், அந்த சொல்லை பயன்படுத்துவதற்குப் பதிலாக,  சுதந்திரத்தை ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான போர், என்ற பிறிதொரு விளிப்பால், அடையாளப்படுத்தி தங்களை தீவிரவாதிகள்  அல்ல எனக்காட்டிக்கொள்கிறார்கள் அவ்வளவுதான்.

இந்த அரசுகளின் தீவிரவாத நடவடிக்கைகளைவிட சற்றும் குறைந்ததல்ல, மதங்களின், பிற அமைப்புக்களின் தீவிரவாதச் செயல்கள்.  தீவிரவாதத்தை எதிர்பதென்று வந்துவிட்டால், அனைத்தையும் எதிர்பதுதான் சரியான நடைமுறை. அமெரிக்காவின் தீவிரவாதம், இஸ்ரேலின் தீவிரவாதம் போன்றவற்றைவிட , பெரும் வளர்ச்சிகொண்டதாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் என்றே நினைக்கிறேன். அளவில், அதாவது கொலைக்கருவிகள், அதற்கான காரணங்களை உருவாக்குதல், தமது செயற்பாடுகளுக்கான பரந்த ஆதரவு என்றவகையில், இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் தீவிரவாதத்தைவிட அமெரிக்கா, மற்றும் இஸ்ரேலின் தீவிரவாதமே பலமானது. அதன் வளரச்சியே மிக மோசமானது. அவர்களுக்கு எதிரே வேறு எந்தநாடும் நிற்கமுடியாதளவு, தம்மை வலிமைப்படுத்திக்கொண்டே இருக்கிறது. இருபக்கமும் தீவிரவாதம்தான். அதாவது தீவிரவாதிகளிடையயே கொலை செய்வதற்கும், அழித்தொழிப்பதற்குமான போட்டி, முன்னெப்பொழுதும் இல்லாதவாறு  இன்று உலகளவில் வேகமாக வளரச்சியடைந்திருக்கிறது. அதுதான் உண்மை.

தமிழ் முஸ்லீம் முரண்கள் பற்றிய உங்கள் பார்வை எப்படியாக இருக்கின்றது?

இன்றும் அந்த முரண்கள் பேசித்தீர்க்கப்படாத நிலையிலே இருப்பதாக கருதுகிறேன். இலங்கை அரசை எதிர்கொள்வதற்கு, இணைந்தே செய்பட வேண்டிய ஒரே மொழியைப் பேசுகின்ற இரண்டு சமூகங்கள் என்றவகையில் இந்த முரண்பாடுகள் நிச்சயமாக பேசி ஒரு உடன்பாட்டுக்கு வரவேண்டிய தேவையிருக்கிறது என்றே கருதுகிறேன். அரசியல் அர்தத்தில் இது மிக மிக முக்கியமான ஒன்று. அது நிகழாதுபோனால், இரு சிறுசமூகங்களும் பெரும் பின்டைவை எதிர்கொண்டே ஆகவேண்டிவரும்.

தமிழ்  முஸ்லீம் முரண்கள்/தவறுகள்  பற்றித் தமிழ் படைப்பாளிகள் பல முறை அரசியல் வெளியிலும் இலக்கிய வெளியிலும் தங்களை சுய விமர்சனம் செய்துள்ளனர். ஆனால் முஸ்லீம் தரப்பில் இப்படியான செயல்பாடுகள் எழவில்லையே?

சுயவிமர்சனம் செய்திருப்பதாக சொல்கிறீர்கள். அப்படி செய்யப்பட்டிருந்தால், அதை முஸ்லிம்கள் நம்பிக்கைகொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்கள் என்பதால் கூட சில வேளைகளில் தாங்கள் சுயவிமர்சனம் செய்யாமலிருக்கலாம். ஆனால், நானும் எனது தோழர்களும் எங்களால் முடிந்த தருணங்களில் எல்லாம் அந்த சிக்கலான காலகட்டங்களில் முஸ்லிம்களால் தமிழர்களுக்கு நிகழ்ந்த துன்பியல் சம்பவங்களை விமர்சனம் செய்தே வந்திருக்கிறோம். இந்த விடயத்தில் அதிகமான சொத்து இழப்புக்களையும், உயிர் இழப்புக்களையும், பாதிப்புக்களையும் முஸ்லிம்கள் எதிர்நோக்கியிருக்கிறார்கள். அதை ஒர் அளவீடாக கருத முடியுமானால் தமிழர்கள் இன்னும் அது குறித்து சுயவிமர்சனம் செய்து முஸ்லிம்களை நெருங்கிவர வேண்டும் என எண்ணுகின்றேன். இது முஸ்லிம்களின் பொதுக்கருத்தாக இருக்குமென்று நான் எண்ணவில்லை. ஆனால், பல்லாயிரம் தன்நிலைகள் சேர்ந்துதான் சமூகம் எனில், அச்சமூகத்தில் பல தன்நிலைகள் இதுகுறித்து அக்கறைகொள்கிறார்கள். அவர்கள் அக்கறைகொள்ளத்தயாராக இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன்.

ஆனால், இந்தக் கேள்வியில் இருக்கும் முதல்பகுதியானது நான் என்னை முஸ்லிம் சமூகம் சார்ந்தவனாக அடையாளப்படுத்துவதால் நம்பிக்கைதருவதாக இருக்கிறது. அரசியல் அதிகாரங்களை வைத்திருப்பவர்கள் சமூகங்களுக்கிடையிலான உறவை அதனுடன்கூடிய அரசியல் சமத்துவத்தை ஏற்றுக்கொண்டு இந்த சுயவிமர்சனத்தையும், நெருக்கமான உணர்வையும் வெளிப்படுத்தினால்த்தான் இது இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகும் எனக் கருதுகிறேன். ஆனால், இதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்பது அரசியலைப் புரிந்துகொள்ள முடிபவன் என்றவகையில் தெரிந்தே இருக்கிறது.  அதாவது, வடகிழக்கைப் பொறுத்தமட்டில்,  தமிழர்களும் முஸ்லிம்களும் அரசியல்ரீதியலான போட்டியாளர்கள் என்பதுதான் உண்மை. இலங்கை என்ற நாட்டை அரசியல் அதிகாரப்பரப்பாக எடுத்துக்கொள்ளும்போதுமட்டுமே, சிங்கள அரசு தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்குமான பொதுப்பிரச்சினையாக மாறுகிறது. ஆக, அரசை எதிர்கொள்வது என்றவகையில் இணையவேண்டிய தேவையிருப்பதோடு, தமிழ்மொழிப் பரப்பை எல்லையாகக்கொண்ட அரசியல் செயற்பாட்டில்,  இருசமூகமும் போட்டியாளர்களாக இருக்கிறார்கள். இதுவே இவர்களின் பலமும் பலவீனமும்.  இதுபற்றிப் பேசப்படாமல்  உடன்பாட்டுக்கு வரவே முடியாத ஒரு நிலையைக்  கொண்டிருக்கிறது. அதனால்தான் இதை வேறுவிதமாக புரிந்துகொள்கிறேன். சுயவிமர்சனம் என்பது இங்கு ஒரு தந்திரமான செயல்பாடாக கருதப்பட வாய்புள்ளது.

வடக்கில் இருந்து முஸ்லீம்கள் ஓர் இரவில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட நிகழ்வை எப்படியாகப் பார்க்கின்றீர்கள்?

இது ஒர்  முக்கியமான நிகழ்வு. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் பிறிதொரு மதத்தை பின்பற்றுவதால் இவர்கள் “தமிழர்கள் அல்ல” எனவும் அவர்கள் மத அடையாளங்களுடன்கூடிய ஒரு தனித்த சமூகம் என்பதை உறுதிப்படுத்திய நிகழ்வு என்றவகையில் அதை முக்கியமான நிகழ்வாகக்  கருதுகிறேன்.  பிறிதொரு சமூகத்தை, தனது சொந்த மண்ணிலிருந்து துடைத்தகற்றியதை மண்ணுக்காகப்போராடியதாக கூறிக்கொண்ட ஒரு விடுதலை போராட்ட அமைப்பின் மிக்க கீழ்த்தரமான வரலாற்று நிகழ்வு என்றும் பார்க்கிறேன். தீர்க்க முடியாத முரணாக தமிழர்களிலும்  முஸ்லிம்களிலும் ஒர்  மனஇடைவெளியை உருவாக்கிய நிகழ்வாகவும்  நான் இதைக் கருதுகிறேன்.

சமகாலத்தில் தேசியவாதமானது பிராந்திய, மத, மொழி என்று பல்வேறு தளங்களில் பேசப்படுகின்றது. இதில் நீங்கள் எந்த தளத்தில் இருக்கின்றீர்கள்?

என்னைப்பொறுத்தமட்டில் தேசியவாதத்திற்கு உடன்பட்டவனாக இல்லை. அதை முற்றிலுமாக நிராகரிப்பவன். தேசியம் ஒரு கற்பிதம் என்பதை புன்னகையோடு சந்திக்கிறேன்.

தமிழகத்தில் இருக்கின்ற இஸ்லாமியர்கள் தங்களை தமிழன் என்றே எப்பொழுதும் முன்நிலைப்படுத்துகின்றார்கள். ஆனால் இலங்கையில் முஸ்லீம்கள் தங்கள் அடையாளம் என்று வரும் பொழுது தாங்கள் சார்ந்துள்ள மதத்தை முன்நிலைப்படுத்துகின்றார்கள். இது எதற்காக ?

இரு நிலப்பரப்பிலும் முஸ்லிம்கள் வரலாற்றுரீதியாக எதிர்கொண்டு வந்திருக்கும் அரசியல் மற்றும் பண்பாட்டுரீதியிலான புரிந்துகொள்ளுதல்களால் உருவான ஒன்றாக இருக்கலாம். ஒரு மக்கள் கூட்டம் தங்களை எப்படி அடையாளப்படுத்த விரும்புகிறதோ அப்படி அடையாளப்படுத்துவதில் எந்தப் பிரச்சினைகளும் இல்லை என்றே எண்ணுகின்றேன். அப்படி அடையாளப்படுத்துவதினால் எதும் சிக்கல்கள் இருக்கிறதா என்ன?  பண்பாடு கலாச்சாரம், மொழி, மதச் செயற்பாடு, என பலவற்றை கொண்டிருக்கும் ஒரு சமூகம், எதன் நிமித்தமாக தாங்கள் புறக்கணிக்ப்படுவதாக கருதுகிறார்களோ, அதையே தங்கள் அடையாளமாக வரித்துக்கொள்ள முயல்வார்கள். அப்படியாக நிகழந்த ஒன்றுதான் இது.

அண்மையில் இந்துக்களே தமிழர்கள் என்ற தொனியில் ஓர் கருத்தைப் பொதுவெளியில் விட்டிருந்தீர்கள். அப்படியானால் தமிழ் மொழியைப் பேசுகின்ற முஸ்லீம்கள், கிறீஸ்தவர்கள், மலாய் இனத்தவர்கள், பறங்கியர்கள் தமிழர்கள் இல்லையா ?

நான் அவ்வாறு  சொல்லவில்லை என்றே எண்ணுகின்றேன். தமிழைத்  தாய்மொழியாகக் கொண்ட பிறிதொரு சமூகம் தங்களை மதஅடையாளத்தினுடாக அழைத்துக்கொள்ள விரும்புகிறது என்பதையே நான் குறிப்பிட்டிருந்தேன். மற்றவர்கள் அதாவது, பிற மதத்தவர்களுக்கு அப்படி அழைத்துக்கொள்ளவேண்டிய தேவை வரலாற்றுரீதியில் தேவைப்பட்டிருக்கவில்லை என்று எண்ணுகின்றேன். அரசியல் ரீதியிலும் அவர்களுக்கு அந்தத் தேவையிருக்கவில்லை. அப்படி அவர்களுக்கு இருக்கவில்லை என்பதற்காக, பிறிதொரு சமூகம் தங்களை அழைத்துக்கொள்வதை மறுக்க என்னதான் காரணம்  இருக்கின்றது?

இலக்கியத்தில் உங்களுக்கு யாரெல்லாம் ஆதர்சமாக இருந்திருக்கின்றார்கள்?

பலரைச் சொல்லலாம். அ.மார்க்ஸ், தமிழவன், பிரேம், மு.தளையசிங்கம், என நீளக்கூடியது இந்தப்பட்டியல்.

இறுதியாக றியாஸ் குரானாவுக்கென்று இலக்கிய அரசியல் உண்டா?

நிச்சயமாக, ஆனால் அது மாறிக்கொண்டே இருக்கக்கூடியது. எழுதுவதென்பதே ஒரு அரசியல் செயற்பாடு என்றுதான்  எண்ணுகின்றேன். நான் எழுதுகிறேன். சாத்தியங்களின் கலை அரசியல் என்பார்கள். ஆனால், அசாத்தியமானவற்றை நிகழ்த்திக்காட்டுவது இலக்கிய அரசியல் எனக் கருதுகிறேன். அதையே செய்ய முற்படுகிறேன். இதில் வெற்றி பெறுகிறேனா, தோற்கிறேனா என்பது எனது அக்கறையை சிதைத்துவிடக்கூடிய ஒன்றல்ல. ஆனால், அந்த முயற்சியில் இருக்கின்றேன்  என்பதே ஒரு அரசியல் செயற்பாடுதான். இலக்கியச் செயற்பாடுகளிடையே வெற்றிதோல்வி என்பதில்லை. அது ஒரு போட்டி நிகழ்ச்சியல்ல. நிச்சயமாக, சிந்திக்கும் நடைமுறையை கற்பனைகளால்  வழிநடாத்தும் ஒரு துறை. அதுவும் மனிதநடத்தைகளில் ஒன்று. அதை மற்றவர்களில் இருந்து எந்தவகையில் புதிதாக சிந்தித்தும், நிகழ்த்தியும் பார்க்கிறேன் என்பதோடு தொடர்புடையது.

0000000000000000000000000000

றியாஸ் குரானா பற்றிய சிறுகுறிப்பு :

றியாஸ் குரானாகிழக்கிலங்கையின் அக்கரைப்பற்று கிராமத்தை சேர்ந்த றியாஸ் குரானா இளைய படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவர். இவர் றியாஸ் குரானா என்ற புனை பெயரில் கவிஞராகவே தமிழ் இலக்கியப்பரப்பில் அடையாளப்படுத்தப்பட்டார். பரந்துபட்ட வாசிப்பு விமர்சனம் ஆகியவற்றுக்கு சொந்தக்காரார். இவரது கவிதைகள் யாவுமே குறிப்பாக ஒரு பாடுபொருள் என்றில்லாது பல்முனைத்தளங்களில் பவனி வருகின்றமை இவரது  சிறப்பியல்பு. இதுவரையில், ‘ஆதி நதியிலிருந்து கிழக்கு பக்கம் பிரிகிறது, ஒரு கிளை. (நுண் காவியம்) , ‘வண்ணத்துப் பூச்சியாகி பறந்த கதைக்குரிய காலம் (நுண்காவியம்)’ , ‘ நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு (கவிதைப் பிரதி)’ , ‘ மாற்றுப்பிரதி ‘ (கவிதைப் பிரதி) என்று நான்கு படைப்புகள் தமிழ் இலக்கியப் பரப்புக்கு இவரால் கிடைக்கப் பெற்றுள்ளன . இவரது கவிதைகள் யாவரையும் கட்டிப்போடும் தன்மை வாய்ந்தது.

இவரது கவிதைகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. “பெருவெளி” சிற்றிதழின் நிறுவனர்களில் ஒருவரான றியாஸ் குரானா இந்த நேர்காணலின் வாயிலாக இலக்கியம் சமூகம் அரசியல் என்று தனது மனஉனர்வுகளை நடு வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றார்.

கோமகன்

கோமகன்

(Visited 215 times, 1 visits today)