ஈழத்து நவீன கவிதை : ஏற்புகளும், மறுப்புகளுமாக ஓர் ”அத்து மீறும்” வாசிப்பு- தொடர் கட்டுரை- அங்கம் 04-றியாஸ் குரானா

தொடரை வாசிக்காத வாசகர்களாக :

அங்கம் 01

ஈழத்து நவீன கவிதை : ஏற்புகளும், மறுப்புகளுமாக ஓர் ”அத்து மீறும்” வாசிப்பு- தொடர் கட்டுரை- அங்கம் 01-றியாஸ் குரானா

அங்கம் 02

ஈழத்து நவீன கவிதை : ஏற்புகளும், மறுப்புகளுமாக ஓர் ”அத்து மீறும்” வாசிப்பு- தொடர் கட்டுரை- அங்கம் 02-றியாஸ் குரானா

அங்கம் 03

ஈழத்து நவீன கவிதை : ஏற்புகளும், மறுப்புகளுமாக ஓர் ”அத்து மீறும்” வாசிப்பு- தொடர் கட்டுரை- அங்கம் 03-றியாஸ் குரானா

00000000000000000000000000000000000000

இருபத்தியோரம் நூற்றாண்டின் முதற் பத்தாண்டுகளில், பின்நவீனத்துவச் சாயலோடு ஈழத்து இலக்கியத்தில் தனது செயற்பாட்டை ஆரம்பித்திருந்த போதும், அந்தப் பத்தாண்டிலேயே கவனத்தைப் பெற்றாலும், அந்த இலக்கியப்போக்கை பலர் தெரிவு செய்ததாகத் தெரியவில்லை.  ஆனால், தொடர்ந்துவந்த அடுத்த பத்தாண்டுகளிலேயே ஈழத்து நவீன கவிதை பின்நவீனத்துவச் சாயலுடன் உள்ள ‘பொயற்றி பிக்ஷன்’ தான் எனக் கருதுமளவு,  பரவலான பங்கேற்பாளர்களைக் கொண்டதாக மாறிவிட்டது. ஈழத்து நவீன கவிதையில் எப்படி அதிகமான தமிழர்கள் செயற்பட்டார்களோ அதுபோல், ஈழத்து பின்நவீன கவிதையில் முஸ்லிம்களே அதிகமக்ச் செயற்பட்டனர். பின்நவீனப் புனைகதையில் அதிகம் பேர் தமிழர்களே இயங்கினர் என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றே.

ஆனால், கவிதைப் பிரதி, மற்றும் விமர்சனப் பிரதிகளில் முஸ்லிம்களே அதிகம் செயற்பட்டனர். இது தனியாக ஆய்வுக்குட்படுத்த வேண்டிய ஒன்றும் கூட.  தொண்ணூறுகளுக்குப் பின்னர் எழுந்த தமிழ் – முஸ்லிம் விரோத நிலைப்பாடு இதன் பின்னணியில் செயற்படவும் வாய்ப்புள்ளது. ஈழத்து பின்நவீன இலக்கியச் செயற்பாடுகளுக்கு முஸ்லிம் இலக்கியச் செயற்பாட்டாளர்களின் புலத்திலிருந்து அதிக அழுத்தமும், மென்மையான அளவில் தலைமைகொடுப்பதும் ஒரு காரணமாக இருக்கவும் வாய்ப்புள்ளது. எது எப்படியோ இது ஆய்வுக்குரிய முக்கியமான விசயம்தான்.

இன்னுமொரு விசயமும் சமூக அரசியல் களத்தில் இருக்கிறது. அதாவது, தமிழ்த் தேசியவாதத்திற்குத் தலைமை கொடுத்த நிகரற்ற பாசிச சக்தியான மாபெரும் இராணுவம் உடைந்து சிதறியதும், தமது போராட்டத்தின் இறுதி மூச்சை சுவாசித்துக் கொண்டிருந்ததினாலும்,  முன்னெப்போதையும் விட மிக மோசமான தமிழ்த் தேசியவாதப் பற்றுதியும், அதனடியாக தமிழின் விரிந்த பரப்பிற்குள் எழுந்த கழிவிரக்கமும் தமிழ் பேசும் மக்களின் உலகு தழுவிய (இணையவரவின் காரணமாக) அளவில் உச்சத்தை (தேசியவாத உணர்வெழுச்சி) எட்டியிருந்த காலத்தில், அந்த மாபெரும் அதிகார சக்தியை அதன் கருத்தியலுக்கும், இயங்கியலுக்கும் எதிராக பார்க்கத் தூண்டும் பின்நவீனச் சிந்தனையையும், அதனடியாக எழும் இலக்கியங்களையும் அக்கறை கொள்வதற்கு மனதில் இடந்தராமலே இருந்திருக்கலாம்.   இவை ஊகங்களாக இருப்பினும் தட்டிக் கழித்துவிடக் கூடியவையல்ல என்பதும் கவனத்திற்குரியதே.

இப்படித்தான் இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளின் இலக்கியச் செயற்பாடுகள் தொடர்ந்தன.  ஆழியாள், அனார், பெண்ணியா, பஹீமா ஜஹான், றஷ்மி, அலறி, மஜீத், பா.அகிலன், மலர்ச்செல்வன், ஃபாயிஸா அலி, தானா விஷ்ணு, சித்தாந்தன், தேவ அபிரா, ஓட்டமாவடி அறபாத், ஏ.ஜி.எம். சதக்கா, முல்லை முஸ்ரிபா, இளைய அப்துல்லாஹ், உருத்திரா, நபீல், எஸ்.நளீம், நவாஸ் சௌபி, ஜமீல், நஸ்புள்ளாஹ், பிரோஸ்கான், அகமது பைசல், குர்ஷித், விஜிலி,  முழுமதி எம். முர்தளா, குணேஸ்வரன்,  தமிழ்நதி, அகரமுதல்வன், நெற்கொழுதாசன், மிலஞ்சி முத்தன், ரோஷான் ஏ ஜிப்ரி, ஜிப்ரி ஹாஸன், றியாஸ் குரானா எனப் பல ஆற்றல் மிக்க கவிதைச் செயற்பாட்டாளர்கள் இயங்கிக் கொண்டிருந்தனர்.

இதில் றியாஸ் குரானா, மஜீத், ஹரிஹரசர்மா போன்றவர்கள் பின்நவீனத்துவச் சாயலுடனும் தாக்கத்தினோடும் கவிதைகளை எழுதினர். மஜீதும், ஹரிஹரசர்மாவும்,  நவீன கவிதையின் எடுத்துரைப்பு முறையும், அதன் உருவாக்க உத்திகளும் இணைந்ததாக பின்நவீனக் கவிதைகளை வெளிப்படுத்தி நின்றனர்.  இதில் றியாஸ் குரானாவோ, புதிய எடுத்துரைப்பு முறைமைகளையும், புதிய கவிதை உருவாக்க உத்திகளையும், நுண் அரசியல் அழகியல் போன்றவற்றை அக்கறை கொண்டு, அமைப்பிலும், தோற்றத்திலும், வெளிப்பாட்டிலும், எடுத்துரைப்பு முறைகளிலும் என்று ஒரு புதிய கவிதை அனுபவத்தை விளைவிக்கக் கூடிய கவிதைப் பிரதிகளை உருவாக்கினார்.  மெஜிகல் ரியலிச உத்திகள், நொன்லீனியர் வகை கவிதை சொல்லுதல், prose poem என பலவகை இலக்கிய உத்திகளைக் கவிதைக்குள் நிகழ்தினார்.  வெளித்தோற்றத்திலும், பிரதியினுள்ளே கவிதை சொல்லுதல் நகர்ந்து செல்லும் வழிகளிலும் பல கவிதை சொல்லும் உத்திகள் புதிதாக உருவாகி நின்றன. பல சம்பவங்களின், பல கருத்து நிலைகளின், பல உத்தி முறைகளின் கூட்டு இருப்பிடமாகப் புரிந்துகொள்ளும் படி கவிதைப் பிரதிகள் தென்பட்டன.  கவிஞர் என்ற சொல்லுக்குப் பதிலாக, ‘கவிதை சொல்லி’ என்ற அடைமொழியைப் பாவித்து அதையே தனது செயற்பாடாக அறிவித்து நின்றார்.

கதையைக் கவிதையாகச் சொன்ன காவிய மரபையும், அதைப் பின்தொடர்ந்த ஈழத்து நீள் கவிதை மரபையும் தலைகீழாகப் பார்க்கத் தூண்டும் வண்ணம், ‘கவிதையைக் கதையாகச்’ சொன்னார்.  கவிதைப் பிரதி புதிய அனுபவங்களைப் பிரதிபலிக்கும் வகையிலும், வாசகர்களைக் கவிதையினுள் ஆழமாக நுழைந்து வாசிப்பதற்கு முன்பேயே, மேற்பார்வையில் ஈர்க்கக்கூடிய அழகியலுடன் இணைந்த மெஜிக்கல் ரியலிசத் தன்மைகளை, தேவைக்கேற்ற அளவுகளில் கவிதையில் கலந்து வெளிப்படுத்தினார்.  இந்தக் கவிதைப் போக்கே அடுத்த பத்தாண்டுகளில் ஈழத்து நவீன கவிதைப் பரப்பில் பரவலாகப் பரவியது.  புதியவர்களும், முன்பு நவீன கவிதைகளில் செயற்பட்டுக் கொண்டிருந்த பழையவர்களும் இந்தப் போக்கைக் கையேற்றுத் தம்மால் முடிந்த வகையில் பின்தொடந்தும், சில அம்சங்களுக்கு அதிக அழுத்தம் கொடுத்தும் வளர்த்துச் சென்றனர்.

பார்த்த மாத்திரத்தில், உருவாக்கிவிடக்கூடியதாக பாவனை காட்டும் இந்தக் கவிதைப் போக்கு (மெஜிக்கல் ரியலிச உத்திகளே அதற்கு பிரதான காரணம்) தனக்குள்ளே பொதிந்து வைத்திருக்கும் கருத்துநிலைகளும், அரசியலும் மிகச் சிக்கலானது.  பின்நவீனக் கருத்தியலின் பரிச்சயமுள்ளவர்களுக்கு அவற்றைக் கண்டுணர முடியுமாக இருக்கும்.

இந்தக் கவிதைகள் பின்நவீனக் கருத்து நிலைகளோடு புரிந்துகொள்ளப்பட்டும், வெறுமனே நவீன கவிதைகளைப் புரிந்துகொள்ளும் கோணத்திலும் உள்ளெடுக்கப்பட்டு மிகவும் பரவலாக அடுத்தாண்டுகளில் பலரிடம் வெளிப்பட்டு நின்றன. இதில் கருத்தியல் தளத்திலும் பிரக்ஞைபூர்வமாகச் சிலரும்,  அதன் மெஜிக்கல் ரியலிசம் மற்றும் கவிதை சொல்லுதலின் எளிமையான சில உத்திகளைப் பயன்படுத்தி சிலரும் எழுதத் தொடங்கினர். இணைய உலகத்தைத் திறந்தால், எங்கு பார்த்தாலுமே, இந்தவகைக் கவிதையின் சாயலை முதல் வாசிப்பிலும், வெளித்தோற்றத்திலும் வெளிப்படுத்தக் கூடிய கவிதைகள் குவிந்த வண்ணமிருந்தன. பல கவிதைத் தொகுப்புக்களும் வெளிவந்தன.  அடுத்த பத்தாண்டுகளுக்குள் நுழையும் போது அவை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

இந்தப் பத்தாண்டுகளில் வெளியான பிற முக்கியமான கவிஞர்களின் கவிதை குறித்து மேலோட்டமான ஒரு பார்வையைச் செலுத்தலாம் என நினைக்கிறேன். இந்தப் பத்தாண்டில் வெளிவந்த அநேகமான கவிதைகள் எடுத்துரைப்பிலும், கவிதை மொழியிலும், கவிதையை வளர்த்துச் சொல்வதிலும் ஒரு தேர்ச்சி பெற்ற செய் நேர்த்தியைக் கொண்டமைந்திருந்தன.  இதற்கு தென்னிந்திய நவீன கவிதைகளின் பரிச்சயமும், மொழிபெயர்ப்பு கவிதைகளின் பரிச்சயமும் காரணமாக இருந்தன. இந்தவகையில் முக்கியமானவராக அனார் மேலுக்கு வருகிறார். 2001 ம் ஆண்டு எக்ஸில் தொகுத்த இஸ்லாமியர்களின் சமகால எழுத்துக்களின் தொகுப்பில் ‘ஈறல்’ என்ற தலைப்பில் அனார் எழுதியிருந்த கவிதை ஈழத்து நவீன கவிதைக்கு இருப்பதாகப் சொன்ன சந்த அமைப்பை நெருக்கமுறுவதாக அமைந்திருந்தது. அதே தலைப்பில் எஸ். நளீம் ஒரு கவிதை எழுதியிருந்தார் என்பது மேலதிகத் தகவல். ஆனால், இந்த பத்தாண்டுகளின் இறுதியில் தனது எடுத்துரைப்பின் முறைகளில் ஒரு சிறப்பான மொழிநடைக்கு அனார் வந்து சேர்ந்திருந்தார்.  இவரின் கவிதைகளைப் பெண்ணிய நோக்கில் வாசிக்கும்போது, விதிகளை மீறாத ஆட்டம் என்றே சொல்லிவிட முடிகிறது.  கவிதை உருவாக்கத்திலும், எடுத்துரைப்பிலும் அழகியல் மேலோங்கும் ஒரு வழிமுறையைக் கையாண்டார் என்ற வகையில்  அவர் முக்கியமானவராகிறார்.

ஆழியாளின் கவிதைகளில் செய் நேர்த்தி சிறப்பாக இருந்தபோதும், பெண்ணிய நோக்கு அரசியல் பார்வையின் அழுத்தம் அதிகமாக வெளிப்பட்டு நின்றது. இது இவர் கருத்தியல் ரீதியிலான பிரக்ஞையோடு செயற்படுவதைத் தடங்காட்டின. அழகியல் சார்ந்த விஷயங்களை பெண்களோடு இணைத்தே ஆண்மைய சிந்தனை பயின்று வந்ததின் காரணமாக கவிதைக்கு அழகில் அம்சங்களை அதிகம் பூசி மெருகேற்றாமல்,  அதனுள்ளே அரசியல் சார்ந்த அம்சங்களையே அதிகம் கவனத்திற் கொண்டிருக்கிறார் என்ற தோற்றத்தை வெளிப்படுத்தி நிற்கிறது.

அதுபோல், றஷ்மி தனது கவிதை எடுத்துரைப்பு முறையின் தனித்தன்மையோடு எழுந்து நிற்கிறார். எனினும், நவீன கவிதைகள் அக்கறை கொண்ட கருப்பொருட்களைக் கடந்து விலகிச் செல்லவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். எனினும், ‘காவுகொள்ளப்பட்ட வாழ்வு முதலான கவிதைகள்’ என்ற தொகுப்பில், சமபாலுறவாளர்கள் பற்றி ஒரு சம்பவத்தைக் கவிதையாகப் பதிவு செய்திருக்கிறார் என்பதையும் இந்த இடத்தில் கவனப்படுத்துவது அவசியமாகிறது.  மிகச் சிறந்த செய் நேர்த்தியோடும், சொற்களை ஒன்றுடன் ஒன்று கலப்பதில் எந்தப் பிசிறுமற்ற ஒரு புதிய எடுத்துரைப்பைத் தனித்துவமாக முன்வைத்தார் என்றவகையிலும் முக்கியமாகிறார்.

பஹீமா ஜஹான், பெண்ணியா, அலறி போன்றவர்கள் இந்தக் காலகட்டத்து சிறந்த கவிஞர்கள். அவர்களின் கவிதைச் செய்நேர்த்தி மற்றும் பெண்ணிய நோக்கிலான பார்வைகள் என்ற வகையிலும் அவர்கள் முக்கியமானவர்களாகின்றனர். அதே நேரம் பா. அகிலன் அரசியல் கவனிப்பு, அதனூடான சமூக அக்கறை, எடுத்துரைப்பு, சொல் தேர்வு எனப் பல வழிகளில் முக்கியமான கவிஞராக எழுந்து நிற்கிறார்.  ஓட்டமாவடி அறபாத் போன்ற இன்னும் பலர், எதிர்க்குரல்களை ஒரு சமூகத்தின் பக்கம் நின்று பதிவு செய்த வகையில் முக்கியமானவர்களாக மேலெழுந்து வருகிறார்கள். இந்தப் பத்தாண்டு என்பது தவிர்க்க முடியாத பல சிறந்த கவிஞர்களை ஈழத்து நவீன கவிதை முன்னுக்குக் கொண்டு வருகிறது என்பதுதான் உண்மை. இவரோடு, சித்தாந்தன், மலர்ச்செல்வன் போன்றவர்களையும் இணைத்து வாசிப்புச் செய்ய முடியும்.

அதேநேரம், ஜிப்ரி ஹாஸனைப் பற்றியும் சில வரிகள் கூற வேண்டும், இவர் மிக இளையவராக இந்தக் காலகட்டத்தில், பதினாறு வயதாக இருக்கும் காலத்தில் எக்ஸில் இதழில் கட்டுரை எழுதியதோடு, அதைத் தொடர்ந்து பல சிற்றிதழ்களில் கவிதை, கட்டுரை, சிறுகதை, மொழிபெயர்ப்பு என எழுதி ஒரு பன்முகத் தன்மைகொண்ட எழுத்தாளராகவும் இந்தப் பத்தாண்டுகளில்தான் முன்னுக்கு வந்தார். இன்றும் தீவிரமாக செயற்பட்டபடி இருக்கிறார்.

இருபத்தியோராம் நூற்றாண்டின் இரண்டாவது பத்தாண்டுகள் அதன் செயற்பாடுகளாலும், நிகழ்வுகளாலும் அதற்கே உரிய தனியான முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறன்றன. அதற்குப் பிரதானமான காரணமாக இருப்பது இணையத்தின் வருகையும்,  சமூக வலைத் தளங்களின் வருகையும்,  சமூக ஊடகங்களான முகநூல், ட்விட்டர் என்பனவற்றோடு இன்னும் பல இவ்வகைச் செயற்பாட்டு வெளிகளும்தான்.  இந்தப் பத்தாண்டுகளுக்கு முன்பும் இவை இருந்த போதும், இந்தப் பத்தாண்டுகளில்தான் அனைத்து மக்களும் இணையத்திற்கு வருகிறார்கள். இலக்கியச் செயற்பாட்டாளர்கள், போராளிகள், வாசகர்கள், நூலகங்கள், புத்தக விற்பனைத் தளங்கள், மின்னூல்கள், இலவசப் புத்தககங்களினது பெருக்கம், சமையல் தொடங்கி பாலியல் ஈடுபாடு கொண்டவர்கள் என அனைத்துத் தரப்பினரும் இணைய வெளிக்கு வந்து உலகளாவிய அளவில், ஒரு நொடியில் தொடர்பு கொள்ளவும், தகவல்களை அறிந்து கொள்ளவுமான நிலை தாராளமாக ஏற்பட்டு நிற்கிறது.

ஒரு விசயத்தை அறிதல் என்பது சுலபமாகிவிடுகிறது.  எதையும் பிரசுரிப்பதற்கான பிரசுரக் களமும் தனிநபர் கைகளிலேயே விரிந்து கிடக்கிறது. எண்ணற்ற சிந்தனையாளர்களும், கவிஞர்களும், போராளிகளும், எழுத்தாளர்களும் உருவாகின்றனர். அதுபோல், இதுசார்ந்த பழையவர்களின் எழுத்துக்களையும் வாசிக்க முடிகிறது. அதுபோல், எழுத்தாளர்கள், கவிஞர்கள், சிந்தனையாளர்கள் என்ற பதம் சுட்டிய அம்சங்களும் கேள்விக்குள்ளாகின்றன.  முன்புபோல் அல்லாமல், ஒன்றை எழுதிய மறுகணமே அது குறித்த கருத்துக்கள் பதிவிடப்படுகின்றன.  எதிர்ப்புகளும், ஏற்புகளும் கணத்தில் எல்லையற்று விரிகின்றன. அவை எதிர்பாராத புலங்களிலிருந்து வந்து குவிகின்றன.  ‘லைக்கியவாதிகள், பின்னூட்ட வாதிகள்’ என்ற புதிய செயற்பாட்டாளர்கள் பெருகுகின்றனர். தடைகள் குறைகின்றன. எனினும், blog  என்ற வலைப்பூ வசதி புதிதாக பாவனைக்கு வருகிறது.  எந்தக் கருத்துடையோரும், குழுக்களாகச் செயற்படவும், அதில் பல்லாயிரம் பேர் சில நாட்களிலேயே ஒன்று கூடவும் வாய்ப்புக்கள் கிடைக்கின்றன.  நேரில் தேடிப்போய் சந்திக்கவோ, உரையாடவோ வேண்டிய தேவை குறைகிறது.

எந்தவோர் எழுத்தாளரையும் ஒரு கணத்தில் சந்திக்க வாய்ப்புகள் கிடைக்கின்றன. பழம் பெரும் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் என நம்பியிருந்த பலரின் பிம்பங்கள் சிதைந்தும், புதியவர்களின் பிம்பங்கள் உருவாகியும் காலம் கனிந்து நிற்கின்றன.   லைக்குகளின் எண்ணிக்கையே ஒரு பிரதியின், எழுத்துக்களின் வெற்றியைத் தீர்மானிப்பதாக நம்பும் புதிய கூட்டமொன்றும் உருவாகிறது.  எண்ணற்ற நூல்களையும், தகவல்களையும் ஒரு நொடியில் அறிந்து கொள்ளும் மாபெரும் வாய்ப்பு கண்ணருகே வந்து நிற்கிறது.  ஆனால், அவற்றைப் புரிந்து கொள்வது என்பது மனித சிந்தனையின் ஆற்றலின்பாற்பட்டது என்ற கருத்து மட்டும் மாறாதிருக்கிறது.

பெரும் இலட்சியத்தை வரித்துக்கொண்ட மாபெரும் போராட்டம் தந்த தோல்வியில் தமிழ்ச் சமூகம் துவண்டு போய்க்கிடக்கிறது. ஈழத்து முஸ்லிம்கள் முன்வைத்த தனியலகு நிருவாக அரசியல் கோஷமும் முன்பைவிட புதிய நெருக்கடிக்குள் கிடக்கிறது.  இவற்றைப் பார்த்து சந்தோசப்படவும், எதிர்க்கவுமான தமிழ் மொழிபேசும் உலகு தழுவிய நிலை உருவாகிறது. நாட்டுக்கு வெளியேயும், தமிழ் மொழிக்கு வெளியேயும் மையங்கொள்ளும் இன்னுமொரு மக்கள் கூட்டமும் திரளாக உருவாகி நிற்கிறது.  ஆதரவோ எதிர்ப்போ, இலக்கியமோ எதுவாக இருந்தாலும், உலகு தழுவிய தமிழ் மொழிச் செயற்பாடாக விரிந்து பரந்து ஒரே கணத்தை வேகமாகப் பெற்று முற்றிலும் புதிதான ஒரு சமூகச் சூழல் உருவாகிறது.  அனைத்தும் உலகு தழுவிய என்ற பின்னொட்டோடு விரிந்து நிற்கிறது.

மேற்கில் தோன்றிய இஸ்லாமோபியா, மத்தியகிழக்கில் தோன்றி மத அடிப்படைவாதம்,  போன்றவை அரசுகள், நிறுவனங்கள், சமூகங்கள், தனிநபர்கள் என வியாபித்து தமிழ் மொழி பேசும் விரிந்த பரப்பிற்குள்ளும் இலகுவாக நுழைந்து செயற்படத் தொடங்குகிறது. இவற்றுக்கு எதிரான செயற்பாடுகளும் அதே வழியில் உலகு தழுவியதாக(தமிழ்மொழி) பேசுபொருளாகிறது.  எப்போதும் கூடவே கைகளில் சுமந்து செல்லும் ஒன்றாக, இந்த வெறுப்புகளும், ஆதரவுகளும், இலக்கியமும், அரசியலும், சாதனைகளும் மாறிவிட்டிருக்கின்றன. அத்தியாவசியத் தேவைகளாகவும், அத்தியாவசியச் செயற்பாடுகளாகவும் இவை அனைத்து மக்களையும் கவனிக்கச் செய்தபடியே இருக்கின்றன. தமிழ் பேசும் சமூகங்களும், தன்னிலைகளும் தாம் விரும்பிய படி மகிழ்வாகவும், திண்டாட்டத்துடனும் இருக்கின்றன.

புலம்பெயர் சமூகத்தின் பெரும்பகுதி, ஈழத்தில் இன்னும் போர் நடக்கிறது விரைவில் தனிநாடு கிடைத்துவிடும் என்ற தோரணையில், சிந்தித்துக்கொண்டும், தமது ராஜதந்திர மந்திராலோசனைகளை ஈழத்து தமிழ்ச் சூழலுக்கு வழங்கிக்கொண்டும் இருக்கின்றனர்.  மறுபுறத்தில் போர் முடிந்துவிட்டது; அத்தோடு புலம்பெயர் இலக்கியமும் செயற்பாடுகளும் முடிவடைந்துவிட்டதாக எண்ணத் தொடங்கியுள்ளனர்.  முன்புபோல் அல்லாது தற்போது, வரிகளும் கப்பங்களும் அவசியமில்லை என்ற ஆறுதலில்,  அந்தப் பணத்தினை உணவுவிடுதிகளிலும், உல்லாசப் பயணங்களிலும் (தாயகத்திற்கும் உல்லாசப் பயணிகளாகத்தான் வருகின்றனர் என்பது மேலதிகத் தகவல்) மதுவிடுதிகளிலும் செலவழித்துக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கு மறுதலையாகப் புலம்பெயர் இலக்கியவாதிகள் வரிகளுக்கும், கப்பங்களுக்கும் செலவிடும் பணம் மீந்திருப்பதால், பதிப்பகங்களை உருவாக்கியும், இன்னும் சிலர் தென்னிந்திய இலக்கிய வியாபார நிறுவனங்களிடம் அள்ளி இறைத்தும் ‘எனது புத்தகம் இந்தியாவில் வெளியானது’ என டைட்டில் போட்டுக்கொண்டும் மகிழ்ச்சியடைகின்றனர்.

இது இப்படி எனில், தாயகத்தில் நிலவரம் வேறானது என யோசிக்கத் தேவையில்லை.  இந்தியாவில் ஒரு புத்தகம் வெளியிடுவது என்பதே, இலக்கியத்தில் தாம் முக்கியமானவர்களாக மாறிவிட்டோம் என்பதற்கான உரிமம் (லைசன்ஸ்) எனக் கருதும் மனநோய் பெரிதும் தாக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டது. இந்திய இதழ்களில் ஓர் ஆக்கம் வெளிவருவது என்பது, பெருமைக்குரிய விசயமாகவும், இலக்கிய அந்தஸ்தாகவும் மாறியிருக்கிறது.

இதனடியாக சிங்கப்பூர், மலேசியா, புலம்பெயர் தேசங்கள், ஈழம் என அனைத்துத் தேசங்களிலிருந்தும் உருவாகும் தமிழ் இலக்கியங்கள், தென்னிந்தியாவில் குவிந்து, தமிழ் பேசும் இலக்கியங்களுக்கும், உலகு தழுவிய தமிழ் இலக்கியவாதிகளுக்கும் “தலைநகரமாக” தென்னிந்தியாவை மாற்றிவிட்டனர். ஆமாம், உலகத் தமிழ் இலக்கியத்தின் தலைநகரமாகத் தென்னிந்தியாவும், அதன் பொருளாதார பிரயோசன கர்த்தாக்களாக இலக்கிய வியாபார நிறுவனங்களுமாகப் புதிய அவதாரத்தை எடுத்து நிற்கிறது. தமிழ் இலக்கியத்தை முன்வைத்து வெளிப்படையாக வியாபாரமாகவும், மறைமுகமாக அதிகாரமாகவும் மாறிவிட்டிருக்கிறது. அந்த வியாபார அதிகார சக்திகளை எதிர்ப்பவர்கள் இலக்கியவாதிகள் அல்ல என்று அறிவிக்கப்படுமளவு நிலைமை மாற்றமடைந்திருக்கிறது. இதுதான் இன்றைய விரிந்த பரப்பிற்குள்ளான இலக்கிய நிலவரம். இதை எதிர்க்கும் சிறு குழுக்களும், தனிநபர்களும் இருப்பது உண்மைதான். எனினும்,  இந்தப் பிரமாண்டமான இலக்கிய வியாபாரத்தை எதிர்க்குமளவு பொருளாதாரப் பலமும், வாசகப் பலமும் ஈழம், புலம்பெயர் தேசம், மலேசியா, தென்னிந்தியா உள்ளிட்ட குறைந்த பார்வையாளர்களைக் கொண்ட இலக்கியச் செயற்பாட்டு முகாம்களிடம் இல்லை என்பதுதான் உண்மை.

இதை அடிப்படையாக வைத்துப் பிறிதொரு கோணத்திலும் பார்க்க வேண்டியிருக்கிறது.  உலகின் எந்தப் பகுதியில் உருவாகும் தமிழ் இலக்கியங்களையும், அதன் போக்குகளை அறிந்துகொள்ளவும், அதை முன்னிறுத்தி தமிழின் விரிந்த பரப்பிற்குள் இலக்கிய நிலவரத்தின் ஆழ அகலங்களை அறிந்து செயற்படவும் வசதியேற்படத்தியிருக்கிறது என்பது இதன் முக்கியமானதும், அவசியமானதுமான ஒரு பகுதியாகும்.

தென்னிந்தியா உலகத் தமிழ் இலக்கியத்தின் தலைநகரமாக ஆகிவிட்டது என்ற வகையில்,  தென்னிந்திய இலக்கியவாதிகள் தாம்தான் தமிழ் இலக்கியத்தின் தத்துவ உருவாக்கத்தைச் செய்பவர்கள் என்றும்,  தாம்தான் தலைமை கொடுப்பவர்கள் என்றும் ஒருவிதப் பிரமையை எடுத்திருப்பதும், அதை ஏற்கும் குழுக்களும், தனிநபர்களும் அவர்களின் பின்னால் இழுபட்டுச் செல்வதும் ஆரோக்கியமான ஒரு விஷயமல்ல.  இதையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட வேண்டும்.

இந்த இடத்தில், எழும் கேள்விகள் முக்கியமானவை. ஏன் ஈழத்துக் கவிதை வளர்ச்சி அடையவில்லை? ஏன் தென்னிந்தியாவைத் தமிழ் இலக்கியத்தின் தலைநகரமாகக் கருதி ஈழத்தவரும் புலம்பெயர்வாளர்களும் சரணடைய வேண்டி வந்தது? இவற்றுக்கான காரணம் என்ன?  இதை சற்று அலசுவதே தேவை என நினைக்கிறேன்.

தென்னிந்தியத் தமிழ் இலக்கியத்தோடு போட்டியிடக் கூடிய நிலையிலும், அதை சவாலுக்கு உட்படுத்தும் நிலையிலும் இருந்தது ஈழத்துத் தமிழ் இலக்கியம்தான். (சிங்கப்பூர் , மலேசிய இலக்கியங்கள் அந்த நிலையில் இருக்கவில்லை). மலையகத் தமிழர்களின் புலப்பெயர்வு, ஈழத்துத் தமிழர்களின் புலப்பெயர்வு, போராட்ட காலச் சூழல் என ஈழத்துத் தமிழ் மொழி, தென்னிந்தியத் தமிழ் மொழிக்கில்லாத பலவகையான அனுபவ உள்ளடக்கங்களையும், முற்றிலும் புதிய சமூக நெருக்கடிகளையும், சமூகப் பிரச்சினைகளையும் சந்திக்கும் வாய்ப்புகள் ஈழத் தமிழ் மொழிக்குக் கிடைத்தன. இத்தனை வாய்ப்புகள் கிடைத்தபோதும், (அதனுடன் இன்னுமொன்றையும் இணைக்க வேண்டும். தமிழ் இலக்கியத்தின் விரிந்த பரப்பிற்குள் தலித் இலக்கிய முன்னோடிகளும் ஈழத்தவர்களே. டானியல், டொமினிக் ஜீவா, எஸ்.பொ. போன்ற பலர். அத்தோடு, பெண்ணியப் பார்வையும், அரசியல் எதிர்க்குரலாக எழுந்த பெண் கவிஞர்களும் ஈழத்தைச் சேர்ந்தவர்களே.-‘சொல்லாத சேதிகள்’ இதற்கு ஒரு நல்ல உதாரணம்). ஏன், மிகக் குறைவான சமூகவியல் நெருக்கடிகளையும், அனுபவங்களையும் சந்தித்த தென்னிந்தியத் தமிழ்மொழி உலகத் தமிழ் இலக்கியத்தின் தலைநகரமாக மேலெழுந்து வர முடிந்தது? வாசகப் பரப்பும், பிரசுர வசதிகளும் அதிகமானது என்ற சப்பைக் கட்டை முன்வைக்க வேண்டியதில்லை. இந்தக் கேள்வியை ஆழமாக அணுகிப் பார்த்தால் அதற்கான விடைகள் ஓடிவரும்.

ஈழத்து இலக்கியப் பரப்புக்குள் இருந்த இலக்கிய ஜாம்பவான்களில் ஒரு சாரார் பாரதியின் செய்யுள் உடைப்புடன் உருவாகி பிச்சமூர்த்தி வழியாக வளர்ச்சியும், செழுமையும் பெற்ற நவீன கவிதையைப் புறக்கணித்து, எங்களிடம் நவீன கவிதை இருக்கிறது. அதற்கென்று பிரத்தியேகமான தனித்தன்மைகளுடன் உருப் பெற்றிருக்கிறது.  எனவே, உங்கள் மோசமான நவீன கவிதை தேவையில்லை என்று ஒதுக்கியதும், அவர்கள் சொன்ன தனித்தன்மையோடும், பண்புகளோடும் ஈழத்து நவீன கவிதையை வளர்த்தெடுக்காமல் போனதும், வளராமல் போதும் முதலாவது காரணம். எண்பதுகளில் இவர்களே தடுக்கி பிச்சமூர்த்தி வழி நவீன கவிதையை கையிலெடுத்தது வேறு கதை.

இரண்டாவதும் முக்கியமானதுமான விசயம் என்னவெனில், எழுபதுகளின் நடுப்பகுதியிலிருந்து தென்னிந்திய நவீன இலக்கிய வெளி தான் சந்தித்த, அந்நியமாதல், இருத்தலியம், அமைப்பியல், பின் அமைப்பியல் தொடங்கி பின்நவீனத்துவம், தலித்தியம், பெண்ணியம், பின்காலனியம் வரையான பெரும் கோட்பாடுகளால் தாக்கமுற்று எதிர்த்தும், ஏற்றும் வளர்ந்து செழித்து, பலநூறு இலக்கியப் பிரதிகளும், கவிதைப் பிரதிகளும், வகைதொகையற்ற விவாதங்களும், செயற்பாடுகளுமாக மேலெழுந்து வந்தது. ஆனால், இந்தக் கோட்பாடுகள் ஈழத்து இலக்கியத்தைச் சந்தித்துவிடக்கூடாது என்ற இறுமாப்பில் ஈழத்தில் இலக்கியத் தீரமானகரமான சக்தியாக இருந்தவர்கள் மூர்க்கமாகச் செயற்பட்டனர். கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக்கொண்டு ஈழத்து இலக்கியத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் காப்பாற்ற முயன்றுகொண்டிருந்த சிவத்தம்பி, நுஃமான் போன்றவர்களின் செயற்பாடுகளின் விளைவுதான் இது.  இவர்களை மட்டுமே இதற்காகக் குற்றம் சுமத்த முடியாது.  கோட்பாடுகள் ஈழத்து தமிழ் இலக்கிய வெளியில் நுழைய முடியாது தடுத்து நின்ற குழுவினருக்குத் தலைமை கொடுத்தவர்களாக இவர்கள் இருக்கலாம். பிற இலக்கியச் செயற்பாட்டாளர்கள், இந்தத் தடைகளை மீறி கோட்பாடுகளை ஈழத்து இலக்கியத்தோடு சந்திக்கச் செய்யும் வேலைகளில் இறங்கியிருக்கலாம். ஆனால், அந்தத் துணிவோடும் தெளிவோடும் இயங்கும் ஒரு தலைமுறை அப்போது உருவாகியிருக்கவில்லை. சிவத்தம்பி, நுஃமான் போன்றவர்களின் மோதிரக்கைகளால் குட்டுப்படுவதை நேசித்த ஒரு கூட்டம்தான் பெரியவர்களாகவும், இளையவர்களாகவும் இலக்கியச் செயற்பாட்டில் அப்போது இருந்தனர்.  ஆக, ஒட்டுமொத்த இலக்கியவாதிகளின் பொறுப்பில்தான் இதை விட்டுவிட வேண்டும். நுஃமானின், ‘பிரதியின் மரணம்’ என்ற கட்டுரை பின்னவீனத்திற்கு எதிராக எழுதப்பட்டதுதான். இது காலச்சுவடில் தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் வெளிவந்தது.

இப்படி தென்னிந்திய நவீன கவிதையும், தென்னிந்திய இலக்கியத்தில் நுழைந்து பல வழிகளில் இலக்கியத்தைச் செழிப்புறச் செய்த கோட்பாடுகளையும், ஈழத்து நவீன இலக்கியம் சந்தித்துவிடக்கூடாது என அரணமைத்து காத்து நின்றவர்கள், பின்நாட்களில் தென்னிந்திய இலக்கியம் உலகத் தமிழ் இலக்கியத்திற்குத் தலைநகரமாக உருமாறிக் கொண்டிருந்தபோது, அங்கு ஓடிப்போய் அங்கு உருவான இலக்கிய வியாபார நிறுவனங்களிடம் தமது தலையை அடகுவைத்ததுதான் நடந்தேறியது. அவர்களுக்கு ஏலவே இருக்கும் பெயரை வைத்துக்கொண்டு இதைச் சுலபமாக செய்து முடித்துக்கொண்டனர். அதற்கும் அப்பால் சென்று தென்னிந்திய இலக்கிய வியாபாரிகள் நடாத்தும் நடுத்தர இதழொன்றுக்கு ஞான உபதேசியாக மாறிக்கொண்டதும் இன்னும் முக்கியமானது. அதையும் கடந்து தான் விரும்பிய, தனக்கு நெருக்கமான,  இந்த இலக்கிய வியாபார நிறுவனத்துடன் இணைத்துவிடும் பணியையும் பலர் செய்தனர்.

தென்னிந்திய இலக்கியத்தோடு போட்டியிடத்தக்க நிலையில் இருந்த ஈழத்து நவீன இலக்கியம், அந்த இலக்கியத்திற்குத் தலைமை கொடுத்தவர்களின், இலக்கிய ராஜதந்திரம், மற்றும் அவர்களின் முற்போக்கு என நம்பிய சிந்தனைகளின் வழிமுறைகளினாலும், அவர்கள் வகுத்த இலக்கிய தத்துவார்த்தக் கருத்துக்களின் வலிமையினாலும், பல பத்தாண்டுகள் ஈழத்து நவீன இலக்கியம் பின்நோக்கிப்போய் நிற்கிறது என்பதுதான் விசயம்.

தமிழ்த் தேசியவாத இலட்சியத்திற்குத் தலைமைகொடுத்த புலிகள் அமைப்பு எப்படி,  அந்த இலட்சியத்தையும், தமிழர்களின் அரசியல் அபிலாஷகளையும் நந்திக்கடலில் கொட்டிக் கவிழ்த்து அழித்ததோ அதுபோலவே, ஈழத்து நவீன இலக்கியத்திற்குத் தலைமை கொடுத்தவர்கள், இறுதியில் தென்னிந்தியாவில் கொண்டுபோய் அதனைச் சரணடையச் செய்துவிட்டனர்.

ஈழத் தமிழ் வெளியின் அரசியலும், இலக்கியமும், அதை வழிநடாத்தியவர்களின் போதாமைகளினாலும், ஆற்றலின்மையாலும், மீண்டும் தொடங்கிய இடத்திற்கே போய் நிற்கிறது. இதுதான் உண்மை.

இந்தக் காலத்தை, அதாவது தென்னிந்தியாவை மையம் கொள்ளும் அம்சத்தை ‘இருள்வெளி’ தொகுப்பில் சுகன் சுட்டிக்காட்டும் ஓர் அம்சத்தைத் தருவதினூடு புரிந்துகொள்ள உங்களுக்கு வாய்ப்பாக இருக்கும்:

‘யாரோடு ஒத்து ஓடினால்

வசதியாக இருக்குமென்று பார்க்கும்

எழுத்து வியாபாரிகள்

………………………..

எதற்கும் ஏலம்போகத்

தயாராக இருக்கும் எழுத்து’

இப்படி ஒரு நிலை வெளிப்படையாகவே பயன்பாட்டுக்கு வருகிறது.

இருபத்தியோராம் நூற்றாண்டின் இரண்டாவது பத்தாண்டுகள் மேலும் புதிய அம்சங்களோடு தன்னை முன்வைக்கத் தவறவில்லை.  பல புதிய கவிஞர்களும், ஏலவே நவீன கவிதையை அடியொற்றி இயங்கிய பல பழைய கவிஞர்களும் புதிய உத்வேகத்தோடு களத்தில் இயங்குகின்றனர். புலம்பெயர் இலக்கிய வெளியில் மாற்றுக்குரலாக ஒலித்த ‘இலக்கியச் சந்திப்பு’ என்ற ஒன்றுகூடல் நிகழ்வு ஈழத்திலும் காலடி எடுத்து வைக்கிறது. (தாயகத்தில்)  தமிழ்த் தேசியவாதிகள் அதன் வருகைக்கு பலமான எதிர்ப்புக்களைத் தெரிவிக்கின்றனர். சிலர் அதனோடு இணைந்து இயங்குகின்றனர். இதில் முக்கியமானவர்களாகப் புலிகளின் அமைப்பிலிருந்த கருணாகரன்,  இலக்கியச் செயற்பாட்டாளர் றியாஸ் குரானா போன்றவர்கள் தாயகத்தைச் சேர்ந்தவர்கள். அதுபோல், மட்டக்களப்பு, மலையகம், வன்னி எனப் பல இடங்களில் இலக்கியச் சந்திப்பு நடைபெற்று களைகட்டுகிறது. இதுபோல், பெண்ணியக் கருத்துநிலைகளை முதன்மைப்படுத்தி புலம்பெயர் தேசத்தில் உருவான பெண்கள் சந்திப்பு என்ற இலக்கிய, அரசியல், சமூகச் செயற்பாடுகளைப் பெண்களின் கோணத்தில் அணுகியும், விவாதித்தும் வந்த இந்த முக்கியமான இயக்கமும் ஈழத்தில் கால்வைக்கிறது. அதுவும் பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்கிறது.

யாழ்ப்பாணத்திலிருந்து கிரிசாந்த், யதார்த்தன், ஆதிபார்த்தீபன் போன்ற இளைஞர்கள் இலக்கியத்திற்குள் வருகின்றனர். புதிய சொல், ஆக்காட்டி, நடு, அகழ், மறுத்தோடி போன்ற இணைய மற்றும் அச்சு இதழ்கள் வெளிவருகின்றன. ‘ஊடறு’வின் முன்னெடுப்பின் விளைவாக, ‘இசைபிழியப்பட்ட வீணை’ என்ற தலைப்பில் மலையகப் பெண்களை மைப்படுத்திய கவிதைத் தொகுப்பும், பெண் போராளிகளின் கவிதைத் தொகுப்பான, ‘பெயரிடப்படாத நட்சத்திரங்கள்’ என்ற தொகுப்பும் வெளிவருகின்றது. அத்தோடு, முஸ்லிம்களின் மீதான இன அழிப்பை முன்வைக்கும், ‘என்ட அல்லாஹ்’ என்ற பல எழுத்தாளர்களின் கதைகளைக் கொண்ட தொகுப்பொன்றும் வெளிவருகிறது.

ஏறாவூரிலிருந்து சப்ரி தலைமையிலான வாசகர் படிப்பு வட்டமும், மட்டக்களப்பிலிருந்து திலீப்குமார் தலைமையிலான பெரியார் படிப்பு வட்டமும், கிண்ணியாவிலிருந்து கவிஞர் ஏ.நஸ்புள்ளாஹ் தலைமையில் றியாஸ் குரானா வாசகர் வட்டமும் உருவாகின்றன.  இந்த வாசகர் வட்டங்கள் எல்லாம் தம்மோடு இணைந்ததாகப் புத்தக விற்பனைகளிலும், இலக்கிய ஒன்றுகூடல்களிலும், பிரதிவாசிப்புப் பகிர்வுகளிலும் களமிறங்குகின்றன.  இலக்கியக் கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைகளும் நடைபெறுகின்றன. அதுபோல், புத்தகக் கண்காட்சிகளும் நடைபெறுகின்றன.  யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அக்கரைப்பற்று போன்ற இடங்களில் இலக்கியக் களச்செயற்பாடுகளாக இந்தப் புத்தகக் கண்காட்சிகள் அமைகின்றன.  மறுகா சிறிதழின் ஆசிரியர் மலர்ச்செல்வன் ஆரையம்பதியில் இருநாள் இலக்கிய நிகழ்வொன்றை நடாத்துகிறார். அதில் பலரும் கலந்துகொள்கின்றனர்.

அதுபோல், கவிஞர் முர்சித் உள்ளிட்ட நண்பர்கள் வட்டம் அகரம் இலக்கிய ஒன்றுகூடல்கள் பலவற்றை பல ஊர்களில் நடாத்துகின்றனர். எழுத்தாளர் டாக்டர் நௌஷாத் தலைமையில், ‘குயிலோசை’ எனும் கவிதை வாசிப்பும் கலந்துரையாடல் நிகழ்வும் இடம்பெறுகின்றது. அவை மாதாமாதம் தொடர்ச்சியாக நடந்தேறுகிறது.

இத்தோடு இணைந்ததாகப் புதியதோர் அம்சமும் கலைக் குடும்பத்திற்குள் உள்வாங்கப்படுகிறது. புகைப்படக் கண்காட்சிகளும், புகைப்படக் கலைஞர்களும் இணைந்து களத்திற்கு வருகின்றனர்.  அதுபோல் குறும்பட இயக்கங்களும், ஆவணப்படக் (டொக்கியூமன்ரறி) காணொளிகளும் தயாரிக்கப்படுகின்றன. தென்னிந்தியத் திரைப்படங்களில் உதவி இயக்குநராகவும், எழுத்தாளராகவும் இருக்கும் ஹஸீன் ஆதம் முக்கியமான பல ஆவணப்படக் காணொளிகளைத் தயாரிக்கிறார். முன்னாள் போராளிகள் பற்றியும், ‘திகன’ கலவரம் பற்றிய காணொளிகளுடன், கலாநிதி தீன் முகம்மட் உடனான நேர்காணல் என்பன மிக முக்கியமான ஆவணங்களாக வெளிவருகின்றன. நப்லா, அஷ்பாக், என்.ஆத்மா போன்றவர்களும் கறுந்திரைப்பட செயற்பாட்டில் இயங்குகின்றனர்.

புத்தக நிலையங்கள் திறக்கப்படுகின்றன. படிப்பகம் சார்பாக யாழ்ப்பாணத்திலும், எழுத்தாளர் சமூகச் செயற்பாட்டாளர் சிராஜ் மஷ்ஹூர் ‘பேஜ் புக்ஷொப்’ என்ற பெயரில் அக்கரைப்பற்றிலும் இவை நடக்கின்றன. அத்தோடு இணைந்ததாகப் புத்தகக் கண்காட்சியும், இலக்கிய உரையாடல்களும் எனத் தொடர்கிறன்றன.

மட்டக்களப்பில், ‘காகம்’ பதிப்பகம் என்று ஒன்று உருவாகிறது. அதன் மூலம் இஸ்லாமிய மாற்று சிந்தனை என்றும் இலக்கிய நூல்கள் என்றும் பல புத்தகங்கள் வெளிவருகின்றன.  மாதாந்தத் தொடர் உரையாடல்களையும் அது நடாத்துகிறது. உள்நாட்டு, வெளிநாட்டுச் சிந்தனையாளர்கள் மற்றும் இலக்கியவாதிகளைக் கொண்டு வந்து கலந்துரையாடல்களும் நடைபெறுகின்றன. இதைத் தலைமை ஏற்று நடாத்துபவர் ஈழத்தின் இஸ்லாமிய மாற்று சிந்தினையாளரான ஏபீஎம். இத்ரீஸ், அவர்களுடன் இம்தாத், இர்பான் போன்றவர்கள் இணைந்திருக்கின்றனர்.

அதுபோல், பல தனிநபர் கவிதைத் தொகுப்புகளும் இந்தக் காலகட்டத்தில் வெளிவருகின்றன.  அவைகளில் அதிகமானவை, poetry fiction வகையைச் சார்ந்தவை.  றியாஸ் குரானா முன்வைத்த கவிதைச் செயலைப் பின்தொடர்பவை. அதில் தோய்ந்தவை.  அதேநேரம், முஸ்லிம் பெண்ணான லறீனா அப்துல் ஹக் அவர்கள் எழுதி, மெட்டமைத்து, இசையமைத்துப் பாடிய, ‘சுயமி’ எனும் இசை இறுவட்டு ஒன்றும் வெளிவருகிறது.

பல புதிய இளந்தலைமுறையினரும் கவிதைச் செயற்பாட்டுக்கு வருகின்றனர்.  றியாஸ் குரானா, மஜீத், அகமது பைசல், ஏ.நஸ்புள்ளாஹ், நெற்கொழுதாசன், கோ.நாதன்,  இமாம் அத்னான், ஜெம்ஸித் சமான், ஏ.கே.முஜாரத், பிரோஸ்கான், அன்வர் புகாரி, ஆபித், தணிஷ்கரன், மாரிமுத்து சிவகுமார், சுந்தர் நிதர்சன், சாஜித் அகமட், பதுளை அருள், ஜிப்ரி ஹாஸன்,  கருணாகரன், டீன் கபூர், ரிஷான் ஷெரிப், தீபச் செல்வன்,  முர்சித் அகமட், சப்னாஸ் ஹாசிம், ராம்கி, முகமட் தம்பி நௌபல், ரோசான் ஏ ஜிப்ரி, மிர்ஸா,நவாஸ் சௌபி என்று இன்னும் பலர்.

பெண் கவிஞர்களாக, அனார், லறீனா அப்துல் ஹக், கற்பகம் யசோதரா,  ஃபாயிஸா அலி, தமிழ் நதி, கவிதா முரளீதரன், எம்.ஏ. ஷகி, அமைரா சஸ்னா, நப்லா, நுஹா, மிஸ்ரா ஜப்பார், நவயுகா, உஸ்ரி உஸ்ரா, ஸர்மிளா செய்யத், சமிலா அலி யூசுப், சாமிலா முஸ்டீன் இப்படி இன்னும் பலர் முன்னுக்கு வருகின்றனர்.

இவர்களில் றியாஸ் குரானா முக்கியமானவர். இந்தியா இலங்கை என மூன்று கவிதைப் பிக்ஷன் தொகுப்புகள் வெளிவருகின்றன.  ஆதவன் தீட்சண்யா, பா.வெங்கடேசன் போன்ற இந்திய இலக்கியச் செயற்பாட்டாளர்களிடமிருந்து, இலங்கைப் பிரச்சினைகளை றியாஸ் குரானாவின் கவிதைகள் கவனத்திற்கொள்ளவில்லை என்ற விமர்சனங்கள் வருகின்றன.

மலேசியா, இந்தியா, ஈழம் , புலம்பெயர் தேசம் என தமிழின் விரிந்த பரப்பிற்குள் இயங்கும் பல இணைய இதழ்கள், சிற்றிதழ்கள், முகநூல் என சுமார் பத்தொன்பது நேர்காணல்களை றியாஸ் குரானாவிடமிருந்து பெற்றுப் பிரசுரிக்கின்றனர். இதில் மலேசிய இணைய இதழான வல்லினத்தில் மூன்று மாதங்களாக ஒரு நீண்ட நேர்காணல் தொடராக வருகிறது.  கவிதை பிக்ஷன்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்ட றியாஸ் குரானா விமர்சனத் துறையிலும் கட்டுரைகளிலும் களமிறங்குகிறார். அரசியல் பிரச்சினைகளை அவரது கவிதைகள் ஏன் அக்கறைகொள்ளவில்லை என்பது குறித்து விரிவாக எழுதுகிறார்.

தமிழ் நவீன கவிதைகளின் பெருங்கவிஞர்களாக உலகத் தமிழ் இலக்கியத்திற்குத் தலைமை கொடுத்துத் தென்னிந்தியாவில் எழுந்து நிற்கும் பலரின் கவிதைகளை முன்வைத்து, அதன் போதாமைகளைக் கவன ஈர்ப்புச் செய்யும் ‘நவீன கவிதை மனம்’ என்ற தொடர் கட்டுரைகளை எழுதுகிறார். கலாப்ரியா, கல்யாண்ஜி, தேவதேவன், தேவதச்சன், சுந்தர ராமசாமி, பிரமிள், நகுலன் போன்ற பலரது கவிதைகளை இந்தக் கட்டுரைத்தொடர் விமர்சனத்திற்குட்படுகிறது. மஹ்மூத் தர்வீசின் கவிதை ஒன்றும் இதிலடக்கம். பல நவீன கவிஞர்களின் கவிதைகளை ‘ரீமேக்’ என்ற தலைப்பில் மீளுருவாக்கம் செய்துகாட்டுகிறார். இச்சமயத்தில் முக்கியமான கவிஞரான சுகுமாரனின் கவிதை ஒன்றை ‘ரீமேக்’ செய்தது தொடர்பில் அவருடன் விவாதமொன்றும் இடம் பெறுகிறது. இந்தியச் சிற்றிதழான சிற்றேடு ஆசிரியரும் கவிஞரும் விமர்சகருமான ராம் சந்தோசுடனும் ஒரு விவாதம் நடைபெறுகிறது.  இவை கவிதை குறித்தானவைதான்.  கவிஞர் இசை கவிதை குறித்து எழுதிய கட்டுரை ஒன்றுக்கும் விரிவான வகையில் ஒரு எதிர்ப்பை எழுதுகிறார். ஆனால், அது உரையாடலாவோ விவாதமாகவோ தொடரப்படவில்லை.  புலம்பெயர் கவிஞரான கற்சுறாவின் கவிதைகளை முன்வைத்து கட்டுரை ஒன்றை இவர் எழுதுகிறார். அதற்கு வந்த கேள்வி ஒன்றை முன்வைத்து நீளமான  ஒரு பதிலையும் எழுதுகிறார்.  அதுபோல், சங்ககாலம் தொட்டு பின்நவீன காலம் வரையான கவிதைப் போக்குகளை மேலோட்டமாக அலசி, ‘நவீனகவிதை காலாவதியாகிவிட்டது’ என்றும், ‘கற்பனை என்பது மேலதிகச் சிந்தனை’ என்றும் விரிவாகப் பேசியதோடு, பல சமகாலத்துக் கவிஞர்களின் கவிதைகள் குறித்த விமர்சனங்களையும்,  நூல்களுக்கான உள்ளுரைகளையும் எழுதுவதோடு,  நவீன கவிதை மற்றும் பின்நவீன கவிதைகள் பற்றியும் பல கட்டுரைகளை எழுதுகிறார். இவை இன்னும் நூலுருவில் தொகுக்கப்படவில்லை. தென்னிந்திய சிறுபத்திரிகை ஆசிரியரான மனோன்மணி பல முறை கேட்டும் அதை ஒழுங்குபடுத்திக்கொடுக்கப்படவில்லை.

இந்தவகையில், றியாஸ் குரானா தான் முன்வைத்த கவிதைப் பிக்ஷன் போக்கைப்  புரிந்துகொள்வதற்கான கவிதையியல் வியாக்கியானங்களை எழுதியதோடு, கவிதை பிக்ஷனை மற்றவர்களும் தொடர்ந்து எடுத்துச் செல்வதற்கு கருத்தியல் ரீதியிலான வழியை ஏற்படுத்திக் கொடுத்தார் என்ற வகையில் முக்கியமான இலக்கியச் செயற்பாட்டாளராக இயக்கத்திற்கு வருகிறார்.

கல்லுரன் உட்பட பல கவிஞர்களின் கவிதைத் தொகுப்புகள் அவர்களின் முக்கியத்துவம் குறையாத வண்ணம் தென்னிந்தியப் பதிப்பகங்களில் வெளிவர உதவியிருக்கிறார் என்பதையும் இந்த இடத்தில் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

கவிதை பிக்ஷன் போக்கைத் பின்தொடர்ந்து, அதை மேலும் செழுமைப்படுத்திச் செல்லும் பல கவிஞர்களில் அன்வர் புகாரி, ஏ.நஸ்புள்ளாஹ், ஜமீல், மஜீத், அகமது பைசல், பிரோஸ்கான், முஜாரத், டீன் கபூர், லறீனா அப்துல் ஹக் ,கருணாகரன் போன்றவர்கள் ஏலவே, நவீன கவிதையின் சாயலைக்கொண்ட கவிதைத் தொகுப்புக்களை வெளியிட்டவர்கள்தாம். இமாம் அத்னான், நப்லா, ஜெம்சித் ஸமான், எம்.ஏ.ஷகி போன்றவர்கள் பின்நவீன கவிதைப் போக்கிலேயே நேரடியாக இலக்கியச் செயற்பாட்டுக்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், இந்த இரண்டு பகுதியிலிருக்கும் கவிஞர்களின் பின்நவீன கவிதைப் பிக்ஷன்கள், மேலும் பல புதிய திசைகளை விரித்துச் செல்லக்கூடிய தன்மையைத் தமது கவிதைப் பிக்ஷன் உருவாக்கத்திலேயே துளிர்த்து நிற்கின்றன என்பது முக்கியமானது.  இதில் மஜீத்,  புனைவு உத்திகள், நுண்ணரசியல் கவனஈர்புப் என்றவகையில் தமது கவிதைப் பிக்ஷனைத் தொடர்ந்தவர்.

அகமது பைசல், ஏ.நஸ்புள்ளாஹ், அன்வர் புகாரி, ஜெம்சித் ஸமான், பிரோஸ்கான் போன்றவர்கள் கவிதை பிக்ஷன் உருவாக்கத்தின் சாத்தியங்களைப் பெருக்கும் வழியில் முயற்சிப்பவர்கள்.  பரிச்சய நீக்கம், மெஜிக்கல் ரியலிசப் பண்புகளை அதிகமாக இணைத்து கவிதையினுள்ளே உருவாகும் சம்பவங்களுக்காகக் கதையாடலை வளர்த்துச் செல்பவர்களாக முன்னுக்கு வருகிறார்கள். கவிதைப் பிக்ஷன்களில் கிளைத்துச் செல்லக்கூடிய பலதள விரிவுகளைக் கவனத்திற்கொள்ளும் இழைகள் இவர்களின் கவிதைப் பிக்ஷனகளினுள்ளே தலைகாட்டுகின்றன. மிர்ஸா நவீன கவிதைச் செயற்பாட்டுக்கும், பின்வீன கவிதைச் செயற்பாட்டுக்குமிடையே ஒரு தொங்கோட்டத்தைச் செய்பவர். நவாஸ் சௌபியும் இதே அடிப்படையைக் கொண்டவர்தான்.

கருணாகரன், அரசியலை பன்முகக் கோணத்தில் அக்கறை கொள்வதோடு, மெஜிக்கல் ரியலிசக் கூறுகளை மிகக் குறைவான அளவுகளிலும், தேவையான இடங்களிலும் கவனமாகப் பயன்படுத்துகிறார் என்றே சொல்ல வேண்டும். இது கவிதை உருவாக்கத்தில் இவருக்கு இருக்கின்ற தேர்ச்சியையும், கவிதை செய்நேர்த்தியில் இருக்கின்ற அக்கறையையும் வெளிக்காட்டுகின்றது.  கவிதையின் சொல்லும் முறையில் ஏற்படக்கூடிய பல கவனிப்பு உத்திகளையும் மேலெழச் செய்கிறார். இருந்தாலும் இவரது பல கவிதைகளில் நவீன கவிதையின் சொல்லும் முறைமை துருத்திக்கொண்டு வெளியே வராமலுமில்லை.

டீன் கபூரின் கவிதைகள் பின்நவீன கவிதைப் பிக்ஷன் கவனத்திற்கொள்ளும் அழகியலையும், கவிதையினுள்ளே உருவாகும் அரசியல் கதையாடலையும், சில நேரங்களில் முழுமையாக நிரப்பியும், சிலநேரங்களில் கைவிட்டும் நகரும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. நவீன கவிதையில் அதிக பரிச்சயம் இருப்பவர் என்பதால் நவீன கவிதையின் எடுத்துரைப்பு முறை தூக்கலாகப் பல கவிதைகளில் வெளிப்பட்டு நிற்கின்றன. நவீன கவிதையின் எடுத்துரைப்பு முறையும், பின்நவீன கவிதைப் பிக்ஷனின் கவிதைச் சம்பவங்களும் என கலந்து செல்லும் ஒருவகைப் புனைவுகளாக இவரின் கவிதைகள் மேலெழுகின்றன. இன்னும் தொடர்ந்து இவர் எழுதும்போது அவற்றை வாசிப்பிற்குட்படுத்தும் நேரத்தில் அவரின் கவிதையின் உள்ளார்ந்த இயங்கு தளத்தை அவதானிப்பதே சரியான அணுமுறை என நினைக்கிறேன்.

ஜமீலின் கவிதைகளின் அடியோட்டமாக நவீன கவிதையின் புரிதல் முறையே இருக்கிறது. எனினும், விளிம்பு நிலையில் வைக்கப்படும் சிறுவர்களை அக்கறை கொள்வதினூடாகவும், புனைவுத்தியோடு இந்த விளிம்புநிலை மக்களின் பக்கம் நின்று பேசும் அரசியலைக் கவிதையின் உள்ளலகுகளில் கவிதைச் சம்பவங்களாக வளர்த்துச் செல்வதினூடாகவும்,  மெஜிகல் ரியலிசப் பண்புகளைச் சிறப்பாகக் கையாள்வதினூடாகவும் மேலெழுந்து நிற்கிறார்.  கவிதைக்குள் உருவாக்கப்படும் சம்பவங்களில் மற்றமைகளுக்கான இடம் என்றவகையில் பன்மையானதோர் இடத்தை மேற்குறிப்பிட்ட பல கவிஞர்களைப் போல் குறைந்தளவிலேயே அக்கறைகொள்வது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. பொதுவாகக் கவிதைப் பிக்ஷன் போக்கை தொடரும் பல கவிஞர்களிடமிருக்கும் ஒரு முக்கிய குறைபாடாக இதைச் சொல்லலாம். இதற்கான காரணமாக, பின்நவீனத்துவக் கருத்தியலில் இவர்களுக்கு இருக்கும் பரிச்சயக் குறைவையே சுட்டிக்காட்ட வேண்டும். எனினும், இவர்களின் கவிதை உருவாக்கமும், கவிதைக்குள்ளாக முன்வைக்கப்படும் கவிதைச் சம்பவங்களும், அதற்குக் கையாளும் சாத்தியமான பல வழிமுறைகளும் மேலெழுந்து கவிதைப் பிக்ஷசன் செயற்பாட்டில் முக்கியமானவர்களாக அவர்களை முன்னுக்குக் கொண்டுவருகிறது. கவிதைக் கதையாடலை இத்தோடு இணைத்து வளர்க்கும்போது பல புதிய திசைகளும், எல்லைகளும் விரிந்து செல்லும் என்பது உறுதியானது. வரும் பத்தாண்டுகள் அதற்கான காலமாகக்கூட அமைந்துவிடலாம்.

பின்நவீனத்துவம், பெண்ணியம் எனக் கருத்தியல் தளத்தில் அவற்றை முழுமையாக உள்வாங்கியும், பிக்ஷன் தளத்தில் செயற்பட்டும் நகர்ந்து செல்லும் சிலரும் இருக்கின்றனர். அந்தவகையில், இமாம் அத்னான், லறீனா அப்துல் ஹக், நப்லா, ஆபித், தணிஷ்கரன் போன்றவர்களைச் சொல்லலாம். அதிலும், ஆபித், மற்றும் தணிஷ்கரன் போன்றவர்கள் புனைவெழுத்தாளர்கள் அல்ல. அதேநேரம், நப்லா மற்றும் லறீனா போன்றவர்கள் பெண்ணியச் செயற்பாட்டாளர்களும் கூட.  ஆனால், இமாம் அத்னான் இவர்கள் அனைவரிலிருந்தும் தனித்துத் தெரிகிறார்.

இவர்கள் விமர்சனம் மற்றும் புனைபிரதிகள் உள்ளிட்ட இரு பகுதிகளிலும் செயற்படுகின்றனர். இமாம் அத்னான் கொஞ்சம் மேலே சென்று, பிரதிக்குள் உருவாகியிருக்கும் வன்முறை, பிரதிக்குள் உள்ள கவிதைச் சம்பவங்களில் மற்றமைகளுக்கான இடம், அவர்கள் மீதான அக்கறை என்ற வகையில் தனது விமர்சனத்தையும், தனது கவிதை, கதை பிக்ஷன் உருவாக்கத்தையும் தனித்த வழியில் வளர்த்துச் செல்கிறார்.  அத்தோடு, பிரக்ஞைபூர்வமான நிலையில் short fiction களையும் எழுதுகிறார். உரைநடைக் கவிதைகளையும் எழுதுகிறார். அந்தவகையில், பின்நவீனத்துவத்தின் கருத்தியல், விமர்சனம், புனைபிரதிகள் என்ற வகையில் முழுமையான வளர்ச்சியில் இமாம் அத்னானும், அதை நெருங்கும் வகையில் லறீனா மற்றும் நப்லா போன்றவர்களும் முக்கியமானவர்களாக மேலெழுந்து நிற்கின்றனர். இதே நேரம், புனைபிரதிகளின் அடிப்படையில், அதாவது கதைப் பிக்ஷன் என்றவகையில் சாஜித் அஹ்மதும் இந்த இடத்தில் இணைகிறார். ஆனால், அவரின் விமர்சன முறை நவீனத்துவம் மற்றும் பின்நவீனத்துவத்தின் மென்மையான சாயலைக் கொண்டிருக்கின்றன என்பதோடு, ஜிப்ரி ஹாஸனையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இவரின் விமர்சன முறையும் இத்தகைய தன்மையைக் கொண்டே அமைந்திருக்கின்றது.  றியாஸ் குரானா வழியாக வந்த டெரிடாவின்  டி-கன்ரக்ஷன் முறையை அதிகம் முழுமையாகச் செயற்படுத்துபவர் இமாம் அத்னான்தான் என்பதை இந்த இடத்தில் பதிவு செய்ய வேண்டும்.

பெண்ணியம் என்ற தனிக் கருத்தோடு உருவாகி நிற்கும் பார்வைக் கோணத்தோடு பல பெண்ணியச் செயற்பாட்டாளர்கள் இயங்கிக்கொண்டிருந்தபோதும், அதை ஈழத்தில் உருவான கவிதைப் பிக்ஷன் என்ற பிரதி உருவாக்கத்தோடு இணைத்து செயற்படுபவர்களாக லறீனா அப்துல் ஹக், எம்.ஏ.ஷகி, நப்லா போன்றவர்கள் முன்னிலைக்கு வருகின்றனர். அதில் கருத்தியல் தளத்திலும் பரிச்சயமானவர்களாக லறீனாவும், நப்லாவும் தனித்துத் தெரிகின்றனர். அதிலிருந்து சற்று வேறுபட்டு, “இஸ்லாமியப் பெண்ணியம்” என்ற கோணத்தில் தொடர்ச்சியாக எழுதியும், சமூகச் செயற்பாடுகளில் கலந்துகொண்டும், Zoom வழி இலக்கியக் கலந்துரையாடல்களில் கலந்துகொண்டும்,  தீவிரமான பன்முகச் செயற்பாட்டாளராக லறீனா முன்னுக்கு வருகிறார்.  சிங்கள இலக்கியச் செயற்பாட்டாளர்களோடும்,  உலகளவில் செயற்படும் மாற்றுச் சிந்தனையாளர்களோடும் உறவையும், கலந்துரையாடல்களையும் தொடருவதோடு, மும்மொழிப் பரிச்சயம் காரணமாகத் தனித்து வழிபிரியும் செயற்பாட்டாளராக இவர் களத்தில் நிற்கிறார். இவற்றோடு இணைந்ததாக கவிதைப் பிக்ஷன்களிலும் கவனம் செலுத்துகிறார்.

நப்லாவும், பின்நவீனத்துவம், பெண்ணியம், கவிதைப் பிக்ஷன் என்றவகையில் இயங்கும் முக்கியமான செயற்பாட்டாளராக முன்னுக்கு வருகிறார். எம்.ஏ.ஷகி கவிதைப் பிக்ஷன்களை பெண்ணிய நோக்கில் உருவாக்குவதினூடு மேலுக்கு வந்தவர். இவர்களைத் தொடர்ந்து பல பெண் எழுத்தாளர்கள் களத்தில் குவிகின்றனர். அவர்களின் எழுத்துக்களை குறித்து எதிர்காலத்தில்தான் மதிப்பீடுகளைச் செய்ய வேண்டும்.

இதேநேரம், சாமிலா முஸ்டீன், இஸ்லாமியப் பெண்ணிய நோக்கிலான செயற்பாட்டாளராக முன்னிலைக்கு வருகிறார். சமீலா யூசுப் அலியையும் இவ்விடத்தில் இணைத்துப் பார்க்கப்பட வேண்டும்.

நாவல், சிறுகதை, கவிதை, பெண்ணியச் செயற்பாடு என்றவகையில் ஸர்மிளா செய்த்தும் இங்கு கவனிக்கப்பட வேண்டியவராகிறார்.  பெண்ணியம் என்ற ஒற்றைக் கருத்தியலை அநேகமாகக் கரிசனை கொள்ளும் முகாமைச் சேர்ந்தவராக இவர் இருக்கிறார். பல பெண்ணியங்கள் சாத்தியம் என்று பன்மையாகக் கிளை பிரிந்து செல்லும் பார்வைக் கோணத்தைக் கொண்டவரல்ல இவர். அனைத்துத் தேசத்துப் பெண்களுக்கும், அனைத்து சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்குமான ஒற்றைப் பெண்ணிய கருத்துருவாக்கத்திற்குள் தனது சிந்தனையையும், புரிதலையும் கொண்டு இயங்குபவராக இவரிருக்கிறார். இது பெண்ணியச் சிந்தனையின் ஆரம்ப நிலையைக் கொண்டது. அதிலிருந்து பன்மையான பெண்ணிய இயக்கங்களும், செயற்பாடுகளும் விரிவடைந்த நிலையை இவர் இன்னும் வந்து சேரவில்லை என்பது முக்கியமானது. அதே நேரம் இவரின் கவிதைகள் பயில்நிலைக் கட்டத்திலேயே இருக்கின்றன. இவர் முற்றாக நவீன கவிதை எடுத்துரைப்பு முறையைக் கைக்கொள்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் பின்நவீன இலக்கிய மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து இயங்கினால், ஈழத்துப் பின்நவீன இலக்கிய வெளியும், சமூகவெளியும் பன்மையான திசைகளில் கிளைவிட்டு நகர்ந்து மேலும் பல வளமான அம்சங்களை உருவாக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்றே சொல்ல முடியும். அதுபோல், புதிதாக இலக்கியத்திற்குள்ளும், சமூகச் செயற்பாட்டிற்குள்ளும் வருபவர்களுக்கு தேவையான அம்சங்களைத் தடங்காட்டிச் செல்லும் காரியத்தையும் செய்யும் என்று நினைக்கிறேன்.

தொகுத்துப் பார்க்கும்போது, அடுத்த பத்தாண்டுகளில்தான், ஈழத்து பின்நவீன இலக்கியமும், கவிதைப்போக்கும், விட்ட குறைகள், பெற்ற நிறைகள் என்பனவற்றை வெளிக்கொண்டு வர முடியும் என நினைக்கிறேன். அதற்கான காலம் இன்னும் இருக்கிறது.

எது எப்படியோ, குறையோ நிறையோ, இதுதான் ஈழத்து பின்நவீன கவிதை வெளியான கடந்த காலத்தில் நடந்தேறியது என்பது முக்கியமான விசயம்தான்.

முற்றும்

றியாஸ் குரானா- இலங்கை

றியாஸ் குரானா

 

(Visited 420 times, 1 visits today)