நினைவுத்துளிகள்-டொமினிக் ஜீவா நினைவுக்குறிப்புகள்- சி.புஸ்பராணி

சி.புஷ்பராணிதோழர் மு. கார்த்திகேயன்  அவர்கள்  தலைமையில், பொதுவுடமைக் கட்சியில் தன்னை  இணைத்துக்கொண்ட,  டொமினிக் ஜீவா  அவர்கள்  ஆதிக்கசாதியினருக்கும், அவர்தம்  பிற்போக்குக்  கொள்கைகளுக்கும் எதிராகத் தன்  எழுத்துப்பணியை,  இறுதிவரை கைவிடாது மேற்கொண்ட   ஓர்மம் காலத்துக்கும்  மறக்க  முடியாததாகும்

சாதியொடுக்கு முறைக்கு  எதிரான பலகளப்பணிகளில்  தீவிரமாக இயங்கிய இவரையும், அவர் வெற்றிகரமாக  நடத்திய மல்லிகை  சஞ்சிகையையும்  அறியாதோர் எம்மிடையே  இருக்கவே  முடியாது.

அவருடைய  சுறுசுறுப்பையும்,  ஞாபகத்திறனைப் பற்றியும்   அவருடன் நெருங்கிப் பழகியோர்  வியந்து  பேசுவதை  அவதானித்திருக்கின்றேன்.

ஊரிலிருக்கும் காலத்தில், அவரை நேரில் சந்தித்துப் பேசும் வாய்ப்பு  எனக்குக்  கிட்டவில்லை. அவருடைய  எழுத்துக்களையும், தீவிர செயற்பாடுகள்  பற்றியுமே  தெரிந்திருக்கின்றேன்.  அப்போது நானிருந்த  சூழலும், வேறோர்  திசையில்  பயணித்ததும் காரணமாக  இருந்திருக்குமோ  என்று இப்போது  நினைத்துப்பார்க்கின்றேன்.  ஆனாலும்,  அவருடைய  பொதுவுடைமை சார்ந்த அப்பழுக்கற்ற கொள்கைகள் மீது  எப்போதும் தனிமதிப்பு  வைத்திருந்தேன்.

சாதிவெறி பிடித்த ஆசிரியர் ஒருவரினால்  மனம்  நொந்து  தன் படிப்பைப்  பாதியிலே கைவிட்ட  இவருக்குள்ளிருந்த  செறிந்த  அறிவும், ஞானமும் அவரின்  இறுதிவரை  சிறிதும்  குறைந்ததே  இல்லை

டொமினிக் ஜீவா  அவர்களை  பிரான்சில்  சந்திப்பேனென்று  நான்  நினைத்தே  பார்த்ததில்லை.

2000 ம் ஆண்டு பிரான்சில் இடம்பெற்ற இலக்கியச்சந்திப்பில் ,கலந்துகொண்ட டொமினிக் ஜீவா  அவர்களைச் சந்தித்துப் பேசிய இனிமையான தருணங்களை மகிழ்வோடு எண்ணிப்  பெருமிதம் கொள்கின்றேன்

இந்த  இலக்கியச்சந்திப்புக்கு,   இவரை அழைப்பதில்    எனது சகோதரன் புஷ்பராஜா   முன்  நின்று செயல்பட்டவர்   என்பதை  ஜீவா அவர்கள் ,”முப்பெரும் தலைநகரங்களில், முப்பது நாட்கள்”  என்ற தனது நூலில் குறிப்பிட்டிருக்கின்றார்.  அவர்  கலந்து  கொண்ட அந்த  மகத்தான இரண்டு  நாட்களையும்  இலேசில் மறக்கமுடியாது.

வாயில்  நுழையாத  பெயர்களையெல்லாம்  சொல்லி  எம்மை அலுப்பூட்டிப்  பேசிக்கொண்டிருந்த சிலரின் சுவையற்ற  நீண்ட நேர உரைகளால்  பலரும்  தூங்கி வழிந்து    கொண்டிருந்தனர். இதில்  நானுமொருத்தி.

அய்யா  பேச ஆரம்பித்தவுடனே, நாமெல்லாம்  நிமிர்ந்து  உட்கார்ந்துவிட்டோம். அதுவரை ஆட்டிக்கொண்டிருந்த  தூக்கக்கலக்கம்  எப்படிப்பறந்ததென்றே  தெரியாது.ஆற்றொழுக்காக  என்பார்களே  அப்படித்தானிருந்தது,  அவருடைய  சுவை சொட்டும் பேச்சு.

எவ்வளவு  நேரம்  பேசினாரென்பதே, எங்களுக்குத் தெரியவில்லை. எம்மை மறந்து , அவர்  வாயிலிருந்து  உதிரும்  வார்த்தைகளில்  கிறங்கிப்போயிருந்தோம். அவர் சின்னப்பிள்ளையாக  இருந்தபோது, வெள்ளைமா  அறிமுகமான  புதிதில்,  அவருடைய அம்மா, அதை  நீத்துப் பெட்டியில்  வைத்துப்  பக்குவமாக  அவித்துப்  பின்னர்  அதை அரிதட்டில்  போட்டு  அரித்துப் பிட்டு  ஆக்கியதையும்,அந்தப் பிட்டுக்கு  உவப்பாகக்     காரசாரமான கருவாட்டுக்குழம்பு  செய்து பரிமாறியதையும், அதைத் தாங்கள்  எப்படிச்  சுவைத்து  உண்டோம் என்பதையும்  வாயூறும் வண்ணம்  அவர் இரசித்துச் சொன்னதையும்  கேட்டபோது,  உடனேயே  பிட்டும், கருவாட்டுக் குழம்பும்  சாப்பிடவேண்டும்போல்  ஆவல்  பிறந்தது  பொய்யல்ல.

அவரின்   இயல்பான  பேச்சு  எல்லோரையும்  கட்டிப்போட்டு  வைத்திருந்தது. மண்டபமே  பேரமைதியில்  உறைந்துபோயிருந்தது. பலவிடயங்களைத்  தங்குதடையில்லாமல் அவர்  பேசிய அழகு தனிவரமாகும். ஆதிக்க  சாதியினரின்  ஒடுக்குமுறைகளை வன்மையாகக் கண்டித்துப்பேசியவர், ஒடுக்கப்பட்டோர் என்போரிடையே   உள்ளுக்குள்  நிலவும் சாதிப்பாகுபாடுகள்  பற்றியும்  விரிவாகக் குறிப்பிடத் தவறவில்லை.  எல்லாப்  பக்கத்திலிருந்தும்  சாதியணுகுமுறை  இல்லாமல்  போகவேண்டும்  என்பதை  வலியுறுத்துவதாக  இருந்தது  அவருடைய  பேச்சின் சாரம்.

இனக்கலவரத்துக்கு முந்தைய காலங்களில், சிங்கள மக்கள்  தமிழர் வீடுகளில்  வேலைக்காரர்களாகவிருந்து  பட்ட  இன்னல்களை  வலியோடு சொன்னார். அதுவும்,  வேலைக்கு  அமர்த்தப்பட்டிருந்த  பல சிங்கள யுவதிகள்  வயிற்றில் சுமையோடு ஊர்  திரும்பிய கண்ணீர்மல்கும் சம்பவங்களையும்  அவர்  விபரித்தபோது  மனம் கனத்தது. மிகவும்  வருத்தத்துடன்  டொமினிக் ஜீவா  அவர்கள்  கூறியதை  இங்கு பதிவிட்டே  ஆகவேண்டும். ” எம்மவர்கள் சிலர்  செய்த தவறுகளுக்கான  பலனை  நாம்  இப்போது  அனுபவிக்கின்றோம் ”  என்ற கருத்துப்பட அவர் சொன்னதுதான் அது.

இன்னும்  இன்னும்  நிறையப் பேசினார்:  சலிக்காமல்  கேட்டுக்கொண்டேயிருந்தோம். அவர்  பேசிமுடித்த்தும்,  இன்னும்  பேச  மாட்டாரா  என்ற  ஏக்கம்  தீராமலேயே  அனைவரும்  ஒரு சேர எழுந்துநின்று  நீண்ட  நேரம் கை  தட்டியதும்  முன்னர்  நான்  பார்த்திராத  ஒன்று. எழுத்து வன்மை  மட்டுமல்ல, அதிசிறந்த பேச்சாற்றலிலும்  கரை கடந்தவர்  என்பதற்கு   இதைவிட  வேறு  சான்று எதுவுமேயில்லை. அதிசிறந்த  மேதாவிகளெல்லாம்  நீண்டகாலம்  எம்மோடு  இருக்க வேண்டும்   என்று  நாம்  விரும்பினாலும், வயோதிபம்  என்ற ஒன்று அள்ளிக்கொண்டு போவதை  எப்படி நிறுத்துவது? 94 வயதுவரை  இவர்  எம்மிடையே வாழ்ந்தும், அவருடைய  இழப்பை  மனம் ஏற்க மறுக்கின்றதே…புகழ் பூத்த  அவருடைய  நிறைவான  வாழ்வே  பெரிய  கொடுப்பனவாகும் . அவருடைய  கொள்கைகள் மட்டுமல்ல,  எந்த  நேரமும்  புன்னகை  தவழும்  அவருடைய  முகமும்   என்றும்  எம்முள்  நிறைந்திருக்கும்

சி.புஷ்பராணி -பிரான்ஸ்

சி.புஷ்பராணி

(Visited 97 times, 1 visits today)
 
சி.புஷ்பராணி

கடிவாளம் அறுந்துவிட்டதா …?- சிறுகதை-சி.புஷ்பராணி

அவளின்   தோழி  பேசிக்கொண்டிருக்கும்போது, அவன் கடுமையான நோயுடன் போராடுவதாகச்  சொன்னாள். மனதுக்குள் ஒருவித பதட்டம் எட்டிப்பார்த்தபோதும், எதுவுமே  பேசாது மௌனம் பூண்டாள். “நான்  நாளைக்கு அவனைப் பார்க்கப் போகின்றேன், வீட்டுக்கு  […]